Sunday, January 24, 2016

தமிழ்க் கவிஞர் வைரமுத்து ஏன் சுடிதார் அணிகிறார்??வன்னி. முல்லைத்தீவு உழவர்விழாவில் கவிஞர் வைரமுத்து 


வெறும் சாதாரண மனிதர்கள் தமக்கு விரும்பிய ஆடைகளை காலநிலைக்கேற்ப அணிவதற்கும் தமிழர்களின் தலைவர்களும், கவிஞர்களும் தமது ஆடையணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டுக் கொதிக்கும் வெய்யிலில், தமிழ்நாட்டுக் காலநிலைக்கொவ்வாத ஆடையணிகளை, உதாரணமாக கறுப்புக் கோணிப்பையால் தலையை மறைத்துக் கொண்டு திரிவது போன்ற ஆடையணிகளை அணிந்தாலே  தவிர, சாதாரண மனிதர்களின் ஆடையணிகள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் சமுதாயத்தில் முக்கியமான தலைவர்கள், கவிஞர்கள் போன்றோர்களின் ஆடையணிகள் அந்த மக்களின் கலாச்சாரத்துடன் ஒரளவாவது ஒத்துப் போக வேண்டும். 

குறைந்த பட்சம் தமிழர்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் போதாவது அவர்கள்தமது ஆடையணிகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது அது பார்ப்பவர்களின் கண்களை உறுத்துவதுடன், எவ்வளவுக்கு ‘Odd’ ஆக இருக்குமென்பதையும் தெளிவாகக் காட்டுகிறது கவிஞர் வைரமுத்து அவர்கள் ஈழத்தில் தமிழ் மண்ணாகிய முல்லைத்தீவில் நடந்த தமிழர்கள் கலந்து கொண்ட உழவர் பெருவிழாவில் எடுக்கப்பட்ட படம். உண்மையில் அது எனக்கு மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களுக்குச் சிரிப்பையூட்டுகிறது. மேல்நாடுகளில் வேலைக்கு அணியும் உடையை விழாக்களுக்கு அணிய மாட்டார்கள், விழாக்களுக்கு அணிவதைப் போல் ஆடைகளை அணிந்து கொண்டு இறப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள். எங்கெங்கு, எதற்கு, எந்தவகையான  ஆடையணிகளை அணிய வேண்டுமென்பது மேல் நாட்டவர்களுக்கு நன்கு தெரியும். 

மைசூர் மகாராஜா முல்லைத்தீவுக்குப் போயிருந்தால் கூட தமிழர்களின் பண்பாட்டை மதிக்கும் வகையில் மற்றவர்களைப் போலவே வேட்டியணிந்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்து அப்படியே மைசூர் மகாராஜா போலவே தோற்றமளிக்கிறார்.


(எனது நண்பர்கள் சிலர் இந்தப் பதிவு அவ்வளவு சரியில்லை என்கிறார்கள்.  கவிஞர் வைரமுத்து அவர்கள் ஈழத்தமிழர்களைத் தனது தொப்புள்கொடி உறவுகள், உயிருக்கு உயிரானவர்கள், அவர் பாதி, நாங்கள் பாதி என்கிறார் (காணொளியைப் பார்க்க). அததகைய ஒரு அண்ணனிடம் முதன் முதலாக எங்களின் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள், உந்தக் குழாயைக் கழற்றி விட்டு எல்லோரையும் போல வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கலாமே என்று உரிமையுடன் கூறுவதில் என்ன தவறு? எவரின் மனதையும் புண்படுத்துவதல்ல இந்தப் பதிவின் நோக்கம்.)


கடந்த வருடம் இந்தியப் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த போது அவரது மாநில மக்களின் ஆடையணிகளையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஆண்கள் அணியும் வட இந்தியச் சுடிதார் அல்லது 'Leggings'  அணிந்திருந்தார் ஆனால் தமிழராகிய கவிஞர் வைரமுத்து ஏன் முல்லைத்தீவுக்குச் சுடிதாருடன் போனாரென்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனைய தமிழர்களுடன் பார்க்கும் போது அவரைத் தமிழர்களிலிருந்து வேறுபட்ட ஒருவர் போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது பாரதியாரின் தலைப்பாகை போல, இந்த ஆண்கள் அணியும் சுடிதாரை அவர் தனது அடையாளமாகப் பலவருடங்களாகக் கொண்டிருந்தாலும், உண்மையில் முல்லைத்தீவில் தமிழர் விழாவில் அவரை  வட இந்தியர்களுடைய சுடிதாருடன் பார்க்கும் போது என்னவோ போலிருக்கிறது, அவ்வளவு நன்றாக இல்லை.  :-)

வரலாற்றுப் புகழ் பெற்ற யாழ்ப்பாணம்-நகுலேச்சரம் கோயிலில் சுடிதாருடன் பிரதமர் மோடி 


முல்லைத்தீவு உழவர் பெருவிழாவில் வைரமுத்து
[ சனிக்கிழமை, 23 சனவரி 2016, 12:10.20 PM GMT ] 

வடக்கு உழவர் பெருவிழா சற்று முன்னர் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் மழைத்தூறலுடன் ஆரம்பமானது.
வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. 
வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றம் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்துகொண்டுள்ளனர். 
உழவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நடைபெறவுள்ள இந்த உழவர் பெருவிழாவில் மாவட்ட ரீதியாக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களும், சேதனப் பயிர்ச் செய்கையாளர்களும், கால்நடைப் பண்ணையாளர்களும், கோழிப் பண்ணையாளர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.pictures: tamilwin.com

No comments: