Sunday, February 1, 2015

பார்ப்பனீயத்தை இப்படியும் எதிர்க்கலாம்!


பெரும்பான்மைத் தமிழர்களின் மதவுணர்வைப் புண்படுத்தி அவர்களின் முன்னோர்கள் கட்டிக்காத்த சைவ-திருமாலியப் பாரம்பரியங்ளை இழிவுபடுத்தியும், தமிழர்களே தமது முன்னோர்களின் கட்டிட, சிற்பக் கலைகளை உலகுக்கு எடுத்தியம்பும் கோயில்களின் அருமை, பெருமைகளை உணராமல் அவற்றைச் சிறுமைப்படுத்துவதும் தான் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதற்குள்ள ஒரே வழி என்று தமிழ்நாட்டில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் தமிழர்களின் முன்னோர்களின் சைவத்தமிழ்ப் பாரம்பரியங்களைக் காப்பதன் மூலமும், அவற்றை மீண்டும் தமிழாக்குவதன் மூலமும்  பார்ப்பனீயத்தை எதிர்க்கலாம் என்பதைசுவிற்சர்லாந்தில் சில ஈழத்தமிழர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 

அவர்களின் முன்மாதிரியை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் பின்பற்றி, உலகின் மூலை முடுக்கெல்லாம் கோயில் கட்டும் ஈழத்தமிழர்கள், அவர்களின் கோயில்கள் வெறுமனே பார்ப்பனர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இடங்களாக இல்லாமல், சாதி வேறுபாடற்று, தமிழில்  பூசை நடைமுறைகளைக் கற்றுத் தேர்ந்த தமிழர்கள் அனைவரும் கருவறை சென்று பூசை செய்யும் கோயில்களாக மாற வேண்டும்.

உண்மையில் தமிழினத்தின் சாபக்கேடாகிய சாதியை ஒழிக்க பெரும்பான்மைத் தமிழர்களின் மதநம்பிக்கைகளைப் புண்படுத்தவோ எதிர்க்கவோ தேவையில்லை, அதற்குப் பதிலாக தமிழர்களின் சைவத்தையும், வைணவத்தையும் தமிழாக்கினால் போதும் என்பதை நடைமுறையில் காட்டியிருக்கிறார்கள் புலம்பெயர்ந்த  ஈழத்தமிழர்களென நம்புகிறேன்.

சுவிற்சர்லாந்திலுள்ள ஞானலிங்கேச்சுரர் கோயிலில் சமக்கிருத வேதங்கள் எதுவுமில்லாமல், தெய்வத்தமிழில் நாயன்மார்களின் தேவாரப் பாடல்கள் ஒலிக்க,  குடமுழுக்கு நடத்தியது  மட்டுமன்றி, தமிழன் திருநாவுக்கரச நாயனார் காலத்தில் தமிழர்கள் அனைவரும் சாதி பேதமின்றி கருவறை புகுந்துபோதொடு  நீர் சுமந்தேத்தி புகுவாரவர் பின்புகுந்து  இறைவனைத் தொழுதது போன்றே, தமிழர்கள் அனைவரும் கருவறை புகுந்து இறைவழிபாட்டை வழிபாட்டை மேற்கொள்ளும் வகையில் செய்துள்ளனர். இது தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியதுடன், தமிழ்நாட்டிலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் தமது ஆலயங்களில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழர்களின் சைவ, திருமாலிய மதங்களை மீண்டும் தமிழாக்க வேண்டும்

தமிழ்நாட்டில் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் அனைத்தும் தமிழர்களின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அத்தலங்களில் தமிழுக்கும், தமிழ்த் திருமுறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். 


"சுவிட்சர்லாந்து பேர் மாநிலத்தின் சைவநெறிக் கூடம் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் குடமுழுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.   முதன் முறையாக ஐரோப்பாவில் செந்தமிழ் மொழியில் நடைபெறும் இத் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.  
புலம்பெயர் தமிழ் மக்கள் வரலாற்றில் ஓர் முக்கிய நிகழ்வாக சுவிட்சர்லாந்து நாட்டில் சைவத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அங்கீகாரம் கொண்ட திருக்கோவிலாக இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சமூகத்தில் எழும் பொதுவான கேள்விகளான இறைவனை தமிழ் மொழி மூலமாக பூசிக்க முடியுமா அல்லது இது எமது சைவப் பாரம்பரியத்தில் ஏற்புடையதாபோன்ற வாழ்வியல்சமூகவியல் நோக்கிலமைந்ததுமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் இத்திருக்கோவிலும் பூசை வழிபாட்டு முறைகளும் அமைந்துள்ளன.  
இன்றைய புலம்பெயர் சூழலில் தமிழ்ச் சமூகத்தில் சிக்கலான பண்பாட்டு வாழ்வியலில் வாழ்ந்துவரும் எமது மக்களுக்கு ஓர் முற்போக்கான சமூக வரலாற்று நிகழ்வாக அமையும் இத்திருகுடமுழுக்கு அமைய உள்ளது. திருக்குட முழுக்கை முன்னிட்டு நேற்று மாலை வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூசை நடைபெற்றது7 comments:

Yarlpavanan Kasirajalingam said...


சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

மலரன்பன் said...

ஒரு தவறான எண்ணத்தைக் கொண்டு அதை எங்கெங்கிலும் எழுதிக்கொண்டு வருகிறீர்கள். அதாவது: தமிழர்கள் என்றால் ஓர் இனம் என்று.

இருக்கலாம் மொழியாலும், ஆதிகால (எப்போதென்று காணமுடியாத காலம்) வழியிலும் மட்டுமே ஓரினம். மற்றபடி அவர்கள் சிந்தனையும் வாழ்க்கைமுறையுமே அவர்களைப்பிரித்து விடுகிறது. அப்படியாக,

1.ஈழத்தமிழர்கள்;
2.தமிழ்நாடு வாழ் தமிழர்கள்;
3.தமிழ்நாட்டுக்கப்பால், பிறமாநிலங்களை தம்மிடமாக பரம்பரைபரம்பரையாகக் கொண்டு வசிப்பவர்கள்;
4.தமிழ்நாட்டில் பிறந்து பின் புலம்பெயர்ந்து வெளிநாட்டுப்பிரஜைகளானவர்கள். (ஹாங்காக், பர்மா, மலேசியா, சிங்கப்பூர்)
5.அடிமைகளாக வெள்ளைக்காரர்களால் இழுத்துச்சென்று குடியேற்றப்பட்டவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் (பிஜித் தீவுகள்; மேற்கிந்தியத் தீவுகள்; ரியூனியன் தீவு, மொரீஷியஸ் தீவு)

இவர்கள் அனைவரும் ஓரே கொளகைகளையுடைவர்கள் என்று நினைக்கிறீர்கள். தவறு. வியாசன். உய்த்துணரும்போது ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் எவ்வளவு வேறுபாடானவர்கள் என்று புரியும்! இந்த வேறுபாடு காரணமாகவே தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிக்காமல் போனார்கள்.

I don't discuss who is better. I only point out the difference which is ancient. Let's accept and move forward.

viyasan said...

திரு. மலரன்பன்,

//ஒரு தவறான எண்ணத்தைக் கொண்டு அதை எங்கெங்கிலும் எழுதிக்கொண்டு வருகிறீர்கள். ///

உங்களுக்குத் தவறாகப் படுகிற எண்ணம் எனக்குச் சரியாகப் படுவதால் தான் நான் எழுதுகிறேன். நான் எனது கருத்தை எழுதுவது உங்களுக்குப் பிரச்சனையாக இருந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-)


//அதாவது: தமிழர்கள் என்றால் ஓர் இனம் என்று. இருக்கலாம் மொழியாலும், ஆதிகால (எப்போதென்று காணமுடியாத காலம்) வழியிலும் மட்டுமே ஓரினம். மற்றபடி அவர்கள் சிந்தனையும் வாழ்க்கைமுறையுமே அவர்களைப்பிரித்து விடுகிறது.///


பார்த்தீர்களா, உங்களின் கருத்து எனக்குத் தவறான எண்ணமாக மட்டுமல்ல, வெறும் முட்டாள் தனமான எண்ணமாகக் கூடத் தெரிகிறது. வாழ்க்கை முறை வேறுபட்டாலும், உலகில் எங்கு வாழ்ந்தாலும், எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்பும், தமிழ்நாட்டுடன் தமது தொடர்பை இழந்தாலும் கூட, தம்மை இன்றும் தமிழர்களாக அடையாளப்படுத்தும் அனைவருக்கும், தான் தமிழன் என்ற ஒரே சிந்தனை உண்டு.

அந்தக் கருத்தைத் தான் பாரதியார் கூட, இந்தியாவைப் பார்த்து, "முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்று கூறினார். அது போல் தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்துகிறவர்கள் அனைவருக்கும், அவர்கள் தமிழர் என்ற ஒரே சிந்தனையுண்டு.


///இந்த வேறுபாடு காரணமாகவே தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிக்காமல் போனார்கள்.///

தவறு. உண்மையில் பெரும்பான்மை தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களை உணர்வுபூர்வமாக ஆதரித்தனர்/ஆதரிக்கின்றனர். ஈழத்தமிழர்களின் அழிவும் படுகொலைகளும் அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, பிஜித் தீவுகள்; மேற்கிந்தியத் தீவுகள்; ரியூனியன் தீவு, மொரீஷியஸ் தீவு போன்ற எல்லா நாட்டுத் தமிழர்களும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தனர், இன்றும் ஆதரிக்கின்றனர். இன்றும் தென்னாபிரிக்கத் தமிழர்களின் ஈடுபாட்டால் தான், தென்னாபிரிக்க அரசு ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வில் ஆர்வம் காட்டி வருகின்றது. இதற்கெல்லாம் காரணம், எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமிழன் என்ற சிந்தனையும் அடையாளமும் தமிழர்களுக்கிருப்பதால் தான்.

இன்றைக்கும் ஈழத்தமிழர்கள், தமிழர்களாக, எந்தவிதப் பிரச்சனையுமின்றி இலங்கையில் வாழ வேண்டுமென்று தமிழ்நாட்டிலும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் விரும்புகினறனர். என்னுடைய அனுபவத்தில், தமிழ்நாட்டுத் தமிழர்கள், ஈழத்தமிழ்ச் சகோதரர்களின் இனவுணர்வு, மொழிப்பற்று எல்லாவற்றையும் எண்ணிப் பெருமிதப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தமிழ் எங்கள் அனைவரையும் இணைப்பது தான். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் அந்த மனப்பூர்வமான ஆதரவை வழிநடத்திச் சென்று, ஈழத்தமிழர்களுக்கு ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்த, சுயநலம் மிக்க, பெரும்பாலும் தமிழரல்லாத, தமிழ்நாட்டுத் தலைமைகள் தவறி விட்டன. அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் ஈழத்தமிழர் ஆதரவை தமது சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

+ve முயற்சி.

viyasan said...

திரு. Yarlpavanan Kasirajalingam,

நன்றி. உங்களின் தமிழ்நாடு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

viyasan said...

திரு. டி. என். முரளிதரன்,

நன்றி. நீங்கள் கூறுவது போலவே உண்மையிலேயே ஒரு +ve முயற்சி தான். இந்த முயற்சிக்கு என்னாலான விளம்பரத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் இங்கு பதிவு செய்தேன். இப்படி சிறிய முயற்சிகளாவது, பெரும்பான்மைத் தமிழர்களுக்கு, தமது இறைவழிபாடு தமிழாக்கப்பட வேண்டும், அது தமிழாக்கப்படலாம், தெய்வத்தமிழில் இறைவனை வழிபடலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துமென நம்புவோம்.

'நெல்லைத் தமிழன் said...

மலரன்பன் சொல்வது தவறு. தமிழர் அனைவரும் ஓர் இனம். Priority may differ. Thinking may differ. நான் எப்படி உங்கள் குடும்பப் பிரச்சனைக்குச் சரியான தீர்வு தருவது அபூர்வமோ அதுபோல் இலங்கைப் பிரச்சனைக்குத் தமிழகத் தமிழர்கள் சரியான தீர்வு சொல்லுதல் இயலாது. ஆனாலும், தமிழர்கள் ஓரினமே.