Monday, September 8, 2014

தமிழ்நாட்டில் திருடிய சிலைகளை அவுஸ்திரேலியா திருப்பிக் கொடுத்தது.





தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து திருடப்பட்ட இரண்டு சோழர் காலச் சிலைகளை இந்தியப் பிரதமர் மோடியிடம் அவுஸ்திரேலிய பிரதமர் இன்று ஒப்படைத்தார்.

கடலூருக்கு அருகிலுள்ள விருத்தாசலம் பழமலைநாதர் கோயிலுக்குச் சொந்தமான சோழர்காலத்து பதினோராம் நூற்றாண்டு ஆடவல்லான் சிலையும், பத்தாம் நூற்றாண்டு   மாதொருபாகன் (Ardhanariswara) சிலையும் மீண்டும் இந்தியாவை வந்தடைந்துள்ளது.  தமிழ்நாடு காவல் துறையின் வேண்டுகோளுக்கிணங்க, இரண்டு சிலைகளையும் திருப்பித் தருமாறு இந்தவருடம் மார்ச் மாதமளவில் கான்பெராவில் உள்ள இந்திய தூதரகம் அவுஸ்திரேலிய அரசைக்  கேட்டுக் கொண்டது.

இந்தியாவின் 1.25 பில்லியன் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகளையும் மீண்டும் ஒப்படைத்தமைக்காக, அவுஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்தார்.

பெப்ரவரி 2008 இல் ஆடவல்லானின் சிலையை அவுஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் USD 5.1 மில்லியன் டாலர்களைக் கொடுத்து சுபாஸ் கபூர் என்ற அரும்பொருட்களை விற்கும் தரகர் ஒருவரிடமிருந்து வாங்கியது.  மாதொருபாகனின் சிலையை 2004ஆம் ஆண்டில் Art Gallery of New South Wales  இனால் 300,000 அவுஸ்திரேலியன் டாலர்களுக்கு விலைக்கு வாங்கப்பட்டது.

நியூயோர்க்கில் the “Art of the Past” என்ற பெயரில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளராகிய கபூர் 2012 ஆண்டில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தமிழ்நாட்டிலுள்ள சோழர் காலத்துச் சிலைகளையும், பழமை வாய்ந்த இந்துக் கடவுள்களின் சிலைகளையும் திருடிக், கடத்தும் திட்டத்தைக் கொண்டிருந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  

1 comment:

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்