Tuesday, May 19, 2015

‘சிங்களத்தீவு’ அல்ல, அது இலங்கைத்தீவு!


இலங்கை மக்களில் பெரும்பான்மையினர் சிங்கள மொழியைப் பேசுகிறவர்கள் என்ற அடிப்படையில் இலங்கையை சிங்களத் தீவு என அழைக்கும் வழக்கம் இலங்கையின்  வரலாற்றுக்காலம்  தொடக்கம்  நடைமுறையில் உள்ளதல்ல என்ற உண்மையை சிலர் மறைக்கப் பார்க்கிறார்கள் அல்லது அவர்கள் அதை அறியார் என்பது தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்துக் காக்கைகள் எல்லாம் இரவில் தூங்கப் போகும், யாழ்ப்பாணத்துக்கு அண்மையிலுள்ள தீவுக்கு தமிழர்கள்  காக்கைதீவு என்று ஏன் பெயரிட்டார்களோ அதே காரணத்துக்காக, அதாவது இலங்கையில் பெரும்பான்மையினர் தம்மை சிங்களவர்கள் என அழைக்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டுமே, பல தமிழ்ப்புலவர்கள் மட்டுமன்றி, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து, மறைந்த பாரதியார் போன்ற தமிழ்நாட்டுக்  கவிஞர்கள் கூட இலங்கையை  சிங்களத்தீவு என அழைத்தனரே  தவிர, இலங்கையின் பூர்வீக காலம் தொடக்கம் அங்கு சிங்களவர்கள் தான் வாழ்கிறார்கள் தமிழர்கள் வாழவில்லை என்ற கருத்தில் அல்ல.

அங்கு வாழும் பறவைகளில் பெரும்பாலானவை காகங்கள் என்ற காரணத்தால், தமிழர்கள் அந்த தீவை காக்கைதீவு என்று அழைப்பதனால், அங்கு வேறு எந்தப் பறவைகளும் வாழவில்லை என்றோ அல்லது அங்கு வாழும் காக்கைகள் அல்லாத பறவைகள் எல்லாம் பிற்காலத்தில் குடியேறியவை என்று கருத்துமல்ல,அப்படி ஒரு அடிமுட்டாள் கூட வாதாடுவதுமில்லை.

இலங்கையில் வரலாற்றுத் தொடக்கத்திலிருந்து  இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும்  தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்கள் கூட, இலங்கையைச்  சிங்களத் தீவு என அழைக்கவில்லை என்பது தான் உண்மை. ஆனால் சில தமிழ்நாட்டுச்சொம்புதூக்கிகள்மட்டும் வார்த்தைக்கு வார்த்தை இலங்கையை சிங்களத்தீவு என அழைப்பதன் நோக்கம் என்ன என்பதையும், இலங்கை அல்லது ஈழம் என்று தமிழர்கள் அழைக்கும் அழகான தமிழ்ப்பெயர் இருக்கும் போது, எழுத்தாளர் என்று தமக்குத்  தாமே பெயர் சூட்டிக் கொண்டு, இலங்கையை சிங்களத்தீவு என அடிக்கடி அழைக்கும் சூக்குமத்தையும் உணர முடியாதளவுக்கு ஈழத்தமிழர்கள் யாரும் முட்டாள்கள் அல்ல

ஈழத்தில் தமிழர்களின் தாயகக் கோரிக்கையை மறுக்கும், இனவாதச் சிங்களவர்கள் பலர், பாருங்கள், உங்களின் தமிழ்ப்புலவர்களே இலங்கையை '  சிங்களத்தீவு' எனத்தான் அழைத்திருக்கின்றனர் என்று வாதாடுவதை எங்களில் பலர் அனுபவத்தில் கண்டிருக்கிறோம், இதுவும் அதன் தொடர்ச்சி போல் தான் தெரிகிறது. செஞ்சோற்றுக் கடனோ அல்லது வேறு ஏதாவது நன்றிக்கடனோ  யார் கண்டது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கிறதென்று யாருக்குத் தெரியும்.  

இலங்கையின் வரலாற்றைக் கூறுவதாகக் கருதப்படும் மகாவம்சம் கிறித்துவுக்கு முன் எழுதப்பட்டதா அல்லது கிறித்துவுக்குப் பின் எழுதப்பட்டதா என்பது கூடத் தெரியாதவர்கள் எல்லாம் இலங்கையின் வரலாற்றைப் பற்றியும், இராமர் பாலத்தையும் பற்றிக்  கட்டுரை எழுதக் கிழம்பினால் இப்படியான தவறுகள் தவிர்க்க முடியாதவை தான்.    :-)

மகாவம்சத்தில் எங்குமே சிங்களத்தீவு என இலங்கை அழைக்கப்படவில்லை. வட இந்திய மன்னன்  அசோகனின் புத்த துறவிகளால் சிவனை வழிபட்ட சைவனாகிய நாக அரசன் தேவநம்பியதீசனுக்கு புத்தசமயம் அறிமுகப்படுத்தப்படும் வரை இலங்கையில் புத்தரும் இல்லை, பெளத்தர்களும் இல்லை, சிங்களவர்களும் இல்லை.

