Friday, January 2, 2015

இந்தியர்களிடம் யாழ்ப்பாணத்தமிழ் படும் பாடு!



தமிழர் என்ற இனவுணர்வும், மொழியுணர்வும்  உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதும்,  அந்த மொழியுணர்வின் அடிப்படையில் ஈழத்தமிழர்களைத் தொப்புள் கொடியுறவுகள் என தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, பிஜி, மொரீசியஸ், ரியூனியன் போன்ற  நாடுகளில் வாழும் தமிழர்கள் கூட அரவணைத்துக் கொள்வதும், தமிழ் மொழியின் அடிப்படையில் நம்மவர் என்று கருதி அவர்களுக்கு ஆதரவளிப்பதும், ஈழத்தமிழர்களைத் தனிமைப்படுத்தி, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அவர்களின் பாரம்பரிய மண்ணைப் பறிக்கும் திட்டத்துக்கு இடையூறாக இருக்கிறது.  இதனைப் புரிந்து கொண்ட சிங்களச் சொம்புதூக்கிகள் சிலர் ஈழத்தமிழர்கள் தமிழர்களே அல்ல எனநிரூபிக்கப்படாத பாடுபட்டனர். இப்பொழுது என்னடாவென்றால் வேறு சில இந்தியர்களும் யாழ்ப்பாணத்தில் பேசப்படுவது தமிழே அல்ல, யாழ்ப்பாணத் தமிழர்கள் தமிழர்களே  அல்ல என்று 'நிரூபிக்கக்' கிழம்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் ஈழத்  தமிழர்களின் அழிவில் மலையாளிகளின் பங்களிப்பை ஈழத்தமிழர்களால் இலகுவில் மறந்து விட முடியாது.

சிகிரியாவிலும் தமிழில் 'Ancient Tamil Graffiti' உண்டு.
சில இந்தியர்களிடம் யாழ்ப்பாணத் தமிழ் பாடும் பாட்டைப் பார்த்து ஒரு யாழ்ப்பாணத்தமிழனாகிய எனக்கு எரிச்சல் வந்தும் கூட நான் அந்த உளறலைக் கணக்கிலெடுத்துக் கொள்ள விரும்பவில்லை, ஆனால்  பதிலெழுத வேண்டுமென்ற சில நண்பர்களின் வேண்டுகோளை என்னால் மறுக்க முடியவில்லை.

தமிழ் மொழியின் பேச்சுத் தமிழுடன்(கொச்சைத் தமிழ்) சமஸ்கிருத வார்த்தைகளைக் கலந்து உருவாக்கப்பட்ட மலையாளத்தையே தமிழுக்கு ஈடான பழமையான மொழி என்று வாதாடும் மலையாளிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களைப் போன்றவர்களால் தமிழ்நாட்டிலும், இலங்கையில் வெவ்வேறு பிரதேசங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊர்களிலும்  காணப்படும் வெவ்வேறு வகையான, பேச்சு வழக்கையும்,  வேறுபட்ட சொற்களையும் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வியப்பல்ல

ஆனால் அத்தகைய  உளறல்களை கண்டு கொள்ளாமல் விட்டால், யாழ்ப்பாணத்தில் பேசப்படும் தமிழை, அது தமிழல்ல,  "யாழ்ப்பாண மொழி" என்பது போலவே தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திலும் பேசப்படும் தமிழையும், வட்டார வழக்கின் அடிப்படையில் தமிழ்நாட்டில், ஒரே தமிழ் மொழியில்லை,  மதுரை மொழி, திருநெல்வேலி மொழி, சென்னை மொழி, என்றும் மலேசியா மொழி, மட்டக்களப்பு மொழி என்றெல்லாம் வெவ்வேறு மொழிகள் உள்ளன என்று கூட உளறத் தொடங்குவதுடன், தமிழ் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் வெவ்வேறு தமிழர்களே என்று அவர்களையும் பிரித்து, புகுந்து விளையாடத் தொடங்கி விடுவார்களோ என்று தான் பயமாக இருக்கிறது. 

தமிழ்நாட்டில் வெவ்வேறு வட்டார மொழிகளுக்கே தனித்துவம் இருக்கும் போது, பல நூற்றாண்டுகளாக தனிமைப்பட்டு,  தமக்கென தனியரசையும் கொண்டு, தமிழ்நாட்டாரைப் போன்று, தமிழரல்லாத வடுக, கன்னட, மராத்தியர்களின் படையெடுப்போ அல்லது கலாச்சாரத் தாக்கமோ இல்லாமல் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் தமிழ்ப்பேச்சு வழக்கில் பழமையும்,  வேறுபாடுகளுமிருப்பது இயல்பே என்பதை விளங்கிக் கொள்ள முடியாத முட்டாள்களால் மட்டும் தான் யாழ்ப்பாணத்தில் பேசப்படுவது தமிழல்ல அது ஏதோயாழ்ப்பாணமொழிஎன்று வாதாட முடியும்.

Pottery(Tamil Brahmi) inscription. Sri Lanka. 2nd century BCE.
உதாரணமாக, கனடாவில் கியூபெக் எனப்படும் பிரெஞ்சு மொழி பேசும்  மாநிலத்தில் பேசப்படும் பிரெஞ்சு மொழிக்கும், இக்காலத்தில்  பிரான்சில் பேசப்படும் பிரெஞ்சு மொழிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சிலரால் இலங்கைத் தமிழை முதல் முதலில் கேட்டதும் எவ்வாறு புரிந்து கொள்ள முடியாமல், அல்லது புதிதாக இருக்கிறதோ அதே போல் தான் ஒரு கனேடிய பிரஞ்சுக் காரரின் பிரஞ்சுமொழியை முதன்முறையாக கேட்கும்  பிரான்சில் வாழும் பிரஞ்சுக் காரருக்கும் உள்ளது என்பதைப் பலரும் அனுபவத்தில் கூறக் கேட்டிருக்கிறேன். பல நூற்றாண்டுகளாக கியூபெக் பிரஞ்சு மக்களுக்கும் பிரான்சுக்குமுள்ள தொடர்பு அத்திலாந்திக் கடலின் ஆழத்தினாலும், தூரத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்டதால், கனேடிய பிரஞ்சில் 'Archaic French' சொற்கள் இன்றும் வழக்கிலுண்டு. அவர்களின்  பேச்சுத் தொனியும் (Accent) வேறுபடுகிறது. அந்த அடிப்படையில், கனடாவில் பேசப்படும் பிரஞ்சு மொழி பிரெஞ்சு மொழியே அல்ல அல்லது கனேடிய பிரஞ்சு மக்கள் பிரஞ்சுக்காரர்களே அல்ல என்று யாரும் வாதாடுவதில்லை. அதிட்டவசமாக அப்படியான முட்டாள் சொம்பு தூக்கிகளும், ‘எழுத்தாளர்களும்உலகில் கிடையாது.   பிரெஞ்சு மக்களும் தமிழர்கள் போலவே மொழிப்பற்றுள்ளவர்கள் என்பதை வேடிக்கையாக Language Nazis’  என்று  கூறுவதுமுண்டு

இலங்கையின் ஆதிவாசிகள் எனக் கருதப்படும் நாகர்கள் தமிழர்களே என அண்ணல் அம்பேத்கார் ஆணித்தரமாகக் கூறிவிட்டுச் சென்றது கூடச் சில இந்தியர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் பேசிய எலு மொழி தமிழின் முன்னோடி என்ற கருத்துமுண்டு. ஆகவே அந்த அடிப்படையில் சிங்களவர்களினதும், ஈழத்தமிழர்களினதும் முன்னோர்கள் கூட தமிழைப் பேசிய நாகர்களே என்றும் வாதாடலாம். அதே நாகர்கள் இலங்கையில் மட்டும் வாழவில்லை, இக்காலத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்தார்கள். ஆகவே அந்த திராவிட நாகர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களினதும், ஈழத் தமிழர்களினதும் முன்னோர்கள் ஆவர்

சிலரின் உளறல்களுக்கு எல்லையேயில்லை போல் தெரிகிறது.  சங்ககாலத்து ஈழத்தமிழ்ப் புலவர் பூதந்தேவனாரது பாடல்கள் கூட, சங்க கால எழுத்துத் தமிழில் தானுண்டே தவிர, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் இல்லை.  அது தான் தமிழ் மரபு. பேச்சுத் தமிழ் எவ்வாறிருந்தாலும், தமிழில்  எழுத்துத் தமிழ், ஒவ்வொரு  நாட்டுக்கும், பிரதேசத்துக்குமேற்ப மாறுபடுவதில்லை. தமிழ் நாட்டில் உருவாகிய சிலப்பதிகாரமோ, மணிமேகலையோ அல்லது எந்த இலக்கியங்களும், காப்பியங்களும் தமிழ்நாட்டுப் பேச்சுத் தமிழில் இல்லை, அதைக் காரணம் காட்டி, அவற்றுக்கும் இக்காலத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும்  தொடர்பில்லை என்று வாதாடினால் அது எவ்வளவு அசட்டுத் தனமும் கோமாளித் தனமும் நிறைந்ததோ அது போன்றது தான்  ஈழத்து மக்கள்தமது மொழியில்நூல்கள் இயற்றுவதை விட, ” தமிழ்நாட்டு மொழியில் நூல்கள் இயற்றுவதையே பெருமையாக கருதி உள்ளனர்என்ற முட்டாள் தனமான கருத்துமாகும்

தமிழ்நாட்டில் மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பேச்சுத் தமிழில் அமைந்த நாட்டார் பாடல்கள் உண்டு, அவையெல்லாம் அன்றாட வாழ்க்கையை, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைக் குறிப்பவை, அந்த அடிப்படையில் ஒவ்வொரு வட்டார வழக்கும், வெவ்வேறு மொழிகள் என்று எந்த முட்டாள் பயலும் வாதாட மாட்டான். இப்படியான உளறல்களால் ஈழத் தமிழர்களை, தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து பிரித்து விடலாம் என்று கனவு  காண்பவர்களால் மட்டும் தான் இவ்வாறு உளற முடியும். ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவும் தெரியாமல், ஈழத்தமிழர்கள் எதைப்பெருமையாக நினைக்கிறார்கள் என்று எழுதுவதற்கு எவ்வளவு அதிகப்பிரசங்கித் தனமிருக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் தமது மொழியாகிய தமிழைப் பற்றி பெருமைப்படுவதால் தான் தமிழில் எழுதுகிறார்களே தவிர, “தமிழ்நாட்டு மொழியில்நூல்கள் இயற்றவில்லை.

Pandyan Kingdom coin depicting a temple between 
hill symbols and elephant, Sri Lanka, 1st century CE.
   யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தமது பேச்சு வழக்கு தமிழ்நாட்டிலுள்ளது போல், வேற்று மொழிக் கலப்புள்ளதாக    இல்லாமல், 
தூய தமிழில்,  சிறப்பான, தமிழ்நாட்டில் வழக்கொழிந்து போன பல சொற்களைக் கொண்ட  தனித்துவமுள்ள தமிழாக இருப்பதாகக்  கருதுகிறார்களே தவிரயாழ்ப்பாணத்து தமிழ் மக்கள் தம் மொழியை தனி மொழி' யாக "  அதாவது தமிழல்லாத வேறு ஏதோ மொழியாகக் கருதுவதில்லை. யாரையும் மேற்கோள் காட்டும் போது ஆதாரங்களையும்  கொடுப்பது தான் அழகு.

  பேச்சு வழக்கில் தமிழ்மொழி 'ஒரே மொழியாக' இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தான் காணப்படவில்லை. தமிழ்நாட்டிலும் கூடத் தான் தமிழ் மொழி, சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் என்று மட்டுமன்றிஒவ்வொரு குப்பத்திலும் சேரிகளிலும் கூட வெவ்வேறு தமிழ் பேசப்படுகிறது.  இது கூடத் தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளாத சிலர், ஈழத்தமிழர் மீதுள்ள காழ்ப்புணர்வால்,  கட்டுரை எழுதக் கிழம்பி விடுவதைப் பார்க்கச் சிரிப்புத் தான் வருகிறது.

 தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்களுக்கு கூட, வேறுபாடு தெரியாது. தமிலன், தமில்நாடு என்பது மட்டுமல்ல, பல தமிழ்ச் சொற்களை பிழையாக எழுதவும், உச்சரிக்கவும் செய்கிறார்கள். அந்த அடிப்படையில்,அவர்கள் தமிழர்களே அல்ல என்று கூட அடுத்த பதிவு வரும் போலிருக்கிறது.

இலங்கையில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டில் வாழும் தமிழர்களது பேச்சுத் தமிழ் வேறுபட்டாலும் எழுத்துத் தமிழில் வேறுபாடில்லை என்ற அடிப்படை கூடத் தெரியாதவர்கள் தமிழைப் பற்றி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று 'ஆராய்ச்சிக் கட்டுரை' எழுதுவதைப் பார்க்க அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உதாரணமாக, பழந்தமிழில்  ‘கொன்றஎன்ற சொல், தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கில்கொன்னு’ (கொன்னுட்டான்) என்று இலங்கையில்கொண்டு’ (கொண்டுட்டான்) என்று பேசப்பட்டாலும் கூட, இரண்டு தமிழர்களுமே எழுத்தில்,  ‘கொன்றுபோட்டான் என்று தான் எழுதுவார்கள் என்ற அடிப்படை கூடத் தெரியாத தமிழரல்லாதோர் ஏன் தான் தமிழர்களைப் பற்றி எழுதக் கிழம்புகிறார்கள் என்று தான் எனக்குத் தெரியவில்லை.

தமிழர்கள் மத்தியில் பேசப்படும் வெவ்வேறு பேச்சு வழக்குகள் அனைத்திலும் மிகவும் தூய்மையான தமிழ் ( Purer  form of Tamil’) என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தமிழை, இருளர்களின் மொழியுடன் ஒப்பிடும் கோமாளித்தனத்தை எப்படி அழைப்பதென்று எனக்குத் தெரியவில்லை.

ஈழத் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் அதன் ஆரம்பம், வளர்ச்சியையும் அடுத்த பதிவில் பார்ப்போம். அத்துடன் தமிழ்நாட்டிலும், கடைச் சங்க காலத்தின் பின்னர், விஜயாலய சோழனின் எழுச்சி வரை பெரியளவில் தமிழ் இலக்கியங்களில் வளர்ச்சி காணப்படாத தேக்கநிலை காணப்பட்டது போன்றே இலங்கைத் தமிழ் இலக்கியங்களிலும் காணப்பட்டது, அதற்குப் பல காரணங்கள் உண்டே தவிர, அதற்கு யாழ்ப்பாண அரசு நிறுவப்பட்ட பின்னர் தான் ஈழத்தமிழர்கள் இலங்கையில் குடியேறினார்கள் என்று கருத்தல்ல.

தொடரும்......

1 comment:

Pararajasingham Balakumar said...

அவ்வப்போது வெவ்வேறு பெயர்களில் வந்து ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்தவர்களுக்கும் சிண்டு முடியும் பதிவுகளை வெளியிட்டு ஈழத்தமிழர்களை அதிலும் யாழ் தமிழர்களையும் வேறாக பிரித்து தனிமை படுத்தி விடலாம் என மனப்பால் குடிக்கும் விவரமில்லாத தம்பியன் களுக்கு சாட்டையடியாக தங்களது பதிவு வெளிவந்துள்ளது.
தமிழ் இலக்கியங்கள் அன்றிலிருந்து இனேறு வரை தமிழகத்திலும் சரி , ஈழத்திலும் சரி பேச்சு வழக்கில் படைக்கப்பட்டதில்லை என்ற சில்லறை விடயத்தை கூட அறிந்து கொள்ளாதவர் ஏதோ வொரு உள்னோக்கத்தோடு இத்தைகைய பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இதற்கு முன்பும் கடந்த வருட ஆரம்பித்தல் ஈழ விடுதலைப்போராட்டத்தை விவரணன் எனும் பெயரில் கொச்சைப்டுத்தி பதிவுகளை வெளியிட முயன்ற போது எழுந்த பலத்த எதிர்ப்பின் பின் வாலை சுருட்டிக்கொண்டார் . இப்போது சிறிது காலத்தின் பின் வேறு ஒரு பெயரில் ( அந்த பெயரைக்கூட பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேட வேண்டியிருந்தது ) வாலாட்ட ஆரம்பித்துள்ளார்.

பங்களா தேஷில் வங்காள மொழி பேசும் பிரிவினர்களில் , டாக்கா பகுதியை சேர்ந்த வங்காள மொழி பேசுபவர்கள் சிலட் பிரதேச த்தை சேர்ந்தவர்களின் வங்காள மொழி தமக்கு புரிவதில்லை என்றும் இவர்கள் வங்காள மொழிதான் பேசுகிறார்களா ? என ஆதங்கப்படுவதையும் பார்த்திருக்கிறேன் . ஆனால் அவர்கள் வங்காளிகள் அல்ல என்றோ அல்லது அவர்கள் பேசுவது வங்காள மொழி அல்ல என்றோ சொல்ல துணிவதில்லை.