Wednesday, March 9, 2016

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் நாதியற்றுச் சாகும் ஈழத்தமிழர்கள்!


தமிழ்நாட்டிலும் ஒரு முள்ளிவாய்க்கால்?  
- முள்வேலிக்குப் பின்னால் ஈழத்தமிழர்கள்- 
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டில் கேட்பதற்கு நாதியற்று தன்னுயிரை ஈழத்தமிழர் ஒருவர் மாய்த்துக் கொண்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இலங்கையில் சிங்கள அரசே முகாம்களை அகற்றி, புலிகள் இயக்கத்தில் அங்கத்தவர்களாக இருந்த தமிழர்களைக் கூட சுதந்திரமாக வாழ அனுமதிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஈழத்தமிழர்கள் இன்றும் அகதி முகாம்களை விட்டு, சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலையில் வாழ்கின்றனர். அதிலும் ஒரு ஈழத்தமிழன் தன்னைத் தானே இவ்வளவு அவலமான முறையில் மாய்த்துக்  கொள்ளும் அளவுக்கு ஒரு அரச அதிகாரி, அதுவும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கெதிராக  நடந்து கொண்டது, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களுக்குஅதிர்ச்சி தரும் விடயம் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் தமிழர்களின் உண்மையான நிலையையும், அவர்களின் கையாலாகாத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. கேரளாவுக்கோ, ஆந்திராவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, பங்களாதேசுக்கோ போகாமல், இந்தியாவுக்கு, அதிலும் தமிழ்நாட்டுக்குப் புகலிடம் தேடி ஈழத்தமிழர்கள் போனதன் காரணம், அங்கு தமிழர்கள், அவர்களின் சகோதரர்கள் வாழ்கிறார்கள் என்ற நினைப்பில் தான்.  இலங்கையின் வரலாறு முழுவதிலும், பஞ்சம் பிழைக்க இலங்கைக்கு வந்த இந்தியர்களுக்கு  வாழ்வளித்த ஈழநாட்டு மக்கள் இன்று நாதியற்று இப்படிச் சாகும் நிலை ஏற்பட்டது கவலைக்குரியது மட்டுமன்றி, ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் சிந்திக்க வேண்டியதொன்றும் கூட.


அந்தச் சம்பவத்தைப் பற்றிய ஒரு ஈழத்தமிழனின் குமுறலை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.


உயர் மின்அழுத்த கம்பிகள் கொண்ட இரும்பு கோபுரத்தில் ஏறி நின்று பலநூறு உறவுகள் பார்த்து நிற்கமின் கம்பியை தொட்டு எரிந்தபடியே ஈழத்து மனிதன் கீழே வந்து வீழ்ந்த அந்த காணொளியை பார்த்து பல நிமிடங்களாக என்னதென்று சொல்லி புரியவைக்க முடியாத முழு வெறுமை முழுவதுமாக இருள் கவ்விய ஒரு பெருந்துயர், விரக்தி, ஏன் என்று கேட்க யாருமே இல்லாத ஒரு இனமாக போய்விட்டோமா என்ற வெதும்பல் எல்லாமே சூழ்ந்து நிற்கிறது..மனமெங்கும்...
கேள்விப்பட்ட அனைவரது உள்ளத்திலும் இதே உணர்வுகளே தோன்றி இருக்கும் நிச்சயமாக...ஒருவிதமான கையறு நிலை...அதிலும் முகம்மண்ணை பார்க்க கிடந்த அந்த உடலை மூடிய போர்வைக்கு பக்கத்தில் தலை மாட்டில் ஒரு மெழுகுதிரி மட்டும் எரிந்தபடி கிடக்க,
அந்த உடலை சுற்றி இருந்த என் தேசத்து உறவுகளின் கண்களில் தெரிந்த ஆற்றாமை, யாருமற்ற மனிதர்கள் என்ற வெறுமை,நிராகரிப்புகளையே நாள் தோறும் பார்த்து கேட்டு வாழும் ஒரு ஏதிலி வாழ்வின் அவலம் சூழ்ந்த வலிகள் எல்லாமே ஏதேதோ செய்கிறது மனதை...
இது ஒரு வெளிப்படையான சம்பவம்..ஆனால்' இதனை போல தினமும் ஈழத்து மக்கள் தமிழகமுகாம்களில் சந்திக்கும் அதிகார அடக்குமுறைகள், வக்கிர துன்புறுத்தல்கள், நவீன அடிமைகள் போன்றதொரு வாழ்வுமுறை எல்லாமே பல கேள்விகளை முன்வைக்கிறது...
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த முகாம்களின் நிலைமை என்னவோ அவை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததுபோலவே இன்னும் இருக்கின்றது..
இந்தியாவின் வேறு மாநிலங்களில் தீபேத்திய அகதிகளுக்கோ,வங்கமொழி அகதிகளுக்கோ,இன்ன பிற அகதிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளில் பத்தில் ஒரு பங்குகூட தமிழகத்தின் அகதிமுகாம்களில் இல்லாது இருந்தே வந்துகொண்டிருக்கிறது.
வசதிகள் ஒரு புறம் இருக்க...அங்கு வாழும் ஈழத்து மக்களை மிருகங்கள் போன்றே மேய்த்து நிர்வாகம் செய்ய துடிக்கும் தமிழகத்து அதிகார வர்க்கம் மிக மோசமான துன்புறுத்தல்களை குறிப்பாக பெண்கள்மீது நடாத்தி வருகின்றது..
தட்டிக் கேட்க எழும் குரல்களை குண்டர்சட்டம்,தடா,பொடா என்று ஏதாவது ஒன்றில் அல்லது கஞ்சா கேஸில்கூட உள்ளே தள்ளி அமுக்கிவருகின்றது..இந்த அகதிமுகாமுக்கு தமிழகத்து அரசின் சார்பில் வருகை தரும் கடைநிலை ஊழியரிலிருந்து அதி உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரைக்கும் அதிகமானோர் இந்த
மக்களை நடாத்தும் முறை அதிர்ச்சி அளிக்ககூடியது...
சிம்மாசனம் ஒன்று இல்லாத குறைக்கு அவர்கள் கதிரையில் அமர்ந்திருந்து விசாரிக்கும் முறை இருபத்திஓராம் நூற்றாண்டு வெட்கக்கேடு...
ஒரு சிறு குறிப்பு ஒன்றை எழுதி அதில் கிறுக்கி ஒரு கையெழுத்து இட்டுவிட்டால் யாரையும் முகாமைவிட்டு விரட்டவும், கொடுப்பனவுகளை நிறுத்தவுமான அதிகாரம் நிரம்பி வழிபவர்களாக இந்த தமிழகத்து அதிகாரிகள் இருக்கிறார்கள்.
இதனால் அவர்களின் இழி பேச்சுகளை மிக இழிந்த செயல்களை எல்லாம் பொறுத்துபோயே ஆகவேண்டிய ஒரு இடர்பாட்டினுள் எம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
எல்லா துன்பங்களும் தங்களுடனேயே போகட்டும் தம் அடுத்த தலைமுறைதன்னும் படித்து வெளியில் வேலைக்கு போய் இந்த முகாம் வாழ்வில்
இருந்து விடுவிக்கப்படட்டும் என்றே அனைத்து பெற்றோரும் பொறுத்து இருந்தார்கள்.
சொந்த தேசத்து மண்ணின் மணமோ ஏன் அதன் நிறமோ என்னவென்றே அறியாத ஒரு இளம் ஈழத்து இளையோர் உருவாகி வந்துகொண்டிருக்கிறார்கள்..
இந்த நிலையில் அவர்களுக்கு குடியுரிமையோ அன்றி வேறு வதிவிட உரிமைகளோகூட இன்னமும் வழங்க மறுத்தபடியே தமிழகத்து நிர்வாகம் நிற்கிறது..
வதிவிட உரிமை, குடியுரிமை என்பன இன்னும் வழங்கப்படாததால் இந்த இளம் தலைமுறையினர் என்னதான் நன்றாக படித்திருந்தாலும் வேலைவாய்ப்புகளில் நிராகரிக்கப்படுகின்றனர்.
