Sunday, May 29, 2016

தமிழர்களின் இனப்பெயர் திராவிடர் அல்ல – “திராவிட இயக்கம் முற்றிலும் தமிழர்க்கான இயக்கமன்று”


தமிழ்த்தேசியத்துக்காக தனது வாழ்நாளைக் கழிக்கும் ஐயா மணியரசனார் பற்றி ஈழத்தமிழர்களில் பலருக்கும் தெரியாது. அவரது தமிழ்த்தேசியம் பற்றிய கருத்துக்கள் உலகத் தமிழர்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் அவரது கருத்துக்களைப் பல தமிழ்  ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விடுகின்றன, கீற்று இணையத்தளத்தில் வெளிவந்த
மார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் என்ற சிறந்த கட்டுரை உலகத் தமிழர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அதனை இங்கே மீள்பதிவு செய்கிறேன். 
மார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10
ஆரியச்சான்றுகள் காட்டினர்

வரலாற்று உண்மைக்குப் புறம்பாக, தமிழர்களின் இனப்பெயர் ‘திராவிடர்’ என்று பெரியாரும் அண்ணாவும் திரும்பத் திரும்பக் கூறினர்.அதற்கான சான்றுகளை உரியவாறு பெரியார் காட்டவில்லை. ஆரியச் சான்றுகளைக் காட்டினார். தமிழரின் அகச் சான்றுகள் காட்டவில்லை.திராவிடர் என்ற பெயரை மனுதர்ம நூலில் காணலாமே! இராமாயணத்தில் பாரதத்தில் கூட இதற்கு ஆதாரம் உண்டே” என்றார் (ஈ.வெ.ரா.சி பாகம் 1 - பக். 547).அண்ணா கூறிய சான்றுகளும் ஆரியர்கள், பார்ப்பனர்கள் கூறியவையே தவிர, தமிழர்கள் கூறியவை அல்ல.

சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் முதலிய தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகள் அல்ல அவை.

இதோ அண்ணா கூறுகிறார் :

இரவீந்திரநாத் தாகூரின் ஜனகனமன பாட்டில் “திராவிட உத்கல வங்கா” வருகிறது. சென்னை மாநிலக் கல்லூரி வாயிலில் நிற்கும் உ.வே. சாமிநாதய்யர் சிலையின் கீழ் அவரைத் “திராவிட கலாநிதி” என்றுகுறிப்பிட்டுள்ளார்கள். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைத் திராவிட சிற்பக்கலை என்று எழுதி வைத்துள்ளார்கள். சென்னை கொத்தவால் சாவடியில் 04.06.1961-இல் அண்ணா ஆற்றிய உரை, “திராவிட தேசியம் மாநில சுயாட்சி ஏன்?” என்ற நூலிலிருந்து, திராவிடர் கழக வெளியீடு, மூன்றாம் பதிப்பு 2012, பக்: 11 - -13.

மகாபாரதம், மனுசுமிருதி போன்ற நூல்களிலிருந்து தொடர்ந்து ஆரியப் பார்ப்பனர்கள் திரிபாகக் கூறி வந்த திராவிடத்தின் தொடர்ச்சிதான் வங்கத்தைச் சேர்ந்த இரவீந்திரநாத் தாகூர் திராவிடம் பற்றி எழுதியது.இரவீந்திரநாத் தாகூர் கூறும் திராவிடத்தை ஏற்றுக் கொண்ட அண்ணா, அவர் அதே பாட்டில் கூறிய பாரதத்தை ஏற்றுக் கொண்டாரா? ஜனகனமனப் பாட்டின் பொருள் என்ன?

பாரதத் தாயே நின் திருப்பெயர் பஞ்சாபையும் சிந்துவையும், குசராத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது” என்கிறார் தாகூர். தாகூரின் இந்தப் பாட்டைக் கேட்டு அண்ணா உள்ளக் கிளர்ச்சி அடைகிறார்.  :-)

பாரதத் தாயின் தலைமையை ஏற்றுக் கொண்ட “திராவிடம்” என்று ஆரியப்- பார்ப்பனியப் பார்வையில் தாகூர் கூறுவதையும் அண்ணா ஏற்றுக் கொண்டாரா? இல்லை. இந்த விளக்கம் கொடுத்த 1961 -காலத்தில் பாரதத்திற்கும் திராவிடத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை, நாங்கள் தனிநாட்டவர் என்று கூறித் தனிநாடு கேட்டார் அண்ணா.  “வடவர் நம்மவரும் இல்லை; நல்லவரும் இல்லை” என்று அக்காலத்தில் அண்ணா கூறிக் கொண்டிருந்தார்.

தாம் சார்ந்த தமிழினத்தில் திராவிடத்திற்குச் சான்றில்லை, எதிரியின் தரப்பில் கொச்சையான திரிபான சான்றாக இருந்தாலும், ஏதோ ஒன்று இருக்கிறது, அதை எடுத்துக் காட்டுவோம் என்று அண்ணா காட்டியுள்ளார். அவர்கள் ஏற்றுக் கொண்ட ஆரிய நாமகரணமான - திராவிடம் -- அவர்களை அங்கேதான் கொண்டு போய்ச் சேர்க்கும்.

இதோ, அடுத்த ஆரியச் சான்று. தமிழறிஞர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கு “திராவிட கலாநிதி” என்று பட்டம் இருக்கிறதே என்கிறார் அண்ணா!திராவிட வித்யா பூஷணம்” என்ற பட்டத்தைப் பனாரஸ் பல்கலைக் கழகத்தில் ‘பாரத தர்ம மகா மண்டல்’ என்ற இந்துத்துவா பார்ப்பனிய அமைப்பு 31.01.1917-இல் உ.வே.சா. அவர்களுக்கு வழங்கியது. இந்துத்துவா மற்றும் பார்ப்பனியத்தில் காலூன்றி நின்று கொண்டு காங்கிரசுத் தலைவராகவும் விளங்கியவர் வடநாட்டு மதன்மோகன் மாளவியா. அவரும் அவரைச் சார்ந்தோரும் நடத்திய அமைப்பு தான் “பாரத தர்ம மகா மண்டல்”. இதே மண்டல் தான் 1916 இல் பனாரஸ் (காசி) இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியது. “சனாதன தர்மத்தையும் இந்து பண்பாட்டையும் பரப்புவதற்காக பாரத தர்ம மகா மண்டல் தொடங்கப்பட்டதாக” அதன் நோக்கங்களில் கூறப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் மகாபாரதம், மனுசுமிருதி நூல்களைப் பின்பற்றி “திராவிட வித்யா பூஷணம்” என்று உ.வே.சா.வுக்கு பட்டம் வழங்கினர். ஆரியம் -- பார்ப்பனியம் - பாரத மாதா - இந்துத்துவா ஆகிய வற்றை எதிர்த்த அண்ணா, ஆரியத்தின் “திராவிடத்தை” மட்டும் ஏற்றது ஏன்தமிழில் சான்றில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரும் அண்ணாவும் தமிழர்களுக்கு மட்டுமான கட்சியைத் தொடங்கவில்லை. தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோருக்கான கட்சியைத் தொடங்கினர். தொடங்கினர் என்று கூறுவது பிழை. அப்படியான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக் கட்சி) - 1930களில் பெரியாரின் தோழமை அரசியல் கட்சியாக விளங்கியது. பின்னர் 1939-இல் அதன் தலைமை பெரியாருக்கு வந்தது.ஒரு தொழிற்சங்கப் பெயர் போல் இருந்த அந்தப் பெயரை மாற்றி - இனம் சார்ந்த புதிய பெயர் வைக்கப் பெரியாரும் அண்ணாவும் விரும்பினர். அப்போது “தமிழர்” என்ற பெயர் வேண்டாம் என்று கருதி தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்கும் பொதுவான இனப்பெயராக ஆரியப் பார்ப்பனர் அழைத்து வந்த “திராவிடர்” என்ற திரிபுப் பெயரைச் சூட்டினர்.

எனவே அவர்களுக்குத் திராவிடத்தை அடையாளப்படுத்த ஆரியச் சான்றுதான் கிட்டுமே தவிர தமிழ்ச் சான்று கிட்டாது. இன்றும் அண்ணா காட்டிய அதே மேற்கோள்களைத்தாம் கலைஞர் கருணாநிதி திராவிடத்திற்குச் சான்றாகக் காட்டி வருகிறார். ஆரியம் கூறிய திராவிடப் பெயரை ஐரோப்பிய ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டு திராவிட மொழி, திராவிடப் பண்பாடு, திராவிடக் கட்டடக்கலை என்று கூறி, தமிழ் - தமிழர் வரலாற்றை, தமிழர் பண்பாட்டை, தமிழர் ஆற்றலை திராவிடத்திற்குள் மூடி வைத்தனர். அந்த ஆரியச் சான்றுகளைக் காட்டுவதில் என்ன வரலாற்றறிவு இருக்கிறது? என்ன தன்மான உணர்ச்சி இருக்கிறது? எதுவுமில்லை.

தமிழர் அகச்சான்றுகள்

தமிழ், தமிழர், தமிழகம், தமிழ்நாடு என்பவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழ் இலக்கியங்களில் பயின்று வரும் சொற்கள்.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறும் நல்லுலகம்”- தொல்காப்பியப் பாயிரம்.

இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கைத்தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து” - புறநானூறு- 19.

நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணிவடிநவில் அம்பின் வில்லோர் பெருமகைவள் ஈகைக் கடுமான் கொற்றவையக வரைப்பில் தமிழகம் கேட்பப்பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்பாடுப என்பர் பரிசிலர் நாளும்ஈயா மன்னர் நாணவீயாது பரந்த நின் வசையில் வான் புகழே” - புறநானூறு- 168.

தமிழ்கெழு மூவர் காக்கும்மொழிபெயர் தேஎத்தே பன்மலை யிறந்தே.” - அகநானூறு- 31.

தமிழகப் படுத்த விமிழிசை முரசின்வருநர் வரையாப் பெருநாளி ருக்கை” - அகநானூறு- 227.

தண்டமிழ் வலித் தமிழ்நாட்டக மெல்லாம்நின்று நிலையிற் புகழ்பூத்த லல்லதுகுன்றுதல் உண்டோ மதுரைக் கொடித்தேரான் -- பரிபாடல்- 410.

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்தமிழ்முழு தறிந்த தன்மையன் ஆகி” -- சிலப்பதிகாரம், அரங்கேற்றுக்காதை.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய”- சிலப்பதிகாரம், காட்சிக்காதை.

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்-- திருநாவுக்கரசர் (தேவாரம்).

வினாவும் விடையும் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கான தொல்காப்பிய நூற்பாவான “செப்பும் வினாவும் வழா அல் ஓம்ப’’ என்பதற்கு விளக்க வுரை எழுதிய இளம்பூரணர் எடுத்துக்காட்டாக “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’’ என்றார்.

இன்னும் இப்படி எத்தனையோ அகச் சான்றுகளாகத் தமிழ் இலக்கியம் தந்தவை தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்கு இருக்கின்றன.


ஆந்திர நாயக்கர் ஆட்சியில் திராவிடம்

திராவிடம், திராவிடர், திராவிடநாடு என்று பழந்தமிழிலக்கியம் ஒன்று கூடக் குறிப்பிடவில்லை.
தமிழகத்தின் தலையெழுத்தை 
தீர்மானிக்கும் தெலுங்கர்கள்!
தமிழர்கள் ஆந்திர நாயக்க மன்னர்களுக்கு அடிமையாக்கப்பட்டு ஆரியமும் தெலுங்கும் கோலோச்சிய 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்தான் ஆரியர் சூட்டிய “திராவிடர்’’ என்ற பெயரைத் தமிழர்கள் தாங்களும் கூறிக் கொண்டனர்.சூத்திரர்கள்’’ என்றும் தங்களைத் தமிழர்கள் கூறிக் கொண்ட அடிமை வாழ்வு மேலோங் கிய காலம் அது! வீரம் மிக்க சைவ மரபு பேசிய ஆறுமுக நாவலரே தங்களைச் சற்சூத்திரர் என்று கூறிக் கொண்டார். ஒட்டுமொத்தத் தமிழகமும் கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து அயலார்க்கு அடிமைப்பட்ட பேரவலத்தின் விளைவுகள் இவை!

இந்தப் பின்னணியில்தான் தாயுமானவர் (1705- - 1742) தமிழ் இலக்கியத்தில் முதல் முதலாகத் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதுவும் திராவிடத்தைப் பெருமைப்படுத்தும் நோக்கில் அன்று; குதர்க்க வாதிகளின் குழப்பவாதத்தை அம்பலப்படுத்தும் நோக்கில்!

கோவையில் 1950 மே 27, 28 ஆகிய இருநாளும் தி.மு.க. முத்தமிழ் வளர்ச்சி மாநாடு நடத்தியது. அம்மாநாட்டின் தலைவர் புரட்சிப்பாவலர் பாரதிதாசன்; மாநாட்டின் திறப்புரையாளர் நாவலர் ச. சோம சுந்தர பாரதியார். அறிஞர் அண்ணா நிறைவுரையாற்றினார். அம்மாநாட்டில் பேசிய அண்ணல் தங்கோ அவர்களும் நாவலர் பாரதியார் அவர்களும் தி.மு.க. கழகம், திராவிடர் என்ற சொல்லைக் கைவிட வேண்டும் என்று பேசினர். அதற்கு விடையிறுத்த பாவேந்தர் பாரதிதாசன் பின்வருமாறு பேசித் தாயுமானவர் பாடலை எடுத்துக்காட்டினார்.

தமிழ் என்ற சொல்லே திராவிடம் என்று திரிந்தது; ஆதலால் திராவிடம் தமிழே. திரிபடைந்த தமிழ்ச் சொல்லைத் தமிழல்ல என்று ஒதுக்குவது சரியல்ல. வாழைப் பழத்தை வாளைப்பளம் என்றால் அது தமிழல்ல என்று ஒதுக்குவாருண்டா என இவ்வா றெல்லாம் நான் பன்முறையும் விளக்கியிருக்கிறேன்.

இப்போதும் இத்தாயுமானவர் பாடலைக் கேளுங்கள்:
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள்;
கற்றுமறி வில்லாதவென்
கன்மத்தை என்சொல்கேன்? மதியையென்   சொல்லுகேன்?
கைவல்ய ஞான நீதி
நல்லார் உரைக்கிலோ கன்மமுக் கியமென்று
நாட்டுவேன்; கன்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன்; வடமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்திரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன்;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன்;
வெல்லாம லெவரையு மருட்டிட வகைதந்த
வித்தையென் முத்திதருமோ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே!” என்றார்.

 தமிழே திராவிடம் என்பதை உட்கொண்டே தாயுமானவர் இப்பாடலைச் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.” ( பாரதிதாசன் தலைமை உரை, நூல் - பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்,தொகுதி - 1, பூம்புகார் பதிப்பகம் பக்கம் 507).

ஒரு கருத்து” பற்றிய தருக்கத்தில் வெல்ல முடியாமல் எதிரியைக் குழப்பிவிடும் தந்திரக்காரர் செய்யும் குதர்க்கவாதம் பற்றித் தாயுமானவர் தற்குறிப்பில் எள்ளல் செய்கிறார். - அந்தக் குதர்க்கவாதி “அக்கருத்து” வடமொழியில் இருப்பதாகக் கூறுவார்; வடமொழி வல்லார் வந்து அவரை மடக்கினால், திராவிட மொழி யில் இருப்பதாகத் திசை திருப்புவார் என்று தாயுமானவர் கூறுகிறார். அரைகுறைப் படிப்பாளிகளை விடப் படிக்காதவர்களே மேலானவர்கள் என்று பேசுகிறார். “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்வர்கள்” என்று தாயுமானவர் சலித்துக் கொண்ட பாடல் இது!

