Sunday, June 5, 2016

தொல்காப்பியர் பிராமணரா? திராவிட எதிர்ப்பு பார்ப்பனீய ஆதரவு என்று கருத்தல்ல.


தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துகிறவர்கள் திராவிடத்தை எதிர்க்கும் போது அதைச் சிலர் பார்ப்பன ஆதரவு எனத் தமக்குத் தாமே கருத்து கற்பித்துக் கொள்வது வெறும் முட்டாள்தனமாகும். திராவிடம், பார்ப்பனீயம் இரண்டுமே தமிழியத்துக்கு எதிரானவை, தமிழர்களின் நலன்களுக்கு ஒவ்வாதவை அவை இரண்டுமே உண்மையான தமிழர்களால் எதிர்க்கப்பட வேண்டியவை என்பதில் தமிழ்த்தேசியம் பேசம் எவருக்குமே எந்தவித ஐயமுமிருக்க முடியாது.
  
சங்ககாலம் தொட்டு இன்று வரை தமிழர்கள் சாதித்தது எதுவுமேயில்லை, அப்படி ஏதாவது சாதித்திருந்தாலும் அது பார்ப்பனத் தொடர்பினால் ஏற்பட்டவை. தமிழர்களின் அறிவெல்லாம் வேதகாலத்தில் வேதங்களிலிருந்து இரவல் வாங்கியவை அல்லது தமிழர் பண்பாடு வேதகாலத்துக்குப் பிற்பட்டது. சமக்கிருதம் தான், தமிழ் உட்பட அனைத்து மொழியினதும் தாய் என்றெல்லாம் வாதாடும் சமக்கிருத வெறியர்களை நாங்கள் இணையத்தளங்களில் பார்த்திருக்கிறோம். அதிலும் 'தமிழும்வேதமும்' என்று பல இணையத்தளங்களை நடத்துவோர் அப்பட்டமாக எல்லாவற்றையுமே, அது தொல்காப்பியமாக இருந்தாலென்ன, சங்க இலக்கியங்களாக இருந்தாலென்ன, அவற்றுக்கெல்லாம்  ஏதாவது பார்ப்பனத் தொடர்பை அதிகமாக வலியுறுத்துவதைப் பார்க்கலாம். அது போன்றே தொல்காப்பியர் மட்டுமன்றி, வள்ளுவரும் பூணூல் அணிந்த ஒருபிராமணர் என்று,  Non-random-thoughts என்ற வலைப்பதிவை நடத்தும், இந்துத்துவா கருத்துக்களைக் கொண்டவர் போல் தென்படும்  பார்ப்பனர் ஒருவர் தொடர்ந்து எனக்குப் பதிலெழுதுகிறார்.

அவரது கருத்தின் படி "தொல்காப்பியர் நான்கு வேதங்களையும் கற்றவர். அவருடைய இயற்பெயரே திரணதூமாக்கினி என்னும் சமஸ்க்ருத பெயர்தான். அதே போல மயிலாப்பூரில் கண்டெடுக்கப்பட்ட வள்ளுவர் சிலையில் வள்ளுவர் பூணல் அணிந்துள்ளார்" என்கிறார். அத்துடன் "அந்த கண்ணகியே மதுரையை எரிக்கும்போது பார்பணர்களை விட்டுவிடு" என்று தான் கூறுகிறாள், தமிழர்களை விட்டுவிடு என்று சொல்லவில்லை” என்கிறார். இப்படியே போனால் கண்ணகி கூட ஒரு பாப்பாத்தி தான் என்று வாதாடினாலும் வாதாடுவார் போலிருக்கிறது. ஆனால் கண்ணகி பார்ப்போரை மட்டும் விட்டு விடு என்று கூறவில்லை. தமிழ்ப் பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழந்தைகள் எல்லோரையும் தான் விட்டு விடு என்று கூறினாள் என்பது மற்றவர்களுக்குத் தெரியும் என்பதை மறந்து விட்டு, “தமிழர்களை விட்டுவிடு என்று சொல்லவில்லை”  என்று கூறியது தான் வேடிக்கை.

"பார்ப்போர் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் 
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 

பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே 

நற்றேரான் கூடல் நகர்." 