அதிகூடிய திறன் உள்ளவர்களை வேலைக்கு எடுத்தாலும்கூட அவர்களைகூட எந்தநேரமும் வதிவிடஉரிமை, குடியுரிமை இல்லாததை சாட்டாக வைத்து நிர்வாகம் வேலையில் இருந்து விரட்டக்கூடிய சாத்தியங்களே அதிகமிருக்கின்றது. அதனால் வேலை செய்பவர்கள்கூட ஒருவிதமான நவீன அலுவலக அடிமைகள் போன்றே நடாத்தப்படுகிறார்கள்.
மதுரை திருப்பரங்குன்று உச்சப்பட்டி முகாமில் நடந்தது தமிழகம் முழுதும் ஈழத்தமிழர்களை தமிழக அதிகாரிகள் வர்க்கம் நடாத்தும் முறைமைக்கு ஒரு எரியும் சான்று.
உச்சப்பட்டியில் அகதிமுகாமில் ரவீந்திரனை சாகும்படி ஏவிய அந்த அதிகாரி துரைபாண்டி என்பவர் தமிழகம் முழுதும் உள்ள அதிகாரவர்க்கத்தின் ஒரு முகம் மட்டுமே..
அநேகமான அதிகாரிகள் இவரைப் போலவே அல்லது இவரைவிட மோசமானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மிக உண்மை..
ஆட்சியில் உள்ளவர்களின் அசமந்த போக்கும், அவர்கள் ஈழத்தமிழ் அகதிகளை கணித்துகொள்ளும் பார்வையும் அதிகாரிகளிடம் வந்து சேர்கிறது. அதுவே அதிகாரிகளை ஒருவிதமான பேரரசர்கள் போல நடக்கும் திமிரை கொடுக்கிறது...
நாம் விழித்து கொள்ள இதற்கு முன்னும் பலபல நிகழ்வுகள் முகாம்களில் நடந்து வெளிச்சத்துக்கு வந்தும் உறங்கியே கிடக்கின்றோம் நாம்.
தங்கத்தட்டில் உணவூட்டப்படும் மேற்கத்திய அகதி வாழ்வினில் நாம் இருப்பதால் தமிழகத்து தென்கோடியில் எரிந்த எம் உறவு ஒன்றை பற்றி ஏதோ ஒரு வேற்று மனிதனை பற்றிய சேதியாக பார்த்து வாசித்து அடுத்த வேலைக்கு நகர்கின்றோம்.
தமிழகத்து தேர்தல் வருகின்ற மேமாதம் நடக்க இருக்கின்றது. நாம் அனைவரும் தனித்தனியாகவோ கூட்டாகவோ, குழுக்களாகவோ தமிழகத்து கட்சிகளுக்கு எழுதுவோம்.
அடுத்த ஆட்சி கட்டிலில் ஏறி சென்னை செயின் ஜோர்ஜ் கோட்டையில் கொடி ஏற்ற துடிக்கும் அனைத்து கட்சிகளையும் கோருவோம். அங்கு அகதிகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களை சக தமிழர்களாக பாரமரிக்கவும்,
அவர்கள் விரும்பினால் குடியுரிமை வழங்கவும்,அங்கு வாழும் இளைய ஈழத்தமிழர்களை கல்வி,வேலைவாய்ப்பு என்பனவற்றில் சமமாக நடாத்தவும் ( பிரத்தியேக இடஒதுக்கீடு இன்னும் சிறப்பு),
ஈழத்தமிழ் அகதிகள் மீது அதிகார துஸ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளை உடனேயே தண்டிப்பதற்கு உரிய ஒரு விசாரணை முறையை அமுல் நடாத்தும் படியும் கோருவோம்..
தமிழ், தமிழன் என்று மேடைக்கு மேடைக்கு முழங்கும் தமிழகத்து கட்சிகள் தமது தேர்தல்விஞ்ஞாபனத்தில் அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் முறைகள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோருவோம்...
எல்லாவிதமான சித்திரவதைகளிலும் மோசமானது அவமானப்படுத்தல் தான்.அத்தகைய ஒரு அவமானப்படுத்திலின் உச்சமே ஒரு உயிரை பலரும் பார்த்து இருக்க கருக வைத்திருக்கிறது...
தமிழுக்கு அரியணை அமைக்க,தமிழர்களின் தேசிய அடையாளம் காக்க எழுந்த ஒரு போராட்டத்தின் விளைவாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் உலகில் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடாத்தப்பட்டுவரும் முறைகள் தமிழன் என்று பொதுவாக சொல்லிக் கொள்ளவே கூசவைக்கின்றதாக இருக்கின்றது.
இதற்கு வெறுமனே ஆட்சியாளர்கள் மீதும்,அதிகார வர்க்கத்தின் மேலும் குற்றத்தை போட்டுவிட முடியாது.
இத்தகைய நீசச்செயல்களை தொடர்ந்து மௌனமாக பார்த்து கொண்டிருக்கும் எல்லோருமே இந்த மனிதனின் எரிந்து கருகி முகம்குப்புற கிடக்கும் உடலுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.
காலம் இன்னும் கடந்துவில்லை...இப்போதே உங்கள் உங்கள் முகப்புத்தகம் மற்றும் சமூகவலை தளங்களில் ஒலு கணமேனும் இந்த உச்சப்பட்டி அகதிமுகாமின் அவலத்தை பதிந்து அதற்கு நீதி கேட்டு அனைத்து தேர்தல் கட்சிகளிடம் கோரிக்கை வையுங்கள்.
யாருமே அற்றதாக இந்த இனம் இருக்கிறதோ என்ற அவலத்தை நீக்குவோம்...

நன்றி; tamilwin.com  
ச.ச.முத்து
ilamparavai@hotmail.com

No comments: