Sunday, October 23, 2016

ஷரியாவால் மனுநீதிச் சோழனுக்கு வந்த சோதனை!தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பசுவுக்கு நீதி வழங்குவதற்காக தனது சொந்த மகனையே தேர்ச்சில்லினால் மிதித்துக் கொன்ற தமிழ்மன்னனின் கதையை சிறுவயதிலேயே பெற்றோர்களிடமிருந்து 
கேள்விப்பட்டிருப்பார்கள், அல்லது பாடப்புத்தகங்களிலிருந்து படித்திருப்பார்கள், தமிழ்நாட்டில் அது மனுநீதிகண்ட சோழனின் கதையாகக் கூறப்படும், ஆனால் இலங்கையில் சிங்களவர்களின் மகாவம்சக் கதையின் அடிப்படையில், இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனின் கதையாக, அதாவது, பசு மணியை ஒலித்ததால், அதன் கன்றைக் கொன்ற இளவரசனை தேர்ச் சில்லால் அவனே மிதித்துக் கொன்றதாகக் கூறப்படும்.

அதாவது நீதியுடன் மனிதவுரிமைகளைப் போற்றிப் பாதுகாக்கும் ஆட்சியின் கீழ், அங்கு வாழும் மனிதர்களுக்கு அந்தநாட்டு அரசனிடம் அல்லது ஆட்சியாளர்களிடம் நீதி கேட்க உரிமையுள்ளது மட்டுமன்றி, அந்த உரிமை அங்கு வாழும் மிருகங்களுக்கும் (உயிர்கள் அனைத்துக்கும்) உண்டு. அவை கூட நீதி கேட்டால், பாரபட்சமின்றி நீதி வழங்கப்படும், அது தான் நல்லாட்சிக்கு தமிழர் கண்ட வரைவிலக்கணம். அவ்வாறாக உயிர்கள் அனைத்தினதும் உரிமைகளைக் காக்கும் ஆட்சியை தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் நடத்தினான் என்பதுடன், நீதி என்பது மனிதவுரிமை மட்டுமன்றி, விலங்குகளின் உரிமையும் கூட என்பது தான் அந்தக் கதையின் கருத்தாகும். இந்தப் படிப்பினையைத் தான்  மனுநீதிகண்ட சோழன் கதை தமிழர்களுக்குக் கற்பிக்கிறது.  

அது ஒருபுறமிருக்க, சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ், சவூதி அரேபியாவின் செல்வத்தை முழுமையாக அனுபவிக்கும் ஏறத்தாள 6000க்குமதிகமான அரச குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவரும் -முடிசூடும் தகுதியுடைய பரம்பரை வரிசையில் இல்லாதவருமாகிய- இன்றைய ஆட்சியாளர் சல்மானின் தூரத்து உறவினர் ஒருவனுக்கு, நாற்பது வருடங்களுக்குப் பின்னர், அங்கே ஷரியா சட்டத்தின் கீழ் மரண தண்டனை கொடுத்து விட்டார்களாம் . அதைக் காரணம் காட்டி சவூதி அரசன் சல்மானை, மனுநீதிகண்ட சோழனுடன் ஒப்பிட்டுச் சில தமிழர்கள் உளறும் அபத்தத்தை, ஏனோ தெரியவில்லை, என்னால் மட்டும் தாங்கிக்  கொள்ள முடியவில்லை. 

தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர், தமிழ்நாட்டின் முன்னணி வார இதழொன்றில் பசுவின் கன்றை கொன்ற மகனைத் தேர்க் காலில் தலையை இடறச் செய்து, நீதி வழங்கினான் மனுநீதிச் சோழன்.  தற்காலத்திலும் அப்படி ஒரு சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது என்று எழுதியுள்ளார். மனுநீதிச் சோழன் காலத்தில் தமிழ்மண்ணில் ஷாரியா சட்டம் தான் நடைமுறையில் இருந்தது என்று அவர் எழுதாமல் விட்டதே பெரிய விடயம், அதற்காக தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றி கூற வேண்டும். தமிழ்நாட்டில் அவர் போன்று பலரும் தமது மனுநீதிகண்ட சோழனுடன் ஒப்பிட்டுத் தமது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.


தமிழர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் விரைவில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் ஒப்பிட்டு புகழ்ச்சி பாடக் கூடியவர்கள். தமிழ்நாட்டு நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகளைக் கூட, தமிழ் அரசர்களுடன் மட்டுமன்றி, கடவுளாகக் கூட சித்தரித்தது மட்டுமன்றி, குஷ்புவுக்குக் கூடக் கோயில் கட்டியவர்கள் அவர்கள். அதனால் ஷரியாவின் அடிப்படையில் கொடுத்த தண்டனையை, மனுநீதிகண்ட சோழனுடன் ஒப்பிடுவதன் அபத்தத்தை அவர்கள் யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. உண்மையில் இந்த ஒப்பீடு தமிழர்களே மனுநீதிச் சோழனை அவமதிக்கும் செயலாகும் 

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஒப்பீட்டையும், பாராட்டுகளையும் பார்த்த முஸ்லீம்கள் பலர், அது தான் சாக்கென்று, வந்த வாய்ப்பை நழுவ விடாமல் ஷாரியா சட்டத்தின் தாற்பரியத்தையும், மேன்மையையும், நன்மைகளையும் பற்றி இணையத்தளங்களில் தமிழர்களுக்கு எடுத்தியம்பத் தொடங்கி விட்டனர்.

மனிதவுரிமைகள் மதிக்கப்படுவது மட்டுமன்றி, மிருகங்களுக்கும் கூட உரிமைகள் உண்டு,  அவற்றின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவது முக்கியம், அவற்றுக்கும் ஒரே விதமான நீதி கிடைக்க வேண்டும், அது தான் நீதியான நல்லாட்சி என்பதை உணர்த்துவதற்காக, எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட (அல்லது உண்மையாக நடந்த) கதையின் நாயகனாகிய  மனுநீதி கண்ட சோழனை, மனிதவுரிமைகளை மதிக்காத  நாடாக மனிதவுரிமை இயக்கங்கள் அனைத்தாலும் ஒருமனதாகக் குற்றங்சாட்டப்படும் நாட்டில் நடைபெற்ற சம்பவத்தின் அடிப்படையில், அந்த நாட்டு ஆட்சியாளரை மனுநீதி கண்ட சோழனுடன் ஒப்பிடுவது வெறும் அபத்தம் என்பது தான் எனது கருத்தே தவிர பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி இனக்குழுக்களுக்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்  இயற்றப்பட்ட ஷரியா சட்டம் சரியானதா அல்லது தவறானதா என்று வாதாடுவதல்ல என்னுடைய நோக்கம். அதைப் பற்றிப் பலர் இணையத்தளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறர்கள்.  

சவூதி அரேபியாவில் எத்தனையோபேர், குறிப்பாக, மொழிதெரியாத வெளிநாட்டவர்கள் ஷாரியா சட்டத்தின் கீழ், முறையான விசாரணை நடத்தப்படாமல்  அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பல மனிதவுரிமை இயக்கங்கள் பலத்த எதிர்ப்பைத் தெரவித்துள்ளன. இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லீம் பெண்ணாகிய ரிசானா நபீக்கின் பரிதாப முடிவு அதற்கு நல்ல உதாரணமாகும்.

சவூதி அரேபியாவில் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் அரசகுடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை மனுநீதிகண்ட சோழனுடன் ஒப்பிட்டு நீதி தவறாமல் ஆட்சி செய்வதாகப் பாராட்டினால், அதே சட்டத்தின் கீழ் பெண்களைக் கூட கல்லெறிந்து கொல்லும்போது அதை எதனுடன் ஒப்பிடுவது, அதையும் பாராட்ட வேண்டாமா? இந்தக் கொலையை மெச்சுவதும், மனுநீதி கண்ட சோழன் போன்று நீதி வழங்கப்பட்டதாகப் பாராட்டுவதும், பெண்களைக் கூடக் கொடூரமாகக் கல்லெறிந்து கொல்லுவதையும், கையை, வெட்டுவது, காலை வெட்டுவது போன்ற காட்டுமிராண்டித்தனங்களையும், மரண தண்டனையையும் கூட சரியானவை எனத் தமிழர்கள் ஏற்றுக் கொள்வதாக, பாராட்டுவதாக, கருதப்படும் என்பதைச் சில தமிழர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை என்பது தான் மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.


  “The death penalty is a cruel, inhuman and degrading punishment and should not be applied in any circumstances. Whether the accused is a prince, an ordinary Saudi Arabian citizen or a migrant worker makes no difference whatsoever—no one should be sentenced to death or executed.” Amnesty International - 

Sunday, October 16, 2016

ஈழத்தில் சிவசேனையின் உருவாக்கத்தை ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்.


ஈழத்தமிழர்கள் அனைவரும் சாதி, மதபேதமின்றி தமிழர்களாக ஒன்றுபடக் கூடிய தமிழுணர்வும், அரசியல் வரலாறும் கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதற்குச் சாவுமணியடிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் போல் ஈழத்தமிழர் மத்தியிலும் பார்ப்பனீய/இந்துத்துவாக் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சிவசேனை அமைப்பை வேரூன்றச் செய்து, ஈழத்தமிழினத்தை மேலும் பிளவுபடச் செய்யும் முயற்சி சிலரால் (வெளியாரின் உந்துதலால்) மேற்கொள்ளப்படுகிறது போல் தெரிகிறது. அதை ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும். இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களிடையே, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இத்தகைய மதவாத அமைப்புக்கான ஆதரவை தடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் கடமையாகும்.

வடமாகாணத்திலுள்ள வவுனியா நகரில் இந்தியாவிலுள்ளது போன்ற சிவசேனை இயக்கம் இந்தியாவில் வாழ்ந்த அல்லது இந்தியத் தொடர்புகள் கொண்ட ஈழத்தமிழர்கள் சிலரால் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தியாவிலுள்ள, அது போன்ற இயக்கங்களின்,  குறிப்பாக சிவசேனா, விஸ்வஹிந்து பரிசத், ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளின் ஆதரவும் தமக்கிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் இந்த இயக்கத்தின் அமைப்பாளராகிய மறவன்புலவு சச்சிதானந்தன் என்ற ஈழத்தமிழர்.

இலங்கையில் திட்டமிட்ட சிங்கள – பெளத்த குடியேற்றங்களினால் இந்துக் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், தமிழர் நிலங்கள் பெளத்தமயமாக்கப்படுவதையும் தடுக்க வேண்டுமெனவும் இலங்கை சிவசேனை குறிப்பிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் சிவசேனாவும், ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்களும் இந்துத்துவாக்களும் பெளத்தத்தை இந்துமதத்தின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்களே தவிர, அவர்கள் பெளத்தத்தை மட்டுமன்றி சிங்களவர்களையும் எதிர்க்கவில்லை. அவர்கள் எதிர்ப்பது இஸ்லாத்தையும், கிறித்தவத்தையுமே தவிர பெளத்தத்தை அல்ல. இந்த லட்சணத்தில் ஈழத்தில் தமிழர் நிலங்களில் திட்டமிட்ட பெளத்த- சிங்கள ஆக்கிரமிப்பை இலங்கையில் சிவசேனை எப்படித் தடுக்கும் என்பதை இதன் அமைப்பாளர் தான் விளக்க வேண்டும். 

