Friday, June 10, 2016

திருமந்திரம் கூறும் 51 சொற்களும் தமிழே தவிர சமக்கிருதமல்ல. ஸ்ரீநிவாசன் ராமச்சந்திரன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.


There is something about the Tamil people you need to know, Your Excellency. To them their language is God. There are only a few cultures in the world that have such devotion to their language.  Do not make the Tamils feel as though they are second class citizens. Respect their religions and respect their language.

(Welcome address delivered by a Sri Lanka-born Tamil attorney when Sri Lanka president Mahinda Rajapaksa visited Houston, Texas in 2010)உண்மையில் சமக்கிருதத்தை ஆதரித்துக் காத்து வளர்த்தவர்கள் தமிழர்களும், தமிழ்மன்னர்களுமே. சமக்கிருதத்தை எழுதும் கிரந்த எழுத்துக்கள் தமிழ்நாட்டில் தமிழர்களால் உருவாக்கப்பட்டதெனவும் கூறுவர். தமிழர்கள் எவருக்குமே (நான் உட்பட) சமக்கிருதத்தில் எந்த வெறுப்பும் கிடையாது. எமது தமிழ் முன்னோர்கள் ஆதரித்து வளர்த்த ஒரு மொழியை இக்காலத்தில்  தமிழர்களாகிய நாங்கள் வெறுக்கும், ஒதுக்கும் அல்லது அதை எதிர்த்து இப்படியான பதிவுகளையிடும் நிலை ஏற்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் சமக்கிருதவாதிப் பார்ப்பனர்கள் தான். அவர்களில் சிலர் தமிழைத் தாழ்த்தி, தமிழுக்கு மேலாக சமக்கிருதத்தை உயர்த்துவதும், தமிழுக்குத் தாய் சமக்கிருதம் என்பதும், தமிழை நீசபாசை என்றதும், அத்துடன் தமிழ்மண்ணில் தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே தமிழ்நாட்டில். தமிழர்களின் கோயில்களில் தமிழுக்கு முன்னுரிமையளிப்பதை அவர்கள் மறுக்கும் வரையும் தமிழுணர்வுள்ள தமிழர்கள் சமக்கிருதத்தின் மீது தமது எதிர்ப்பைக் காட்டத் தான் செய்வார்கள். அதிலும் குறிப்பாக, சிலர் சமக்கிருத மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டுமெனும் அவர்களின் ஆவலை அல்லது அரிப்பைத் தமிழின் செலவில் இணையத்தளங்களில் சொறிந்துகொள்வதால் தான் என்னைப் போன்ற தமிழர்கள் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயமேற்படுகின்றது.
  
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்று தனது பிறப்பின் நோக்கமே இறைவனைத் தமிழில் பாடுவது தான் என்று கூறி, இறைவனருளால் தமிழ்மூவாயிரம் செய்த திருமூலர் தனது திருமந்திரத்தில் ஐம்பத்தொரு சொல்லில் வேதங்கள், ஆகமங்கள் எல்லாம் அடக்கம் என்றதை “திருமூலர் வேதங்கள்/ஆகமங்கள் சமஸ்க்ருதத்தில் தான் சொல்லப்பட்டவை என்று கூறுகிறார் எனவும், திருமந்திரத்தில் கூறப்படும் 51 சொற்கள் சமக்கிருதம்" எனவும் வாதாடிய  நண்பர் ஸ்ரீநிவாசன் இராமச்சந்திரனின் பேச்சு மூச்சைக் காணவில்லை, இருந்தாலும் அவர் இணையத்தளங்களில் எங்காவது ஒளித்திருந்து நிச்சயமாக இந்த விளக்கத்தைப் படித்துக் கொள்வாரென நம்புகிறேன். :-)"நம் திருமூலர் வட்டெழுத்துக் காலத்தவர் ஆனபடியால் தம்முடைய நூலில் தமிழ்மொழியிலுள்ள 16 உயிர்களைப் பற்றியும் 35 மெய்களைப்பற்றியும் கூறியுள்ளார். அப் பாடல்கள் வருமாறு :

"ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைந்து
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலைஇரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே." 

"விந்துவி லும்சுழி நாதம் எழுந்திட
பந்தத் தலைவி பதினாறு கலையதாக்
சுந்தர வாகரம் காலுடம் பாயினாள்
அந்தமு மின்றியே ஐம்பத்தொன் றாயதே."

"ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்துஆ கமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே."
ஆதலின், திருமூலர் வட்டெழுத்துக் காலத்தவர் என்று கூறுவதில் தடை ஒன்றுமில்லை. அவர் சதுர எழுத்துக் காலத்தவரானால் 12 உயிர்களையும் 18 மெய்களையுமே பற்றிப் பாடியிருப்பார். 
திருமூலர் கூறியது ஆரிய மொழியின் திரிபாகிய சமஸ்கிருதத்தின் எழுத்துக்களையே ஒழிய தமிழ்எழுத்துக்களை அல்ல என்பாரும் உண்டு. அவர்கள் எல்லாரும் கூர்ந்து ஆராய வேண்டியது ஒன்று உண்டு. அஃதாவது,
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே."
என்று கூறியிருக்கும் அடிகளை நோக்குக.
 இறைவன் அருளால் தமிழ் மூவாயிரம் செய்தவர் வேறு மொழியின் எழுத்துக்களைக் கூற நியாயம் இல்லை. மேலும் திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பிகள், 
". முழுத்தமிழின்படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டென்னுச்சிஅடிமன்ன வைத்த
பிரான்மூல னாகின்ற அங்கணனே." 
என்று திருவந்தாதியில் திருமூலரைப்பற்றிக் கூறுவதை நோக்குங்கள். முழுத்தமிழின்படி மன்னும் வேதத்தின் சொற்படி பாடியதாகக் கூறுகிறார். ஆதலின், திருமூலர் வேறு மொழிகளின் எழுத்துக்களைப் பற்றி முழுத்தமிழ் நூலாகிய தமிழ் மூவாயிரத்தின்கண் கூற ஒரு சிறிதும் நியாயம் இல்லை. ஆகையால், திருமூலர் தமிழுக்கு வட்டெழுத்துக் காலத்தவர் என்பது நிச்சயம். 
தமிழர்கள் தமிழையும் சரியாகப் படிப்பதில்லை. வடமொழியும் கற்பதில்லை. ஆங்கிலம் முதலிய பிற மொழிகளையும் பயில்வதில்லை. ஆதலின், தமிழர்களிடையே எத்தகைய தவறான கொள்கைகளையும் நிலைநாட்டலாம் என்பது சிலருடைய கொள்கையா யிருக்கிறது. திருமூலருடைய காலமாகிய இராமாயண காலத்தில் இமய முதல் குமரி வரையும் அவ் வெல்லைக்கு அப்பாலும் தமிழே பேசப்பட்டது என்பதை உணர்வார், அவ்வாறு கூறமாட்டார்கள்.  
 வேதங்கள் என்ற வரி எந்த பழந்தமிழ்ப் பாடலிலோ அல்லது தேவாரங்களிலோ வந்தால் அதன் கருத்து இக்காலத்தில் வடமொழியிலுள்ள நான்கு ஆரிய வேதங்கள் என்று நினைத்துக் கொள்ளுமளவுக்கு இக்காலத்தில் நாம் தமிழர்கள் பலர் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றோம். ஆனால் வேதம் (மறை) என்பதே தமிழ்ச் சொல் தான். தமிழிலிருந்து சமக்கிருதத்தால் இரவல் வாங்கப்பட சொற்கள். தொல்காப்பியர் காலத்திலேயே தமிழில் அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றைக் கூறும் மூலத்தமிழ்நான்மறைகள் இருந்தன. ஆகமங்களும் வேதங்களும் சமக்கிருதத்தில் தான் சொல்லப்பட்டவை என்பது சமக்கிருதவாதிகளின் வாதமாகும், ஆனால்:
 திருமூலர் ஒன்பது ஆகமங்களின் சாரங்களை ஒன்பது தந்திரங்களாகத் தமிழ் மூவாயிரத்தில் பாடினார். இதனை,
"நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரன்அடி நாடொறும்

சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற் றேனே."
 என்ற தற்குறிப்புப் பாயிரச் செய்யுளாலும்,
"வந்த மடமஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்

சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே."
 என்ற சிறப்புப் பாயிரச் செய்யுளாலும் அறியலாம். 
தமிழ்மொழியில் வேதம் சூத்திரமும், ஆகமம் அதன் பாடியமும் போன்றவை. வேதம் பொது. ஆகமம் சிறப்பு. இதனை,
"வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனூல்ஓதும் சிறப்பும் பொதுவும்என் றுன்னுகநாதன் உரையவை நாடில் இரண்டந்தம்பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே."
என்ற தமிழ் மூவாயிரச் செய்யுளால் அறியலாம். ஆரிய வேதம் ஆகமத்தை ஒப்புக்கொள்ளவில்லை. தற்காலம் கிரந்த எழுத்துக்களிலும் நாகரத்திலும் உள்ள ஆகமங்கள் எல்லாம் தமிழ் ஆகமங்களினின்றுமே மொழி பெயர்த்தவையும், வடமொழி கற்ற தமிழர், தமிழ் ஆகமங்களின் சாரங்களை வடமொழியாளர்க்கும் அறிவுறுத்துவான் கருதி எழுதப்பட்டவையுமே தவிர வேறு இல்லை. இவ்வுண்மையைக் காமிகம் முதலிய ஆகமங்கள் பவுஷ்கரம் முதலிய உப ஆகமங்களினுடைய முகவுரையிலிருந்து அறியலாகும்.  

மேலும், திருமுறைகளை வகுத்த நம்பியாண்டார் நம்பிகள் "முழுத் தமிழின்படி மன்னும் வேதத்தின் சொற்படியே" நம் திருமூலர் பாடினதாகத் தம் அந்தாதியில் கூறியுள்ளதையேனும் அனைவரும் கூர்ந்து நோக்கினால் உண்மை வெளியாகும். மேலும், நம் சேக்கிழார் பெருமான் "ஒன்றவன் தானே எனவெடுத்துத்" திருமூலர் தம் நூலைத் தொடங்கினார் எனப் பாடியுள்ளார். "ஒன்று" என்ற சொல்லில் தமிழுக்கே சிறப்பான '' கரம் உள்ளதால் அச்சொல் - வேறு மொழியாயிருக்க நியாயம் சிறிதும் இல்லை.  ஆதலின் தமிழ் மூவாயிரம் என்னும் நூலானது மொழி பெயர்ப்பு நூல் அன்று என்பது காட்டப்பட்டது.  
இராமாயண காலத்தில் அயோத்தியிலும், கோசலத்திலும், கிட்கிந்தையிலும், இன்னும் வடநாட்டில் பல இடங்களிலும் தமிழ்மொழி பொது மொழியாக இருந்ததென்று திருவாளர், திரு நாராயண அய்யங்கார் 1939-ஆம் வருடச் 'செந்தமிழ்' பத்திரிகையில் "வன்மீகரும் தமிழும்" என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். ஆதலின் தமிழ்மொழி இராமாயண காலத்தில் வட பெருங்கல்லில் இருந்து தென்குமரியாறுவரை பரவியிருந்ததென்று அறியலாம். அல்லாமலும் அக்காலத்தில் தமிழ்மொழியானது 5 கண்டங்களிலும் பரவி இருந்ததாக அறிகிறோம். தமிழ்மொழியின் இந்த நிலையைத்தான்,
"தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழு மனமும்எம் மாதி அறிவும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே." 
என்று திருமூலர் கூறியுள்ளார். தமிழ் மண்டலம் என்பதற்குச் சில பஞ்ச திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டிரம் வழங்கும் மண்டலங்கள் என்றும்; சேர, சோழ, பாண்டிய, கொங்கு, தொண்டை மண்டலங்கள் என்றும் பொருள் செய்து இடர்ப்படுவார் ஆயினர்.  
ஈண்டு மண்டலம் என்று திருமூலர் கூறியது ஆசியா - ஐரோப்பா - ஆபிரிக்கா - அமெரிக்கா - ஆஸ்திரேலியாக் கண்டங்களையே ஆகும். மண்டலம் = மண் + தலம் எனப் பிரிக்க. அப் பாட்டிலேயே, தமிழ்நாட்டுச்சித்தர் குழாஅங்கள் அக் கண்டங்களிலே "ஞானம் உமிழ்வதுபோல உலகம் திரிவார்" எனக் கூறி மண்டலம் என்பது உலகம் (கண்டங்கள்) என்று விளக்கியுள்ளார்.  
சுத்த தத்துவத்தினின்று அசுத்த தத்துவமும், அசுத்த தத்துவத்தினின்று பிரகிருதி தத்துவமும் தோன்றுகிறபடியால், சுத்த தத்துவத்திலேயே முத்தமிழ் வேதம் தோன்றியதெனச்,"சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்." என்று திருமூலர் கூறியுள்ளார். இதனானே, அக் காலத்தில் இமயமுதல் குமரிவரை, அங்கம் முதல் காந்தாரம் வரை வழங்கிய 18 மொழிகளும், தமிழினின்றுமே பிறந்தன என்பது வெள்ளிடைமலை. பதினெண் மொழிகளாவன : 
"சிங்களம், சோனகம், சீனம், சாவகம்,
கொங்கணம், குடகம், கொல்லம், துளுவம்,
வங்கம், கடாரம், மகதம், கோசலம்,
கங்கம், காச்மீரம், கலிங்கம், நேபாளம்,
அங்கம், காந்தாரம் ஆகிய மொழிகள்  

