Sunday, January 24, 2016

தமிழ்க் கவிஞர் வைரமுத்து ஏன் சுடிதார் அணிகிறார்??வன்னி. முல்லைத்தீவு உழவர்விழாவில் கவிஞர் வைரமுத்து 


வெறும் சாதாரண மனிதர்கள் தமக்கு விரும்பிய ஆடைகளை காலநிலைக்கேற்ப அணிவதற்கும் தமிழர்களின் தலைவர்களும், கவிஞர்களும் தமது ஆடையணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டுக் கொதிக்கும் வெய்யிலில், தமிழ்நாட்டுக் காலநிலைக்கொவ்வாத ஆடையணிகளை, உதாரணமாக கறுப்புக் கோணிப்பையால் தலையை மறைத்துக் கொண்டு திரிவது போன்ற ஆடையணிகளை அணிந்தாலே  தவிர, சாதாரண மனிதர்களின் ஆடையணிகள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் சமுதாயத்தில் முக்கியமான தலைவர்கள், கவிஞர்கள் போன்றோர்களின் ஆடையணிகள் அந்த மக்களின் கலாச்சாரத்துடன் ஒரளவாவது ஒத்துப் போக வேண்டும். 

குறைந்த பட்சம் தமிழர்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் போதாவது அவர்கள்தமது ஆடையணிகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது அது பார்ப்பவர்களின் கண்களை உறுத்துவதுடன், எவ்வளவுக்கு ‘Odd’ ஆக இருக்குமென்பதையும் தெளிவாகக் காட்டுகிறது கவிஞர் வைரமுத்து அவர்கள் ஈழத்தில் தமிழ் மண்ணாகிய முல்லைத்தீவில் நடந்த தமிழர்கள் கலந்து கொண்ட உழவர் பெருவிழாவில் எடுக்கப்பட்ட படம். உண்மையில் அது எனக்கு மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களுக்குச் சிரிப்பையூட்டுகிறது. மேல்நாடுகளில் வேலைக்கு அணியும் உடையை விழாக்களுக்கு அணிய மாட்டார்கள், விழாக்களுக்கு அணிவதைப் போல் ஆடைகளை அணிந்து கொண்டு இறப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள். எங்கெங்கு, எதற்கு, எந்தவகையான  ஆடையணிகளை அணிய வேண்டுமென்பது மேல் நாட்டவர்களுக்கு நன்கு தெரியும். 

மைசூர் மகாராஜா முல்லைத்தீவுக்குப் போயிருந்தால் கூட தமிழர்களின் பண்பாட்டை மதிக்கும் வகையில் மற்றவர்களைப் போலவே வேட்டியணிந்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்து அப்படியே மைசூர் மகாராஜா போலவே தோற்றமளிக்கிறார்.


(எனது நண்பர்கள் சிலர் இந்தப் பதிவு அவ்வளவு சரியில்லை என்கிறார்கள்.  கவிஞர் வைரமுத்து அவர்கள் ஈழத்தமிழர்களைத் தனது தொப்புள்கொடி உறவுகள், உயிருக்கு உயிரானவர்கள், அவர் பாதி, நாங்கள் பாதி என்கிறார் (காணொளியைப் பார்க்க). அததகைய ஒரு அண்ணனிடம் முதன் முதலாக எங்களின் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள், உந்தக் குழாயைக் கழற்றி விட்டு எல்லோரையும் போல வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கலாமே என்று உரிமையுடன் கூறுவதில் என்ன தவறு? எவரின் மனதையும் புண்படுத்துவதல்ல இந்தப் பதிவின் நோக்கம்.)


கடந்த வருடம் இந்தியப் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த போது அவரது மாநில மக்களின் ஆடையணிகளையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஆண்கள் அணியும் வட இந்தியச் சுடிதார் அல்லது 'Leggings'  அணிந்திருந்தார் ஆனால் தமிழராகிய கவிஞர் வைரமுத்து ஏன் முல்லைத்தீவுக்குச் சுடிதாருடன் போனாரென்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனைய தமிழர்களுடன் பார்க்கும் போது அவரைத் தமிழர்களிலிருந்து வேறுபட்ட ஒருவர் போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது பாரதியாரின் தலைப்பாகை போல, இந்த ஆண்கள் அணியும் சுடிதாரை அவர் தனது அடையாளமாகப் பலவருடங்களாகக் கொண்டிருந்தாலும், உண்மையில் முல்லைத்தீவில் தமிழர் விழாவில் அவரை  வட இந்தியர்களுடைய சுடிதாருடன் பார்க்கும் போது என்னவோ போலிருக்கிறது, அவ்வளவு நன்றாக இல்லை.  :-)

வரலாற்றுப் புகழ் பெற்ற யாழ்ப்பாணம்-நகுலேச்சரம் கோயிலில் சுடிதாருடன் பிரதமர் மோடி 


முல்லைத்தீவு உழவர் பெருவிழாவில் வைரமுத்து
[ சனிக்கிழமை, 23 சனவரி 2016, 12:10.20 PM GMT ] 

வடக்கு உழவர் பெருவிழா சற்று முன்னர் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் மழைத்தூறலுடன் ஆரம்பமானது.
வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. 
வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றம் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்துகொண்டுள்ளனர். 
உழவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நடைபெறவுள்ள இந்த உழவர் பெருவிழாவில் மாவட்ட ரீதியாக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களும், சேதனப் பயிர்ச் செய்கையாளர்களும், கால்நடைப் பண்ணையாளர்களும், கோழிப் பண்ணையாளர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.pictures: tamilwin.com

Tuesday, January 12, 2016

தைப்பூசம் இனிமேல் தமிழ்க்கடவுள் முருகனின் நாள் அல்ல?


THAIPUSAM IN MALAYSIA
உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள், பல தலைமுறைகளாக  தாய்த்தமிழகத்தின் தொடர்பை இழந்து, மொழியை மறந்து வாழும் நிலையேற்பட்டுள்ள போதிலும் கூட தமது தமிழன் என்ற அடையாளத்தை மறக்காமல் அந்த தமிழ் அடையாளத்தை விழாவெடுத்துக் கொண்டாடும் நாள் எதுவென்றால், அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து தமிழ்க் கடவுள் முருகனுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவாகும்.

தமிழ் முருகனின் நினைவாக, முருகனின் நாளாக உலகத்தமிழர்கள் விழா எடுக்கும் அந்த நன்னாளைத் தாய்த்தமிழகத்தில் திருமலை நாயக்கன் என்ற தெலுங்கு ஆட்சியாளரின்   நினைவு நாளாக அறிவித்தது உலகத் தமிழர்களின் முகத்தில் விழுந்த அறை மட்டுமன்றி முழுத் தமிழினத்தையும் புண்படுத்தும் செயலுமாகும். 

இதை எதிர்க்க வேண்டிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றனர். இது நாள் வரை தமிழ் முருகனுக்கு மட்டும் உரியதாக இருந்த தைப்பூச நன்னாளை இனிமேல் முருகன், திருமலை நாயக்கனுடனும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியது தமிழர்கள் முருகனுக்கு இழைத்த கொடுமை என்று கூறினால் அது மிகையாகாது.


இன்று தமிழ்நாட்டில் இவ்வளவு சாதிப்பிரிவும், பார்ப்பனர்களின் ஆளுமையும், தமிழர்கள் தமது நிலமிழந்து கொத்தடிமைகளாக இருப்பதற்கும், தமிழ் தமிழர்களின் கோயில்களிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கும், தமிழிசை தெலுங்கிசையாக மாறியதற்கும்  மூவேந்தர்கள் காரணம் அல்ல, சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டை தமிழரல்லாதார் ஆண்டதால் வந்த விளைவு தான் அது.
வந்தேறிகளுக்கு தமிழர்களின் நிலங்கள் 
பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழர்கள் 
நிலமற்றவர்களாக்கப்பட்டதும். தமிழர்களின் கோயில்களிலிருந்து தமிழ்  வெளியேறியதும் ராஜ ராஜ சோழனின் காலத்தில் மதிப்பும், மரியாதை மிக்கவர்களாக இருந்த தேவ அடியார்கள் தேவடியாளாக மாற்றப்பட்டதும், தமிழரல்லாத விஜயநகர, நாயக்க ஆட்சியாளர்களின் காலத்தில் தான் என்ற உண்மையை யாரும் பேசுவதில்லை.  நாயக்கர் ஆட்சியின் கீழ் தான் 
தமிழர்களின் நிலங்களைப் பறிக்கப்பட்டு தமது நாட்டிலிருந்து தமிழ்மண்ணுக்கு குடியேற்றப்பட்ட அவர்களின் சாதியினருக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. இன்றும் தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களில் தமிழர்களை விட தமிழரல்லாத (வடுக) சாதியினர், தமிழர்களுடன் ஒப்பிடும்போது நிலச்சொந்தக்காரர்களாக காணப்படுவதற்கும் இது தான் காரணம். 

வெளியிலிருந்து நாடு பிடிக்க வந்து அவர்களை அடக்கியாண்டவர்களுக்கு அவர்களின் ஆட்சி முடிந்த பின்னரும் நினைவுநாள் கொண்டாடி விழா எடுக்கும் செயலை வேறு நாடுகளில் பார்க்க முடியாது அது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும்.

தமிழ்மண்ணை ஆண்ட தமிழரல்லாதோர் கோயில்களையும் மாளிகைகளையும் அவர்களின் நாடுகளிலிருந்து கொண்டு வந்த பணத்தையும் தங்கத்தையும், வெள்ளியையும் கொண்டு கட்டவில்லை. எல்லாமே தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர், தமிழ் மண்ணையும், தமிழர்களையும்  சுரண்டிப் பெற்றுக் கொண்டவை தான். தமிழர்களின் பணத்திலும், தமிழர்களின் உழைப்பிலும், தமிழ்நாட்டின் கருங்கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டவை தான் அவர்கள் கட்டியதாகக் கூறப்படும் கோயில்களும், மாளிகைகளும் கூட, அகவே அவையெல்லாம் தமிழர்களுக்கு மட்டும் தான் சொந்தமானவை. 

 அங்கர்வாட்டில் காரைக்காலம்மையார் 
உதாரணமாக கம்போடியாவின் அங்கர்வாட்டில் சோழர்களுக்குத் தொடர்புண்டு, சோழர்களின் கட்டிடக் கலையை அங்கேயும்  காணலாம். இன்னும் தமிழச்சி காரைக்காலம்மையார் அங்கர்வாட்டில்  அழியாமல்  அமர்ந்து  கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் முதலாம் சூரியவர்மன் கூட இந்தியாவிலிருந்து (தமிழ்நாடாகக் கூட இருக்கலாம்) போனதாகத் தான் கூறப்படுகிறது. ஆனால் தமிழர்களோ அல்லது ஏனைய இந்தியர்களோ அங்கர்வாட் கோயிலில் அவர்களுக்கும் பங்கிருப்பதாக சொந்தம் கொண்டாட முடியாது அது முழுமையாக கம்போடிய கமெர்(Khmer People) மக்களின் சொத்து, அதில் யாரும் பங்கு கேட்க முடியாது. அதே போல் திருமலை நாயக்கன் மட்டுமல்ல எந்த நாயக்கனும் தமிழ்நாட்டில் கட்டிய மாளிகையோ அல்லது கோயிலோ எல்லாமே  தமிழர்களுக்குத் தான் சொந்தமே தவிர வேறு எவருக்கும் அல்ல.

சோழர் காலத்தில் கோயிலில் தமிழ் கோலோச்சியது என்பதற்கு சோழர்களில் கல்வெட்டுகளிலேயே சான்றுகளைக் காணலாம். சோழர்காலத் தமிழை அறியக் கல்வெட்டுகள் பெரிதும் உதவுகின்றன. வடமொழி எழுத்துக்களை அகற்றிவிட்டு தமிழ் எழுத்துகளால் தமிழ் மொழி மரபுப்படி எழுத வேண்டுமென்ற நன்னூலில் காணப்படும் இலக்கண வரையறையைச் சோழர்கள் தமது கல்வெட்டுகளில் கடைப்பிடிக்கத் தவறவில்லை. சோழர் கல்வெட்டுகளில் வடமொழிச் சொற்கள் அனைத்தும்,  தமிழாக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி கோயில்களில் கூட தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப் பட்டன என்பதைக் காணக் கூடியதாக உள்ளது. அந்த நிலை மாறி தமிழர்களின் கோயில்களிலிருந்து தமிழ் வெளியேற்றப்பட்டது விஜயநகர நாயக்கர் காலத்தில் தான். அதிலும் திருமலை நாயக்கர் காலத்தில் தான் பழனி முருகன் கூட பார்ப்பன சமக்கிருத மயமாக்கப் பட்டான்.
                                                                    
வடசொற்கள்
- கல்வெட்டுச் சொற்கள்
ஏகபோகம்
- ஒரு பூ
தாம்பூலம்
- சுருளமுது
கர்ப்பக்கிரகம்
- உட்கோயில், அகநாழிகை
பரிவர்த்தனை
- தலைமாறு
பரிவட்டம்
- சாத்துக்கூறை
நைவேத்யம்
- அமுதுபடி
அவிர்பலி
- தீயெறிசோறு
கும்பாபிஷேகம்
- கலசமாட்டுதல்


ஆகவே உலகத் தமிழர்கள் தமிழ்க்கடவுள் முருகனுக்குப் பாரம்பரியமாக விழா எடுத்து வரும் தைப்பூச நன்நாளை தெலுங்கு மன்னன் திருமலைநாயக்கன் நினைவு தினமாக தமிழக அரசு அறிவித்ததை தமிழர்கள் அனைவரும் கண்டிப்பதுடன் அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொள்ள வேண்டும். 

Monday, January 11, 2016

புத்தமதத்தில் சாதியில்லை என்பது வெறும் பம்மாத்து!

தமிழர்களிடையே அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே புத்தமதத்தில் சாதிப்பாகுபாடுகள் எதுவும் கிடையாது அங்கு எல்லோரும் சமமானவர்கள் என்ற கருத்து திட்டமிட்டுப் பரப்பபட்டிருக்கிறது. அதிலும் அண்ணல் அம்பேத்கார் தனது இறுதிக் காலத்தில்அதாவது இறப்பதற்கு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்துமதத்தை விட்டு விலகி புத்த மதத்தில் சேர்ந்ததும் மக்களிடம், குறிப்பாக தலித் மக்களிடையே அந்த நம்பிக்கைக்கு  வலுவூட்டியுள்ளதைக் காணலாம்.
'The Buddhavamsa, a Pali language scripture part of the Theravada or Hinayana tradition, indicates that Gautama, the Buddha was born into the Kshatriya caste. The future Buddha, Maitreya will be born into the Brahmana caste. The three Buddhas prior to Gautama were Kakusanda, Konagamana and Kassapa, all of whom belonged to the Brahmana casteThe Lalitavistara, a 3rd century Buddhist scripture, explicitly mentions that a Buddha can only be born a Brahmana or Kshatriya and can never come from any of the “lower castes”. There was little room for those of humble birth, low origin and without lineage to be a Buddha.'
Image result for AMBEDKAR BUDDHIST
ஹம்மலாவ சாததிஸ்ஸா (Hammalawa Saddhatissa) என்ற சிங்கள பெளத்த பிக்குவைச் சந்தித்து அவரது போதனையைக் கேட்ட பின்னர் தான் அம்பேத்கார் நாக்பூரில் 1956 இல் தனது தொண்டர்களுடன் புத்த மதத்தைத் தழுவினார். இலங்கையில் சாதாரண பெளத்த மக்களிடையே மட்டுமன்றி, புத்த பிக்குகளிடையேயும், புத்த சங்கங்கள் மத்தியிலும்  காணப்படும் சாதிப்பாகுபாடுகளைப் பற்றியும், இலங்கையில் புத்தமதம் சாதியில் ஊறிக் கிடக்கும் உண்மையையும் அந்த சிங்களபிக்கு கூறியிருந்தாரேயானால், அம்பேத்கார் புத்த மதத்தை தழுவியிருப்பாரா என்பது சந்தேகமே.

இலங்கையில் நடைமுறையிலுள்ள புத்தமதத்தை 'Gaudi Caste Carnival' என்று சைவமயத்தவர்களாகிய ஈழத்தமிழர்களே நக்கலடிக்கும் அளவுக்கு சாதியடிப்படையில் பிளவுபட்டுக் கிடக்கிறது புத்தமதம். உண்மையில் இலங்கையின் சிங்கள பிக்குவைச் சந்தித்த பின்னர் அம்பேத்கார் சாதியை ஒழிப்பதற்காக புத்த மதத்தைத் தழுவினார் என்பது வியப்புக்குரியதே. அதாவது இலங்கையில் புத்தமதத்தில் எவ்வளவுக்கு  சாதி வேரோடியிருக்கிறது என்பதை அம்பேத்காருக்கு விளக்கிக் கூற அந்தச்  சிங்கள பிக்கு மறந்து விட்டார் அல்லது மறைத்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

உண்மையில் சாதி என்பது இந்தியாவில் உருவாகிய மதங்களில் மட்டுமன்றி ஆபிரகாமிய மதங்களிலும் உண்டு. அதன் அளவும் தாக்கமும் வேறுபடலாமே தவிர, பாகுபாடுகள் இல்லாத மதம் என்ற ஒன்றே கிடையாதென்றே கூறலாம்.

கெளதம புத்தர் ஒருவரின் பிறப்பின் மூலம் பாகுபாடுகள் காட்டாத சமத்துவம் மிக்க ஒரு மார்க்கத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தில் சங்கத்தை நிறுவியிருந்தாலும், அவர் அதனைத் தனது போதனைகளிலும் வலியுறுத்தியிருந்தாலும் கூட, அவரால்  நிறுவப்பட்ட Order அல்லது சங்கம் அவர் எதிர்பார்த்ததை  அல்லது அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதாக உருவாக்கமடையவில்லை என்பது தான் உண்மை.

தமிழர்கள் ஏனைய நாடுகளிலுள்ள புத்த மதத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முன்னர் இலங்கையின் புத்த மதத்தைப் பார்ப்பது தான் முறையானது, ஏனென்றால் அம்பேத்கார் கூட சிங்கள புத்த பிக்குகளில் போதனையினால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அது மட்டுமன்றி பெளத்தர்களாக மாறும் தமிழ்த் தலித்துக்கள் பலருக்கும் கூட அவர்கள் தான் பிக்குகளாகின்றனர் அல்லது தமிழ்நாட்டுத் தமிழ்ப் பிக்குகளுக்கு அவர்கள் போதிக்கின்றனர்.
There are no exhortations to laypeople to treat everyone as a social equal in early Buddhist texts,* but monks and nuns are expected to do so. The Ambattha Sutta states that anyone who makes snobbish distinctions of rank is far from wisdom. Thus monks and nuns are supposed to accept food from everyone, irrespective of caste. In short, caste was accepted in society, but it was rejected in the Sangha. So the first answer to the question, “How did caste get into Buddhism?” is clear–from society.

உண்மையில் ஆரம்பகால பெளத்த போதனைகளில் சாதாரண மக்கள் அனைவரையும் சமமானவர்களாகப் பாவிக்க வேண்டும் என்ற கட்டளை காணப்படவில்லை. ஆனால் புத்த பிக்குகளாக, பிக்குணிகளாக பெளத்த சங்கத்தில் இணையும் பிக்குகளும், பிக்குணிகளும், அவர்கள் என்ன சாதியாக இருந்தாலும்,  உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ சமமாக நடத்தப்பட வேண்டும், அத்துடன் பிக்குகளும், பிக்குணிகளும் சாதி வேறுபாடின்றி எல்லோரிடமும் தானம் பெற்றுக் கொள்ளலாம். அதாவது சமூகத்தில் காணப்பட்ட சாதியமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் சங்கத்தில் சாதியிருப்பதை  பெளத்தம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் கட்டளையைக் கூட மீறிச் சாதியில் ஊறிக் கிடப்பது தான் இலங்கையிலுள்ள புத்தமதம். அதாவது இலங்கையில் பெளத்தர்களாகிய சிங்கள மக்களிடம் மட்டுமன்றி, புத்தபிக்கு, பிக்குணிகளின் மத்தியிலும் கூட பிறப்பின் அடிப்படையிலும் அவர்களின் குடும்பத்தின் பரம்பரைத் தொழிலின் அடிப்படையிலும்  சாதிப்பாகுபாடுகள் உண்டு. இலங்கை புத்தமதத்தின் மிகவும் முக்கியமான நாடுகளில் ஒன்று என்பதை இங்கே  நாம் மறந்து விடக் கூடாது.

                                                            High Caste Govigama (Vellala) Monks
இலங்கையில் பெளத்த சங்கம்  முப்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு
டுள்ளன. அவை மஹா நிக்காயா அல்லது சியாம் நிக்காயா, அமரபுர நிக்காயா, ரமண்ணா நிக்காயா என்ற மூன்று முக்கிய பெளத்த பீடங்களின் கீழ் வருகின்றன. இந்த முப்பது பெளத்த பிரிவுகளின் அங்கத்துவமும் ஒவ்வொரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பிக்குகளுக்கும், பிறப்பினால் ஏற்பட்ட சாதியின் அடிப்படையிலேயே உள்ளனவே அல்லாமல் புத்தர் போதித்ததாகக் கூறப்படும் சமத்துவத்தின் அடிப்படையில் அல்ல. 
சாதியடிப்படையிலான நிக்காயாக்களின் கீழேயுள்ள புத்த கோயில்களுக்கு அந்தந்த சாதி மக்கள் செல்கின்றனர். இது இந்துக் கோயில்களில் உள்ளதை விட மோசமானது ஏனென்றால் இலங்கையில் எந்த இந்துக் கோயிலும் சாதியடிப்படையில் யாரையும் அனுமதிப்பதுமில்லை/அனுமதி மறுப்பதுமில்லை. ஒவ்வொரு நிக்காயாவிலும் புத்த பிக்குவாக வருவதற்கு குறிப்பட்ட சாதியில் பிறந்திருக்க வேண்டும்.

