Tuesday, September 9, 2014

தமிழ்நாட்டு முஸ்லீம்களும் விநாயகர் ஊர்வலங்களை வரவேற்றால் என்ன?

 தமிழ்நாட்டில் இந்துக்களும் முஸ்லீம்களும் கொஞ்சம் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கடைப்பிடித்தால் ஆண்டுக்கொருமுறை நடைபெறும் பிள்ளையார் ஊர்வலத்தைக் கூட, மத நல்லிணக்கத்துக்கு ஏதுவாக மாற்ற முடியும். மதநல்லிணக்கத்துடன் வரவேற்பது என்பது வணங்குவது ஆகாது.   

இலங்கை போன்ற பல நாடுகளில் குறிப்பிட்ட இன, மதக்  குழுவினரின் மத ஊர்வலங்களில், ஏனைய மதத்தினரும்  வரவேற்று, ஆதரவளித்து அல்லது பங்குபற்றியும் கூட மதநல்லிணக்கத்துக்கு    எடுத்துக்காட்டாக  உள்ளனர் சில இந்துமுன்னணிக் காடையர்கள் விநாயகர் ஊர்வலத்தைப் பாவித்துமதக் கலவரங்களைத் தூண்ட முனைவதை பெரும்பாலான  தமிழர்கள்ஆதரிக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை. தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் பங்களிப்பை எதிர்ப்பவர்கள் இரண்டு பக்கத்திலுமுள்ள மத வெறியர்களாகத் தானிருப்பார்கள். அதனால்  அவர்களை இனங்கண்டு ஒதுக்கலாம்.

இலங்கையில் பெரும்பான்மை மக்களின் பெளத்த மத ஊர்வலங்களுக்கு இலங்கை முஸ்லீம்களால் ஆதரவும், நிதியுதவியும் பொருளுதவியும் அளிக்க முடியுமென்றால் அதே போன்ற சகிப்புத்தன்மையையும், நட்புக்கரத்தையும்  ஏன் தமிழ்நாட்டு முஸ்லீம்களும் பெரும்பான்மை இந்துக்களுக்கு நீட்டக் கூடாது. தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தாத இலங்கையின் தமிழ்பேசும் முஸ்லீம்களை விடவா, தமிழ்நாட்டில் தம்மை இன்னும் தமிழராக அடையாளப்படுத்தும்  முஸ்லீம்களுக்கும், அவர்களின் ஏனைய  தமிழ்ச் சகோதரர்களுக்குமிடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது? 

இலங்கையில் கண்டியில் நடைபெறும் தலதா மாளிகையின் புத்தரின் புனித தந்தம்(பல்) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் பெரஹரா(ஊர்வலம்) பள்ளிவாசல்வழியாகப்  போகும் போது முஸ்லீம்கள் அதை மரியாதையுடன் வரவேற்கிறார்கள்உதாரணமாக சென்ற வருடம்  நடைபெற்ற கொழும்பு கங்காராம விகாரையின் வருடாந்த ஊர்வலத்துக்கு முஸ்லீம்கள் அரிசிபணம் பொருட்கள் என்பன கொடுத்து சிறப்பாக நடைபெற உதவினர் (காணொளியைப் பார்க்கவும்). கொழும்பில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் வேல்விழாவையும் இனமத வேறுபாடின்றி எல்லோரும் வரவேற்கிறார்கள்.

கங்காராம விகாரையில் நவம் பெரஹரா (ஊர்வலம்) 


நான்  சில வருடங்களுக்கு முன்னால் திரிசூர், கேரளாவில் நடைபெறும் பூரம் திருவிழா பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன். பூரம் திருவிழா நடைபெறும் வடக்குநாதன் கோயிலுள்ள பெரிய மரங்கள் நிறைந்த கோயில்  முன்றலில் குடைகளுடன்யானைகளின்அணிவகுப்பையும்மலையாளிகளின் 'செண்டை' மேளத்தையும் பார்த்து ரசித்துக்  கொண்டிருக்கும் போது அங்கு எங்களுடன் பேச்சுக் கொடுத்தவர்களில்  பலர் முஸ்லீம்கள், அவர்கள் பெருமையுடன் அந்த விழாவைப் பற்றி புகழ்ந்து அதன் பழமையைப் பற்றி விளக்கியதையும் பெருமைப்பட்டதையும் பார்த்து எனக்கு வியப்பாக மட்டுமன்றி மகிழ்ச்சியாகவும் இருந்தது. அது மட்டுமன்றி முஸ்லீம்களும் அந்த பூரம் திருவிழாவில் யானைகளின் ஊர்வலத்தில் பங்கு கொள்வார்களாம். அது மட்டுமன்றி ஒவ்வொரு கோயிலிலிருந்தும் யானையில் பவனி வரும் இந்துக் கடவுள்களின் ஊர்வலங்களை வரவேற்கும் பந்தல்களையும் வழிநெடுக அமைப்பதில் பங்கேற்பார்கள் என்றும் குறிப்பிட்டார்என்னுடன் பேசிக் கொண்டிருந்த  அந்த கேரள முஸ்லீம். 

அத்துடன்  வடக்கும்நாதன் கோயிலுக்குள் எங்களுடன் தானும் உள்ளே வந்தார், அவர் அதை ஒரு பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை.  நான் சுற்றி வரும்போது அவரும் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்து விட்டு, அந்தக் கோயிலின் வித்தியாசமான, மரத்திலான முகப்பு வேலைப்பாடுகளை பெருமையுடன் விளக்கினார். அவரது குரலில்அவர் ஒரு முஸ்லீம் என்பதை விட மலையாளி என்ற பெருமை தொனித்தது. அதற்கு நான், நம்பூதிரிப் பார்ப்பனர்கள், மலையாளத்துக்கு,  தமிழ் எழுத்துக்குப் பதிலாக  வேறொரு எழுத்து(script)  வடிவத்தை  மாற்றாதிருந்தால் இன்றைக்கு நீங்களும் கொச்சைத் தமிழ் பேசும் தமிழனாகத் தான் இருந்திருப்பீர்கள்என்றதை அவர் அவ்வளவு ரசித்ததாக தெரியவில்லை.

இலங்கையில் முஸ்லீம்களும், அவர்களின் தலைவர் ஹக்கீமும் இணைந்து சிங்கள புத்த பிக்குகளை, வெள்ளைத்துணி போர்த்திய இருக்கையில் (அது தான் இலங்கையில் மரபு) அமர்த்தி, அவர்கள், நின்று கொண்டே தமது கையாலே பிக்குகளுக்கு உணவு பரிமாறிப் 
பயபக்தியுடன்  தானம் அளிப்பதைப் படங்களில் பார்க்கவும். அதையும் இஸ்லாம் தடுக்கவில்லை. இலங்கையில் முஸ்லீம்கள் சிங்கள
பெளத்தர்களுக்குப் பயத்தினாலும், சிங்களப் பகுதிகளில், சிங்களவர் மத்தியில் தொடர்ந்து வாழ்வதற்காகவும் அப்படிச் செய்கிறார்கள், அது அவர்களின்  'தொப்பி பிரட்டித்தனம்' என்றும் சிலர் கூறுகின்றனர், ஆனால் அது மட்டும் தான் காரணம் என நான் நம்பவில்லை, இலங்கை முஸ்லீம்களிடம் இன்னும் மதச்சகிப்புத் தன்மையுண்டு என்பது மட்டுமல்ல, இஸ்லாமியரல்லாத 
ஏனைய மதகுருமார்களுக்கு மரியாதை செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதையும் இது காட்டுகிறது என்று தான்  கூற வேண்டும்.

தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் வேரூன்றி வரும் வஹாபியிசம் அதற்கு இடையூறாக இருந்தாலே தவிர, தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லீம்களும்,  தமிழ் இந்துக்களும்  ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் மதித்து, ஏனைய மதங்களின் ஊர்வலங்களிலும்  மதநல்லிணக்கத்தைக் காண்பிப்பதில் தடையேதுமிருக்க முடியாது.  ஆனால் தமிழ்நாட்டில் மதுரை  சித்திரைத் திருவிழாவிலோ அல்லது வேறெந்த திருவிழாவிலும் அப்படி முஸ்லீம்களின்  பங்களிப்பை நான் பார்த்ததில்லை. 

இலங்கையிலும், கேரளத்திலும் முஸ்லீம்கள்  தமது இந்து மதச் சகோதர்களுடன்  (குறைந்தபட்சம்   ஊர்வலங்களிலாவது) ஒற்றுமையைக் காட்டுகிறார்கள் ஆனால்  தமிழ்நாட்டு முஸ்லீம்கள் மட்டும் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசலுக்கு முன்னால் போவதை எதிர்க்கிறார்கள். சிலர் என்னடாவென்றால்,  வருடத்தில் ஒருமுறை நடைபெறும் இந்த ஊர்வலம் பள்ளிவாசல் வீதியால் போவது தடுக்கப்பட வேண்டும் அல்லது ஏன் கொண்டு செல்கிறார்கள் என்றும் கேள்வி கேட்கிறார்கள். உண்மையில் இப்படியான  கேள்விகளைப் பெரும்பான்மை இந்துக்களும் கேட்கத் தொடங்கினால், நிலைமை மிகவும் மோசமாகலாம்  என்பதை அவர்கள் உணர்வதில்லைப் போல் தெரிகிறது.