தங்கி வளரும் தமிழ்நா டென்ப." 
என்னும் பாட்டால் அறியலாம். அக் காலத்தில் பண்டிதர்கள் எல்லாம் 18 மொழிகளிலும் வல்லுநராய் இருந்தனர். இதனையே,
 "பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்கண்டவர் கூறும் கருத்தறிவார் என்கபண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்அண்ட முதலா அரன்சொன்ன வாறே."
என்று நம் மூலர் கூறியுள்ளார். தமிழ் மொழியை "மதுரம் வாக்யம்" (- இனியமொழி - தமிழ் மொழி) என்றும், அதுதான் 'மனிதர் மொழி' என்றும், வான்மீகர் இராமாயணத்தில் கூறுகிறதாகச் 'செந்தமிழ்' பத்திராசிரியர் கூறுகிறார் (Vide செந்தமிழ் Vol. 36 No. 7). "தமிழ் மாநுஷ பாஷையென்று பொதுப்படக் கூறப்பட்டமையால், அக் காலத்தில் மானிடர் வாழும் இடம் எங்கும் தேச பாஷையாகத் தமிழ்மொழி நடைபெற்று இருந்த தென்று அறியத்தக்கது." என்றும் பத்திராசிரியர் கூறுகின்றார்.    
மேலும் செந்தமிழ் Vol. 36 No. 8 - இல் பக்கம் 341 - இல் "மானிடர்க்கும் பிறப்புரிமையாயுள்ள பாஷை ஒன்று இருக்க வேண்டுமன்றே! அது தமிழ்மொழி என்றும், பின்பு செயற்கையாயுள்ள பாஷை தேவபாஷை முதலிய பிறமொழிகள் என்றும் கொள்ளத்தகும்" என்றும் கூறுகிறதால் ஐந்து கண்டங்களிலும் உள்ள மானிடர் எல்லாருக்கும் பிறப்புரிமையாயுள்ள மொழி தமிழ்மொழியேயாகும்.  
ஆதலின், திருமூலர் காலத்தில் தற்காலம் 'இந்தியா' என்று வழங்கும் தமிழ்நாடுகளில் எல்லாம் தமிழ்மொழியே பெருவழக்காக இருந்தது என்பது பெற்றாம்.  
அரப்பா - மொகஞ்சதாரோ நாகரிகம் எல்லாம் தமிழில் உருவ எழுத்துக் காலமாகும். அக் காலக் கடைசியில் மண் மாரி பெய்து, பெரிய நகரங்கள் எல்லாம் அழிந்து, பெரிய மாறுதல் உண்டாயிற்று. அதன் பிறகு, தமிழில் கோல் எழுத்துக் காலம் ஏற்பட்டது. அக் காலத்திலேதான் ஆரியர் சிந்துநதி தீரத்தில் குடி ஏறினார்கள். பிறகு இருக்க இருக்க தமிழர்க்கும் ஆரியர்க்கும் சச்சரவுகள் ஏற்பட்டன. ஆரியர்கள் தமிழர்களை வென்று, தமிழர் நாடு நகரங்களை அழித்து, பல தமிழ் அரசர்களைத் தம் வயப்படுத்தி, எதிர்த்தோரை விந்தத்துக்குத் தெற்கே விரட்டி விட்டார்கள். ஆரிய மொழிக்கு எழுத்தில்லாததால் தமிழ்க் கோல் எழுத்துக்களைத் தங்கள் மொழிக்குச் சில மாறுதல்களுடன் நெடுங்கணக்காக வகுத்துக் கொண்டார்கள். சிந்துநதிப் பக்கத்திலும், கங்கை பாயும் நாட்டிலும் தமிழர் நாகரிகம் பாழ்படுத்தப்பட்டது என்பதை ஆரியர்களுடைய இருக்கு வேதத்தைப் படிப்பவர் அறியாமல் இரார்.
 ஆரியர்களுக்கு விந்தியமலைக்கு வடக்கே உள்ள நிலங்கள் முழுவதையும் விட்டுவிட்டு, தமிழர்கள் தெற்கே தக்காணத்துக்கு வந்து தம் இனத்தவருடன் கலந்துகொண்டார்கள். அக்காலத்திலேதான் தமிழுக்கு வட்டெழுத்துக் காலம் ஆரம்பமாயிற்று. வட்டெழுத்துக் காலக் கடைசியிலேதான் இராமாயண காலம். ஆர்யாவர்த்தத்தை ஏற்படுத்திய பிறகு பல ஆண்டுகள்வரை ஆரியா தக்கணத்துக்கு வராமல் இருந்தார்கள். ஆரிய இருடிகள் ஆரியரைத் தக்கணத்துக்குச் செல்லக்கூடாதென்று தம்முடைய ஒழுக்க நூல்களில் விதித்தும் இருந்தார்கள். 
ஆபஸ்தம்பர் - போதாயனர் முதலியோர் சூத்திரங்களே இதற்குச் சான்று பகரும். 

(1) நூற்பயன்: 
 ஒரு நூலின்கண் நூற்பயனைக் கூறவேண்டும் என்னும் இலக்கண விதியின்படி, நம் திருமூலரின் மாணாக்கர்கள் கூறிய சிறப்புப் பாயிரத்தில் நூற்பயனும் கூறப்பட்டிருக்கிறது. அப்பாடல்களாவன: 
 "மூலன் உரைசெய்த மூவா யிரம்தமிழ்ஞாலம் அறியவே நந்தி யருளதுகாலை எழுந்து கருத்து அறிந்து ஓதிடின்ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே." "வைத்த பரிசே வகைவகை நன்னூலின்முத்தி முடிவிது மூவா யிரத்திலேபுத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொதுவைத்த சிறப்புத் தருமிவை தானே."வந்த மடமேழும் மன்னுஞ்சன் மார்க்கத்தின்முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைதந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே.
ஏழு திருமடங்களும் நிலைபெற்ற நன்னெறியினைப் போதிப்பனவே, அவற்றுள் சிறந்து காணப்படுவது திருமூலர் திருமடமாகும். அதன் வழி இவ் வொன்பது தந்திரமும் அவற்றிற்குரிய மூவாயிரம் திருமந்திரமும் வெளிப்போந்தன. இவற்றைத் திருமூலராகிய சுந்தரர் அருளிச் செய்தனர். அதனால் இதற்குச் சுந்தர ஆகமம் எனவும் ஒரு திருப்பெயருண்டு. 
 கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்பலங்கொள் பரமானந் தர்போக தேவர்நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.
இறைவன் திருவருளால மெய்யுணர்வு கைவந்த வழிவழித் தவத்தோர் காலாங்கர், அகோரர், மாளிகைத்தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகதேவர், திருமூலர் என ஏழு தமிழ் முனிவராவர். 

 திருமந்திரத் தொகைச் சிறப்பு:  
மூலன் உரைசெய்த முப்ப துபதேசம்மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்மூலன் உரைசெய்த மூன்றுமொன் றாமே. 
 
 திருமூல நாயனார் அருளிச்செய்த திருப்பாட்டுக்கள், முப்பது உபதேசம், முந்நூறு மந்திரம், மூவாயிரம் தமிழ் ஆகிய இம் மூன்றும் ஓர் உண்மையினை உரைத்தருளும் கருத்தொன்றாகும். மேலும் இம் மூவாயிரத்தின்கண் ஆயிரத்துக்குப் பத்து விழுக்காடு உபதேசம் எனவும், நூற்றுக்குப் பத்து விழுக்காடு மந்திரமெனவும் ஏனையவை இவற்றை விளக்கும் விரிவெனவுங் கொண்டு ஆய்தலும் ஒன்று."நன்றி: மேலேயுள்ள கட்டுரையின் பகுதிகள் http://www.tamilvu.org/ இலிருந்து எடுக்கப்பட்டவை.

4 comments:

Srinivasan Ramakrishnan said...

நான் பதிவு செய்த பல கருத்துக்களில் சிலவற்றை இந்த பக்கத்தில் பிரசுரிக்காமலும், தாமதமாக பிரசுரித்தும் தில்லுமுள்ளு செய்யும் நீங்கள் நான் ஒருநாள் தாமதமாக கருத்து சொல்வதற்குள் நான் ஓடி விட்டாதாக முடிவெடுத்துவிட்டால் எப்படி?

