Wednesday, January 11, 2017

சல்லிக்கட்டில் தமிழர்கள் பெரியாரிஸ்டுகளின் பேச்சைக் கேட்டால் கடைசியில் தப்படித்துக் கொண்டு குத்தாட்டம் மட்டுமே போட முடியும்.சல்லிக்கட்டு என இன்று அழைக்கப்படும் ஏறுதழுவுதல் எனும்  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டின் விடயத்தில், சாதிவேறுபாடற்று ஒருங்கிணைந்து போராடாமல், பெரியாரியர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு  எனக்கென்ன போச்சு என்றிருந்தால்  கடைசியில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது பண்பாடு பாரம்பரியம்   எல்லாவற்றையும் இழந்து, பெரியாரிஸ்டுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு இசைக்கருவியாகிய தப்பை மட்டும் அடித்துக் கொண்டு அவர்களின் தலைமையில் நடுத்தெருவில் நின்று குத்தாட்டம் போட வேண்டித் தான்  வரும். ஏற்கனவே தமிழ்நாட்டுத் தமிழர்களின் தமிழன் என்ற வேட்டியை உருவி விட்டு, எல்லோருக்கும் திராவிடன் என்ற பொதுவான கோவணத்தைக் கட்டி விட்டுப் போய் விட்டார் பெரியார். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது தமிழினவுணர்வை இழந்து திராவிடர்களாகியதன் விளைவை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் கூட அனுபவித்தோம்.

தனது  மண்ணையோ அல்லது பண்பாட்டுப் பாரம்பரியங்களையோ பாதுகாப்பதற்கு வெளியாரின் தயவையும் அனுமதியையும் பெற வேண்டிய நிலையிலுள்ள, தனக்கென ஒரு தனிநாடற்ற இனம் எதுவுமே, எந்த விடயத்திலும் ஒருமித்து, ஒருங்கிணைந்த குரலாக ஒலித்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். ஆனால் அவர்களிடையே இருந்து வெவ்வேறுபட்ட எதிர்ப்புக் குரல்கள் எழுந்தால், வெளியார்கள் அதைக் காரணம் காட்டி அனுமதி கொடுக்க மறுத்து விடுவார்கள். சல்லிக்கட்டு வீர விளையாட்டின் விடயத்தில் பெரியாரியர்கள் தமிழர்களின் பண்பாட்டை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவுகின்றனர் என்ற உண்மையை, அவர்களில் சிலர் சல்லிக்கட்டு பற்றி எழுதும் கட்டுரைகளைப் படித்துப் பார்க்கும் எவருமே உணர்ந்து கொள்ளலாம். இந்த விடயத்தில் மட்டும் தமிழர்களின் வீரவிளையாட்டை ஒழிக்க நினைக்கும் பார்ப்பனர்களும், பெரியாரியர்களும் ஒரேயணியில் உள்ளனர் என்பது தான் கசப்பான உண்மை.

சல்லிக்கட்டு விழாவை எதிர்ப்பதற்கு பெரியாரிஸ்டுகள் கூறும் காரணம் என்னவென்றால், சல்லிக்கட்டை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் விளையாடுகின்றனர் என்பது தான். சாதியொழிப்பு என்ற போர்வையில் அது தமிழர்களால் சங்ககாலத்திலிருந்தே விளையாடப்பட்ட விளையாட்டாக இருந்தாலும் கூட, இக்காலத்தில் அது ஒரு சில சாதியினரால் மட்டும் விளையாடப்படுவதால், எதிர்க்கப்பட  வேண்டியது  என்றால், இறுதியில், நாங்கள் தமிழர்கள், எங்களுடையவை என்று பெருமைப்படக் கூடிய வகையில்   இசை, கலை, பண்பாடு எதுவுமற்ற காட்டுமிராண்டிகளாகத் தானிருப்போம். ஏனென்றால் முற்காலத்தில் ஒவ்வொரு கலை, இசை, நாடக, நாட்டிய வடிவங்கள் மட்டுமன்றி சிற்பக் கலை கூட வெவ்வேறு சாதிகளுடன் தொடர்பு பட்டதாகத் தானிருந்தன. இப்படியே இவர்கள், சிற்பக்கலையும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு சொந்தமாக இருந்தது, சல்லிக்கட்டைப் போலவே தமிழர்கள் அவர்களின் முன்னோர்கள் கட்டிய கட்டிடங்கள், கோயில்கள்  சிற்பங்களை எல்லாம் ஒதுக்க வேண்டுமென்றால் வெறும் கோவணத்துடன் நின்று தான் குத்தாட்டம் போட வேண்டும். ஏனென்றால் தமிழர்களின் சாதனை, பாரம்பரியம், வரலாறு என்று கூறிக்கொள்ள எதுவுமே இருக்காது. 
         