அது ஒருபுறமிருக்க, தொல்காப்பியர், வள்ளுவர் எல்லாம் பிராமணர் என்ற கட்டுக்கதைகளை தமிழறிஞர்கள் மட்டுமன்றி என்னைப்போன்ற சாதாரண தமிழர்கள் கூட ஏற்றுக் கொள்வதில்லை. அவையெல்லாம் பார்ப்பன (அல்லது தமிழரல்லாதோர்) இடைச்செருகல்கள். அதற்கு தொல்காப்பியத்தில் எங்குமே, எந்த ஆதாரமும் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியிருந்தும், சில புராணக்கட்டுக்கதைகளை எந்தவித ஆதாரமுமின்றி, அக்காலத்து தமிழர்கள் மட்டுமன்றி  சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாரதியார் கூட, நம்பி அதையே மீண்டும் கூறி விட்டுச் சென்றதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை என்னைப்போன்ற இக்காலத் தமிழர்களுக்குக் கிடையாது.

தமிழர்கள் சாதியடிப்படையில் பிளவுபட்டு ஒற்றுமையின்றி இருந்தமையும்,  தமிழகத்தின் ஆட்சியும், அதிகாரமும்  பல நூற்றாண்டுகளாக (இன்றும்கூட) தமிழரல்லாதோரின் ஆட்சியின் கீழ் இருந்ததாலும், அவர்கள் எத்தனையோ திருகுதாளங்களையும், அழிவுகளையும் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஏற்படுத்தி விட்டனர். அதைத் தான் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் "தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் அயலாரால் நேர்ந்த கேடுகளைத் தடுக்க இனவொற்றுமையில்லாது போனதே கரணியம்" என்று கூறினார்.

எடுத்துக்காட்டாக, எமது கண்முன்னாலேயே தமிழர்களின் நாட்டியமாகிய சதிராட்டத்தை, தமிழன் தஞ்சாவூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமிருந்து கற்ற கலாசேத்திரப் பார்ப்பனர்கள் அதற்கு பரதம் என்ற பெயரிட்டு, பவம், தாளம், ராகம் என்றெல்லாம் புதுக்கருத்தைக் கற்பித்து, பரதமுனி என்ற வடவனையும் தொடர்பு படுத்திக் கதை விட்டதை நாமறிவோம்.

இக்காலத்தில் இப்படி என்றால் 400 ஆண்டுகால வடுகர்களின் ஆட்சியில் பார்ப்பனர்களும், வடுகர்களும் ஒன்றிணைந்து எத்தனை சுத்துமாத்துக்களைச் செய்திருப்பார்கள். தமிழர்கள் பெருந்தன்மையாக ஞே என்று எருமை போலப் பார்த்துக் கொண்டிருப்பதால் தான் தமிழர்களிடமிருந்து கலை, கலாசாரம், இசை, நாட்டியம், மொழிச்சொற்கள்  எல்லாவற்றையும் இரவல் வாங்கியவர்கள், அவற்றில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு. அவை தம்முடையவை எனவும், தமிழர்கள் தான் அவற்றை எல்லாம் அவர்களிடமிருந்து இரவல் வாங்கியதாக வாதாடுகிறார்கள். இந்தக் குணத்தை இலங்கையில் சிங்களவர்களிடமும் காணலாம்.

தொல்காப்பியத்துக்கு விளக்கமளிக்குமளவுக்கு தமிழில் எனக்குப் புலமை கிடையாது ஆனால் நான் மட்டுமல்ல, என்னைப்போன்ற பல இக்காலத் தமிழர்கள் தொல்காப்பியர், ஒரு பிராமணன் என்ற புருடாவை நம்பவில்லை என்பதைக் காட்டுவது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் பல உள்ளன என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். தொல்காப்பியர் பிராமணர் என்பது வெறும் கட்டுக்கதை என்பதை மலேசியத் தமிழ் நெறி அறிஞர் ஐயா இர. திருச்செல்வனாரும் தனது சொற்பொழிவில் உறுதிசெய்கிறார். (காணொளி 14:00

தொல் +காப்பு + இயம் = தொல்காப்பியம் (விளக்கத்தை, தமிழர்களனைவரும் பார்க்கவேண்டிய காணொளியில் காண்க 10:25)


இணையத்தளங்களில் ஒரு சில தமிழெதிரி சமக்கிருதவெறியர்கள் தொல்காப்பியத்தில் காப்பியம் என்பது 'காவ்யம்' என்ற சமக்கிருதச் சொல்லின் திரிபு என்று வாதாடுவதைக் காணலாம் ஆனால்  "தொல்காப்பியம் என்பதற்குப் பழமையைக் காப்பது என்பது பொருள். தொல் என்பது பழமை. காப்பு-இயம்; காப்பதாகிய நூல். பழைய நூல்கள் பற்பல காரணச் செறிவால் மாண்டுபோதலும் இறந்தகால நிலைமையைக் காப்பதற்கு நூல் எழுதல் வேண்டியதாயிற்று. தமிழ் நாட்டைக் கொடுங்கடல் கொண்டது. மக்கள் நூலோடு மாண்டனர். எஞ்சியோர் எஞ்சிய உணர்ச்சி கொண்டு நூல்களைப் புதுப்பிக்குங்கால் கொள்கை மாறுகொண்டு கலாய்த்தனர். அவற்றிற்கெல்லாம் தலைகொடுத்து நிலைத்து நின்றது இந்நூல் ஒன்றே யாதலின், இது தொல்காப்பியமெனத் தகுவதென்க. தொல்காப்பியர் செய்தமையின் தொல்காப்பியம் என்னும் பெயருண்டாயிற்றோ, அன்றித் தொல்காப்பியஞ் செய்தமையின் தொல்காப்பியர் என்னும் பெயருண்டாயிற்றோ வென்பது ஆழ்ந்து கருதி அறுதியிடற்பாலது. தொல்காப்பியம் என்னும் நூற் பெயரி."

தொல்காப்பியம் கூறும் நான்மறை தமிழர்களின் மூலமறைகளே தவிர சமக்கிருத நான்குவேதங்கள் அல்ல.


பண்டைத் தமிழ் வேதங்கள் இருந்தன. இவை, மறை எனப்பட்டன. வேதம், மறை எனுஞ் சொற்களின் கருத்துக்கள் ஒன்றே. மறை எனுந் தமிழ்ச் சொல்லை மொழி பெயர்த்துத் தமது நாடோடிப் பாடல்களுக்கு நாமஞ் சூட்டினர். தமிழ் மறைகள் பற்றிய குறிப்புக்களை தமிழ் இலக்கியத்திற் காணலாம். இம்மறைகள் குமரி நாட்டின் மலைகளில் ஒன்றாகிய மகேந்திரத்தில் தோன்றியவை என மணிவாசகப் பெருமான் கூறுகிறார்.


மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”


கேவேட்டாகிய வாகமம் வாங்கியு
மற்றவை தம்மை மாந்திரத் திருந்து
உற்றவைம் முகங்களாற் பணித்த ருளியும்.”

தமிழ் மறைகள் முப்பொருள் உண்மை. வினைப்பயன், மறு பிறப்பு, கொல்லாமை முதலிய தத்துவ ஞானங்களைக் கூறும் நூல்களாகும். இந் நூல்கள் எமக்குக் கிடைத்தில. பிற்காலத்தில் எழுந்த திருக்குறளும் திருமந்திரமும் பண்டைத் தமிழ் மறைகளின் பொருள்களைக் கூறுகின்றன. திராவிட மறைகளைப் பிற்காலத்திற் பிராமணர் உபநிடதங்களாகவும் ஆகமங்களாகவும் வடமொழியில் எழுதினர்.

ஆலயவமைப்பு, கிரியை முறைகள், வழிபாட்டு முறைகள் முதலியனவற்றை ஆகமங்கள் கூறுகின்றன. ஆலய வழிபாடோ உருவ வழிபாடோ இல்லாத ஆரியர் இந் நூல்களை எவ்வாறு எழுதியிருக்கலாம்? வட மொழியில் இன்றுள்ள ஆகமங்கள் யாவும் திராவிட மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவையாகும். புராணங்களும் இதிகாசங்களும் பெரும்பாலும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட வரலாறுகளைக் கூறுகின்றன. இவை திராவிட மொழிகளில் இருந்திருக்கவேண்டும். பிராமணர் வடமொழியில் மொழி பெயர்த்தபோது, இவற்றைத் திரித்தும் பெருக்கியும் கட்டுக்கதைகளைச் சேர்த்து தமது கொள்கைகளைப் புகுத்தியும் எழுதினர். என்கிறார் ஈழத்துப் பொ.சங்கரப்பிள்ளை தனது A SHORT HISTORY OF THE TAMILS 
UP TO BRITISH PERIOD (நாம் தமிழர்) 


புராணக் கதைகளுக்குத் தத்துவப்பொருள் கூறப் புகுமிடத்து, உண்மையென நம்பப்பட்டு வரும் பல கதைகள் கற்பனையாகத் தோன்றுகின்றன. அகத்தியர் இமயமலையை அடுத்துள்ள நாடுகளினின்றும் பெயர்ந்து தமிழ்நாடு போந்தார் என்பதற்குப் புராணக்கதைகளும் அவற்றைத் தழுவி நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில் எழுதிய கதையுமன்றி வேறு பிரமாணங்கள் இல்லை. தமிழ் ஆரியப்போர் உண்டான காலத்து இதைப் போன்ற கதைகள் முளைத்தல் இயல்பு” 

