Monday, August 31, 2015

உண்மையில் இது தேவையா???



இலங்கை தமிழ் தேசிய முன்னணியின் (TNA) தலைவர்கள் பலரும் அவர்களின் வழமையான வேட்டி, சால்வையை களைந்து விட்டு,  கோட்டு சூட் அணிந்து கொண்டு, வேலையில்லாத ஒரு பட்டதாரி, முதல் முறை நேர்முகத் தேர்வுக்குப் போகிற மாதிரி, அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கச் சென்ற படத்தைப் பார்த்ததும்,  சிரிப்பு வந்தது மட்டுமன்றி, எனக்கும் அது சரியானதாகப் படவில்லை, உண்மையில் எனக்கு அந்தக் காட்சி மகிழ்ச்சியைத் தரவில்லை. இப்பொழுது சிங்கள இணையத்தளங்களில் சிங்களவர்களும் அந்தப் படத்தைப் பார்த்துப், பார்த்து நக்கலடித்துச் சிரிப்பதைப் பார்க்கும் பொழுது, நான் நினைத்தது சரிதான்,  உண்மையில் இது தேவையா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.


இலங்கைக்கு அமெரிக்கர்கள் வந்தாலென்ன, ஆபிரிக்கர்கள் வந்தாலென்ன, அது எந்தக் கொம்பனாக இருந்தாலும், வழக்கம் போல் தாம் அணிந்து கொள்ளும் சிங்களவர்களின் தேசிய உடையை மாற்றிக் கொள்ளும் வழக்கம் சிங்களத் தலைவர்களிடம் கிடையாது. அதை நாம் பாராட்டத் தான் வேண்டும். அதே வேளையில் குளிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்யும் போது காலநிலைக்கேற்ப ஆடையணிகளை அணிந்து கொள்ள அவர்களும் தவறுவதில்லை.

ஆனால் கொழும்பில் கொளுத்தும் வெய்யிலில், அமெரிக்க அதிகாரிகளை,  அதுவும் ஒரு இந்தியப்பெண்ணின் தலைமையில் வந்த அமெரிக்க குழுவைச் சந்திப்பதற்கு இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் அனைவரும், ஒருநாளும் இல்லாத திருநாளாக  வெள்ளைக்காரர்கள் போன்று கோட்டு சூட்டு அணிந்து கொண்டு, அதாவது 'Mashtas' ஐ வரவேற்க நிற்பதைப் பார்த்து, ஈழத்தமிழர்களின்  Colonial mentality  இன்னும் அவர்களை விட்டுப் போகவில்லை என்று சிங்களவர்கள் நக்கலடித்துச், சிரிப்பதிலும் நியாயமுண்டு என்று தான் எனக்கும் படுகிறது.

ஐரோப்பாவில் குளிர் நாடுகளுக்கு பயணம் செய்யும் ஈழத் தமிழ்த் தலைவர்கள் வேட்டி, சால்வை அணிந்து கொண்டு வரவேற்புகளிலும், கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை, அப்படி எதிர்பார்ப்பதிலும்  நியாயமில்லை. 

ஆனால் இலங்கையில் அதுவும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக ஈழத் தமிழ்த் தலைவர்களை மட்டும் தனியாகச் சந்திக்கும் போது, தமிழ்த்தலைவர்கள் அனைவரும், அவர்களுக்காக தமது  வழக்கமான ஆடையணிகளை, மேல் நாட்டு பாணியில் மாற்றிக் கொண்டு,  'Undertakers from an upmarket funeral parlor' போல நிற்பது அவ்வளவு நன்றாக இல்லை, அது ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை என்பது தான் உண்மை. ஒரு தேசிய இனத்தின் கலாச்சாரத்தில் அவர்களின் பாரம்பரிய ஆடையணிகளுக்கு முக்கிய பங்குண்டென்பதை யாரும் மறுக்க முடியாது, அதிலும் குறிப்பாக அவர்களின் தலைவர்கள் மறந்து விடக் கூடாது.
Undertakers 
உண்மையில் இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் வேட்டி சால்வையுடனும், வழக்கம் போல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பொட்டுடனும் சென்றிருந்தால், தமிழர்களுக்கும் தனித்துவமான கலாச்சார, பாரம்பரியமும், ஆடையணிகளும் உண்டென்பதை வந்திருந்த அமெரிக்கர்களும் உணர்ந்திருப்பர்.   

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதி வரை கூட வெறும் கோவணத்தைத் தேசிய உடையாகக் கொண்டிருந்த சிங்களவர்கள், தமக்கென ஒரு தேசிய உடையை, அதாவது வெள்ளை சாரம் அல்லது லுங்கியையும், வெள்ளை நீண்ட கை கொண்ட மேல்சட்டையையும் தமது தேசிய உடையாக  வடிவமைத்துக் கொள்ளுமுன்பே இலங்கைத் தமிழர்கள் தமது தேசிய உடையாக, வெள்ளை  வேட்டி, சால்வை, தலைப்பாகை,  என்பதை  வடிவமைத்துக் கொண்டனர். தலைப்பாகை அணிந்து கொள்வது வழக்கொழிந்து போனாலும், இலங்கைத் தமிழர்கள், குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழர்கள், அவர்களின் தலைப்பாகை அணிந்து கொள்ளும் பாரம்பரியத்தின் அடிப்படையில், திருமணத்தின் போது பகட்டான தலைப்பாகை  அணிந்து கொள்ளும் வழக்கத்தை இன்றும் கைவிடவில்லை. 

ஆகவே அமெரிக்கர்கள் அல்லது  ஐரோப்பியர்களுக்காக, அதுவும், அவர்கள் இலங்கைத் தமிழர்களைச் சந்திக்க விரும்பும் போது,  ஐரோப்பாவின் குளிர்கால காலநிலைக்கேற்ப அவர்கள் வடிவமைத்துக் கொண்ட, அவர்களின்  தேசிய உடையை அணிந்து கொண்டு, அவர்களைத் திருப்திப் படுத்த அல்லது அவர்களுக்கு மரியாதை அளிக்க  வேண்டிய தேவை கிடையாது என்பதை ஈழத் தமிழ்த் தலைவர்கள் இனிமேலாவது புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம். அல்லது வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடிப்பதை இலங்கைத் தமிழர்கள் இன்னும் கைவிடவில்லை என்று சிங்களவர்கள், நக்கலடித்துச், சிரிக்கத் தான் செய்வார்கள். :-)

தமிழ்த்தேசியம் என்றால் என்ன...................?



"மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது". உதாரணமாக, அல்சீ(ஜீ)ரியாவில் இருந்து இந்தோனேசி(ஷி)யா வரை உள்ள முசு(ஸ்)லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம். உருது மொழி பேசுபவர்கள் பாகிசு(ஸ்)தானில் வாழ்கிறார்கள். வங்கதேசத்து முசு(ஸ்)லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல.
"தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகிய நால்வருக்கும் ஒற்றைத் திராவிடக்கோவணம் கட்டி விடுகின்றனர். தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தங்களைத்திராவிடர்கள் என்று அம்மாநிலங்களில் கூறிக் கொள்வதுமில்லை. தமிழர்களைத்தங்களின் இன உடன் பிறப்புகளாகத் கருதுவதுமில்லை. அம்மூவரும் தமிழர்களைப்பகைவர்களாகவே கருதுகிறார்கள்."

ஆகவே, திராவிடம் என்பதை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக் கொள்ள முடியாது. ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத் தேசிய இனம். கன்னடர்கள் கன்னடத் தேசிய இனம். தமிழர்கள் தமிழ்த் தேசிய இனம்தான். 
மங்கோலியன் மரபினப் பகுதியில் சீனா, கொரியா, ரசியா, யப்பான் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், யப்பானியர்கள் யப்பான் தேசிய இனம், சீனர்கள் சீனத் தேசிய இனம், கொரியர்கள் கொரியத் தேசிய இனம். இவை அனைத்தும் ஒரே மங்கோலியத் தேசிய இனமாக உருவெடுத்து விடவில்லை. 
தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது. நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை, இலக்கியம், பொதுப் பழக்கவழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை. இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம்.  
தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதுவே. இதைத் தான் நாங்கள் பேசுகிறோம்!'' 

 தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.


நன்றி: http://2009may18.blogspot.ca/2012/08/blog-post_4.html