Sunday, September 7, 2014

ஈழத்தமிழர்களின் பாரம்பரியங்களை மோடியால் காப்பாற்ற முடியுமா??
தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் சம்பந்தனும் குழுவினரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அண்மையில் சந்தித்த போது, "பிரச்சனையை என்னிடம் விட்டு விடுங்கள்" என்று அவர் கூறினார் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார் திரு,சம்பந்தன்.
"Sampanthan dealt at length with matters relating to the 13th Amendment to the Constitution. He said that during the past five years, President Rajapaksa had given different promises to the Government of India that he would implement it and “go beyond.” However, those promises had not been kept. The TNA leader also referred to developments in the Eastern Province. He alleged that the ‘hot wells’ — or the natural water springs in Kanniya, (near Trincomalee) — which were under the control of Hindu devotees had now been handed to a nearby Buddhist temple. This was despite objections raised by the Pradeshiya Sabha of the area. The TNA leader urged that the Government of India take necessary steps to arrest the deteriorating situation." (http://www.sundaytimes.lk/)


" கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த 
கோணமாமலை அமர்ந்தாரே" (சம்பந்தர்)
இலங்கையில் நடைபெறும் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் என்பவற்றுடன், பாரம்பரியமாக ஈழத்துச் சைவத்தமிழர்கள் புனித இடமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த  திருகோணமலையில் கன்னியாய் என்ற இடத்தில் காணப்படும் வெந்நீரூற்றுக்களை சிங்கள – பெளத்தர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பதையும் அவற்றை மீண்டும் கன்னியாய் பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முறையிட்டுள்ளார் திரு. சம்பந்தன். தமிழ்நாட்டில் சிலருக்கு  ஈழத்தமிழர்கள் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தையும், அவர்களின் கோயில்களையும் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பிலிருந்து காக்குமாறு கேட்பதைப் புரிந்து கொள்வது கடினமானது.  ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை. அதே போல் இன மதவெறி பிடித்த சிங்களபெளத்தர்களும் தமிழர்களின் பழமையான,கோயில்களை  இலங்கையில் தமிழர்களின் வரலாற்றின் அடையாளங்களாக, தமிழர்களை மறுக்க முடியாத ஈழமண்ணின் பூர்வீக குடிகளாக உறுதிப்படுத்தும் சின்னங்களாக நினைத்து அஞ்சுகிறார்கள். அதனால் தான் பாடல் பெற்ற தலமாகிய திருக்கோணேச்சரத்தை இன்று சிங்களமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

தேவாரப்பாடல் பெற்ற தலமாகிய.திருகோணமலையில் நடைபெற்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தால்,அங்கு தமிழர்களை விட சிங்களவர்கள் பெரும்பான்மையாகி விட்டார்கள்.கோணேசர் கோட்டையினுள்ளேயே பாரிய புத்தர் சிலையைவைத்து தமிழ்த்தன்மையை அகற்றி விட்டார்கள். 

இன்று சைவத் தமிழர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கன்னியாய் வெந்நீரூற்றை, அங்கிருந்த கோயிலை அழித்து விட்டு சிங்களபெளத்த விகாரையின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டனர். வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்களின் பல இந்துக் கோயில்கள் பெளத்த ஆக்கிரமிப்பில் இடிக்கப்பட்டும், உருமாற்றப்பட்டும் வருகின்றன.

பெளத்தம் இந்துக்களுக்கு எதிரானதல்லவெனவும், பெளத்தமும் இந்து மதத்தின் ஒரு அங்கம் என இந்தியாவில் பாரதீய ஜனநாயகக் கட்சிக்காரர்களும்,இந்துத்துவாக்களும்   வாதாடுவதை நாமறிவோம். ஆனால் சிங்களவர்கள் அப்படியெல்லாம் நினைப்பதில்லை. இராமகோபாலன்களும், சுப்பிரமணிய சுவாமிகளும்  பங்களாதேசிலும் பாகிஸ்தானிலும் இந்துக் கோயில்கள் அழிக்கப் படுவதைப்பற்றி மட்டும் தான் பேசுகிறார்கள். சிங்களவர்களின் இந்துமத எதிர்ப்பைக் கவனிப்பதில்லை, ஏனென்றால் அவர்களின் தமிழர் எதிர்ப்பு கண்களை மறைத்து விடுகிறது. இலங்கையில் இந்துமதத்துக்கு  எதிராக போர் தொடுப்பது இஸ்லாமோ அல்லது கிறித்தவமோ அல்ல,  சிங்கள பெளத்தம் தான்.  ஈழத்தமிழர்கள் இந்துத்துவாக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர்களல்ல ஆனால் சிங்கள பெளத்தம், ஈழத்தமிழர்களின் சைவத்தையும்,அவர்களின் கோயில்களையும் தமிழர்களின் அடையாளமாக, தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவே பார்க்கிறார்கள். 

ஈழத்தமிழர்களின் மண் ஆக்கிரமிக்கப்படுவதுடன், பாரம்பரிய கலாச்சார அடையாளங்களும் அழிக்கப்படும் இக்கட்டான நிலையில் தலைவர் சம்பந்தன், இந்தியப் பிரதமர் மோடியிடம் அவற்றைக் காக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவற்றைக் காப்பாற்ற பிரதமர் மோடி அவர்களால்  முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திரு. சம்பந்தன் இந்தியாவுக்குப் போய் மோடியிடம்முறையிட்டது சிங்களவர்களுக்கு எரிச்சலையூட்டியிருக்கிறது என்பதை சிங்களவர்கள் வெளிக்காட்டத் தயங்கவில்லை(Cartoon). ஈழத்தமிழர்களின் தாயகத்தின் வரலாற்று பாரம்பரியத்தையும், அதன் உரிமைகளையும் அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ்மக்களின் பிரதிநிதிகளுக்கு உண்டென்பதையுணர்ந்து இந்த விடயத்தை இந்தியா வரை எடுத்துச் சென்ற திரு, சம்பந்தன் அவர்களைத் தமிழர்கள் பாராட்ட வேண்டும்.


இராவணனும் கன்னியா வெந்நீரூற்றும்

கோணேச்சரத்தில் இராவணன் 
ஈழவேந்தன் இராவணன் தனது தாயின் மீது மிகவும் பாசம் கொண்டிருந்தான். அவனது தாயார் ஒவ்வொருநாளும் திருக்கோணமலையில் கோணேச்சரத்துக்குச் சென்று கோணேசரையும் மாதுமையாளையும் வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும், அவர் சாவின் விளிம்பிலிருந்த போது,  கோயிலுக்குப் போக முடியவில்லை, அதனால் கோணேசர் மலையையே அப்படியே தாயிடம் எடுத்துச் செல்வதற்காக வெட்டிய இடமே இன்றும் திருகோணமலையில் காணப்படும் இராவணன் வெட்டு எனவும், அப்படி வெட்டிப் பெயர்த்து எடுத்துச் செல்ல முன்பு, அவனது தாயார் இறந்து விட்டதால், தாய்க்கு அந்தியேட்டிக் கிரியைகள் செய்வதற்காக தனது வாளால் ஏழு இடங்களில் குத்தியதில், வந்த நீரூற்றுக்கள் தான், கன்னியாயில் உள்ள ஏழு வெந்நீர்க் கிணறுகளுமென ஈழத்துச் சைவத் தமிழர்கள் நம்புகின்றனர். அந்த அடிப்படையில் காலங்காலமாக அங்கேயே இறந்தவர்களின் அந்திமக் கிரியைகளை நடத்தி வந்துள்ளனர். அங்கிருந்த கோயிலை இடித்தழித்து விட்டு, வெந்நீரூற்றுக்களை சிங்கள பெளத்த பிக்குகளின் விகாரையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது இலங்கை அரசும், சிங்கள இராணுவமும். அந்த விடயத்தை இந்தியப் பிரதமர் மோடியிடம் முறையிட்டுள்ளனர் ஈழத்தமிழர் தலைவர்கள்.கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகள் பற்றிய நவாலியூர் சோமசுந்தரப் புலவரது ஒரு பாடல்:
 
"காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று 
கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று 

தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று 

செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல ஒன்று 

நீதி பெறா வேழைதுயர் மனம் போல ஒன்று 

நிறைபழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று 

காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று 

கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னி யாயில்"

பேரினவாதத்தின் இனச் சுத்திகரிப்பு என்பது அந்த இனத்தின் அடையாளங்களை அழிப்பதைப் பிரதான வழிமுறையாகக் கொண்டுள்ளது. வரலாற்று உண்மைகள், தடையங்களை அழித்தும் அவற்றைப் பேரினவாத அடையாளமாக முன்னிறுத்துவதும் இனச்சுத்திகரிப்பின் அடிப்படைகளாக அமைகின்றன. அழிக்கப்படும் வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாத்தல் என்பது பேரினவாதத்திற்கு எதிரான அரசியலின் முக்கிய கூறாக அமைகிறது. ஒடுக்கப்படும் இனத்தின் அடையாளங்களை அழித்து அதனை ஒடுக்கும் இனம் பிரதியீடு செய்யும் நிகழ்ச்சிப் போக்கிற்கு எமது கண்முன்னே காணக்கிடைக்கும் உதாரணம் திட்டமிட்டு அழிக்கப்படும் வரலாற்று ஆதாரமான கன்னியா வென்னீரூற்று பிள்ளையார் கோவிலும் அதன் அருகே நிர்மாணம் பெறும் பௌத்த விகாரையும் இரத்த சாட்சியாய் உறைந்து கிடக்கின்றது.
கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக பேரினவாதிகளின் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் தடுக்கப்பட்ட இப்போது பாழடைந்துவரும் மிக நீண்ட வரலாற்று ஆதாரமான கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து தடுக்கப்பட்டே வருகிறது. மறுபுறமாக வெந்நீர் ஊற்றுக்களை அண்மித்த மலையடி வாரப்பகுதியில் புதிதாக பௌத்தர்களுக்குரிய வணக்கத்தலம் ஒன்று நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்விவகாரத்தில் தடுக்கப்பட்டிருப்பது பிள்ளையார் கோவில் மீளமைப்பு  என்பதைவிட, தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று உரிமை மறுதலிப்பு என்பதே சரியானதாகும். இந்துக்கள் இறந்தோரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகளை செய்வதற்குரிய கோவிலாக பலநூறு வருடங்களாக பயன்படுத்தி வரும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தின் பூர்வீக வரலாற்றை திரிபுபடுத்தி,அதனை வில்கம் விகாரையுடன் அல்லது நாதனார் கோயில் தொடர்பு படுத்தி ஒன்றிணைக்கும் செயல்திட்டத்தின் தொடர்ச்சியாகவே பிள்ளையார் கோவில் நோக்கப்பட வேண்டும். (‘வில்கம் விகாரை’ பிரதேசம் சோழராட்சிக் காலத்து சிவன் கோவில் என்பதும்   காலப்போக்கில் அது வில்கம் விகாரையாக மாற்றப்பட்டதாகவும் ஒரு கதை திருக்கோணமலை மூத்த தமிழர்களால் கூறப்படுகிறது.) தற்போதைய வெந்நீர் ஊற்று வரலாற்று திரிவுபடுத்தலின் படி கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பெரிய குளம் வில்கம் விகாரையுடன் தொடர்பான வரலாற்று பின்னனியை கொண்டுள்ளதாக கூறிக்கொண்டு பிள்ளையார் கோவில் இருந்த இடத்துக்கு அருகில் கன்னியாய் வெந்நீர் ஊற்று பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைப்பதற்காக நிதி சேகரிப்பு நிலையம் ஒன்றை வில்கம் விகாரை பௌத்த பிக்கு ஒருவர் நடாத்தி வந்தார். 
தற்போது வெந்நீர் ஊற்றுப்பகுதியின் பின்பக்கத்தில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக அறியக்கூடியதாக உள்ளது.பௌத்த விகாரை அமைப்பது தவறான செய்கையோ அல்லது விகாரை அமைக்க கூடாதென்பதோ அல்ல இங்கு பிரச்சினை. இன்னமும் பிள்ளையார் கோவிலை புணர்நிர்மானம் செய்ய அனுமதி மறுப்பதேன்? ஏன்பது தான் பிரச்சினை. இதிலிருந்து விளங்கிக்கொள்ளக்கூடிய தொன்றுதான் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை முற்றாக மறுதலிக்கும் விதத்திலும் திரிபுபடுத்திய வரலாற்றை நிலைநிறுத்தும் நோக்கிலும் கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவிலை இல்லாமல் செய்துவிடும் முயற்சி மேலோங்கி நிற்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் பேரினவாதம் முன்னெடுத்து வரும் வரலாற்று திரிபுபடுத்தல்களை சட்டபூர்வமாவதை தடுப்பதற்கான முயற்சிகளை இனியாவது காலதாமதமின்றி மேற்கொள்ள தவறின் கன்னியா வெந்நீர் ஊற்றுக்களும் அந்த பிரதேசமும் வில்கம் விகாரையின் ஒரு பகுதியாக பிரகடனப்படுத்துவது நிட்சயம் நடந்தேறும். 
தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் பேரினவாதத்தின் செயற்திட்டங்கள் ஆர்ப்பாட்டம எதுவுமின்றி அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

உலகத்தமிழர்களே எமது வரலாற்றையும், வரலாற்றுச் சின்னங்களையும்  பாதுகாக்க ஒன்றுபடுவோம்! 

நன்றி: 

New Buddhist shrine built at Trinco Saiva sacred site

Destruction of Hindu Temples in Tamil Eelam and Sri Lanka

http://inioru.com/?p=14730

No comments: