Sunday, August 24, 2014

சிவலிங்கச் செட்டியாருக்கு நல்லைக்குமரன் காட்டிய பேருருவம் (விஸ்வரூபம்) - இன்று நல்லூர்ச் சப்பரம்.இன்று இருநூற்றைம்பது வருடங்களுக்கு மேல் பழமையான இலங்கையில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் உயரமான அசையும் கட்டுமானப் பொருளாகிய யாழ்ப்பாணம் நல்லூர் முருகப்பெருமானின் 23வது நாள் திருவிழாவாகிய சப்பர()ம் நடைபெற்றது.  

தமிழ்க்கடவுள் முருகனை வேல்வடிவில் வழிபடும்(வேத ஆகமவிதிகளுக்குட்படாத) பழந்தமிழர்களின் வழக்கம் இன்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரவலாக நடைபெறுகிறது. இலங்கை எங்குமுள்ள பழமையான முருகனின் கோயில்களில் எல்லாம் கருவறையில் ஆகமவிதிக்குட்பட்டு நிறுவப்பட்ட முருகனின் சிலைக்குப் பதிலாக முருகனின் வேலை முருகனாக வழிபடும் வழக்கமே இன்றும் காணப்படுகிறது. இலங்கைக்கு வந்து இலங்கைத் தமிழ்க்குறத்தியாகிய வள்ளியின் மீது காதல் கொண்டு அவளை மணந்து கொண்ட முருகன் இன்றும் இலங்கையின் காவல் தெய்வமாக சிங்களவர்களாலும் தமிழர்களாலும் கருதப்படுகிறான். ஆனால் இப்பொழுது  சிங்களவர்கள் என்னடாவென்றால் வள்ளியம்மன் ஒரு சிங்களப்பெண் என்கிறார்கள்.

இந்தச் சப்பரதம் உருவான கதை வியக்கத்தக்கது.  நல்லூர் முருகன் கோயிலுக்கு சப்பரதம் உருவாக்க எண்ணியபோது அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிவலிங்கச்செட்டியார் என்பவர் இந்த சின்ன வேற்பெருமானுக்கு பெரிய சப்பரம் தேவையா என வினாவினார். அன்று அவரது கனவில் முருகன் பேருருவம்(விஸ்வரூபம்) எடுத்து தனது முழுத் தோற்றத்தை சிவலிங்கச்செட்டியாருக்குக்  காண்பித்தார். இதன் காரணமாகவே  நல்லூர்க்கந்த சுவாமி கோயிலின் சப்பரம் முருகப் பெருமானின் அருளுடன் மிகப் பிரமாண்டமாக அமைந்தது. இன்று வேற்பெருமானின் முழுத் தோற்றமும் சப்பரத்தின் மேல் பகுதியில் கண்ணாடி மூலம் காண்பிக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களின்  கண்ணகி வழிபாட்டை ஆகமவிதிகளுக்குட்பட ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்களாக மாற்றி, ஈழத்தமிழர்களின் சைவத்தை வைதீகமயமாக்க முனைந்த ஆறுமுகநாவலர் எவ்வளவோ முயன்றும் கூட, நல்லூர் முருகனின் கருவறையில் வேலுக்குப் பதிலாக முருகனின் சிலையை நிறுவ யாழ்ப்பாணத் தமிழர்கள் மறுத்து விட்டனர். இன்று பெரிதும் ஆகம விதிகளுக்குட்பட்டே பூசைகள் நடைபெறும் நல்லூர்க் கோயிலில் ஆகமவிதிகளின் படி அலங்காரம், பூசை எல்லாம் முருகனின் வேலுக்குத் தான் நடைபெறுகிறது, முருகனின் வேலை முருகனாக வழிபடும் பண்டைத் தமிழர்களின் வழக்கம் இன்றும் ஈழத்தமிழர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது, ஆனால் தமிழ்நாட்டிலுள்ள முருகனின் கோயில்கள் எதிலும்  வேல் மட்டும் வழிபடப் படுவதை நான் காணவில்லை.  


நன்றி: nalluran.com

5 comments:

க்ருஷ்ணகுமார் said...

அன்பின் ஸ்ரீ வியாசன் அவர்களுக்கு,

கோபுர வடிவிலான ரதம் இதற்கு முன் கண்டிராத ரதம்.

அதுவும் முந்தைய காணொளியில் கோபுர வடிவிலான இந்த ரதம் அசைந்து அசைந்து வரும் அழகைக் காண்கையில்

"ஜோதி நடமிடும் பெருமாளே" என்ற திருப்புகழ் நினைவுக்கு வந்தது.

\\\ ஆனால் தமிழ்நாட்டிலுள்ள முருகனின் கோயில்கள் எதிலும் வேல் மட்டும் வழிபடப் படுவதை நான் காணவில்லை. \\\\

வள்ளல் அருணகிரிப் பெருமான் பற்பல திருப்புகழ்ப்பனுவல்களில் வேலைப்பற்றிப் பாடியிருப்பினும் வேல் வகுப்பும் வேல் விருத்தமெனும் பத்துப்பாக்களும் தலையாயது.

வேல்மாறல் மஹாமந்த்ரத்தை ஓதாத திருப்புகழ் அடியார்களைக் காணலறிது.

பழனி மலைக்கு பாதயாத்ரையாக நாங்கள் செல்கையில் வழிநெடுக வழிபாடுகள் அனைத்தும் வேலுக்கே.

பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே.

கர்நாடகத்தில் இருக்கும் சுப்ரமண்யா என்ற க்ஷேத்ரத்தில் முருகப்பெருமானை நாக ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.

வேலும் மயிலும் சேவலும் துணை.

viyasan said...

திரு. க்ருஸ்ணகுமார் அவர்களுக்கு,

உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. நல்லைக்குமரனின் திருவருளை உணரக் கூடிய உங்களைப் போன்ற பக்தர்களுக்காக்த் தான் நல்லூர் திருவிழா பற்றிய விவரங்களை இங்கு பதிவு செய்தேன்.

நான் தமிழ்நாட்டிலுள்ள முருகனின் தலங்கள் பலவற்றுக்குச் சென்றுள்ளேன், ஆனால் எங்குமே கருவறையில் வேலை மட்டும் கண்டதாக நினைவில்லை. பழனிக்குப் போயிருக்கிறேன் ஆனால் பாதயாத்திரையாகப் போனதில்லை. இருந்தாலும் ஈழத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பழந்தமிழர்களின் வேல்வழிபாடு இன்றும் நிலைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியே.

//கர்நாடகத்தில் இருக்கும் சுப்ரமண்யா என்ற க்ஷேத்ரத்தில் முருகப்பெருமானை நாக ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.///

அந்த தலமிருக்கும் ஊரின் பெயர் என்ன. பெங்களூருக்கு அண்மையிலிருந்தால் அதையும் குறித்து வைக்கலாம். எனது வட இந்திய நண்பர்கள் முருகனை தாங்கள் வழிபடுவதில்லை என்றார்கள். குறிப்பாக குஜராத்தி நண்பி ஒருவர் முருகன் போர்க்கடவுள், இரண்டு மனைவிகள் என்பதால் பெண்கள் முருகனை வணங்கக் கூடாதென்றார். :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இரண்டு மனைவிகள் என்பதால் பெண்கள் முருகனை வணங்கக் கூடாதென்றார்//
அப்போ கிருஸ்ணருக்கு பல பெண்களே!(கோபியர் கொஞ்சும் ரமணர்) அவரையும் வழிபடுவதில்லையா?
படங்களுக்கு மிக்க நன்றி!

viyasan said...

//அப்போ கிருஸ்ணருக்கு பல பெண்களே!(கோபியர் கொஞ்சும் ரமணர்) அவரையும் வழிபடுவதில்லையா?///

நானும் உங்களைப் போலவே இதே கேள்வியைக் கேட்டேன். அதெல்லாம் கிருஷ்ணரின் மனைவிகள் இல்லையாம். தெற்கில் திருமாலுக்கு (விஷ்ணு) ஆண்டாளையும் சேர்த்து இரண்டு மனைவிகள் என்பது கூட பலருக்குத் தெரியாது. நான் ஒருமுறை திருப்பதிக்குப் போய் வந்து திருப்பதி பெருமாளின் சிறியதொரு சிலையைக் கொடுத்த போதும், அவர்களுக்கு யாரென்று அடையாளம் தெரியவில்லை, நான் பாலாஜி என்ற பின்பு தான், கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஆனால் வடநாட்டுப் பெண்கள் இராமனை வணங்குவது, ஒரு அவருக்கு மனைவி என்பதால் போல் தெரிகிறது.

க்ருஷ்ணகுமார் said...

அன்பின் ஸ்ரீ வியாசன்

சுப்ரமண்யா க்ஷேத்ரவிசேஷம் பற்றி.........

http://en.wikipedia.org/wiki/Subramanya,_Karnataka

க்ஷேத்ரத்தின் முழுப்பெயர் குக்கேசுப்ரமண்யா.......

