Friday, August 22, 2014

சீமானின் கேள்வி - புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முகத்தில் விழுந்த அறை!
ஐரோப்பாவிலும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் அதிலும் குறிப்பாக பிரிட்டனில் வாழும் ஈழத்தமிழர்களிடம் நச்சென்று ஒரு கேள்வியைக் கேட்டு அதன்  மூலம் அவர்களின் முகத்தில் பளிச்சென அறைந்திருக்கிறார் அண்ணன் செந்தமிழன் சீமான்.
“...லைக்கா(Lyca) மானாட மயிலாட அங்கே (லண்டனில்) நடத்திச்சுதில்ல, அப்ப ஆயிரக்கணக்கான என்மக்கள் கைதட்டிக் கோடி கோடியாய்க் காசு கொண்டு போய்க் கொடுத்தாங்கல்ல, போனது இனத் துரோகி எதுக்கு நீங்க அங்க போய்ப் பார்க்கிறீங்க, ஏன் போராடவில்லை, ஏன் தடுக்கவில்லை? ஐயா இளையராஜா கச்சேரியை அங்க நடத்தினார்கள் அல்லவா, அப்பவும் இதே மாதிரி லைக்கா தானே நடத்திச்சு, ஏன் நீங்க தடுக்கவில்லை. இங்கிலாந்தும் இலங்கையும் கிரிக்கெட் ஆடிச்சுது லைக்கா தானே விளம்பரதாரரு, ஏன் நீங்க எதிர்த்துப் போராடவில்லை. கத்தி என்ற ஒரு படம்  தமிழ்நாட்டில் எடுப்பாரு அப்ப போராடலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தீர்களா எல்லோரும்.....??”

தமிழ்நாட்டிலிருந்து யாராவது சினிமா எக்ஸ்ட்ராக்கள் வந்தால் கூட வாணீர் வடித்துக் கொண்டு காசையும் கொடுத்து மணிக்கணக்கில் காத்திருந்து விசிலடிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இது நல்ல செருப்படி தான். ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்ட விதமும், எந்த சந்தர்ப்பத்தில், யார் கேட்டது என்பதும் தான் இங்கு முக்கியமான விடயம்.

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பார்த்து திருவாளர் சீமான்  கேட்ட கேள்வியில் நியாயம் இருந்தாலும் கூட, லைக்காவை, அதாவது ராஜபக்ச ஆதரவாளர்களை/கூட்டாளிகளை லண்டனில், அதிலும் ஈழத்தமிழர்கள் தான் எதிர்க்க வேண்டுமென்றால் இவர் இவ்வளவு நாளும் 'ஈழத்தமிழர்களுக்காக' எதற்காக  தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தினாராக்கும்?

ராஜபக்சவின் ஆதரவு நிறுவனத்தின் அல்லது அவரது வர்த்தகப் பங்காளிகளின் படம் தமிழ்நாட்டில் வெளிவருவதும், தமிழ்நாட்டில் மிகவும் பலம்வாய்ந்த ஊடகமாகிய தமிழ் சினிமாவில் இலங்கை அரசின் ஊடுருவலை எந்த உருவிலும் அனுமதிக்கக் கூடாது என்பதும் தான் கத்தி, புலிப்பார்வை போன்ற படங்களை எதிர்ப்பவர்களின் நோக்கமாக இருக்கும் போது, 'தமிழ்ப்பிள்ளைகள்' (அல்லது அவருக்கு வேண்டியவர்கள்) நடிப்பதாலும், இயக்குவதாலும், நான் அந்தப் படத்தை எதிர்க்க மாட்டேன் என்று கூறும் பம்மாத்தைத் தான் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

 பொதுநலவாயநாடுகளின்(Commonwealth)  தலைவராக இருக்கும் மகிந்த ராஜபக்ச, பிரிட்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியின் விழாக்களில் பங்குபற்ற முடியாமல் போனதற்குக் காரணமே  ஈழத்தமிழர்களின் எதிர்ப்பும், போராட்டங்களும் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் இங்கிலாந்தில் ராஜபக்ச கால்வைக்கவே முடியாதவாறு தான் அங்குள்ள தமிழர்கள் இயங்கி வருகின்றனர். அதை மறந்து தமிழ்நாட்டில் தமிழ்ச் சினிமாவின்  ஊடாக இலங்கை அரசின் ஊடுருவலைத் தடுக்க வேண்டுமெனும் கருத்துக்கு  லண்டனில் போராட்டம் செய்தாயா என்று கேட்பது வெறும் அபத்தம்.  

லைக்கா நிறுவனத்தின் ஊடாக லண்டனில் இலங்கை அரசு ஊடுருவும் நிலையிருந்தால் அதை ஈழத்தமிழர்கள் தமது போராட்டங்கள் மூலம் எதிர்த்திருப்பார்கள். அத்துடன் ஏற்கனவே பல  ஈழத்தமிழர்களின்  *இயக்கங்களால் லைக்காவுக்கெதிரான ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது கூட ஈழ அரசியல் நடத்தும் திரு. சீமானுக்கு தெரியாமல் போனது தான் வியப்புக்குரியதுசெந்தமிழன் சீமான் அவர்களின் இந்தக் கேள்வியின் மூலம் என்ன தெரிகிறதென்றால் அவருக்கு  ஈழவிடுதலைப் போராட்டம் பற்றியோஈழத்தமிழர்கள் பற்றியோ சரியான புரிந்துணர்வு கிடையாது என்பது தான்.

உண்மையில்  இந்தப் பிரச்சனையில் வெற்றி பெற்றவர் யாரென்றால் மகிந்த ராஜபக்சவே தான், தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவாளர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஆளுக்காள் அடிபடச் செய்தது மட்டுமன்றி, அவர்களை ஈழத்தமிழர்களுக்கு இனங்காட்டியும் விட்டார்.  ராஜபக்சவின் அரசியல் தந்திரத்துக்கு  முன்னால் சுயநலவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் நிறைந்த ஒற்றுமையில்லாத தமிழினத்தால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது தான் கசப்பான உண்மை.

2 comments:

புலவர் இராமாநுசம் said...

இங்கு யாருக்கும் ஈழத்தமிழர் பிரிச்சனையில் உளப்பூர்வமான அக்கரை
இல்லை!ஆளுக்கொரு கட்சி தனக்கென
ஒரு கூட்டம் !ஒற்றுமை அற்ற இவர்கள் நடத்துவது நாடகம்!

viyasan said...

புலவர் ஐயா அவர்களுக்கு,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இந்த ஆதங்கத்தை உங்களின் கவிதைகளிலேயே வெளிப்படுத்தியுள்ளீர்கள். தமிழினத்தின் சாபக்கேடே ஒற்றுமையின்மை தான், இந்த விடயத்தில் ஈழத்தமிழர்களும் சளைத்தவர்களல்ல, ஆனால் திரு.சீமான் அவர்களின் கருத்தும் அவரது தொனியும், ஈழத்தமிழர்கள் எதிர்பாராதது.

உங்களின் வருகைக்கும் கருத்தும் நன்றி.