Sunday, October 16, 2016

ஈழத்தில் சிவசேனையின் உருவாக்கத்தை ஈழத்தமிழர்கள் எதிர்க்க வேண்டும்.


ஈழத்தமிழர்கள் அனைவரும் சாதி, மதபேதமின்றி தமிழர்களாக ஒன்றுபடக் கூடிய தமிழுணர்வும், அரசியல் வரலாறும் கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதற்குச் சாவுமணியடிக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் போல் ஈழத்தமிழர் மத்தியிலும் பார்ப்பனீய/இந்துத்துவாக் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சிவசேனை அமைப்பை வேரூன்றச் செய்து, ஈழத்தமிழினத்தை மேலும் பிளவுபடச் செய்யும் முயற்சி சிலரால் (வெளியாரின் உந்துதலால்) மேற்கொள்ளப்படுகிறது போல் தெரிகிறது. அதை ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும். இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களிடையே, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இத்தகைய மதவாத அமைப்புக்கான ஆதரவை தடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் கடமையாகும்.

வடமாகாணத்திலுள்ள வவுனியா நகரில் இந்தியாவிலுள்ளது போன்ற சிவசேனை இயக்கம் இந்தியாவில் வாழ்ந்த அல்லது இந்தியத் தொடர்புகள் கொண்ட ஈழத்தமிழர்கள் சிலரால் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தியாவிலுள்ள, அது போன்ற இயக்கங்களின்,  குறிப்பாக சிவசேனா, விஸ்வஹிந்து பரிசத், ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளின் ஆதரவும் தமக்கிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் இந்த இயக்கத்தின் அமைப்பாளராகிய மறவன்புலவு சச்சிதானந்தன் என்ற ஈழத்தமிழர்.

இலங்கையில் திட்டமிட்ட சிங்கள – பெளத்த குடியேற்றங்களினால் இந்துக் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், தமிழர் நிலங்கள் பெளத்தமயமாக்கப்படுவதையும் தடுக்க வேண்டுமெனவும் இலங்கை சிவசேனை குறிப்பிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் சிவசேனாவும், ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்களும் இந்துத்துவாக்களும் பெளத்தத்தை இந்துமதத்தின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்களே தவிர, அவர்கள் பெளத்தத்தை மட்டுமன்றி சிங்களவர்களையும் எதிர்க்கவில்லை. அவர்கள் எதிர்ப்பது இஸ்லாத்தையும், கிறித்தவத்தையுமே தவிர பெளத்தத்தை அல்ல. இந்த லட்சணத்தில் ஈழத்தில் தமிழர் நிலங்களில் திட்டமிட்ட பெளத்த- சிங்கள ஆக்கிரமிப்பை இலங்கையில் சிவசேனை எப்படித் தடுக்கும் என்பதை இதன் அமைப்பாளர் தான் விளக்க வேண்டும். 

ஆனால் சிவசேனை இயக்கத்தின் கிறித்தவ எதிர்ப்பு கடைசியில், ஈழத்தமிழர்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி விடும். சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கையின் கரையோரப்பகுதிகளில் புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு வரை வாழ்ந்த தமிழர்கள், கத்தோலிக்கராகி கடைசியில் சிங்களக் கத்தோலிக்கர்களுடன் கலந்து சிங்களவர்களாக மாறிய வரலாற்றை ஈழத்தமிழர்கள் மறந்து விடக் கூடாது. அவ்வாறு நடந்திராது விட்டால், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையான தமிழ்நிலத்தை இழந்திருக்க மாட்டார்கள். சிவசேனை ஈழத்தமிழர் மத்தியில் வளர்ந்து, அவர்களின் கிறித்தவ எதிர்ப்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்து - கிறித்தவ பிளவு ஏற்பட்டால், மீண்டும் தமிழ்க்கிறித்தவர்கள் சிங்களக் கிறித்தவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?  அது மட்டுமன்றி, வன்னியில் தமிழ்மண்ணை மீட்கத் தனதுயிரை ஈந்த ஒவ்வொரு ஈழத்தமிழனும் இந்துவாகவோ அல்லது கிறித்தவனாகவோ சாகவில்லை, தமிழனாக மட்டும் தான் தனதுயிரை ஈந்தான் என்ற உண்மையை இலங்கையில் சிவசேனை இயக்கத்தை உருவாக்க முயல்கிறவர்களுக்கு ஈழத்தமிழர்கள் உணர்த்த வேண்டும்.
சிங்கள - தமிழ் போர்க்காலம் 2002
ஈழத்தமிழர்களின் ஆயிரக்கணக்கான கோயில்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட போதும், அதிலும் குறிப்பாக பழம்பெரும் தலமாகிய நகுலேச்சரத்தின் மீது இலங்கை விமானப்படை குண்டு வீசிய போதும், பாடல்பெற்ற தலங்களாகிய திருக்கோணேச்சரம் பெளத்தத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போதும், திருக்கேதீச்சரம் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுச், சூறையாடப்பட்ட போதும், பெரும்பான்மை ‘இந்துக்களாகிய’ ஈழத்தமிழர்கள் கேட்பாரின்றிக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட போதும், இந்தியாவின் இந்து இயக்கங்களும், இந்துத்துவாக்களும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் சிங்களவர்களுக்குத் தான் ஆதரவளித்தனர், ஈழத்தமிழர்களனைவரையும் பயங்கரவாதிகளாக தமது ஊடகங்களில் சித்தரித்தனர். அந்த வரலாற்றை மறந்தவர்கள் தான் தீவிரவாத இந்துத்துவா/பார்ப்பனீயக் கொள்கைகளைக் கொண்ட சிவசேனை போன்ற அமைப்புகள் இலங்கையில் உருவாக ஆதரவளிப்பர். அது மட்டுமன்றி, இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்தில் சிவசேனா இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கெதிராக இயங்கிய வரலாற்றையும் ஈழத்தமிழர்கள் மறந்து விடக் கூடாது.

இன்று நாம் ஈழத்தமிழர்கள் எமது வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். ஈழத்தமிழர்கள் அனைவரும். சாதி மத, பிரதேச வேறுபாடின்றி தமிழர்களாக ஒன்றுபட வேண்டிய கட்டாய தருணத்தில், இவ்வாறான மத அடிப்படையிலான பிரிவுகளை ஏற்படுத்தி, ஈழத்தமிழர்களைப் பிளவுபடுத்தி நலிவடையச் செய்யும் எந்த அமைப்பும் இலங்கையில் ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவாவாதை தமிழர்கள் அனைவரும் சந்தேகத்துடன் பார்ப்பது மட்டுமன்றி அத்தகைய முயற்சிகளை முழுமையாக எதிர்க்கவும் வேண்டும்.   

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சிவசேனைக்கு அதிகளவு ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது, அதற்குக் காரணம் தீவிரவாத இஸ்லாமிய வஹாபியம் தான். இன்றும் தமிழை மட்டுமே தமது தாய்மொழியாகக் கொண்டிருந்தும், இலங்கையில் தமது வரலாற்றைத் திரித்து, எந்த நாட்டிலும் (முஸ்லீம் நாடுகள் உட்பட) இல்லாத விதமாக, மத அடிப்படையில் முஸ்லீம் என்ற இன அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தம்மை அரபுக்களின் வாரிசுகளாகக் ‘கதை’ விட ஆசைப்படும் இலங்கை முஸ்லீம் தீவிரவாதம், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்புக்குச் சவால் விடுவதும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதும், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்த்து, இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைப்பதற்கு எதிராக இருப்பதும், உண்மை என்றாலும் கூட, அதற்காக சிவசேனை போன்ற அமைப்பை ஈழத்தமிழர்களும் அமைத்துக் கொள்வது சரியான தீர்வு அல்ல. மாறாக, அது ஈழத்தமிழர்களைத் தான் மேலும் பலவீனப்படுத்தும் என்பதை கிழக்குமாகாணத்தில் வாழும் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் கூட, இந்தியாவிலுள்ள பார்ப்பனீய/இந்துத்துவாக் கொள்கையடிப்படையில் பார்க்கும் போது உண்மையில் ஈழத்தமிழர்கள் "இந்துக்கள்" அல்ல என்று தான் கூறவேண்டும். உதாரணமாக, நாயன்மார்களின் தமிழ்த்தேவாரங்களை வேதங்களுக்குச் சமமாக அல்லது உயர்வாகக் கருதும் பாரம்பரியம் கொண்ட ஈழத்துச் சைவர்கள் எவ்வாறு, தமிழில் வழிபாடு நடத்துவதை எதிர்க்கும், வடமொழியைத் திணிக்கும் இந்துத்துவா/சிவசேனை  இந்துக்களாக இருக்க முடியும். சிவசேனையை இலங்கையில் அமைப்பதை விட, சைவர்களாகிய ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சைவத்தை தமிழாக்க வேண்டும். பார்ப்பனீய சடங்குகளிலிருந்து விலகி எமக்கேயுரிய பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுமே தவிர, பார்ப்பனீய, இந்துத்துவா இயக்கங்களுடன் கலந்து காணாமல் போய்விட முயற்சிக்க கூடாது.
தந்தை செல்வா நினைவுத்தூண் யாழ்ப்பாணம் 
ஈழத் தமிழர்களின் வரலாற்றை உற்று நோக்கினால், எமது முன்னோர்கள் எவ்வளவு தான் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை என்று நம்பினாலும் கூட, அரசியலையும் மதத்தையும் ஒரு போதும் கலக்காமல் தமிழர் என்ற அடையாளத்தை மட்டுமே முன்னெடுத்தனர் என்பது தெளிவாகும். ஈழத்தமிழர்களுக்கென மத அடிப்படையிலான எந்த அரசியல் கட்சியையும் அவர்கள் உருவாக்கவில்லை. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்து – கிறித்தவ பிரிவினையை சுதந்திரத்தின் பின்னர் ஏற்படுத்த முயன்ற சில தலைவர்கள், அவர்கள் சிறந்த கல்விமான்களாக இருந்தும் கூட காணாமல் போய் விட்டனர் என்பது தான் உண்மை. உதாரணமாக, 1970 ஆம் ஆண்டில் யாழ். காங்கேசன்துறை தொகுதியில் ‘தமிழர்தந்தை’ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்கெதிராகப் போட்டியிட்ட கணிதமேதை ‘அடங்காத்தமிழன்’ சி. சுந்தரலிங்கம் சிலுவையா? சூலமா? என்று சைவ- கிறித்தவ பிரிவினையைத் தூண்ட முயற்சித்த போதும், கிறித்தவராகிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்தை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்தனராம் பெரும்பான்மைச் சைவர்களாகிய யாழ்ப்பாணத் தமிழர்கள். 

ஈழத்தமிழர்களின்  மதச்சார்பற்ற அந்த அரசியல் வரலாற்றை, சைவ – கிறித்தவ நல்லிணக்கத்தை சிவசேனை போன்ற அமைப்புகள் கெடுத்து விடும். எண்ணிக்கையில் நலிவுற்றுக் கொண்டு செல்லும் ஈழத்தமிழர்களை மறவன்புலவு சச்சிதானந்தனின் 'இந்து அடையாளம்' மேலும் பிளவு படுத்தி, வடக்கு-கிழக்கிலேயே சிறுபான்மையினராக்கி, அழித்து விடும் என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  

5 comments:

Hindus Awake said...

சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கையின் கரையோரப்பகுதிகளில் புத்தளம் தொடக்கம் நீர்கொழும்பு வரை வாழ்ந்த தமிழர்கள், கத்தோலிக்கராகி கடைசியில் சிங்களக் கத்தோலிக்கர்களுடன் கலந்து சிங்களவர்களாக மாறிய வரலாற்றை ஈழத்தமிழர்கள் மறந்து விடக் கூடாது. உங்கள் வார்த்த்தைகளே ஏன் சிவசேனாவை எதிர்க்கிறீர்கள் என்பதை புட்டு வைக்கின்றது. "கத்தோலிக்கராகி:" இந்துக்கள் கத்தோலிக்கராக்க பட்டுள்ளார்கள். இன்று மதமாற்றுவதில் இஸ்லாமியர்களை விட கிறிஸ்தவர்கள் தான் மும்மரமாக செயல் படுகிறார்கள். தமிழ் இனம் என்று கூறி தமிழ் கலாசாரத்தை அழிகிண்றீர்கள். பூவும் பொட்டும் தமிழ் கலாசாரம். அதனை கிறிஸ்தவம் ஏற்று கொள்கின்றதா? உலகில் பல நாடுகளில்வாழும் ஈழத்து தமிழன் அந்தந்த நாட்டு மொழிகளுடன் ஓன்றி போய் விட்டான். ஈழத்து தமிழனுக்கு தமிழ் உணர்வு இருக்குமானால் ஏன் ஆங்கிலத்தை பேச வேண்டும்? தையும் புறக்கணிக்கலாமே... திருக்கேதீஸ்வரத்த்தில் மாத சிலையை நட்ட மாமனிதன் தான் ஈழத்தமிழன். தமிழ் இனத்தை அழிக்க ஈழத்து தமிழனே போதும் ... உங்களுக்கு எப்படி கிறிஸ்தவ உணர்வு இருக்கிறதோ அது போல மற்ற மத்தத்தினருக்கும் மத உணர்வு இருக்கும். நீங்கள் சிலுவையை கண்ட இடமெல்லாம் நடுகிறீர்கள். அது போலவே பௌத்தன் புத்தனை நடுகின்றனர். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் சிலுவை நடுவவது மத மாற்ற வெறித்தனம் அவன் புத்தனை நடுவது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டை.... நீங்கள் இந்து சமயத்தை அழிகிண்றீர்கள். அவன் இந்து சமயத்தை அழிக்க வில்லை. மதம் மாற்றம் நடை பெரும் வரை தமிழ் இனம் ஒன்று சேர முடியாது.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

தூரநோக்குடன் வெளிக்கொணர்ந்த

சிறந்த வழிகாட்டல்

viyasan said...

@Hindus Awake,

இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னர், போத்துகேயர் காலத்தில் மட்டுமன்றி ஆங்கிலேயர் காலத்திலும் கல்வி மற்றும் வெவ்வேறு காரணங்களுக்காக பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் மதம் மாறினர். ஆனால் அவர்களில் பலர் சைவத்துக்கு திரும்பி விட்டனர். அதனால் இந்தியாவைப் போலல்லாது இலங்கையில் ஒரே குடும்பத்திலேயே சைவ - கிறித்தவர்களும், சைவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் கிறித்தவர்களாகவும் உள்ளனர். சைவ – கிறித்தவ முரண்பாடு அல்லது வெறுப்பு என்பது இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இல்லாத ஒன்று. உதாரணத்துக்கு, திராவிடம், பெரியாரியம் என்றால் என்னவென்றே தெரியாத பல இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டுக்குச் சென்றுதும், சிலரின் பழக்க தோஷத்தால் பெரியாரிஸ்டுக்களாக, திராவிட வீரர்களாக மாறி விட்டதாகப் பம்மாத்து விடுவது போன்றது தான், இந்துத்துவா பார்ப்பன சகவாசத்தால் சில இலங்கைத் தமிழர்கள் கிறித்தவர்களுக்கு எதிராக, இல்லாத ஒன்றைப் பெரிதாக்கி நஞ்சைக் கக்குவதும். உண்மையைக் கூறுவதானால் இலங்கைத் தமிழர் மத்தியில் சைவ – கிறித்தவ நல்லிணக்கம் தான் உண்டு. சில புதிய சுவிசேடக் குழுக்களின் செயல்பாட்டின் அடிப்படையில் இலங்கையில் கிறித்தவர்கள் இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் என்பது வெறும் அபத்தம்.
உண்மையைக்கூறப் போனால் போருக்குப் பின்னர் தான் ஈழத்தில் பெரியளவு சைவமறுமலர்ச்சி உண்டாகியுள்ளது என்று கூற வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களின் மேலைநாட்டுப் பணத்தில் தான், இலங்கையில் அழிக்கப்பட்ட கோயில்கள் திருத்தி அமைக்கப்படுகின்றன.

viyasan said...

@Hindus Awake,

//தமிழ் இனம் என்று கூறி தமிழ் கலாசாரத்தை அழிகிண்றீர்கள். பூவும் பொட்டும் தமிழ் கலாசாரம். அதனை கிறிஸ்தவம் ஏற்று கொள்கின்றதா?//
தமிழ்க்கலாச்சாரத்தை பேணிப்பாதுகாப்பதிளும், தமிழ்ப்பற்றிலும் தமிழ்நாட்டிலுள்ள இந்துக்களை அல்லது பார்ப்பனர்களை விட இலங்கைக் கிறித்தவர்கள் முன்னணியில் உள்ளனர் என்று தான் கூற வேண்டும். (நான் கிறித்தவனுமல்ல, எனக்கு கிறித்தவ உறவினர்களும் கிடையாது. எல்லோருமே சைவம் தான்).

இலங்கையில் கிறித்தவர்களும் பூவும் பொட்டும் வைக்கின்றனர். ஏனென்றால் அது தமிழ்கலாச்சாரம் அதை கிறித்தவ குருமாரும் ஆதரித்து அவர்களும் சந்தனப் பொட்டு இட்டுக் கொள்வதுமுண்டு.

அதற்குச் சான்றாக கீழேயுள்ள எனது பதிவுகளைப் பார்க்கவும்.

இலங்கையில் ‘பொட்டு’ தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம்!

http://viyaasan.blogspot.ca/2014/06/blog-post_22.html


தமிழ் இந்துக்கள் தமிழ்க் கிறித்தவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்

http://viyaasan.blogspot.ca/2013_06_01_archive.html

viyasan said...

//உலகில் பல நாடுகளில்வாழும் ஈழத்து தமிழன் அந்தந்த நாட்டு மொழிகளுடன் ஓன்றி போய் விட்டான். ஈழத்து தமிழனுக்கு தமிழ் உணர்வு இருக்குமானால் ஏன் ஆங்கிலத்தை பேச வேண்டும்? தையும் புறக்கணிக்கலாமே... //

நாங்கள் வாழும் நாட்டின் மொழியைக் கற்றுக் கொள்ளாமல் சோற்றுக்கலைவதா? அல்லது எல்லோருக்கும் இந்தி தெரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு, முன்பின் தெரியாதவர்களிடம் எல்லாம் இந்தியில் பேச முயற்சிப்பதற்கு நாங்கள் ஒன்று (வட)இந்தியர்கள் அல்ல. இன்னொரு மொழியைப் பேசினால் தமிழுணர்வு போய்விடுமா, அநேகமான தமிழறிஞர்கள், தமிழுக்கு தொண்டு செய்தவர்கலுக்கும் ஆங்கிலம் தெரியும்.

//திருக்கேதீஸ்வரத்த்தில் மாத சிலையை நட்ட மாமனிதன் தான் ஈழத்தமிழன்.//

திருக்கேதீஸ்வரத்தில் மாதா சிலை கோயிலுக்கு அருகில் எங்கே இருக்கிறது? இலங்கை ராணுவம் புத்தர் சிலையைத் தான் வைத்திருக்கிறார்கள். அதை சிவசேனா அகற்றுமா?


//கிறிஸ்தவ உணர்வு இருக்கிறதோ அது போல மற்ற மத்தத்தினருக்கும் மத உணர்வு இருக்கும். நீங்கள் சிலுவையை கண்ட இடமெல்லாம் நடுகிறீர்கள். அது போலவே பௌத்தன் புத்தனை நடுகின்றனர். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? //

நான்த கிறித்தவன்மி அல்ல, எனக்கு கிறித்தவ உணர்வு கிடையாது. ஈழத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மண்ணில் வாழ்கின்ற தமிழ்க்கிறித்தவர்கள் சிலுவையை நடுவதற்கும், அங்கு வாழாத சிங்களவர்கள் இராணுவ உதவியுடன் புத்தர் சிலையை நாடுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.


//மதம் மாற்றம் நடை பெரும் வரை தமிழ் இனம் ஒன்று சேர முடியாது.//

தமிழ் இனத்துக்கு மத அடிப்படை கிடையாது, தமிழ்மொழியும், பாரம்பரியமும் தான் அதற்கு அடிப்படை. சைவத்தைப் பார்ப்பனீயத்திடமிருந்து விடுவித்தால் மட்டும் தான் மதமாற்றம் நடைபெறாது, அல்லது அதை யாராலும் தடுக்க முடியாது. சிவசேனையினால் தமிழ்நாட்டில் கூட மதமாற்றத்தை தடுக்க முடியவில்லை.