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது கேரள மாநிலத்தில் இசைநடனம், கூத்து, விளையாட்டுக்கள் போன்ற பாரம்பரியங்கள் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் சாதி, மதவேறுபாடின்றி அவற்றைப்பற்றிப் பீற்றிக் கொள்ளவும், பெருமிதப்படவும் செய்கிறார்கள். அங்கும் வெவ்வேறு சாதியினர் தான் ஒவ்வொரு கலைவடிவங்களையும் பாதுகாத்து வந்தனர். ஆனால் இன்று மலையாளிகள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றி  அவற்றுக்கு உரிமை கொண்டாடுகின்றனர்.  அந்தப் பாரம்பரிய கலை, இசைவிளையாட்டு, வடிவங்களை அழியாமல் பாதுகாக்கின்றனர்.

 சில வருடங்களுக்கு முன்னால் திரிசூர்,கேரளாவில் நடைபெறும் பூரம் திருவிழா பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன். பூரம்திருவிழா நடைபெறும்   வடக்குநாதன் கோயிலுள்ள முன்றலில் வண்ண வண்ணக்  குடைகளுடன் யானைகளின் அணிவகுப்பையும், மலையாளிகளின்  செண்டை மேளத்தையும்பார்த்து ரசித்துக்  கொண்டிருக்கும் போது
அங்குஎங்களுடன் பேச்சுக் கொடுத்தவர்களில் பலர் முஸ்லீம்கள் அவர்கள் பெருமையுடன்  அந்த விழாவைப் பற்றி புகழ்ந்து அதன் பழமையைப்பற்றி விளக்கியதையும் பெருமிதப்பட்டதையும் பார்த்து எனக்கு வியப்பாக மட்டுமன்றி மகிழ்ச்சியாகவும் இருந்தது.    அது மட்டுமன்றி முஸ்லீம்களும் அந்த பூரம் திருவிழாவில் யானைகளின் ஊர்வலத்தில்பங்கு கொள்வார்களாம்ஒவ்வொரு கோயிலிலிருந்தும் யானையில் பவனி வரும் இந்துக்கடவுள்களின் ஊர்வலங்களை வரவேற்கும் பந்தல்களையும் வழிநெடுக அமைப்பதிலும்,அலங்கரிப்பதிலும் கூட
பங்கேற்பார்களாம். அங்கே சாதி மத வேறுபாடின்றி முஸ்லீம்கள் கூட இந்துக் கடவுள்களின் ஊர்வலத்தைக் கூட மலையாளிகள் அனைவருக்கும் பொதுவான பாரம்பரியமாக பார்க்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பெரியாரியர்கள் எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டுமென்கிறார்கள். இந்த விடயத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமிடையேயுள்ள வேறுபாடு என்னவென்றால் மலையாளிகளிடம்  பெரியாரியத்தின் தாக்கம் குறைவு. மலையாளத் தேசியத்திடம் பெரியாரியம் தோற்று விட்டது.   
கடைசியில் குத்தாட்டம் மட்டும் தான் தமிழர்களின் கலைவடிவமாக இருக்கும் 
இலங்கையிலும் கூட, கண்டியில் நடைபெறும் புகழ்பெற்ற புத்தரின் புனித தந்தத்தின் ஊர்வலத்தை முழுச் சிங்களவரின் பாரம்பரியமாக, இலங்கையின் தேசிய விழாவாக கொண்டாடுகின்றனர். அங்கேயும் நடனமாடிக் கொண்டும். வெவ்வேறு மேளங்களை அடித்துக் கொண்டு செல்பவர்களும், வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இப்பொழுதும் கூட தாழ்த்தப்பட்ட கரையோரச் சிங்களவர்கள் கண்டியிலுள்ள புத்தர் விகாரையின் பீடாதிபதிகளாக வர முடியாது. ஆனால்  பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஊர்வலத்தை, சாதி, மத வேறுபாடின்றி முழுச் சிங்களவர்களும் (பெளத்தர்கள் மட்டுமன்றி கிறித்தவ சிங்களவர்கள் கூட) தமது பாரம்பரிய  அடையாளமாகக் காட்டிக் கொள்வதும், அதைப் பற்றி மிகைப்படுத்திப் புளுகுவதையும் காணலாம். ஏனென்றால் பாரம்பரிய பண்பாடுகளை இழந்தால் அவற்றை மீட்க முடியாது. அங்கே கரையோரச் சிங்களவர்களுக்கும் கண்டிச் சிங்களவர்களுக்கும் சிண்டு முடித்து விடுவதற்குப் பெரியாரிஸ்டுக்கள் இல்லாதது சிங்களவர்களின் அதிட்டம். 

