Monday, June 9, 2014

இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்!

1941 ஆம் வருடம் ஒற்றைக் காற்றாடி பொருத்தப்பட்ட சிறிய விமானத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார் அந்தப் புகழ்மிக்க எழுத்தாளர். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல பத்திரிகையாளரும் இந்திய சுதந்திரப் போராட்டவீரரும் கூட. வரலாற்றை நன்கறிந்தவர் என்ற வகையிலும் இலங்கையின் கள யதார்த்தத்தை புரிந்துகொண்டவர் என்ற முறையிலும் அவர் பின்வரும் கருத்தை தெரிவிக்கிறார். இந்தியாவில் (அன்றைய பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியா) முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு வழங்கப்படுமோ அதே தீர்வுக்கு இலங்கைத் தமிழர்களும் உரியவர்கள் என்றார். அவர் வேறுயாருமல்ல இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜியின் வலது கரம் என்று புகழப்பட்டவரும் இன்றுவரை தமிழர்களால் நேசிக்கப்படும் எழுத்தாளருமான பெருமதிப்புக்குரிய கல்கி.

இந்தியாவை சுற்றியுள்ள பல்வேறு சமூகங்களுள் தீவிர இந்திய ஆதரவாளர்கள் என்று கூறப்படத்தக்கவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமே. அவர்கள் இந்தியாவின் இயற்கையான நண்பர்கள். உலகின் சக்திவாய்ந்த நாடுகள் தமது நலன்களைப் பேணுவதற்கான ஆதரவுச் சமூகங்களை உலகெங்கும் உருவாக்குவதற்கு மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெரும் முயற்சிகள் எடுத்திருக்கின்றன. எடுத்து வருகின்றன. ஆனால் இந்திரா காந்திக்கு பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சியாளர்களும், அவர்களை வழிநடத்திய அதிகாரிகளும், ஆலோசகர்களும் இதற்கெதிரான முறையில் நடந்து, இயல்பான கூட்டாளிகளான இலங்கைத் தமிழர்களின் நலன்களை அழிவுக்குள்ளாக்கி, அவர்களை இந்திய தேசத்தின் மீது நம்பிக்கை இழக்கச்செய்து, இந்தியாவின் நலன்களையும் மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்கள். 
தேநீர்க் கடைக்காரரின் மகனாகப் பிறந்து இன்று இந்தியப் பிரதமராக மக்களின் பேராதரவுடன் பொறுப்பேற்றுள்ள  நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியல்வாதிகள் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் தாண்டி  ஒளிக்கீற்றாகவே பார்க்கப்படுகிறார். 
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டம் என்பது தமிழ்மொழி மட்டும் சார்ந்ததல்ல. மொழி,மதம்,அது சார்ந்த பண்பாடு என்பவற்றை உள்ளடக்கிய இனத்தனித்துவத்தைக் காப்பதற்கானது. காலனிய ஆட்சிக்காலத்தில் தமது அனைத்து ஆலயங்களும் இடிக்கப்பட்டு பல்வேறு முனைகளில் மதமாற்றிகள் தீவிரமாகச் செயற்பட்டநிலையில் ஈழத்தமிழர்கள் மிகத்தீவிரமான எதிர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு  (கிறிஸ்தவ) மத மாற்றிகளுக்கு உங்களது அதிகபட்ச வெற்றி இவ்வளவுதான் என்று காட்டியவர்கள். அதற்குப் பின் வந்த காலங்களில்சைவ கிறீஸ்தவ நல்லிணக்கத்தையும் கட்டி எழுப்பியவர்கள். இன்று பாஜக இந்திய சிறுபான்மையினரிடம் எதிர்பார்க்கும் தமது மூதாதையரை அங்கீகரித்தல், அவர்களின் வழி வந்த பண்பாட்டை மதித்தல் போன்ற அம்சங்களை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியவர்களாக ஈழத்தமிழ்ச் சமூகம் விளங்குகின்றது. இவ்வாறு பார்க்கையில் ஈழத்தமிழர்களின் வீழ்ச்சி என்பது பாஜகவின் கோட்பாடுகளின் வீழ்ச்சியுமாகின்றது. 

இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதில் மோடிக்கு முன்னால் மூன்று தெரிவுகள்இருக்கின்றன. 

1. ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தமிழ் மாநிலம் 
2. தமிழீழத் தனிநாடு 
3. இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை இணைத்துக் கொள்ளல் அல்லது முழு இலங்கையையும் தமிழ், சிங்களம் என்ற இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளல் 

இறுதித் தீர்வாக இவற்றில் ஒன்றை நோக்கிச் செல்வதற்கு முன், தேவைப்படக்கூடிய காலத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், எவ்வாறான தீர்வை நோக்கிச் செல்வது அதிக பொருத்தமுடையதாக இருக்கும் என்று கண்டறிவதற்குமான ஒரு சோதனையாகஇலங்கையில் வடக்கு கிழக்கில் இயல்பு நிலை திருப்புவதை மோடி அரசு உறுதிப் படுத்த வேண்டும். 

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மூன்று முக்கிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். 
1. இராணுவமயமாக்கப்பட்ட சூழல் 
2. திட்டமிட்ட நிலப்பறிப்பும் குடியேற்றங்களும் 
3. மதமாற்றம் 
கட்டற்ற நிலையில் இந்த மூன்றும் தொடருமாயின், அவை ஈழத்தமிழர்களை தனித்துவமான ஒரு தேசிய இனம் என்ற நிலையிலிருந்து வீழ்த்தி விடும். அதோடுசிறுபான்மை சமூகம் என்ற அளவுக்குள் குறுக்கிவிடுவது மட்டுமல்லாமல், காலப்போக்கில் முற்றுமுழுதாக அவர்களின் இன அடையாளத்தை அழித்து சிங்களவர்களாகவோ, முஸ்லிம்களாகவோ மாற்றிவிடும். இந்தியாவிற்கு இலங்கை மீதான பிடி தமிழர்கள் மூலமாகவே கிடைக்கின்றது. இலங்கையில் தமிழர்களின் வீழ்ச்சி, இலங்கைமீதான இந்தியாவின் கட்டுப்பாட்டை இல்லாதொழித்து, இந்தியாவின் பிராந்திய வல்லரசு என்ற  நிலையை சவாலுக்கு உள்ளாக்கி விடும். 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ராஜீவ் காந்தி உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்ட 13 ஆவது சட்டத்திருத்தத்தின் கீழான மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக அவற்றுக்கு வழங்கவேண்டும் என்ற இந்திய அரசின் நிலைப்பாடு, வடக்குக் கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு உதவக்கூடிய நடவடிக்கையாகும். ஆயினும் 13 ஆவது சட்டத்திருத்தம் ஒரு நிலைமாறு கட்டமாகவே இருக்கமுடியுமே தவிர இறுதித்தீர்வாக இருக்கமுடியாது. 

13 ஆவது சட்டத்திருத்தம் அடிப்படையிலேயே கொண்டிருக்கும் இரண்டு முக்கிய குறைபாடுகள் அதனை இறுதித்தீர்வுக்கு தகுதியிழக்கச் செய்கின்றன. 

1. வடக்கு,கிழக்கு மாகாணங்களின் நிரந்தர இணைப்புக்கு கிழக்கில் ஒரு பொதுவாக்கெடுப்பு    நடத்தப்பட வேண்டும் என்றநிலை. 
2. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை சமஷ்டி அரசியல் அமைப்பாக மாற்றாமல் அதன் கட்டமைப்புக்கு உள்ளேயே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முற்பட்டமை. 
இந்த இரண்டு முக்கிய குறைபாடுகளே ஈழத்தமிழர்களின் மனதை 13 ஆவது திருத்தச்சட்டம் வெல்லமுடியாது போனமைக்கான காரணங்களாகும். 

வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற முதலாவது விடயத்தைப் பார்ப்போம். 
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்னர்கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள்60 சதவீதத்தினராகவும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் 40 சதவீதத்தினராகவும் இருந்தனர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பின்படி தமிழர்கள் ஏறத்தாழ 40 சதவீதத்தினராக வீழ்ச்சியடைய, சிங்களவர்களினதும் முஸ்லிம்களினதும் சதவீதம் 60 ஆக மாறிவிட்டது. இலங்கையின் இனப்பிரச்சனைக்கான முக்கிய காரணங்களுள் ஒன்று தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில் அவர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களாகும் 

இந்த நிலையில், வடக்கு கிழக்கு இணைப்புக்கு கிழக்கில் பொது வாக்கெடுப்பு  நடத்தவேண்டும் என்ற நிலையானது தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கையான வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதற்கு ஊறு விளைவிப்பதாகும். ஏனெனில், சிங்களவர்களும் தமிழர் எதிர்ப்பு மனநிலையுடைய முஸ்லிம்களும் வடக்குடன் இணைவதற்கு எதிராகவே வாக்களிப்பர். இதனால் வடக்கு கிழக்கு இணைப்பு தோல்வியடைந்து விடும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வரைந்த இந்தியத்தரப்பு அன்றைய இலங்கை அரசின் தந்திரத்தில் சிக்கி தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைக்கு ஊறு விளைவித்ததுமட்டுமன்றி இந்தியாவின் நலன்களுக்குமே தன்னையும் அறியாமல் தீங்கிழைத்துள்ளது. 

கிழக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டிய அளவிற்குக்கூடச் செல்லாமல் மிக இலகுவான நீதிமன்றத்தீர்ப்பொன்றினால் இன்றைய இலங்கை அரசு வடக்கில் இருந்து கிழக்கைப் பிரித்து விட்டது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்ப்பார்த்திராத நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணமானது முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது. நீண்ட கடற்கரையையும், திருகோணமலை போன்ற இயற்கைத் துறைமுகத்தையும் உடைய அம்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களின் ஆதிக்கம், இந்தியாவுக்கு  எதிரான பாகிஸ்தான் போன்ற சக்திகளுக்கு குதூகலத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கிய இந்திய தரப்பில் இருந்தவர்களின் தூரநோக்கின்மை இந்தியாவின் எதிரிகளுக்கு அதன் தெற்கில் இயற்கையான கூட்டாளிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதுஉடன், எவ்வித கடின முயற்சியும் இன்றியே பின்னணித்தளம் ஒன்றையும் வழங்கியுள்ளது. 

தமிழர்கள் இம்மாகாணத்தில் அதிகாரத்தை இழந்திருப்பதும், யுத்தத்தினால் பேரிழப்புகளை எதிர்கொண்டிருப்பதும், மற்றைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது அதிக வறுமையினால் பாதிக்கப்பட்டிருப்பதும்அவர்களை  மதம்மாற்றிகளின் இலகுவான இலக்காக்கியுள்ளது. யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களின் உழைப்பிலேயே பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான பெண்களே தற்போது மதமாற்றிகள் வலைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றனர். பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் இப்பெண்களை மதம் மாற்றுவதனூடாக, அவர்களில் தங்கியுள்ள ஏன் என்று எதிர்ப்புக்குரல் எழுப்பமுடியாத பிள்ளைகளும் வேற்று மதத்திற்கு மாற்றப் படுகிறார்கள். குடும்பம் குடும்பமாக இவ்வாறு மதம் மாற்றப்படுவது தற்போது அன்றாட செய்தியாகிவிட்டது.
தனியான கிழக்கு மாகாணமானது இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் தளமாக மட்டுமல்லாமல் மற்றுமொரு விதத்திலும் இந்தியாவின் கட்டமைப்பை பலவீனப் படுத்துவதற்கு காரணமாகலாம். இலங்கையில் எதிர்பாராத விதமாக உருவாகியுள்ள முஸ்லிம் ஆதிக்க மாகாணமானது, இந்தியாவிலும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறிய மாநிலங்களை ஏற்படுத்துவதற்கான குரல்களை உருவாக்கக்கூடும். ஏற்கனவே ஹைதாராபாத், கேரளாவின் மலப்புரம் போன்ற பகுதிகளில் இவ்வாறான கோரிக்கைகள் இருந்துவருவது கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்த நிலை இந்தியா எங்கிலும் துப்பாக்கிச் சன்னங்களால் பொத்தல் போட்டது போன்று இருபது இருபத்தைந்து சிறு முஸ்லிம் மாநிலங்களை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டை சிதறடித்துவிடும். 

அத்துடன், வடக்கு மாகாணத்திலிருந்து கூட இந்தியாவுக்கு நல்ல செய்தி இல்லை. புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவது என்ற பெயரில் இலங்கை அரசில் உள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் தீவிர முனைப்புடன் மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இதிலும் இந்தியாவுக்கு எதிரான நாடொன்றின் கை இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப் படுகின்றது. மன்னார் பிரதேசமானது இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளதாகும். இம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் குடியேற்றங்கள் அதிகரிப்பது மன்னார்க் கரையோரத்தை கட்டிக்காக்கும் தமிழர்களை  பலவீனப்படுத்திவிடும். இதன் விளைவாக இந்தியாவின் கீழக்கரையில் இருக்கக்கூடிய  முஸ்லிம் கிராமங்களுடன் இந்தக்குடியேற்றங்களிலிருந்து எவ்வித தடையும் இன்றி தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இந்தத் தொடர்பை பயன்படுத்தி ஊடுருவமுடியாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

இரண்டாவது முக்கியமான வரலாற்றுப் பிழை இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றாமலேயே அதற்குள்ளாகவே மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரமுடியுமென்று இந்தியா நினைத்தமை. ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் பகிரப்படும் அதிகாரங்கள் மத்திய அரசினால் எந்தநேரத்திலும் மீளப்பெறக் கூடியவை. ஒருகையால் கொடுப்பதுபோன்று கொடுத்து மறுகையால் எடுத்துவிடலாம் 
இந்தியாவிலேயே முழுமையான சமஷ்டி அமைப்பு இல்லையே என்ற கேள்வி எழலாம். இந்திய அரசியல் அமைப்பு ஒரு குறைச்சமஷ்டி அரசியல் அமைப்பாக இருந்தபோதிலும் மத்திய அரசின் பிடி அதிகமாகிவிடாமல் அதன் சமூக அமைப்பானது தாங்கிப்பிடிக்கிறது. தனிப்பெரும்பான்மையற்ற வகையிலான (50%க்கும் குறைவான) இனங்களின் பன்மைத்துவமும் அவற்றுக்கிடையிலான பொதுமதமான இந்துமதத்தின் இணைப்பும் இந்திய அரசியல் அமைப்பு வெற்றிகரமாக செயற்படுவதற்கான காரணங்களாகும். இலங்கையில் இந்த நிலை இல்லை. 
இலங்கையானது 75சதவீதமான சிங்களப் பெரும்பான்மை உடையதாகவும், இணைப்பிற்கான பொதுமதத்தைக் கொண்டிருக்காததாகவும் உள்ளது (சிங்களவர்களில் இந்துக்களோ தமிழர்களில் பௌத்தர்களோ இல்லை).  இக்காரணங்களால், இந்தியாவைப் போன்று அரசியல் அமைப்புக்குப் புறம்பான ஒரு சமூகச்சமநிலை இலங்கையில் அமையவில்லை. இதனால் முழுமையான  சமஷ்டி அரசியல் அமைப்பொன்றினூடாகவே இலங்கையில் பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளமுடியும். 

இந்த இரண்டு காரணிகளால் 13 ஆவது சட்டத்திருத்தம் இறுதித்தீர்வாக முடியாதென்ற போதிலும் தற்போதைய சூழலில் வடக்கு கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது இந்தியாவின் பிடியை இறுக்கவும் இதனைப் பயன்படுத்தமுடியும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் அனைத்தையும் வழங்குமாறு இலங்கை அரசைக் கூறுவதுடன் நின்றுவிடாது வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்குமாறு இந்திய அரசு வலியுறுத்தவேண்டும். 

இலங்கை இனப்பிரச்சனையின் தீர்வுக்கு அணுகுமுறை மாற்றமும் அவசியம். இலங்கை இனப்பிரச்சனையை சிக்கலாக்கியதில் இந்திய அரசை தவறாக வழிநடத்திய அதிகாரிகள், ஆலோசகர்களின் பங்கு மிகப்பெரியது. இந்த நிலையை மாற்றுவதற்கு முயற்சி  எடுக்கவேண்டும். வினைதிறனான அணுகுமுறைகளில் ஈடுபாடுள்ள புதிய இந்தியப் பிரதமர் இந்தவிடயத்திலும் புதிய அணுகுமுறையைக் கைக்கொள்ளவேண்டும். இலங்கை இனப்பிரச்சனையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அதனைக் கையாளுவதற்கு தனிப்பொறுப்பிலான துணைவெளிவிவகார அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம். இவ்வாறு செய்தால் அது இலங்கை அரசுக்கு தெளிவான சமிஞ்ஞையை வழங்கும். இந்தியா இவ்விடயத்தில் தீவிரமாக உள்ளதென்ற புரிதல் இலங்கை அரசுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் ஏற்படுவது தீர்வை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும். 
எண்பதுகளில் இலங்கை இனப்பிரச்சனை தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர், தமிழகத் தமிழர் என்று இருமுனைவுடையதாக இருந்தது. தற்போது ஈழத்தமிழர், தமிழகத் தமிழர், புலம் பெயர்ந்த தமிழர் என்றுமுக்கோணமாக மாறியுள்ளது 

இனப்பிரச்சனை தொடர்பிலான எந்த நடவடிக்கையும் இந்த மூன்று முனைகளுக்கிடையிலான சமநிலையை சரியாகக் கையாளக் கூடியதாக அமைய வேண்டும். ஏனெனில் இதன் ஒருமுனையில் ஏற்படும் அதிருப்தியானது மற்றைய முனைகளிலும் தாக்கம் செலுத்த வல்லதாகும். இலங்கை தொடர்பிலான எந்த நடவடிக்கையிலும் தமிழ்நாடு மாநில அரசினை கலந்தாலோசிப்பதுடன் தமிழகத்தில் இயங்கும் ஈழத் தமிழர் நலம்  நாடும் அமைப்புகள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளையும் உள்வாங்குதல் வேண்டும். இவர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவை அமைப்பதனூடாக இதனை மேற்கொள்ளலாம். இவ்வாறு செயற்பட்டால், அது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த தெளிவை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களை நடத்துவதாகக்கூறி தமிழகத்தில் பிரிவினைவாதப் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களின் வாய்களை அடைத்துவிடும். 

ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், யுத்தத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்த ஏறத்தாழ ஒரு மில்லியன் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். கடந்த முப்பத்தாண்டுகளாக கோயில்கள், கலைகள், மொழியும் மதமும் சார்ந்த நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டுவரும் அவர்கள் இந்தியப் பண்பாட்டின் வெற்றிகரமான தூதுவர்களாக மேற்குலகில் விளங்குகிறார்கள். தமிழர் நலன்களை விட்டுக்கொடுக்காமல் செயற்பட்டுவரும் அவர்களை மோடி அரசு தனது பக்கம் ஈர்ப்பதற்கு முயலவேண்டும். ஈழத்தமிழர் பிரச்சனையை மோடி அரசு வெற்றிகரமாகத் தீர்க்குமாயின், அவர்களை இந்தியாவின் நலங்களைப் பேணும் அழுத்தக் குழுக்களாக மேற்குலகில் செயற்படவைக்க முடியும். மேற்குலகில் செயற்படும் ஈழத்தமிழர் அமைப்புகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வது இனப்பிரச்சனைக்கான தீர்வைக்காண்பதற்கு உதவுவதுடன் நின்றுவிடாது, இந்தியாவின் நலன்களுக்கும் பயனளிக்கக் கூடியது.
தமிழகத் தமிழர், புலம்பெயர்ந்ததமிழர் ஆகிய இரண்டு முனைகளிலும் நல்லுறவை வலுப்படுத்தினால் ஈழத்தமிழர்களுக்கான தீர்வை நோக்கி இலகுவாகச் செல்லமுடியும்.

முதன்மையான தீர்வு : இலங்கை இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வுகளில் இலகுவானதும் அதிகபலப்பிரயோகம் இன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதுமான தீர்வு முழுமையான சமஷ்டி அமைப்பினை ஏற்படுத்துவதாகும். இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மாற்றி சமஷ்டி அரசியல் அமைப்பொன்றை ஏற்படுத்தி இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை பகிர்வதனூடாக தீர்வுகாண்பதற்கு இந்தியா நேரடியாக அழுத்தம் கொடுக்கவேண்டும். சமஷ்டி அமைப்பை நோக்கிய குறிப்பிடத்தக்க நகர்வாக, முந்தைய சந்திரிகா (குமாரதுங்க) அரசு உருவாக்கிய தீர்வுப்பொதியின் முதல் வரைபினை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் செய்ய முடியும்.
இதனை வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசு செய்வதற்கு மறுத்தால், இந்திய அரசு மற்ற இரண்டு சிக்கலான தெரிவுகளுக்கு செல்வது  தான் பிரசினைக்கு தீர்வு காணும் வழிகளாக ஆகும். 

நேரடியாக தலையிட்டு பொதுவாக்கெடுப்பை நடத்தி தமிழீழத்தை உருவாக்கலாம். மிகப் பெரும்பான்மையுடன் ஈழத்தமிழர்கள் தமிழீழத்திற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள்; எனவேவெளியுலகத்தில் இருந்து இது தொடர்பாக வரக்கூடிய அழுத்தங்களை இந்தியா எளிதில் சமாளித்து விடலாம். தமிழீழமானது இந்தியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் என்பது ஒரு உள்நோக்கமுடைய மிகைப்படுத்தப்பட்ட அச்சம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. என்ற போதிலும், அவ்வாறான சாத்தியக் கூறையும் கருத்திலெடுத்து, அச்சிறிய நாட்டின் பாதுகாப்புப்பற்றிய விவகாரங்களில் இந்தியா தனது நலன்களைப் பேணக்கூடியதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளலாம். இவ்வாறான ஒப்பந்தம் இது தொடர்பில் இந்தியாவின் கவலைகளைச் தீர்க்கக்கூடியதாக இருக்கும். இந்தியா இந்தத் தெரிவை நாடினால் அது ஈழத்தமிழர் பிரச்சனையில் தாக்கம் செலுத்தக்கூடிய மற்றைய இருமுனைகளான தமிழகத் தமிழர்களில் கணிசமானவர்களாலும்புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவராலும்  வரவேற்கப்படும்.  அத்துடன் பாஜகவுக்கு அரசியலடிப்படையில் பெரும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.  ஒரு வேளை இது நடக்குமானால், இதன் விளைவாகத் தமிழகத்தில் பாஜக மாநில ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால்கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. 

இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை இந்தியாவின் மாநிலமாக பொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் இணைத்துக் கொள்வது வேறொரு தெரிவாகும். இந்தியத் தேசியவாதிகளால் பெரிதும் வரவேற்கப்படக்கூடிய இந்த நடவடிக்கை நடைமுறையில் மிகவும் சிக்கலானதாகும். ஈழத்தமிழர்கள் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருப்பதைவிட இலங்கையில் ஒரு மாகாணமாக சமஷ்டி அமைப்புக்குள் இருப்பதையே விரும்புவார்கள். காஷ்மீருக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்துப் போன்று தமிழீழ மாநிலத்திற்கும் வழங்கி அவர்களின் மனதை வெற்றிகொள்ள முயலலாம். ஆனால், மோடி அரசானது காஷ்மீருக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்தையே நீக்குவதற்கு திட்டமிட்டிருக்கையில் ஈழத்தமிழருக்கு எதிர்காலத்தில் அதை அளிப்பது கடினம்தான். எனினும், காஷ்மீர் இந்திய ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டு 60 ஆண்டுகாலம் சிறப்புச்சட்டம் நீடித்திருப்பதால், ஈழத்தமிழருக்கும் வரையறுத்த ஒரு காலப்பகுதிவரை அவ்வாறான சிறப்புச் சட்டத்தை வழங்குவது அவசியம் என்று நியாயப்படுத்த முடியும். 

இலங்கையின் வடக்குக்கிழக்கை தமிழ் மாநிலமாகவும் மற்றைய பகுதியை சிங்கள மாநிலமாகவும் இந்தியாவுடன் இணைத்துக்கொள்வது முன்னர் கூறப்பட்ட தீர்வின் நீட்சியானதொரு தீர்வாகும். ஆனால் இது சர்வதேச சமூகத்தில் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருதப்படும். இந்த நடவடிக்கை இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பொறுத்தே வெற்றியளிக்கக்கூடியது.   

ஆனால், இது அதீதமான கற்பனை என்றெல்லாம் சொல்லி விட விடியாது.  இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து இரண்டாயிரம் கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்திய ஒன்றியத்தின் பங்காளிகளாக இருக்கையில், வெறும் முப்பத்தியிரண்டு கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள இலங்கைத்தீவானது தனியான நாடாக எப்படி வந்தது என்ற கேள்வி பெரும்பாலானவர்களின் மனதில் எழுவதேயில்லை. தற்போதைய நிலையை மீறி சிந்திக்காத மனதுதான் இதற்குக் காரணம். இந்தியாவிலுள்ள பல்வேறு பிரதேசங்களைப்போன்று இலங்கையும் இந்திய உபகண்டத்தின் பொதுப் பண்பாட்டையே கொண்டிருக்கிறது. அது தனிநாடாக மாறியதற்குக் காரணம் பிரிட்டிஷார் எடுத்த நிர்வாக முடிவு என்பது ஆச்சரியமளிக்கக் கூடியது 

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கைத் தீவின் மத்திய மலைநாட்டில் இருந்த கண்டி இராச்சியத்தை தவிர்த்து மற்றைய பிரதேசங்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் வந்திருந்த நிலையில், அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை (1793-1798),  சென்னை மாகாணத்தின் பகுதியாகவே நிர்வகிக்கப் பட்டன. நிர்வாக வசதிக்காகவே பின்னர் இது சென்னை மாகாணத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. இந்தத் தனியான நிர்வாகத்தின் தொடர்ச்சியாகவே இலங்கை இந்தியாவிலிருந்து வேறான தனிநாடாக மாறியது.  “இந்திய ஒன்றியத்தின் மையப் பண்பாட்டுடன் வேறுபாடுகளற்ற இலங்கை, நேபாளம், பூட்டான், மொரிசியஸ், சீசெல்ஸ் போன்றவற்றை இந்திய ஒன்றியத்துடன் இணைத்துக்கொள்வது, பிராந்திய வல்லரசு என்ற நிலையையும், இந்து மாகடலில் அதன் ஆளுமையையும் நிலைநாட்டும்”  என்று கருதக்கூடிய இந்தியத்தேசியவாதிகள் உள்ளனர். இதை நோக்கிய செயற்திட்டத்தில் முதற்கட்டமாக இருப்பதற்கு அதிக சாத்தியமுடைய நாடு இலங்கை என்பதில் ஐயமில்லை.
இலங்கை இனப்பிரச்சனை என்பது மோடிக்கு முன்னுள்ள சவாலாகும். மோடி இவற்றுள் ஒரு தெரிவை மேற்கொண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பாரா அல்லது முன்னைய இந்திய ஆட்சியாளர்கள்போன்று சிங்கள அரசியல்வாதிகளின் காலநீடிப்பு போன்ற பல்வேறு தந்திரங்களுக்கு பலியாவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

(கட்டுரை ஆசிரியர்  நிலவேந்தி இலங்கை இனப்பிரச்சனை குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்ட ஈழத்தமிழர்)  
நன்றி:
http://www.tamilhindu.com/

2 comments:

srikanth said...

I read your blogs regularly. Nice article. well written.

srikanth said...

nice article. well written.