விக்கி உரலில் மேலதிக விபரங்கள் கிட்டும். பெங்களூருவில் இருந்து ரொம்ப தொலைவு. ஆனால் முறையாகத் திட்டமிட்டு சென்று வரலாம். நிறைய க்ஷேத்ரங்கள் மலயாளத்தை ஒட்டிய கர்நாடகத்திலும் கர்நாடகத்தைச் சார்ந்த துளு ப்ரதேசங்களிலும் (தமிழ், மலயாளம், கன்னடம் கலந்த மொழி) உண்டு.

\\\ எனது வட இந்திய நண்பர்கள் முருகனை தாங்கள் வழிபடுவதில்லை என்றார்கள். குறிப்பாக குஜராத்தி நண்பி ஒருவர் முருகன் போர்க்கடவுள், இரண்டு மனைவிகள் என்பதால் பெண்கள் முருகனை வணங்கக் கூடாதென்றார். :-) \\\

அசட்டுத் தனமான புரிதல்கள் :-)

\\ அதெல்லாம் கிருஷ்ணரின் மனைவிகள் இல்லையாம். \\

இது அதற்குமேல் அசட்டுப் புரிதல் :-)

ஸ்ரீமத் பாகவதத்தில் (தசமஸ்கந்த உத்தரார்த்தத்தில்) சொன்ன ப்ரகாரம் பதினாயிரத்தெட்டு பத்னிமார் ஸ்ரீ க்ருஷ்ணருக்கு. யோகேஸ்வரனான கண்ணன் இத்துணை பத்னியருடன் இத்துணை ரூபத்தில் குடித்தனம் செய்யும் அழகை பார்த்து நாரத முனி வர்ணித்த விபரங்கள் மட்டிலும் தனி அத்யாயம்.

\\ தெற்கில் திருமாலுக்கு (விஷ்ணு) ஆண்டாளையும் சேர்த்து இரண்டு மனைவிகள் என்பது கூட பலருக்குத் தெரியாது. \\

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் மூன்றாவது (அன்பின் ஸ்வரூபம்- ((கருணை மற்றும் பொறுமையை உள்ளடக்கிய)) ) . ஸ்ரீ தேவி (கருணையின் ஸ்வரூபம்) மற்றும் பூ தேவி (பொறுமையின் ஸ்வரூபம்) மஹாவிஷ்ணுவின் இரு பத்னியர்.

முருகப்பெருமானை உத்தர பாரதத்தில் தனித்து வழிபடுவதில்லை. தேவியின் பரிவாரமாக வழிபடும் வழக்கம் உண்டு. இப்போது நவராத்ரி உத்ஸவம் நடக்க இருக்கிறது. உத்தர ப்ரதேசம், மத்யப்ரதேசம், சத்தீஸ்கர், பீஹார், உத்தராகண்ட், ஒடிஸ்ஸா, வங்காளம் இத்யாதி ப்ரதேசங்களில் நவராத்ரி உத்ஸவத்தின் கடையிறுதி மூன்று நாட்கள் துர்கா பூஜா என்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

மஹிஷனை சம்ஹாரம் செய்யும் அவசரத்தில் இருக்கும் காளியின் ஒரு புறம் வேழமுகத்தானும் மற்றொரு புறம் கார்த்திகேயனும் ஒவ்வொரு துர்க்காபூஜா பந்தலிலும் வழிபடப்படுகிறார்கள்.

மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியாணா, தில்லி, ஜம்மு காஷ்மீரம் போன்ற பகுதிகளில் முருகப்பெருமானின் வழிபாடு இல்லை.

ஜம்மு காஷ்மீரப்பகுதிகளில் புராதனமான சமயம் காஷ்மீர சைவம். இன்றும் ஸ்ரீ லக்ஷ்மண் ஜூ மஹராஜ் என்ற பெருந்தகை ஸ்ரீ ஸ்ரீ அபிநவ குப்தாசாரியாரின் வழிவந்த காஷ்மீர சைவ சமயத்தை போதித்து வருகிறார்.

பஞ்சாப் தவிர்த்து மற்றைய வடமேற்குப் பகுதிகளில் மிக ஆழமான வைஷ்ணவ சமய வழிபாடு காணக்கிட்டும்.

மற்றவரிடம் குறைகள் காண்பதில் தவறில்லை. ஆனால் காணப்படும் நிறைகளையும் ஒதுக்கக்கூடாதல்லவா.

வேலும் மயிலும் சேவலும் துணை.