Monday, July 18, 2016

யாழ்ப்பாணத்தில் சிங்கள- தமிழ் மாணவர் மோதல்- தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரில் வழமைக்கு மாறாக சிங்கள ஆதிக்கம்.


அனுராதபுரத்தை சிங்களவர்கள் எவ்வாறு தமது கலாச்சாரத் தலைநகராகக் கொள்கிறார்களோ அது போன்றே யாழ்ப்பாணத்தை ஈழத்தமிழர்கள் தமது கலாச்சாரத் தலைநகராக, தமது மொழி, கலை, பண்பாடுகள் பாதுகாக்கப்படும், தனித்துவமான இடமாக மட்டுமன்றி, அது அவ்வாறே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையும் விரும்புகிறார்கள். தமிழர்களால் கட்டியெழுப்பப்பட்டு, இலங்கையின் வரலாற்றின் ஆரம்பகாலம் தொட்டு தமிழர்கள் வாழ்ந்த, தமிழ்மன்னர்கள் ஆண்ட அனுராதபுரத்தை தமது கலாச்சாரத் தலைநகராக்கிக் கொண்ட சிங்களவர்கள், தமிழர் தொடர்பான சின்னங்களை அகற்றி, சிங்களமயப்படுத்தி, வரலாற்றைத் திரித்து  முற்று முழுதாகச் சிங்களமயமாக்கியதுடன், புத்த விகாரைகளுக்கு அண்மையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, சுவாமி விவேகானந்தரால்  வணங்கப்பெற்ற அனுராதபுரம் கதிரேசன் கோயிலைக் கூட, பெளத்த புனிதநகர் திட்டத்தின் கீழ் அங்கிருந்து முற்றாக அகற்றினார்கள். 

ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக, உலகில் இறுதித் தமிழரசின் அரசபீடமாக விளங்கிய யாழ்ப்பாணத்தில்  தமிழுக்கும், தமிழ்க் கலை, பண்பாடு, கலாச்சாரங்களுக்கும் அந்நியர்களால் போட்டி ஏற்படுவதை தமிழர்கள் விரும்புவதில்லை, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களின் ஆலோசனையை அல்லது அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் வெளியார் தமது மொழி, கலை, கலாச்சாரங்களை யாழ்ப்பாணத்தில் புகுத்துவது , யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களுக்குக் கூட, திட்டமிட்ட சிங்கள ஆதிக்கத்தினாலும், குடியேற்றங்களினாலும்  தமது மொழி, கலை, பண்பாடுகள் யாழ்ப்பாணத்திலும் அழிக்கப்பட்டு விடுமோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது என்பது தான் உண்மை. யாழ்ப்பாணத்தமிழர்கள் எந்த நாட்டில், எத்தனை தலைமுறைகள் வாழ்ந்தாலும் யாழ்ப்பாணத்தில் தமது ஊர்களை, தமது முன்னோர்கள் வாழ்ந்த இடங்களை மட்டுமாவது மறக்காமல் குறிப்பிடுவதைக் காணலாம். இந்த வழக்கம் மலேசியாவில் பல தலைமுறைகளாக வாழும் மலேசிய ஈழத்தமிழர்களிடம் கூட உண்டு.
சிங்கள மேளம் 
திராவிட, பெரியாரியச் சதியினால் தமது மொழி, இன உணர்வை இழந்து, வெறும் சாதியடிப்படையில் கூறு போடப்பட்டு, தமிழ்நாட்டில் தமிழரல்லாதோரின் நலன்களைக் காப்பதற்காக, அவர்களின் அரசியல் பொருளாதார ஆதிக்கத்தை உறுதிப்படுத்த, உருவாக்கப்பட்ட திராவிடத்தாலும், தமிழர்களின் சொந்தமண்ணில் கூட தமிழ்மொழி பண்பாட்டைக் காப்பது பற்றிப் பேசுவதே பாசிசம் என்று உளறும், ‘முற்போக்கு’ என்று தம்மை அழைத்துக் கொள்ளுகிற திராவிட எச்சங்களாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலரால், யாழ்ப்பாணத்தமிழர்களின் இந்த தமிழுணர்வைப் புரிந்து கொள்ள முடியாது. வேடிக்கை என்னவென்றால், அது போதாதென்று தமிழ்நாட்டில் தமிழர்களைப் பிளவுபடுத்த வஹாபிகள் கூட, 'முற்போக்கும்', 'மனிதநேயமும்' பேசிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ்மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சாதியடிப்படையில் தமிழர்களுடன் மோதிக் கொள்கிறார்கள். ஆனால் இலங்கையில் தமிழ்மாணவர்கள் தமது மொழியைப், பண்பாட்டை தமது சொந்தமண்ணில் பாதுகாத்துக் கொள்ள சிங்களவர்களுடன் மோதிக் கொள்கிறார்கள். 

தமது சொந்த மண்ணிலேயே அந்நியர்களின் திட்டமிட்ட குடியேற்றங்களாலும், அந்திய இராணுவ ஆதிக்கத்தாலும் தமது முன்னோர்கள் கட்டிக்காத்த மொழி, கலாச்சாரம் என்பன தமது சொந்த மண்ணிலேயே அழிந்து விடுமோ என யாழ்ப்பாணத் தமிழர்களின் மனதிலுள்ள அச்சவுணர்வின் அடிப்படையிலேயே நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சிங்கள – தமிழ் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
                                              
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் விழாக்களில் வழமையாக தமிழர்களின் பண்பாட்டு இசைவடிவமாகக் கருதப்படும் தவில், நாகசுவரம் மட்டுமே இசைக்கப்பட்டு குத்து விளக்கேற்றப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கப்படும். ஆனால் நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் வழமைக்கு மாறான முறையில் கண்டிய நடனத்தை நடாத்த முற்பட்டதையடுத்து தமிழ் சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு பாரிய கலவரமாக உருப்பெற்றிருந்தது. இம்முறை  சிங்கள மாணவர்களின் வற்புறுத்தல் காரணமாக, சிங்களவர்களின் கலாச்சார நடனமாகக் கருதப்படும் கண்டிய நடனமும் ஆடப்பட வேண்டுமென வழக்கத்துக்கு மாறாகப் புகுத்தப்பட்டது.   யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவத்தின் தூண்டுதலும், சிங்கள மாணவர்களுக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பும் இந்தப் பிரச்சனை பெரிதாக உருவாகக் காரணமாகக் கூறப்படுகிறது.

தென்பகுதியில் இருந்து வந்த சிங்களவர்கள்  மாணவர்களா?
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தை எவரும் ஒரு சாதாரண விடயமாகக் கருதிவிடக் கூடாது. ஏனெனில் அந்த சம்பவமானது தென்பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களை மீண்டும் தாக்கி அழித்து, அவர்களின் சொத்துக்களை கபளீகரம் செய்து, அங்கிருந்து அவர்களை துரத்துவதற்கான சதித்திட்டமாக இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் - சிங்கள மாணவர்களின் மோதல் சம்பவம் அமைந்துள்ளது என்று அனுமானிப்பதில் தவறவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் நடந்த புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் முன்கூட்டியே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டிருந்தது.இந்நிலையில் அதிரடியாக கண்டி நடனம் புகுத்தப்பட்டது எனில், இது ஒரு சதித்திட்டம் என்பதை எவரும் மறுக்க முடியாது.மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நிரலில் கண்டி நடனம் இல்லாதபோதும் அதனை உள் நுழைத்தவர்கள் யார்?கண்டி நடனத்தில் பங்குபற்ற வந்தவர்கள் எங்கிருந்து வந்தனர்? 
இவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? இந்த ஏற்பாடுகளை செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். உரிய விசாரணை இல்லாமல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இயங்குமாக இருந்தால் அதன் விளைவு தமிழ் மாணவர்களுக்கு மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிறுத்திட்டமான உண்மை.எனவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டி நடனத்தை அரங்கேற்ற முற்பட்டவர்கள் இனங்காணப்படாதவரை; கண்டி நடனத்தில் பங்கேற்றவர்களை கைது செய்து பொலிஸார் விசாரிக்காதவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்துவது மகாகடினம் என்பது தவிர்க்க முடியாத உண்மை.அதேசமயம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தின் பின்னணியாக அமைந்த கண்டி நடனம் சடுதியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக ஒருபோதும் இருக்க முடியாது. ஆக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் அதிகூடிய எண்ணிக்கையில் சிங்கள மாணவர்கள் இருப்பர். இச்சந்தர்ப்பத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக கண்டி நடனத்தை நுழைத்தால் தமிழ் மாணவர்கள் குழப்பம் அடைவர்.
இக்குழப்பத்தை சாட்டாகக் கொண்டு தமிழ் மாணவர்களை தாக்க முடியும் என்பதுடன் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தாக்கினால் அதனை தமக்கு சாதகமாக்கி தென்பகுதியில் ஒரு பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தலாம் என்பது யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதலின் நோக்கம் என்ற உண்மை உணரப்படக்கூடியது.எது எவ்வாறாயினும் யுத்தம் முடிந்த கையோடு சிங்கள மாணவர்களை பெரும் எண்ணிக்கையோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுமதித்தமைக்குள் தென்னிலங்கை சூழ்ச்சியுடன் செயற்பட்டது உண்மை என்றால்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் - சிங்கள மாணவர்களிடையேயான முரண்பாடுகள் தொடரவே செய்யும். ஆனால் பல்கலைக்கழகத்தை மீள இயக்குவதற்கு முன்னதாக தென்பகுதியில் இருந்து யாழ்.பல்கலைக்கழகத்துக்கு வந்தவர்கள் அனைவரும் மாணவர்களா? அல்லது மாய மான்களா? என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும்.
நன்றி: Tamilwin 
 யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

No comments: