Sunday, May 4, 2014

‘வெலிகம’ அல்ல வலிகாமம்- ஈழத்தமிழர் வரலாறும் சிங்களச் சொம்புதூக்கிகள் படும்பாடும்!இன்று இலங்கையில் தமிழர்களின் மண்ணைப் பாதுகாக்க யாருமே  இல்லாத காரணத்தால், முப்பது வருடங்களுக்குமேல், இலங்கையின் வடக்கை, குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு என்ன நிறமென்று கூடத் தெரிந்திருக்காத சிங்களப் பாமரர்கள், பரதேசிகள் எல்லாம் யாழ்ப்பாணம் பார்க்க கிழம்பி விடுகிறார்கள்.  அங்கு சென்றதும் அவர்களுக்கு அமெரிக்காவைக் கொலம்பஸ் “கண்டு பிடித்ததும்” எப்படி மகிழ்ந்தாரோ அதே போன்ற ஒரு குட்டிப்புளுகு, போதாதற்கு புலிகளும் இல்லை, அதை விட எங்கு பார்த்தாலும் அவர்களின் அப்புகாமியும், களுபண்டாவும் துப்பாகிகளுடன் மிரண்டு கொண்டு  நிற்கிறார்கள், அதனால் எதையும் பேசும் துணிச்சலும் அவர்களுக்கு வந்து விடுகிறது, அத்துடன் யாழ்ப்பாணத்தின் கிராமங்களினதும், இடங்களின் பெயர்களுக்கும், சில சிங்களச் சொற்களுக்கும் ஏதோ தொடர்புள்ளதாக அல்லது சிங்கள வாடையடிப்பது போன்றிருப்பதையும் உணர்கிறார்கள். அத்துடன் அவர்களின் மகாவம்ச சிந்தனைகளும், இலங்கை முழுவதும் சிங்களவர்களுடையதாக வேண்டும் என்ற இனவாதம் கலந்த பேராசையும் சேர்ந்து, படிப்பறிவற்ற, வரலாறு என்றால் என்னவென்றே தெரியாத சிங்களவர்களையும், துவேசம் பிடித்த சிங்கள புத்த பிக்குகளை எல்லாம் வரலாற்று ஆய்வாளர்களாக்கி விடுகின்றன.

யாழ்ப்பாணம் முற்காலத்தில் சிங்களவர்கள் வாழ்ந்த பிரதேசம், அங்குள்ள ஊர்களின் பெயர்கள் எல்லாம் சிங்களப் பெயர்கள், அதனால் தமிழர்கள் இலங்கையில் தாயகம் கோர முடியாது  என்று தமது வலைப்பதிவுகளிலும், இணையத்தளங்களிலும்  உளறி விடுகிறார்கள். எப்படா ஈழத்தமிழர்களை சிறுமைப் படுத்தி, அவர்களை இலங்கையில் வந்தேறிகளாக்குவோம்,  என்றலையும் தமிழ்நாட்டில் வாழும் சிங்களவர்களின் சொம்புதூக்கிகளும் அந்த வலைப்பதிவுகளையும், சிங்களவர்களின் இனவாத உளறல்களையும்  வாசித்து விட்டு வந்து, சிங்களவர்களின் நோக்கம் என்ன, அவர்கள் இலங்கையில் தமிழர்களின் வரலாற்றைத் திரிபு படுத்துகிறார்கள் என்பதை உணராமல், அந்த சிங்களவர்களின் தமிழர் எதிர்ப்பு வரலாற்றுத் திரிபுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்துவார்கள்.

உண்மையில் யாழ்ப்பாணத்தின் ஊர்ப்பெயர்கள் எல்லாம்,  தமிழர்களின் முன்னோர்களாகிய நாகர்கள் பேசிய மொழியாகிய எலு(Elu)வும், இன்று வழக்கொழிந்து போன சங்கத் தமிழ்ச் சொற்களினாலுமானவையே அல்லாமல் அதற்கும் சிங்களத்துக்கும் எந்த தொடர்பு கிடையாது. தமிழோடு ஒப்பிடும் போது 'குழந்தை' மொழியாகிய சிங்களம் தான் எலு, பாளி, தமிழ், சமக்கிருதம் மட்டுமல்ல, போத்துக்கேயர்களிடமும் சொற்களைக் கடன் வாங்கி உருவானதேயல்லாமல், தமிழ் மொழி சிங்களத்திலிருந்து எதையும் இரவல் வாங்கவில்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. அதை உணர்வதற்கு அவர்களுக்கு தமிழும் தெரியாது. அதனால்  யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்ப்பெயர்கள் எல்லாம், சிங்களப் பெயர்கள், என்ற அடிப்படையில் உளறுகிறார்கள்.

இப்படியான வரலாற்றுத் திரிபுகளுக்கு, இலங்கை அரசினதும், சிங்கள பெளத்த பிக்குகளினதும் ஆதரவுமிருப்பதால், அவையெல்லாம் உண்மையானதாக்கப்பட்டு,  ஈழத்தமிழர்களின் பாரம்பரிய மண்ணாகிய யாழ்ப்பாணத்தையும், தமிழ்ப் பெளத்தர்களின் புராதன பெளத்த அடையாளங்களையும் சிங்களவர்களுடையதாக்கி அதனடிப்படையில் புதிய சிங்கள குடியேற்றங்கள் நடத்தப்பட முயற்சிகள் நடைபெறுகின்றன. 

அப்படியான வரலாற்றுத் திரிபுகளில் ஒன்றைத் தான், ஈழத்தமிழர்களை, அவர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்துவதில், அதிகப் பிரசங்கித் தனம் பண்ணும் இக்குபால் செல்வன் என்ற பதிவரும், இலங்கையில் “வெலிகம வலிகாமம் ஆகவில்லையா” என்று கேட்டார். உண்மையில் வெலிகம என்ற சிங்களப் பெயர் தான் யாழ்ப்பாணத்திலுள்ள வலிகாமம் என்ற பகுதியானதா அல்லது வலிகாமம் உண்மையில் தூய தமிழ்ப்பெயர் தானா என்பதைப் பார்ப்போம்.


வலிகாமம் = வலி+காமம் அதாவது மணல் கிராமம் அல்லது மணல் நிறைந்த கிராமம். 

வலி: மணல் (Eezham Tamil place names). வால்: வெண்மை, தூய்மை
வாலுகம்: வெண்மணல்(Old Tamil lexicons)

காமம் என்றால் மக்கள் ஒற்றுமையாக அன்போடு வாழும் ஊர் என்ற கருத்துள்ள தூய தமிழ்ச் சொல்லே  இந்தோ- ஆரியர்களால் காமம், கிராமமாகி அதுவே தமிழிலும் இன்று கிராமம் என்றழைக்கப்படுகிறது என்பது இந்தக் காணொளியில்(பதிவின் பக்கத்தில்) விளக்கப்பட்டுள்ளது. 

Evolution of Vinayaka Worship காணொளியில் 3:50 - 4:10 எவ்வாறு தமிழர்களின் காமம் என்ற ஊர்களின் பெயர் கிராமமாகிய மாறியதைப் பற்றிக் காணலாம். 


அதாவது வாலுகம் அல்லது வால் என்ற வெண்மை, அல்லது வெண்மணலைக் குறிக்கும் சொல்லே வலி என திரிபடைந்து, கிராமத்தைக் குறிப்பிடும் பழந்தமிழ்ச் சொல்லாகிய காமத்துடன் இணைந்து வலிகாமம் அதாவது வெண்மணல் நிறைந்த கிராமம் அல்லது மக்கள் குடியிருப்புக்கு பெயரானதே தவிர அதற்கும் சிங்களத்துக்கும் தொடர்பில்லை அது தூய தமிழ்ச் சொல்லாகும். யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையுமே மணற்றிடர் என்றழைப்பதும் குறிப்பிடத் தக்கது.  

இலங்கையின் தமிழ்ப்பகுதிகளிலுள்ள ஊர்களனைத்தினதும் பெயர்களும் தமிழ் வேர்களிலிருந்தே வந்தவையே அல்லாமல்,. அவைசிங்கள மொழியிலிருந்தோ அல்லது சிங்களவர்களிடமிருந்தோ வந்தவை அல்ல.. யாழ்ப்பாணத்தில் வடமராட்சி, தென்மராட்சி போன்ற பகுதிகளும், வடமர்கள், தென்மர்கள் என்ற தமிழ்க்குடியினர் அல்லது Chieftains ஆண்ட பகுதிகளேயல்லாமல் அவற்றுக்கும் சிங்களத்துக்கு எந்த தொடர்பும் கிடையாது.

இலங்கையில் தமிழ் ஊர்ப்பெயர்கள் சிங்கள மயமாக்கப்படுவதும், வரலாற்றுத் திரிபுகளும் சிங்களக் குடியேற்றங்களும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஊர்களின் பாரம்பரிய தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டு சிங்களப் பெயர்கள் இடப்படுகின்றனர். அண்மையில் வடமாகாண சபை கூட, சிங்கள இராணுவத்தால் மாற்றப்பட்ட பழைய தமிழ்ப்பெயர்களை மீண்டும் தமிழரக்ளின் ஊர்களுக்கு இட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இப்படியான செயல்களும் தமிழின அழிப்பின் அங்கம் (Structural Genocide) என்கிறார்கள் ஈழத்தமிழர்கள் அதை மறுக்கிறார்கள் சிங்களச் சொம்புதூக்கிகள். இப்படி சிங்களவர்கள்  தமிழ் ஊர்ப்பெயர்களின் வரலாற்றை, உண்மைகளைத் திரித்து சிங்கள மயமாக்குவதை அறிந்து தான் “Tamilnet” இணையத்தில் இலங்கையிலுள்ள ஊர்களின் பெயர்களுக்கு Etymology அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வவுனியா:

                                                         'பண்டார வவ்னியன்'
“பவானிவாவி தான் வவுனியா ஆகியது” என்ற கருத்தும் தவறானது. தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு காலகட்டத்தில் வன்னியர் என்ற சாதியினரின் குடியேற்றம் வன்னிப்பகுதியில் நடந்திருந்தாலும் கூட, தமிழீழத்தின்  வன்னி மண்ணுக்கு 'வன்னி' என்ற பெயர் ஏற்பட்டதன் காரணம், வன்னி மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் தான். முல்லைத்தீவு, நெடுங்கேணி, தண்ணீரூற்று, முள்ளியவளை, வற்றாப்பளை, நந்திக்கடல், ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரம் போன்றவை வன்னியின் பழமையான ஊர்கள், ஆனால் எல்லைப்புற நகரமாகிய வவுனியா உருவாகியது ஐரோப்பியர்களின் காலத்தில் தான். போத்துக்கேயரும், ஒல்லாந்தரினதும் நாவுக்கு 'வன்னி' என்பதை  'வவ்னி' என்று தான் உச்சரிக்க முடிந்தது. அதனால் வன்னியும் அங்கு வாழ்ந்த மக்களும் வவ்னியர்களாகி (Vawniyan), அதிலிருந்து தான் வவுனியா என்ற பெயர் ஏற்பட்டதே தவிர, பவானிக்கும் வவுனியாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

வரலாறு தொட்டு இலங்கையில் வாழும் மக்களிடையே சிங்கள பெளத்த- தமிழ்ச் சைவ அடையாளமும், பிளவுகளும் ஏற்படு முன்பு, அதாவது சோழப் படையெடுப்புகளுக்கு முன்பு தமிழர்கள் பெருமளவில் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தார்கள் என்பதற்கும், இன்று ஆரிய சிங்களவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சிங்களவர்கள் உண்மையில் சிங்கள பெளத்தத்தை தமது இன  அடையாளமாக்கிக்  கொண்ட தமிழர்களே என்பதற்கும்  இலங்கையில் தென்பகுதியிலுள்ள பல ஊர்களின் பெயர்களின் வேர்கள்  இன்றும் தமிழாக இருப்பதே சான்றாகும். //புங்குடுதீவு என்பதன் உண்மையான பொருளே புரியவில்லை. தமிழில் புங்குடு என்ற சொல் கேள்விப்பட்டதில்லை.//