உங்களுக்கு என்ன பதில் சொல்வது, எப்படி துவக்குவது என தெரியவில்லை, காரணம் உங்கள் பதிவில் அத்தனை திருப்பங்கள், குழப்பங்கள்.முடிந்த வரையில் குழப்பி உள்ளீர்கள்.

சமஸ்க்ருதத்தை இத்தனை நாள் ஏசிவிட்டு இன்று நாங்கள் சமஸ்க்ருதத்தை வெறுக்கவில்லை, எங்கள் முன்னோர்கள் வெறுக்கவில்லை, பாதுகாத்தார்கள், வளர்த்தார்கள் என்று left -இல் சிக்னல் போட்டு, ரைட் -இல் கையை காட்டி நேராக சென்று விட்டீர்கள்.

எனவே ரொம்பவே குழப்பத்தில் ஆழுந்து உள்ளீர்கள் என்று தெள்ள தெளிவாக தெரிகிறது.
நான் பதிலுக்கு பதில் வாதம் செய்ய தயாரில்லை காரணம் தூங்குபவனை கூட எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது.

இன்னொரு காரணம் துவக்கத்திலேயே நீங்கள் உங்கள் திருவாயாலே உண்மையை ஒப்பு கொண்டு விட்டர்கள் சமஸ்க்ருதம் தமிழ் மன்னர்கள் ஆதரித்து வளர்த்த மொழி என்று.
மொத்தத்தில் சமஸ்க்ருதம் அயல் மொழி அல்ல பிராமணர்களுக்கு மட்டுமேயான மொழி அல்ல என்பது தெரிகிறது.

எனவே நான் சுருங்க கேட்கிறேன்
திருமூலர் இந்த பாடலில்
ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்துஆ கமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே. என்று தான் சொல்கிறார்.
ஆனால் 51 எழுத்து தமிழ் என்று உரை ஆசிரியர்தான் சொல்கிறார். திருமூலர் சொல்லவில்லை. அவர் தமிழில் தான் 51 எழத்துக்கள் இருந்தன என்று நீங்கள் சொல்வதுதான் திரிபு, இடைசெருகல்.

ஒரு 3 திருமந்திர பாடல்களை சொல்லிவிட்டு ஆக திருமூலர் வட்டெழுத்துக் காலத்தவர் என்று கூறுவதில் தடை ஒன்றுமில்லை. திருமூலர் வட்டெழுத்து காலத்தவர் என்று நீங்களாகவே முடிவெடுத்து விட்டீர்கள்.
இதுதான் உச்சகட்ட காமெடி.

இந்த 3 பாடல்களில் அவர் எங்கேயாவது தமிழ் எழுத்து வட்டெழுத்து என்று சொல்லி உள்ளாரா?
-----------------------------------------------------
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே

இங்கே திருமூலர் ஆரியமும் தமிழும் என்று சொல்லியுள்ளாரே. ஆரியர்கள் விரட்டி விட்டார்கள், தெற்கே வந்து இனத்தவரோடு சேர்ந்து ஆகிவிட்டது. வட்டெழுத்து முறை தோன்றி விட்டது. பிறகு மூலர் ஆரியம் என்று சொல்கிறாரே அது என்ன ஆரியம்? ஆரியர்கள் பேசிய மொழியா?.

//ஆரியர்கள் வந்தார்கள், தமிழர்களை விரட்டி விட்டார்கள், தமிழர்கள் தெற்கே தக்காணத்திற்கு வந்து தம் இனத்தவருடன் சேர்ந்து கொண்டார்கள்.//
அப்படியானால் தெற்கே தக்காணத்தில் இருந்தவர்கள் தான் தமிழர்கள் என்று போல் உள்ளது உங்கள் கருத்து.

//அப்பொழுதான் வட்டெழுத்து தோன்றியது. வட்டெழுத்து காலம் கடைசியில் தான் ராமாயணம் காலம்.//
வட்டெழுத்து காலம் என்றால் அது எப்போது?
தொல்காப்பியருக்கு முன்பா? இல்லை பிறகா?
தமிழில் 51 எழத்துக்கள் இருந்தன என தொல்காப்பியம் சொல்கிறதா?
அல்லது வேறு ஏதேனும் சங்க இலக்கிய நூல்களில் சொல்லப்பட்டு உள்ளதா?

viyasan said...