கீற்று இணையத்தளத்தில் ஒரு பெரியாரிஸ்டு என்னடாவென்றால் ஸ்பெயின் போன்ற நாடுகளில் காளைச்சண்டை உள்ளதே என்பவர்கள் உலகில் நடைபெறும் மாற்றங்களை அறிந்து கொள்வதில்லை. ஸ்பெயினில்ஜெர்மனியில் காளைச்சண்டையை நிறுத்தி ஆண்டுக்கணக்காகி விட்டன.” என்று அப்பட்டமான பொய்யைச் சொல்கிறார். 

ஸ்பெயினில் காளையை அடக்கும் வீர விளையாட்டை நிறுத்துமாறு போட்ட வழக்கை ஸ்பெயினின் உச்சநீதிமன்றம் தூக்கி எறிந்து விட்டு, அது ஸ்பெயினின் பாரம்பரிய விளையாட்டு அதைத் தடை செய்ய முடியாதெனக் கூறியுள்ளது என்பது தான் உண்மை

அந்தக் கட்டுரையை எழுதிய திரு. விஜயபாஸ்கர்  விரும்பினால், ஸ்பெயினில் நடைபெறும் காளையை அடக்கும் வீர விளையாட்டுக்கு இந்த ஆண்டுக்கு இன்னும் சில மாதங்களில் அனுமதிச் சீட்டை வாங்கத் தொடங்கலாம்.அது மட்டுமன்றி ஸ்பெயினில் இக்காலத்தில் நடைபெறும் காளைச்சண்டை எல்லோருக்கும் பொதுவானதல்ல, அது முதலில் மேட்டுக் குடிப் பிரபுக்களின் (Aristocrats) விளையாட்டாக மட்டும் தானிருந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் எல்லோரும் காளையை அடக்கப் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம் என்ற  நிலை ஏற்பட்டது. 

பெரியாரிஸ்டுகள்  உண்மையில் சாதியை ஒழிக்க விரும்புகிறவர்களாக இருந்தால் தமிழர்களின் கலை, இசை பண்பாட்டு விளையாட்டுக்களில் சாதிச்சண்டையைத் தூண்டி விட்டு, அவற்றை அழிக்க நினைக்காமல், அவற்றை விரும்புகிற  தமிழர்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி பயில, விளையாட  வழிவகை செய்ய வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக தடை செய்யப் போராடக் கூடாது. அது அவர்களின் தமிழின எதிர்ப்பையும், தமிழர்கள், தமிழர்களாக ஒன்றுபடுவதைக் கண்டு அவர்கள் பயப்படுவதைத்  தான் காட்டுகிறதே தவிர அக்கறையை அல்ல.  

தமிழ்நாட்டுக்கு மட்டும்  தனித்துவமாக இதுவரை இருந்தது,  'ஏறு தழுவுதல்' இன்று தடை செய்யப்பட்டு விட்டது. மாடுகள் துன்புறுகின்றனஅந்த விளையாட்டைத்தடை
செய்ய வேண்டும் என்று வாதாடினால் கூடப் பரவாயில்லைவாதத்துக்காக ஏற்றுக்கொள்ளலாம். அதற்குக் கூட மாடுகளைத் துன்புறுத்தாத வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கலாமே தவிர தடை செய்யப்பட வேண்டுமென்பது வேண்டுமென்றே தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்கும் சதி என்று தான் கூற வேண்டும். அதற்குப் பெரியாரியர்களும் துணை போகின்றனர் என்பது தான் கொடுமை. தமிழ்நாட்டில் நடைபெறும் சல்லிக்கட்டு போலல்லாமல் ஸ்பெயினில் நடைபெறும் காளைச் சண்டையில் மாடுகள் காயங்களுக்கும் அதிக துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றன.
                                                                                                    
