Thursday, September 11, 2014

யாழ்ப்பாணத்தமிழர்களும் புத்தரும் – சிலரின் அரைவேக்காட்டுத்தனத்துக்கு அளவேயில்லை!



.
இலங்கைத் தமிழர்களைப் பற்றியோ அல்லது இலங்கையைப் பற்றியோ எதுவும் தெரியாமல் ஈழத்தமிழர்கள் மீதுள்ள வெறும் காழ்ப்புணர்வின் அடிப்படையில் மட்டும் போட்டிப் பதிவுகள் போடும் அண்ணன் கோடங்கிச் செல்வன் மீண்டும் தனது அதிகப்பிரசங்கித்தனத்தைக் காட்டியிருக்கிறார்

இலங்கையில், யாழ்ப்பாணத்தில் மருந்துக்குக் கூட சிங்களவரோ, அல்லது பெளத்தர்களோ இல்லாத கிராமங்களிலும் ஊர்களிலும்  ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் புத்தர் சிலைகளையும் நிறுவி, புத்த ஊர்வலங்களை நடத்துவதையும், இந்துக்கள் இல்லாத  ஒரு மூலை முடுக்குக் கூட கிடையாத  தமிழ்நாட்டில், இந்துக்கடவுளாகிய பிள்ளையாரின்  சிலை ஊர்வலமாகப் போவது பற்றிய விடயத்தையும் ஒப்பிடும் அவரின் முட்டாள்தனத்தைப் போக்கி, அவருக்கு  நல்ல புத்தியை கொடுக்குமாறு பிள்ளையாரை நான் முதலில்  வேண்டிக் கொள்கிறேன். சில நேரங்களில் அண்ணன் கோடங்கிச் செல்வனை நான் ஏன் 'கோணங்கிச் செல்வன்' என்றும் அழைக்கிறேன் என்பதற்கான காரணம் எல்லோருக்கும் இப்பொழுது புரிந்திருக்குமென நம்புகிறேன்.

உண்மையில் யாழ்ப்பாணத் தமிழர்கள் புத்தர் ஊர்வலங்களை வரவேற்றால் என்ன என்பது சவூதி அரேபியாவில், மெக்காவில் கும்ப மேளாவை நடத்தினால் என்ன, அதை அரபுக்கள் வரவேற்றால் என்ன என்று கேட்பது போன்றது?

முதலில் இலங்கைத் தமிழர்கள் புத்தர் சிலைகளையும், புத்தர் ஊர்வலங்களையும் எதிர்ப்பதற்குக் காரணம். அது யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களால் (பெளத்தர்களால்) நடத்தப்படவில்லை என்பதால் தான். ஏனென்றால் யாழ்ப்பாணத்தின் மொத்த சனத்தொகையில் பெளத்தர்களின் எண்ணிக்கை வெறும் 0.43 % . அந்த ஒரு வீதத்துக்குக் குறைவான பெளத்தர்கள் கூட, யாழ்ப்பாணத்தில் நிரந்தர வசிப்பிடம், காணி, பூமியோ, அல்லது பூர்வீகத் தொடர்புகளோ அற்ற, அரசாங்க உத்தியோகத்தர்கள் தான்.  

அந்த 0.5% வீதத்துக்கும் குறைவான சிங்கள பெளத்த அரசாங்க உத்தியோகத்தர்கள்  யாழ்ப்பாணம் முழுவதும் புத்தர் சிலைகளை வைக்கவில்லை, இந்துக் கோயில்களை ஆக்கிரமிக்கவில்லை. அகழ்வாராய்ச்சிகளில் சுத்து, மாத்துக்களைச் செய்யவில்லை. புத்தர் ஊர்வலங்களையும், விழாக்களையும் நடத்தவில்லை. அவற்றின் பின்னணியில் ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவமும், இலங்கை அரசும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் உள்ளன. அதனால் தான் யாழ்ப்பாணத் தமிழர்கள்  அவற்றை எதிர்க்கின்றனர்.  அதை எப்படி, தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் நடத்தும் பிள்ளையார் ஊர்வலத்துடன் ஒப்பிடலாம் என்பது கோணங்கிச்செல்வனுக்குத் தான் வெளிச்சம். 

தமிழ்நாட்டில் பிள்ளையார் ஊர்வலங்களை நடத்துவோரும், அதில் பங்கு பற்றுவோரும் (அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், அவர்களை யார் தூண்டி விட்டாலும்) தமிழ்நாட்டில் காலங்காலமாக வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்களே  தவிர இராணுவமோ  அல்லது தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து பிள்ளையார் ஊர்வலத்தை நடத்துவதற்கென்றே  வருகிறவர்களுமல்லஅதனால் அவர்களை அவர்களின்  சொந்த ஊரிலேயே பிள்ளையார் ஊர்வலத்தை நடத்தாதே அல்லது குறிப்பிட்ட பகுதிக்குப் போகாதே என்று யாரும் கூற முடியாது.

Sinhala Buddhist Festival in the Tamil Heartland
யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தின் புத்தர் விழா 
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் புத்தர் ஊர்வலங்களை நடத்துகிறவர்களும், அதில் பங்குபற்றுகிறவர்களும் தெற்கிலிருந்து இதற்கென்றே, அதாவது யாழ்ப்பாணத் தமிழர்களைச் சீண்டிப் பார்க்கவென்றே அழைத்து வரப்படும்  சிங்களவர்கள். ஆனால் பிள்ளையார் தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களால் வணங்கப்படும் கடவுள். அந்தக் கடவுளின்  ஊர்வலம் தமிழ்நாட்டில் நடப்பதையும், புத்தரை வணங்குபவர்களே இல்லாத யாழ்ப்பாணத்தின் ஊர்களிலும்கிராமங்களிலும் நடைபெறும் புத்த ஊர்வலங்களை, யாழ்ப்பாணத் தமிழர்கள் எதிர்ப்பதுடனும் ஒப்பிடுவது வெறும் அபத்தம். அப்படி ஒப்பிடுவதை அரைவேக்காட்டுத்தனம்  என்று மட்டுமல்ல, கொஞ்சம் கூட விவரம் தெரியாத விவஸ்தை கெட்டநிலை என்றும் கூறலாம்

யாழ்ப்பாணத்தில் புத்தர் ஊர்வலங்களை எதிர்க்கும் தமிழர்கள் கேட்பதெல்லாம், என்ன காரணத்துக்காகயாருக்காக புத்தரின் ஊர்வலங்கள் இங்கே நடத்தப்படுகின்றன என்பது தான்.  எந்த நாட்டிலும் இராணுவம் தமது முகாம்களில் தான் இருக்கின்றன,  அப்படித்தானிருக்க வேண்டுமே தவிர மத ஊர்வலங்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை. ஆனால் சிங்கள இராணுவம்  யாழ்ப்பாணத்தில் புத்த ஊர்வலங்களை நடத்துகிறது. அதனால் தான் புத்தர் ஊர்வலங்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எவ்வாறு  பிள்ளையாரை வணங்கும்  இந்துக்கள் வாழ்கிறார்களோ அதே போல், யாழ்ப்பாணத்திலும்  புத்தரை வணங்கும் மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்து, அவர்கள் புத்தரின் ஊர்வலங்களை யாழ்ப்பாணத்தில்(சிங்கள இராணுவத் தொடர்புகளின்றி)நடத்தினால் , யாழ்ப்பாணத் தமிழர்கள் வரவேற்பார்கள், நாங்களே சுண்டலும், கற்கண்டும் கொண்டு போய், தண்ணீர்ப்பந்தலும் வைத்து வரவேற்போமே தவிர தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் முறுக்கிக் கொண்டு, முறைத்துக் கொள்வது போல்  முண்ட மாட்டோம்ஏனென்றால் ஈழத் தமிழர்கள் புத்தரை வெறுக்கவில்லை. அதே போல் முஸ்லீம்களும் பிள்ளையாரை வெறுக்கவில்லையா என்பதை கோடங்கிச் செல்வன் தான் அவர்களிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்