 "ஆராய்ந்து பார்க்குங்கால் அகத்தியர் பரம்பரையொன்று இருந்ததென்றும் அப்பரம்பரையில் வந்தோரனைவரும் அகத்தியர் என்னும் பெயரையே வைத்துக்கொண்டனர் என்பதும், அவருள் ஒருவரே அகத்தியம் என்னும் நூலைச் செய்தவரென்பதும், சில உரைகளில் அகத்தியம் என்று காணப்படும் நூல் இயற்றிய அகத்தியனார் தொல்காப்பியனார்க்குப் பிந்தியவ ரென்பதும்........" -கா. நமச்சிவாய முதலியார்

அதங்கோட்டாசான் நான்மறை முற்றியவர். இந்நான்மறை என்பது நச் சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் எனும் கருத்தும் அண்மைக்கால ஆய்வுகளால் மாற்றம் பெற்றுள்ளன. இருக்கு, யஜுர், சாம, அதர்வணம் என நான்காக எண்ணப்படும் முறை மிகவும் பிற்கால வழக்காகும். சாணக்கியரின் பொருள்நூல், வேதங்கள் மூன்று மட்டுமே என்ற பொரு ளில் ''திரையீ'' எனக் குறிப்பிடுகின்றது. அதனால், நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் என்ற தொடர்கூட ஆய் வுக்குரியதாகிறது. மாகறல் கார்த்திகேய னார், 'நான்மறை என்பதற்கு மூலமறை' எனப் பொருள்கொள்வதையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும்.

மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி...

பனம்பாரனாரின் பாயிரம் அரிய கருத்துப்புதையலின் திறவுகோலாகும். அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங் கோட்டாசானுக்குத் தொல்காப்பியர், 'மயக்கம்தராத மரபினை உடைய தமிழ் எழுத்துமுறையினைக் காட்டினார்' எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும். வேதத்தில்வல்ல அதங்கோட் டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்துமுறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? இக் கேள்விக்கான நுட்பத்தை அறிஞர் டி.டி. கோசாம்பி விளக்கக் காணலாம். அவர் தம் நூலில்,
 'கி.மு. 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, தென்னிந்தி யாவில் இருக்குவேதப் பாசுரங்கள் சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக் குறிப் புரையும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் இருக்குவேத மூலத்தைச் செவிவழியே கேட்டு அப்படியே அசை உச்சரிப்புடன் ஒப்பிக்கும் வழக்கமே இருந்தது.... ஆனால் பொதுவாக இது எழுத்து வடிவத் தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட வில்லை.' எனக் குறிக்கின்றார். இருக்குவேதம் கி.மு. 14ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது தென்னாட்டில்தான் எனும் டி.டி. கோசாம் பியின் கூற்றைப் பனம்பாரனாரின் மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி என்ற கூற்றோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியும்?
வேதத்தை உச்சரிக்கும் முறை 
தமிழ் எழுத்துமுறையின் சிறப்பை அறியாத ஒருவருக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை, அவை பிறக்கும் இடம் ஆகியவற்றை விரிவாக விளக்கக்கூடிய வகையிலேயே தொல்காப்பியர் எழுத்த திகாரத்தின் பிறப்பியலை அமைத் துள்ளார். அதங்கோட்டாசான் வேதம் வல்லவராதலால் வேதத்தை ஒலிக்கும் உச்சரிப்பு முறையை எடுத்துக்காட்டி, அப்படி உச்சரிக்கும் முறைக்கும், தமிழ் எழுத்துக்களுடைய பிறப்பிடம், அவற்றின் மாத்திரை (உச்சரிக்கும் கால அளவு) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கக்கூடிய வகையில் இரு நூற்பாக்களை அமைத் துள்ளார். அவை, 
எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்(து)
அகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே - நூற்பா - 102.
அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே
- நூற்பா - 103. 
என்பனவாம். இந் நூற்பாக்கள் இரண்டும் சமற்கிருத ஒலிப்புமுறை, தமிழ் எழுத்து முறைக்கு மாறானது என்பதைப் புலப்படுத்துகின்றன. 'வேதத்தின் ஒலிப் புமுறை பற்றி நான் விளக்க வரவில்லை; மாறாகப் பொருண்மை தெரிகின்ற காற்றினால் ஆகிய தமிழ் எழுத்தின் (மாத்திரையின்) அளவினைக் கூறினேன்' என உறுதி செய்கின்றார். தொல்காப்பியத்தின் அந்நூற்பாக்களுக்கு 'வேதத்தின் ஒலிப்புமுறை பொருள்தெரியா நிலைமை ஆகலின் அவற்றிற்கு அளவு கூறமாட்டார்கள்' என்று உரையாசிரியர் இளம்பூரணார் தரும் விளக்கமும் எண்ணத்தகும். இதனால், அதங்கோட்டாசான் காலத்தில் வேதம் எழுத்து வடிவைப் பெறவில்லை என்பதும், அதன் காரணமாகவே தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழின் எழுத்துமுறையைக் காட்டினார் என்பதும் உறுதியாகின்றது.