இப்படியே போனால் சாதியொழிப்பு என்றபெயரில், பெரியாரியர்களின் பேச்சைக் கேட்டு,  ஜாதிய பின்னணி” இருக்கிறது என்ற காரணத்துக்காக, தமிழர்களின் இசைவடிவமாகிய கருநாடக சங்கீதத்தைப் பார்ப்பனர்கள் பாடுகிறார்கள். தமிழர்களின் சதிருக்கு மெருகூட்டி, பரதநாட்டியமாக்கி பார்ப்பனர்கள் ஆடுகிறார்கள் என்று தமிழர்களின் பாரம்பரிய இசையையும் நாட்டியத்தையும், அத்துடன் சாதியடிப்படையில் நாதஸ்வரத்தையும், தவிலையும் கூட, இப்படியே தமிழர்களின் பாரம்பரிய கலை, இசை, நாடகம், வீர விளையாட்டு என ஒவ்வொன்றாக தடைசெய்து ஒதுக்கிக் கொண்டு வந்தால் தமிழர்களிடம் தப்பு மட்டும் தானிருக்கும் அதை அடித்துக் கொண்டு நடுரோட்டில் நின்று, பெரியாரியர்களின் தலைமையில் குத்தாட்டம் போட வேண்டியது தான்.


கீற்று இணையத்தளத்தில் சல்லிக்கட்டை எதிர்த்து கட்டுரை எழுதியுள்ள பெரியாரியரின் சிறுபிள்ளைத்தனமான சில கேள்விகளைப் பார்ப்போம்

1)      தமிழர் அனைவருக்குமான பண்பாடெனில் தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஏன் நடைபெறவில்லை?

இப்படியே போனால் தமிழ்மொழி,  தமிழர் அனைவருக்கும் பொதுவான மொழி என்றால் ஏன் தமிழர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான தமிழைப் பேசவில்லை என்றும் கேட்பார் போலிருக்கிறது. பல நாடுகளில் ஒரு காலத்தில் நாட்டு மக்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்த கலைவடிவங்கள், விளையாட்டுக்கள், இசை வடிவங்கள் அருகி, மறைந்துஒரு சில கிராமங்களில், ஏன் ஒரு சில குடும்பங்களில் மட்டுமே கூட நிலைத்திருப்பதுமுண்டு. உதாரணமாக, இலங்கையில் நாட்டுக் கூத்து கலைவடிவத்தைக் குறிப்பிடலாம். முற்காலத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் அறுவடைக்குப் பின்னர் நடைபெற்ற பல்வேறு விதமான நாட்டுக் கூத்துக்கள், இன்று போரினாலும், அண்ணாவியார்மாரின் மறைவினாலும், கிழக்கு மாகாணத்தில் ஒரு சில கிராமங்களில் மட்டும் காணப்படுகிறது. அதை நாங்கள் பாதுகாக்க வேண்டுமா அல்லது எல்லோராலும் ஆடப்படாததால் தடைசெய்ய வேண்டுமா என்பதை இந்தக் கேள்வியைக் கேட்டவர் தான் கூற வேண்டும். 

2) மதுரையைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில்மேலும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகம் கலந்து கொள்வது ஏன்?

சங்ககாலத்திலிருந்தே தமிழர்களால் விளையாடப்பட்ட ஏறுதழுவுதல் இன்று மதுரையில் ஒரு சில கிராமங்\களுக்குள் அடங்கி விட்டது, அதைத் தமிழர்கள் அனைவர்க்கும் பொதுவாக்க வேண்டும், அதைப் பாதுகாக்க வேண்டுமென்றால்  அதில் நியாயம் உண்டு. ஆனால் அதைத் தடுக்க வேண்டுமென்பது அபத்தம். என்பதைச் சிலர் புரிந்து கொள்வதில்லைப் போல் தெரிகிறது.

2)      ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு எனில் மாடு மேய்ப்பது ஆப்ரிக்க பண்பாடாஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு என்று குதிக்கும் கலாச்சார காவலர்கள் மாடு மேய்ப்பதை இழிவாகக் கருதுவது ஏன்?  

மாடு மேய்ப்பது என்பது ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது, சல்லிக்கட்டு வருடத்தில் ஒருமுறை, அல்லது சில விழாக்களுக்காக நடக்கும் பாரம்பரிய நிகழ்வு என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. மாடு மேய்ப்பது பாலுக்காக, உணவுக்காக. அதில் இழிவிருப்பதாக இக்காலத்தில் யாரும் நினைப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் திரு. விஜயபாஸ்கர் இரண்டையும் போட்டுக் குழப்புகிறார்.

3) பழைமையான பழக்கவழக்கம்எனவே ஜல்லிக்கட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற அளவுகோலை மற்றைய பழைய பழக்க வழக்கங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாமாகோமணம் கட்டுவது தானே தமிழரின் பழைய பழக்கம். அதை பின்பற்ற எத்தனை கலாச்சார காவலர்கள் தயாராக உள்ளனர்?

