Monday, June 23, 2014

இந்தியாவில் பிறந்த மாணவிக்கு மருத்துவக் கல்வி மறுப்பு???


தமிழ்நாட்டில் பிறந்த, பிளஸ் 2 பரீட்சையில் 1170 மதிப்பெண் பெற்ற இலங்கை அகதி மாணவி மருத்துவம் கற்க மறுப்பு.



இலங்கையில் A/L பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200 க்கு 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக் கடிதம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த 164 குடும்பங்களைச் சேர்ந்த 523 தமிழர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களில், பெயிண்டிங் தொழிலாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று. தனது தாய் ரூபாவதி மற்றும் மூன்று தம்பிகளுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகாமைச் சேர்ந்த அல்லிமலருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.
அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந்தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவ கலந்தாய்வுக்காக விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய் வில் பங்கேற்க அவருக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை.
"திபெத்தியஅகதிகளை மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும் போது இலங்கைத் தமிழ்அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது."

197.50 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று சனிக்கிழமை மருத்துவக் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.
இது குறித்து நந்தினி கூறியதாவது:
மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப எண் (245143), .ஆர்.எண் (1529), ரேண்டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும் எனக்கு கிடைத்தன. ஆனால், எனது கட் ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதமும் வரவில்லை.
கலந்தாய்வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய்வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.
அதிகாரி விளக்கம்: இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்க அதிகாரிகள் (டி.எம்..,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனைவருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர் மட்டும், புரவிஷனல் பட்டியலில் வெளியிடுவோம். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்றனர்.

 மறுக்கப்பட்டது கல்வியா, இல்லை எங்கள் உரிமையா? இந்திய அரசே பதில் சொல்: இயக்குநர் .கவுதமன்

தமிழகத்தில் மருத்துவம் படிக்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதி மாணவிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென திரைப்பட இயக்குநர் .கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழமாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியுரிமை இல்லாததால் கலாந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
1990-ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அல்லிமலர்- ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995-ல் தமிழகத்திலுள்ள முகாமில் பிறந்தவர். தனது பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்று தனியார் மெட்ரிக் பள்ளியில் இலவசமாக மேல்நிலைக் கல்வியை பெற்றுள்ளார். அரசு பொது தேர்வில் 1170 மதிப் பெண்ணும் , மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் 197.33 பெற்றுள்ளார்.
மருத்துவம்தான் தனதுகனவு என்றுகூறி சென்னை இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். கிட்டத்தட்ட 2000-ஆம் ஆண்டுவரை இலங்கை அகதிகளுக்கு என்று இருபது இடங்கள் மருத்துவப் படிப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் 1996-ஆம் ஆண்டு மதிப்புமிகு உணர்ச்சிகவிஞர். காசி ஆனந்தன் அவர்களின் மகள் ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் முழுவதுமாக நீக்கியுள்ளது.
இதனால் நந்தினி போன்ற பல மாணவ- மாணவியினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திபத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும் போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாக வளரும் வாழும் எம் மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். இதற்கு மரியாதைக்குரிய தமிழக முதலைமைச்சர் விரைந்து தீர்வு காண வேண்டும். இலங்கையில் முள்வேலி முகாம்களை போன்று தமிழகத்திலும் முகாம்களில் வாடும் எம் தமிழ் உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளும் கல்வியும் கிடைக்க வேண்டும்.
இதற்கு இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும். எங்கள் தமிழ் சொந்தங்களின் அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வேற்றுமை களைந்து ஒன்றுப்பட்டு போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நந்தினியின் கல்விக்கும், தனிமனித உரிமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தாயுள்ளத்தோடு முதன்மையாக கவனத்தில் கொண்டு நந்தினி போன்ற மாணவர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Ref: www.Tamilwin.com

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03