அவர் காலத்தில் (நாயக்கர் ஆட்சி காலத்தில்) புழக்கத்தில் இருந்த திராவிட மொழி என்பதை இந்த இடத்தில் தாயுமானவர் கையாள்கிறார்.

தமிழ்தான் திராவிடம் என்ற நேர்பொருளில் தாயுமானவரும் கையாளவில்லை.வாழைப்பழத்தை வாளைப்பளம் என்று சொன்னால் அது தமிழல்லாமல் வேறு மொழியா என்று பாவேந்தர் கேட்கிறார். பாவேந்தரோ, மற்ற எழுத்தாளர்களோ தங்கள் பாடல்களில், கட்டுரைகளில் வாளைப்பளம் என்றா எழுதினார்கள்? வாளைப்பளம் கொச்சைச் சொல் என்று புறக்கணித்துவிட்டு, வாழைப்பழம் என்று செந்தமிழில் தானே எழுதினர். “திராவிடம்’’ என்ற கொச்சைச் சொல்லை மட்டும் ஏற்றுப் போற்றி இலக்கியங்களில் குந்த வைத்துக் குதூகலப்படவேண்டிய தேவை என்ன? அந்தக் காரணத்தைப் பாவேந்தர் விளக்கவில்லை!

பெரியார், அண்ணா ஆகியோரின் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பகுத்தறிவுக் கருத்துகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அரசியல் தந்திர நோக்கோடு வலியுறுத்திய திராவிடத்தை ஏற்றுக் கொண்டு அதற்காக வாதாடினார். மற்றபடி பாவேந்தரின் திராவிட வாதத்தில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை!

தமிழ்நாடும் திராவிடமும் ஒன்றுதானா?

தமிழ்நாட்டைத் தானே திராவிடம் என்று ஆரியர்கள் சொன்னார்கள் அதை ஏற்றுக் கொண்டால் என்ன என்று நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். ஆரியர்கள் சொன்னால் “திராவிடம்” என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; சங்க காலத்திலிருந்து தமிழர்கள் தமிழ்ச் சான்றோர்கள் தமிழர், தமிழகம், தமிழ்நாடு என்று சொல்லி வந்ததை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? அது என்ன ஆரிய எதிர்ப்பு? அப்படியென்றால் ஆரியர்கள் தமிழர்களை “சூத்திரர்கள்” என்றார்கள் அதையும் ஏற்றுக் கொள்வார்களா?

ஆரியர்கள் தமிழ்நாட்டை மட்டும் திராவிடம் என்று சொல்லவில்லை. ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாட கம், மராட்டியம், குசராத் வரை உள்ள மண்டலத்தை “திராவிடம்” என்றார்கள். “பஞ்ச திராவிடம்” என்றார்கள். அவர்கள் வரையறுப்பின்படி திராவிட மண்டலத்தில் தமிழ்நாடும் ஒரு பகுதி! அறிஞர் அண்ணாவே கூறியுள்ளாரே, “ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையே நர்மதை ஆறு ரம்மியமாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்று! நர்மதை குசராத்தில் ஓடுகிறது.

இத்தனை குழப்பங்களும் கொச்சைத்தனங்களும் நிறைந்த “திராவிடம்” என்ற சொல்லை ஏற்றுப் போற்றுவதேன்? இன்றும் நிலைத்துள்ள இனியும் நிலைக்கப்போகும் தமிழர், தமிழ்நாடு என்ற இயற்கை வழிப்பட்ட இனப்பெயரை - நாட்டுப் பெயரை இரண்டாந்தரமாகப் புறந்தள்ளுவதேன்? அங்கேதான் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது!

பெரியாரும் அண்ணாவும் முன்னெடுத்த திராவிட இயக்கம் முற்றிலும் தமிழர்க்கான இயக்கமன்று; தமிழரையும் ஒரு கூறாக இணைத்துக் கொண்ட, தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோருக்கான ஒரு கூட்டு இன இயக்கம்! அதை வெளியே சொல்வது உசிதமல்ல என்று கருதி, திராவிடம் என்றால் அதில் பார்ப்பனர் வர முடியாது, திராவிடர் என்பதுதான் இனப்பெருமை என்றெல்லாம் கூறி, ஒப்பனை வேலை செய்தார்கள். 
திராவிடப் பெயரைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

ஆனால் ஓர் இடத்தில் பெரியார் உண்மையை போட்டு உடைத்து விட்டார். சேலம் செவ்வாய்ப் பேட்டையில் 16.01.1944இல் பெரியார் பேசிய மேற்கோளை ஏற்கெனவே இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ளோம். இடப் பொருத்தம் கருதி அதை மீண்டும் சுருக்கமாகத் தருகிறோம்.

இங்கேயே பாருங்கள். கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொறுத்த வரையில் நான் தமிழன் என சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லாக் கன்னடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தெலுங்கரும் அப்படியே. எனவே திராவிட சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம்: நம் நாடு திராவிடநாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும்” (ஈ.வெ.ரா. சிந்தனைகள் பாகம் 1, பக்கம் 551).

இந்த உண்மையை மறைப்பதற்கான  ஓர் உத்தியாகவே, திராவிடர் என்றால் ஆரியப்  பார்ப்பனர்கள் வரமாட்டார்கள் என்று பெரியார் கூறினார். பெரியாரின் அக்கூற்றும் வரலாற்று உண்மையோ அல்லது நடைமுறை உண்மையோ கொண்டதன்று என்பதைக் காட்டவே பண்டைக் காலத்திலிருந்து இக்காலம் வரை பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) தங்களைத் திராவிடர்கள் எனக் கூறிக் கொள்ளும் சான்றுகளை ஏற்கெனவே வரிசைப்படுத்தினோம்.

அண்ணாவுக்கு இந்த உண்மைகள் தெரியும். ஆனால், திராவிடத்தைக் கைவிட்டால் பெரியார் அதை வைத்தே திமுகவை ஓரங்கட்டி விடுவார் என்று அஞ்சியிருக்கக் கூடும். அத்துடன் பிறமொழி பேசு வோரை இணைத்துக் கொள்ள திராவிடர் என்பது பொருத்தமாக இருக்குமென்றும் அண்ணா கருதியிருப்பார்.அதற்காகப் பெரியாரைப் போல், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் என்றும், தமிழனை முட்டாள் என்றும் அண்ணா வசைபாடவில்லை; மாறாகத் தமிழின் பெருமை -- தமிழர்களின் வரலாற்று பெருமிதங்கள் -- தமிழர் அறிவாற்றல் -- திருக்குறள் பெருமை -- சிலப்பதிகாரச் சிறப்பு எனத் தமிழையும் தமிழரையும் போற்றிச் சிறப்பித்தே பேசினார்; எழுதினார். அதனால்தான் இலட்சக்கணக்கான இளைஞர்கள் அவர் பின்னால் திரண்டனர்.

Tuesday, May 24, 2016

கனடாவில் கண்ணகியும் ஒரு பார்ப்பனப்பெண்? இப்படித்தான் பார்ப்பனீயம் ஊடுருவியது? .


தமிழர்களின் முப்பாட்டன் முருகனைத் தெய்வமாக வழிபடுவது போன்றே கண்ணகி வழிபாடும் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். தமிழர்களின் மூதாதையர்களில் ஒருவனாகிய முருகன் தமிழர்களால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டது போன்றே தமிழர்களின் முப்பாட்டி தமிழச்சி கண்ணகியையும் வானுறையும் தெய்வத்துள் வைத்துப் போற்றினர் எமது தமிழ் முன்னோர்கள். அந்த தமிழ்ப்பாரம்பரிய வழிபாடு தமிழ்நாட்டில் வழக்கொழிந்து போனாலும், ஈழத்தமிழர்கள் மட்டும் அந்தப் பழந்தமிழ்ப் பாரம்பரியத்தை இன்னும் இழந்து விடாமல் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது பெருமைப்படக் கூடிய விடயமே.
பார்ப்பனப்பெண்ணாக தமிழச்சி கண்ணகி, Toronto, Canada
மதுரையை எரித்த பின்னர் சினம் தணிந்த சிலப்பதிகாரநாயகியாகிய கண்ணகி இலங்கையை அடைந்து, வடக்கில் வன்னிப்பகுதியிலுள்ள நந்திக்கடலின் கரையிலுள்ள வற்றாப்பளையில் தங்கியதாக மரபுவழிக்கதை நிலவுகின்றது, அவ்வாறே இன்றும் நம்புகின்றனர் ஈழத்தமிழர்கள். வைகாசி விசாகத்தன்று கண்ணகியின் சினம் தணிய தமிழில் பாடல்கள் பாடி, குளிர்த்தி என்ற சடங்கை நடத்தி, சிலப்பதிகாரக்கதை படித்துப் பொங்கலிடுவது ஈழத்தமிழர்களின் வழக்கம். ஆனால் இன்று தமிழச்சி கண்ணகிக்கு முன்னாலும் கூட பார்ப்பனர்கள் சமக்கிருத மந்திரங்களை முணுமுணுக்கும் அபத்தத்தை ஈழத்தமிழர்களின் கோயில்களில் காணலாம். ஆண்டுக்கொருமுறை வைகாசி மாதத்தில் கண்ணகிக்காக நடத்தப்படும் வைகாசிப் பொங்கலை உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் தமது கோயில்களில் இன்று கொண்டாடுகின்றனர். ஈழத்தமிழர்களின் பல கோயில்களில் கண்ணகிக்கு தனிச்சன்னதி உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
Tribal Virgin Mary in Jharkhand
அவ்வாறே கனடாவிலுள்ள தமிழர்களும் கண்ணகியின் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். ஆனால் அங்குள்ள கோயில் ஒன்றில் தமிழ்ப்பெண் கண்ணகியின் ஓவியத்தில் அவர்  பார்ப்பனப்பெண்கள் அணியும் முறையில் மடிசார் புடவையணிந்த ஒரு பார்ப்பனப் பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இதை வெறும் சாதாரண, சிறியதொரு விடயமாகச் சிலர் கருதலாம். ஆனால் இவ்வாறு தான் பார்ப்பனீயம் படிப்படியாக தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டையும், தமிழர்களின் பழம்பெரும் தெய்வங்களையும் ஆரியமயமாக்கியது, அவர்களை இணைத்து புராணக் கட்டுக்கதைகளை இயற்றியது என்பது தமிழர்கள் பலரும் அறிந்ததே. இன்று தமிழ்க்கடவுள் முருகன் பூணூலுடன் காட்சியளிப்பதன் காரணம் கூட இது தான். இதிலிருந்து  என்ன தெரிகிறதென்றால் கண்ணகி உண்மையில் ஒரு தமிழச்சி என்ற உண்மை கூட ஈழத்தமிழர்கள் பலருக்கும் தெரியாது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் பிறந்து வளரும் இளந் தமிழ்ச்சமுதாயத்தினருக்குத் தெரியாது. தமிழ்நாட்டிலும் கூட பல கோயில்களில் அம்மனுக்கு, பிராமணப் பெண்களைப் போலவே மடிசார் புடவை கட்டி அலங்காரம் பண்ணியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதற்குப் பதில் என்னவென்றால், சிவன், பார்வதி எல்லாம் பார்ப்பனர்கள், என்றார்கள். அது எவ்வளவு அபத்தமானது. சிவனே சுடலையில் ஆடும் புலையனல்லவா?
 சிங்களவர்களுக்கு பத்தினியம்மா  
ஆபிரிக்க கறுப்பினக் கிறித்தவர்கள் ஏசுநாதரை ஒரு கறுப்பராகச் சித்தரிப்பதும், தமிழ்க்கிறித்தவர்கள் கன்னிமேரியின் உருவச்சிலைக்கு தமிழ்ப்பெண்கள் போல் புடவை அணிந்து அவர்களில் ஒருவராக மாற்றிக் கொள்வதன் மூலம் தமது பக்தியையும் கடவுளுக்கும் அவர்களுக்கும் உள்ள நெருக்கத்தையும் காட்டிக் கொள்வதை நாங்கள் பார்க்கலாம். ஆனால் இங்கு என்னடாவென்றால் தமிழ்ப்பெண் என்று தெளிவாகத் தெரிந்த தமிழ்க் காப்பியத்தின் கதாநாயகியைக் கூட பார்ப்பனீயம் விட்டு வைக்கவில்லை. ஈழத்தமிழர்களும் அதைப் பெரிது படுத்தவில்லை.  தமிழில் சிலப்பதிகாரம் பாடி, பார்ப்பனப் பெண்ணின் கோலத்தில் காணப்படும் கண்ணகிக்கு 'குளிர்த்தி' நடத்துகின்றனர். ஆனால் (முன்னாள் தமிழர்களாகிய) சிங்களவர்கள் இன்றும் கண்ணகியைப் பொட்டிட்டுப் பூவைத்த தமிழ்ப்பெண்ணாகத் தான் வணங்குகின்றனர் (இலங்கையில் பொட்டும், பூவும் தமிழர்களின் அடையாளம் மட்டுமே) சிங்களவர்கள் கூட கண்ணகியின் தமிழ்ப்பெண் என்ற தோற்றத்தை மாற்றவில்லை, ஈழத்தமிழர்கள் மட்டும் கண்ணகியைப் பிராமணராக்கி விட்டோம். அதை திருத்திக் கொள்ள வேண்டியது தமிழர்களின் கடமை. 

இலங்கையில் யுத்தத்துக்கு முன்பு பார்ப்பனீய, வடமொழிக் கலப்பில்லாமல் தமிழ்ப் பூசாரிகளால், தூய தமிழ் வழிபாட்டு முறைகளால் வணங்கப்பட்டு வந்த கண்ணகி வழிபாட்டில் கூட மெல்ல, மெல்ல பார்ப்பனீயமும், வடமொழியும் ஊடுருவி விட்டன என்பதை ஈழத்தமிழர்களின் கோயில்களை, அங்கு நடைபெறும் மாற்றங்களை அவதானிப்போரால் உணர்ந்து கொள்ள முடியும். உண்மையில் தமிழ், தமிழர் என்று பீற்றிக் கொள்ளும் ஈழத்தமிழர்கள், அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்  தான் மும்முரமாக பார்ப்பனீயத்தை வளர்த்து விடுகிறார்கள் என்ற உண்மையும் விளங்கும். ஈழத்தில் தமிழில் தேவாரம் பாடாமல் எந்தப் பூசையும், நிகழ்ச்சியும் நிறைவுறாது என்ற நிலை மாறி, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கோயில்களில்அங்கு வேலை செய்யும் பார்ப்பனர்கள் விரும்பினால் மட்டும், தேவாரம் பாடுமாறு (அவர்களே பாடுவதில்லை) கேட்கும் நிலையுமேற்பட்டு விட்டது. ஒலிபெருக்கிகளிலும் தமிழ் தேவாரங்களுக்குப் பதிலாக, வடமொழி கலந்த மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்கின்றன. 

நாம், ஈழத்தமிழர்கள், சைவத்தைத் தமிழாக்க வேண்டுமே தவிர மேலும் வைதீக/பார்ப்பனீய/சமக்கிருதமயமாக்கக் கூடாது, அலங்காரங்களும், வெளி அடையாளங்களும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. 


தென்னம் பழஞ்சொரியத் தேமாங்
கனியுதிர வன்னி வழிநடந்த மாதே
குளிர்ந்தருள்வாய்"

நந்திக்கடலில் புலிகளின் அழிவுக்குக் கார‌ண‌ம் க‌ண்ண‌கியின் கோப‌மா?

கண்ணகியம்மன் தான் மடுமாதா” என்பது பாப்பாண்டவருக்குத் தெரியுமா? என்கிறார் ஒரு சிங்களப் பேராசிரியர்?

