Tuesday, March 1, 2016

இலங்கையில் ‘பறநாயே’ என்ற சொல் சாதியைக் குறிப்பதல்ல.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திரு ரவிக்குமார் என்பவருடன் அவரது முகநூலில் நடைபெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பற்றிய கருத்துப்பரிமாறலில் ஈழத்தமிழராகிய புலம்பெயர்  ஊடகவியலாளர் துரைரத்தினம், அவரை ‘பறநாயே’ என்று கூறி விட்டார் என பலத்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவரைக் கண்டித்துச் சிலரும்., அவரை முற்றாகவே புறக்கணிக்க வேண்டுமெனச் சிலரும் ஆளுக்காள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
ராஜராஜசோழன் - 'பறத்தமிழன்'
.இணையத் தளங்களில் நடைபெறும் விவாதங்களில் இந்தளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு நாயே, பேயே என்று பேசுவதை, அது யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது தான், அதிலும், அவ்வாறு பேசுவது ஒரு ஊடகவியலாளருக்கு அழகல்ல. அதேவேளையில் உண்மையிலேயே திரு.துரைரத்தினம் அவர்கள், திரு. ரவிக்குமார் என்ன சாதியென்று  தெரிந்து கொண்டு தான் அவ்வாறு திட்டினாரா அல்லது இலங்கையில் அந்தப் பதத்துக்கு சாதி சம்பந்தமில்லாத கருத்துமுண்டு என்பதால், அந்த அடிப்படையில் கூறினாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். திரு. ரவிக்குமார் என்ன சாதியை சார்ந்தவர்கள் என்று தனக்குத் தெரியாதென்று அவர் கூறினார் என்பதையும், இந்தப் பிரச்சனையில் அவரைக் கண்டிப்போரும் ஒப்புக் கொள்கின்றனர்.

என்னுடைய கருத்தென்னவென்றால், என்ன தானிருந்தாலும், இன்னொரு தமிழனுக்கெதிராக அதுவும் ஈழத்தமிழர்களைத் தமது சகோதரர்களாக வரித்துக் கொண்டு, மற்றவர்கள் ஈழத்தமிழர்களை தீவிரவாதிகளாக்கிப் பூச்சாண்டி காட்டிப் பயமுறுத்திய காலத்திலும் எங்களுக்காக உண்மையான தமிழுணர்வுடன் குரலெழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ஒரு சகோதரனை அவ்வாறு திட்டியது  மிகவும் கண்டிக்கத் தக்கது அதேவேளையில் இலங்கையில் தமிழிலும், சிங்களத்திலும் ‘பற’ என்ற சொல் உண்மையிலேயே பறையர்களையோ அல்லது வேறெந்த சாதியையோ குறிப்பதல்ல என்பதை விளக்குவது சிலரது கசப்புணர்வை நீக்கலாம் என நம்புகிறேன்.

"முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்"
என்று பெருமையுடன் வாழ்ந்த  தமிழர்களின்  மூத்தகுடிகளான பறையர் சமூகம் காலத்தின் கோலத்தால் தாழ்த்தப்பட்டவர்களாக்கப்பட்டு, தமிழில் இன்று பறை என்ற சொல்லே இழிவாகக் கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம். ஆனால் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் 'பற' (பறை அல்ல) என்ற சொல்லை வெளிநாட்டவர் என்ற கருத்தில் மட்டும் தான் பாவிக்கின்றனரே தவிர சாதியைக் குறிக்க அல்ல என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

விஜயன் - 'பறச்சிங்களவன்' 
இந்தப் ‘பற’ என்ற சொல் போத்துக்கேய மொழியிலிருந்து இரவல் வாங்கிய  ‘FARANGHI’ எனும் அன்னியர் அல்லது வெளிநாட்டவரைக் குறிக்கும் சொல்லிலிருந்து உருவாகியது. தமிழில் F உச்சரிப்பு இல்லாததால், Faranghi என்ற சொல் பறங்கியாகி, அது முதலில் தமிழர்களாலும், சிங்களவர்களாலும் போத்துக்கேயரை இழிவுபடுத்தப் பாவிக்கப்பட்டு, பின்னர் அவர்களுடன் கலப்புற்ற இலங்கையர்களாகிய Burgher சமூகத்தை இழிவாக அழைக்கப் பாவிக்கப்பட்டு, இக்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் வெள்ளையின சுற்றுலாப் பயணிகளை,  'பீத்தல் பறங்கி', 'ஊத்தைப் பறங்கி' என்று இழிவாகப் பேசப் பயன்படுத்தப்படுகிறது.  அதிலிருந்து சிங்களத்திலும் தமிழிலும் உருவாகிய ‘பற’ என்ற சொல் அன்னியர் அல்லது வெளிநாட்டவர் என்பதை மட்டும் தான் குறிக்கிறதே தவிர எவருடைய சாதியையுமல்ல.

உதாரணமாக தமிழ்நாட்டிலிருந்தும், சோழர்களின் படையெடுப்பின் பின்னரும் தான் தமிழர்கள் இலங்கையில் குடியேறினர் என்று வரலாற்றைத் திரிக்கும் சிங்களவர்கள் ஈழத்தமிழர்களைப் பறத்தமிழர் (Para Demala) என்பார்கள். அதற்கு கள்ளத்தோணியில் வந்திறங்கிய காடையனாகிய விஜயனின் பரம்பரையினர் தான் சிங்களவர் என்ற மகாவம்ச கதையின் அடிப்படையில் சிங்களவர்களை பறச்சிங்களவர்கள் என்பார்கள் தமிழர்கள் . இங்கும் ‘பற’ என்பது சாதியைக் குறிப்பதல்ல, மாறாக அன்னியர்கள் அல்லது வந்தேறிகள் என்பதைத் தான் குறிக்கிறது.

மேலும் 2007ஆம்ஆண்டில் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவுக்கும்,  மலையகத் தமிழர்களின் தலைவர்களில் ஒருவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமாகிய ஆறுமுகம் தொண்டமானுக்குமிடையே நடைபெற்ற வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த பசில் ராஜபக்ச,  தேவர் சாதியைச் சார்ந்த தொண்டமானைப் பார்த்து ‘பறத்தமிழா’ என்று திட்டினார். இதில் தேவர்சாதித் தொண்டமானை பசில் ராஜபக்ச பறையர் என்று அழைக்கிறார் என்று அர்த்தமல்ல, மாறாக அதன் கருத்து என்னவென்றால் நீ ஒரு வந்தேறி தமிழன் என்பது தான்.
                          
ஆகவே திரு. ரவிக்குமார் என்ன சாதி என்றே தெரியாத திரு. துரைரத்தினம் இலங்கையில் சாதாரணமாகத்  திட்டும் வார்த்தையாகிய ‘பறநாயே’ என்று  அதாவது வெளிநாட்டானே என்ற கருத்தில் கூறியிருக்கலாம்,  என்றும் கூடக் கருதலாம். என்ன தானிருந்தாலும் திரு, துரைரத்தினம் தனது  தவறான வார்த்தைப் பிரயோகத்துக்கு விளக்கமளிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. 

தொண்டமான்- சாதியில் தேவர் ஆனால் "பறத்தமிழன்" 
அதே வேளையில் திரு. துரைரத்தினம் என்பவர் ஏதோ முழு ஈழத்தமிழர்களினதும் பேச்சாளர்  என்ற மாதிரி அவருக்காக ஈழத்தமிழர்கள் அனைவரும் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனச் சிலர் உளறுவது வெறும் அதிகப் பிரசங்கித்தனமாகும் . எத்தனையோ தமிழ்நாட்டுத் தமிழர்கள் இணையத்தளங்களில் ஈழத்தமிழர்களை இழிவு படுத்துகிறார்கள். ஈழத்தமிழர்களின் வரலாற்றை, அவர்களின் மதநம்பிக்கையை மட்டுமன்றி அவர்களின் முன்னோர்களைக் கூட  இழிவு படுத்துகிறார்கள், கொச்சைப்படுத்துகிறார்கள். அந்த ஒரு சில அரைவேக்காடுகளுக்காக முழுத் தமிழ்நாடும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று ஈழத்தமிழர்கள் எவருமே எதிர்பார்ப்பதில்லை. 

3 comments:

Swamy said...

Nonsense !

Viyasan, you have really lowered your respect in justifying that insolent act.

ullathai sollukiren said...

உண்மையான கருத்து சரியாக கனித்து இருக்கிறீர்கள். போர்த்துகெயர்களை பறங்கியர்கள் என்று சொல்வது உண்டு பேச்சு வழக்கில் அப்படி சொல்வார்கள்.

Anonymous said...

What you are missing is foreigner in our land is para desi and a foreign land is videsi. Besides this these group of people could learn trade since they did not have one fixed trade. Europeans and arabs who practiced slavery realised training these people is dangerous made the un touchable do not touch do not teach policy.

A versatile comunity is made skill less by an organised religion christian and islam. When adi sankarar told a care taker of cremation to move the man asks sankarar which one should be moved the god in self or the atman which will leave the body or the body itself.