Ref: தொல்காப்பியம் இருக்குவேதத்திற்குமுந்தையது! - முனைவர் . நெடுஞ்செழியன்
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=227&pno=133

4 comments:

நம்பள்கி said...

[[அத்துடன் "அந்த கண்ணகியே மதுரையை எரிக்கும்போது பார்பணர்களை விட்டுவிடு" என்று தான் கூறுகிறாள், தமிழர்களை விட்டுவிடு என்று சொல்லவில்லை” என்கிறார். இப்படியே போனால் கண்ணகி கூட ஒரு பாப்பாத்தி தான் என்று வாதாடினாலும் வாதாடுவார் போலிருக்கிறது.]]

அண்ணா!
கண்ணகி பாப்பாத்தி என்று சொல்வதற்காக செய்த இடைசெருகல் இது அல்ல...
என்னங்க நீங்க கூட இப்படி?

அண்ணா!
எவன் செத்தாலும், "பார்ப்பனர்கள் சாகக்கூடாது" என்று சூத்திரட்சி கண்ணகியின் வேண்டுதலின் காரணம்? அதாவது, தன் கணவ[னே] செத்தாலும், மன்னர் செத்தாலும், இன்ன பிற மக்கள் செத்தாலும்...ஒரு [சவுண்டி] பாப்பான் கூட சாகக்கூடாது...என்ற வேண்டுதல்...அதாவது மேலே சொன்ன இடை செருகல்!

In other words..இந்த இடை செருகல் செய்ததின் காரணம்?
பாப்பான் பாப்பன் தான்---அவன் எப்படியும் நல்லவன்; அவனை எப்படியும் காப்பற்றவேண்டும் என்று வேண்டிக்கொண்ட சூத்திர்த்ச்சி!

இப்படி சொல்லி சொல்லி தான் எல்லா சூத்திரப் பயல்களும்...பாப்பானுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்--அடிமையாகிறார்கள்!

அவன் சவுண்டி பாப்பானா இருந்தாலும்--நீ கீழ் மக்களே; அவன் கீழே நீ என்ற அசிங்கம்!

viyasan said...

அண்ணா நம்பள்கி!

கண்ணகியின் கூற்றில் எந்தக் குற்றமுமில்லை. ஏனென்றால் கண்ணகியின் காலத்தில் ஆதித்தமிழர்களாகிய தமிழ்ப்பறையர்கள் தான் 'பார்ப்போராக' இருந்தனர். ஆகவே அவர்களை விட்டு விடுமாறு கண்ணகி கூறியதாகவும் கொள்ளலாம். இதைத் தான் "பார்ப்பானுக்கு முந்தியவன் பறையன் கேட்பாரற்றுக் கீழ்சாதியானான்" என்ற பழமொழியும்.

"முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்" என்ற பாடலும்

"தக்கிய பறையெனவும் சிவசிவ
சாதிகளில் முதல் சாதியெனு
முக்கிய நூல்பிணைக்கும் மெய்ஞ்ஞான
மூர்த்தி சாம்பு வனான்காணும்" - திருவள்ளுவர் ஞான எட்டியான்

போன்ற பாடல்கள் கூறுகின்றன.

செங்கதிரோன் said...

I got some insight from your post regarding tolgappiyam . Thanks for clearing doubts .

Srinivasan Ramakrishnan said...

திருமந்திரம்/நான்காம் தந்திரம்/திருவம்பலச் சக்கரம்.
ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

திருமூலர் வேதங்கள்/ஆகமங்கள் சமஸ்க்ருதத்தில் தான் சொல்லப்பட்டவை என்று சொல்லும் பாடல்.

திரிபு அல்லது இடைசெருகல் என்று சொல்லிவிடலாமா?