Tuesday, September 1, 2015

நாம் தமிழர் தலைவர் சீமானுக்குப் பாராட்டுகள்!


தமிழ்நாடு 50 ஆண்டுகாலமாக "எங்களுக்கு மதமில்லை சமயமில்லை யாதும் ஊர் யாவரும் கேளிர் என்று உளறிக்கொண்டு"  கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தபோது அதன் கோவணம் வெளியே  தெரிந்ததைக் கவனிக்கவில்லை. அதுவே பல தமிழ் இழப்புகளுக்குக் காரணம். வீரத்தமிழர்முன்னணி விரைந்து கோயிலில் தமிழைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். அங்கில்லாத தமிழ் எங்கும் வளராது. மீண்டும் உங்களுக்கும் உங்கள் அமைப்பினர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.http://viyaasan.blogspot.ca/2015/02/worth-repeating.html

தமிழ்நாட்டில் தமிழரல்லாதவர்களுக்கு தேவையில்லாமல் விளம்பரமும், ஆதரவும் கொடுத்து அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் கனவு காணக் கூடியளவுக்கு ஆதரவளிக்கும் பலரும்,  தமிழ், தமிழர், தமிழர்களின் நலன்,  தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்களின் பாரம்பரியம் என்பவற்றைப்  பற்றி பேசும் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதில்லை. ஆதரவளிக்காது விட்டாலும் பரவாயில்லை, அந்த தமிழர்களுக்கெதிராக பகுத்தறிவு, பொதுவுடைமை, முற்போக்கு  என்ற போர்வையில் பிரச்சாரம் செய்து அவர்களை அடக்கி விட, அவர்கள் பற்றிய செய்திகளை அப்படியே மறைத்து விட  முயல்வதை நாம் காணலாம்

தமிழ், தமிழர், தமிழ்தேசியம் பற்றி பேசுகிறவர்களை கேலி செய்ய, அவர்களுக்கெதிராக பொய்ப்பிரச்சாரம் செய்யவென்றே பகுத்தறிவு, பொதுவுடைமை, சாதியொழிப்பு எனப் பற்பல  வேடம் பூண்ட வேடதாரிகள் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டு அலைவதை நாம் இணையத் தளங்களிலேயே காணலாம். இவர்களை எல்லாம் பொருட்படுத்தாது, தமிழர்களை தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் இணைக்க, குறைந்த பட்சம் முயற்சியாவது செய்யும் திரு. சீமான் அவர்களை எப்படிப் பாராட்டினாலும்  தகும்.

உண்மையில் தமிழ் வளர்ந்ததும், வளம் பெற்றதும், வாழ்ந்ததும்  தமிழர்களின் கோயில்களில்  தான். அந்தக் கோயில்கள் எல்லாம்  தமிழரல்லாதவர்களினதும், வந்தேறிகளினதும் ஆக்கிரமிப்புக்குட்பட்ட பின்னர் தான் தமிழும், வீழ்ந்தது தமிழர்களும் வீழ்ந்தனர் ஆகவே, தமிழர்களின் பாரம்பரிய ஆலயங்களை  மீட்பதும், அவற்றை தமிழாக்குவதும், மீண்டும் தமிழினதும், தமிழர்களினதும் எழுச்சிக்கு முதல்படியாகும். ஆகவே தமிழர்களின் முன்னோர்களின் தமிழ்நாட்டுக் கோயில்களை தமிழாக்குவதும், தமிழுக்கும் தமிழர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதையும் பற்றி, சீமான் மட்டுமன்றி, எவர் பேசினாலும் அதை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு உண்மையான தமிழனதும் கடமையாகும். அந்த அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானைப் பாராட்டாமலிருக்க என்னால் முடியவில்லை.


"....களப்பிரர் காலக் கொடுமைகளினாலும் அவர்கள் பின்பற்றிய தமிழ் மண்ணுக்கு ஒவ்வா சமயக் கொள்கையினாலும்,  செங்குட்டுவன் காலத்திற்குப் பின்னும் இருந்த தூய தமிழை சமக்கிருதக் கலப்பைச் செய்து தமிழ் மொழியை நாசமாக்கியவர்களில் முதன்மையானவர்கள் களப்பிரர்களே;   இன்று ஆங்கிலத்தை வைத்து  திராவிடம் தமிழை அழிப்பது போல.  
இந்த நிலையில் இருந்து தமிழ் மொழியை மீட்டு, மறுமலர்ச்சியடையச் செய்தவர்கள் பக்தி இயக்கத்தினர்தான். ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பக்தி இயக்கத்திற்கு வித்திட்டிருக்காவிடில் தமிழ் என்றோ சேர, சோழ, பாண்டிய நாடுகளை விட்டுப் போயிருக்கும். அன்று தமிழகத்தில்தோன்றிய பக்தி என்கிற தூயதமிழ் இயக்கம் தோற்றிய வீரமும், மானமும்தான் பிற்காலச் சோழப்பேரரசை உருவாக்கியதுஅதேபோல இன்று நீங்கள்  தோற்றியிருக்கும் வீரத்தமிழர்  முன்னணியும் நல்லதொரு தமிழகத்தை உருவாக்கட்டும். சோழர் அரசு உள்ளிட்ட யாவற்றையும் திராவிடம் கேலிக்குள்ளாக்கி நம்மை இத்தனை நாள் மயக்கத்தில் வைத்திருந்தது. 
சம்பந்தரும், அப்பரும் தூயதமிழை மீட்டபோது, தமிழியத்தை மீட்டபோது களப்பிரம் ஒருவரை தீவைத்து எரிக்கப் பார்த்தது; இன்னொருவரை சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப் போட்டது. இறுதியில் தமிழியம்தான் வென்றது. அதேபோல தமிழியத்தை மீட்க நினைப்போருக்கெல்லாம் தீரா இடர்களையும் அடக்கு முறையையும் திராவிடம்  தொடர்ந்து தந்து கொண்டிருப்பது, அதே களப்பிரக் கலாச்சாரமாகும். தமிழையும் தமிழரையும் காக்க வந்த பரம்பொருள் தான் தானென  பரப்புரை செய்த திராவிடம், தமிழைக் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கவேயில்லை இன்றுவரை....."

 நாம் தமிழர் கட்சியின் முன்னணி அமைப்புகளில் ஒன்றாகிய வீரத்தமிழர் முன்னணி கிராமப் பூசாரிகளின் மாநாடு நடத்தி அதில் பல நல்ல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்

இந்து சமய அறநிலையத் துறை என்பதை தமிழர் மத அறநிலையத் துறையாக்க வேண்டும்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நடத்திய கிராம பூசாரிகள் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் முன்னணி அமைப்புகளில் ஒன்று வீரத் தமிழர் முன்னணி. இதன் சார்பில் திருப்பூரில் கிராம பூசாரிகள் மாநாடு நேற்று நடைபெற்றது.

இம் மாநாட்டில் சீமான் தலைமையுரை நிகழ்த்தினார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: - தமிழர் மரபு வழி வழிபாட்டுமுறை என்பது, நன்றி நவிழ்தல் தொடங்கி, நடுகல் முறை வழியாக முன்னோர்களையும் இயற்கையையும் மட்டுமே வணங்கி வந்துள்ளது. பழந்தமிழ் நூல்களிலோ, தமிழர் வரலாற்று சுவடுகளிலோ "இந்து" என்ற சொற்பதம் இல்லை. எனவே இந்து என்ற சொல்லும், இந்து என்ற மதமும் தமிழருடையது அல்ல. தமிழக கோவில்களை நிர்வகிக்கும் துறையின் பெயரான "இந்துசமய அறநிலையத்துறை" என்பதற்கு பதிலாக "தமிழர் மத அறநிலையத்துறை" என்ற பெயர்மாற்றத்தை வீரத்தமிழர் முன்னணி கோருகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் ஆணையை உடனே நடைமுறைப்படுத்த அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். அர்ச்சகர் தொழிலை தமிழர் மத அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அரசுவேலையாகக் கருதி, மற்றைய அரசு வேலைவாய்ப்புகளில் எத்தனை விழுக்காடு சாதிவாரி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதோ அதே விழுக்காடு அளவு அர்ச்சகர் வேளையிலும் அரசு பின்பற்றவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கோருகிறது. - உலகிலேயே மூத்த மொழியான எமது தமிழ்மொழிக்குத் தமிழக கோவில்களில் முழங்க தடை இன்றளவும் இருந்துவருகிறது. தமிழர் நாட்டின் கோவில்களில் "தமிழிலும் அர்ச்சனைச் செய்யலாம்" என்ற சொல்லை நீக்கி "இங்கு தமிழில் மட்டுமே அர்ச்சனைச் செய்யப்படும்" என்ற நிலை ஏற்பட அனைத்து கோவில்களிலும் தமிழில் மட்டுமே அர்ச்சனைச் செய்யவேண்டும் என்பதை கட்டாயமாக்கி தமிழர் இறையாண்மையுள்ள தமிழக அரசு அரசாணையாக நிறைவேற்றி செயல்படுத்திடவேண்டும் என வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது.


தமிழ்நாட்டின் மண்வரலாறு, பழந்தமிழ் வீரம் இவைகளோடு கூடிய கிராம கோவில்கள் அனைத்தும் சிறுக சிறுக தமிழ் பூசாரிகளிடம் இருந்து பிராமணியர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுவருகிறது. இந்நிலையை தடுக்கவேண்டும். கிராமங்களில் இருக்கும் அனைத்து குல தெய்வ கோவில்களை நிருவாகிக்கும் உரிமையினை அந்த கோவில்களை நிருவகித்துவந்த கிராம பூசாரிகளுக்கே உரியது என்றும், அந்த கோவில்களில் பணிபுரியும் கிராமபூசாரிகளுக்கு மாத ஊதியத்தைத் தொடர்புடைய துறை வழங்கவேண்டும் என்றும் வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது

இதுவரை கோவில்களில் பணிசெய்த வயது முதிர்ந்த கிராமக் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை அரசு வழங்கவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றுகிறது. - கோவில் சீரமைப்பு என்ற பெயரில் தமிழரின் கட்டிட கலைகள், கல்வெட்டு ஆவணங்கள், தமிழர் பழமைக் கூறும் வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் சிறுக, சிறுக ஆளும் ஆரிய அதிகார வர்க்கத்தினால் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே கோவில் மற்றும் கல்வெட்டு சீரமைப்பிற்கு முன்னதாக அனைத்து பழைய புராதான சின்னங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றுகிறது.

 - ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் போகர் வழிவந்த புலிப்பாணி சாமிகள் தொடர்ந்த வழக்கில் சுமார் 30 வருட போராட்டத்திற்கு பிறகு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தால், பழனி உள்விவகார துறையை நிருவாகிக்கும் பொறுப்பினைப் புலிப்பாணி சாமிகளுக்கே வழங்கி தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளது. இதை உடனே அரசு செயல்படுத்த வீரத்தமிழர் முன்னணி கோருகிறது

- தமிழர் நாட்டின் பாரம்பரியம் மிக்க தமிழ்த்தேசிய இன வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் எனும் சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தடையை உடனடியாக நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நடுவண் அரசை காரணம் காட்டி தமிழக அரசு வழக்கமாக தப்பித்து கொள்வதில் இருந்து விலகி இந்த தடையை நீக்க முழுமனதோடு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கேட்டுக்கொள்கிறது

தவறினால் வீரத்தமிழர் முன்னணி இதுதொடர்பாக நீதிமன்றத்தினை அணுகும் என்றும், வரும் ஆண்டில் இருந்து சல்லிக்கட்டை வீரத்தமிழர் முன்னணியே முன்னின்று நடத்தும் என்றும் வீரத்தமிழர் முன்னணி பெரு அறிவிப்புச் செய்கிறது

- மறம் வீழ்த்தி அறம் காத்த மானத்தமிழ் மறத்தி எங்கள் பெரும்பாட்டி கண்ணகியின் கோவில் இன்று கவனிப்பாரற்று சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த கோவிலுக்கு தமிழகத்தின் வனப்பகுதியின் வழியாகச் செல்ல பாதை இருந்தும் தமிழக அரசு அப்பாதையை உபயோகிக்க அனுமதிப்பதில்லை. கேரளா அரசின் எல்லைப்பகுதி வழியாக செல்லும் பாதையில் கேரளா வனசரக காவல்துறை மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. ஆளும் அரசின் மெத்தன போக்கையும், அண்டையரசின் சர்வாதிகாரத்தையும் வீரத்தமிழர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வனப்பகுதிவழியாக உள்ள பாதையை தமிழக அரசு தயார்செய்து பயன்பாட்டிற்குத் தரவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கேட்டுக்கொள்கிறது

கண்ணகியின் நினைவை போற்றும் வகையில் வருகின்ற சித்திரை முழுநிலவு நாள் அன்று கண்ணகி கோவில் நோக்கிய பெரும் பயணத்தை வீரத்தமிழர் முன்னணி மேற்கொள்ளும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக உறுதி ஏற்கிறது.

கோயிலைப் பிடித்தவரெல்லாம் ஆட்சியைப் பிடித்த வரலாறு,7ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் இருக்கிறது. பண்பாட்டுப்புரட்சி என்பது அந்த 6-7-8 ஆம் நூற்றாண்டினைத் திரும்பிப் பார்க்காமல் தமிழ்நாட்டில் உருவாக முடியாது.” இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் மத அறநிலையத் துறையாக்குக- சீமானின் பூசாரிகள் மாநாடு வலியுறுத்தல்!
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-demands-change-the-hrce-name-234631.html

1 comment:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த ஆய்வுப் பதிவு
தமிழகத்தில் தமிழுணர்வு மலரட்டும்

http://www.ypvnpubs.com/