Saturday, July 12, 2014

சக்திபீடங்களில் ஒன்றாகிய நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா!


ஆதிசங்கரரால் 64 சக்தி பீடங்களில் ஒன்றாக அருளப்பட்ட யாழ். நாகதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.
சிவ-சக்தி தாண்டவத்தின் போது அம்பிகையின் சிலம்பு நயினாதீவில் விழுந்ததாக நம்பப்படுகிறது


இலங்கையின் பூர்வீக குடிகளாகிய நாகர்களால் நாகம்மனாக வழிபட்ட தாய்த்தெய்வம் இன்றும் நாகர்களின் வழிவந்தவர்களாகிய ஈழத்தமிழர்களால் தொடர்ந்து வழிபடப்படுகிறது.

"விழிநீரில் படகாக மிதந்தோம் 
வாழநிழல் தேடிப் பாரெங்கும் அலைந்தோம்
வழிதோறும் வசைகேட்டு நடந்தோம் 
ஆழக்குழி தோண்டி அரவோடும் 
புழுவோடும் கிடந்தோம்
ஒளியோடு நாம் மீண்டும் எழுந்தோம்
என்றும் அழியாத இனமென்று 
உணர்வோடு கலந்தோம்
துளியேதும் நமக்கில்லை அச்சம்
என்று துணிவோடு வாழ்கின்ற
வரம் பெற்று நிமிர்ந்தோம்
எழுகின்ற பலம் தந்த தேவி
உன்னை என்றென்றும் துதிக்கின்றோம்
தொழுகின்றோம் தேவி"மணிமேகலையை இயற்றிய சீத்தலைச் சாத்தனார்  மணிபல்லவம் எனக் குறிப்பிடுவது யாழ்ப்பாணக்குடாநாடு என்பது யாவராலும் ஒப்புக்கொண்டதொன்று. மணிமேகலை இரண்டு முறை யாழ்ப்பாணம் சென்றார், மணிமேகலையில் குறிப்பிடப்படும் நாகதீவு அல்லது மணிபல்லவம் தான் நாகதீவு, மணிபல்லவம், நாகதிவயினதீவு, நாகதீபம் என்றெல்லாம் அழைக்கப்படும் யாழ்ப்பாணத்திலுள்ள நயினாதீவாகும். 

அறுபத்துநான்கு சக்திபீடங்களில் ஒன்றாகிய பழமை வாய்ந்த நயினாதீவு (நாகதீபம்) நாகபூசணி அம்மன் கோயிலும், புத்தர் வருகை தந்ததாக சிங்களவர்களால் நம்பப்படும் பெளத்த விகாரையும், இத்தீவில் தான் உண்டு. அமுதசுரபி கிடைக்கப்பெற்ற கோமுகிப் பொய்கையின் தீவும் இதுதான். மணிபல்லவம் தீவில்  இரண்டு நாக அரசர்களின் (சகோதரர்கள்) இரத்தின சிம்மாசனத்துக்கான சண்டையைத் தீர்த்து வைக்க புத்தர் அங்கு வந்ததாகக் குறிப்பிடுகிறது சிங்களவர்களின் மகாவம்சம்.
இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாகஅரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் மணிபல்லவத்தில்இடம்பெற்றது என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. இங்கே பௌத்த கோவில் ஒன்று இருந்ததாகவும், இந் நூலில் குறிப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடபாகம் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாயிற்று. கி.பி.1012 இல் முழு இலங்கையும் சோழமண்டலத்துக்குச் சேர்ந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த சிங்கை நகர் (வல்லிபுரம்) அரசர்கள் சோழப் பிரதானிகளாயினர். சோழர்கள் எண்ணிறந்த சைவக் கோவில்களைப் புதிதாக அமைத்ததுடன், பழைய சைவாலயங்களையும் புதுப்பித்தனர். நூற்றிருபத்தாறு நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சோழராட்சி இலங்கையில் நிலவிய காலத்தில் நயினாதீவில் இருந்த பழம்பெருமை வாய்ந்த நயினார்கோவிலும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கலாம். அவ்வேளை இங்கு வந்து திருப்பணி வேலைகளைச் செய்த சோழதேசத்துச் சிற்பிகளும் பிராமணக் குடிகளும் மற்றும் கோவில் பணிக்கு அவசியப்பட்ட ஊழியர்களும் தமது குடும்பங்களுடன் இங்கு நிரந்தரமாகவே தங்கிவிட்டிருக்கலாம்.
இவ்வாறு தமிழகத்து மக்கள் வந்து தங்கும் முறை தொடர்ந்ததாலோ என்னவோ இவ்வாறு பிறநாட்டவர் வந்து தாம் இறங்கும் துறைமுகங்களுக்கு அண்மையில் வசிக்க விழைவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், பிற நாட்டார் (பரதேசிகள்) ஊராத்துறையில் வந்து இருக்க வேணுமென்றும்..” “புதுத் துறைகளில் வந்தாலித் துறையிலே சந்திக்க வேணுமென்றும்…” முதலாம் பராக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.1153-1186) நயினாதீவில் நிறுவப்பட்ட தமிழ்க் கல்வெட்டின் மூலம் அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாக நயினாதீவு இருந்தமையால் தமிழகத்தவர் அல்லாத பிறநாட்டவர் சிலரும் தனிப்பட்ட காரணங்களின் பொருட்டு இத்தீவில் நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்திருத்தலும் நிகழ்ந்திருக்கக்கூடும்.சோழ, பாண்டிய அரசர்களும், அவர்களுக்குப் பின்பு சேது நாட்டு (இராமநாதபுரம்) அரசர்களும், பின் யாழ்ப்பாண அரசர்களும் முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் போன்ற தொழில்களை ஊக்குவித்து வந்தனர். வரலாற்றுக்கெட்டாத காலம் தொடக்கம் நயினாதீவுக் கடலில் சங்கு குளித்தல் இடம்பெற்றது. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரிட்டிசுக்காரரும்கூட சங்கு குளித்தலுக்கு ஊக்குவிப்பு அளித்தனர். சங்குகுளித்தல் நயினாதீவுக் கடலில் மும்முரமாக இடம்பெற்றதால் அத்தொழில் செய்யும் மக்கள் ஈழத்தின் பிறபகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் கிழக்குக் கரைப் பட்டினங்களில் இருந்தும் வந்து நயினாதீவில் குடியேறலாயினர். இவர்களில் இஸ்லாம் மதத்தவரான தமிழர்களும் அடங்குவர். இஸ்லாமியரின் வழிபாட்டுக்கென பள்ளிவாசல் ஒன்றும் தீவின் தென்கிழக்குக் கரையில் அமைக்கப்பட்டு இன்றும் வழிபாடு அங்கு நிகழ்கின்றது.
 முதலில் நாகர்களும், பின்பு இங்குள்ள நயினார் கோவிலைச் சீரமைப்பதற்கும், வழிபாடுகளைக் குறைவற நடத்துவதற்கும் ஆயிரம் ஆண்டுகளின் முன்பு நயினாதீவுக்கு வெளியிலிருந்து குறிப்பாக சோழநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பிகள், பிராமணர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தவர், உறவினர், வேலையாட்களும், தொடர்ந்து வந்து சங்கு குளித்தலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களும் ஆகிய இவர்களுள் இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள் என இத்தீவின் குடித்தொகை மெல்ல மெல்ல வளர்ந்து வந்தது.
. போர்த்துக்கேயர் ஆட்சிக்கால விளைவுகள்: 1619 இல் யாழ்ப்பாணத் தமிழரசு போர்த்துக்கீசரிடம் வீழ்ந்தது. கி.பி. 1620 இல் தொடங்கிய போர்த்துக்கீச தனியரசாட்சியில், முதற் தேசாதிபதியான பிலிப் தே ஒலிவேறா நல்லூரை வதிவிடமாக்கியவுடன் முன்கூறியபடி நல்லூர்க் கந்தசாமி கோயிலை இடித்து, அக்கோயிற் கற்களைக் கொண்டு கோட்டையும் வீடுகளும் கட்டினான். யாழ்ப்பாணத்தில் இருந்த சைவ, வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோவிலதிகாரிகளும், அர்ச்சகர்களும் தத்தம் கோவில் விக்கிரகங்களைக் கிணறுகளிலும், குளங்களிலும் போட்டு மறைத்தார்கள்”.
யாழ்ப்பாணத்திலன்றித் தமக்கெட்டிய மற்றும் பிற இடங்களில் எல்லாம் உள்ள புத்த, சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமையம் வாய்த்துழி வாய்த்துழி பறங்கிகள் இடித்து நாசமாக்கிவிட்டனர்,” என்பது முதலியார் செ.இராசநாயகம் அவர்களது கூற்று.
இக்காலத்தில் (கி.பி. 1620-1624 அளவில்) நயினாதீவுக் கோவில் அழிக்கப்பட்டது என முன்னரே அறிந்தோம்நயினாதீவில் இருந்த கோவில் அழிக்கப்பட்ட பின்பு, போர்த்துக்கீசரும், அவர்களின் பின்வந்த டச்சுக்காரரும் அதனை மீள நிறுவுவதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் டச்சுக்கார ஆட்சியின் இறுதிக்காலத்தே (கி.பி.1788 அளவில்) கோவில் இருந்த இடத்தில் சிறிய அளவில் வழிபாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

No comments: