Friday, November 14, 2014

ஈழத்தமிழர்களனைவரும் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஓங்கியொரு குட்டு வைக்க வேண்டும்??



வடமாகாணத்தின் மாண்பு மிகு முதல்வர் நீதிபதி விக்கினேசுவரன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது, அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிப் போய் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தான் வாழவேண்டும் என்ற நிலையிருந்த போதிலும், அவரது சிங்கள நண்பர்கள் மட்டுமல்ல, சிங்கள உறவினர்கள் கூட அவருக்கு இனவாதி, புலி போன்ற பட்டங்களைச்  சூட்டலாம் என்று தெரிந்தும் கூட, இலங்கையில் வடக்கு கிழக்கில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பையும், தமிழ்ப்பெண்கள் மற்றும் விதவைகளின் அவல நிலையையும், இலங்கை அரசு எவ்வாறு வடக்கு கிழக்கில் இராணுவ உதவியுடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நடத்திஇலங்கையில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகத்தை சிங்களமயப்படுத்திக் கொண்டு வருகின்றது என்பதுடன், வடக்கு கிழக்கில் தமிழர்களின் உண்மையான  நிலையையும் தீர்க்கமாக, தெள்ளத் தெளிவாக வெளியுலகுக்கு  எடுத்துக் காட்டியமைக்கு ஈழத்தமிழர்கள் அனைவரும் எமது பாராட்டையும், நன்றியையும் அவருக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடிருக்க முடியாது.

தொன்றுதொட்டு ஈழத்தமிழகத்தில் வீரர்களுக்கு மட்டுமன்றி, கல்விமான்களுக்கும், பல்வேறு துறைகளில் பயின்ற வல்லுனர்களுக்கும் எப்பொழுதும் தட்டுப்பாடு இருந்ததில்லை. அதனால் இலங்கைத் தமிழர்கள் சரியான ஒருவரையே தலைவராகத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள் என தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலர்  பாராட்டுமளவுக்கு முதல்வர் விக்கினேசுவரன் தனது அறிவையும் ஆளுமையையும் தனது பேச்சிலும், நேர்காணல்களிலும் வெளிப்படுத்தியதும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விடயமே. ஆனால் அவரது பேச்சுக்களில் தேவைக்கதிகமான சமக்கிருதச் சொற்களும், அவரது சமக்கிருதசுலோகங்களும்  அவரது பேச்சைக் கேட்கும் போது எனக்கு மட்டுமல்ல பல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் உறுத்தலாக இருந்தது  என்பதையும் மறைக்க முடியாது.
தமிழ்நாட்டில் தள்ளாதவயதிலும் தமிழில்பாடப் போராடித் தோற்றுப்போன  தமிழன் 
இவ்வளவுக்கும் முதல்வர் விக்கினேசுவரன் புகழ்பெற்ற பேச்சாளர் மட்டுமன்றி தமிழிலும், தேவார திருமுறைகளிலும் புலமை பெற்றவரும் கூட. அவர் தனது தனிப்பட்ட பூசை அறையில் தமிழில் நாயன்மார்களின் தேவாரங்களுக்குப் பதிலாக சமக்கிருத சுலோகங்களை உச்சரிப்பது அவரது தனிப்பட்ட விடயம். ஆனால் வளமான தமிழ் மொழியில் எவ்வளவோ சொற்களிருக்க தமிழில் வழக்கொழிந்து போன பல சமக்கிருதச் சொற்களைப் பாவித்ததுடன் தனது பேச்சை சமஸ்கிருத சுலோகங்களுடன் ஆரம்பித்ததும் கண்டிக்கப்பட வேண்டியவை.

இலங்கையில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு தமிழைத் தாழ்த்தி சமக்கிருதத்தை உயர்த்தும் சமக்கிருதவாதிகளும், தமிழ்நாட்டைப் போல் சமக்கிருத திணிப்பும்கோயில்களில் தமிழுக்கு மறுப்பும் இல்லாத காரணத்தால் ஈழத்தமிழர்களிடம் சமஸ்கிருத எதிர்ப்புக் கிடையாது, ஆனால் தமிழிலும், வரலாற்றிலும் புலமையும் ஆழ்ந்த அறிவும், அனுபவமுமுள்ள முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டுக்குச் சென்று ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றும் போது (அது சமயச் சொற்பொழிவல்ல) தமிழ்நாட்டில் தமிழை இழிவு படுத்தும் சமக்கிருதவாதிகளை மிஞ்சும் வகையில் சமக்கிருத சுலோகங்களை உச்சரித்தது, ஈழத்தமிழர்களால் கண்டிக்கப்பட வேண்டியது முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட  அழைப்பையேற்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்தாலும் கூட, அவர் வடக்கு மாகாணத்தின் சைவ, கிறித்தவ ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் மட்டுமன்றி, மதவேறுபாடின்றி இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும்  பொதுவான முதல்வரும்,  ஈழத்தமிழ்  அரசியல் தலைவரும்  என்ற முறையில் தான் அந்தச் சொற்பொழிவை ஆற்றினார்.

இலங்கையில் தமிழுக்கு சிங்களத்துக்கு இணையாக முதலுரிமை வேண்டித் தமதுயிரையே நீத்த மாவீரர்களை ஈன்ற ஈழத்தமிழ் மண்ணின் தமிழர்களின் முதல்வர், தாய்த் தமிழகத்தில் சமக்கிருதத் திணிப்பை எதிர்த்து தமிழர்கள் போராடுவதையும், தமிழர்களின் கோயிலாகிய சிதம்பரத்தில் ஆடவல்லானின் முன்னால் தமிழில் தேவாரம் பாட முடியாது,  அதற்குக் கூட  தமிழ்நாட்டுத்தமிழர்கள் போராட வேண்டிய நிலையுண்டு, அதிலும் அவர்கள் மானங்கெட்ட விதமாக தோற்றுப் போய் விட்டார்கள் என்பதையும் உணராமல்,  தமிழ்நாட்டில் அவரே சமக்கிருத சுலோகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை   உச்சரித்த பின்னர் அவரது பேச்சைத் தொடங்கியது பல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தான் உண்மை.

முதல்வர் விக்கினேசுவரன் பல விடயங்களில் தனது தனித்துவத்தைப் பேணிவருகின்றார். தமிழ்நாட்டிலும் பல தமிழ் அரசியல் தலைவர்கள் பலர்  தமக்கேயுரிய சிறப்பான ஆடை அணிகளைஅணிந்து கொண்டு தமது தனித்துவத்தைக் காட்டியுள்ளனர். உதாரணமாக, தமிழ்நாட்டுக்கோ அல்லது தமிழர்களுக்கோ எந்த வித சம்பந்தமுமற்ற ஒரு வகையான தொப்பியை, தனது மொட்டைத் தலையை மறைக்க எம். ஜி. ஆர் பயன்படுத்தினார். அதே போலவே கறுப்புக் கண்ணாடியை கலைஞர் கருணாநிதியும் அணிந்து கொண்டார். அதனால் முதல்வர் விக்னேஸ்வரன் ஈழத்தமிழர்களின் பாரம்பரிய உடையாகிய வேட்டி சால்வையை அணிவதுடன், சிறப்பாக எந்த ஈழத்தமிழ்த் தலைவருக்கும் மாறாக, இந்துமதத்தைக் குறிக்கும் வகையில் குங்குமப் பொட்டையும் இட்டுக் கொள்கிறார். அவர் அரசியலுக்கு வருமுன்பே அதுவே அவரது பாணியாக இருந்த காரணத்தால்,  அதை மாற்றிக் கொள்ள வேண்டுமென யாரும் கேட்க முடியாது. அத்துடன் ஆண்கள் பொட்டிட்டுக் கொள்வதும் இலங்கைத் தமிழர்களின் கலாச்சாரப் பாரம்பரியங்களிலொன்று எனவும் வாதாடலாம். கிறித்தவரான சுமந்திரனும், ஈழத்தமிழ்க் கத்தோலிக்க குருமார்களும் கூட சில வேளைகளில் பொட்டு வைத்திருப்பதைக் காணலாம். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கூட ஈழத்தமிழர்கள், குறிப்பாக  யாழ்ப்பாணத் தமிழர்களில்  ஆண்களும் பொட்டும், கடுக்கனும், குடுமியும் அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அது மட்டுமன்றி, தென்னிலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்கள் பலவற்றில் பொட்டு வைத்திருப்பதை வைத்துத் தான் சிங்களவர்கள் தமிழர்களை இனங்கண்டு, பேருந்துகளிலும், தொடரூர்திகளிலுமிருந்து தமிழர்களை வெளியே இழுத்து தாக்கிக் கொன்றார்களாம்.

எனக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளின் விவரம் புரியத் தொடங்கிய காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தது **2001ஆம் ஆண்டில்  நீதிபதி விக்னேஸ்வரன் இலங்கையின் உச்சநீதிமன்றத்தின்  நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், அந்த நியமனத்தை ஏற்றுக் கொண்டு அவர் பேசிய பேச்சும், சிங்களவர்களின் மத்தியில் அவர் துணிச்சலுடன் கூறிய கருத்துக்களும், அதில் தனது தாய்மொழி தமிழிலுள்ள பற்றை அவர் காட்டியதும்  தான். அதனால் அவர் மீதும், அவரது பேச்சுக்களின் மீதும் எனக்கு  மிகுந்த ஈடுபாடும், நன்மதிப்புமுண்டு. இருந்தாலும் இந்த சமக்கிருத விடயத்தில், தமிழ்நாட்டிலுள்ள நிலைமையைப் புரிந்து கொள்ளாது, அவர் சமக்கிருத சுலோகத்துக்கு  முன்னுரிமை கொடுத்ததையும், தேவையற்ற சமக்கிருத சொற்களை (அபேட்சகர், பிரசன்னம், ஜனனம், பகிஸ்கரிப்பு  etc.) தனது பேச்சில் பாவித்ததையும் தவிர்த்திருக்க வேண்டும், இனிமேலாவது அவர் அவற்றைத் தவிர்த்துக் கொள்வாரென நம்புவோம்


"The vast majority of the denizens of the north and east seek the restoration of their rights and not devolution of power. These are the rights which were snatched away from them by virtue of a mathematical innovation where the majority in the two provinces were added to the majority in the seven provinces and thus made a minority in the nine provinces" said Justice C.V Vigneswaran in his ceremonial acceptance speech Wednesday on being appointed as judge to Sri Lanka's Supreme Court.  
"As a Tamil speaking citizen, if I do not use my mother tongue, I will soon be forced to use my brother's tongue. The sterile and impotent provisions now appearing in our constitution have little meaning to the Tamil-speaking people of the northern and eastern provinces. They need to govern themselves in their own language with little interference from outside," the newly appointed supreme court judge said.
"Whether the Tamil language is spoken and preserved in other countries is irrelevant. The Sri Lankan Tamils need to develop their language and culture peculiar to themselves in their country".
"We Sri Lankan Tamils, it must be noted, were never a minority. We were made a minority. It is not essential to go into the question of whether Tamils were here a thousand years ago, two thousand years ago or were the original inhabitants. The recent revisionist historians should note that, as recently as ninety years ago, the then Sinhalese leaders Sir James Peiris and E.J.Samarawickreme having promised Sir Ponnambalam Arunachalam, that they would support the demand for a Tamil Seat for the City of Colombo, repudiated their pledge after winning the election.  
They directed the Sinhalese Electorates created under the 1921 Constitution, drafted almost entirely by Sir P. Arunachalam, to nominate only Sinhalese candidates for election. The ground on which they objected to the provision of any safeguards for the Tamils, was that (I quote)  the Tamils like the Sinhalese and unlike any other people of the Island were in themselves a majority community and as such had no reason to be classed with the minorities nor to stand in need of any safeguards .

This gives credence to the fact that the Sri Lankan Tamils far from being a minority have from remote ages been and continued to be a full blooded majority in their ancient homelands where their own kings and potentates had held unquestioned sway."
Justice Vigneswaran (Whence Sri Lankan Tamils And Whither Sri Lankan Tamils)  

No comments: