Friday, May 4, 2018

'ஏதோ தமிழர்களாம்.. சாதி மதங்களை கடந்து தமிழர்களாக ஒண்ணு கூடணுமாம்.. என்னய்யா காமெடி பண்ணுறீங்க..” பதறும் திராவிடர்களுக்கு பதில்!

சமீபகாலமாக “தமிழ்த்தேசியம்” பற்றிய வரையறைகளை விளக்குகின்ற பல்வேறு கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக அந்தக் கட்டுரையாளர்களின் பட்டியலைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் தமிழ்த்தேசிய அரசியலை ஏற்றுக்கொள்ளாத மதவாதிகள், முற்போக்கு என்பதன் போர்வையில் திராவிடத்தை ஏற்றுக்கொண்ட திராவிட எழுத்தாளர்கள், சாதிய தலைமைகள், தேசிய கட்சிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினர் “தமிழ்த்தேசியம்” என்பதற்கான வரையறையை வகுப்பதற்கான களத்தில் இறங்கிவிட்டார்கள். தான் ஏற்றுக்கொள்ளாத, தான் பயணிக்காத, தான் பின்பற்றாத ஒரு தத்துவத்திற்கு, அதன் அரசியல் முகத்திற்கு உரிய உண்மையான விளக்கத்தை எப்படி இவர்களால் தரமுடியும் ?. இப்படி தனக்கு தொடர்பற்ற ஒரு தத்துவத்திற்கு வழியே, விரைந்து வந்து விளக்கம் கொடுப்பதன் மூலம் தங்கள் பின்பற்றாத ஒரு தத்துவத்திற்கு பொதுவெளியில் தங்கள் விரும்பிய ஒரு முகத்தைக் கொடுக்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்கிறது.
உண்மையில் தமிழ்த்தேசியம் என்றால் என்ன ?
“Nationalism is an ideology that gives a nation a sense of unity by imposing on them the same set of identities (for instance linguistic, historical, cultural)”. தேசியம் என்பது ஒரு கூட்டுணர்வு, அந்த கூட்டுணர்வு ஒரே மொழி, ஒற்றை வரலாறு, ஒருமித்த கலாச்சாரம் இவற்றைக் கொண்டு கட்டமைக்கப்படவேண்டும். அப்படிக் கட்டமைக்கப்படாத எந்தத் தேசியமும் வலுவற்றது என்கிறார்கள் வரலாற்று ஆய்வர்கள். ஒரு வலுவான தேசிய தத்துவமே, அந்தத் தேசிய இனத்தின் மீது கட்டமைக்கப்படுகிற அடக்குமுறைகளை வலுவாக எதிர்க்கும் தன்மையுடையது.
தமிழ்த்தேசியத்தைப் பொறுத்தவரை ”தமிழ்” என்ற தொன்மைமிக்க மொழியாலும், முன்னோர்களின் வரலாற்றாலும் (சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், அதற்கு முந்தைய பிந்தைய தமிழர்களின் வரலாறு), ஐந்திணை நிலங்களில் பரவி, மனித நாகரீகங்களை வேர்பரப்பி, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட பல்வேறு இலக்கிய செழுமைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் பண்பாட்டுக் கலாச்சாரத்தினாலும் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு தேசியத்திற்கு உரிய உலக வரலாற்று ஆய்வர்களினால் உருவாக்கப்பட்ட அடிப்படை கூறுகளான, ஒரே மொழி, அந்த மொழியைப் பேசுகின்ற மக்கள் பரவி வாழும் நிலம், அந்த மொழி பேசுகின்ற மக்களின் செழுமையான வரலாறு, அந்த மொழி பேசுகின்ற மக்களின் வாழ்வியல் பண்பாடு என அப்படியே பொருந்தி செழுமையோடு நிற்கிறது தமிழ்த்தேசியம். இந்த நிலத்தில் ஒரு வலுவான தேசிய உணர்வை கட்டமைக்க முடியும் என்றால், அது தமிழ்த்தேசியத்தினால் மட்டுமே முடியும்.
எல்லாம் சரி… ஐந்திணை நிலத்தில் வாழ்ந்த மக்கள் இன்று பல்வேறு சாதிய கூறுகளாய் பிரிந்துகிடக்கின்ற இந்த நேரத்தில், தமிழ் மொழியை மதிக்காமல், மொழிக்குப் பெரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல், தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களே தமிழர் என்று அடிப்படை தத்துவத்தை புரிந்துகொள்ளாமல் யாரெல்லாம் தமிழர்கள் ? கேள்விகளை நமக்கு முன்னே நீட்டுகின்றவர்கள் இருக்கின்ற இந்த நேரத்தில், உலகமயமாக்கப்பட்ட இன்றை வாழ்வியலில், நுகர்வு கலாச்சார மோகத்தில் அலைகின்ற இந்த நேரத்தில் ஒரே கலாச்சாரமுடைய ஒரு தேசிய உணர்வை தட்டியெழுப்பி எல்லோரையும் ஓர்மைப்படுத்தி தமிழ்த்தேசியத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சொல்லமுடியுமா ?. மொழி, பண்பாடு, வரலாற்றில் ஒத்த ஒரு தேசியத்தை இங்கே கட்டமைக்க நினைப்பது சாத்தியமா ? என்ற கேள்வி வருவது இயற்கையே.
மேற்கண்ட வரையறைகளின் அடிப்படையில் தமிழ்த்தேசியம் கட்டமைக்கப்பட்ட வேண்டியது சாத்தியமா ? என்பதை விட தேவையா ? இல்லையா ? என்பதையே இந்த நேரத்தில் நமக்குள் சித்திக்கவேண்டிய கேள்வி. 
திரும்பிய இடமெல்லாம் ஒடுக்குமுறைகள், எங்கு காணினும் இழந்த உரிமைகளை பெற போராட்டங்கள், காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு, மீனவர் பிரச்னை, தாய்மொழிக் கல்வி என இந்த தமிழர் நிலம் பழைய பிரச்சனைகளே பல வருடங்களை கடந்து சென்று கொண்டு இருக்கின்ற இந்த நேரத்தில், புதிதாக மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, கூடங்குளம் அணுவுலை என்று நீள்கிறது. எனவேதான் கடந்தகாலத்தில் நம்மீது ஒட்டப்பட்டு இருந்த திராவிட தேசிய முத்திரைகள் நமக்கு தொடர்பற்றது என்பதையும், நம்மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளை நமக்கு தொடர்பற்ற திராவிட தேசியம் எதிர்க்கும் வலிமையற்றது என்று உணர்ந்த நொடியில் தமிழ் மொழிபேசும் நமக்கு தொடர்புடைய வலிமையான “தமிழ்த்தேசியத்தை கட்டமைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. சாதி மத பேதமற்ற, இயற்கையை வணங்கி இன்பமாய் வாழ்ந்த தமிழ்ப்பெருங்குடி சமுதாயத்தை, அதன் மொழியை, அதன் பண்பாட்டு விழுமியத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கடத்த தமிழ்த்தேசியத்தால் மட்டுமே முடியும் என்பதை நடுநிலையாளர்கள் உணர்வார்கள். ஆனால் அந்தத் தேசியத்தை இங்கே கட்டமைக்க நிறையப் பாடுபடவேண்டும் என்பதையும் உணர்வார்கள்.
இத்தகைய வலுவான தமிழ்த்தேசியம் களத்தில் சில கேள்விகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்தக் கேள்விக்கான உண்மையான, நேர்மையான பதிலை கேள்வியாளர்களுக்கு வைக்கவேண்டிய கடமை தமிழ்த்தேசியத்திற்கு இருக்கிறது.
கேள்விகளும் – கேட்பவர்களின் அடையாளமும்
1. “சாதியால் கூறுபட்டுக் கிடக்கும் தமிழர்களை மொழியால் இணைப்பது சாத்தியமா ?. சாதிய விடுதலை இல்லாமல் தமிழ்த்தேசிய விடுதலை அடைய முடியாது” என்பது போன்ற கேள்விகளைச் சாதிய விடுதலைக்காகப் போராடுகிறோம் எனச் சொல்லிக்கொண்டு, தனக்குப் பின்னே அந்தச் சாதி குழுக்களைச் சேர்ந்த மக்களை ஆதாரமாகவைத்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் சீட்டு கணக்குகளைப் பார்ப்பவர்கள் “தமிழ்த்தேசியத்தின்” மீது வைக்கிறார்கள்.[A1]
2. “திராவிடத்தை நிராகரிப்பதன் மூலம் கட்டமைக்கப்படும் தமிழ்த்தேசியம் (நிராகரிப்புவாத தமிழ்த்தேசியம்) மிகுந்த ஆபத்தானது. அது உண்மையான தமிழ்த்தேசியமே இல்லை” என்பது போன்ற விமர்சன விளக்கங்களை தமிழ்த்தேசியத்தின் மீது திராவிடர்கள் வைக்கிறார்கள். குறிப்பாகத் திராவிடர்கள், கடந்த காலங்களில் திராவிடத்தினால்தான் தமிழகத்தின் உரிமைகளெல்லாம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்பது போன்ற கதைகளைச் சொல்கிறார்கள். இருப்பதைக் காக்கவும், இழந்ததை மீட்கவும் போராட வேண்டும் என்று தமிழ்த்தேசியம் வேலைசெய்யும் போது, திருடப்படாமல் எஞ்சியவற்றைக் கணக்குக்காட்டி தன்னை நிலைநிறுத்தத் துடிக்கிறார்கள் திராவிடர்கள். உண்மையில் அவர்கள் திருடப்படாமல் எஞ்சியவை என்று கணக்கு காட்டும் அனைத்தையும் தமிழர்களிடம் இருந்து திராவிடத்திற்காக எடுத்துக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.[A2]
3. “தனிநாடு கோராத ஒரு அரசியல் தத்துவம் தமிழ்த்தேசிய அரசியல் தத்துவமாகவே இருக்க முடியுமா ?” என்பது போன்ற விமர்சன விளக்கங்களை முற்போக்கு நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் தமிழ்த்தேசியத்தின் மீது வைக்கிறார்கள். குறிப்பாகப் பிரதான அரசியல் கட்சிகள், தேர்தல் நேரத்தில் தனக்கு ஆதரவு சக்திகள் அதிகமாக இருக்கிறது என்று மக்களிடம் காட்டுவதற்காக, அந்த அரசியல் கட்சி தலைமைகளால் ஏற்கனவே திரைமறைவில் உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள் இருக்கும். அரசியல் ரீதியாக அந்த அரசியல் கட்சி பேச தயங்கிவற்றை அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் செய்யும். இதுபோன்ற இயக்கங்களே தமிழ்த்தேசியத்தின் மீது இவ்வகையான கேள்விகளை வைக்கிறது.[A3]
4. “இந்திய தேசியத்தின் எதிர்ப்பில்தான் தமிழ்த்தேசியம் (எதிர்ப்புவாத தமிழ்த்தேசியம்) உருவாக வேண்டுமா ? அப்படி உருவாவதுதான் தமிழ்த்தேசியமா ?” இதுபோன்ற கேள்விகளை தமிழ்த்தேசியத்தின் மீது இந்துத்துவா ஆதரவு வாதிகளும், வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய இயக்கத்திற்கு தன் இயல்பிலேயே சித்தாந்த ரீதியில் எதிராய் நிற்கின்ற தத்துவவாதிகளும் வைக்கிறார்கள், மேலும் சண்டையை ஆரியத்திற்கும்-தமிழ்த்தேசியத்திற்கு மட்டுமே என்று காட்டிக்கொண்டு தன்னை பலம்பொருந்திய தத்துவமாகக் காட்ட நினைக்கிறார்கள். [A4]
மேற்கண்ட கேள்வியாளர்கள் கேள்வி கேட்டதோடு நின்றால் சரி, ஆனால் கேள்வியோடு நிற்காமல் தமிழ்த்தேசியத்திற்கு தான் விரும்புகிற வகையில் வரையறைகளைச் சொல்வதுதான் உள்நோக்கமுடையது. எப்படியாக்கினாலும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.
1. சாதியால் கூறுபட்டுக் கிடக்கும் தமிழர்களை மொழியால் இணைப்பது சாத்தியமா ?. சாதியவிடுதலை இல்லாமல் தமிழ்த்தேசிய விடுதலை அடைய முடியாது.
தமிழர் வாழ்வியல் வரலாற்றுக் காலக்கோட்டில் சாதி என்ற ஒன்று எப்போது தமிழர் வாழ்வியலில் நுழைந்தது ? செய்கின்ற தொழிலின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பார்க்காமல் ஒற்றுமையாக வாழ்ந்த இனத்தில் ஆரிய வர்ணாசிரம, மனுதர்மங்களே சாதிய கூறுகளை விதைத்தது. தமிழர் வாழ்வியலில் ஆரியத்திற்கு முன்னதாக சாதி இல்லை என்பது வரலாறு நமக்குச் சொல்கின்ற உண்மை. தற்போதைய சூழலில் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று சொல்லிக்கொடுக்கின்ற அதே பள்ளியில்தான் “சாதிச்சான்றிதழ்” வழங்கப்படுகிறது. ஒரு மனிதன் கருவில் உருவாக்குவதற்கு முன்னரே அவனது தாய் தகப்பன் மூலன் அவனுக்கான சாதியும் முடிவாகிவிடுகிறது. இந்தச் சூழலில் சாதி ஒழிப்பு சாத்தியமா ?
சாதியை ஒழித்தால் மட்டுமே இங்கே தமிழ்த்தேசிய அரசியலைக் கட்டமைக்க முடியும் என்று முழங்குகின்ற இன்றைய சாதி ஒழிப்பு புரட்சிய வாதிகள், சமூகத்தில் நிலவுகின்ற சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கு என்ன செயல்திட்டம் வைத்து இருக்கிறார்கள் ?
ஒரு சாதியின் பக்கத்தில் நின்று, அந்தச் சாதியென ஆரிய வர்ணாசிரமத்தினால் அடையாளம் காணப்பட்ட சாதி தமிழர்களை தன்னோடு பெருங்கூட்டமாய் வைத்துக்கொண்டு, அவர்களுக்குத் தலைமையேற்று, அதே தமிழர் நிலத்தில் வாழுகின்ற மற்றொரு சாதி தமிழர்களிடம் எப்போதும் மோதல்போக்கினை வளர்த்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அடகுவைத்து, உள்சாதி பிரதிநிதித்துவம் அடிப்படையில் ஓரிரு சீட்டுகளை பெற்றுக்கொண்டு வாழ்ந்தால் சாதி ஒழிந்துவிடுமா ? அது எப்படி ?, தானும் சாதி சேற்றில் நின்று கொண்டு, தனது சேற்றை சுத்தப்படுத்துகிறேன் என்ற போர்வையில் இன்னொருவர் மீது வாரி இறைத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு வாழ்வதில் எப்படிச் சாதி ஒழிப்பு சாத்தியம் ?
பொருளாதாரத்தின் அடிப்படையில் சாதியை ஒழிக்க, இடஒதிக்கீடு என்பதன் மூலம் சமுதாயத்தில் சாதியை ஒழிக்க அண்ணல் அம்பேத்கரும், அனைத்துச் சாதியினரையும் ஒன்றாக அழைத்து, அனைவருக்கும் பரிவட்டம் கட்டி, அனைவரையும் சமமாக அமரவைத்து உணவு உண்ணவைத்து சாதியை ஒழிக்க ஐயா வைகுந்தரும் நினைத்தார்கள். இதையெல்லாம் பின்பற்றி இருந்திருந்தால் சாதி எப்போதோ ஒழிந்திருக்கும். ஆனால் ஒரு சாதியின் பக்கத்தில் நின்று, இன்னொரு சாதியின் மீது வெறுப்புகளை உமிழ்ந்து, எப்போதும் ஒருமொழி பேசுகின்ற, ஓர்நில பிள்ளைகளை கூறுபோட்டு வைத்திருப்பது திராவிட சாதி ஒழிப்பு முறை. இந்த அணுகுமுறையினால் சாதியை ஒழிக்கமுடியாது என்று தெரிந்தும் அவர்கள் அதைப் பின்பற்றுவதே, சாதி இந்த மண்ணில் ஒழிந்துவிடக்கூடாது என்பதற்குத்தான்.
பொதுவாக சாதிஒழிப்பு சமூக நீதிக்காகப் போராடுகின்ற போராளிகள் திராவிட இயக்கத்தில் பின்பற்றப்படுகின்ற சாதிமுறையைப் பின்பற்றுகிறார்கள். அதனால்தான் இன்றுவரை இந்த மண்ணில் சாதி ஒழிப்பு சாத்தியப்படாமலும், இன்னும் சாதியம் ஒன்றை ஒன்று கூர்தீட்டிக்கொண்டு அலைகிறது. ஒடுக்கப்பட்டோர் விடுதலை மற்றும் சாதி ஒழிப்பு என்ற கொள்கைகளை பேசுகின்ற அண்ணன் திருமாவளவன் மற்றும் ஐயா மருத்துவர் ராமதாஸ் போன்றோர்கள் இந்த மண்ணில் எப்படி அடையாளங்காட்ட பட்டிருக்கிறார்கள் என்பதே திராவிட இயக்கச் சாதி ஒழிப்பு அணுகுமுறையின் பிரதிபலன்.
திராவிட இயக்க மற்றும் கட்சிகளின் சாதி ஒழிப்பு அணுகுமுறையினால், இந்தத் தமிழ் இனம் தங்களுக்குள் வர்ணாசிரம சாதிய பிரிவினைகளை வலுப்படுத்தி, மேலும் கூர்தீட்டி சாதியை அழியாமல் காப்பாற்றி வருகிறது. இந்த அணுகுமுறை திராவிட சித்தாந்தத்திற்கு அரசியல் ரீதியாகப் பெரிய பலன்களை அள்ளித்தருவது உண்மையிலும் உண்மை. சாதி ஒழிப்பு பேசிய, பெரியார் பிறந்தமண் என்று கொண்டாடப்படுகின்ற இந்தத் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, வர்ணாசிரமத்தில் கடைநிலையில் உள்ள எவரும் குறைந்த பட்ச அரசியல் அங்கீகாரத்தை இன்றுவரை பெறமுடியவில்லை. ஆனால் பெரியார் மற்றும் சமூக நீதி அமைப்புகளே இல்லாத பல மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் முதல்வர் பதவி வரை அடைந்திருக்கிறார்கள். இதுதான் திராவிடம் முன்மொழிகின்ற சாதி ஒழிப்பு. இந்த அணுகுமுறை ஒருபோதும் சாதியை ஒழிக்காது, மாறாக வளர்க்கவே செய்யும்.
