Monday, August 25, 2014

தேரில் திருவீதியுலா வந்த நல்லூர் முருகன் (காணொளி)இந்தமுறை சிறிலங்கா விமானப்படையின் பயமுறுத்தல் இன்றி வீதியுலா வந்தார் நல்லூர் கந்தன். 

2009ம் வருடம் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், சிறீலங்கா விமானப்படையினர் நல்லூர் கந்தன் ஆலய  தேர்த்திருவிழாவில் உலங்குவானூர்திகள் மூலம் கோபுர கலசத்துக்கும், தேருக்கும் மலர்தூவி வந்தனர்.
 
தேரில் எழுந்தருளி கந்தன் உலாவரும் காட்சியில் பக்தர்கள் இலயித்து, இறை சிந்தனையில் இரண்டறக்கலக்கும் வேளையில், பலாலி விமான படைத்தளத்திலிருந்து எழுந்து, தலைக்கு மேலே வந்து தாழப்பறந்து, வானை அதிர வைத்துப்போகும் சிறீலங்கா விமானப்படையினரின் உலங்குவானூர்திகளின் இரைச்சல் மற்றும் உருப்படியினைக்கண்டு, பக்தி போய் பக்தர்களுக்கு பயம் பற்றிக்கொள்ளும். 
உலங்குவானூர்திகளை கண்டதும் சிறுவர்கள் இளையோர்கள் பெரியோர்கள் வேறுபாடின்றி அனைவருக்கும் போர்க்கால நினைவுகள் நிழலாடத்தொடங்கி விடுவதும்,பிள்ளைகள் தம் பெற்றோரிடம், “அம்மா! இது தானே எங்கட அண்ணாவை குண்டு போட்டுக்கொன்றது. அப்பா! இதுதானே எங்கட அக்காவை குண்டு வீசிக்கொன்றது.என்று கேட்டுக்கலங்குவதும்,சித்தி!   இதின்ட குண்டு வீச்சில தானே எங்கட அப்பாவும் தங்கச்சியும் வயிறு கிழிஞ்சி செத்தவையினம். மாமா! இது போட்ட குண்டுல தானே எங்கட அம்மாவும், தம்பியவையும், அம்மம்மாவும் கை கால் வேறவையாவும், உடம்பு வேறவையாயும் சிதறிக் கிடந்தவையினம்என்று சொல்லி அழுது துடிப்பதுவும், சீரணிக்க முடியாத தாங்கொணா துன்பியல் நிகழ்ச்சியாகவே இருந்து வந்தது.

திருப்பணிச் சபையினரின் அதிரடி நடவடிக்கை! கந்தனுக்கும் விடுதலைகலக்கத்துக்கும் விடுதலை 
கடந்த வருடங்களைப்போலல்லாது இம்முறை,  தேர்த்திருவிழாவில் கோபுர கலசத்துக்கும், தேருக்கும் உலங்குவானூர்திகள் மூலம் மலர்தூவ, நல்லூர் கந்தன் தேவஸ்தானசபையால் விமானப்படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
நல்லூர் கந்தன் திருப்பணிச்சபையினரின் இந்த தடை உத்தரவு பிறப்பிப்பு,  இரத்தம் தசை, பிணம் மரணம், ஓலம் என்று கடந்த கால போர்ச்சூழல்  அவலக்காட்சிகள் நினைவில் வந்து, முட்டி மோதி உயிர்வலியைக்கூட்டாமல், பக்தி பரவசத்தில் மனம் ஒப்பி போவதற்கு இம்முறை பக்தர்களுக்கு பெரும் பேறளித்துள்ளதுடன், இரத்தக்கறை தோய்ந்த கைகளால் ஆலயத்தின் புனிதத்தன்மை கெட்டுப்போவதையும் தடுத்து நிறுத்தியுள்ளது. 

யாழ்ப்பாணத்தின் நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றதுஅதிகாலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி வலம் வந்தார்.
தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா
கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா

நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா

வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா


செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்

வல்ல தமிழ் வெல்லுமடா முருகா

புகைப்படங்களுக்கு இங்கே அழுத்தவும்:
http://www.nalluran.com/2014/08/24/nallur-chariot-festival-2014/


நன்றி: தினக்கதிர்

1 comment:

க்ருஷ்ணகுமார் said...

பேரன்பிற்குரிய ஸ்ரீ வியாசன் அவர்களுக்கு

அழகான கண்ணைக்கவரும் சித்திரங்கள்.

இவ்வளவு கடலைப்போன்ற அடியார் குழாத்தைக் காணும்போது கொலு வகுப்பு நினைவுக்கு வருகிறது.

''' வருசிவன் அடியவர் அரகர எனமுறை
வழங்கு கடல்போல் முழங்க ஒருபால் ''

மெய்யாலுமே, இம்மாம் பெரிய அடியார் குழாம் ஹரஹரோஹரா என்று முழங்கினால் அலைகடலோசையும் அமுங்கி விடும்.

ஈழத்து அடியார் குழாத்தினரின் சமய ஒழுக்கம் பேணும் மாண்பை நான் ஒவ்வொரு காணொளியிலும் தவறாது கவனித்து வருகிறேன். இவ்வளவு பெரிய திருவிழாவில் சட்டையோ அல்லது மேல் அங்க வஸ்த்ரமோ தரித்த அன்பர்கள் எதோ அங்கொன்று இங்கொன்றாகவே தெரிகின்றனர்.கிட்டத்தட்ட அனைத்து அடியார்களும் மேற்சட்டையணியாது வேஷ்டி / கச்சம் மட்டும் கட்டியபடிக்கே தென்படுகின்றனர்.

நீங்கள் பகிர்ந்த தமிழ்ப்பாக்களில் எமது ஈழத்துத் தமிழ்ச் சஹோதரர்களது வலி தெரிகிறது. வலிக்கவும் செய்கிறது. எமக்குத் தெரிந்த சக்தி வாய்ந்த வேல்மாறல் மந்த்ரமல்லாது வேறென்ன சொல்லவியலும்? அவனருளாலே அவன் தாள் பணிந்து........

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கொர்துணை யாகும்

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு
மறத்தைநிலை காணும்

..........

ம்.........அப்படியே எங்கள் பழனியாண்டியின் தைப்பூச உத்ஸவத்தில் கலந்து கொண்டது போன்ற ஒரு மனநிறைவு கிட்டுகிறது என்றால் மிகையாகாது.

ஒரே ஒரு வித்யாசம். தைப்பூசத்தின் போது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சந்தன மணத்துடன் மொட்டை போட்ட அடியார் குழாம் கடலெனக்காணப்படும்.நல்லூரில் மொட்டை போடும் வழக்கம் இல்லையா?

இவ்வளவு அருமையான புகைப்படங்களைப் பகிர்ந்த தாங்கள்

"மிகுத்த கனமதுறு நீள் சௌக்ய சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வும் தகைமை சிவ ஞானமுக்தியும் பரகதியும் பெற"

"அழகும் ஆண்மையுமுடைய பெருமாளை" இறைஞ்சுகிறேன்.

வேலும் மயிலும் சேவலும் துணை.