Muslims support  to Gangarama Perahera, Sri Lanka - 2013

ஊர்வலத்தில் சில இந்து வெறியர்கள் முஸ்லீம்களை இழிவு படுத்தினால் அல்லது வம்புக்கிழுத்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதற்கும் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசல் உள்ள வீதியால் போகக் கூடாது  என்பதற்கும் பெரிய வேறுபாடுண்டு.     உண்மையில் பெரும்பான்மை இந்துக்களாகிய தமிழர்களின் மத நல்லிணக்கமும், பொறுமையும் சகிப்புத்தன்மையினாலும் தான் இஸ்லாம் தமிழ் நாட்டில் செழித்து வளர்ந்தது, இன்றும் வளர்கிறது. .சிலர் நாங்கள் ஒவ்வொரு நாளும் 'கோழி பிடித்துக் கொண்டு தானிருக்கிறோம்' என்று இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்வதைத்  துணிச்சலுடன் கூறுமளவுக்கு பேச்சுச் சுதந்திரமும், சகிப்புத்தன்மையும் தமிழ்நாட்டில் உண்டு.  

தமிழ்நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த, சைவ, வைணவத் தமிழர்களின் 
 மிகவும் புனிதமான கோயில்களுக்கு அண்மையிலேயே பள்ளிவாசல்கள் உள்ளன, இந்தியாவில் பழமையான இந்துக் கோயில்கள் பல  இன்றும் பள்ளிவாசலாக  இயங்குகின்றன. மதுரை மீனாட்சி அம்மனின் கோயிலுக்குள்ளேயே முஸ்லீம்கள் கடைகள் வைத்திருக்கிறார்கள். பள்ளிவாசல்களில் ஒருநாளைக்கு ஐந்து முறை அதிலும் அதிகாலையில் தொடங்கி வரும் காதைப் பிளக்கும் ஒலியையும் இந்துக்கள் ஒவ்வொரு நாளும் பொறுத்துக் கொள்கிறார்கள் ஆனால் வருடத்தில் ஒரு முறை நடைபெறும் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசலின் முன்னால் போவதை  தமிழ்நாட்டு முஸ்லீம்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையென்றால் இலங்கை, கேரளா முஸ்லீம்களை விட தமிழ்நாடு முஸ்லீம்கள் மதவாதிகளா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

பாரிஸ் மாநகரின் நடுவிலுள்ள மாணிக்கப்பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழாவையும், ஊர்வலத்தையும் ஈழத்தமிழர்கள் கொண்டாடும் போது இன, மத வேறுபாடின்றி வெள்ளையர்களும், எல்லா இனமக்களும் அதில் பங்குபற்றுகின்றனர். தமது மத நல்லிக்கத்தைக் காட்டுகின்றனர். அந்தப் பண்பு மேலைநாட்டுக் கிறித்தவர்களிடம் உண்டு.

 மதநல்லிணக்கத்தையும், தமிழர்களின் ஒற்றுமையையும்  விரும்பினால், கேரள முஸ்லீம்களும், இலங்கை முஸ்லீம்களும்  பூரம் திருவிழாவிலும், சிங்கள பெளத்த பெரஹராவிலும் ஈடுபட்டு மத நல்லிணக்கத்தைக் காட்டுவது போல்,  தமிழ்நாட்டு முஸ்லீம்களும் தமிழ்நாட்டில் விநாயகர்  ஊர்வலம் வரும்போது சகிப்புத்தன்மையுடன் வரவேற்று நேசக்கரம் நீட்டினால் என்ன?

14 comments:

Anonymous said...

மத நல்லிணக்கம் பற்றி முஸ்லிம்களுக்கு சொல்ல முயல்கிற பதிவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். ஷியாவினரை சுன்னி முஸ்லிம்கள் தாக்காத முஹர்ரம் லக்னவ், அலிகாரில் நடந்ததுண்டா?

ISIL செய்வதென்ன? முஸ்லிம்களில் பிரிவுகளான சபக்குகளையும் ஷியாக்களையும் அடிப்பது/வதைப்பது/கொல்வது/விரட்டுவது

rajan said...

வியாசன் உங்களது மதநல்லிணக்கம் குறித்த இலங்கை பெருமிதம் குறித்து எனக்கும் மகிழ்ச்சியே.ஆனால் அதே போன்ற இன்னும் சொல்லப் போனால் அதைவிடவும் பெரிய அளவில் எமது தமிழகம் மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கிற பாரம்பர்யம் உள்ளது என்பதை நீங்கள் ஆராய்ந்து அறியலாம்.சற்றேறக்குறைய 20 வருடங்களாகவே இந்த விநாயகர் ஊர்வலங்கள் ஒரு அரசியல் நோக்கோடு இங்கே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கமும் அந்த ஊர்வலங்கள் நடக்கும் விதமும் கொஞ்சமும் பக்தியோடு தொடர்புடையதல்ல. தமிழகத்தின் இந்த விநாயகர் ஊர்வலம் தவிர மற்ற எல்லா ஆன்மிக பண்டிகைகளும் தேரோட்டமும் ஊர்வலங்களும் இஸ்லாமிய சமூகத்தினரின் பங்களிப்போடு இது நாள் வரை நடந்தேறி வருகிறது. 19வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணி பள்ளிவாசலில் கலவரம் நடந்தது முதல் இந்த வருடம் முத்துப்பேட்டையில் நிகழ்த்தப்பட்ட வன்முறை வரை தமிழகத்தில் இந்த குறிப்பிட்ட விநாயகர் ஊர்வலத்தில் மட்டுமே ஏராளமான மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன.பல லட்சம் பேர் வரை பங்கு பெறுகிற திருசெந்தூர் சூரசம்காரம் முதல் மதுரையின் அழகர் திருக்கல்யாணம் வரை சமய விழாக்கள் அனைத்தும் எவ்வித மனமாச்சரியமும் இல்லாமல் பதட்டம் எதுவுமின்றி நடந்தேறுகிறது.ஏனென்றால் இத்தனை விழாக்களும் தேரோட்டங்களும் பக்தர்களால் நிகழ்த்தப்படுகின்றன.ஆனால் விநாயகர் ஊர்வலம் மட்டுமே இந்துக்களை அரசியல் ரீதியாக தமது பின்னே திரட்டும் நோக்கோடு ஒரு வன்முறை கும்பலால் நடத்தப்படுகிறது.இந்த அரசியல் புரியாமல் அல்லது புரிந்தும் அதனை மறைத்து தமிழக மக்களுக்கு மத நல்லிணக்க வகுப்பெடுக்க முயல வேண்டாம்.இஸ்லாமியர்களின் வழிபாட்டு கூடங்கள் இருக்கும் பகுதி வழியாக ஏன் போககூடாது என நியாயம் பேசுகின்ற உங்களைப் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் (அவர்கள் இந்துக்கள் தானே) நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக எல்லா சாமி ஊர்வலங்களும் அவர்கள் வசிப்பிடம் வழியேயும் செல்ல வேண்டும் என ஒரு பதிவெழுதலாமே?

rajan said...

தாங்கள் உண்மையிலேயே விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப்படுகிற முறை பற்றி அறியாதவராக இருந்தால் கடந்த வருடம் பலரால் படிக்கப்பட்ட விநாயகர் ஊர்வல காட்சிகளை பற்றிய இந்த பதிவை படிக்கலாம்: காவி ரிப்பன்களும் புன்னகைக்கும் பிள்ளையாரும் http://www.athishaonline.com/2013/09/blog-post_17.html

க்ருஷ்ணகுமார் said...

நல்ல பதிவு.

வேலும் மயிலும் சேவலும் துணை.

viyasan said...

@thumbi,

முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்துக்களும் கூடத்தான் சாதியடிப்படையில் கோயில் திருவிழக்களிலே வெட்டிக் கொண்டு சாகிறார்கள். நான் இங்கு கூறுவதெல்லாம், இலங்கையில் முஸ்லீம்கள் புத்தமத ஊர்வலங்களை வரவேற்கிறார்கள் ஆதரவளிக்கிரார்கள், அதனால் இஸ்லாத்தில் அதற்கு தடையேதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லீம்களும் அவ்வாறு நடந்து கொண்டால் என்ன? பெரும்பான்மை இந்துக்களுக்கு தமது நேசக்கரத்தை நீட்டினால் என்ன என்பது தான். நன்றி.

viyasan said...
This comment has been removed by the author.
viyasan said...

@rajan,

இணைய முகவரி இல்லாதவர்களின் மறுமொழியை நான் வெளியிட விரும்புவதில்லை. ஆனாலும் உங்களின் பின்னூட்டம், இந்தப் பதிவின் காரணத்தை வெளியிட எனக்கு உதவுகிறது. எனக்கும் தமிழ்நாட்டில் முஸ்லீம் நண்பர்கள் உண்டு. அவர்களின் ஒருவர் ஏன் பள்ளிவாசலின் முன்னால் பிள்ளையார் ஊர்வலம் போவதை முற்றாகத் தடைசெய்ய வேண்டும் என்றார். அவர் மட்டுமல்ல, வேறு இணையத்தளங்களிலும் சிலர் அந்தக் கருத்தை வலியுறுத்துகின்றனர்.

என்னுடைய கருத்து என்னவென்றால்:

இந்துமத வெறியர்கள் பிள்ளையார் ஊர்வலங்களை முஸ்லீம்களுக்கெதிரான பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு, அதற்கு முஸ்லீம்களின் வரவேற்பு நிச்சயமாக உதவும். முஸ்லீம்கள் பிள்ளையார் ஊர்வலத்துக்கேதிராக, முறுகிக் கொண்டு நின்று, தமது எதிர்ப்பைத் தெரிவிக்காமல் போனால், இந்து மதவெறியர்களால், சாதாரண இந்துக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும். மக்களின் ஆதரவில்லாத எந்த தீவிரவாதமும் நீண்ட நாட்களுக்கு நீடிக்க மாட்டாது.

இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் முஸ்லீம்களுக்கேதிரானதே தவிர தமிழர்களுக்கெதிரானதல்ல. சிங்களவர்கள் முதலில் முஸ்லீம்களைத் தான் அடித்தார்கள். அது ஏன் நடந்ததென்றால், கண்டி எசல பெரகரா(ஊர்வலம்) பள்ளிவாசலுக்கு முன்னால் போகும் போது மேள, தாளங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றதுடன் ஊர்வலம் போகும் போது முஸ்லீம்கள் அதை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்கள். அதனால் ஆத்திரம் கொண்ட சிங்களவர்கள், இலங்கையின் வரலாற்றில் மோசமான இனகலவரத்தை நடத்தி தமது கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். அதில் நல்ல பாடம் கற்றுக் கொண்ட முஸ்லீம்கள், அப்படியான எதிர்ப்புகளை அதன் பின்னர் தெரிவிப்பதில்லை.

ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டுவதை எந்த நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் உண்மை. அதனால் தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் பிள்ளையார் ஊர்வலங்களுக்கு தமது எதிர்ப்பைக் காட்டாமல், அவற்றை வரவேற்றால் அல்லது அடக்கி வாசித்தால் , நிச்சயமாக இந்துமத வெறியர்களுக்கு, இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரக் கருவியாக பிள்ளையார் ஊர்வலங்கள் அமைய வாய்ப்பில்லாமல் போய் விடும் என்பது தான் எனது கருத்தாகும்.

viyasan said...

//இஸ்லாமியர்களின் வழிபாட்டு கூடங்கள் இருக்கும் பகுதி வழியாக ஏன் போககூடாது என நியாயம் பேசுகின்ற உங்களைப் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் (அவர்கள் இந்துக்கள் தானே) நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக எல்லா சாமி ஊர்வலங்களும் அவர்கள் வசிப்பிடம் வழியேயும் செல்ல வேண்டும் என ஒரு பதிவெழுதலாமே?///


@rajan,

இஸ்லாமியர் வழிபாட்டுக் கூடங்கள் இருக்கும் பகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்குமே ஒரு குறிப்பிட்ட மதத்தினர் போகக் கூடாது என்ற நிலைமை ஏற்படக் கூடாது.. இப்படியான நிலை ஏற்படுவதற்கு இரண்டு பக்கமுமுள்ள மதவெறியர்கள் தான் காரணம், அதனால் அவர்களை ஒடுக்குவதற்கான வழியெதுவென்றால் இந்துக்களும், முஸ்லீம்களும் பரஸ்பர மத நல்லிணக்கத்தைக் காட்டுவதும் அதை ஊக்குவிப்பதும் தான்.

தாழ்த்தப்பட்டமக்கள் வாழும் பகுதிகளுக்கு ஊர்வலங்கள் கிராமப் பக்கங்களில் போகாமலிருப்பதற்குக் காரணம், அந்தந்த ஊர்களிலுள்ள ஆதிக்கசாதியினரின் சாதிவெறி, அதற்கு ஒட்டுமொத்த இந்துக்களையும் குற்றஞ்சாட்டுவது வெறும் அபத்தம்.

சாதிவெறியர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத தமிழ்நாட்டுக் கோயில் திருவிழாக்களில் கூட, சாதி வேறுபாடில்லாமல் தலித்துக்கள் தான் பெரும்பான்மையினராக உள்ளதை நான் நேரில் கண்டிருக்கிறேன். உண்மையில் கோயில் ஊர்வலங்கள் கோயிலைச் சுற்றி வருவது தான் வழக்கம், வருடத்தில் ஒருமுறை ஊர்வலம் அல்லது நகர்வலம் போனால் நிச்சயமாக சாதி வேறுபாடின்றி ஊரில் எல்லாப் பகுதிகளுக்கும் போகத் தான் வேண்டும். அப்படிப் போகக் கூடாதென்று இந்து மத்தில் எங்கும் கூறவில்லை. முஸ்லீம்கள் மத்தியில் சுன்னிகளும் சியாக்களும் அடித்துக் கொண்டு சாவது போலத் தான், சில ஊர்களில் இந்துக்களும் அடித்துக் கொண்டு சாகிறார்கள். அது கவலைக்குரியது தான்.

இலங்கையில் சுவாமி நகர்வலம் போனால் சாதி,மத வேறுபாடின்றி எல்லாப் பகுதிகளுக்கும் தான் போவார்கள். அதை விட, ஆண்டுக்கொருமுறை எல்லாக் கோயில்களிளிருந்தும், கடற்கரைக்கு தூரத்தில் இருக்கும் கோயில்களிலிருந்து கூட சுவாமி ஊர்வலம் புறப்பட்டு, கடலில் தீர்த்தம் என்ற பெயரில் மீனவர் குடியிருப்புகளுக்குப் போய், அங்கு தங்கி, எல்லா மக்களும் கடலில் நீராடித் திரும்புவதுமுண்டு. அப்படியான நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் நடைபெறுகிறதா என்று எனக்குத் தெரியாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பாரிஸ் மாநகரின் நடுவிலுள்ள மாணிக்கப்பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழாவையும், ஊர்வலத்தையும் ஈழத்தமிழர்கள் கொண்டாடும் போது இன, மத வேறுபாடின்றி வெள்ளையர்களும், எல்லா இனமக்களும் அதில் பங்குபற்றுகின்றனர். தமது மத நல்லிணக்கத்தைக் காட்டுகின்றனர். அந்தப் பண்பு மேலைநாட்டுக் கிறித்தவர்களிடம் உண்டு.//

இதில் வட ஆபிரிக்க நாடுகளான அல்யீரிய,துனிசிய, மொரக்கோ நாட்டு கணிசமான இஸ்லாம் மக்கள் குடும்பமாக வந்து பார்த்து மகிழ்வதுடன் அங்கு கடைகளில் கொடுக்கும் படைக்கப்பட்ட பிரசாதத்தையும் வாங்கி உண்டு மகிழ்வார்கள்.
அவர்களைப் பொருத்தமட்டில் இது ஒரு களியாட்டம் போல் கருதுகிறார்கள். நிச்சயம் வெறுக்கவில்லை.
அவர்கள் கடைகளைத் தாண்டி , செல்லும் போதும், அவர்கள் கடைகளுக்கருகில் இருக்கும், தமிழ்க் கடைகள் அலங்காரம் செய்யும் போது எந்த வித ஆட்சேபனையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அன்று சற்று வியாபாரம் அதிகமென மகிழ்வார்கள்.
அத்துடன் இத்தனை நாட்டவரும் இந்தி, தமிழ்ப் படங்கள் உபதலைப்புடன் பார்த்து மகிழ்பவர்கள். பிள்ளையார் இவர்களுக்கு இந்த படங்களால் மிகப் பழக்கப்பட்டவர்.கணேஷ் என்றால் "அட அந்த யானை முகத்துக்காரர்" தானே என அடையாளப்படுத்துவார்கள்.
பிரஞ்சியர்கள் கத்தோலிக்கரகளாக இருந்த போதும் ஒரு படி மேல், வேட்டி கட்டி, சேலை உடுத்து அர்ச்சனைத் தட்டுடன், தங்கள் பிள்ளைகள் பெயரில்
அர்ச்சனை செய்வார்கள்.
இப்போ பிள்ளையாரை நாம் தேரில் ஏற்றாவிடிலும் ஆண்டுதோறும் அவர்கள் ஏற்றி விடுவார்கள் போலுள்ளது. ஆண்டுதோறும் அவர்கள் ஈடுபாடு அதிகரிக்கிறது.

rajan said...

நான் தெளிவாகவே எழுதியிருக்கிறேன் "பல லட்சம் பேர் வரை பங்கு பெறுகிற திருசெந்தூர் சூரசம்காரம் முதல் மதுரையின் அழகர் திருக்கல்யாணம் வரை சமய விழாக்கள் அனைத்தும் எவ்வித மனமாச்சரியமும் இல்லாமல் பதட்டம் எதுவுமின்றி நடந்தேறுகிறது.ஏனென்றால் இத்தனை விழாக்களும் தேரோட்டங்களும் பக்தர்களால் நிகழ்த்தப்படுகின்றன.ஆனால் விநாயகர் ஊர்வலம் மட்டுமே இந்துக்களை அரசியல் ரீதியாக தமது பின்னே திரட்டும் நோக்கோடு ஒரு வன்முறை கும்பலால் நடத்தப்படுகிறது.இந்த அரசியல் புரியாமல் அல்லது புரிந்தும்........". ஆனால் நீங்கள் அதை கண்டுகொள்ளாமலேயே திரும்ப திரும்ப எட்டி உதைக்க வருகிறவன் காலை இறுக பற்றி முத்தமிட்டுக் கொண்டேயிருந்தால் உதைப்பவன் ஏதோ ஒரு கட்டத்தில் மனம்மாறி உதைப்பதை நிறுத்திவிடுவான் என்று உபதேசம் செய்து உள்ளீர்கள். இத்தோடு விட்டால் பரவாயில்லை "ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை......" எச்சரிக்கை வேறு . இன்னொன்று ".....நிச்சயமாக சாதி வேறுபாடின்றி ஊரில் எல்லாப் பகுதிகளுக்கும் போகத் தான் வேண்டும். அப்படிப் போகக் கூடாதென்று இந்து மத்தில் எங்கும் கூறவில்லை......".ஆமாம் எதுவுமே கூறாமல் தான் தீண்டாமை இன்னும் புது வடிவங்கள் எடுத்து இன்றும் கோலோச்சுகிறது. தூங்குகிறவர்களை எழுப்பலாம் தூங்குவது போல நடிப்பவர்களை .....?(வியாசன் இணைய முகவரி தந்த பின்னரே எனது பின்னுட்டம் அனுப்பப்பட்டது. அது எப்படி உங்களுக்கு வராமல் போனது ? தவிரவும் இணைய முகவரி தராமல் வசவு செய்து விட்டு தப்பிக்கும் வழக்கம் எதுவும் எனக்கில்லை.)

para balakumar said...

## இலங்கை முஸ்லீம்களிடம் இன்னும் மதச்சகிப்புத் தன்மையுண்டு என்பது மட்டுமல்ல, இஸ்லாமியரல்லாத
ஏனைய மதகுருமார்களுக்கு மரியாதை செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதையும் இது காட்டுகிறது என்று தான் கூற வேண்டும்.##

இலங்கை முஸ்லிம்கள் என்றில்லை பொதுவாகவே முஸ்லிம்களிடம் ஒரு பழக்கமுண்டு . எங்கு வாய்க்குதோ அங்கு வாலாட்டுவார்கள் . வாய்க்காதென்று தெரிந்து விட்டால் வாலை சுருட்டிக்கொள்வார்கள்.
அதாவது இடம் கொடுத்தால் மடத்தை கட்டி விடுவார்கள் . மற்றப்படி இஸ்லாம் மற்ற மதங்களுடனான சகித்தன்மை பற்றி என்ன சொல்கிறதென்பதைப்பற்றி அலட்டிக்கொள்பவர்களாக அவர்களைத்தெரியவில்லை.

உதாரணத்துக்கு இலங்கையையே எடுத்துக்கொள்வோம் . வந்தேறு குடிகளான முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1915 இல் தமது குடியிருப்புகள் ஊடாக பெரகர ஊர்வலங்கள் செல்லக்கூடாதென பெரும்பான்மை சிங்களவ்ர்களுக்கெதிராக வாலாட்டியிருக்கிறார்கள் . அதற்கு சிங்கல்வர்களிடம் உதைபட்டதும் இன்றுவரை வாலை சுருட்டித்தான் வைத்திருக்கிறார்கள் .

சரி இந்த சகிப்புத்தன்மையை அதே இலங்கையிலிருக்கும் தமிழர்களிடம் காட்டவில்லை ?

யாழ் பொதுநூலகத்தின் முற்றத்தில் கலை மகள் சிலை வைப்பதற்கு யாழ் மாநகரசபை முஸ்லிம் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை இங்கு உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..

க்ருஷ்ணகுமார் said...

அன்பின் ஸ்ரீ வியாசன்,

தர்க்க பூர்வமான உங்களது வாதங்கள் பெருமிதம் அளிக்கிறது.

உத்தர பாரதத்தின் பல பகுதிகளிலும் ஒரு புறம் ஹிந்து முஸல்மான் களினூடே கருத்து வேற்றுமைகள் தழைப்பதினூடேயே ஒற்றுமைக் குரலும் ஓங்கி ஒலிக்கிறது. பிள்ளையார் வழிபாட்டை அடுத்து வரப்போகும் துர்க்கா பூஜையினூடேயும் (நவராத்ரி) முஸ்லீம் சஹோதரர்களின் பங்களிப்பு விதந்தோதப்பட வேண்டிய விஷயம்.

ஹிந்துஸ்தானத்தில் பௌத்தம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது என்று வீணர்கள் புளுகலாம். ஆனால் உத்தர பாரதத்தில் பாரம்பர்யமான வஜ்ரயான பௌத்தம் இன்றும் செழித்துத் தழைக்கிறது. ஹிமாசல ப்ரதேசத்தின் பெரும்பகுதிகள், காஷ்மீரத்தின் லத்தாக் பகுதிகள், சிக்கிம் போன்ற ப்ரதேசங்களில் பௌத்தம் இன்றும் செழித்துத் தழைக்கிறது.

தந்த்ர பூர்வமான சைவம் மற்றும் சாக்த மார்க்கத்தைச் சார்ந்தவர்கள், வைதிக வேதாந்திகள் இன்னமும் வஜ்ரயான-தாந்த்ரிக பௌத்த வாதிகளுடன் உரையாடலில் உள்ளனர். இரு சாராரிடமும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்கிறது. பற்பல சாக்த-சைவ மூர்த்திகளுக்கும் தாந்த்ரிக பௌத்த மூர்த்திகளுக்குமான வழிபாட்டு வேற்றுமைகள் சொற்பம். ஒற்றுமைகள் நிறைய.

பௌத்தர்களில் சில அன்பர்கள் ஈழத்து சைவ சமயிகளுடன் உரையாடல் பேண விழைகின்றனர் என்று வாசிக்கவும் பெருமிதமாக இருக்கிறது. குறிப்பாக மறவன்புலவு ஸ்ரீ சச்சிதானந்தம் ஐயா அவர்களை சந்திக்க பௌத்த பிக்ஷுக்கள் வந்தனர் என்ற செய்தி அறிந்தேன். கதிர்காமத்துறை கந்தக்கடம்பனருளால் ஈழத்தில் அமைதி மலர்ந்து த்வேஷங்கள் மறையக்கடவது.

viyasan said...

@rajan,

இணையமுகவரி என்று நான் குறிப்பிட்டது, உங்களுக்கென வலைப்பதிவு கிடையாது, உங்களின் கருத்துக்கள் என்ன என்று எனக்குத் தெரியாது என்பது தான். அல்லது ராஜன் என்ற பெயரில் நீங்கள் வேறு இணையத்தளங்களில் பங்குபற்றுவதாகவும் தெரியவில்லை.

அந்த இந்துவெறிக் கும்பலிடமிருந்து பிள்ளையார் ஊர்வலங்களை மீட்கும் வழி எதுவென்றால், முஸ்லீம்கள் அவர்களுடன் முறுக்கிக் கொண்டு நிற்காமல், அதை வரவேற்றால், அந்த இந்துவெறியர்களின் நோக்கமே அடிபட்டுப் போய்விடுமென்பது தான்.
பெரும்பான்மைத் தமிழர்கள் இன்றைக்கும் அசைக்க முடியாத இந்துக்கள் தான். அதனால் அவர்களின் மதம் சம்பந்தமான ஊர்வலம், இடையூறு செய்யப்பட்டால், அல்லது அவமதிக்கப்பட்டால் அல்லது தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் போவதற்கு தடை செய்யப்பட்டால், அது ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டுவதற்கு சமமானது தான்.

தீண்டாமையை நீங்கள் மட்டுமல்ல, நானும் தான் எதிர்க்கிறேன். என்ன செய்வது சாதியை வைத்து அதில் இலாபம் காணும் அரசியல் உள்ள வரை தமிழினம் இப்படி பிளவுபட்டுத் தான் கிடக்கும்.

viyasan said...

திரு. யோகன் பாரிஸ், ஸ்ரீமான் க்ருஷ்ணமூர்த்தி, & திருவாளர்கள் . para balakumar, rajan, thumbi அனைவரதும் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.