//நான் பதிவு செய்த பல கருத்துக்களில் சிலவற்றை இந்த பக்கத்தில் பிரசுரிக்காமலும், தாமதமாக பிரசுரித்தும் தில்லுமுள்ளு செய்யும் நீங்கள் நான் ஒருநாள் தாமதமாக கருத்து சொல்வதற்குள் நான் ஓடி விட்டாதாக முடிவெடுத்துவிட்டால் எப்படி?///

உண்மை. நான் வெளியிடவில்லை. ஏனென்றால் உங்களின் இந்துத்துவா, வடமொழி பற்றிய பார்ப்பனப் புளுகுகளையும் வெளியிட்டு உங்களின் பிரச்சாரத்துக்கு உதவுவதற்கு நான் வலைப்பதிவு வைத்திருக்கவில்லை. நீங்கள் சமக்கிருதம் பற்றி பல மாதங்களுக்கு முன்பு எழுதியவற்றையே நான் வெளியிடவில்லை. உங்களின் வலைப்பதிவில் யாரவது வந்து பார்ப்பன எதிர்ப்பு, திராவிட ஆதரவுப் புழுகுகளை அவிழ்த்து விட்டால் நீங்கள் அவற்றை வெளியிட மாட்டீர்கள் அது போல் தான் இதுவும். ஆனால் உங்களின் பார்ப்பனப் பொய்கள் அதிகமாகி, தொல்காப்பியரையும் ஒரு பிராமணன் என்று கூறிய பின்பு தான், உங்களின் சுத்துமாத்துக்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதால் உங்களின் தொல்காப்பியர் பற்றிய பதிலை வெளியிட்டேன். ஏதோ பெரீய புத்திசாலி மாதிரி திருமூலருக்கு ஆதாரமாக ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரைக் காட்டி விட்டு பின்பு பதிலே கூறாமல் ஓளிந்து கொண்டால், ஓடிவிட்டதாகத் தான் முடிவெடுக்க முடியும் அல்லவா?


//சமஸ்க்ருதத்தை இத்தனை நாள் ஏசிவிட்டு இன்று நாங்கள் சமஸ்க்ருதத்தை வெறுக்கவில்லை, எங்கள் முன்னோர்கள் வெறுக்கவில்லை, பாதுகாத்தார்கள், வளர்த்தார்கள் என்று left -இல் சிக்னல் போட்டு, ரைட் -இல் கையை காட்டி நேராக சென்று விட்டீர்கள். ///

குழம்பியது நானல்ல, நீங்கள் தான். நான் உங்களின் ‘சமஸ்கிருதத்தின் விசிறி அல்ல. நான் கூறியதைப் புரிந்து கொள்ளாமல் பிதற்றுகிறீர்கள் போல் தெரிகிறது. நான் கூறியதன் கருத்து என்னவென்றால், சமக்கிருதம் தமிழர்கள் வளர்த்து விட்ட மொழி, அது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல், வளர்த்து விட்ட தமிழையே உதைக்கிறது, நீசபாசை என்கிறது. சமஸ்கிருதம் தமிழுக்கு கீழே, ஒரு ஓரமாக இருந்து விட்டுப் போவதில் தமிழர்களுக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. ஆனால் பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்தை உயர்த்தி தமிழை, அதுவும் தமிழ்நாட்டிலேயே கீழே தள்ளி, அவமதிப்பதாலும், தமிழ் தான் சமக்கிருதத்திலிருந்து எல்லாவற்றையும் இரவல் வாங்கியதாகக் கதை விடுவதாலும் தான், தமிழர்கள் சமக்கிருதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளார்கள். இந்த தமிழ்-சமக்கிருதப் போருக்கு உங்களைப் போன்ற சமக்கிருதவெறி பிடித்த பார்ப்பனர்கள் தான் காரணம் என்பது தான் என்னுடைய கருத்து. எங்களின் தமிழ்முன்னோர்கள் போட்ட பிச்சையில் வளர்ந்த சமக்கிருதத்துக்கு நாங்களும் பிச்சை போடத் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழ் மண்ணுக்கு அரசியாகிய தமிழை, அண்டிப் பிழைக்க வந்த சமக்கிருதம் அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. அது தான் உண்மையான தமிழர்களின் நிலைப்பாடு.

viyasan said...

