Saturday, March 26, 2016

கலைஞர் கருணாநிதி Vs. செந்தமிழன் சீமான் - யார் உண்மையான பகுத்தறிவுவாதி??


கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிடும்போது தான் உண்மையிலேயே பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் தான் என்பதை நிரூபித்திருக்கிறார் செந்தமிழன் சீமான்.

தமிழர்கள்  தமது உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளை எல்லாம் வெற்றி கொண்டு, கங்கை முதல் கடாரம் வரை வென்று தமிழர்களின் புலிக்கொடியை நாட்டிய வீர வரலாற்றின் வெற்றிச் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையாரை வணங்கி, வீரத்தமிழன்  ராஜராஜசோழனின் காலடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதன் மூலம் ராஜ ராஜ சோழனையும், தமிழர்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றிக் கட்டிக் காக்க வேண்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலையும் பற்றி தமிழர்களின் எதிரிகளால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட மூடநம்பிக்கையை முறியடித்திருக்கிறார் செந்தமிழன் சீமான்.

மாமன்னன் ராஜராஜ சோழன் சிங்களவர்களை வென்று சிங்களாந்தகன் என்று பெயர் சூட்டிக் கொண்டது போலவே,  கேரளாவை வென்றதன் அடையாளமாக கேரளாந்தகன் என்று பட்டமும் உண்டு. அதன் அடையாளமாக தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் முதல் நுழைவாயிலுக்கு கேரளாந்தகன் திருவாயில் என்று பெயர் சூட்டப்பட்டது.  இராஜராஜனின் பல்வேறு சிறப்புப் பெயர்களுள் கேரளஅந்தகன் என்பதும் ஒன்று. அந்தகன் என்றால் எமன் என்றும் பொருள். கேரளத்தை  வென்றதால் கேரளாந்தகன் என்று அழைக்கப்பட்டான்.

வெற்றி மேல் வெற்றியாகக் குவித்து தமிழர்களின் எதிரிகளையெல்லாம் அழித்த ராஜ ராஜ சோழனும், ராஜேந்திர சோழனும்,  தமது வெற்றியை, கேரளாந்தகன் திருவாயிலினூடாக  நுழைந்து, தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தான் கொண்டாடியிருப்பார்கள். அவ்வாறே தமிழர்களுக்கும் -திராவிடர்களுக்குமிடையிலான தனது  முதல் போரை செந்தமிழன்  சீமான் அவர்கள் தஞ்சைத் தமிழ்மண்ணில், மாமன்னன் ராசராசன் காலடியில் தொடங்கியது தமிழர்கள் அனைவருக்குமே தமிழுணர்வையும், மானத்தையும்  ஊட்டும் செயலாகும்.
கேரளாந்தகன் திருவாயில் 
தமிழர்களின் பெருமைமிகு வரலாற்றின் மீது பொறாமை கொண்ட சிலரால், தஞ்சைப் பெரிய கோயிலில் சாபமிருப்பதாகவும், கேரளாந்தகன் திருவாயில் வழியாக கோயிலுக்குப் போகும் அரசியல்வாதிகளுக்கும், பிரமுகர்களுக்கும் கேடு வந்து விடுமென்ற மூடநம்பிக்கை திட்டமிட்டுப் பரப்பப்பட்டு விட்டது. அரசியல்வாதிகளும், வெளிநாட்டுத் தலைவர்களும் தஞ்சைப் பெரிய கோயிலையும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொண்டால் பெரிய கோயிலும், தமிழர்களின் வரலாறும் இந்தியா முழுவதும் மட்டுமன்றி, உலகம் முழுவதும் பரவி விடுமென்று கருதிய சிலரின் சதியாகக் கூட அது  இருக்கலாம். என்னவோ முட்டாள் தமிழர்கள்  கண், காது மூக்கு எல்லாம் வைத்து அந்த மூடநம்பிக்கைக்கு உயிரூட்டி விட்டனர். மக்களின் ஆதரவேயற்ற ஒரு அரசியல்வாதி, தனது ஆட்சியின் கடைசிக்காலத்தில் பெரியகோயிலுக்குப் போய் வந்ததும் ஆட்சியை இழந்தால், அல்லது தனது நாட்டில் சிறுபான்மை  மக்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்ட தலைவர், பெரிய கோயிலுக்குப் போய்த் திரும்பியதும் அதிகாரத்தை இழந்தால், 'காகமிருக்கப் பனம்பழம் விழுந்த கதை போல' அதையும், இதையும் இணைத்து பல மூடநம்பிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன.

ஆனால் பெரிய கோயிலுக்கு "நான்" என்ற அகந்தையுடன் வருகின்ற ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும்  தான் அதிகாரத்தை இழப்பார் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று கர்ணபரம்பரை நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. அதன் கருத்து என்னவென்றால், சைவ சித்தாந்தத்தின் அடிப்படையே 'நான்' என்ற ஆணவத்தை அழிப்பது, அதாவது சிவனுக்கு முன்னால் ஆணவத்தை இழப்பது தான். அது  தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு மட்டுமன்றி, உலகிலுள்ள  சைவ ஆலயங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.  ஆகவே 'நான்' என்ற அகந்தையுடன் தஞ்சைப் பெருவுடையாரைத் தரிசிக்க வருகின்ற அரசியல்வாதிகளினதும்,  ஆட்சியாளர்களினதும்  மகுடம் தான் பறிபோகுமெனலாமே தவிர, தமிழர்களைத் தட்டியெழுப்பி, தமிழர்களையும், தமிழ்மண்ணையும், தமிழ்மானத்தையும் காக்கும் போருக்கு, முதலில் ராஜராஜ சோழனின் ஆசியைப் பெறச் சென்ற செந்தமிழன் சீமான் வெற்றியடைய  ராசராசசோழன் மட்டுமன்றி எமது  தமிழ் முன்னோர்கள் அனைவரதும் ஆசியும் வாழ்த்துக்களும் அவருக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பகுத்தறிவுவாதியும் , பெரியாரின் பிரதம சீடர்களில் ஒருவருமாகிய கலைஞர் கருணாநிதி, அந்த மூடநம்பிக்கைக்குப் பயந்து போய்,  தஞ்சைப் பெரிய கோயிலில் 2010 இல் நடைபெற்ற ஆயிரமாண்டு விழாவுக்கும், அதற்கு முன்புமொருமுறையும்,  கேரளாந்தகன் திருவாயில் வழியாக நுழையாமல், பக்கத்திலுள்ள சிவகங்கைப் பூங்கா வாயில் வழியாக நுழைந்தததாக செய்திகள் வந்தது தான் நினைவுக்கு வருகிறது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும்  பெரியாரின் தொண்டன் என்றும் கூறிக் கொள்ளும் கலைஞர் கருணாநிதியை விட, பெரியாரைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் செந்தமிழன் சீமான் தான் ஒரு பகுத்தறிவுவாதி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
மஞ்சள் துண்டுடன் கலைஞர் 

தமிழ்நாட்டில் தமிழரல்லாத திராவிடர்களின் அரசியல், பொருளாதார, நிலவுடைமை ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டவும், அவர்களின் அரசியல் தலைமையைத் தொடரவும், தமது நலன்களை  உறுதிப்படுத்தவும், தமிழர்கள் அனைவரும் தமிழர் என்ற அடையாளத்துடன் ஒன்றுபடுவதைத் தடுக்கவும், தமிழரல்லாத திராவிடத் தலைமைகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட   திராவிடக் கொள்கையையும், தமிழர்களின் பாரம்பரிய மதங்களாகிய சிவனியத்தையும் மாலியத்தையும் மட்டும் எதிர்க்கும் பெரியாரிய பம்மாத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும்   செந்தமிழன் சீமானும், நாம்தமிழர் கட்சியினரும் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்ப்பதில், பெரியாரின் பிரதம சீடர்களில் ஒருவராகிய முத்துவேலர் கருணாநிதியை விடவும் உண்மையான பகுத்தறிவுவாதிகள் என்பதை தஞ்சாவூரில் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாமன்னன் ராஜராஜசோழனுக்கெதிராக திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்களும், அவனது புகழைச் சீரழிக்கும் வகையிலான கட்டுரைகளும், கட்டுக்கதைகளும் திட்டமிட்டுக் (குறிப்பாக திராவிட, பெரியாரிஸ்டுகளால்) பல்லாண்டு காலமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அதை நானும் பலமுறை இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன். அதன் நோக்கமும் பின்னணியும் என்னவென்றால், யாரைப் பற்றித் தமிழர்கள் பெருமையாக நினைக்கிறார்களோ, எந்த மாமன்னனை உலகிலுள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் புகழ்கிறார்களோ, எந்த மாமன்னன் முழு இந்தியாவிலும் முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே தனது கடற்படையை அனுப்பி பல நாடுகளை வென்றானோ அவன் தமிழனாக இருக்கிறான், அவனை நினைத்து தமிழர்கள் பெருமைப்படுகிறார்கள். அவனைச் சிறுமைப்படுத்துவதன் மூலம், தமிழர்களை வரலாறற்ற இனமாக, அதிலும் கன்னடப் பெரியாரின் பின்னர் தான் தமிழர் என்ற இனமும், அவனது மண்ணுமிருப்பதே மற்றவர்களுக்குத் தெரியும் என்பது போன்ற உணர்வை, சினிமா மோகத்தாலும், திராவிட மூளைச்சலவையாலும் சிந்திக்கத் திறனற்று சீரழிந்து கிடக்கும் பெரும்பான்மைத் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அது ஒன்று தான் தமிழ்நாட்டில் தமிழரல்லாதோரின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தும், அதாவது,  அதற்கு  தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தமிழுணர்வற்றவர்களாக, தமிழரல்லாதோரின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அந்த நோக்கத்தின் விளைவாக ராஜ ராஜ சோழனுக்கெதிராகவும்,  அவனது நினைவுச் சின்னமாக,  தமிழர்களின்  வீரத்தின், ஆற்றலின், தமிழர்களின் புலிக்கொடி கங்கை முதல் கடாரம் வரை பறந்த தமிழ்ப் பொற்காலத்தை தமிழர்களுக்கு இன்றும் நினைவூட்டும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கெதிராகவும்,  மூடநம்பிக்கை நிறைந்த கட்டுக்கதைகளை பரப்பி விட்டனர் தமிழ்நாட்டிலே தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே, தமிழர்களின் நலன்களுக்கெதிராக இயங்கும் தமிழர்களின் எதிரிகள்.

தமிழர்கள் ராஜராஜ சோழனைப் பெருமையாக நினைத்தால், அவன் கட்டிய கோயிலுக்குச் சென்றால்  எவ்வளவு சீரும் சிறப்பாக வாழ்ந்த தமிழினம் இன்று நாடற்று, நாதியற்று, சொந்த மண்ணிலேயே தமிழரல்லாதோர் எம்மை ஆளவிட்டு, அவர்களின் கீழ் கைகட்டி வாய்புதைத்து நிற்கின்றோமே என்ற உண்மையைச் சிந்திக்கும் தன்மை ஏற்பட்டு விடுமென பயப்பட்டவர்களால், நான் என்ற அகந்தையுடன் கோயிலுக்குச் சென்று சிவனை வழிபடக் கூடாதென்ற, சைவத்தின் அடிப்படைப் போதனை திரிக்கப்பட்டு மூடநம்பிக்கையாக உருவாக்கப்பட்டு விட்டது,  முதல் நாளிலேயே அந்த மூடநம்பிக்கையை முறியடித்த செந்தமிழன் சீமானை எப்படிப் பாராட்டினாலும் தகும்.நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு.

2 comments:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிந்திக்க வைக்கும் சிறந்த பகிர்வு

vivek kayamozhi said...

மிகப்பெரிய சாதீய ஒடுக்குமுறை தமிழ் நிலத்தில் வந்தது திருமலை நாயக்கர் காலத்தில் தான்.. நில உடைமயாளர்கள் சொத்து அபகரிக்கப்பட்டு சமூகத்தில் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அந்த கொடூரத்தை மறக்க, தமிழரல்லாதோர் கூட்டணி நீதிக்கட்சி என்ற பெயரில் தமிழ் சாதிகளை பிரித்து அடிமை ஆக்கின.இன்னமும் அதன் நீட்சி தொடர்கிறது.