Sunday, February 7, 2016

தமிழ்நாட்டில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பொருத்தமற்றது??"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலோழுகும்" என்ற பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் பாடுகின்றனர். ஆனால் அவர்கள் பாடுவது அரைகுறையான பாடல் மட்டுமன்றி, சில வரிகளைச் சிதைத்தும், நீக்கியும் பாடப்படும் பாடலாகும் என்ற கருத்து ஈழத்தமிழர்களிடம் ஏற்கனவே உண்டு. ஒரு தமிழ்ப் புலவன் தனது தாய் மொழியின் மீது கொண்ட பற்றினாலும், பெருமையினாலும் இயற்றிய பாடலில் கன்னடத்துக்கும், தெலுங்குக்கும், மலையாளத்துக்கும், துளுவுக்கும் தமிழ் தான் தாய் என்ற உண்மையைக் குறிப்பிட்டதை தமிழர்களின் 'சகோதரர்கள்' என்று சிலர் குறிப்பிடும் ஏனைய திராவிடர்கள்' ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதாலும், செத்துப்போன ஆரியத்தைச் செத்துப்போன மொழி என்ற உண்மையைக் கூறினால் பார்ப்பனர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள் என்ற பயத்தினாலும், அந்த வரிகளை நீக்கி, பாடலை சிதைத்து விட்டுப் பாடுவதை விட, திராவிட நாட்டை, திராவிடர்களை எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்தில் சேர்த்துக் குழப்பியடிக்காமல், தமிழ்மண்ணையும், தமிழையும் மட்டும் குறிப்பிடும் பாடலாகிய பாரதியாரின் "வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி" என்ற பாடல் தான் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பொருத்தமான பாடல் என்பதை உணர்ந்து கொண்ட ஈழத்தமிழர்கள் அதையே தமது விழாக்களிலும், பள்ளிக்கூடங்களிலும் பல ஆண்டுகளாகப் பாடி வருகின்றனர். 

பாரதியாரின் "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி" என்ற பாடல் தான் பொருத்தமான தமிழ்த்தாய் வாழ்த்து என்பதை  உறுதிப்படுத்தும் வகையில் அதை மேலும் அழகாக, விளக்கி இஸ்லாமிய தமிழறிஞராகிய காப்பியக்கோ ஜின்னா சரிபுத்தீன் அவர்கள் ஐரோப்பா தமிழாய்வு மகாநாட்டில் ஆற்றிய உரை இது.  

இன்று உலகெங்கும் பாடப்பெற்றுவரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பற்றியோர் உசாவல். - (காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன்)- 


 "இலங்கை உள்நாட்டின் விடுதலைப் போரினால் விரக்தியுற்ற ஈழத் தமிழரின் புலச்சிதறல் அவர்களை உலகெலாம் பரந்து வாழும் நிலைமைக்குள்ளாக்கியது. அதன் காரணமாய் தமிழ் இன்று பாரெலாம் பேசுமொழியாகிற்று. பன்னூறு ஆண்டுப் பழமையும் பெருமையுங் கொண்டிருப்பினும் புதுமை குன்றாத பொலிவுடன் செம்மொழியாய் உலக அங்கீகாரம் பெற்றுள்ளது எமது தாய்மொழி என்பது தமிழ்பேசும் இனத்தைப் பூரிப்புள்ளாக்குவது ஒன்றே. புகழ்பூத்த தமிழின் பெருமையைப் பாடாப் புலவனில்லை. அவற்றுள் சிலகுறித்து மட்டும் பேசுவதும் அவைபற்றி ஆய்வதுமே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
மனோன்மணியத்தில் இடம்பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான “நீராருங் கடலுடுத்த” என்ற பாடல் இக் கட்டுரைக்குத் தொடக்கமாகும். இவ் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை என்பவராவார். தமிழ்நாட்டு அரசினால் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பிரகடனப்படுத்தப் பெற்று இன்று உலகெங்கும் இசைக்கப்படுவது இப்பாடல்.
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்னுதரத் தேயுதித்த ஒன்றுபல வாகிடினும் 
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் 
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துமே!"
சுற்றிவரப் பேராழியைத் தனது மானங்காக்கும் ஆடையாக அணிந்து கொண்ட நிலமாகிய அழகிய பூமிப் பெண்ணிற்குப். பாரதத் திருக்கண்டமேமுகமாகும். தெற்குத் திசைதான் அதன் நுதலாகும். அந்நுதலில் திகழும் திலகமாத் தோன்றுவதே திராவிட நாடாகும். அந்தத் திலகத்தில் கமழுகின்ற வாசனை போல் உலகனைத்தும் இன்பங்காண அனைத்துத் திசைகளிலும் புகழ்மணக்க இருக்கின்ற தமிழ்ப்பெண்ணே!
பலப்பட்ட உயிர்களையும் பல உலகுகளையும் படைத்துக் காத்து, அழிக்கின்ற இறைவன் என்ற பரம்பொருள் அழிவு பெறாது நிலைத்திருப்பது போல் கன்னடமும், தெலுங்கும், மலயாளமும் துளுவும் உனது உதரத்திலிருந்து பிறந்து ஒன்று பலவாக இருக்கின்ற போதிலும், ஆரியமொழி இன்று உலகவழக்கற்று சிதைந்து அழிந்தொழிந்து போனது போலல்லாது,  நீ இன்னும் உனது சீரிளமை குன்றாது இருப்பது கண்டுவியப்படைந்து,  நாம் செய்யுகின்ற செயலினையும் மறந்து நின்னை வாழ்த்துகின்றோம்.
பொருளமைதியும், கவித்துவமும் பொலிந்துள்ள இப்பாடலைத் தனித்து நோக்குங்கால், இது இந்தியத் தமிழகத்தை மட்டிலும் முன்னிலைப் படுத்துவதாகவே அமைந்துள்ளது எனலாம். முன்னர் குறிப்பிட்டது போன்று இன்று உலகெங்கணும் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களுக்கான ஒரு பொதுத்தன்மை இதில் காணப்பெறவில்லை என்பதும் கண்கூடு.

மேலும் தமிழ்நாடு அரசு முதலாம் பாடலின் மூன்றாம் அடியையும் நான்காம் அடியையும் மேலுங்கீழுமாய் மாற்றி இருப்பதோடு, இரண்டாம் பாடலின் பல வரிகளை நீக்கிவிட்டு ”நின் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துமே” என்ற அடியைமட்டும் சேர்துப் பாடுகின்றனர். 
இது கருத்துக்கு ஒவ்வாத ஒரு செயற்பாடாகும். ஒரு புலவனின் பாட்டில் அவன் அனுமதி இல்லாது ஒரு வார்த்தையையேனும் மாற்றுவதற்கோ,. அன்றி நீக்குவதற்கோ எவருக்கும் உரிமை இல்லை. இது சம்பந்தமாய் இலங்கையில் நடந்த ஒரு வரலாற்றுச் செய்தியை இங்கு நினைவுகூர்வது பொருத்தப்பாடாக அமையும். இலங்கையின் இன்றைய தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரின் வங்காள மொழிப் பாடலொன்றை அடியொற்றி இலங்கையைச் சேர்ந்த ஆனந்ந சமரக்கோன் என்பவரால் எழுதப்பெற்றது. இப்பாடலில் ”நமோ நமோ” என்ற வார்த்தைகள் அமங்கள வார்த்தைகள் எனக் கருதி அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது அனுமதி இல்லாது அந்த வார்த்தைக்குப் பதிலாக ”ஸ்ரீ லங்கா மாதா” எனமாற்றப்பட்டது. இதனால் மனமொடிந்துபோன. ஆனந்ந சமரக்கோன் தனது ஐம்பத்தோராவது வயதில் அதிக அளவு தூக்கமாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இப்போது இருபதுக்கும் அதிகமான நாடுகளில் தமிழர்கள் பரந்து செறிந்து வாழுகின்றனர். அதில் சிறப்பாக அனேகர் இலங்கைத்தமிழர்களாகும். . கடல்கடந்து போனாலும் வாழ்ந்தாலும் பிறந்த மண்ணின்மேல் ஆறாத பற்றுடையவர்கள் இலங்கைத் தமிழர்கள். தாம் புரண்ட மண்ணின்மேல் மோகங் கொண்டவர்கள். புலஞ்சிதறிய நாடுகளில் உடலையும், உதித்தமண்ணில் உயிரையுங் கொண்டு வாழுபவர். எனவேதான் இலங்கையரைப் பொறுத்தமட்டில் இப்பாடல் பொருந்துவதாயில்லை. 
மேலும் முன்னுள்ள மனோன்மணியப் பாடல் ஏற்படுத்துவது போன்ற ஒரு உணர்வையே மகாகவி பாரதியாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. அவரது அனைவரும் அறிந்த தமிழ் வாழ்த்து இது தான்.  


தமிழ்நாட்டுத் தமிழர்களும் பாரதியாரின் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடவேண்டும், அல்லது 'நீராரும் கடலுடுத்த' என்ற பாடலைச் சிதைக்காமல், முழுமையாக,  துணிச்சலுடன் தமிழ்நாட்டில் பாட வேண்டும். ஆந்திராவிலோ அல்லது கர்நாடகத்திலோ, கேரளாவிலோ பாடவில்லையே, தமிழ்நாட்டில் பாடுவதற்கு என்ன பயம். இதன் பின்னணியிலும் திராவிடமும், பெரியாரியமும்  தான் உள்ளதோ என்னவோ யாருக்குத் தெரியும். 

நன்றி: http://akkinikkunchu.com/ & நோர்வே நக்கீரன் 

4 comments:

நா.முத்துநிலவன் said...

“இதில் அரசியல் இருக்கிறது” என்பதற்குள்ளும் அரசியல் இருக்கிறது நண்பரே!
ஜனகணமன என்பதும், அது பாடப்படும் மொழியும் இந்திய நாடு முழுவதற்கும் பொருந்துமா என்பது பற்றிய உங்கள் அடுத்த கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

viyasan said...

@ நா.முத்துநிலவன்,

தமிழ்நாட்டில் தமிழ்மொழியை வாழ்த்திப் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானதாக, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டுமென்பதற்கும், வெவ்வேறு மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்தியர் என்று ஒருங்கிணைந்த மக்கள், இந்தியர்களாகிய வங்காளி மக்களின் மொழியில் தேசிய கீதம் பாடுவதையும் ஒப்பிடுவது சரியானதாக எனக்குத் தெரியவில்லை.

அது புறமிருக்க, என்னுடைய கருத்துக்களையும் எனக்குப் பிடித்த கருத்துக்களையும் எழுதவதற்காக தான் நான் வலைப்பதிவு வைத்திருக்கிறேனே தவிர மற்றவர்கள் எதிர்பார்க்கிறதை எழுதுவதற்காக அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய காப்பியக்கோ சரிபுதீன் அவர்களின் கருத்தை, எனது கருத்துடன் சேர்த்து எனது வலைப்பதிவில் நான் பதிவு செய்ததன் காரணம் எனக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் தொடர்புண்டு என்பதால் தான். ஆனால் எனக்கும் இந்திய தேசிய கீதத்துக்கும் எந்த தொடர்பு கிடையாது ஆகவே அதைப் பற்றி எழுதவேண்டிய ஆர்வம் எனக்கில்லை. ஜனகணமண பற்றி முடிந்தால் நீங்கள் எழுத வேண்டியது தானே. :-)

‘’இதில் அரசியல் இருக்கிறது”

யாரோ கூறியதை இங்கே கொண்டு வந்து எழுதி விட்டீர்கள் போலிருக்கிறது.

நா.முத்துநிலவன் said...

'எனக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் தொடர்புண்டு என்பதால் தான். ஆனால் எனக்கும் இந்திய தேசிய கீதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது'- இதுதான் வியப்பாக இருக்கிறது. தமிழ்நாடு ஒரு தனி நாடல்லவே நண்பரே? தமிழ்நாடு தமிழ்பேசும் தேசிய இனத்துக்கான மாநிலம். அந்த மாநிலத்தை ஒருங்கிணைக்கும் அரசியல் சட்டம் ஒத்துக்கொண்டுள்ள நாடு இந்தியா. இதன் தேசிய கீதம் “ஜனகணமன” எனில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் ஒவ்வொருவரும் தேசிய கீதத்தையும் ஒத்துக்கொள்வதுதானே முறை? (தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒருவேளை வெளிநாட்டில் வாழ்ந்தால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகிறார்களோ இல்லையோ, இந்திய தேசிய கீதத்தை இசைத்துத்தானே தீரவேண்டும்? ஒருவேளை தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொள்ளாதவர் எனில், தமிழ்வாழ்த்துப்பற்றி விவாதிப்பது எளிது. தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்தான் இதன் பிரச்சினை புரியும்)

viyasan said...

@ நா.முத்துநிலவன்,

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை. தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும், தமிழர்கள் உலகில் எந்தக் கண்டத்திலிருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் தமிழ்த்தாயை வாழ்த்துப் பாடும் தமிழர்கள் இந்திய தேசிய கீத்ததையும் ஒத்துக் கொள்ள வேண்டுமென்கிறீர்களா??. அப்படியானால், இது போன்ற கருத்தை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. உங்களின் கருத்துப்படி பார்த்தால், இலங்கையின் தேசியகீதத்தையும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமா. தமிழ்நாடு இந்தியாவில் ஒருமாநிலமாக இருப்பதால், தமிழ்த்தாய்க்கு, இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடம் தானென்பதை உங்களைப் போன்ற இந்தியர்கள் ஒருவேளை ஒப்புக் கொள்ளலாம் ஆனால் மானமுள்ள எந்த உலகத் தமிழனும் அதை ஒப்புக் கொள்ள மாட்டான். தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொள்ளாத எங்களைப் போன்ற இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய தேசிய கீதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதை நாங்கள் ஒத்துக் கொள்ளவும் தேவையில்லை.

என்னைப் பொறுத்த வரையில், இந்திய தேசிய கீதத்துக்கும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் முடிச்சுப் போடுவதே முட்டாள்தனமானதாகும். இந்தியாவின் பழமை வாய்ந்த தேசிய இனங்கள் தமது, மொழி, கலை, கலாச்சார பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும் வகையிலும், அவை அழிந்து விடுமோ என்ற அவர்களின் பயத்தைப் போக்கும் வகையிலும் தான் மொழிவழி மாநிலங்கள் உருவாகின. அது தான் எந்த நாட்டிலும் மொழிவழி மாநில கூட்டமைப்பை உருவாக்குவதன் நோக்கமும் கூட. உதாரணமாக, கனடாவில் உள்ள கியூபெக் மாநிலத்தில் வாழும் பிரஞ்சு மக்களும், பிரான்சில் வாழும் பிரஞ்சுக்காரரும் தமது மொழியைப் வாழ்த்திப் புகழ்ந்து பாடுவர், பேசுவர். அதற்காக பிரான்சில் வாழும் பிரஞ்சு மக்கள் கனடாவின் தேசிய கீதத்தை ஒத்துக் கொள்ள வேண்டுமென யாரவது கூறினால், அதைப் போன்ற நகைச்சுவை வேறேறேதும் கிடையாது. அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.

நான் கூறியது என்னவென்றால் தமிழ்த்தாய் வாழ்த்து உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ள வகையில் எந்த ஒரு நாட்டையும் மட்டும் குறிப்பிடாமல், தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானதாக, ஒரே பாடலாக இருக்க வேண்டுமென்பது தான். தமிழ்த்தாய் மட்டும் தான் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானவளே தவிர, பாரதமும், தெக்கணமும், ‘திராவிடநல்திருநாடும் அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்தில் எதற்கையா திராவிடம்???