யாழ்ப்பாணத்தில் 83% வீதத்துக்கு அதிகமானோர் இந்துக்களாக இருந்தும், கிறித்தவ, முஸ்லீம் விழாக்களுக்கும் ஊர்வலங்களுக்கும் மட்டுமல்ல புதிய சுவிசேடக் கிறித்தவர்களின் மத மாற்றங்களுக்குக் கூட எந்த எதிர்ப்பும் கிடையாது., ஏனென்றால் அந்த ஊர்வலங்கள், கூட்டங்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களால் நடத்தப்படுகின்றன என்பதால் தானே தவிர, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு யேசுவிலும் அல்லாவிலும் சரியான அன்பு ஆனால் புத்தரில் மட்டும் தான் வெறுப்பு என்ற கருத்தல்ல

இக்காலச் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு 
தமிழ்நாட்டில் பிள்ளையார் ஊர்வலங்களுக்கு முஸ்லீம்களினதும் ஒரு சில 'பகுத்தறிவு'களினதும் எதிர்ப்பை யாழ்ப்பாணத்தில் புத்தர் ஊர்வலங்களுக்கான எதிர்ப்புடன் ஒப்பிடுவது வெறும் அபத்தம் என்பதை இனிமேலாவது எல்லோரும் புரிந்து கொள்வார்களென நம்புகிறேன்.

நாய், மரத்தைக் கண்டவுடன் காலைத் தூக்குவது போல, ஈழத்தமிழர்களுடன் விவாதமென வரும்போது பேசப்படும் விடயத்துக்கு தொடர்பிருக்கிறதோ இல்லையோ விடுதலைப்புலிகளையும் பற்றிக் குறிப்பிடாது விட்டால் சில சொம்புதூக்கிகளுக்கும் அவர்களின் வாலாயங்களுக்கும் திருப்தி ஏற்படுவதில்லை. யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கு, முஸ்லீம்கள் தமிழைப் பேசிக்கொண்டே, தாய் பிள்ளையாக தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே சிங்கள இராணுவத்துக்கு உளவு பார்த்தமை போன்ற வேறு பல காரணங்கள் உண்டு, ஆனால் அதற்கும் பிள்ளையாருக்கும், புத்தருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

யாழ்ப்பாணத் தமிழர்கள் புத்தரை வெறுக்கவில்லை


யாழ்ப்பாணத்தில் எப்பொழுதுமே வாழ்ந்த சிங்களவர்களின் (பெளத்தர்களின்) எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருந்தாலும் கூட யாழ்ப்பாண நாக விகாரை தொடர்ந்து இயங்கி வருவதற்கு இலங்கையரசு அளிக்கும்  பாதுகாப்புத் தான்  காரணம் என்பதை விட, யாழ்ப்பாணத் தமிழர்களின் சகிப்புத் தன்மை தான் முதல் காரணமாகும். சிங்கள - தமிழ்  இனக்கலவரம் ஆரம்பிக்கு முன்னர் நல்லூர்க் கோயிலுக்குப் போகும் யாழ்ப்பாண மக்கள் வழியில் புத்த விகாரைக்கும் போய்விட்டு வரும் வழக்கம் இருந்தது, நாக விகாரை பிக்குகளுக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் மிகுந்த மரியாதை இருந்தது எனவும் அக்காலத்தில்  யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பல முதியவர்கள் இன்றும் கூறுகிறார்கள்.

யாழ்ப்பாண அரசு உருவாக முன்பு இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்த தமிழர்களின் அடையாளங்களும் சிவாலயங்களும் மட்டுமன்றி, ராஜ ராஜ சோழனதும் , ராஜேந்திர சோழனதும்  ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட பல சிவாலயங்கள் இன்று, தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்கள் என்ற காரணத்துக்காக சிங்களவர்களால் அழிக்கப்பட்டு, கேட்பாரற்று சிதிலமடைய விடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு, புத்தர் கோயில்களாக உருமாற்றப்பட்டு இருக்கும் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள பழமையான புத்தமத எச்சங்கள்  எல்லாம் இன்றும் அப்படியே அழியாமல் உள்ளன, ஏனென்றால் அவை  யாழ்ப்பாணத் தமிழர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டனஅவையெல்லாம் முன்னொரு காலத்தில் பெளத்தர்களாக இருந்த எமது தமிழ் முன்னோர்களின் அடையாளங்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்பதால் தான்.

ராஜ ராஜ சோழன் கட்டிய வானவன் மாதேவி 
ஈச்சுரமுடையார் கோயிலின் இன்றைய நிலை  
உதரணமாக, இலங்கையில்  பெளத்தத்தின் ஆரம்பகாலம் தொட்டு மிகவும் முக்கியமான, சிங்கள பெளத்தர்களால் மிகவும் புனிதமான விகாரையாக கருதப்படும் நாகதீப புத்த விகாரை இருக்கும் நயினாதீவில் பாரம்பரியமாக 100 % தமிழர்கள் தான் வாழ்கின்றனர். தமிழர்கள் நினைத்திருந்தால் ஆங்கிலேயர் காலத்திலேயே  அந்த விகாரையை அழித்திருக்க முடியாதா? நாங்கள் இன்று இந்துக்களாக இருந்தாலும் கூட,அன்று தொடக்கம் இன்று வரை நாகதீப புத்த விகாரையை  ஈழத்தமிழர்களின் வரலாற்றின் அங்கமாகத் தான் பார்க்கிறோம். போர்க்காலத்தில் அங்கிருந்த சிங்களப் புத்த பிக்குகளுக்கு ஆதரவளித்தவர்களும்  தமிழர்களே (காணொளியைப் பார்க்கவும்). 

யாழ்ப்பாணத் தமிழர்கள் நினைத்திருந்தால் கந்தரோடை புத்த விகாரையின் எச்சங்களின் தடயமே தெரியாமல், ஒவ்வொரு கல்லாக எடுத்து வீடுகளுக்கு அத்திவாரம் போட்டிருக்க முடியாதா? அப்படியெதுவும் ஈழத்தமிழர்கள் செய்ததில்லை, ஏனென்றால் நாங்கள் தலிபான்கள் அல்ல. ஈழத்தமிழர்கள்  புத்தரை வெறுக்கவில்லை. புத்த கோயில்களையும் வெறுக்கவில்லை.


தமிழ்நாட்டில் இன்று  இந்து தீவிரவாதிகளின் கைகளிலிருக்கும் பிள்ளையார் ஊர்வலங்களை ஒட்டுமொத்தமாக தடை செய்தால் அல்லது முஸ்லீம்கள் தமது பகுதிகளுக்கூடாக செல்ல அனுமதிக்க முடியாதென்று அடம் பிடித்தால், இந்து வெறியர்களின் நோக்கத்துக்கு  அது வலுச் சேர்ப்பது மட்டுமல்ல, சாதாரண இந்துக்கள் கூட, தமிழ்நாட்டில் ஏனைய மதத்தினர் தமது ஊர்வலங்களை நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகளால் ஒவ்வொரு நாளும் மற்றவர்களின் காதுகளைப் பிளக்க வைப்பதற்கும் சுதந்திரமிருக்கும் போது, தமிழ்நாட்டில் பெரும்பான்மைத் தமிழர்களால் வணங்கப்படும் பிள்ளையாருக்கு வருடத்தில் ஒருமுறை ஊர்வலம் போக அனுமதிக்க முடியாதா, என்ற வாதத்தில் நியாயமிருப்பதை உணர்ந்தால், அது இந்து வெறியர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்தும். மாறாக, இலங்கையில் முஸ்லீம்கள் எவ்வாறு  சிங்கள பெளத்தர்களின் ஊர்வலங்களைச்  சுமுகமான முறையில் அணுகி, வரவேற்பது போல, தமிழ்நாட்டு முஸ்லீம்களும் நடந்து கொண்டால், இந்த பிள்ளையார் ஊர்வலங்களையே தமக்குச் சாதகமாக, அவர்களின் மத நல்லிணக்கத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் எடுத்துக் காட்டாக  மாற்றிக் கொள்ளலாம் என்பது தான் எனது முந்தைய பதிவின் சாரம்.

கந்தரோடை, யாழ்ப்பாணம் 
ஆனால் அந்தப் பதிவை விளங்கிக் கொள்ள முடியாமல், அல்லது வேண்டுமென்றே சம்பந்தமில்லாமல் யாழ்ப்பாணத்தில் புத்தர் ஊர்வலங்களுக்கு ஏன் யாழ்ப்பாணத்தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கான  உண்மையான காரணமும் தெரியாமல், அதையும் இதையும் ஒப்பிட்டு ஒருவர் குழப்பி விட, அதனால் உசுப்பேற்றி விடப்பட்ட வேறு சிலர் என்மீதும்,  ஈழத்தமிழர்கள் மீதும் கரித்துக் கொட்டுவதைப் பார்க்க உண்மையில் எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது





8 comments:

viyasan said...

//யாழ்ப்பாணத்தில் 99% தமிழர்களாம் அதனால் புத்தர் சிலை வைக்கக் கூடாதாம். அபப்டி என்றால் திருகோணமலையில் 35% மட்டுமே தமிழர்கள். அம்பாறையில் 20% மட்டுமே தமிழர்கள். இங்கெல்லாம் புத்தர் சிலைகளை வைக்கலாம் என சொல்லாமல் சொல்கின்றார். ///


கோடங்கிச்செல்வனுக்கு இன்னும் புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி, சப்பைக்கட்டு கட்டுகிறாரா என்பதை படிப்பவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

யாழ்ப்பாணத்தில் 99% தமிழர்கள் இருப்பதால் புத்தர் சிலை கட்டக் கூடாதென்று நான் கூறவில்லை, யாழ்ப்பாணத்தில் வாழும் பெளத்தர்கள் (யாராவதிருந்தால்) கட்டினால் பரவாயில்லை, ஆனால் இந்தப் புத்தர் சிலைகளைக் கட்டுகிறவர்களும், புத்தர் ஊர்வலங்களை நடத்துகிறவர்களும் சிங்கள இராணுவத்தினர். இராணுவம் தனது முகாம்களில் தங்கியிருக்க வேண்டுமே தவிர புத்தர் சிலைகளும், ஊர்வலங்களும் நடத்தக் கூடாது, அதைத் தான் யாழ்ப்பாணத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள்.

திருகோணமலையிலும் அம்பாறையிலும் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள் இன்று சிறுபான்மையினராக்கப்பட்டது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தான் என்பதை வேண்டுமென்றே குறிப்பிட மறந்து விட்டார். அந்த நிலை தமிழர்களுக்கு வடக்கிலும் ஏற்பட்டு விடக் கூடாதென்பதால் தான் யாழ்ப்பாணத்தமிழர்கள் புத்தர் சிலைகளை எதிக்கிறார்கள்.

திருகோணமலையிலும், அம்பாறையிலும் கூட முதலில் புத்தர் சிலை வந்தது அதற்குப் பின்னால் தான் சிங்களவர்கள் வந்தார்கள். அங்கெல்லாம் புத்தர் சிலை வந்த பின்னர் எவ்வாறு தமிழர்கள் திட்டமிட்டு தமது சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராக்கப் பட்டார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சிங்களவர்களின் ‘சொம்புதூக்கிகள்’ ஒரு நாளும் பதிவு போட மாட்டார்கள். அதுவல்ல அவர்களின் வேலைத் திட்டம். ஈழத்தமிழர்களை எதிர்ப்பதும், ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள ஆதரவைச் சிதைப்பதும் மட்டும் தான் அவர்களின் வேலைத் திட்டம் என்பதை அவர்களின் பதிவுகளிலிருந்தே அறிய முடியாதளவுக்கு முட்டாள்கள் அல்ல இணையத்திலுள்ள தமிழர்கள்.

para balakumar said...

கோணங்கியின் இலங்கைநிலைமை பற்றிய சரியான விளக்கமினமையாலோ அல்லது ஈழத்தமிழர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்வினாலோ எழுதப்பட்ட லூசுத்தனமான பதிவுக்கும் அதன் ஜால்ராக்களின் கருத்துக்களுக்கும் சில மணி நேரங்களிலேயே சரியான பதிலடி கொடுத்து கட்டுரை வெளியிட்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கது .

சிங்கள வர்கள் சைவக்கோவில்களுக்கு செல்வதும் , தமிழர்கள் புத்த விகாரை , தேவாலயங்கள்க்கு சென்று வழிபடுவதும் சாதாரணமாக நடைபெறுவதுதான்.

ஆனால் சிங்கள அரசினாலும் , ராணுவத்தாலும் அடாவடியாக சிங்கள் சர்கள் வசிக்காத பகுதிகளில் கூட புத்தர் சிலையை வைப்பதும் அரச மரத்தை நாட்டுவதையுமே தமிழர்கள் எதிக்கிறார்கள் .

அது கூட சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் ஒரு அடையாளமாக காட்டப்படுவதானாலும் ., இதே முறையில் கிழக்கு மாகணத்தில் திட்ட மிட்ட குடியேற்ற்த்தை ஏற்படுத்தியானாலும்தான் வடக்கு தமிழர்கள் அடாவடியான அத்து மீறிய வைக்கப்படும் புத்தர் சிலைகளையும் , விகாரைகளையும் அகற்றக்கோருகிறார்கள் ..

sivaje36 said...

அருமையான கட்டுரை வியாசரே.. கோடங்கிக்கு கோண புத்தி. அதான் கோணல எழுதிருக்கான்

viyasan said...

@para balakumar

பார்த்தீர்களா, திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழர்கள் சிறுபான்மையினராகி விட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் பீற்றிக் கொண்டவர். முன்பு திருகோணமலையிலும், அம்பாறையிலும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்தனர், ஆனால் புதிதாக எழுப்பப்பட்ட புத்தர் கோயில்களாலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும் தான் தமிழர்கள் இன்று மூன்றாவது சிறுபான்மையினராகி, காணாமல் போகும் நிலையில் இருக்கிறார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. யாழ்ப்பாணத்திலும் தமிழர்களுக்கு அந்த நிலை ஏற்பட வேண்டுமென்பது தான், யாழ்ப்பாணத் தமிழர்களை எதிர்க்கும் செம்புதூக்கிகளின் வேலைத்திட்டம். அவர்களிடம் தான் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

viyasan said...

@sivaje36,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த திறனாய்வுப் பகிர்வு
தொடருங்கள்

bakthiperavai tuty said...

அற்புதமான கட்டுரை

ஆழமான சிநதனைகள்

உண்மையான வார்த்தைகள்

இதை உரக்கச் சொல்லுங்கள்

bakthiperavai tuty said...

அற்புதமான கட்டுரை

ஆழமான சிநதனைகள்

உண்மையான வார்த்தைகள்

இதை உரக்கச் சொல்லுங்கள்