Saturday, May 14, 2016

சீமானுக்கு திராவிடர் கழகம் ‘எச்சரிக்கை' - தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்,


"தந்தை பெரியாரை தொடர்ச்சியாக இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடலூரில் கண்டனப் போராட்டம் நடத்தினர். மேலும் இக்கூட்டத்தில் பேசிய த.பெ.தி.க நிர்வாகிகள், தந்தை பெரியாரையும் திராவிடர் இயக்க சித்தாந்தத்தையும் இனியும் சீமான் இழிவாகப் பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்."


முருகன் தமிழர்களால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட தமிழர்களின் முப்பாட்டன் என்ற தமிழர்களின் நம்பிக்கையை  கேலி செய்யும் வடுகர்களும்,  உலகத்தமிழர்கள், அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் கங்கை முதல் கடாரம் வரை வென்று தமிழர்களின் புலிக்கொடியை நாட்டி, தமிழர்களின் வரலாற்று எதிரிகளாகிய சிங்களவர்களை அழித்து, தமிழர்களின் வீரவரலாற்று நாயகன் எனப் பெருமைப் படுவது மட்டுமன்றி, அந்த திருமுறை கண்ட சோழனுக்கு இலங்கையின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகிய திருக்கேதீச்சரத்தில் தனிச் சன்னதி அமைத்து போற்றுகின்ற மாமன்னன் ராஜராஜ சோழனை இழிவுபடுத்திப் பேசுகின்றவர்களும்,  அக்கால நாட்டு நடப்புகளை இக்காலத்துடன் ஒப்பிட்டுத் திட்டமிட்டு வரலாற்றைத் திரித்து ராஜராஜசோழனை மட்டும் வசைபாடுகிறவர்களுமாகிய பெரியாரிஸ்டுகளும், திராவிடவீரர்களும் அதற்காக உலகத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்காத போது, பெரியார் ஈவேரா அவர்களின் பெரியாரிய, திராவிடக் கொள்கைகள் தமிழினத்துக்கு விளைத்த தீங்குகளைத் தமிழர்களுக்கு எடுத்துரைக்கும் தமிழன் சீமானுக்கெதிராக  போராட்டம் நடத்துவதும், இவ்வளவு வெளிப்படையாக கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பயமுறுத்துவதும் தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். அதிலும் ஒரு பெரியாரிஸ்டு 'சீமானை உதைப்போம்' என்று வெளிப்படையாகவே கூறுகிறார். அவர் உண்மையிலேயே தமிழச்சியா அல்லது வடுகச்சியா என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம். :-)

ஆனானப்பட்ட மாமன்னன் ராஜராஜசோழனை மட்டுமன்றி, தமிழர்கள் எவரை உயர்வாக எண்ணுகிறார்களோ அவர்களை எல்லாம் இழிவுபடுத்துவதும், கொச்சைப்படுத்துவதையே தொழிலாகக் கொண்ட பல திராவிடர்களும், பெரியாரிஸ்டுகளும் வலைப்பதிவுகளிலும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் உள்ளனர் என்பதை தமிழர்கள் அனைவரும் அறிவர். அவர்கள் எல்லாம் தமிழர்களின் மனதைப் புண்படுத்துவதற்காக மன்னிப்புக் கேட்கிறார்களா, இல்லையே. அப்படியிருக்க சீமானை மட்டும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பது வெறும் கோமாளித்தனமாகும். 

தமிழில் தேவாரத்தின் கருத்தைக் கூடச்  சரியாகப் புரிந்து கொள்ளாமல், பெரியாரிஸ்டுகள் மட்டுமன்றி பெரியாரும் கூட தமிழர்களின் தேவாரத்தைக் கொச்சைப்படுத்தியும், தமிழிலக்கியங்களை இழித்தும் பழித்தும் பேசியுள்ளனர். அதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்குமாறு தமிழர்கள் அவர்களிடம் கேட்பதில்லையே. அப்படியிருக்க பெரியாரையும் திராவிட சித்தாந்தத்தையும் விமர்சித்தமைக்காக சீமான் மட்டும் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்பது மிகவும் கேலிக்குரியது.  ஆனால் பெரியாரிய, திராவிடக் கொள்கைகளை ஒரே மேடையில் விவாதிக்குமாறு அவர்கள் சீமானை அழைத்தால் அது நேர்மையானதும் வரவேற்கப்பட வேண்டியதும் கூட.
 ICON OF TAMIL NATIONALISM
இதில் வேடிக்கையிலும் வேடிக்கை என்னவென்றால் தமிழ்த்தேசியத்தை வெறியோடு எதிர்க்கின்ற திராவிடர்கள் தமிழ்த்தேசியத்தின் அடையாளச் சின்னமாகிய பிரபாகரனின் படங்களை ஏந்திக் கொண்டு, தமிழ்த்தேசியவாதியாகிய சீமானை எதிர்ப்பது தான். தமிழ்மண்ணைத் தமிழர்கள் தான் ஆளவேண்டுமென்ற அடிப்படைக் கொள்கையை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளாதவர்கள் எவருமே பிரபாகரனை அல்லது பிரபாகரனின் தலைமையில் ஈழத்தில் தமிழுக்காக, தமிழ்மண்ணைக் காக்க உயிர்நீத்த வீரத்தமிழர்களின் தியாகத்தில்  சொந்தம் கொண்டாட முடியாது என்ற கசப்பான உண்மையை எடுத்துக் கூற வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழுணர்வும், தன்மானமுமிருந்தால் நிச்சயமாக இந்த தேர்தலில் கடலூர் தொகுதியிலாவது  சீமான் வெல்ல வேண்டும். ஆனால் ஐம்பது ஆண்டு காலமாக பெரியாரிய, திராவிடத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அதை உலகத்தமிழர்கள் எதிர்பார்க்கலாமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
http://tamil.oneindia.com/news/tamilnadu/protest-against-seeman-his-comments-on-periyar-evr-253590.html#cmntTop

No comments: