Monday, June 23, 2014

இந்தியாவில் பிறந்த மாணவிக்கு மருத்துவக் கல்வி மறுப்பு???


தமிழ்நாட்டில் பிறந்த, பிளஸ் 2 பரீட்சையில் 1170 மதிப்பெண் பெற்ற இலங்கை அகதி மாணவி மருத்துவம் கற்க மறுப்பு.



இலங்கையில் A/L பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200 க்கு 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக் கடிதம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த 164 குடும்பங்களைச் சேர்ந்த 523 தமிழர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களில், பெயிண்டிங் தொழிலாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று. தனது தாய் ரூபாவதி மற்றும் மூன்று தம்பிகளுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகாமைச் சேர்ந்த அல்லிமலருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.
அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந்தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவ கலந்தாய்வுக்காக விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய் வில் பங்கேற்க அவருக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை.
"திபெத்தியஅகதிகளை மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும் போது இலங்கைத் தமிழ்அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது."

197.50 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று சனிக்கிழமை மருத்துவக் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.
இது குறித்து நந்தினி கூறியதாவது:
மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப எண் (245143), .ஆர்.எண் (1529), ரேண்டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும் எனக்கு கிடைத்தன. ஆனால், எனது கட் ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதமும் வரவில்லை.
கலந்தாய்வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய்வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.
அதிகாரி விளக்கம்: இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்க அதிகாரிகள் (டி.எம்..,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனைவருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர் மட்டும், புரவிஷனல் பட்டியலில் வெளியிடுவோம். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்றனர்.

 மறுக்கப்பட்டது கல்வியா, இல்லை எங்கள் உரிமையா? இந்திய அரசே பதில் சொல்: இயக்குநர் .கவுதமன்

தமிழகத்தில் மருத்துவம் படிக்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதி மாணவிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென திரைப்பட இயக்குநர் .கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழமாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியுரிமை இல்லாததால் கலாந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
1990-ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அல்லிமலர்- ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995-ல் தமிழகத்திலுள்ள முகாமில் பிறந்தவர். தனது பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்று தனியார் மெட்ரிக் பள்ளியில் இலவசமாக மேல்நிலைக் கல்வியை பெற்றுள்ளார். அரசு பொது தேர்வில் 1170 மதிப் பெண்ணும் , மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் 197.33 பெற்றுள்ளார்.
மருத்துவம்தான் தனதுகனவு என்றுகூறி சென்னை இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். கிட்டத்தட்ட 2000-ஆம் ஆண்டுவரை இலங்கை அகதிகளுக்கு என்று இருபது இடங்கள் மருத்துவப் படிப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் 1996-ஆம் ஆண்டு மதிப்புமிகு உணர்ச்சிகவிஞர். காசி ஆனந்தன் அவர்களின் மகள் ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் முழுவதுமாக நீக்கியுள்ளது.
இதனால் நந்தினி போன்ற பல மாணவ- மாணவியினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திபத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும் போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாக வளரும் வாழும் எம் மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். இதற்கு மரியாதைக்குரிய தமிழக முதலைமைச்சர் விரைந்து தீர்வு காண வேண்டும். இலங்கையில் முள்வேலி முகாம்களை போன்று தமிழகத்திலும் முகாம்களில் வாடும் எம் தமிழ் உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளும் கல்வியும் கிடைக்க வேண்டும்.
இதற்கு இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும். எங்கள் தமிழ் சொந்தங்களின் அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வேற்றுமை களைந்து ஒன்றுப்பட்டு போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நந்தினியின் கல்விக்கும், தனிமனித உரிமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தாயுள்ளத்தோடு முதன்மையாக கவனத்தில் கொண்டு நந்தினி போன்ற மாணவர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Ref: www.Tamilwin.com

Sunday, June 22, 2014

இலங்கையில் ‘பொட்டு’ தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம்!


நெற்றியில் போட்டு வைப்பது தமிழ்ப்பண்பாடல்ல அது ஆணாதிக்கத்தின் அடையாளம் எனவும், அல்ல, அல்ல, அது பெண்களுக்கெதிரான வன்முறையின் ஆரம்பம் என்றும் சிலர்  தமது கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில்  தமிழரல்லாதவர்களும் மத அடிப்படையில், பொட்டு அணிவதால் , பொட்டு அணிவது தமிழரின் அடையாளம் அல்ல என்று சிலர் வாதாடலாம். ஆனால் இலங்கையில் நிலைமை அப்படி அல்ல.  அங்கு சிங்களவர்களும் முஸ்லீம்களும் பொட்டணிவதில்லையாதால், பொட்டு தமிழர்களின் அடையாளமாக, தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாக மட்டும் தான் கருதப்படுகிறது.  

“In Sri Lanka, however, Sinhalese and Muslim women do not wear the point. Therefore, in this country in which one’s ethnic background has become a primary means of identification, the pottu has become an ethnic marker par excellence. Tamil women in present-day Sri Lanka face a dilemma: should they stress their Tamilness by applying the pottu, or should they hide their ethnicity for security reasons?” 

வடமாகாண முதலமைச்சர்
தமிழ்நாட்டைப் போல். தமிழர்களின் வரலாற்றை, அவர்களின் மன்னர்களின் வரலாற்றைத் திரித்து, தமிழ்ப் பண்பாட்டை,  மொழியை, இலக்கியங்களை, தேவார திருவாசகங்களை  எல்லாம் கொச்சைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழர்களை ஒன்றுமேயில்லாதவர்களாக்கும், முற்போக்குகளும், பகுத்தறிவுவாதிகளும், திராவிடியனிஸ்ராக்களும், பெரியாரியர்களும், திராவிட எச்சங்களும் இலங்கையில் கிடையாது. அந்தவகையில் நாங்கள் ஈழத்தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இலங்கையில் சைவத்தமிழர்கள் மட்டுமல்ல, கிறித்தவ தமிழர்களும் எந்த மத வேறுபாடுமின்றி பொட்டணிவதன் காரணம் அது தமிழர்களின் பண்பாட்டின்  அடையாளமாகக் கருதப்படுவதால் தான், இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடந்த இனக்கலவரங்களில் எல்லாம், தமிழர்களை பொட்டை வைத்துத் தான் அவர்களை சிங்களவர்களிடமிருந்தும் முஸ்லீம்களிடமிருந்தும் வேறுபடுத்தித் தாக்கினார்கள் சிங்களவர்கள் என்பதை இனக்கலவரங்களில் நேரடியாகத் தாக்கப்பட்டு தப்பிப் பிழைத்தவர்கள் மட்டுமல்ல, அதை இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான இனகலவரங்கள் பற்றிய நூல்களிலும் காணலாம். 

புலம்பெயர்ந்த ஈழத் தமிழ்க் கிறித்தவ பெண்கள் மட்டுமல்ல சில பாதிரிமார்கள் கூட தேவாலயத்தில் ஆராதனைகளில் கலந்து கொள்ளும் போது பொட்டு அணிந்து கொள்கின்றனர் ஏனென்றால், ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் அது தமிழர்களின் பண்பாட்டின் அடையாளம் என்பதால் தான் (காணொளி). 

இன்றும் கொழும்பிலும்,தென்னிலங்கையிலும் வாழும் தமிழர்கள்,  பொட்டு வைப்பதைத் தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாக மட்டுமல்ல, அதை தமிழர்களின் துணிச்சலைக் காட்டும், சிங்கள இராணுவத்தை எதிர்க்கும் ஆயுதமாக,  தமிழர்களை அடக்கி விட முடியாது என்பதைக் காட்டும், ஒருவகையான எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமாகக் கூட அணிகிறார்கள். இதையெல்லாம் உணராமல், பொட்டு அணிவது தமிழ்பண்பாட்டின்  அடையாளமல்ல, அப்படிக் கூறுவது வன்முறையின் ஆரம்பம், பெண்களை அடிமைப்படுத்தும் செயல் எனக் கூறுவோரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. 

சில நேரங்களில் தமிழ்நாட்டு ‘முற்போக்குகள்’ சிலரின் கருத்தைக் கேட்கும் போது, அவர்களுக்கு தமிழ்நாட்டுக்கு வெளியேயும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதே தெரியாதென்று எண்ணத் தோன்றுகிறது.