Friday, October 31, 2014

சரவணன் – முருகனின் தமிழ்ப்பெயர் அதற்கும் சமணத்துக்கும், வடமொழிக்கும் தொடர்பு கிடையாது?


தமிழ்நாட்டில் வடுகர்களினதும், கன்னடர்களினதும், வட இந்தியர்களினதும் படையெடுப்பாலும், மொழி, கலாச்சாரக் கலப்பினாலும் வழக்கொழிந்து போன பல தமிழ்ச்சொற்கள்  ஈழத்தமிழர்கள் மத்தியில் இன்றும் அழியாமல் வழக்கிலுண்டு. அத்துடன் ஈழத்தின் ஊர்ப்பெயர்களிலும், அங்குள்ள மரங்களின், செடி, கொடிகளின் பெயர்களும் இன்றும் பல பழந்தமிழ்ச் சொற்களால் அழைக்கப்படுவதைக் காணலாம். சில தமிழ்ச்சொற்கள் தமிழ்நாட்டில் வழக்கொழிந்து போனதும் அவற்றைத் தமிழ்ச் சொற்கள் அல்ல, அல்லது  வடமொழியிலிருந்து இரவல் வாங்கியவை என்று வாதாடுவதற்குப் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
சரவணன் 
உதாரணமாக கிராமம் அல்லது குடியிருப்பைக் குறிக்கும் காமம் என்ற பழந்தமிழ்ச்சொல் தமிழ்நாட்டில் இன்று வழக்கில் இல்லை ஆனால் ஈழத்தில் இன்றும் கதிர்காமம், கொடிகாமம், பனங்காமம் என்ற பல ஊர்கள் உள்ளன.

தமிழ்க்கடவுள் முருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாகிய சரவணன் என்ற பெயர் தமிழ்ச்சொல்லே தவிர அது வடமொழிச் சொல்லும் அல்ல அதற்கும் சமணத்துக்கும் (சிர(ம)வணத்துக்கும்) தொடர்பு கிடையாது. முருகன் தமிழ்நாட்டில் வாழ்ந்த,சமணத்துக்கு முன்னோடியான  ஆசீவகத்தின்  சித்தர்களில் ஒருவர், அந்த சித்தர் குடியிருந்த குன்றுகளின் குகைகள் அல்லது பாழி வீடுகளே இன்று முருகனின் படைவீடுகள் என அழைக்கப்படுகின்றன என்ற  கருத்தும், ஆதாரங்களும்  ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும் கூட, சரவணன் என்ற பெயர் தமிழ்ச்சொல்லே.


பரவு புனமிசை யுறைதரு குறமகள்
     பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
          பணில சரவணை தனில்முள ரியின்வரு ...... முருகோனே


தமிழில் சரம் அல்லது சரவணை என்பது ஒருவகை நாணலைக் குறிக்கும்

சரவணை என்பது சரம் என்ற நாணல் நிறைந்த நீர்நிலை

யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒருவகை கடல் நாணலுக்கும் பெயர் சரவணை.

'சரவணை' நாணல் அல்லது புல் அதிகளவு காணப்படுவதால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கும் பெயர் சரவணை. அந்த சரவணை என்ற கிராமம் கூட முருகனின் வேல் வந்து அணை(டை)ந்ததால் வேலணை என்றழைக்கப்படும் ஊருக்கு அண்மையிலேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

தமிழர் கடவுளாகிய முருகன் சரவணைப் புல்லால் சூழப்பட்ட நீர்நிலையில் (பொய்கை) தாமரையின் மேல் குழந்தைவடிவில்  இந்த உலகில் அவதரித்ததாக பழந்தமிழர்கள் நம்பினர். அதனால் தான் சரவணை நிறைந்த குளத்தில் கண்டெடுத்ததால் முருகனுக்குப் பெயர் சரவணன் ஆகியது. சரவணன் என்ற பெயர் வடமொழியுமல்ல, தமிழ்க்கடவுள் முருகனின் சரவணன் என்ற நற்றமிழ்ப் பெயருக்கும் சமணத்துக்கும் தொடர்பும் கிடையாது.
மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல்
நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமலமூர்த்தி
அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்
வெறிகமழ்கமலப் போதில் வீற்றிருந் தருளினானே


Jaffna Velanai Central College Entrance

Wednesday, October 29, 2014

இன்று முருகனின் சூரன் போர்! 'தமிழனுக்கும் - தமிழனுக்கும்' போர்!பெரும்பான்மை தமிழர்கள் அதிலும் குறிப்பாக உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையினர் இன்று, உலகின் மூலை முடுக்கிலுள்ள  கோயில்களில் எல்லாம் சூரன்போர் விழாவை கொண்டாடுகின்றனர். ஆனால் திராவிட பகுத்தறிவாளர்களின் கருத்துப்படி புராணக் கதைகளில் அசுரர்கள் எனக் குறிப்பிடப்படுகிறவர்கள் எல்லோரும் தமிழர்கள் அதாவது ஆரியர் அல்லாத திராவிடர்கள், தேவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் எல்லோரும் ஆரியர்கள் அல்லது பார்ப்பனர்கள் என்பதாகும். பழந்தமிழர்களின் கடவுளரையும், அவர்களின் வழிபாட்டு முறைகளையும் இணைத்து வைதீக மயப்படுத்திய ஆரியப் பார்ப்பனர்கள் அப்படியான புராணக் கதைகளை இயற்றி விட்டார்களென சிலர் கூறுவதில் உண்மையேதுமில்லை என்று வாதாடுவதல்ல என்னுடைய நோக்கம்.
கதிர்காமம், இலங்கை 
முருகன் தமிழ்க்கடவுள்,  முருகன் ஒரு தமிழன் என்பது தமிழர்களின் நம்பிக்கை. ஆகவே சூரன் போரில் தமிழ்க்கடவுளாகிய, தமிழன் முருகன் இன்னொரு தமிழனாகிய சூரபத்மனை வதம் செய்வதற்கும், ஆரிய-திராவிட எதிர்ப்புக் கருத்தைக் கற்பிக்க முடியுமென நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இங்கு முருகன், சூரபத்மன் இருவருமே தமிழர்கள். அது மட்டுமன்றி, வேண்டுமானால்  முருகன் ஒரு  தமிழன் என்று மட்டுமல்ல, ஒரு தலித் என்று கூட வாதாடலாம். ஏனென்றால் வள்ளியம்மா என்ற ஈழத்து வேடுவப் (தலித்) பெண்ணை மணந்தவன் தான் முருகன். அதை விட முருகன் கூட இலங்கையில் கதிர்காமத்தில் காட்டுப்பகுதியை ஆண்ட ஒரு வேட்டுவ அரசன் தான் என வாதாடும் சிங்களவர்களும் இருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் முருகனும் இக்கால வழக்கப்படி தலித் என்றாகி விடும். ஆகவே இன்றைய சூரன் போர் தமிழனுக்கும் தமிழனுக்கும் நடந்த போர் அல்லது ஒரு தலித்துக்கும் இன்னொரு தலித்துக்குமிடையில் நடந்த போர் என்று தான் கொள்ள வேண்டும். இந்தச் சண்டையில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது.

ஒரு போதுமே  கோயிலுக்குப் போகாத, அதிலும் ஒரு நாள் கூட மீன் அல்லது இறைச்சி இல்லாமல் உணவருந்தாத  ஈழத்தமிழர்கள் கூட, அதிலும் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினர் கூட கந்தசட்டி தொடங்கியவுடன் ஆறு நாட்களும் கோயிலுக்குப் போவதையும், விரதமிருப்பதையும் பார்க்கும் போது, சிங்களவர்கள் கூறுவது போலவே, முருகனுக்கும், இலங்கைக்கும், குறிப்பாக  ஈழத்தமிழர்களுக்கும் ஒரு வகையான நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் போல் தான் தெரிகிறது. சும்மா இருந்த தமிழ்ச் சூத்திரர்களின் கடவுளாகிய முருகனுக்கும் வள்ளியம்மைக்கும், தெய்வானையை இணைத்து விட்டது  தான் ஒரு வேளை ஆரியப் பார்ப்பனர்களின் வேலையாக இருக்கலாம். 
சிட்னியில் (ஈழத்தமிழர் கோயிலில்) சூரன் போர் 
உண்மையில் புராணக் கதைகளில் கூறப்படும் அசுரர்தேவர்கள் என்பது ஆரியரையும், திராவிடரையும் மட்டுமல்ல எந்த சாதியையும் கூடக் குறிக்காதாம்தேவர்கள் என்பவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ள, ஆணவமற்ற, நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்ட நல்லவர்கள், அசுரர்கள் எனப்படுகிறவர்கள் அவர்கள் செய்த தவவலிமை காரணமாக வல்லமை பெற்று, அந்த ஆணவ முனைப்பினால் நல்லவர்களைத் துன்புறுத்துகிறவர்கள் (இக்காலத்தில் சில பணக்காரர்களைப் போல) மட்டும் தான். அசுரர்கள், தேவர்கள் இரண்டு குழுவினருமே தமிழர்களாக கூட இருக்கலாம். நல்லவர்களாகிய தனது அடியார்களைக் காக்க முருகப்பெருமான், தீயவர்களாகிய அசுரர்களுடன் போரிட்டு அவர்களை காத்தார் என்பது தான் சூரன்போரின் பொருளாகும்.
“சைவசித்தாந்தத்தின் படி மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை என்பனவே அசுரர்களாக விபரிக்கப்படுகிறது. மாயைக்குத் தாரகாசுரனும், கன்மத்திற்கு  சிங்க முகாசுரனும், ஆணவத்திற்குச் சூரபத்துமனும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். இம்மும்மலங்களையும் திருவருட் சக்தியாகிய ஞானவேல் எனும் முருகன் திருக்கை வேல் அழித்து விடுகிறது. ஆன்மா முத்தியின்பப் பேறினை பெற்றுய்ய வழிபிறக்கிறது.”

புராணக் கதைகள் பாமரமக்களுக்கு மிகவுயர்ந்த தத்துவங்களை இலகுவாக விளக்குவதற்காக உருவாக்கப்பட்டவை. அதில் கூறப்படும் உவமானங்களை உண்மையென்று சிலர் நம்பி அதனடிப்படையில் ஒரு சிலர் மற்றவர்களை உசுப்பேத்தி விடுவதையும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும்  நடத்துவதையும் பார்க்கும் பொழுது சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. கார்ல் மார்க்ஸ் அல்லது லெனின் எப்பொழுதாவது பைபிளிலுள்ள கதைகளின் அடிப்படையில் அல்லது அவற்றை எதிர்த்து ஏதாவது போராட்டங்கள் நடத்தினார்களா என்பதை யாமறியோம். ஆனால் இப்படியான பகுத்தறிவாளர்களால் நடத்தப்படும் நியாயமான, தமிழர்களின் உரிமை சம்பந்தமான, உதாரணமாக, தில்லைச் சிதம்பரத்தை 
தீட்சிதர்களிடமிருந்து  மீட்பது போன்ற போராட்டங்களுக்குக் கூட, பெரும்பான்மைத் தமிழர்கள் ஆதரவளிக்காமல் போவதற்கு, இப்படியான ஒருதலைப்பட்சமான , அசட்டுத்தனமான காரியங்களும், கருத்துக்களும் கூடக் காரணமாக இருக்கலாமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.