சாதி ஒழிப்பு பேசுகின்ற திமுக கூட்டணிக்கு அண்ணன் திருமாவளவன் சென்றால் கூட அவருக்கு திமுக ஒதுக்குவது “தனித்தொகுதி” சீட்டுகளைத்தான். ஊரெல்லாம் கடவுள் இல்லை என்று ஐயா கீ. வீரமணி பேசிவந்தாலும் தனது மனைவி கோவிலுக்கு சென்று பூஜை செய்வதை எவராலும் தடுக்க முடியாது. சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி பேசுகின்ற எல்லாத் திராவிட கட்சிகளுக்குள்ளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலப் பிரிவு என வைத்து இயங்குவதே இவர்களின் சாதி ஒழிப்பு அணுகுமுறைக்குச் சான்று
இப்படி சாதிஒழிப்பு என்ற ஒரு செயல்பாட்டிற்கு, எந்தவித செயல்திட்டமும் கொண்டிராத, குறைந்த பட்சம் அவர்களே அந்தக் கொள்கைகளை கடைப்பிடிக்காது, சாதிய தலைமைகள், வளர்ந்துவருகின்ற தமிழ்த்தேசியத்தின் மீது அந்தக் கேள்வியை கேட்பது தங்களுடைய பிழைப்புவாத அரசியலே இன்றி வேறென்ன?. மொழியை முன்னிறுத்தி ஒட்டுமொத்த தமிழர்களும் இனமாய் இணைந்துவிட்டால் இந்த மண்ணில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் எளிதாக ஒழிந்துவிடும் என்று சாதிய தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனாலேயே தமிழ்த்தேசியத்தின் மீது மறைமுக பிளவுகளை உருவாக்க இந்த உள்நோக்கமுடைய கேள்வியை வைக்கின்றார்கள். ஒட்டுமொத்த இனமும் விடுதலைப் பெறாமல், உள்சாதி அரசியல் எப்படி விடுதலை பெரும் ? என்ற கேள்வியை இவர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதற்கு இன்றளவும் பதிலில்லை.
2. திராவிடத்தை நிராகரிப்பதன் மூலம் கட்டமைக்கப்படும் தமிழ்த்தேசியம் (நிராகரிப்புவாத தமிழ்த்தேசியம்) மிகுந்த ஆபத்தானது. அது உண்மையான தமிழ்த்தேசியமே இல்லை.
ஒரு தத்துவத்தின் மூலமாகப் பறிபோனவற்றை ஆராய்ந்து, அந்தக் காரணங்களை தேடி அதற்கான தீர்வுகளை கொடுக்கக்கூடிய ஒரு தத்துவம் கட்டமைக்கப்படும் போது, புதிதாகக் கட்டப்படுகின்ற தத்துவம் பழையனவற்றை நிராகரித்தே ஆகவேண்டும் என்பது சாதாரண இயங்கியல். எனவேதான் திராவிடத்தின் நிராகரிப்பில்தான் தமிழ்த்தேசியம் கட்டமைக்க முடியும் என்பதும், எப்படி எண்ணெய் தன் இயல்பிலேயே தண்ணீரை நிராகரிக்குமோ அதுபோல தமிழ்த்தேசிய அரசியல் தத்துவம் என்பது அதன் இயல்பிலேயே திராவிட சித்தாந்தத்திற்கு எதிரானது. “திராவிடர்கள் தான் தமிழர்கள், தமிழர்கள்தான் திராவிடர்கள்”, “திராவிட நாற்றங்காலில் விளைந்தது தமிழ்த்தேசியம்”, “பெரியாரின் தோளில் ஏறிச்சென்று தமிழ்த்தேசியத்தை அடையவேண்டும்” என்றெல்லாம் இன்றைய தினத்தில் திராவிட கூடாரங்கள் அலறுவதற்குக் காரணம் 2009 இங்கு பிறகான தமிழ்த்தேசிய அரசியலை எதிர்கொள்ள இயலாமல் திராவிட தத்துவம் தள்ளாடுவதை காட்டுகிறது.
திராவிட தத்துவத்தின் பலவீனத்திற்குக் காரணம் என்ன ? என்று நீங்கள் தேடினால் உங்களுக்கு ஒரு உண்மைதெரியும். “திராவிடம்” என்ற தத்துவம் ஒரு அடிப்படை கட்டமை கொண்டிராத கற்பனை தத்துவம் ஆகும். இந்த அடிப்படை கட்டமைப்பு கொண்டிராத திராவிட தத்துவத்திற்கு வலிமை சேர்க்க கூடிய “ஒற்றை மொழி”, “ஓர்நிலப்பரப்பு” மற்றும் “ஒற்றைக் கலாச்சாரம்” என எதுஒன்றையும் கொண்டிராதது. திராவிட தத்துவம், இந்தத் திராவிட தத்துவம், அடிப்படை கட்டமைப்புகளோடு உருவாகிய தமிழ்த்தேசிய தத்துவத்தால் எளிதில் வீழ்த்தப்படக்கூடியது. இதனால்தான் இந்தத் திராவிட உணர்வாளர்கள் தமிழ்த்தேசியத்தை நிராகரிப்புவாத, எதிர்ப்புவாத தத்துவமாக பார்க்கிறார்கள். உண்மையில் திராவிடம் என்ற தத்துவமே “ஆரிய எதிர்ப்பு” என்ற எதிர்ப்புவாத தத்துவமேயன்றி அதன் அடிப்படை கட்டமைப்புகள் எல்லாமே கற்பனையானவை.
திராவிடத்திற்கு என்று மொழி “தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்” என்று என இவர்கள் சொல்லவரும் போது பிறமாநிலங்களில் தகவல் பலகைகளில் “தமிழ்” எழுத்துக்கள் அழிக்கப்படும் போதும், தமிழ் மொழி வல்லுநர்களுக்குச் சிலை திறக்கப்படுவது தடைப்படும் போதும் திராவிடத்தின் ஓர்மைபண்பு சிதைக்கப்படுகிறது.
திராவிடத்திற்கு என்று நிலங்களை “தமிழகம், கேரளா, கர்நாடகா ஆந்திரா” என இவர்கள் காட்ட முயலும்போது, தடைப்பட்டு நிற்கின்ற முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு போன்றவைகள் இவர்கள் காட்டுகின்ற நிலத்தின் வழி ஓர்மைத்தன்மையை சிதைகின்றது. இந்தச் சூழலில் திராவிடம் என்பது ஒரு தேசியத்தின் கட்டமைப்பிற்கு என்ற அடிப்படை கூறுகளான “மொழி”, “நிலப்பரப்பு”, “வரலாறு” மற்றும் “பண்பாடு” என்ற எந்தப் பொதுமை பண்பும் இல்லாமல், ஆரிய எதிர்ப்பு என்ற எதிர்ப்பு நிலை தத்துவத்தால் மட்டுமே உருவானது. தமிழ்த்தேசிய அரசியல் என்பது அதன் இயல்பிலேயே திராவிட நிராகரிப்பை உள்ளடக்கியது. திராவிட நிராகரிப்பே தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைகளைக் காப்பாற்றும் என்பதை வலுவாக நம்புகின்ற தத்துவம்.
3. தனிநாடு கோராத ஒரு அரசியல் தத்துவம் தமிழ்த்தேசிய அரசியல் தத்துவமாகவே இருக்க முடியுமா ? அப்படி இருந்தால் அது தமிழ்த்தேசியமா ?
இந்தக் கேள்வியில் சிறிது நியாயம் இருப்பதை உணரலாம். அதே நேரத்தில் இந்தக் கேள்வியை தமிழ்த்தேசிய தத்துவத்தின் மீது தொடுப்பவர்கள் தனித்தமிழ் தேசம் இங்கே அமைவதற்கு என்ன செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள் என்பதையும் நாம் கேட்கவேண்டியது அவசியமாகிறது.
“தமிழ்த்தேசியம்” என்ற தத்துவத்தின் கட்டமைப்பும் “தமிழ்த்தேசிய இனத்தின் தனித்த நாடு விடுதலையம்” ஒரே நேரத்தில் நிகழக்கூடிய கூட்டுவினை (Simultaneous process) அல்ல. மாறாக அது ஒரு தொடர்வினை (serial process). பன்னெடுங்காலமாக தமிழர்கள் வாழ்ந்த வரலாற்றை மறந்து, தனது மொழியின் அருமையை அதன் இலக்கிய செழுமையை உணராமல், தனித்த தமிழர்களின் அடையாளங்களை உணராமல் இருப்பவர்களை, இவற்றையெல்லாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து தமிழர் தேசிய இனத்தின் பெருமைகளை வரலாற்றை அவர்களுக்குப் புரியவைத்து, அவர்களை தமிழ்த்தேசிய சிந்தனையின் கீழ் கொண்டுவந்து, அவர்களை அரசியலின் கீழ் விழிப்படையச் செய்து ஒருங்கிணைப்பதே “தமிழ்த்தேசியத்தின்” முதன்மை பணி. இந்த முதன்மைப்பணியை முழுமையாகச் செய்வதற்கு நமக்கு பெருந்தடையாக இருப்பது ஏற்கனவே இந்திய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு இருக்கின்ற குறைந்த பட்ச சுயநிர்ணய அதிகாரத்தை, தமிழ்த்தேசிய தத்துவத்திற்கு எதிரான சித்தாந்தத்தை கொண்டுள்ள ஆரிய-திராவிட அரசியல் தத்துவம் கையில் வைத்திருக்கிறது. நம்முடைய இந்தத் தடையை உடைப்பது அவசியமாகிறது.
“தமிழ்த்தேசியம்” என்ற தத்துவத்தின் கட்டமைப்பையும், அந்தத் தத்துவ கட்டமைப்பை இங்கே உருவாக்க பெருந்தடையாக இருக்கின்ற ஆரிய-திராவிட கற்பனை தத்துவங்களின் கையில் குறைந்த பட்ச அதிகாரத்தை அதன்வழியே சென்று அடையாவதையும் ஒத்திசைவு வினையாக (consecutive process), அது தமிழ்த்தேசிய அரசியல் வடிவமாக களத்தில் நகர்கிறது.
4. இந்திய தேசியத்தின் எதிர்ப்பில்தான் தமிழ்த்தேசியம் (எதிர்ப்புவாத தமிழ்த்தேசியம்) உருவாக வேண்டுமா ?
திராவிடம் என்பது எப்படி மொழி, நிலப்பரப்பு, வரலாறு, கலாச்சாரம் என்ற எந்தவித ஓர்மை தன்மையும் இல்லாத ஒரு கற்பனை தேசியமோ, அதேபோல இந்திய தேசியமும் மேற்கண்ட எந்த வித ஓர்மைத்தன்மையும் இல்லாத கற்பனை தேசியமே “இந்திய தேசியம்”
எப்படி ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் ஒரு பொய்யான தேசியத்தை உருவாக்கத் திராவிட சித்தாந்தம் “தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தை உள்ளடக்கி” திராவிட மொழிகள் என்றும், அந்தந்த மொழிபேசுகின்ற மாநிலத்தை ஒரே நிலப்பரப்பு என்றும் கற்பனையான கட்டமைப்பைக் கொண்டிருந்ததோ, அதே போல, 1947 பிறகு, வெள்ளையர்களை எதிர்ப்பதற்காக உருவான பல்வேறு மொழி பேசுகின்ற மாநில மக்களின் கூட்டுணர்வை இந்திய தேசியம் என்றும், அந்த நிலங்களை இந்தியா என்றும் கற்பனையில் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டது இந்திய தேசியம். தன்னிடம் உள்ள அதிகபட்ச அதிகாரத்தினால் அந்தக் கற்பனையை இதுநாள் வரை உண்மையென வலுக்கட்டாயமாக நம்மவைக்கிறது.
ஒரு கற்பனையான, இயல்பிலேயே ஓர்மைத்தன்மையற்ற, ஓர்மைத்தன்மையை வழிந்து கட்டமைத்துக்கொண்ட இந்திய தேசியத்திற்கும், அதேபோல கற்பனையான ஓர்மைத்தன்மையை கட்டமைத்துக்கொண்ட திராவிட தேசியத்திற்கும், அதன் இயல்பிலேயே எந்தவித கற்பனையும் கலக்காத “தமிழ்” என்ற உயர்தனி மொழியையும், அந்த மொழியைப் பேசுகின்ற மக்கள் நிரம்பி வாழ்கின்ற நிலப்பகுதியையும், அந்த நிலப்பகுதியில் நிரம்ப வாழ்ந்த முன்னவர்கள் வரலாற்றையும், தமிழர்களுக்கு என்று தனித்த கலாச்சார மாண்புகளையும் உடையக் கட்டமைப்பை உடைய “தமிழ்த்தேசியம்” எதிராக அமைவது இயற்கையே.
குமரிகண்டம் தொடங்கி, ஐந்திணை வாழ்வியல் வழியாக, தனக்கென்று கருப்பொருள், உரிப்பொருள், இறையியல், நெடிய வரலாறு, நிரம்ப இலக்கிய செழுமை, உயர்தனி கலாச்சார செழுமைகளைக் கொண்ட தமிழ் இனத்தை, வெறும் 13 நூற்றாண்டுக்கு பிறகான ஒரு இனமாகத் திரித்து காட்டுகின்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டதே “ஆரிய தேசியம்”. அதே போல இந்தத் தொன்மை வாய்ந்த தமிழ் இனத்தை, வெறும் கால்டுவேல் ஆய்விற்கு பிந்தைய, 300 ஆண்டுக்கால வரலாறு உடைய ஒரு இனமாக காட்டநினைத்து, தேசியத்தின் அடைப்படை வரையறைகளை ஆரிய எதிர்ப்பு என்று எதிர்ப்பு நிலையின் அடிப்படையில் கற்பனையான கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே “திராவிடதேசியம்”.
திராவிட எதிர்ப்பு, ஆரிய தேசியத்தின் நவீனப்படுத்தப்பட்ட ஒரு தத்துவமாக (modernization) “இந்தியதேசியம்” மிளிர்கிறது. இந்திய தேசியம் ஒரு கற்பனை தேசியம். திராவிட தத்துவத்தின் கற்பனை கட்டமைப்பாகிய ஓர்நிலம், ஓர்மொழி என்ற தவறுகளை சரிசெய்து கொள்ளவும், திராவிடத்தை விடத் தன்னை வலுவானதாக மாற்றிக்கொள்ளவும் இந்தியா முழுமைக்கும் ஒரே மொழியாகச் சமஸ்கிருதத்தையும், இந்தியா முழுமைக்கும் ஒரே நிலமாக மாற்றவும், இந்தியா முழுமைக்கும் ஒரே உணர்வாக “இந்துத்துவா” கட்டமைக்கப்பட்ட வேண்டும் என்றும் போராடிக்கொண்டு இருக்கிறது இந்திய தேசியம்.
ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வரலாறு, ஒரே கலாச்சாரம் என்ற ஒரு தேசியத்திற்கான (nationalism) அடிப்படை கட்டமைப்பை கொண்டிராத, கற்பனை கட்டமைப்பை தற்காலிகமாகக் கட்டமைத்துக்கொண்ட ஆரிய தேசியம், திராவிட தேசியம், இந்தியதேசியம் போன்ற ஆதிக்கவாதிகள் கற்பனை தேசியம், இயல்பிலேயே தேசியத்திற்கான அடிப்படை கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ள “தமிழ்த்தேசியத்தின்” முன்பாக சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையில் வலுவிழந்து காணப்படுகிறது.
ஆனால் தன்னிடம் வலுவான அதிகாரத்தைக் கொண்டுள்ள ஆரிய-இந்திய தேசியமும், குறைந்த பட்ச மாநில அதிகாரம் எனக் கொண்டுள்ள திராவிட தத்துவமும், சித்தாந்த ரீதியில் வலுவான “தமிழ்த்தேசியம்” என்ற தத்துவத்தின் மீதும், அந்தத் தத்துவத்தின் அதிகாரத்தை நோக்கிய பயணத்தின் மீதும் பாரிய அளவில் அடக்குமுறைகளைத் தொடுக்கின்றது.
தனது இயல்பிலேயே தமிழ்த்தேசிய தத்துவமானது ஆரிய எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, சமூக நீதி இவற்றை உள்ளடக்கிய இனவிடுதலை அரசியல் தத்துவம். இவையனைத்தும் இன்று தமிழ்த்தேசியத்தின் மீது கேள்விகளை கேட்பவர்களுக்கும், தனக்கு ஏற்றாற்போல் தமிழ்த்தேசிய வரையறைகளைக் கட்டமைக்க துடிப்பவர்களுக்கும் தெரியும். தெரிந்தும் தமிழ்த்தேசியத்தின் மீது கேள்விகளையும், வன்மங்களையும் கொட்டுவதற்கு காரணம் அவர்களின் தனித்த அரசியல் சுயலாப வாழ்வு பாதிக்கப்படுவதே ஆகும்.
திராவிடர்கள் ஆரியர்களை எதிர்த்துப் போராடுவது போல நடிப்பதும், ஆரியர்கள் திராவிடர்களை எதிர்த்துப் போராடுவது போல நடிப்பதும், காலங்காலமாக இந்த மண்ணில் நடந்துகொண்டு இருப்பதுதான். ஆனால் இந்த மண்ணில் தமிழ்த்தேசியர்கள் தலைமையில் நடக்கும் தமிழக உரிமைசார்ந்த போராட்டங்களில் மிகக் கடுமையாக அடக்குறை சட்டங்கள் ஏவப்படுத்தும், அதற்குத் திராவிடர்கள் அமைதிகாப்பதும் மேற்கண்ட தத்துவ-மோதல்களே உண்மையான காரணம்.
தமிழர்கள் தமிழ்மொழியை மறந்து ஹிந்தி பேசினால்தான்…
தமிழர்கள் முருகனைத் துறந்து ராமனை வழிபட்டால்தான்…
தமிழர்கள் திருக்குறளை துறந்து கீதையை ஏற்றுக்கொண்டால்தான்…
காவிரி கர்நாடத்தை விட்டும், முல்லைப்பெரியாறு கேரளத்தை விட்டும், பாலாறு ஆந்திராவை விட்டும் வருமென்றால், இது தண்ணீருக்கான மோதலில்லை, மாறாக தத்துவத்திற்கான மோதல் என்பதை உணர்ந்தால் மேற்கண்ட கூற்றுக்களை, அதன் உண்மைகளை உணரலாம்.
ஆரிய-இந்திய தேசியமும், திராவிட தத்துவமும் அடிப்படை கூறுகளற்ற ஒன்றை ஒன்று எதிர்க்கின்ற எதிர்ப்புநிலை தத்துவங்கள். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது ஒரு இனத்தின் “உயிர்ப்புநிலை தத்துவம்”.
முனைவர் . செந்தில்நாதன் சேகுவாரா
(குறிப்பு: இங்கு இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் முழுவதும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள் மட்டுமே. இது தொடர்பாக வாசகர்களுக்கு மாற்று கருத்து விவாதங்கள் இருந்தால் முன் வைக்கலாம்.
: editorlinesmedia@gmail.com , chemthilchem@gmail.com)

2 comments:

tamilblogs.in திரட்டி said...

தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

Prasath said...

நன்று... அருமை... காலத்திற்கேற்ற கட்டுரை.