Saturday, May 21, 2016

இது முடிவல்ல - நீண்ட பயணத்தின் தொடக்கம்!


"தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் அயலாரால் நேர்ந்த கேடுகளைத் தடுக்க இனவொற்றுமையில்லாது போனதே கரணியம் "
 - மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்- மூன்று தலைமுறைக்கு மேலாகப் படிந்த திராவிடமாயை என்ற அழுக்கை மூன்றே மாதங்களில் தமிழர்களின் மனதிலிருந்து அகற்றி விட முடியாது. அதற்கு நீண்டநாள் எடுக்கும். 


நன்றி: https://twitter.com/Navalyuuraan

Saturday, May 14, 2016

சீமானுக்கு திராவிடர் கழகம் ‘எச்சரிக்கை' - தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்,


"தந்தை பெரியாரை தொடர்ச்சியாக இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடலூரில் கண்டனப் போராட்டம் நடத்தினர். மேலும் இக்கூட்டத்தில் பேசிய த.பெ.தி.க நிர்வாகிகள், தந்தை பெரியாரையும் திராவிடர் இயக்க சித்தாந்தத்தையும் இனியும் சீமான் இழிவாகப் பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்."


முருகன் தமிழர்களால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட தமிழர்களின் முப்பாட்டன் என்ற தமிழர்களின் நம்பிக்கையை  கேலி செய்யும் வடுகர்களும்,  உலகத்தமிழர்கள், அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் கங்கை முதல் கடாரம் வரை வென்று தமிழர்களின் புலிக்கொடியை நாட்டி, தமிழர்களின் வரலாற்று எதிரிகளாகிய சிங்களவர்களை அழித்து, தமிழர்களின் வீரவரலாற்று நாயகன் எனப் பெருமைப் படுவது மட்டுமன்றி, அந்த திருமுறை கண்ட சோழனுக்கு இலங்கையின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகிய திருக்கேதீச்சரத்தில் தனிச் சன்னதி அமைத்து போற்றுகின்ற மாமன்னன் ராஜராஜ சோழனை இழிவுபடுத்திப் பேசுகின்றவர்களும்,  அக்கால நாட்டு நடப்புகளை இக்காலத்துடன் ஒப்பிட்டுத் திட்டமிட்டு வரலாற்றைத் திரித்து ராஜராஜசோழனை மட்டும் வசைபாடுகிறவர்களுமாகிய பெரியாரிஸ்டுகளும், திராவிடவீரர்களும் அதற்காக உலகத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்காத போது, பெரியார் ஈவேரா அவர்களின் பெரியாரிய, திராவிடக் கொள்கைகள் தமிழினத்துக்கு விளைத்த தீங்குகளைத் தமிழர்களுக்கு எடுத்துரைக்கும் தமிழன் சீமானுக்கெதிராக  போராட்டம் நடத்துவதும், இவ்வளவு வெளிப்படையாக கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பயமுறுத்துவதும் தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். அதிலும் ஒரு பெரியாரிஸ்டு 'சீமானை உதைப்போம்' என்று வெளிப்படையாகவே கூறுகிறார். அவர் உண்மையிலேயே தமிழச்சியா அல்லது வடுகச்சியா என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம். :-)

ஆனானப்பட்ட மாமன்னன் ராஜராஜசோழனை மட்டுமன்றி, தமிழர்கள் எவரை உயர்வாக எண்ணுகிறார்களோ அவர்களை எல்லாம் இழிவுபடுத்துவதும், கொச்சைப்படுத்துவதையே தொழிலாகக் கொண்ட பல திராவிடர்களும், பெரியாரிஸ்டுகளும் வலைப்பதிவுகளிலும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் உள்ளனர் என்பதை தமிழர்கள் அனைவரும் அறிவர். அவர்கள் எல்லாம் தமிழர்களின் மனதைப் புண்படுத்துவதற்காக மன்னிப்புக் கேட்கிறார்களா, இல்லையே. அப்படியிருக்க சீமானை மட்டும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பது வெறும் கோமாளித்தனமாகும். 

தமிழில் தேவாரத்தின் கருத்தைக் கூடச்  சரியாகப் புரிந்து கொள்ளாமல், பெரியாரிஸ்டுகள் மட்டுமன்றி பெரியாரும் கூட தமிழர்களின் தேவாரத்தைக் கொச்சைப்படுத்தியும், தமிழிலக்கியங்களை இழித்தும் பழித்தும் பேசியுள்ளனர். அதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்குமாறு தமிழர்கள் அவர்களிடம் கேட்பதில்லையே. அப்படியிருக்க பெரியாரையும் திராவிட சித்தாந்தத்தையும் விமர்சித்தமைக்காக சீமான் மட்டும் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்பது மிகவும் கேலிக்குரியது.  ஆனால் பெரியாரிய, திராவிடக் கொள்கைகளை ஒரே மேடையில் விவாதிக்குமாறு அவர்கள் சீமானை அழைத்தால் அது நேர்மையானதும் வரவேற்கப்பட வேண்டியதும் கூட.
 ICON OF TAMIL NATIONALISM
இதில் வேடிக்கையிலும் வேடிக்கை என்னவென்றால் தமிழ்த்தேசியத்தை வெறியோடு எதிர்க்கின்ற திராவிடர்கள் தமிழ்த்தேசியத்தின் அடையாளச் சின்னமாகிய பிரபாகரனின் படங்களை ஏந்திக் கொண்டு, தமிழ்த்தேசியவாதியாகிய சீமானை எதிர்ப்பது தான். தமிழ்மண்ணைத் தமிழர்கள் தான் ஆளவேண்டுமென்ற அடிப்படைக் கொள்கையை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளாதவர்கள் எவருமே பிரபாகரனை அல்லது பிரபாகரனின் தலைமையில் ஈழத்தில் தமிழுக்காக, தமிழ்மண்ணைக் காக்க உயிர்நீத்த வீரத்தமிழர்களின் தியாகத்தில்  சொந்தம் கொண்டாட முடியாது என்ற கசப்பான உண்மையை எடுத்துக் கூற வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழுணர்வும், தன்மானமுமிருந்தால் நிச்சயமாக இந்த தேர்தலில் கடலூர் தொகுதியிலாவது  சீமான் வெல்ல வேண்டும். ஆனால் ஐம்பது ஆண்டு காலமாக பெரியாரிய, திராவிடத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அதை உலகத்தமிழர்கள் எதிர்பார்க்கலாமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
http://tamil.oneindia.com/news/tamilnadu/protest-against-seeman-his-comments-on-periyar-evr-253590.html#cmntTop

Saturday, May 7, 2016

பார்ப்பனீயத்தை வளர்த்து விடும் ஈழத்தமிழர்கள்? பிரித்தானிய சைவமாநாட்டில் தமிழுக்கு இடமில்லை?


"தாய்த்தமிழைப் புறக்கணிக்கும் வந்தேறுகுடிகளின் உண்டிகளை நிரப்ப நாம் ஏன் உண்டியலை நிரப்ப வேண்டும்.  தமிழரே தமிழரை விழித்து தமிழா தமிழில் வழிபடு என்று கெஞ்சிக் கெஞ்சி நாம் ஏன் போராட வேண்டும்?இது அவமானம் இல்லையா?"


சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்று நம்புகின்ற ஈழத்தமிழர்கள் தான் பார்ப்பனீயத்தை வளர்த்து விடுகிறவர்கள், அதிலும் குறிப்பாக, மேலைநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் பார்ப்பனீயம் வளர்க்கப்படுகிறது என்ற கருத்து தமிழ்நாட்டில் பரவலாக உள்ளது.

“போதொடு நீர் சுமந்தேந்திப் புகுவாரவர் பின் புகுவேன்” என்கிறார் தேவாரத்தில் திருநாவுக்கரசர் அதாவது நாயன்மார் காலத்தில் சாதிவேறுபாடின்றி கருவறைக்குள் புகுந்து இறைவனை வழிபட்டனர் தமிழர்கள் என்கிறார் அவர். ஆனால் பலநூறு ஆண்டுகால வடுகர்களின் ஆட்சியில் தமிழும், தமிழர்களும் அவர்களின் முன்னோர்களின் கோயில்களிலிருந்து தூக்கி எறியப்பட்டு, தமது சொந்த மண்ணின் ஆளுமையை மட்டுமன்றி, தமது முன்னோர்களின் கோயில்களிலும் தமதுரிமையை இழந்து விட்டனர் தமிழர்கள்.

தமிழ்நாட்டில் தமிழில் வழிபாடு நடத்தவும், கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யவும் போராடித் தோற்றுப் போய்விட்டனர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். ஏனென்றால், தமிழ்நாட்டின் ஆட்சி, அதிகாரம், பொருளாதாரம் எதுவுமே தமிழர்களின் கைகளில் இல்லை. தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த பார்ப்பன ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு, பார்ப்பனீயத்தை ஒழிப்பதற்காக தமிழர்களுக்கு தலைமை தாங்குகிறோம் என்ற தமிழரல்லாத திராவிடர்கள், பார்ப்பனர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தமிழ்மண்ணைத் தமிழர்கள் ஆளுவதற்குப் பதிலாக, அவர்களே, அதாவது தமிழரல்லாத வடுகர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் ஆண்ட/ ஆண்டு கொண்டிருக்கிற அபத்தத்தை  நாம் தமிழர்கள் அனைவரும் அறிவோம்.

ஆனால் தமிழ், தமிழர் என்று பீற்றிக் கொண்டே தமிழ் மொழிக்கு உரிய இடத்தைச் சிங்களவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள் என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மொழி உரிமைப் போராட்டத்தைத் தொடங்கி, தமிழ்த்தாயின் மானம் காக்க தன்னுயிரை ஈந்த ஈழத்தமிழ் வீரமறவர்களின் வீரத்தையும், அவர்களின் தியாகத்தையும் காரணம் காட்டி, உலகம் முழுவதும் சென்று, இன்று செல்வச் செழிப்புடன் வாழும் ஈழத்தமிழர்கள் தமிழை வளர்ப்பதற்குப் பதிலாக, பார்ப்பனீயத்தை, வளர்த்து விடுவது மட்டுமன்றி, ஈழத்தமிழர்கள் மத்தியிலேயே பார்ப்பனர்களுக்குத் தமிழை எதிர்க்கும் துணிவையும் கொடுத்து பல தமிழெதிரிப் பார்ப்பனர்களை உருவாக்கியும் விடுகிறார்கள் என்ற உணர்வு புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்களின் கோயில்களுக்குச் செல்வோருக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. 

தமிழ்நாட்டில் பார்ப்பனர்களினதும், தமிழரல்லாதோரின் ஆதிக்கமும் அதிகம், தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அதிகாரம் இல்லை, அங்கு கருவறையில் தமிழ் ஒலிக்கச் செய்வதென்பது முடியாத காரியம் என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்களை நம்பித் தான் கோயில்களும் உள்ளன, பார்ப்பனர்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழில் பூசை செய்வதை எதிர்ப்பதும், மறுப்பதும் ஈழத்தமிழர்கள் கொடுத்த இடம். இந்த இழிநிலை மாற வேண்டும் தமிழில் தமிழர்கள் கோயிலில் கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னெடுத்தவர்கள் சுவிஸ் நாட்டில் ஞானலிங்கேச்சுரர் கோயிலைச் சேர்ந்த  சில ஈழத்தமிழர்கள்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனில் நடைபெற்ற சைவமாநாட்டில் (April 2016)  தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது மட்டுமன்றி, ஈழத்துப் பார்ப்பனர் ஒருவர் ‘நாம் தமிழில் வழிபாடு நடத்தமாட்டோம். தமிழ்மொழி வழிபாட்டுக்கு உகந்ததல்ல எனவும் கண்டித்தாராம்' எனத் தனது கவலையைத் தினக்கதிர் இணையத் தளத்தில் தெரிவித்திருக்கிறார் ‘சிவமகிழி’ எனும் ஈழத்தமிழர். அப்படியானால் அந்த ஈழத்துப் பார்ப்பானுக்கும், தமிழ்நாட்டில் தமிழில் வழிபாடு நடப்பதை எதிர்க்கும் தமிழ்நாட்டுப்  பார்ப்பனர்களுக்கும் என்ன வேறுபாடு, என்பதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

அந்த  ஈழத்தமிழனின்  கருத்தும், கவலையும் தமிழ்ப்பற்றுக் கொண்ட, தன்னைத் தமிழனாகக் கருதும் ஒவ்வொரு ஈழத்தமிழனையும் சென்றடய வேண்டும். அத்துடன் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் தமிழை எதிர்ப்பவர்கள் வாழ்கின்றனர். அவர்களைத் தமிழர்கள் இனங்காண வேண்டும் என்பதற்காகவும், அந்தப் பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன். மற்றவர்களை வரவேற்று. வாழவைத்து அவர்கள் தமிழையும், தமிழர்களையும் எதிர்ப்பதைக் கூடக் கண்டிக்க முடியாமல் கையாலாகாத்தனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று ஆதங்கப்பட்டுக் கொள்கிறவர்கள் ஈழத்தமிழர்கள், ஆனால் நாங்களும் அதே நிலையை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறோமா, என்பதை சிந்திக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களுக்கும், தமிழுக்குமாகத் தான் கோயில்கள் உருவாக்கப்பட்டன. ஆகவே அவை தமிழர்களையும், தமிழையும் வளர்க்கும் இடங்களாக மாறவேண்டுமே தவிர, வெறுமனே பார்ப்பனர்களின் வேலைவாய்ப்பு நிலையங்களாக மாறுவதற்கு ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. 

பிரித்தானியாவில் சைவத்திருக்கோயில் ஒன்றியம் இந்த ஆண்டு 30ம் மற்றும் 01ம் திகதிகளில் நடராஜா தத்துவமும் திருமந்திரமும் எனும் சைவமாநாடு நடத்துகிறது, மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள் என பிரித்தானியா சைவநெறிக்கூட அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சைவநெறிக்கூடத்தின் தமிழ் அருட்சுனையர் சென்றிருந்தார். அவருடன் சுவிற்சர்லாந்தில் 9வயதில் குடியேறி, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்வழிபாட்டுப் பயிற்சி மாணவனாக அருட்சுனையர் பயிற்சி பெறும் அன்பரும் உடன் சென்றிருந்தார். அவர் தொலைபேசியில் இன்று எம்முடன்பகிர்ந்த செய்தியே, இந்த திறந்த மடலை எழுத வைத்திருக்கிறது  
மாநாட்டில் தமிழ் வழிபாடு தொடர்பாக ஐரோப்பாவின் முன்னணித்தொலைக்காட்சி ஒன்று செவ்வியின்போது வசந்தன் ஐயர்என்பவரிடம் தமிழ்வழிபாடு தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என வினாவியபோது அவர்கோபங்கொண்டு மாநாட்டுவரவேற்புரையில் ஒன்றியத்தின் தலைவர் ஊடாக,கேள்வி கேட்டவரைக் கண்டித்து, நாம் தமிழில் வழிபாடு நடாத்த மாட்டோம்எனக்கூறியுள்ளார். தமிழ் மொழி வழிபாட்டிற்கு உகந்ததல்ல எனப் பொதுவாகக்கண்டித்தாராம்.   
அடுத்து 15.55 மணிக்குப் பேசஅழைக்கப்பட்டிருந்த ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையரை தனியாக அழைத்த விழா ஏற்பாட்டாளர்கள் ஐயா, தயவுசெய்து தமிழ்வழிபாடு தொடர்பாக மேடையில் எதுவும் பேசாதீர்கள் என வேண்டிக் கேட்டுக்கொண்டார்களாம். மேலும் நிகழ்வுகள் யாவும் ஆங்கிலத்தில்நடாத்தப்பட்டதாம். திருமூலரின் திருமந்திரத்தை ஆங்கிலத்தில் தமிழர்கள் சிலாகித்துப்பேசி, தமிழ் வழிபாடு தொடர்பாக பேசாதே எனக்கண்டித்து பிரித்தானியாவில் சைவமாநாடு நடாத்தப்பட்ட இவ்விந்தை நிகழ்வை எப்படி நாம் எடுத்துக்கொள்வது?