ஆனால் சிவசேனை இயக்கத்தின் கிறித்தவ எதிர்ப்பு கடைசியில், ஈழத்தமிழர்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி விடும். சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கையின் கரையோரப்பகுதிகளில் புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு வரை வாழ்ந்த தமிழர்கள், கத்தோலிக்கராகி கடைசியில் சிங்களக் கத்தோலிக்கர்களுடன் கலந்து சிங்களவர்களாக மாறிய வரலாற்றை ஈழத்தமிழர்கள் மறந்து விடக் கூடாது. அவ்வாறு நடந்திராது விட்டால், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையான தமிழ்நிலத்தை இழந்திருக்க மாட்டார்கள். சிவசேனை ஈழத்தமிழர் மத்தியில் வளர்ந்து, அவர்களின் கிறித்தவ எதிர்ப்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்து - கிறித்தவ பிளவு ஏற்பட்டால், மீண்டும் தமிழ்க்கிறித்தவர்கள் சிங்களக் கிறித்தவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?  அது மட்டுமன்றி, வன்னியில் தமிழ்மண்ணை மீட்கத் தனதுயிரை ஈந்த ஒவ்வொரு ஈழத்தமிழனும் இந்துவாகவோ அல்லது கிறித்தவனாகவோ சாகவில்லை, தமிழனாக மட்டும் தான் தனதுயிரை ஈந்தான் என்ற உண்மையை இலங்கையில் சிவசேனை இயக்கத்தை உருவாக்க முயல்கிறவர்களுக்கு ஈழத்தமிழர்கள் உணர்த்த வேண்டும்.
சிங்கள - தமிழ் போர்க்காலம் 2002
ஈழத்தமிழர்களின் ஆயிரக்கணக்கான கோயில்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட போதும், அதிலும் குறிப்பாக பழம்பெரும் தலமாகிய நகுலேச்சரத்தின் மீது இலங்கை விமானப்படை குண்டு வீசிய போதும், பாடல்பெற்ற தலங்களாகிய திருக்கோணேச்சரம் பெளத்தத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போதும், திருக்கேதீச்சரம் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுச், சூறையாடப்பட்ட போதும், பெரும்பான்மை ‘இந்துக்களாகிய’ ஈழத்தமிழர்கள் கேட்பாரின்றிக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட போதும், இந்தியாவின் இந்து இயக்கங்களும், இந்துத்துவாக்களும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் சிங்களவர்களுக்குத் தான் ஆதரவளித்தனர், ஈழத்தமிழர்களனைவரையும் பயங்கரவாதிகளாக தமது ஊடகங்களில் சித்தரித்தனர். அந்த வரலாற்றை மறந்தவர்கள் தான் தீவிரவாத இந்துத்துவா/பார்ப்பனீயக் கொள்கைகளைக் கொண்ட சிவசேனை போன்ற அமைப்புகள் இலங்கையில் உருவாக ஆதரவளிப்பர். அது மட்டுமன்றி, இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்தில் சிவசேனா இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கெதிராக இயங்கிய வரலாற்றையும் ஈழத்தமிழர்கள் மறந்து விடக் கூடாது.

இன்று நாம் ஈழத்தமிழர்கள் எமது வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். ஈழத்தமிழர்கள் அனைவரும். சாதி மத, பிரதேச வேறுபாடின்றி தமிழர்களாக ஒன்றுபட வேண்டிய கட்டாய தருணத்தில், இவ்வாறான மத அடிப்படையிலான பிரிவுகளை ஏற்படுத்தி, ஈழத்தமிழர்களைப் பிளவுபடுத்தி நலிவடையச் செய்யும் எந்த அமைப்பும் இலங்கையில் ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவாவாதை தமிழர்கள் அனைவரும் சந்தேகத்துடன் பார்ப்பது மட்டுமன்றி அத்தகைய முயற்சிகளை முழுமையாக எதிர்க்கவும் வேண்டும்.   

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சிவசேனைக்கு அதிகளவு ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது, அதற்குக் காரணம் தீவிரவாத இஸ்லாமிய வஹாபியம் தான். இன்றும் தமிழை மட்டுமே தமது தாய்மொழியாகக் கொண்டிருந்தும், இலங்கையில் தமது வரலாற்றைத் திரித்து, எந்த நாட்டிலும் (முஸ்லீம் நாடுகள் உட்பட) இல்லாத விதமாக, மத அடிப்படையில் முஸ்லீம் என்ற இன அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தம்மை அரபுக்களின் வாரிசுகளாகக் ‘கதை’ விட ஆசைப்படும் இலங்கை முஸ்லீம் தீவிரவாதம், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்புக்குச் சவால் விடுவதும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதும், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்த்து, இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைப்பதற்கு எதிராக இருப்பதும், உண்மை என்றாலும் கூட, அதற்காக சிவசேனை போன்ற அமைப்பை ஈழத்தமிழர்களும் அமைத்துக் கொள்வது சரியான தீர்வு அல்ல. மாறாக, அது ஈழத்தமிழர்களைத் தான் மேலும் பலவீனப்படுத்தும் என்பதை கிழக்குமாகாணத்தில் வாழும் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் கூட, இந்தியாவிலுள்ள பார்ப்பனீய/இந்துத்துவாக் கொள்கையடிப்படையில் பார்க்கும் போது உண்மையில் ஈழத்தமிழர்கள் "இந்துக்கள்" அல்ல என்று தான் கூறவேண்டும். உதாரணமாக, நாயன்மார்களின் தமிழ்த்தேவாரங்களை வேதங்களுக்குச் சமமாக அல்லது உயர்வாகக் கருதும் பாரம்பரியம் கொண்ட ஈழத்துச் சைவர்கள் எவ்வாறு, தமிழில் வழிபாடு நடத்துவதை எதிர்க்கும், வடமொழியைத் திணிக்கும் இந்துத்துவா/சிவசேனை  இந்துக்களாக இருக்க முடியும். சிவசேனையை இலங்கையில் அமைப்பதை விட, சைவர்களாகிய ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சைவத்தை தமிழாக்க வேண்டும். பார்ப்பனீய சடங்குகளிலிருந்து விலகி எமக்கேயுரிய பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுமே தவிர, பார்ப்பனீய, இந்துத்துவா இயக்கங்களுடன் கலந்து காணாமல் போய்விட முயற்சிக்க கூடாது.
தந்தை செல்வா நினைவுத்தூண் யாழ்ப்பாணம் 
ஈழத் தமிழர்களின் வரலாற்றை உற்று நோக்கினால், எமது முன்னோர்கள் எவ்வளவு தான் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை என்று நம்பினாலும் கூட, அரசியலையும் மதத்தையும் ஒரு போதும் கலக்காமல் தமிழர் என்ற அடையாளத்தை மட்டுமே முன்னெடுத்தனர் என்பது தெளிவாகும். ஈழத்தமிழர்களுக்கென மத அடிப்படையிலான எந்த அரசியல் கட்சியையும் அவர்கள் உருவாக்கவில்லை. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்து – கிறித்தவ பிரிவினையை சுதந்திரத்தின் பின்னர் ஏற்படுத்த முயன்ற சில தலைவர்கள், அவர்கள் சிறந்த கல்விமான்களாக இருந்தும் கூட காணாமல் போய் விட்டனர் என்பது தான் உண்மை. உதாரணமாக, 1970 ஆம் ஆண்டில் யாழ். காங்கேசன்துறை தொகுதியில் ‘தமிழர்தந்தை’ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்கெதிராகப் போட்டியிட்ட கணிதமேதை ‘அடங்காத்தமிழன்’ சி. சுந்தரலிங்கம் சிலுவையா? சூலமா? என்று சைவ- கிறித்தவ பிரிவினையைத் தூண்ட முயற்சித்த போதும், கிறித்தவராகிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்தை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்தனராம் பெரும்பான்மைச் சைவர்களாகிய யாழ்ப்பாணத் தமிழர்கள். 

ஈழத்தமிழர்களின்  மதச்சார்பற்ற அந்த அரசியல் வரலாற்றை, சைவ – கிறித்தவ நல்லிணக்கத்தை சிவசேனை போன்ற அமைப்புகள் கெடுத்து விடும். எண்ணிக்கையில் நலிவுற்றுக் கொண்டு செல்லும் ஈழத்தமிழர்களை மறவன்புலவு சச்சிதானந்தனின் 'இந்து அடையாளம்' மேலும் பிளவு படுத்தி, வடக்கு-கிழக்கிலேயே சிறுபான்மையினராக்கி, அழித்து விடும் என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.