//51 எழுத்து தமிழ் என்று உரை ஆசிரியர்தான் சொல்கிறார். திருமூலர் சொல்லவில்லை. அவர் தமிழில் தான் 51 எழத்துக்கள் இருந்தன என்று நீங்கள் சொல்வதுதான் திரிபு, இடைசெருகல்.///

நீங்கள் எந்த ஆதாரமும் காட்டாமல் அவை சமஸ்கிருதச் சொற்கள் என்று கூறிய போது மட்டும் திருமூலர் அவை சமஸ்கிருதச் சொற்கள் என்று கூறியிருந்தாரா? :-)

//ஒரு 3 திருமந்திர பாடல்களை சொல்லிவிட்டு ஆக திருமூலர் வட்டெழுத்துக் காலத்தவர் என்று கூறுவதில் தடை ஒன்றுமில்லை. திருமூலர் வட்டெழுத்து காலத்தவர் என்று நீங்களாகவே முடிவெடுத்து விட்டீர்கள். இதுதான் உச்சகட்ட காமெடி. ///

காமெடி என்னவென்றால், தொல்காப்பியர் தான் ஒரு பிராமணன் என்றோ அல்லது அகத்தியரைப் பற்றியோ தொல்காப்பியத்தில் எதுவுமே கூறாத போதிலும், பார்ப்பன உரையாசிரியரின் இடைச்செருகலை அப்படியே ஏற்றுக் கொண்டு, இது காலம் வரை அவரைப் பார்ப்பானாக்கி, ஒரு 'ஆரிய மைந்தன்' தான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தான் என்று நீங்கள் இவ்வளவு காலமும் கதை விட்ட போது மட்டும் உரையாசிரியர் சொல்வதை அப்படியே மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ்செய்யுமாறே என்று இறைவனருளால் தமிழ் மூவாயிரம் பாடிய திருமூலர் அந்த தமிழ் மூவாயிரத்தில் தமிழைப் புகழ்வதற்குப் பதிலாக இன்னொரு மொழியை புகழந்து பாடினார் என்று நீங்கள் கூறும் போது, நாங்கள் அது உண்மையல்ல என்று எதிர்த்தால் மட்டும், திருமூலர் அப்படிச் சொன்னாரா என்று கேள்வி கேட்கும் கோணங்கித் தனத்தைத் தான் 'பிராமணப்புத்தியைக் காட்டுகிறான்' என்பார்கள் இலங்கையில். சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதியா?

நீங்கள் வடமொழிமூவாயிரம் பாடி விட்டு, தமிழ்ச் சொற்கள் தான் அந்த வடமொழி மூவாயிரத்தில் கூறிய எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று கூறுவீர்களா? ஒரு அடி முட்டாள் கூட அப்படிச் செய்ய மாட்டான்,///இந்த 3 பாடல்களில் அவர் எங்கேயாவது தமிழ் எழுத்து வட்டெழுத்து என்று சொல்லி உள்ளாரா? ///

ஒழுங்காக மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். அந்தப் பாடல்களில் வட்டெழுத்தைப் பற்றி எதுவுமிருப்பதாக யாரும் கூறவில்லை. வட்டெழுத்துக் காலத்தில் தமிழில் 16 உயிர்களும் 35 மெய்களும் இருந்தன, ஆகவே திருமூலர் வட்டெழுத்துக் காலத்தவராக இருக்க வேண்டுமென்கிறார் கட்டுரையாசிரியர். உங்களுக்குக் கொஞ்சம் விளக்கம் குறைவு, ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள்.//இங்கே திருமூலர் ஆரியமும் தமிழும் என்று சொல்லியுள்ளாரே.///

இது தான் பார்ப்பன இடைச்செருகலுக்கு அருமையான ஆதாரம். பார்ப்பனர்கள் தமக்குச் சாதமாகவும், சமக்கிருதத்தை தமிழுக்கு இணையாக, அல்லது மேன்மையாக ஆக்கும் வகையில் செய்த இடைச்செருகல்கள், தொல்காப்பியத்தில் மட்டுமன்றி சங்க இலக்கியங்களிலேயே உண்டு. பக்தி இலக்கியங்களை விட்டு வைத்திருப்பார்களா?


//அப்படியானால் தெற்கே தக்காணத்தில் இருந்தவர்கள் தான் தமிழர்கள் என்று போல் உள்ளது உங்கள் கருத்து.///

தமிழ் தான் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி, தமிழர்கள் இந்தியா முழவதும் பரவலாக வாழ்ந்து வந்தனர் என்பதை அண்ணல் அம்பேத்கார் உட்பட பல அறிஞர்கள் கூறியுள்ளனர். போய்படித்துப் பாரும். :-)

sivaje36 said...

அருமை உங்க பதில் . சந்தர்ப்ப வாதி சமஸ்க்ருத பற்றாளன் Srinivasan Ramakrishnan இது போதும் என்று நினைக்குறேன்.