Saturday, March 5, 2016

சீமான் மீது மட்டும் ஏனிந்தக் கொலவெறி??


நாம் தமிழர் கட்சி (சீமான்) தோற்கடிக்கப்பட வேண்டுமென இலங்கை முஸ்லீம் இணையத்தளமொன்றில் சுவனப்பிரியன் என்ற தமிழ்நாட்டு முஸ்லீம் ஒருவர் ஒரு  கட்டுரை எழுதியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் என்னவென்றால் “தமிழ்நாடு தமிழருக்கே” என்கிறாராம் சீமான். " தமிழ்நாடு தமிழருக்கே" என்று சீமான் மட்டும் கூறவில்லை, அவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அறிஞர் அண்ணா, மறைமலையடிகள், பெரியார் மட்டுமன்றி இக்காலத்துப் பெரியாரிஸ்டுக்கள் கூட பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் கூறியிருக்கிறார்கள். ஆனால்  அதையே சீமான்  கூறினால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டுமென்கின்றனர்  தமிழ்நாட்டு முஸ்லீம்கள். இலங்கை முஸ்லீம்கள் மட்டும் தான் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என நினைத்திருந்தேன். உதாரணமாக, இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக,  இலங்கையில் வடக்கு கிழக்கும் இணைந்து தமிழ்பேசும் மாநிலம் உருவாவதை இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் எதிர்க்கின்றனர். இவ்வளவுக்கும் அவர்களின் தாய்மொழியும் தமிழ் தான்.  ஆனால் தமிழ்நாட்டில்  என்னடாவென்றால் தமிழ்நாடு தமிழருக்கே என்று சீமான் கூறுவதால் அவரும் அவரது கட்சியும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்கிறார் ஒரு முஸ்லீம். அப்படியானால் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? அவரது கருத்தை இதுவரை எந்த முஸ்லீமும் எதிர்க்கவில்லை.

அவருக்கு விடுதலைப் புலிகள் மீதுள்ள வெறுப்பை சீமான் மீது காட்டுவது தான் வேடிக்கை. அதிலும் வேடிக்கை என்னவென்றால் பிரபாகரனின் “தலைமையை ஏற்காத தமிழர்களை வன்முறையின் மூலம் அடக்கியதை நமது வாழ்நாளிலேயே பார்த்தோம். இதனால் தமிழர்கள் பல ஆண்டுகள் சிறைக் கைதிகளாக அடைபட்டு கிடந்ததை மறந்து விட முடியாது” என்கிறார் அதாவது  இலங்கைச் சிறையில் தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறைக் கைதிகளாக அடைபட்டுக் கிடந்நததற்கு பிரபாகரன் தான் காரணமாம். பிரபாகரனின் கட்டுபாட்டில் தான் இலங்கை அரசு இருந்தது போலவும், பிரபாகரனின் தலைமையை ஏற்காதவர்களை இலங்கை அரசு பிடித்துச் சிறையில் போட்டது, என்கிறாரா இவர்? பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும்  ஆதரித்தனர் என்ற காரணத்துக்காகத் தான் அப்பாவி ஈழத் தமிழர்கள் பலரை இலங்கை அரசு பல ஆண்டுகளாகச்  சிறையில் போட்டதே தவிர, பிரபாகரனை எதிர்த்ததற்காக அல்ல. மாறாக தமிழர்களையும், பிரபாகரனையும் எதிர்ப்பதாகத் தொப்பியைப் பிரட்டி இலங்கை முஸ்லீம்கள், இலங்கை அரசிடமிருந்து சலுகைகளை அனுபவித்தனர்.

சீமானுக்கெதிராக நடைபெறும் திட்டமிட்ட பிரச்சாரத்தைப் பாருங்கள்.
இன்று சீமான் கையிலெடுத்திருக்கும் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கோஷம் மேலோட்டமாக பார்த்தால் நியாயமாக தெரிகிறது. தற்போது தலைமைப் பதவிகளில் தமிழன்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் தங்கள் வியாபாரங்களை தமிழருக்கு விட்டுக் கொடுத்து வெளியேற வேண்டும் என்பார். எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவார். ஆட்சியில் இல்லாத போதே சீமானுக்கும் சீமானின் ஆதரவாளர்களுக்கும் இந்த அளவு வெறி வருகிறது என்றால் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் எதுவும் செய்வார்கள்.”

அவரது கருத்தையும் சீமானின் 'கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்' என்ற நேர்காணலில் அவர் கூறும்,  விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் எவருக்குமே சீமான் மீது  ஏனிந்தக் கொலைவெறி என்று தான் கேட்கத் தோன்றும்.  .இப்படியான திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்களை எல்லாம் முறியடித்து தமிழர்கள் தமிழ்நாட்டில் தலைநிமிர்ந்து வாழ, தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீமான் போன்ற தமிழுணர்வுள்ள தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

 கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம் - சீமானின் நேர்காணல் 


கேள்வி: நாம் தமிழர் மீது முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு, நீங்கள் தமிழர் - இங்கேயே வாழும் தமிழர் அல்லாத மக்கள் இடையே பிரிவினைவாதத்தை உண்டாக்குகிறது என்பது. அதற்கு உங்கள் விளக்கம்... 

சீமான்: ஓராண்டு ஈராண்டல்ல.. நீண்ட நெடிய காலமாக அதிகாரத்தை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு அடிமையாகக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகள் அதிகாரத்தை கையிலெடுக்க நினைப்பது அவர்களின் உரிமை. ஒருவருடைய பொருளாதாரம், அரசியல், அதிகாரம்.. இந்த மூன்றில் ஒன்றை அடுத்தவரிடம் இழந்தாலும் நான் அடிமையாகிவிடுவேன். ஆனால் இந்த மூன்றுமே என் இனம் சார்ந்த மக்களுக்கு அடுத்தவரிடத்தில் இருக்கிறது. நீண்ட நெடிய காலமாக இவை அடுத்தவரிடம்தான் இருக்கின்றன. தமிழர்கள் பெருந்தன்மை என்ற பெயரில் செய்த பிழையால் இந்த நிலை. இன்று நாங்கள் விழித்துக் கொண்டு எங்களின் நியாயமான உரிமையை நான் கேட்கும்போது பிற மொழியாளர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதல் போல இது சித்தரிக்கப்படுகிறது. இது ஒரு பெரிய துரோகம் என்கிறேன். இந்த மண்ணை நம்பி நீண்ட காலமாக இருந்தவர்களுக்கு நீர் கொடுத்து, சோறு கொடுத்து, பாதுகாப்பான வாழ்க்கை கொடுத்து, அதிகாரம் கொடுத்து, வாழவும், ஆளவும் வைத்து அழகு பார்த்த ஒரு தேசிய இன மக்களுக்குச் செய்கிற துரோகம். வாழும் உரிமை எவருக்கும் உண்டு. ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்ற தத்துவத்தை முன் வைக்கிறோம். வந்தவரை எல்லாம் வாழ வைப்போம் அது எம் இனத்தின் பெருமை. ஆனால் எம் சொந்தவரை மட்டும் ஆள வைப்போம். அது எங்கள் உரிமை. உலகம் பூரா இதுதான் நடைமுறை. அந்தந்த தேசிய இன மக்களை அந்தந்த மொழி வழி தலைவர்கள்தான் ஆளுகிறார்கள். என்னைப் பெற்ற என் தாய் தந்தைக்கு என்னைவிட உண்மையான மகன் யார் இருக்க முடியும்? என் மண்ணையும் மக்களையும் நிலத்தையும் வளத்தையும் என்னைவிட யார் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும்? 
நீண்ட காலமாக எங்களை ஆண்டு வந்திருக்கிறீர்கள். மொழிப்போர் ஈகிகளின் தியாகத்தால்தான் இந்த திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த அரசியலை நீங்கள் நுட்பமாகப் பார்க்க வேண்டும். என் மொழி செத்துவிடக் கூடாது என்று செத்தவனின் தியாகத்துக்கு ஏதாவது பலனிருக்கா? இந்த 50 ஆண்டுகளில் தமிழை அழித்துவிட்டார்கள். சாகடித்துவிட்டார்கள். மொழிப்போராட்டத்தில் செத்தவன் எல்லாம் தமிழன். பிற மொழியாளர் யாரும் சாகவில்லை. ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியவன் திராவிடர் போர்வையில் இருந்த மாற்று மொழியாளன். 'தமிழன் தாய்மொழிமேல உயிரையே வச்சிருக்கான். மொழிக்கு ஒன்று என்றால் உயிரையும் விடத் தயாரா இருக்கான். அந்த மொழியை அழிச்சாத்தான் சூழல் நமக்கு சாதகமாகும்'னு திட்டமிட்டு வேலை செய்தார்கள் பிறமொழி ஆட்சியாளர்கள். தமிழன் தமிழனாக இருக்கும்வரை அதிகாரத்துக்கு வரமுடியாது என்று தெரிந்து கொண்டு திட்டமிட்டு தமிழை அழித்தார்கள். ஒரு சின்ன பதிலில் இதற்கு பதில் சொல்லிவிட முடியாது. நான் கேட்பது எனது தார்மீக உரிமை. 


கேரளாவில் பல லட்சம் தமிழர்கள் வாழ்கிறோம். மகாராஷ்ட்ராவில் 26 லட்சம் பேர் இருக்கோம். கர்நாடகத்தில் ஒண்ணேகால் கோடிக்கு மேல் வாழ்கிறோம். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தமிழர் வாழாத நிலப்பரப்பு இல்லை. உலகின் பல நாடுகளிலும் வாழ்கிறோம். ஆனால் எந்த நாட்டிலும் தமிழருக்கென்று தனித்த அரசியல் இல்லை. அந்தந்த மண்ணின் மக்கள் முன்னெடுக்கிற அரசியலோடு நாங்க கரைஞ்சி பயணிக்கிறோம். அதுபோல இந்த மண்ணில் வாழ்கிற பிறமொழி தேசிய இன மக்கள், தமிழ் தேசிய இன மக்களாகிய நாங்கள் முன்னெடுக்கிற அரசியலோடு பயணித்து வலிமை சேர்க்க வேண்டும் என்பது தார்மீகக் கடமை என்றுதான் நாங்கள் சொல்கிறோம். நீங்கள் எங்களை ஆள வேண்டும், அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் அடிமையாகி விடுவோம். நாங்கள் இன்னொரு முறை அடிமையாகத் தயாராக இல்லை. இப்போது தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சிலர் இங்கே எங்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட யாராவது? அல்லது மலையாளிகள் யாராவது? அண்மையில் கேரள முதல்வர் உம்மண்சாண்டி சொன்னதை எல்லாரும் அறிவீர்கள். 'அவன் அதிகாரத்தைக் கேட்டு வெறியோடு வருகிறான். அவன் கேட்பது நியாயம். அதில் என்ன தவறு இருக்கிறது? என்னை மலையாளியா திராவிடனா என்று கேட்டால் நான் மலையாளி என்றுதான் சொல்வேன்' என்று கூறியிருக்கிறார். அந்த உணர்வு எல்லாருக்கும் வரணும். வெளிப்படையா பேசுவோம்... ஆந்திரா. ஒரே மொழிவழி தேசிய இனத்தின் மக்கள் அங்கு வாழ்கிறார்கள். நீண்ட காலமாக ஒரே நிலப்பரப்பில் வசித்தவர்கள் இன்று தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிந்துவிட்டன. தெலங்கானாவை சந்திரசேகர் ராவும், ஆந்திராவை சந்திரபாபு நாயுடுவும் ஆள்கிறார்கள். மாறி, சந்திரசேர் ராவை ஆந்திராவுக்கும், சந்திரபாபு நாயுடுவை தெலங்கானாவுக்கும் முதல்வராகிடச் சொல்லுங்க பார்ப்போம். 

நாம இந்த அரசியலை விட்டுடலாம். வாய்ப்பே இல்ல. ஆக நான் கேட்பது ரொம்ப தார்மீக உரிமை. காலங்கடந்து கேட்கிறேன். எல்லாவற்றையும் இழந்துவிட்டு, கண் முன்னாடி ஒரு இனச் சாவைச் சகித்துக் கொண்டு நிற்கிறேன். நானூறு ஆண்டுகளாக இருக்கிறார்களே... அவர்களை எங்கே போகச் சொல்கிறீர்கள் என்கிறார்கள். எங்கேயும் போக வேணாம். எங்களோடு தாயா புள்ளையா இருங்க. எங்களோடயே வாழுங்க. எங்ககிட்ட அமைச்சரா இருங்க. ஆனா முதலமைச்சர் நாங்கதான். எத்தனை தளபதிகள் வேணும்னாலும் இருங்க.. மன்னன் நான்தான். இதுல என்ன கசப்பு இருக்கு? இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள தடுமாற்றம்தான் அவர்களுக்கு. உங்களுக்கு நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். நானூறு ஆண்டுகளாக இருந்த எங்களை இப்படிச் சொல்கிறார்களே என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், மூவாயிரம் ஆண்டுகளாக இங்கிருக்கும் பிராமணர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏன் இத்தனை ஆண்டுகள் அவர்களை எதிர்த்தீர்கள்? தூய தமிழர் எங்களை திராவிடன் என்று சேர்த்துக் கொண்டு, மூவாயிரம் ஆண்டுகளாக ஏன் எதிர்த்தீர்கள்? அவன் இத்தனைக்கும் வீட்டுக்குள் தமிழ், வெளியிலும் தமிழ் பேசறான். வாய் மொழியும் தாய் மொழியும் தமிழா இருக்கு. நீங்களாவது வீட்டுக்குள் போய் தெலுங்கு பேசுகிறீர்கள். அவன் வீட்டிலும் தமிழ்தானே பேசுகிறான். அவனை ஏன் எதிர்த்தீர்கள்பிறப்பின் அடிப்படையில் சீமான் தூய இனவாதம் பேசுகிறான் என்று சொல்கிறீர்கள். பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் என்று நீதிக்கட்சி ஆரம்பித்தீர்களே.. எந்த அடிப்படையில் அவர்களைப் பார்ப்பனர்களாகப் பார்த்தீர்கள்? ஆரியர் திராவிடர் என்றீர்களே.. எப்படி ஆரியர்களைக் கண்டீர்கள்? பிறப்பின் அடிப்படையில்தானே?

பாரதி, சூரிய நாராயண சாஸ்திரியாக இருந்த பரிதிமாற் கலைஞர், தூய தமிழறிஞர்.. பிறகு உ வே சாமிநாதய்யர், இவரைத் தாண்டிய தமிழறிஞர் உண்டா.. காலில் செருப்பு கூட இல்லாமல் ஊர் ஊராகப் போய் ஓலைச் சுவடிகளை உவே சாமிநாதய்யர் திரட்டிக் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், எனக்கு ஏது இத்தனை சங்கத் தமிழ் நூல்கள்? பாரதியைத் தாண்டிய ஒரு தமிழன் உண்டா? சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொன்னவனை 'பார்ப்பான்னு' சொல்லிக் கொடுத்தது யாரு? அடிமைப்பட்டுக் கிடந்த தேசிய இன மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள் என்ற புரிதல் வந்துவிட்டால் நான் கேட்பது நியாயம் என புரியும். இல்லையில்லை.. நாங்கள்தான் ஆளுவோம் என்றால்... மன்னராட்சிக் காலத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சி. மக்களாட்சிக் காலத்திலும் நாயக்கர்கள் ஆட்சி என்றால் நாங்கள் விடுதலைப் பெறுவது எப்போது? யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் கோபப்பட ஆத்திரப்பட, இனத் துவேஷம், பாஸிஸம், இன வெறி என்று சொல்ல ஏதுமில்லை. 

எங்களோடு இருங்கள். தெலுங்கர் தெலுங்கராக இருங்கள், கன்னடர் கன்னடராக இருங்கள், மலையாளி மலையாளியாக இருங்கள், துளுவர் துளுவராக இருங்கள், மராட்டியர் மராட்டியராக இருங்கள், உருது பேசும் இஸ்லாமியர் உருது பேசுபவர்களாகவே இருங்கள்... எல்லாரையும் ஆரத் தழுவி அன்பு கொண்டு வாழ்கிற மாண்பு எங்களுக்கு இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவன் நான்தானே. திருவள்ளுவரிலிருந்து, கம்பரிலிருந்து, இளங்கோவடிகளிலிருந்து உலகந்தழுவி நேசித்துப் பாடியது எங்கள் முன்னோர்கள்தானே. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியதாகப் பாடினார் வள்ளலார். காக்கை குருவி எங்கள் சாதி என்றான் பாரதி. பயிருக்கும் காக்கை குருவிக்கும் வாடிய நாங்கள் சக மனிதரை நேசிக்க மாட்டோமா? பிறமொழிக்காரர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாங்கள் அவர்களைச் சகோதரர்களாக ஆரத் தழுவிக் கொண்டு வாழ்கிறோம். ஆனால் ஆளும் உரிமை எங்களுக்குத்தான். தமிழனை தமிழன் ஆண்டிருந்தால் ஈழத்தில் இனம் அழிந்திருக்காதே. தமிழன் ஆண்டிருந்தால் கச்சத் தீவை எடுத்துக் கொடுத்திருக்க முடியாது. நாங்கள் ஆண்டிருந்தால் மீத்தேனுக்கு கையெழுத்து போட்டிருக்க முடியாது. நாங்க ஆண்டிருந்தா அணு உலைகள் இங்கே இருந்திருக்காது. நாங்க ஆண்டிருந்தா மேற்குத் தொடர்ச்சி மலையில் அந்த நியூட்ரினோ ஆய்வு வந்திருக்காது. இந்த 50 ஆண்டுகளில் வெட்டப்பட்ட குளங்கள் ஏரிகள் எத்தனை... ஆனால் இந்த திராவிட ஆட்சிகளில் அவை தூர்க்கப்பட்டு கட்டப்பட்ட வீடுகள் எத்தனை? நாங்கள் ஆண்டிருந்தால் இது நடந்திருக்காது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த திராவிட இயக்கத் தலைவர்களுக்கு தமிழர்களை ஆள வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான். 

எல்லா மொழிவழி தேசிய இன மக்களைப் போல தமிழர்களும் உரிமை பெற்று பெருமையோடு வாழ வேண்டும் என்ற கனவு ஒருபோதும் இருக்காது. அது இந்த மண்ணின் பிள்ளை இந்த இனம் சார்ந்த பிள்ளைக்குத்தான் இருக்கும். அதனால்தான் அந்த உரிமையை எங்களுக்குத் தாங்கன்னு கேட்கிறோம்!

மேலும் இணைப்பை அழுத்தவும்: 1 comment:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

"தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீமான் போன்ற தமிழுணர்வுள்ள தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்." என்பதை வரவேற்கிறேன்.