உதாரணமாக, மகா நிக்காயா அல்லது சியாம் நிக்காயாவில் சிங்களவர்களில் உயர்ந்த சாதியாகக் கருதப்படும்,  அதாவது வேளாண்மை செய்யும் கொவிகம (வேளாளர் அல்லது வெள்ளாளர்) சாதியைச் சேர்ந்தவர் மட்டுமே பிக்குவாக முடியும். புத்தரின் பல் என சிங்களவர்களால் கருதப்படும் (அது புத்தரின் பல் அல்ல, அது மனிதப் பல்லே அல்ல என்பது வேறு கதை) புனித தந்தம் வைக்கப்பட்டுள்ள கண்டியிலுள்ள தலதா மாளிகை சியாம் நிக்காயாவின் கீழ் வருகிறது. அதில் சிங்கள வெள்ளாளர்கள் மட்டுமே பிக்குகளாகவும்  பீடாதிபதிகளாகவும் வர முடியும். அமரபுர நிக்காயாவிலும் ரமண்ணா நிக்காயாவிலும் கடலோரச் சிங்களவர்களாகிய சிங்களக் கரையார்களும், ஏனைய சாதிகளாகிய சலாகம எனப்படும் கறுவாப்பட்டை உரிக்கிறவர்களும், துரவா எனப்படும் பனை, தென்னையிலிருந்து கள்ளிறக்கிறவர்களும் ஏனைய கீழ்மட்டத்திலுள்ள சாதிகளும் பிக்குகளாக முடியும்.இப்பொழுது கூட வருடாந்தம் கண்டியில் நடைபெறும் தலதா மாளிகையில் புத்தரின் புனித தந்த ஊர்வலத்தில் கரையோரச் சிங்களக் கரையார் நடனம் ஆடுவதற்குத் தடையுண்டு, ஆனால் ஜப்பானியர்கள் விரும்பினால்  ஆடுவதற்குத் தடையில்லை. 

இதில் வேடிக்கை என்னவென்றால்  தமிழ்நாட்டிலிருந்து கூப்பிடு தூரத்திலுள்ள இலங்கையில் புத்த மதமும், புத்த சங்கமும் சாதியடிப்படையில் பிரிந்து நாறிக் கிடக்கும் போது சாதியை ஒழிப்பதற்காகவும் சமத்துவம் வேண்டியும் புத்தமதத்தில் சேர்கிறார்களாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.
Karava (Karaiyar) Monks
இலங்கையின் பழமையான பெளத்த நூல்களாகிய பூஜாவலிய, சத்தர்மரட்னாவலிய, நிதிநிகண்டுவ போன்றவை சாதிப்பாகுபாடுகளையும், விதிக்கப்பட வேண்டிய சாதிக்கட்டுப்பாடுகளையும்  விளக்கமாக, விரிவாக விளக்குகின்றன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன் துட்டகைமுனுவின் மகனாகிய  'சாலிய', தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணாகிய அசோகமாலாவை மணந்ததால், பெளத்தத்தைக் காப்பதற்காக தமிழர்களுக்கெதிராகப் போர் தொடுத்த பெளத்த மன்னனாகிய அவனது தந்தை  துட்ட கைமுனுவால் ஊரை விட்டே விலக்கி வைக்கப்பட்டதாகக் கூறுகிறது பூஜாவலிய என்ற நூல். பதினோராம் நூற்றாண்டில் ஆண்டசிங்கள அரசன் விஜயபாகு சிவனொளிபாதமலை எனத் தமிழர்களாலும் ஸ்ரீ பாத என்று சிங்களவர்களாலும் அழைக்கப்படும் மலையிலுள்ள பாதத்தை வணங்குவதற்கு தாழ்த்தப்பட்ட சிங்களச் சாதியினருக்கு தடை விதித்தான்.

இவ்வாறு இலங்கையில் புத்தமதம் சாதிச்சீழ் பிடித்துக் கிடக்கிறது, இந்த லட்சணத்தில் சாதியொழிப்புக்காக புத்தமதத்துக்கு மாறுகின்றனராம் தமிழர்கள். வெறும் அக்கரைக்கு இக்கரைப் பச்சை அவ்வளவு தான். 

-தொடரும்-- 

Sunday, January 10, 2016

வே. மதிமாறனின் உளறல்களைத் தமிழர்கள் கண்டிக்க வேண்டும். ஏறுதழுவுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள்  தமிழர்களின் வீரத்தில் திளைத்த மன்னர்கள், தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்கள், , அவர்களின் இசை, கலைகள் எல்லாவற்றுக்கும்  தமிழ்நாட்டுத் தமிழர்கள் சாதியடிப்படையில் சண்டை போட்டுக் கொள்வதால் தான் வந்தேறிகள் எல்லாம் வாய் கூசாமல் தமிழர்களின் பண்பாட்டை வக்கணையுடன் கேலி பேசும் நிலை ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக வே.மதிமாறன் என்ற எழுத்தாளர் என்னடாவென்றால் “புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்ப்பெண்ணால் கேவலம் மாட்டை அடக்க முடியாதா? ஆமாம் ஜல்லிக்கட்டில் ஏன் பெண்கள் பங்கெடுப்பதில்லை” என்கிறார். இந்த நக்கலில் அவர் தமிழ்ப்பெண்களை மட்டும் கேலி செய்யவில்லை, தமிழிலக்கியங்களையும், தமிழர்களின் வீரமிகு வரலாற்றையும் கேலி செய்கிறார். இவ்வாறு தமிழிலக்கியங்களை தமிழர்களின் பண்பாட்டைக் கேலி செய்த தமிழரல்லாதோரின் தலையில் கல்சுமக்க வைத்த தமிழர்கள் அக்காலத்தில் இருந்தனர் ஆனால் அந்த தமிழ்மானம் எல்லாம் செத்துப்போய் இப்பொழுது வெறும் சோற்றுத்தமிழர்கள் மட்டும் தான் தமிழ்நாட்டில் இருக்கின்றனர் என்பது தெரிந்ததால் தான் இவரைப் போன்றவர்களுக்குக் குளிர் விட்டுப் போய் விட்டது.

தமிழில் குரவருக்கும், குறவருக்கும் வேறுபாடு தெரியாத இந்த தமிழ் “எழுத்தாளர்” முன்பொருமுறை ராஜ ராஜ சோழனை வாய்க்கு வந்தபடி, வரலாற்றுப் பிழைகளுடன் உளறியது எனக்கு எரிச்சலையூட்டியதால் இதற்கு முன்பும் இவரைக் கண்டித்து நான் ஒரு பதிவை எழுதியுள்ளேன்.

 'நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன' என்பது போல் இப்பொழுது இவர் இக்காலத் தமிழ்ப்பெண்களை மட்டுமன்றி புறநானூற்றுத் தமிழச்சியையும் கேலி செய்கிறார். இவரைக் கண்டிக்க தமிழ்நாட்டில் யாருமே  கிடையாதா? தமிழையும் தமிழர்களின் பண்பாட்டையும் கேலி செய்யுமளவுக்கு இவர்களுக்கு இடம் கொடுத்து, இப்படியான திராவிட எச்சங்கள் பலவற்றைத் தமிழ்நாட்டில் வளர்த்து விட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தான் உலகத்தமிழர்கள் குறைகூற வேண்டும்.

புலியை முறத்தால் அடித்து விரட்டுமளவுக்கு வீரம் நிறைந்த அக்காலத் தமிழச்சிக்கு தன்னைப் போன்ற வீரமுள்ள கணவனை அவளே  தேர்ந்தெடுத்துக்  கொள்ளும் சுதந்திரத்தைக் கொடுப்பதற்காகத் தான் சங்ககாலத் தமிழர்கள் ஏறுதழுவும் போட்டியை நடத்தினர். சங்க  காலத்தில் ஏறுதழுவுதல் ஏன் நடத்தப்பட்டது என்றதன் பின்னணியைக் கூட அறியாத தற்குறிகள் எல்லாம் தமிழில் ‘எழுத்தாளர்’ என்ற பெயரில் இக்காலத் தமிழர்களை மட்டுமன்றி உலகம் போற்றும் சங்கத் தமிழிலக்கியங்களையும், தமிழர்களின் வீரமிகு வரலாற்றையும், துணிச்சலுடன் கேலி செய்வது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்க முடியும்.

 தமிழ்நாட்டுக்குப் பக்கத்து மாநிலமான கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவை மலையாளிகள் எவருமே சாதியடிப்படையில் சொந்தம் கொண்டாடுவதில்லை இந்துக்கடவுளர்கள் உலா வரும் அந்த விழாவில் முஸ்லீம்கள் கூட மலையாளிகள் என்ற இனவுணர்வுடன் பங்கு கொள்கிறார்கள். கேரளாவில் மலையாளிகளை அவர்களின் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட விடாமல் தடுக்கவும் அல்லது அவர்கள் மலையாளிகளாக ஒன்றுபட வேண்டிய அவர்களின் பாரம்பரிய விழாக்களிலும், பழசை நினைவுபடுத்தி, அவர்களின் சாதியுணர்வைத் தூண்டி நாரதர் வேலை செய்யவும், அங்கு பெரியாரியம் பெரிதாக வேரூன்றாதது தான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களின் கலை, கலாச்சாரம் பாரம்பரியம் அவற்றைக் காக்க வேண்டிய கடமை என்ற பேச்சு வரும் போதெல்லாம், தமிழர்களை அவர்களின் சாதிப்பாகுபாடுகளை, அவர்களிடையேயுள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்று படச் செய்ய விடாமல் தடுப்பதற்கென்றே பகுத்தறிவு என்ற பெயரில் ஒரு கூட்டம் அலைகிறது. அவர்களின் முழு நோக்கமும் தமிழர்கள் அனைவரும் தமிழர்களாக ஒன்றுபடுவதைத் தடுப்பது தான்.

'கேப்பில கிடாவெட்டுவது போல்’ என்று தமிழ்நாட்டில் கூறுவது போல் இந்துத்துவா சக்திகள் இடையில் புகுந்து தமிழர்களின் ஏறுதழுவுதல் என்ற பல்லாயிரமாண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் விழாவுக்கு இக்கால இந்துத்துவாக் கொள்கைகளின் அடிப்படையில் இந்துமதப் பூச்சுப் பூசுவதையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும். ஆபிரகாமிய மதங்கள் தமிழ்நாட்டுக்கு வருமுன்னர் தமிழர்கள் அனைவரும் இக்காலத்தில் 'இந்துக்கடவுள்களாக' கருதப்படும் தெய்வங்களை வெவ்வேறு தமிழ்ப் பெயர்களில் வழிபட்டனர். கோயில்களில் தான் தமிழ் வளர்ந்தது, தமிழர்களின் கலைகளும் அரங்கேற்றப்பட்டன. கோயில் முன்றல்கள் தான் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரும் இடமாகவும் இருந்தன. ஆகவே தான் ஏறுதழுவுதலும் கோயில் திருவிழாக் காலங்களில் நடத்தப்பட்டனவே தவிர அதன் பின்னணியில் மத அடிப்படையோ அல்லது மத வேறுபாடுகளோ கிடையாது ஆகவே இக்காலத்தில் ஆபிரகாமிய மதங்களைக் கைக்கொள்ளும் தமிழர்களை முன்னோர்களாகக் கொண்ட கிறித்தவ, இஸ்லாமிய தமிழர்கள் அனைவரும் பங்குபற்றி ஏறுதழுவுதலை உண்மையான தமிழர் விழாவாகக் கொண்டாடும் நாள் எந்நாளோ அது தான் தமிழர்களுக்கும் தமிழுக்கும் வெற்றி நாளாகும். 

இக்கால இந்து மதவெறியர்கள் சிலர் தமிழர்களின் ஏறுதழுவுதலுக்கு இந்துமதப் பூச்சு பூசி தமிழர்களின் பாரம்பரிய விழாவை இந்து மதவிழாவாக்க முனைவதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தடுக்காது விட்டால் அது தமிழினத்தை மேலும் பிளவு படுத்தும்.


புறநானூறு


'ஒரு தமிழ்த் தாய் தனது ஒரே மகனைப் போருக்கு அனுப்பும் காட்சி'

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ
யானை எறிந்து களத்து ஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாலுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே. (புறம் 279) 
A Tamil Mother Sends Her Only Son into Battle 
Let these thoughts pass from her! Monstrous though it was,
her resolve was in keeping with her ancient lineage!
The day before yesterday, her father knocked down
an elephant on the battlefield and died soon after.
Yesterday, her husband foiled a thick column of warriors
before he was mowed down himself.
And today, when she heard the war drums ringing in her ears,
she was choked with longing. Shaking all over,
she put a spear in the hand of her only son,
wound a piece of cloth around him, and rubbed oil
into the topknot of his wild unkempt hair;
and though he was all she had, she told him:
Go! and sent him into battle at once.
(Okkur Macattiyar, Tamil / Purananuru 279)

இதன் பொருள்:-

இவளது சிந்தை கெடுக (வாழ்க எனப் பொருள்);  இவள் பெண்களில் சிறந்தவள், இவளது துணிவு மிகவும் கடுமையானது. வீரப் பரம்பரையில் வந்த  பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். முந்தாநாள், இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன் ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து, அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் “போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள்.
 

சிறப்புக் குறிப்பு:- 
“கெடுக சிந்தை, கடிது இவள் துணிவு” என்று கூறியது இகழ்வதுபோல் புகழ்வது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிபிடுகிறார். தந்தையையும், கணவனையும் போரில் இழந்தாலும், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால், தன் ஒரே மகனை – மிகவும் சிறிய வயதுடைய ஒரே மகனை – போருக்கு அனுப்புவதால் அவள் “மூதில் மகள்” என்ற அடைமொழிக்குத் தகுதியானவள்தான் என்பதைப் புலவர் நன்கு எடுத்துரைக்கிறார். 
இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்ற வீரமுள்ள தமிழ்ப் பெண்டிர், சங்க காலத்தில் மட்டுமல்லாமல் தற்காலத்திலும் இருக்கிறார்கள் என்பதற்கு, அண்மையில் ஈழத்தில் நடந்த இனப்போரில் தம் தந்தை, உடன் பிறந்தோர் ஆகியோரையும், தம் பிள்ளைகளையும், பெண்களையும் இழந்து, தாங்களே போருக்குச் சென்ற பெண்களின் வீரச்செயல்கள் சான்றாகத் திகழ்கிறது.


நன்றி: Connectgalaxy.com