Wednesday, July 30, 2014

முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் இன்றும் நேசிக்கும் அவர்களின் தமிழ் முன்னோர்களின் தெய்வங்கள்!முத்தாரம்மன் -குலசேகரப்பட்டணம்
தமிழ் முஸ்லீம்களும் தமிழ்க்கிறித்தவர்களும் காலத்தின் கோலத்தாலோ அல்லது வந்தார் வரத்தார்களின் சொல் கேட்டோ அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காகவோ தமது முன்னோர்களின் தெய்வங்களை விட்டு வேறு நாட்டு மதங்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் தெய்வங்களை இன்று வழிபட்டாலும் கூட அவர்களின் தமிழ் முன்னோர்களின் தெய்வங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் மண்ணின் தாய்த் தெய்வங்கள் இன்றும் அவர்களை தனது குழந்தைகளாக, தமிழ் மண்ணின் மைந்தர்களாக, நேசிப்பதை அவர்களை ஆபத்தில் அரவணைப்பதை மட்டும் நிறுத்தவில்லை.  

இது என்னுடைய கண்டுபிடிப்பல்ல,  இதை கிறித்தவராகிய எழுத்தாளர் ஜோ டி குரூசும், தமிழ்நாட்டு முஸ்லீம்களின் தமிழ்வேர்களை, தமிழ்மண்ணில் அவர்களின் உரிமைகளை, தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையில் 'யாதும்' என்ற ஆவணப்படத்தையும் வெளியிட்டு அதே பெயரில் இணையத்தளத்தையும் நடத்தும் இஸ்லாமியராகிய கோம்பை எஸ். அன்வரும் தான் கூறுகிறார்கள்.

"The history that I learned at school, did not give me the answers I was seeking, especially when it came to my roots. I realised our history has been written top down, with many local histories being ignored. This is my attempt to set right the wrong "- Kombai S.Anwar

'யாதும்' இணையத்தளம் தமிழ்நாட்டில்  கம்பூர் என்ற கிராமத்தில் முத்துப்பிடாரி அம்மன் என்ற தமிழ் மண்ணின் பாரம்பரிய தாய்த்தெய்வம் எவ்வாறு ஒரு தமிழ் முஸ்லீம், தன்னை வணங்காது விட்டாலும் கூட, அவரைத் தனது குழந்தைகளில் ஒன்றாக நினைத்து அருள்பாலித்த உண்மைக் கதையை தமிழ் மண்ணுக்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்குமுள்ள தொடர்புக்கு எடுத்துக் காட்டாகக் கூறுகிறது.  அந்தக் கதையை முழுமையாக ஆங்கிலத்தில் இந்த இணைப்பில் காணலாம்.


ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் கம்பூர் என்ற தமிழ்நாட்டுக் கிராமத்தில் கரகமெடுப்பு என்ற விழா நடைபெறும். அந்தப் பத்து நாள் திருவிழாவில், பொழுது விடியும் வேளை, அந்தக் கிராமத்திலுள்ள ஆண் அல்லது பெண் ஒருவரின் உடலில்  அந்த கிராம தேவதை பத்திரகாளி அல்லது முத்துப்பிடாரி அம்மன், நுழைந்து கொள்வதால் அந்த ஆண் அல்லது பெண் தன்நினைவிழந்த நிலையில், அம்மன் கூற விரும்புவதை அவர்கள் மூலமாக கூறுவார் (அல்லது கூறுவதாக ஊர்மக்களின் நம்பிக்கை). அந்த ஊரை விட்டு  வெளியேறவிருந்த ஒரேயொரு முஸ்லீம் குடும்பத்தை எவ்வாறு அந்த ஊர் அம்மன் வெளியேறாமல் தடுத்தாள் என்பதை மட்டுமன்றி, நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று அன்போடு கூறியதையும் விளக்குகிறது அந்த உண்மைக் கதை.


இலங்கையில் தமிழ் முஸ்லீம்கள் தமது தமிழ்த் தொடர்பை முற்றாக மறுத்து, தமிழைப் பேசினாலும் அவர்கள் தமிழர்களல்ல என்று வாதாடும் போது, தமிழ்நாட்டில் தமிழ்முஸ்லீம்கள் துரித கதியில் அரபு மயமாக்கப்படும் இக்காலத்தில், உமறுப்புலவரினதும், வள்ளல் சீதக்காதியினதும்  தமிழ் இஸ்லாம் இன்று தீவிரவாத வஹாபியமாக்கப் பட்டு வரும் வேளையில், முஸ்லீம்களின் தமிழ் வேர்களைப் பற்றிய உண்மைகளை மட்டுமன்றி, தமிழ் மண்ணின் தாய்த் தெய்வங்கள் மதவேறுபாடின்றி தனது குழந்தைகளை அரவணைக்கும் அன்பையும் கூட எந்தவித தயக்கமுமின்றி,  பெருமையுடன் பேசும் திரு கோம்பை எஸ் அன்வர் அவர்களின் 'யாதும்' என்ற ஆவணப் படத்துக்கு  தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென்பது எனது கருத்தாகும்.

குமரியாத்தா 
இந்தக் கதையை வாசித்த போது இன்று கத்தோலிக்கர்களாக மாறிவிட்ட தமிழ்ப்பரதவர்கள் இன்றும் கடலுக்குப் போகும் போதும், அவர்களின் படகுகளுக்கும் அவர்களுக்கும்  கடலில் பெரிய மீன்களால் அல்லது திமிங்கலங்களால்  ஆபத்து நேரும் போதும் திமிங்கிலத்தின் நெற்றியில் கைவைத்து 'குமரியாத்தா' மீது ஆணையிட்டு வேண்டிக் கொள்வதாகவும் (காணொளி 12:00), எவ்வாறு  சப்பரத்தில் வைக்க முயன்ற போது அசைய மறுத்த முத்தாரம்மனின் சிலை, ஒரு பரதவரின் பரிசம் பட்டதும், அதாவது காலம் காலமாக தன்னை வழிபட்ட அந்த சமூகத்தின் மைந்தன் ஒருவன் தன்னைத் தொட்டதும், அசைந்து கொடுத்ததைப்  பற்றிய உண்மைக் கதையையும் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கூறியது தான் எனது நினைவுக்கு வருகிறது. 


Monday, July 28, 2014

யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் திருவிழாவில் சாதிச் சடங்கு??வலாற்றுப் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 1, 2014 இல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

அதன் முதல்படியாக  நல்லூர் பந்தற்கால் நாட்டுதலுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. யாழ்ப்பாண அரசின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இந்நிகழ்வு நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக பண்டைய காலம் முதல் இடம்பெற்று வருகிறது. நல்லூர்ப் பார்ப்பனர்கள் கோயிலிலிருந்து காளாஞ்சியை எடுத்துச் சென்று பரம்பரை, பரம்பரையாக நல்லூர்க் கொடிச்சீலையை வழங்கும் செங்குந்த வெள்ளாளர்களிடம் காளாஞ்சியை அளிப்பர். 

இதைத் தான் யாழ்ப்பாணத்தில் "பார்ப்பன-வெள்ளாள" Nexus  என்று சிலர் கூறுகிறார்கள் போலிருக்கிறது. இப்படியான பாரம்பரிய நிகழ்ச்சிகளும் கூட சாதியை ஊக்குவிக்கின்றன அல்லது சாதிப்பாகுபாடுகளை மீண்டும் நினைவுபடுத்துகின்றன. இலங்கையில் தீண்டாமையோ அல்லது தமிழ்நாட்டில் உள்ளது போன்று சாதிக்கொடுமைகளும் இல்லாது விட்டாலும் கூட சாதி இன்னும் முற்றாக நீங்கி விடவில்லை என்பதற்கு இப்படியான சடங்குகளும், சம்பிரதாயங்களும் கூட ஒரு காரணமாகும். 

இந்த நிகழ்வு தமிழ்நாட்டைப் போல் இலங்கையில் பார்ப்பன ஆதிக்கம் கிடையாது என்பதையும் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் எண்ணிக்கையில் குறைவான பார்ப்பனர்கள் எப்பொழுதும் வெள்ளாளர்களில் கட்டுப்பாட்டுக்குள் தானிருந்து வருகின்றனர்.  இங்கு கூட சூத்திரர்களாகிய வெள்ளாளர்கள் கோயிலுக்கு வந்து காளாஞ்சியைப் பெற்றுக் கொள்ளவில்லை, மாறாக பிராமணர்கள் 'சூத்திரர்களின் ' வீடு தேடிப் போய்க் காளாஞ்சியை அவர்களிடம்  கொடுத்து, கொடியேற்றம் நடைபெறப் போவதை முறைப்படி தெரிவிக்கிறார்கள்.

பாரம்பரியம், எமது வரலாற்று விழுமியங்கள் என்ற பெயரில் இந்தச் சடங்குகளை தொடர்ந்து நடத்தி சாதியை, அதாவது ஒரு குறிப்பிட்ட சிலருக்கு சாதியடிப்படையில் முக்கியத்துவமளித்தது சாதியை   ஊக்குவிப்பதா அல்லது இவற்றை எல்லாம் சாதியொழிப்பு என்ற பெயரில் நிறுத்தி விட்டு, இலங்கையில் தமிழர்களுக்கென வரலாறோ, பண்பாடோ பாரம்பரியமோ இல்லையென்று கூட வாதாடுகிற ஒரு சிலரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதா? 

      Sengunthar and Flag Ceremony
The hoisting ceremony commences with the flag being brought out from the Vairaver temple at Kontraladi a decorated area for worshippers. It is customary for the Veera Sengunthar the military heroes of the ancient kings of Jaffna to belong to the Sengunthar family to bring out and carry the flag as the ceremony of Sooran Battle is the Sengunthar who are the Formidable. The day of the flag ccremony finds the houses of all Sengunthar Beautifully decorated Curtains with the "Cocks Birds" Vaganam of Murugan hang in their houses. This has reference to an incident at Sidiamparam place of a Thalam at south India where the Brahmins lighted Umapathy Sivach Chariar without rules, would not unfurl and fly the flag."

யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா ஆகஸ்ட் 1, 2014 இல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக, இன்று செவ்வாய்க்கிழமை கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு பல நூறு வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன் தமிழர்களின் பண்டைய கலாச்சார நிகழ்வுகளை பறைசாற்றும் மிகச் சிறந்த நிகழ்வாக யாழ் மண்னில் கந்தனருளுடன் நல்லூரில் நடைபெற்று வருகிறது. 
நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இந்நிகழ்வு நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக பண்டைய காலம் முதல் இடம்பெற்று வருகிறது.அதாவது, வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் மற்றும் கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி அவர்களின் இல்லங்களிற்கு சென்று வழங்குதல் இதில் முக்கிய நிகழ்வுகளாகும். 
ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் கடந்த நூறு வருடங்களிற்கு மேலாக இந்த நடைமுறை மாற்றப்பட்டிருந்தது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை தொடர்ந்து இப்பாரம்பரியம் மறைக்கப்படிருந்தது. பலரிக்கு இது தெரியாதிருந்தது. 
இந்நிலையில், சென்ற வருடம் முதல் நல்லூர்க்கந்தனின் திருவருள் கைகூடியதற்கமைவாக ஆலய நிர்வாகத்தினர் எடுத்துக் கொண்ட முயற்சியினால் மாட்டு வண்டியில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டது. மாட்டு வண்டியில் கொடிச்சிலை வழங்கும் மரபுடையவர்களின் இல்லத்திற்கு சென்று நல்லூரின் பிரதமகுருக்கள் சிவசுப்பிரமணிய வைகுந்தவாசக் குருக்கள் மற்றும் உதவிக் குருக்கள் அவர்களும் இணைந்து நல்லூர் கந்தனிற்கு கொடிச்சிலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி வழமை போல் உரியவர்களிற்கு வழங்கப்பட்டது. நல்லூர் ஆலயத்திற்கு சொந்தமான மாட்டு வண்டி மற்றும் நல்லூர் ஆலயத்தில் வளர்ந்து வரும் காளை என்பனவற்றின் மூலமே இம்முறை காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டது 

Ref: nalluran.com

Wednesday, July 16, 2014

முஸ்லீம் எதிர்ப்பைக் காட்டி மோடியை வளைத்துப்போட்டு விட்டார் மகிந்த ராஜபக்ச??
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் சாணக்கியம், தனக்குத் தேவையென்றால் யாருடைய  காலிலும்  விழுவது, எந்த வாக்குறுதியையும் கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொள்வது, வேலை முடிந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவது அல்லது இழுத்தடிப்பது, அரசியலில் அவருக்கு உதவியவர்களையே  கறிவேப்பிலை போல்  தூக்கி எறிந்து விடுவது, அரசியலில் சாமர்த்தியமாக காய் நகர்த்தும் தந்திரம்  என்பவற்றைப் பல அரசியல் அவதானிகள், விமர்சகர்கள் வியந்தும், விமர்சித்தும்  எழுதியுள்ளனர்.

உண்மையிலேயே வரலாற்றுக் காலம் தொட்டு, தமிழர்களுடன் மோதினால், இலங்கையில் சிங்கள அரசோ அல்லது சிங்களவர்களோ நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது  என்பதை உணர்ந்து கொண்ட, சிங்களவர்கள் பாண்டிய அரச குடும்பத்துடன் தமது அரசியல், திருமண தொடர்புகளைப் பலப்படுத்திக் கொண்டு, சோழர்களை எதிர்த்தார்கள். பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருப்பதாக தமிழர்களை நம்ப வைத்து சுதந்திரம் அடைந்ததும் அவர்களைக் கழுத்தறுத்தார்கள். அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர்களையும் தமிழர்களையும் மோதவிட்டே தமது ஆட்சியைக் காப்பற்றி வந்துள்ளனர் சிங்களவர்கள் என்றும் கூறுவர். சிங்களவர்களின்  அரசியல் விளையாட்டில் ஏமாந்த ஏமாளிகள் தமிழர்கள் தான். ஆனால் இந்த லட்சணத்தில் இலங்கைத் தமிழர்கள் என்னடாவென்றால் சிங்களவர்களை மோடர்கள் (மூடர்கள்) என்பார்கள். ஆனால் அது எவ்வளவு தவறானது என்பதைச் சிங்களவர்களின் அரசியல் சாணக்கியத்தை அறிந்தவர்கள் உணர்வார்கள்.

பாஜக ஆட்சியைப் பிடித்தால் காங்கிரஸ் போல் நடந்து கொள்ளாது, ஈழத்தமிழர்களின் மீது அக்கறையுடன் நடந்து கொள்வாரகள், ஈழத்தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்து விடும், அவர்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்குமென எல்லோருமே படம் காட்டினார்கள், தமிழர்களும் அதை உண்மையாகவே நம்பினார்கள். ஆனால் இந்த விடயத்தில் 80 மில்லியன் தமிழர்களையும்  மகிந்த ராஜபக்ச மீண்டும் முட்டாளாக்கி விட்டார் போல் தெரிகிறது. 

தமிழ்நாட்டுத் தமிழர்களை வெறுக்கும் தமிழரல்லாத இந்தியர்கள் அனைவரும் ஈழத்தமிழர்களையும்  வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பு சிங்கள ஆதரவாக மாறுகிறது. எந்தளவுக்கு தமிழ்நாட்டை, தமிழ்நாட்டுத் தமிழர்களை  தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் இந்தியர்கள் வெறுக்கிறார்கள், எவ்வளவு தீவிரமாக  சிங்களவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை Times of India வில் Modi's Lanka policy leaves allies sore என்ற  செய்தியின் பின்னூட்டங்களை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின்   இந்துத்துவாக்கள்  முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் தான் வெறுக்கிறார்களே தவிர பெளத்தர்களை அல்ல. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கும் இந்துமதத்துக்கும் எதிராகப் போர் தொடுப்பது இஸ்லாமோ, கிறித்தவமோ அல்ல பெளத்தம் தான். ஆனால் பாஜக, சிவசேனா போன்றவை புத்தமதத்தை இந்துமதத்தின் அங்கமாக கருதுவதால் அவர்களுக்கு சிங்கள பெளத்தர்களின் மீது அளவுகடந்த பாசமுண்டு. அதனால் மோடியின் அரசு இலங்கைக்குச் சார்பாக நடந்து கொள்ளும் என்பது ஈழத்தமிழர்கள் பலரும் அறிந்த விடயம் தான். ஆனால் மகிந்த ராஜபக்ச எப்படி சீனாவைக் காட்டி  முன்னைய காங்கிரஸ் அரசைக் தனது கைக்குள் போட்டுக் கொண்டாரோ, அவ்வாறே  அவரும் சிங்களவர்களும், முஸ்லீம்களுக்கு எதிர்ப்பு என்று காட்டி, மோடியையும் தனது வலைக்குள் சிக்க  வைத்து விட்டார் எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் இலங்கையின் முன்னணி அரசியல் விமர்சகர் உபுல் ஜோசப் பெர்னாண்டோ (Upul Joseph Fernando).இலங்கை அதிபர் ராஜபக்சவை பிரதமர் மோடியின்  பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடத்திய பேச்சு வார்த்தையில், மோடி அவருடன் முதலில் பேசிய விடயம் இலங்கையில் வாழும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது தான். எப்படி சீனா என்ற துருப்புச் சீட்டைப் பாவித்து காங்கிரஸ் அரசை வெற்றி கொண்டாரோ அதே போல் முஸ்லீம்கள் என்ற துருப்புச் சீட்டை மோடியுடனும் விளையாடலாம் என  அப்பொழுதே மகிந்த ராஜ பக்ச நினைத்திருக்கலாம். 
ராஜபக்ச தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பியவுடன்  , இலங்கையிலுள்ள  ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக  அகதி அந்தஸ்து கோரி இலங்கையில் வாழும் **பாகிஸ்தானியர்களை நாடுகடத்த நடவடிககைகளை மேற் கொண்டார். அதற்கும்  ஒருபடி மேலே சென்று, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ள நெருங்கிய நட்புறவையும் மறந்து, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாகிஸ்தானிய ராஜதந்திரி ஒருவரை திருப்பியழைத்துக் கொள்ளுமாறும் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டார்.  அந்த பாகிஸ்தானிய ராஜதந்திரியைப்  பற்றி இந்திய அரசியல் வெளியுறவுத் துறை கட்டமைப்பில் பலத்த சந்தேகம் நிலவி வருகிறது. ராஜபக்ச இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதற்குக் காரணம் மோடியைத் திருப்திப் படுத்துவதற்காகத் தான், ஏனென்றால் மோடியின் திருப்தியும், ஆதரவும்  இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு முக்கியமானதொன்று என்பதை அவர் உணர்கிறார். 
முடிவில், சீனாவை பாவித்து எப்படி காங்கிரஸ் அரசை தனது வலைக்குள் சிக்க வைத்தாரோ அதே போல் முஸ்லீம்களின் விடயத்தைப் பாவித்து மோடியையும் ஏமாற்றி தனது வலைக்குள் வீழ்த்துவதில் வெற்றி பெற்று விட்டார் மகிந்த ராஜபக்ச. மோடி இனிமேல் கொஞ்சக்காலத்துக்கு ஈழத் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிரும் இலங்கையின் 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தைப் பற்றி மறந்து விடுவார் என ராஜபக்ச நம்புகிறார் எனலாம்..  அல்லது சிங்களவர்கள் இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதலையும், கலவரத்தையும் பார்த்து மோடிக்குப் பின்னாலுள்ள சிவசேனாவினர் உள்ளூரப் பூரிப்படைவார்கள் என்றும் நினைத்துக் கொள்ளலாம். சிவசேனாவைத் திருப்திப்படுத்தும் அல்லது மகிழ்ச்சியடையச் செய்யும் எந்த விடயமும் மோடியின் அரசையும் திருப்தியடைச் செய்யும் என்பது மகிந்த ராஜபக்சவுக்குத் தெரியும்.


(**இலங்கை பாகிஸ்தானியருக்கு இணைய வழியாகவும் (On Arrival) விசா அளிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியதால் ஆயிரக்கணக்காக பாகிஸ்தானியர்கள் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் அகதிகள் ஆணையத்தின் மூலம் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அங்கிருந்து ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் சட்டவிரோதமாகச் சென்றடைய முயல்வதுடன் அவர்களில் பெரும்பான்மையினர், இலங்கை மக்களின் தயவில் அவர்களின் நன்கொடைகளில் கொழும்பிலும், கொழும்பைச் சுற்றியுமுள்ள நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு  இடையூறாக அமையலாம் என்பது சு. சுவாமி போன்றவர்களின் கருத்தாகும்.)

(Pic.Courtesy DBSJ.)

வெளியேற்றப்படும் தமிழாசிரியர்கள்...பழி வாங்குகிறதா கேரளா அரசு ?

கேரள பள்ளிகளில் வேலை பார்த்த 1000 த்துக்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது அம்மாநில அரசு. கேரள அரசின் இந்த நடவடிக்கை  தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கேரளாவில் பணியாற்றும் ஒரு சில தமிழாசிரியர்களிடம் பேசினோம்.

 “ஒப்பந்த அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தோம் ,பள்ளிகளில் மிக குறைவான குழந்தைகள் உள்ளனர் என்பதால் போதிய மாணவர்கள் பற்றாக்குறைகளை காரணம் காட்டி எங்களை பணயில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். வேறு அரசு வேலைகளை வேறு துறைகளில் தருவார்கள் என்று நம்பி உள்ளோம் அரசாங்கத்தைஎன்றார்கள் பட்டும் படாமல்   

இது பற்றி பேசும் கேரள - தமிழர் கூட்டமைப்பு அமைப்பாளரும் எழுத்தாளருமான பாலசிங்கம் இந்த பிரச்னை இன்று ஆரம்பிக்கவில்லை பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது 2005 -06 கால  ஆண்டுகளிலேயே கேரளாவில்  தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த தமிழர்களை கொத்து கொத்துதாக ஆட் குறைப்பு செய்து வீட்டிற்கு அனுப்பியது. 35 ஆண்டுகள் வேலை பார்த்தவர்களுக்கு வி ஆர் எஸ் கொடுக்கப்பட்டுகையில் வெறும் 30  ஆயிரம் ரூபாயுடன் அனுப்பப்பட்டனர்.
அப்பொழுது இடுக்கி மாவட்டத்தில் மட்டுமே சுமார் 840 தமிழ் பள்ளிகள் இருந்தன. ஆனால் அவை எல்லாம் இன்று காணமல் போகிவிட்டது. அப்பொழுது அங்கிருந்து வந்த தமிழர்கள் தங்கள் குழந்தைகளோடு தேனி, திருநெல்வேலி ,தென்காசி ,ராஜபாளையம் தஞ்சாவூர் ,சென்னை என்று கிளம்பி போய் விட்டனர். அவர்கள் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே தமிழ் நாட்டில் தொடரும் நிலைமை உருவானது. 

பிறகு எஞ்சி இருந்த தொழிலாளர்களின் குழந்தைகள் கேரளாவில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்து வந்தனர். பிறகு போதிய குழந்தைகள் இல்லை என்று படிப் படியாக ,ஒவ்வொரு எஸ்டேட்களில் இருந்த தமிழ் பள்ளிகளை மூடியது கேரளா அரசு. அதற்கு பிறகு வந்த அச்சுதானந்தன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசுகேரளாவில் அரசு வேலைகளில் இருக்கும் ஒவ்வொருவரும் மலையாளத்தில் கையெழுத்து போடாமல் அரசு சம்பளத்தை வாங்க முடியாது என்ற நிலைமையை உருவாக்கியது. அவர்களுக்கு மொழி வாழ்க்கை.. ஆனால் நமக்கு உணர்வு. 

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னவே இந்த பிரச்னை வந்து விட்டது நாம் அப்பொழுதே எதிர்க்கவில்லை. இப்பொழுது நிலைமை கை மீறி போய் விட்டது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ,கல்லூரிகளில் தமிழவே படிக்காமல் எங்கிருந்து வந்தாலும் ஒருவன் பட்டம் வாங்கி செல்லலாம். ஆனால் கேரளாவில் அப்படி இல்லை கண்டிப்பாக அவர்கள் மொழியான மலையாளத்தை கண்டிப்பாக ஒரு பாடமாக படிக்க வேண்டிய கட்டாயத்தில் வைத்து இருக்கிறது அங்கு இருக்கும் கல்வித்துறை. இதுதான் இன்றைய யதார்த்தம். தவிர அங்கு படிக்கும் தமிழர்கள் மலையாளத்தை மொழி பாடமாக படித்தாலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு என்று வரும் பொழுது அவர்கள் தமிழர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இதனால் கேரள அரசு துறைகளில் வேலைவாய்ப்பு விகிதமும் தமிழர்களுக்கு குறைவு அதனாலேயே அங்கு இருக்கும் பெரும்பாலான தமிழ்பிள்ளைகள் தேனி ,மதுரை திண்டுக்கல் ,என்று தமிழகத்தில் வந்து படிக்கின்றனர். 


கேரளத்தில் உள்ள  14 மாவட்டங்களில் தமிழர்கள் சுமார் 35  லட்சம் மக்கள் பரவலாக வாழ்கின்றனர். இடுக்கி ,தேவிகுளம் ,பீர்மேடு ,என்று தமிழர்கள் வாழும் பெரும் பகுதிகள் தேயிலை, மிளகு, நறுமண பொருள்கள் உற்பத்தி, சுற்றுலா என்று கேரளத்தின் மொத்த வருமானத்தில் 16 சதவிகிதம் தமிழர்களின் கடுமையான உழைப்பால் வருபவை இவை எல்லாம் பழைய மதுரை மாவட்டத்தில் ,பெரியகுளம் தாலுகாவாக இருந்தது. எப்பொழுது இந்த பகுதிகள் கேரளத்தின் கைகளில் போனதோ அப்போதே அங்கு தமிழர்கள் இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படும் நிலைமை உருவாகி இன்று நாம் அதை கண்கூடாகாக பார்க்கிறோம். 

இந்த தமிழ் ஆசிரியர் பணி குறைப்புக்கு கேரளா அரசு பள்ளிகளில் போதுமான குழந்தைகள் இல்லை அதனால் உபரியாக இருக்கும் ஆசிரியர்களை என்ன செய்ய முடியும் என்று கேட்டு, பணிகுறைப்பு என அவர்களை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சப்பையான காரணத்தை சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் தமிழகத்தில் உள்ள எல்லை பகுதி பள்ளிகளான குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மிக குறைவான அளவே மாணவர்கள் உள்ளனர் இதை வைத்து இங்கு பணியாற்றும் மலையாள ஆசிரியரை வீட்டுக்கு அனுப்பியதா தமிழக அரசு...? இல்லை. 

சித்தூர் பகுதி தெலுங்கு ஆசிரியர்களையும் ,கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள கன்னட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களையும், அந்த பகுதிகளில் இன்னும் குழந்தைகளே இல்லாமல் மிக குறைந்த அளவு உள்ள மாணவர்களை வைத்து பள்ளிகள் நடத்துகிறது என்று ஒருவரையாவது வீட்டுக்கு அனுப்பியாதா தமிழக அரசு? எதுவும் செய்யவில்லை. சிறுபான்மை மொழியை நாம் எவ்வளவு மதிக்கிறோம். ஆனால் செம்மொழியான தமிழ் மொழியை கேரளா அரசு உதாசீனபடுத்துகிறது. கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும் எல்லா அரசு அலுவலங்களிலும் தமிழர்கள் மலையாளத்தில் கடிதம், கோரிக்கை, விண்ணப்பம் எழுதினால் மட்டுமே வேலை நடக்கும். தமிழில் எழுதினால் அது கிழித்து போடப்படும். இதுதான் இன்றைய நிலைமை. 

அதனால் அங்கு இதுவரை கடந்த பத்து ஆண்டுகளின் எத்தனை தமிழக பணியாளர்கள், என்ன என்னபணிகளில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டனர் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். அவர்களுக்கு பிரச்னை இது இல்லை. முல்லை பெரியாரில் அணை மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் அங்கு அவர்களால் ஆட்சி நடத்த முடியாது. அவர்களுக்கு மான பிரச்னை...ஆனால் தமிழர்களுக்கு வாழ்வாதார பிரச்னை. இதனை வைத்து எதையாவது செய்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் கேரளத்து அரசியல்வாதிகள் .

தவிர பணியில் இருந்து தூக்கிய ஆசிரியர்களுக்கு வேறு அரசு பணிகள் கொடுக்க வேண்டும் என்று போராட போகிறோம்" என்றார்                 .  

இது பற்றி கேரளா முதல்வர் உம்மன் சாண்டியிடம் கேட்டோம். வெயிட்" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார். 


நன்றி: ஆனந்த விகடன் 
www.vikatan.com