இலங்கையில் தமிழ்ப்பகுதிகளின் இடப்பெயர்கள் பெரும்பாலும் அந்தப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் மரம், செடி, கொடிகள், அல்லது மண்ணின் இயல்பு, அல்லது அங்கு அதிகளவில் கிடைக்கும் இயற்கை வளங்களின் அடிப்படையில் தான் உருவானவை.

உதாரணமாக, அடம்பன் என்ற இடப்பெயர், அங்கு  அடம்பன் கொடி அதிகளவில் காணப்பட்டதால் ஏற்பட்டது. அதே போல் சாளம்பன்(ஒருவகை மரம்), சரவணை (ஒருவகை கடல் நாணல்), ஈச்சிலம்பத்தை, இத்திக்கண்டல், கொக்கட்டிச் சோலை(கொக்கட்டி மரம்), கிளிநொச்சி, காஞ்சிரங்குடா, கதிரமலை, கருங்கொடித்தீவு etc.

புங்குடுதீவுக்கு பூங்குடித்தீவு, பொன்கொடுதீவு (புலவர்களுக்கு பொன்கொடுத்து ஆதரித்த தீவு) என்று பல புங்குடுதீவு மக்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். பியகுல எனற சிங்கள புத்தபிக்குவின் மடம் அங்கிருந்தது, பியகுலதீவு தான் புங்குடுதீவு என்று புருடா விடுகிறார்கள்

உண்மையில் புங்குடுதீவின் பெயருக்குக் காரணம் அங்கு ஏனைய தீவுப்பகுதிகளை விட புங்கு அல்லது புங்கை மரங்கள் அதிகம் காணப்பட்டதால் என்ற கருத்து தான் சரியாகப் படுகிறது.

புங்குடுதீவு = புங்கு + உறு + தீவு >புங்குறுதீவு > புங்குடுதீவு

புங்கை =  புங்கு/புங்கை மரம் (Millettia pinnata)

உறு = அதிகளவில் அல்லது Abundant

4 comments:

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

தற்போது பதிவை இணைக்கலாம்.

தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Anonymous said...

இலங்கையில் தமிழர் பகுதிகளில் காணப்படும் சில ஊர் பெயர்கள் தமிழகம் - கேரளத்தோடு ஒத்துள்ளது. சில ஊர் பெயர்கள் பிற இலங்கை பகுதிகளின் சிங்களப் பெயர்களோடு ஒத்துள்ளது.

இதனை இலங்கை ஆராய்ச்சியாளர்களும் தமிழக ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்.

வண. ஞானப்பிரகாசம அடிகளார் , திரு. எஸ் டபிள்யூ. குமாரசுவாமி, சுகவி கல்லடி க. வேலுப்பிள்ளை உட்பட பலரும் எழுதியது அவதானிக்க தக்கது.

உண்மையில் தமிழகத்தில் காணப்படுவது போல தமிழ் ஊர் பெயர்கள் முற்று முழுவதுமாக இலங்கையில் இல்லை. அதே சமயம் தென் தமிழகம் - தென் கேரளத்தை ஒத்த ஊர் பெயர்கள் அங்கு உண்டு.

குழப்பமே. வடக்கில் காணப்படும் பல சிங்கள, பிராகிருத மொழியில் உள்ள ஊர் பெயர்கள் தான்.

வெலிகம - வலிகாமம் - உண்மையில் அதன் தமிழ் பெயற் மணற்றி, மணற்றிடல். வெலி - என்றால் சிங்களத்தில் மணல் கம என்றால் கிராமம் என்பதன் பாளி சொல் கிரமம்/ கிமம். இது யாழ்ப்பாண வைபவ மாலை தரும் செய்தி. வெலி எனத் தொடங்கும் நூற்றுகணக்கான ஊர் பெயர்கள் இலங்கை முழுவதும் உள்ளது. வலி காமம் என்பது அதன் திரிபு தான். வலியுடைய காமம் என்ற சொல் அபத்தமான பொருளில் தமிழில் இருப்பதால்.

சுவாமி ஞானப்பிரகாசம் (1917:167-169)இ குமாரசுவாமி (1917:26) முதலியோர் கொடிகாமம், தம்பலகாமம், வலிகாமம், வீமன்காமம் என்பனவற்றுடன் குறிச்சிப் பெயர்களாம் இளகாமம், தேகாமம் என்பனவும் சிங்களப் பெயர்களே என்றனர்.

“வலிகாமம் என்பது ஐயத்திற்கிடமின்றி அது சிங்களப் பெயரென்றும் என்பதன் திரிபென்றும் அதனை வழி, வலி, வளி எனத் தமிழில் பொருள்காணல் பொருளற்றது” என்றும் ஹோர்ஸ்பரோ ( 1918: p.55) கூறினார். இக்கருத்தே குமாரசுவாமியிடமும்(1918: 26) காணப்படுகிறது.

இதை எழுதியது சிங்களவர்களோ, நீங்கள் இகழும் சிங்கள சொம்புத் தூக்கிகளோ அல்ல.

வன்னியா, வவ்னியா, வவுனியா ஆனதா. வன்னி சரி. அதன் பின்னொட்டு ஆ எங்கிருந்து வந்தது. ?

ஆ பின்னொட்டு தமிழில் கிடையாது. அது வினாச் சொல்லுக்கானது.

ஊர் பெயராய்வில் இரண்டாம் தர மூன்றாம் தர எழுத்தாளர்களினது அல்லாமல் முதல்தர சான்றாளர்களின் சான்றுகளை முன் வைத்தால் நலம்.

viyasan said...

//இலங்கையில் தமிழர் பகுதிகளில் காணப்படும் சில ஊர் பெயர்கள் தமிழகம் - கேரளத்தோடு ஒத்துள்ளது..///

இலங்கையில் தமிழகத்து, கேரளம் (சேரநாடு) ஒத்த ஊர்ப்பெயர்களை விட, அந்தப் பகுதியிலுள்ள மரங்கள் (Vegetation), அதிகளவில் கிடைக்கும் இயற்கை வளங்கள், சம்பவங்களை ஒட்டிய பெயர்கள் தான் அதிகம். சில தமிழ்நாட்டுப் பெயர்களுக்குக் கூட உண்மையில் தமிழ்நாட்டின் ஊர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. உதாரணமாக, புளியங்குளம், மாங்குளம், பெரிய குளம், இன்னும் பல.

//சில ஊர் பெயர்கள் பிற இலங்கை பகுதிகளின் சிங்களப் பெயர்களோடு ஒத்துள்ளது இதனை இலங்கை ஆராய்ச்சியாளர்களும் தமிழக ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர். ///

தமிழ் சிங்களத்தை விட மூத்த மொழி. தமிழ் Etymology வளர்ச்சியடையாத, அல்லது தெரியாத அக்கால ஆராய்ச்சியாளர்களின் பல கருத்துக்கள் இக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக பேராசிரியர் இந்திரபாலா அவர்கள் தனது 1965 PhD thesis ஐ “Needless to say, that dissertation is now completely out of date. My own perspectives and interpretations have changed since its completion” என்கிறார் அவரது ‘The Evolution of an Ethnic Identity) Tamils in Sri Lanka C 300 to C. 1200 CE’ என்ற நூலில். ஆனால் சிங்களவர்கள் இன்றும் அவரது 1965 PhD thesis ஐத் தான் ஆதாரம் காட்டுகிறார்கள்.

viyasan said...

//குழப்பமே. வடக்கில் காணப்படும் பல சிங்கள, பிராகிருத மொழியில் உள்ள ஊர் பெயர்கள் தான். ///

அதை நானும் குறிப்பிட்டுள்ளேன், சில எலு/பிராகிருதச்/சங்கத்தமிழ்ச் சொற்கள். சிங்களம் அந்த சொற்களை இரவல் வாங்கியது. சிங்களவர்கள் தான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரமாகக் காட்ட் முடியாது, எலு/பிராகிருதச் சொற்கள் யாழ்ப்பாணத்தின் தொன்மையைத் தான் காட்டுகிறதே தவிர, சிங்களவர்களை அல்ல.


//வெலிகம - வலிகாமம் - உண்மையில் அதன் தமிழ் பெயற் மணற்றி, மணற்றிடல். வெலி - என்றால் சிங்களத்தில் மணல் கம என்றால் கிராமம் என்பதன் பாளி சொல் கிரமம்/ கிமம்.///

வால், வலி, வாலுகம் என்ற தமிழ்ச் சொர்களும் மணல், வெண்மை என்பவற்றைத் தான் குறிக்கின்றன. சிங்கள கம, தமிழ்க் காமத்தின் திரிபு. அதனால் சிங்கள வெலி தமிழின் வால் அல்லது வலியின் திரிபே தவிர, சிங்கள வெலியிலிருந்து வலி உருவாகவில்லை. இலங்கை முழுவதும், தமிழ் வேர்ச்சொல்லையுடைய தமிழ் ஊர்ப்பெயர்கள் இன்று சிங்களப்படுத்தப் பட்டுள்ளன. அதைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம்.


//சுவாமி ஞானப்பிரகாசம் (1917:167-169)இ குமாரசுவாமி (1917:26) முதலியோர் கொடிகாமம், தம்பலகாமம், வலிகாமம், வீமன்காமம் என்பனவற்றுடன் குறிச்சிப் பெயர்களாம் இளகாமம், தேகாமம் என்பனவும் சிங்களப் பெயர்களே என்றனர். ///

சுவாமி ஞானப்பிரகாசர் இன்றிருந்தால், பேராசிரியர் இந்திரபாலா போன்றே தனது தவறைத் திருத்தியிருப்பார். காமம் என்பது சிங்கள ‘கம’ வின் திரிபு என்ற தவறாக நினைத்தது தான் அற்குக் காரணமாகும்.//வன்னியா, வவ்னியா, வவுனியா ஆனதா. வன்னி சரி. அதன் பின்னொட்டு ஆ எங்கிருந்து வந்தது. ? ஆ பின்னொட்டு தமிழில் கிடையாது. அது வினாச் சொல்லுக்கானது. ///

அது யாழ்ப்பாணத்துக்கு Jaffna போன்று ஐரோப்பியர் தமது ஆவணங்களில் அவர்களின் உச்சரிப்புக்கேற்றவாறு குறிப்பிட்ட பெயர். தமிழர்கள் இட்ட பெயர் அல்ல. அந்தப் பெயரே தொடர்ந்து தமிழிலும் எழுதப்பட்டு அதுவே இன்றும் நிலைத்திருக்கிறது.


//ஊர் பெயராய்வில் இரண்டாம் தர மூன்றாம் தர எழுத்தாளர்களினது அல்லாமல் முதல்தர சான்றாளர்களின் சான்றுகளை முன் வைத்தால் நலம்.///

ஆதாரம் எதுவுமே தராமல், சம்பந்தமில்லாத ஒரு படத்தை மட்டும் போட்டு, வரலாற்றுத் திரிபு பதிவுகளை எழுதுவது மட்டுமல்ல, அதற்கு ஆதாரம் கேட்டால் புத்தகம் வாங்கிப் படி, அதற்கும் பசையிருக்க வேண்டும் என்று பினாத்தி விட்டு, என்னிடமும் பணமில்லை, நான் கூடஓசியில் தான் வாசித்தேன் என்று கூறும் நீங்கள் “முதல்தர சான்றாளர்களின்” ஆதாரம் கேட்பது தான் வேடிக்கை. :-))))