கிறித்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டு வரை,  அனுராதாபுரத்தில் மகாவிகாரையில் வாழ்ந்த புத்த பிக்குகளால் பெளத்தத்தின் அடிப்படையில்  சிங்களவர் என்ற இன அடையாளம் உருவாக்கப்படும் வரை இலங்கையில் சிங்களவர் என்று யாரும் கிடையாது.

இந்தியாவில் பெளத்தம் அழிந்து போவதை அவதானித்த மகாவிகாரை பிக்குகள் (அதில் முக்கியமானவர்கள் தமிழ்ப் பிக்குகள்) பல இன, மொழி, சாதியைச் சேர்ந்த பெளத்தர்களை இணைத்து, இந்தியாவிலுள்ள புராணக் கதைகளையும் இட்டுக்கட்டி விஜயன் என்ற கதாபாத்திரத்தின் கீழ்  சிஹல என்ற இனக்குழுவை உருவாக்கினர். ஆனால் அதன் பின்னர் கூட, பிற்காலம் வரை எந்த இலங்கை அரசனும் தன்னை சிங்களவன் என்றோ அல்லது ஆரியன் என்றோ அழைத்துக் கொண்டதில்லை.

இலங்கைக்கு விஜயனதும் அவனது 700 நண்பர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்கள் (எவராவது) சிங்களவர் என்பதற்கோ எந்தவித வரலாற்று ஆதாரமும் கிடையாது. சிஹல என்ற சொல் கூட சிங்களவர்களின் வரலாற்று நூல்களாகிய தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும் கூட தொடக்கத்தில் முதல் அத்தியாயத்தில் இரண்டு முறை மட்டும் உள்ளது. அதுவும் ஒரு இனப்பெயராக அல்லாமல், சிங்கத்திலிருந்து பிறந்ததாக, இயற்றப்பட்ட கட்டுக் கதையின் அடிப்படையில் தான்.

ஆனால் பல பழமையான வரலாற்று ஆதாரங்களும், பிராமி கல்வெட்டுக்களும், குகை எழுத்துக்களும், பாளி நூல்களும்,  தமிழர், டமேடா, டமெலா, தமிழா, தெமல எனக் குறிப்பிடப்படும் இனக்குழுவினர் இலங்கையில் தொன்று தொட்டு வாழ்ந்தனர் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

சிங்களவர்களின் ஜாதகக் கதைகளில் கூட தமிழர்கள் பற்றிய, தமிழர்களின் நாடு (தெமல ரட்ட) பற்றிய குறிப்புகள் உண்டு, ஆனால் சிங்கள என்ற இனம் பற்றியோ அல்லது மொழி பற்றியோ மகாவம்சம் எழுதப்படுவதற்கு முன்பும், பின்பும் சில நூற்றாண்டுகள் வரை எந்த குறிப்பும் கிடையாது. சிங்கள, சிஹல, ஹேல என்ற எந்தச் சொல்லும் கிடையாது. ஆகவே வரலாற்றின் அடிப்படையில் இலங்கையை சிங்களத் தீவு என அழைப்பது தவறானதொன்றாகும்.

இலங்கைக்கு பெளத்த மதத்தைப் பரப்ப வந்த மகிந்த தேரர், இலங்கைத் தீவிலிருந்த மக்களுக்கு அந்த தீவின் மொழியில் (Deepa Basha) போதித்தார் என்கிறது மகாவம்சம். ஆனால் அந்ததீபபாசை’ (தீவின் மொழி) சிங்களம், அவர் சிங்களத்தில் அங்கே வாழ்ந்த மக்களுக்குப் போதித்தார்  என்று மகாவம்சம் ஒருபோதும் கூறவில்லை. மகிந்த தேரர் தமிழ்நாட்டில் தங்கி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு புத்தமதத்தைப் போதித்து, தமிழ்நாட்டில்  புத்தமதத்தைப் பரப்பிய பின்னர் தான் இலங்கைக்கு படகு மூலம் சென்றாரே தவிர அவர் பறந்து செல்லவில்லை என்கிறார் ஜப்பானிய பெளத்த வரலாற்றாசிரியர் ஹிக்கொசக்கா, தமிழ்நாட்டில் தமிழைக் கற்ற மகிந்த தேரோ தமிழில் இலங்கைத் தீவின் குடிகளுக்குப் போதித்திருக்கலாம். ஆகவே மகாவம்சம் கூறும் 'தீபபாசை' தமிழாக இருக்க கூடிய சாத்தியக் கூறுகள் தான் அதிகமுண்டு.

அனுராதபுரத்திலும், பொலநறுவையிலும் இருந்து இலங்கையை ஆண்ட அரசர்கள் எவருமே தம்மை சிங்களவர்கள் என்று அழைத்துக் கொண்டதில்லை. அதே போல் இலங்கையின் தமிழ் அரசர்களும் தம்மை சிங்களவர்கள் என்றோ அல்லது அவர்களைச் சிங்களவர்களின் அரசன் என்றோ அழைத்துக் கொண்டதில்லை.  

கிறித்துவுக்குப் பின் 13ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே கோட்டை அரசும், கண்டி அரசும் சிங்கள அரசு என அழைக்கப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் சிங்கள- தமிழ் இனவேறுபாடு உருவாக்கப்பட்டு விட்டதால் தமிழர்களும் தமக்கென தனி அரசை அமைத்துக் கொண்டனர். அதிலும் கண்டி அரசை ஆண்டவர்கள் கலிங்கர்களும், தமிழ் பேசும் தென்னிந்திய நாயக்கர்களுமே தவிர சிங்களவர்கள் அல்ல, அந்த தென்னிந்தியர்களுடன் தமிழர்களுக்கு எந்த வித பிரச்சனையும் இருக்கவில்லை.

இலங்கை அல்லது ஈழம் என்ற அழகான என்ற தமிழ்ப்பெயரில் இலங்கைத்தீவை அழைத்துக் கொள்ளவும், தமது கட்டுரைகளில் குறிப்பிடுவதையும் விரும்பாத, அல்லது அதைச் சகித்துக் கொள்ள முடியாத, ஈழத்தமிழர்களின் எதிரிகளும், சிங்கள 'சொம்புதூக்கி'களும் வேண்டுமானால், இக்காலத்தில் இலங்கையில் சிங்களவர்கள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் இனக்குழுவினர் பெரும்பான்மையினராக உள்ளனர் என்ற அடிப்படையில் சிங்களத்தீவு என அழைத்துக் கொள்ளலாமே தவிர, இலங்கைதீவு, சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்தில் இலங்கையை சிங்களத்தீவு என்று அழைத்துக் கொள்ளுமளவுக்கு வரலாற்று ரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது என்பது தான் உண்மை.


இலங்கை என்பது தமிழ்ச்சொல்லே தவிர சமக்கிருதச் சொல் அல்ல!


இலங்கை என்பது தமிழ்ச்சொல்லே தவிர அது லங்கா என்ற சமக்கிருதச் சொல்லின் திரிபல்ல. இலங்கை என்ற தமிழ்ச் சொல் தான் சமக்கிருதத்தால் இரவல் வாங்கப்பட்டுலங்காஎனத் திரிபடைந்தது.

இலங்கு > இலங்கு தீவு > இலங்கைத் தீவு > இலங்கை

இலங்கை என்ற தமிழ்சொல்லின் வேர்கள் இலங்கும் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவாகியது.  தமிழில் இலங்கும் என்றால் விளங்கும், ஒளிரும், தெளிவாகத் தெரியும், இடம், செழிப்பு, செழுமை நிறைந்த, பல பொருள் படும்.

 பாக்குநீரிணையில் ஒளிர்ந்து கொண்டு, நீர்வளமும், நிலவளமும் நிறைந்த,, தெளிவாகத் தெரிந்த தீவை தமிழர்கள் இலங்கு(தீவு) என அழைத்தனர். அதுவே இலங்கை என மருவியதுமகாவம்சத்தில் எங்குமே இலங்கை சிங்களத்தீவு என அழைக்கப்படவில்லை.

இலங்கு என்ற தமிழ்ச் சொல்லையும் அதன் கருத்தையும்  நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தனின் தேவாரத்தில் காணலாம்.
   "பொடி இலங்குந் திருமேனி யாளர் புலியதளினர்
 அடி இலங்குங் கழலார்க்க  ஆடும் மடிகள்ளிடம்
 இடி இலங்குங் குரலோதம் மல்கவ் வெறிவார்திரைக்
 கடி இலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. "   

பொ-ரை: திருநீறணிந்த திருமேனியர். புலித்தோல் உடுத்தவர். திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர். அவர் உறையுமிடம், இடிபோல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப்பெருக்கு முத்துக்களை மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும்.

 கு-ரை: இலங்கும்-விளங்கும். கடல் அலையொலி இடி யொலி போலுள்ளதாம். கடி-விரைவு, மிகுதி. அடிகள் இடம் கடற்காழி என்றவாறே மேலும் இயைத்துக் கொள்க.


இன்றும் மே பதினெட்டாம் நாள்ஈழத்தில் எமது முன்னோர்கள் இரத்தம் சிந்திக் காத்தஈழத்தமிழர்களின் தாயகமண்ணை மீட்கும் போரில் மாண்ட தமிழர்களை நினைவு கூரும் இந்த புனிதமான நாளில்,   சிங்களத்தீவு என்று இலங்கையை அழைப்பது தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகத் தான் எனக்குப் படுகிறது.  

4 comments:

Yarlpavanan Kasirajalingam said...

தங்களின் சிறந்த பதிவினை பலரறியும் வண்ணம் "அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார்" என்ற தலைப்பில் http://yppubs.blogspot.com/2015/05/blog-post_21.html தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.

Yarlpavanan Kasirajalingam said...

தங்களின் சிறந்த பதிவினை பலரறியும் வண்ணம் "அறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார்" என்ற தலைப்பில் http://yppubs.blogspot.com/2015/05/blog-post_21.html தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.

A.Jay Kanthan said...

rrr

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/