Sunday, May 18, 2014

யாழ்ப்பாணத் தமிழர்களின் காட்டுமிராண்டித்தனம்?


தமிழர்களின் பாரம்பரிய மொழி, கலை, கலாச்சாரப் பண்பாடுகள் பல தமிழ்நாட்டில் வழக்கொழிந்து அல்லது தமிழரல்லாத திராவிடர்களின் ஆட்சி, ஆதிக்கம் அவர்களின் பண்பாட்டுத் தாக்கம் என்பவற்றால் உருக்குலைந்து போன பின்பும், ஈழத்தில் இன்றும் மாறமால் காணப்படுவதாக ஈழத்தமிழர்கள் பெருமைப்படுவதுண்டு. ஆனால் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மிருகவதைகளைப் பார்க்கும் போது கடவுளின் பெயரால் மிருகங்களைப் பலியிடும் பண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டித் தனத்தை மட்டும், இன்றும் தேவைக்கதிகமான அளவில்  கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது போல் தான் தோன்றுகிறது. 
முத்தாரம்மன், குலசேகரப்பட்டணம்
தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் வைதீக மயமாக்கப்பட்டு காணமால்  போகாமலிருக்க, தமிழர்களின் நாட்டார் வழிபாட்டு முறைகளும் , பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களும் அழிந்து விடாமல் காக்கப்பட வேண்டும், அவை ஊக்குவிக்கப்பட வேண்டுமென்பது மறுக்க முடியாத உண்மையாகும் ஆனால் கடவுளின் பெயரால் மிருகவதை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை இருபத்தொராம் நூற்றாண்டிலும் ஈழத்தமிழர்கள் தொடர வேண்டுமா என்பது தான் எமக்கு முன்னாலுள்ள கேள்வியாகும்.  தமிழ்நாட்டில் ஆனானப்பட்ட முத்தாரம்மன் கோயிலிலேயே மிருக பலி தடை செய்யப்பட்டு முப்பது வருடங்கள் ஆகி விட்டதாம். ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டும் இந்தக் கொடுமை தொடர்கிறது, அதை ஈழத் தமிழர்கள் அனுமதிக்கலாமா?
யாழ்ப்பாணத்தில் ஆண்டு தோறும் வேள்வி என்ற பெயரில் நூற்றுக்கணக்கான ஆடுகளும் கோழிகளும் கோயில்களில் குரூரமாகக் கொல்லப்படுகின்றன.  குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள அம்மன். வைரவர், அண்ணமார், காத்தவராயன் போன்ற கோயில்களிலும்,  உலகப் பிரசித்தி பெற்ற முன்னேஸ்வரம் காளி கோயிலிலும் ஆண்டு தோறும் மிருகபலி பெரியளவில் நடைபெறுகின்றது. வேள்வி என்றழைக்கப்படும் இந்த மிருகபலி சாதியையும் தொடர்ந்து வளர்க்கிறது என்றும் கூறலாம். அக்காலத்தில் சாதியடிப்படையில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில்களில் தான் இந்த மிருகபலி இன்றும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. என்ன வித்தியாசம் என்றால் இன்று உயர்ந்த சாதியினர் எனத் தம்மைக் கருதுகிறவர்களும்  நேர்த்திக் கடன் என்ற பெயரில் ஆடுகளையும், கோழிகளையும் அங்கே பலியிடுகின்றனர்.
வைரவர் அல்லது வீரபத்திரர் வழிபாடு யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப்படுவதற்குக் காரணம் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் தான். அவர்களின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தை இந்தியாவின் கோவா போன்று முழுமையாக கத்தோலிக்க மயமாக மாற்ற முடியுமென்று நம்பிய போத்துக்கேயர் சைவசமயத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு அதிகளவில் வரிகளையும், தண்டனைகளையும்  விதித்தனர்.  அத்துடன்  கிறித்தவ மதத்துக்கு மாறாத  ஒவ்வொரு சைவசமயியும் பறங்கியருக்கு உணவுக்காக ஆண்டுக்கொரு பசுமாட்டை இறைச்சிக்காக கொடுக்க வேண்டுமெனவும் வற்புறுத்தப்பட்டனர். அதை ஏற்க மறுத்த பல யாழ்ப்பாணத்தமிழர்கள் தமது கோயில் சிலைகளைத் தூக்கிக் கொண்டும் அல்லது  அவற்றை கிணறுகளுக்குள் போட்டு மறைந்து விட்டும் வன்னிக்காட்டுக்கும், தமிழ்நாட்டில் 
சிதம்பரத்துக்கும் ஓடினார்கள். அவர்களின் வழிவந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் இன்று தமது தெய்வங்களுக்கு மிருகங்களைப் பலி கொடுக்கிறார்கள்.

போத்துக்கேயர்களின் தண்டனைகளிலிருந்து தப்புவதற்காக கடவுளின் சிலைகளை வைத்து வணங்குவதற்குப் பதிலாக வைரவர் சூலத்தை மட்டும் வணங்கி வந்தனர் யாழ்ப்பாண மக்கள். யாராவது போத்துக்கேய இராணுவத்தினர் அல்லது அதிகாரிகள் கிராமங்களுக்கு வரும்போது. சூலத்தை தலைகீழாக் குத்தி, வைத்து விடுவார்களாம்அல்லது சூலத்தை சிலுவை போன்று மடித்து விடத் தக்கவாறு அமைத்துக் கொண்டார்களாம். அன்றைய வைரவர் வழிபாடு இன்றும் பரவலாகக் காணப்படுவதால், வைரவர் கோயில்களில் வேள்வி என்ற பெயரில் மிருகங்களைப் பலியிடுவதும் இன்றும் வழக்கமாகக் காணப்படுகிறது. அத்துடன் வன்னியர் சாதியினரின் வழக்கமாகிய *அண்ணமார் வழிபாட்டிலும் மிருகங்களை பலியிடப்படுவதுண்டு. (ஈழத்தில் அண்ணமார் வழிபாட்டுக்கு தனி வரலாறுண்டு).
நேற்று யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பிரான்பற்று, புளியடி அம்மன் ஆலயத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட கடாக்கள் மாலை, மரியாதைகளுடன் கொண்டு வரப்பட்டு வெட்டிச் சரிக்கப்பட்டன. அதை படமெடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர்.

முற்காலத்தில் பரவலாக ஈழத்தில் பல கோயில்களில் நடைமுறையிலிருந்த, மிருகபலிக்கு வெளிப்படையாகத் தடை விதிக்காமல், மறைவாக தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஈழத்தமிழர்கள் கண்டுபிடித்த முறை தான் கோயில்களுக்கு நேர்த்திக்கடனுக்கென வரும் ஆடு, கோழிகளை ஏலத்தில் விற்று, அந்தக் காசை மட்டும் கோயிலுக்குக் கொடுத்து விடும் முறை. இந்த வழக்கம் பெரும்பாலான கோயில்களில் குறிப்பாக நாகதம்பிரான் கோயில்களிலும், காத்தவராயன் பூசையிலும் நடைபெறுவதை இன்றும் காணலாம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஊரில் நடைபெறும் காத்தவராயன் பூசையில் நேர்ந்து விட்ட ஆடுகளை ஏலத்தில் விடுவதை  காணொளியில் காணலாம்அம்மாளாச்சிக்காக விலையை ஏற்றுமாறு கேட்கிறார் ஏலம் கூறுபவர்தமிழ்நாட்டில் ஆண்டுக்கொருமுறை மாடுகள் கொல்லப்படாமல் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு எனப்படும் நிகழ்ச்சியையே இந்திய உச்சநீதிமன்றம் மிருகவதை என்று தடை செய்துள்ளதுஅந்த தடையை  தமிழர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும்மாறாக பல கட்டுப்பாடுகளை விதிக்கலாம்ஆனால் யாழ்ப்பாணத்தில் வேள்வி என்ற பெயரில் நூற்றுக்கணக்காக ஆடுகளும்கோழிகளும் குரூரமான முறையில்  கொல்லப்படும் காட்டுமிராண்டித்தனம் உண்மையில் தடை செய்யப்பட வேண்டும்


WARNING:  இளகிய மனம் கொண்டவர்கள் இந்தக் காணொளியைப் பார்க்க வேண்டாம். 
இறைச்சி உண்ணும் யாழ்.பண்டத்தரிப்பு முத்துமாரியம்மன்! 
மிருகவதை தடை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், சைவம் தழைத்தோங்குவதாக கூறிக்கொள்ளும் யாழ்ப்பாணத்தில் மிருகவதைகள் அதிகரித்துள்ளது. பண்டத்தரிப்பு பிரான்பற்று முத்து மாரியம்மன்ஆலயத்தில் இன்று மிருகங்கள் பலியிடும் வேள்வி இடம்பெற்றுள்ளது. 
சுமார் 250க்கும் மேற்பட்ட கிடாய் ஆடுகள், 100க்கும் மேற்பட்ட சேவல்கள் என்பன வெட்டி சாய்க்கப்பட்டு ஆலய முன்றல் இரத்த வெள்ளக்காடாக காட்சியளித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். சைவம் மற்றவர்களுக்கு தீங்கிளைக்க கூடாது என்றே போதிக்கிறது. சைவ சமயத்தை இந்து சமயத்தை பின்பற்றுவதாக கூறும் யாழ்ப்பாணத்தில் மிருகவதை மிகக்கொடூரமாக நடந்துள்ளது.
இந்த பலியிடும் கொடுமையான நிகழ்ச்சி நடப்பதை அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த வக்கிரங்களையும் காணக் கூடியதாக இருந்ததாக நேரல் பார்த்தவர்கள் கூறுகின்றனர். 
கோவில் வாசலில் 250க்கும் மேற்பட்ட ஆடுகளின் தலைகளை வெட்டி சாய்த்து பூசாரி வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்த போது அருகில் விசேட பொங்கல் வழிபாடுகளும் இடம்பெற்றன. பூசாரி சாராயம் குடித்து விட்டு நிறைவெறியிலேயே ஆடுகளை வெட்டிச்சாய்த்தார் என அதை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். 
இன்றைய வேள்வியின் போது, ஒரு ஆடு ரூபா 50ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் ரூபா வரையும், சேவல் 1500ரூபா வரையும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது

2 comments:

shiva said...

The tradition of sacrifying animals was in practice for a long time.But from 1970 s this practice was abandoned due to the pressure of the courts and some religious activists.Up to 2009 this was followed.Then a rumour was created by some barbarians because of abandoning this practice only the cause for the civil war took place in jaffna.Now again this barbarian act has started again.

Subramanian said...

Sir,i see nothing wrong with animal sacrifice,it is true that animal sacrifice is not there in the big temples of Tamilnadu. But this can be done away with if the people feel it is not necessary.