Wednesday, July 16, 2014

முஸ்லீம் எதிர்ப்பைக் காட்டி மோடியை வளைத்துப்போட்டு விட்டார் மகிந்த ராஜபக்ச??
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் சாணக்கியம், தனக்குத் தேவையென்றால் யாருடைய  காலிலும்  விழுவது, எந்த வாக்குறுதியையும் கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொள்வது, வேலை முடிந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவது அல்லது இழுத்தடிப்பது, அரசியலில் அவருக்கு உதவியவர்களையே  கறிவேப்பிலை போல்  தூக்கி எறிந்து விடுவது, அரசியலில் சாமர்த்தியமாக காய் நகர்த்தும் தந்திரம்  என்பவற்றைப் பல அரசியல் அவதானிகள், விமர்சகர்கள் வியந்தும், விமர்சித்தும்  எழுதியுள்ளனர்.

உண்மையிலேயே வரலாற்றுக் காலம் தொட்டு, தமிழர்களுடன் மோதினால், இலங்கையில் சிங்கள அரசோ அல்லது சிங்களவர்களோ நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது  என்பதை உணர்ந்து கொண்ட, சிங்களவர்கள் பாண்டிய அரச குடும்பத்துடன் தமது அரசியல், திருமண தொடர்புகளைப் பலப்படுத்திக் கொண்டு, சோழர்களை எதிர்த்தார்கள். பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருப்பதாக தமிழர்களை நம்ப வைத்து சுதந்திரம் அடைந்ததும் அவர்களைக் கழுத்தறுத்தார்கள். அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர்களையும் தமிழர்களையும் மோதவிட்டே தமது ஆட்சியைக் காப்பற்றி வந்துள்ளனர் சிங்களவர்கள் என்றும் கூறுவர். சிங்களவர்களின்  அரசியல் விளையாட்டில் ஏமாந்த ஏமாளிகள் தமிழர்கள் தான். ஆனால் இந்த லட்சணத்தில் இலங்கைத் தமிழர்கள் என்னடாவென்றால் சிங்களவர்களை மோடர்கள் (மூடர்கள்) என்பார்கள். ஆனால் அது எவ்வளவு தவறானது என்பதைச் சிங்களவர்களின் அரசியல் சாணக்கியத்தை அறிந்தவர்கள் உணர்வார்கள்.

பாஜக ஆட்சியைப் பிடித்தால் காங்கிரஸ் போல் நடந்து கொள்ளாது, ஈழத்தமிழர்களின் மீது அக்கறையுடன் நடந்து கொள்வாரகள், ஈழத்தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்து விடும், அவர்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்குமென எல்லோருமே படம் காட்டினார்கள், தமிழர்களும் அதை உண்மையாகவே நம்பினார்கள். ஆனால் இந்த விடயத்தில் 80 மில்லியன் தமிழர்களையும்  மகிந்த ராஜபக்ச மீண்டும் முட்டாளாக்கி விட்டார் போல் தெரிகிறது. 

தமிழ்நாட்டுத் தமிழர்களை வெறுக்கும் தமிழரல்லாத இந்தியர்கள் அனைவரும் ஈழத்தமிழர்களையும்  வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பு சிங்கள ஆதரவாக மாறுகிறது. எந்தளவுக்கு தமிழ்நாட்டை, தமிழ்நாட்டுத் தமிழர்களை  தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் இந்தியர்கள் வெறுக்கிறார்கள், எவ்வளவு தீவிரமாக  சிங்களவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை Times of India வில் Modi's Lanka policy leaves allies sore என்ற  செய்தியின் பின்னூட்டங்களை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின்   இந்துத்துவாக்கள்  முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் தான் வெறுக்கிறார்களே தவிர பெளத்தர்களை அல்ல. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கும் இந்துமதத்துக்கும் எதிராகப் போர் தொடுப்பது இஸ்லாமோ, கிறித்தவமோ அல்ல பெளத்தம் தான். ஆனால் பாஜக, சிவசேனா போன்றவை புத்தமதத்தை இந்துமதத்தின் அங்கமாக கருதுவதால் அவர்களுக்கு சிங்கள பெளத்தர்களின் மீது அளவுகடந்த பாசமுண்டு. அதனால் மோடியின் அரசு இலங்கைக்குச் சார்பாக நடந்து கொள்ளும் என்பது ஈழத்தமிழர்கள் பலரும் அறிந்த விடயம் தான். ஆனால் மகிந்த ராஜபக்ச எப்படி சீனாவைக் காட்டி  முன்னைய காங்கிரஸ் அரசைக் தனது கைக்குள் போட்டுக் கொண்டாரோ, அவ்வாறே  அவரும் சிங்களவர்களும், முஸ்லீம்களுக்கு எதிர்ப்பு என்று காட்டி, மோடியையும் தனது வலைக்குள் சிக்க  வைத்து விட்டார் எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் இலங்கையின் முன்னணி அரசியல் விமர்சகர் உபுல் ஜோசப் பெர்னாண்டோ (Upul Joseph Fernando).இலங்கை அதிபர் ராஜபக்சவை பிரதமர் மோடியின்  பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடத்திய பேச்சு வார்த்தையில், மோடி அவருடன் முதலில் பேசிய விடயம் இலங்கையில் வாழும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது தான். எப்படி சீனா என்ற துருப்புச் சீட்டைப் பாவித்து காங்கிரஸ் அரசை வெற்றி கொண்டாரோ அதே போல் முஸ்லீம்கள் என்ற துருப்புச் சீட்டை மோடியுடனும் விளையாடலாம் என  அப்பொழுதே மகிந்த ராஜ பக்ச நினைத்திருக்கலாம். 
ராஜபக்ச தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பியவுடன்  , இலங்கையிலுள்ள  ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக  அகதி அந்தஸ்து கோரி இலங்கையில் வாழும் **பாகிஸ்தானியர்களை நாடுகடத்த நடவடிககைகளை மேற் கொண்டார். அதற்கும்  ஒருபடி மேலே சென்று, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ள நெருங்கிய நட்புறவையும் மறந்து, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாகிஸ்தானிய ராஜதந்திரி ஒருவரை திருப்பியழைத்துக் கொள்ளுமாறும் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டார்.  அந்த பாகிஸ்தானிய ராஜதந்திரியைப்  பற்றி இந்திய அரசியல் வெளியுறவுத் துறை கட்டமைப்பில் பலத்த சந்தேகம் நிலவி வருகிறது. ராஜபக்ச இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதற்குக் காரணம் மோடியைத் திருப்திப் படுத்துவதற்காகத் தான், ஏனென்றால் மோடியின் திருப்தியும், ஆதரவும்  இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு முக்கியமானதொன்று என்பதை அவர் உணர்கிறார். 
முடிவில், சீனாவை பாவித்து எப்படி காங்கிரஸ் அரசை தனது வலைக்குள் சிக்க வைத்தாரோ அதே போல் முஸ்லீம்களின் விடயத்தைப் பாவித்து மோடியையும் ஏமாற்றி தனது வலைக்குள் வீழ்த்துவதில் வெற்றி பெற்று விட்டார் மகிந்த ராஜபக்ச. மோடி இனிமேல் கொஞ்சக்காலத்துக்கு ஈழத் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிரும் இலங்கையின் 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தைப் பற்றி மறந்து விடுவார் என ராஜபக்ச நம்புகிறார் எனலாம்..  அல்லது சிங்களவர்கள் இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதலையும், கலவரத்தையும் பார்த்து மோடிக்குப் பின்னாலுள்ள சிவசேனாவினர் உள்ளூரப் பூரிப்படைவார்கள் என்றும் நினைத்துக் கொள்ளலாம். சிவசேனாவைத் திருப்திப்படுத்தும் அல்லது மகிழ்ச்சியடையச் செய்யும் எந்த விடயமும் மோடியின் அரசையும் திருப்தியடைச் செய்யும் என்பது மகிந்த ராஜபக்சவுக்குத் தெரியும்.


(**இலங்கை பாகிஸ்தானியருக்கு இணைய வழியாகவும் (On Arrival) விசா அளிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியதால் ஆயிரக்கணக்காக பாகிஸ்தானியர்கள் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் அகதிகள் ஆணையத்தின் மூலம் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அங்கிருந்து ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் சட்டவிரோதமாகச் சென்றடைய முயல்வதுடன் அவர்களில் பெரும்பான்மையினர், இலங்கை மக்களின் தயவில் அவர்களின் நன்கொடைகளில் கொழும்பிலும், கொழும்பைச் சுற்றியுமுள்ள நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு  இடையூறாக அமையலாம் என்பது சு. சுவாமி போன்றவர்களின் கருத்தாகும்.)

(Pic.Courtesy DBSJ.)

2 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். க்தை,கட்டுரையெல்லாம் எழுதுவீங்க போல. அவனவன் ட்ரில்லியன் டாலர்களை இலங்கையில் போய் கொட்டிவிட்டு காத்திருக்கும் போது அந்த சந்தையை இந்திய கணவான்கள் விட்டுக் கொடுப்பார்களா? இல்லை அந்த வடஇந்திய லாபியை மீறி, விசுவாச அதிகார கூட்டத்தையும் தாண்டி மோடி என்ன? அவங்க டாடி வந்தாலும் இதே கதி தான்.

எப்படியாவது ஈழத்தில் உள்ள தமிழர்களை நம்ம விக்கி அய்யா தலைமையில் அணி திரளச் சொல்லுங்களேன். ஒரே அணி. அது தான் ராஜபக்ஷேவிற்கு உருவாக்கக்கூடிய பிணியாக இருக்க வேண்டும்.

Yarlpavanan Kasirajalingam said...

சுவையான பதிவு