தாய்மொழியை நேசிக்கின்ற அனைவருக்கும்சைவம் தமிழ் எனும் பொருட்படபெயர்கொண்டயாவருக்கும் எழுதிக்கொள்ளும் திறந்த மடல் இது. 

அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் இறைவன் ஒருவன். அவன் மொழி, இனம் என அனைத்து அடையாளங்களுக்கும் அப்பாற்பட்டவன். இதில் எமக்கும் கேள்வி இல்லை.ஆனால் எம் தாய்மொழியில் நாம் பேச, சிந்திக்க, வழிபட யார் எமக்கு உரிமை வழங்க வேண்டும்? 
தமிழின் பக்தி இலக்கியமும் நாயன்மார்கள் அற்புதங்களும், தெய்வத் தமிழ் அருளும் பல தொன்மைத் தமிழ்ப் படைப்புக்களில் இறைவன்தமிழின்பம் நுகர்ந்தார் என்றும் தமிழை ஆய்ந்தார் என்றும் விளக்குகின்றன. இத் திறந்த மடலில் இங்கு இதை நாம் விவாதிக்க – விளக்கத்தேவையில்லை. ஆனால் எந்தக் கடவுளும் எந்த மொழிக்கும் கழகம் காணவில்லை. எம் தாய் மொழிக்கே முழுமுதற்கடவுள் சிவபெருமான் கழகம்கண்டார். கடவுளே தலைவனாகக் கொண்டு கழகம் கண்டதும் எம் தமிழ்தான். ஆனால் பொதுவாக மேடையில் சிலர் தம் பேச்சை ஆரம்பிக்கும் முன்னர் கல்தோன்றி மண்தோன்ற முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடிஎன்று… அப்படிப் பேசுபவர்கள் அதை உண்மையாக நம்புகிறார்களா அல்லது வெறும் மேடைப்பேச்சுக்கு பேசுகிறார்களா எனும் கேள்வி எமக்குஎப்போதும் எழுவதுண்டு. அப்படி அவர்கள் பேசுவது உண்மை என அவர்கள் நம்பிப் பேசினால் முதலில் தோன்றிய மொழியிற்தான் முதல்வழிபாடும் நடந்திருக்க முடியும் என்பதையும் யாரும் மறுக்கமுடியாது. அப்படியானால் முதல் வழிபாட்டு மொழியாக இருந்தது தமிழ் மொழியே.
பாரதியார்பாடலில் ஒரு சிறப்பு வரியாக வரும்‘என்று மடியும் இந்த அடிமையின் மோகம்’ எனும்கூற்றை இங்கு நினைவுகொள்வது சாலப்பொருத்தமானதாக இருக்கும்.  
ஒருவன் அடிமைப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிந்து, அதற்கு எதிராக அவன் போராடி வென்றாலும், தோற்றாலும்அது சிறப்பு.ஆனால் தான் அடிமையாக இருப்பதே தெரியாமல் ஒருவன் இருப்பதே மோகம். அவன் அந்த அடிமைத்தனத்தை விரும்புகிறான். ஆக இப்படிஅடிமைப்பட்டவர்களுக்கு விடுதலையை நோக்கிய மானிடத்தின் நாகரிகங்களின் வளர்ச்சி நோக்கிய வரலாற்றையும் உணர்ந்து கொள்ளவோபுரிந்து கொள்ளவோ முடியாது. 
உண்மையில் எமது தமிழ் மொழியில் பல கோடி சொற்கள் இருந்தும் 27000 மேற்பட்ட பிறமொழிச் சொற்கள் இரவலாக உள்நுழைந்திருக்கிறதுஎன்று தஞ்சைப் பல்கலைக்கழக நூல் ஆய்வு 40 வருடங்களுக்கு முன் சொல்கிறது. இப்போது இது நூறு ஆயிரத்தையும் தாண்டி இருக்கலாம். உலகில் தமது இனத்தின் பெருமையை நிலைநாட்ட ஆட்சி அதிகாரம் உள்ள நாடுகள் எல்லாம், தாங்கள் அந்த நாட்டின் குடிகள் என்றும், பழமைமிக்க பண்பாடு உடையர்கள் என்றும் காட்டிக்கொள்ள பலகோடி செலவு செய்கிறார்கள். நேற்றைக்குத் தோன்றிய கன்னடம் இன்று தமிழ்நாட்டின்காவிரியை தன் கையில் வைத்து தமிழ் மண்ணின் வறட்சிக்குக் காரணமாகத் திகழ்கிறது. சோறு படைத்த சோழ நாடு, வறண்ட பாலைமண்ணாக மாறிவருகிறது. 
அரசியல் பேசவில்லை. ஆனால் எங்கும் இன்று பார்க்கக் கூடிய பொதுவான உண்மை என்னவெனில் தமிழனின் அடையாளங்கள் பாரதம், சியாம்,கடாரம், ஈழம் என்று எங்கு தலைகாட்டினாலும் அதை முழுவதுமாக புதைத்துவிடுவார்கள். தமிழின் பெருமையை, தமிழினத்தின் அடையாளத்தை,அதன் தொன்மையை வெளியில் கொண்டுவர பிற இனத்தவர், வந்தேறு குடிகள், தமிழ் அல்லாத எவரும் விரும்புவதில்லை. இதைக்கூடஓரளவுக்கு நாம் புரியலாம். தமிழில் இருந்து தோன்றிய பிற மொழிக் குடும்பங்களுக்கே தமிழ் பிடிக்காது இருக்க  எவ்வாறு பிறருக்கு அம்மொழிமீது பற்றுதல் ஏற்படும்? ஆனால் வந்தேறு குடிகள், எம்மை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் எம்மீது திணித்த நடைமுறைகளை ஏற்றுத்தழுவி மோகித்து தன் இனத்திற்கும்மொழிக்கும் புறம்பாக சிந்திக்கும் இழிநிலையை எண்ணும்போது நெஞ்சு கனக்கவே செய்கிறது. 
நாங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறோம். ஒவ்வொருவரது புலப்பெயர்விற்குப் பின்னும் பல கதைகள் இருக்கும். நாங்கள்இங்கு எம்முடன் எடுத்து வந்தது எமது இன, மொழி, சமய அடையாளங்களைத்தான். ஆனால் இந்த நாட்டில் தஞ்சம் வழங்கிய அரசுகள் முதலில்விதித்த விதி, இந்த நாட்டுப் பண்பாட்டுடன் ஒத்திசைவாக வாழுங்கள், வாழப்படும் நாட்டின் மொழியைப் பண்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள்,சட்டவிதிகளையும் இந்நாட்டின் குடிமக்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் இணைந்து வாழுங்கள் என்பதாகும்.
 "நாமார்க்கும் குடியல்லோம்"

ஆனால் தமிழர்கள் வரலாற்றில் மட்டும் இது மாறி நடந்துவிட்டது. இந்தத் தவறு நடந்தது 600 அல்லது 700 ஆண்டுகள்தான. ஆனால்; இன்னும் இந்தத்தவறைக் களைய எந்தப் பெரியாராலும் தமிழ் அறிஞர்களாலும் முடியவில்லையாம்… வந்தேறு குடி தனது மொழியையும், சமயத்தையும் தமிழன்மீது திணித்து வெற்றி கண்டிருக்கிறது. குடியேறிய இனம் தனது நம்பிக்கை மற்றும் மொழியை ஒரு குறுகிய வட்டத்தில் மட்டும் இல்லாது,அதிகாரத்தில் இருந்த மன்னனைக்கொண்டு அடிமட்டம் வரை சொடுக்கிச் செருகி இருக்கிறது. இன்றும் இங்கு ஐரோப்பாவில் எவரும் இந்தநாட்டுப் பண்பாட்டை, மொழியைப் பழித்து இழிவுபடுத்தி உயர் பதவிக்கு வரமுடியாது.
ஆனால் தமிழ்நாட்டிலும் சரி, வேறு சில வெளிநாட்டிலும்சரி வந்தேறுகுடி தமிழ்க்குடியை இழிவுபடுத்தலாம், வெறுக்கலாம், உரித்துடைய தமிழனைப் புறந்தள்ளி, அவன் மொழியில் அவன் வழிபடஇருக்கும் அடிப்படை உரிமையையும் பறிக்கலாம். எங்கோ இருந்து புலம்பெயர்ந்து தமிழ் மண்ணில் குடியேறி தம் ஆக்கிரமிப்பு மொழியை வேரூன்றவிட்டு சிறுபான்மை ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள்பெரும்பான்மைத் தமிழ்மக்களை தமது மாயைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இன்றும் தமிழ் மண்ணில் குடியேறிய யாவரும்தத்தமது மொழியை நேசிக்கும் மொழிப்பற்றாளர்களாகவே இருக்கின்றார்கள். வந்தேறிகள், ஆக்கிரமிப்பாளர்களாக தமது கருத்தை எம்மீது திணித்தபோது அவ்விருண்ட காலத்தில் நாங்களும் புத்திகெட்டு இருந்தோம் என்றால், இன்றும் புலம்பெயர்ந்து அடைக்கலம் வழங்கிய நாடுகளில் அழுத்தங்கள் அற்று, மக்களாட்சியில் மனித உரிமை வழங்கிய சட்டஉரிமையில்தனிமனித சுதந்திரத்துடன் யாரும், எதையும் எப்படியும் வழிபடலாம், எந்த மொழியிலும் வழிபடலாம் என்ற நிலையில் கூட தமிழ்மொழியை தமிழ் அறங்காவல் சபையும், திருக்கோவில் நிர்வாகமும் புறக்கணிக்கணிப்பது என்பது எப்படியானது என்பதை நம்மை நாமேகேட்டுக்கொள்ள வேண்டியதோர் கேள்வி. 
பன்மொழி அறிஞர்களின் தெய்வத் தமிழ் விளக்கம்மொழியில் மற்றும்மானிடவியல் ஆய்வு விளக்கங்கள் ஒருபுறம் இருக்கஎம்மைஆக்கிரமித்தோர்,வந்தேறு குடிகள் சொல்வதுபோல் தமிழ் மொழி கடவுளுக்குப் புரியாது எனும்வாதத்தை எடுத்துக்கொண்டால்எமதுமொழி புரியாத இந்தக் கடவுளால் எம்இனத்திற்கு என்ன பயன்பயன் இல்லாத கடவுள் வழிபாடு பிறகு எதற்கு?
தாய்த் தமிழைப் புறக்கணிக்கும் வந்தேறு குடிகளின் உண்டிகளை நிரப்ப நாம் ஏன் உண்டியலை நிரப்பவேண்டும். தமிழரே தமிழரை விழித்து தமிழா தமிழில் வழிபடு என்று கெஞ்சிக் கெஞ்சி நாம் ஏன் போராட வேண்டும்? இது அவமானம் இல்லையா? 
இன்று 1994ம் பக்தி மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட சைவநெறிக்கூடம், புலம் பெயர்ந்த மண்ணில் அன்பு வழிச் சைவசமயத்தைச் சீர்திருத்திஇருக்கிறது. அதாவது சிந்துவெளி நாகரிகத்தில் போற்றிப் பேணி வழிபடப்பட்ட தமிழ் வழிபாட்டு முறைமையை மீள நடைமுறைக்குக்குக் கொண்டுவந்துள்ளது.   சைவநெறிக்கூடம் செந்தமிழ்த் திருமறையில் கருவறையில் வழிபாடு எனும்தமிழ் வழிபாட்டுத் தீர்மானத்தை 2012ம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் உறுதிபூண்டு, சுவிசின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் நடுநாயகமாகஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலை தமிழ்த் திருமறை சமயக்குரவர் திருக்கோபுரத்தில் நிமிர்ந்து நிற்க நிறுவி செந்தமிழில் குடமுழுக்கு நடாத்திஇதுவரை நூற்றுக்கணக்கான தமிழ் அருட்சுனையர்களை உருவாக்கி முதல் முயற்சியை வெற்றியுடன் இறையருளால் நிலைநிறுத்தி உள்ளது. இந்திய இலக்கியங்கள், சமஸ்கிருதம் மற்றும் திராவிட மொழிகள் தொடர்பான மொழியியல் அறிஞரான பேராசிரியர் கமில் சுவெல்பில்(Professor Dr. Kamil Zvelebil) அவர்கள் தமிழ் பக்தி இலக்கியங்கள் குறித்து கூறுகையில் தமிழ் சைவப் பக்தி மார்க்கம் உண்மைப் பொருளைத்தேடிநிற்கும் மானிடத்தின் மிகவும் அற்புதமான இதயத்தைத் தொடும் ஓர் உண்மையான வெளிப்பாடு என வருணிக்கிறார். அதி உச்சஉன்னதமான அழகிய இலக்கியப் படைப்புகளான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் போன்றவர்களின் பக்தி இலக்கியங்கள் மற்றும் சைவசித்தாந்த இலக்கியப் படைப்புகள் மானிட இனத்தின் சிந்தனையின் மிகவும் ஆழமான அழகான வெளிப்பாடு என வியக்கிறார். (Tamil Contribution to World Civilisation, Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture – Vol.V.No.4 October, 1956). 
பிற மொழி அறிஞர்கள் வியக்கும் தமிழ் மொழியை தமிழை தாய் மொழியாகக்கொண்டோர் இகழ்தல் கேட்க தமிழ்க் கவி சுப்பிரமணியபாரதியாரின் கவி வரிகளேமீள நினைவுக்கு வருகின்றன: நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றிவஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி“. நான் என்ற அகமழிந்த தியான நிலையில் இறைவனை உணர்ந்து தம் தாய் மொழியில் இறைவனை வழிபடத் தலைப்பட்டதன் வெளிப்பாடேதமிழ்ப் பக்தி இலக்கியங்கள்.
வேத கோசங்கள் குறித்துச் செப்பும் குதம்பைச் சித்தர்: முத்தமிழ் கற்று முயங்கு மெய்ஞ் ஞானிக்குச்சத்தங்கள் ஏதுக்கடிகுதம்பாய்! சத்தங்கள் ஏதுக்கடி?’ என்கிறார். 

சைவத் தமிழ் வழிபாட்டு முறைமையும் சைவத் தமிழ் பக்தி இலக்கியங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கம், சங்கமருவிய காலங்கள்முதற்கொண்டு தோன்றி வளர்ந்து வந்தன. எனினும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் சைவத் தமிழ்ப் பக்திப் பாரம்பரியம் காரைக்கால் அம்மையாரின் பங்களிப்புடன் தென்னிந்தியா முழுமையும் பரவலடைந்தது. 

தொடர்ச்சியான வெளிநாட்டுப் படையெடுப்புகள்ஆரிய ஆதிக்கம் ஆகியவற்றால்மறைந்து வழக்கொழிந்து போனது எமது சைவத் தமிழ்வழிபாடு. மறைந்துவிட்ட இச்சைவத் தமிழ் வழிபாட்டு முறைமையையும் சைவத் தமிழ் பக்தி இலக்கியங்களின்மேன்மையையும் மீளவும்நிலைநிறுத்த வேண்டியது ஒவ்வொரு சைவத்தமிழ்மக்களினதும் கடமையாகும்!!!
திருச்சிற்றம்பலம்
உண்மையுடன்:
சிவமகிழி