கோமணம் அல்ல அது கோவணம். தமிழர்கள் எவருமே கோவணம் கட்டக் கூடாதென்று யாராவது தடை செய்தால் அதையும் தமிழர்கள் எதிர்க்கத் தான் வேண்டும். விரும்பினால் தமிழர்கள் எவரும் கோவணம் கட்டலாம்.

5) பழையது என்ற ஒரே காரணத்திற்காக இன்றைய நவீன அறிவியல் யுகத்திற்குப் பொருந்தாத பழக்கவழக்கங்களை அனுமதிக்க முடியுமா?

நவீன யுகத்தில் பழமையை எல்லாவற்றையும் அனுமதிக்கக் கூடாதென்றால், மேலை நாடுகள் கோடிக்கணக்கான பணத்தை பழமையை, பழைய அழிந்து போகும் மொழிகளை பாரம்பரியங்களைப் பாதுகாக்க செலவு செய்ய மாட்டார்கள்.

8) பழமைதான் என்பதற்காக தமிழ்நாட்டில் மாட்டு வண்டியில் பயணம் செய்ய நாம் தயாரா?
எவ்வளவு முட்டாள் தனமான கேள்வி. வெளிநாடுகளில் முற்காலத்தில் குதிரைவண்டிகளைப் பாவித்தனர். இப்பொழுது அவர்களிடம் நவீன வாகனங்கள் உள்ளன. அதற்காக அவர்கள் குதிரை வண்டிகளைப் பாவிப்பதில்லையா. குதிரை வண்டிகளில் போவது பெருமையானது மட்டுமன்றி செலவு அதிகமானதும் கூட. , திருமண ஊர்வலங்கள் குதிரைவண்டியில் போவதற்கு நிறைய பணம் செலவாகும். அது போன்றது தான் தமிழர்களுக்கு மாட்டுவண்டியும். இன்னும் சில காலத்தில் மாட்டு வண்டி தமிழ்நாட்டிலும் ஒரு ஆடம்பரமாக வரலாம்.

  


2 comments:

Nanmaran M said...

நண்பர் வியாசனுக்கு,
பெரியாரிஸ்டுகள் பொங்கலைகூட தமிழர் திருநாள் என்று சொல்லமாட்டார்கள், திராவிடர் திருநாள் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு தமிழ் பற்று!! உள்ளவர்கள். அவர்கள் எப்படி தமிழரின் தொன்மையான மஞ்சு விரட்டை ஆதரிப்பார்கள்.

Ant said...

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். காட்டுமிராண்டி மொழி காட்டுமிராண்டிகளால் பேசப்படுவதாகும். தமிழில் கட்டுரை எழுதிய பெரியாரிஸ்டுகள் காட்டுமிராண்டிகள் என்பதை பகுத்தறிவு கொண்டு அறிந்திருப்பார்கள் எனவே காட்டுமிராண்டிகளின் பேச்சை புறந்தள்ளுக. நாம் இவர்கள் வாதத்தை ஏற்பதல்லவே எனவே இத்தகைய தர்க்க முடிவு மற்றவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் வாதப்படி அவர்கள் நிலை என்ன என்பதை உணர்த்தவே. ஏற்றகனவே, ஒரு கட்டுரை பின்னுாட்டத்தில் நான் குறிப்பிட்னே் நாளை ஜல்லிக்கட்டு என்பது கூட சமஸ்கிருதம் என்று வாதிட்டாலும் வாதிடுவார்கள் என்று. அந்த கூட்டமும் தலித் என்று கூறிக்கொள்ளும் கூட்டமும் இணைந்து செயல்பட்டே இந்த விளையாட்டுக்கான தடையை அமுல்படுத்தியது. இதில் முக்கிய பங்கு தலித், பார்பான அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிதுறைசார்ந்த இவ்விரு கூட்டு குழு என மறைமுகமாக செயல்பட்டு சதிசெய்துதான் தடையை பெற்றனர் தொடர்ந்து அதை நடைமுறையில் வைத்திருந்தனர். பார்பனரை எதிரப்பதாக கூறிக்கொண்டு தலித்துகள் அவர்களுடன் வைத்திருந்த கூட்டு சல்லிக்கட்டில் வெட்ட வெளிச்சமானது. இளம் தலைமுறையினர் சாதி பாகுபாட்டை மறந்து தமிழர் அடையாளம் என்பது அணைத்து தமிழராலும் அனைத்து பகுதியிலும் இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்து நாளை இப்படி ஒவ்வொரு அடையாளமும் அழிக்கப்படும் எனப்தை கணித்து களம் கண்டதாலேயே வெற்றி கிட்டியது. பாராட்டுக்குரியவர்கள் இளந்தலமுறையினரே.