Thursday, May 15, 2014

வற்றாப்பளை கண்ணகி ஆலயத்தில் அதிசயம் - ஈழத்தமிழர்களின் கண்ணகி வழிபாடுகடல்நீரில் விளக்கெரிதல், வேப்பமரத்தில் பால் வடிதல் போன்ற அற்புதங்களுக்குப் பெயர்பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீர் நிலமட்டத்துக்கு மேல் பொங்கி வழிந்துகொண்டுள்ளது. இந்த அதிசய நிகழ்வு நேற்று மாலையில் இருந்து நடைபெறுகிறது. இந்த கிணற்று நீர் ஆலய சூழல் எங்கும் சிந்தி காணப்படுகிறது. கோவில் பிரதேசம் எங்கும் நீர் காணப்படுகிறது. இந்த அதிசயத்தை காண ஏராளமான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். இது தொடர்பில் மக்கள் கூறும் போது இது வழமை என்று கூற முடியாது எனவும் இது தமது நிலைப்பாட்டில் அதிசயமாக உள்ளதாகவும் இது கடவுளின் அருளாக பார்ப்பதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.”
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலானது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் பத்தினித் தெய்யோ| என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.
                                                                                                                            கிழ‌வி உருவில் வ‌ற்றாப்ப‌ளையில் க‌ண்ண‌கி
இலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும் அம்மன் சிந்து என்னும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.

கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.


நந்திக்கடலில் புலிகளின் அழிவுக்குக் கார‌ண‌ம் க‌ண்ண‌கியின் கோப‌மா?

http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_8.html

பெரிய வதிசயமுடனே
பெண்ணணங்கு மிலங்கை நண்ணி
சரியரிய வரங் கொடுத்துத்தார்
குழல் வற்றாப்பளையில்
மருவியிருந்த தருள் கொடுத்த

வளர்கதிரை மலையணுகி......

கண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.
அங்கொணா மைக்கடவை செட்டிபுலமன்சூழ்
ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய்
பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்

புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்.....
கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் என்றும் அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.

வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.


"முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்
மதுரையைமுதுகனல் கொளுத்தியே ஒருசிலம் 
பதனால்பிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்
பேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்
தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு......
 
தார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி
ந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்
வைகாசித் திங்களில் வந்தமர்ந்தாயே.
அடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்
அழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்
பாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்
அழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்
பாங்கான கண்களோ ராயிரமுண்டு………
……எந்தனுக்குப் பசியதிகம் என்றாய்.."

இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம்படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர். கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.
Devotees who get trans are taken around the temple, 
while singing songs of Kannaki Amman.

இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
வழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. கைவாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.

வற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கி இருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர். முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன
பால்வடியும் வேப்பமரம் 
முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். மேலும் விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.

அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்பபடுத்தப்படுவதை அவதானிக்கலாம். வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர். மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நமப்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால் வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.
தென்னைமரடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும் பொங்குதல், படைத்தல் என்னும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும் பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராக இருந்து ஆற்றி வருகின்றனர்.

இவ்வழிபாட்டு மரபில் சிலம்பு, பிரம்பு, அம்மானை, உடுக்கு முதலிய புனித சின்னங்களும் வெள்ளியால் அமைந்து ஷமுகபடாம்| என்னும் அமைப்பும் சித்திரச் சேலைகளும் இடம்பெறத் தொடங்கின. பக்தஞானி என்பவரே இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்று கூறப்படுகின்றது. கும்பத்தில் வெள்ளிமுக அமைப்பைப் பொருத்தி வெள்ளியாலான கைகால் என்பவற்றை முறைப்படி அமைத்து கண்ணகி அம்மனது உருவம் அமைக்கப்படும். இப்புனித சின்னங்களை அம்மனுக்குப் பூசை செய்யும் அந்தணர்கள் தங்களது பாதுகாப்பில் முள்ளியவளைக் கல்யாணவேலவர் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்திருந்த தமது இல்லத்தில் வைத்துப் பூசித்து வந்தனர். வெள்ளிதோறும் இல்லத்தில் பூசையும் திங்கட்கிழமைகளில் வற்றாப்பளைக் கோயிலில் பூசையும் நிகழ்ந்து வந்தன.
ஏடு படித்தல் -வழக்குறு காதை - சிலப்பதிகாரம் 
அடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலம் வத்தையிலும் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர். வட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்கள் இருந்தபோதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.

இந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.

சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார், பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.

கண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர். அவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது. இப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.

கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.


கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை. புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.

வற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.

ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மிய திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்கால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வர்.


வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் பாக்குத்தெண்டல்

பொங்கல் நடைபெறப் போகின்றதென்பதை உபகரிப்புக்காரருக்கும் பொதுமக்களுக்கும் புலப்படுத்தலே இதன் நோக்கமாகும். பொங்கலுக்கான அரசி, மடைக்கான பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய், வளந்து ஆகியாம் பொருட்களை இப்பகுதியிலுள்ள பெரியார்கள் தொன்றுதொட்டு இன்று வரை வழங்கி வருகிறார்கள். இவர்களையே உபகரிப்புக்காரர் எனக் கூறுவர். இந்த உபகரிப்புக்காரரிடம் மஞ்சள், பாக்கு, வெற்றிலை என்பவற்றைப் பெறுதலையே பாக்குத் தெண்டல் எனக் கூறுவர். இந்நிகழ்ச்சி பற்றிப் பூசாரியார் கோபியக் குடிமகனாருக்கு அறிவிப்பார். பொங்கல் நடைபெறுவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முந்திய திங்கட்கிழமை பாக்குத்தெண்டல் நடைபெறும்.

தீர்த்தமெடுத்தல்

பாக்குத்தெண்டிய எட்டாம்நாள் திங்கட்கிழமை தீர்த்தமெடுத்தல் நடைபெறும். அன்று இப்பகுதி மக்கள் விரத அனுட்டானங்களுடன் இருந்து பிற்பகல் ஒருமணியளவில் முள்ளியவளைக் காட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுக்கச் செல்லும் வைபவத்தில் கலந்து கொள்வர். பாக்குத்தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வர். தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருப்பர். சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்படும். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர். குடலில் இறங்கி வாயூறு நீர்வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் நீரால் நிறைந்துவிடும். நீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசனை புரிந்தபின் மாலை ஆறுமணியளவில் அங்கிருந்து புறப்படுவர். அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்த்தக்குடம் வரும் வழிநெடுகிலும் மக்கள் பந்தரிட்டு மாவிலைத் தோரணம் இட்டு, நிறைகுடம் வைத்து வரவேற்பர். இங்ஙனம் வரிசையாக வைக்கப்பட்ட நிறைகுடப் பந்தரில் தரித்து நின்று இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் காட்டுவிநாயகர் ஆலயத்துக்குத் தீர்த்தக்குடம் விநாயகர் ஆலயத்தை அடைந்ததும் அங்கு விசேட பூசை நடைபெறும். இத்தருணம் அடிக்கப்படும் ஆலயமணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெய்சிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10 மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில், கொண்டுவரப்பட்ட உப்புநீரை நிரப்பி, அதனைக் கடற்கரை மண்மீது வைத்துத் திரியிட்டு விளக்கேற்றுவர். கடல்நீரில் விளக்கெரியும் அற்புதம் தொடர்ந்து ஏழு தினங்கள் காட்டுவிநாயகர் அம்மன் மண்டபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும்
.

நோற்புக்காரர்

அவர்கள் எட்டு நாட்களும் நோற்பு மண்டபத்திலேயே தங்கியிருப்பர். அங்கிருந்து கொண்டே பொங்கல் தொடர்பான தம் பணிகளை ஆற்றுவர். ஐயர் மட்டும் கோயிலில் தங்குவார்.

ஏழுநாட்கள் காட்டுவிநாயகர் ஆலயத்தில்

விளக்கேற்றிய திங்கள் இரவுபோல் அடுத்து வரும் புதன், வெள்ளி ஆகிய இரண்டு இரவுகளிலும் பழைய கும்பம் குலைக்கப்பட்டுப் புதிதாக வைக்கப்படும். மடை பரவி அம்மன் பூசனைகள் இடம்பெறும். சிலம்பு கூறல் காவியம் ஒவ்வொரு இரவும் தொடர்ந்து படிக்கப்படும். ஏழாவது நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும். இத்தினத்தில் காலையிலிருந்தே பெருந்திரளான பக்தர்கள் கூடுவர். தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி அர்ச்சனை செய்வித்து வழிபடுவர். இந்த இரவுதான் கண்ணகி அம்மன் இவ்வாலயத்தில் நடைபெறும் பொங்கல் மடையைக் கண்டு அடுத்தநாள் திங்கள் காலை வற்றாப்பளைக்குச் சென்றாள் என்பது ஐதீகம்.
காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகள் முடிவுற்றபின், அடுத்தநாள் திங்கள் இரவில் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பொங்கல் நடைபெறும்.

மடைப்பண்டம்

பொங்கலுக்கும் மடைக்கும் உரிய பொருட்களைக் காட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்தே கொண்டு செல்வர். இதனையே மடைப்பண்டம் கொண்டு செல்லுதல் என்பர். மடைக்குரிய வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை முதலியனவும் பொங்கலுக்குரிய அரிசி, வளந்து என்பனவும் அம்மன் கும்பம் வைப்பதற்கான பொருள்கள், உப்புநீர் விளக்கு, தீரத்தக்குடம், அம்மன் பத்ததிச் சின்னங்கள் அடங்கிய பேழை ஆகிய இப்பண்டங்களை திங்கள் அதிகாலை ஐந்து மணியளவில் வற்றாப்பளைக்கு நோற்புக்காரர் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். பறைமேளம், சங்கு, சேமக்கலம் முதலிய வாத்தியங்களுடன் ஊர்வலம் செல்லும்.

கும்பம் வைத்தல்

மடைப்பண்டத்துடன் கொண்டுவரப்பட்ட கும்ப பாத்திரத்தையும் அதற்குரிய பொருள்களையும் வைத்தே கும்பம் வைக்கப்படும். கும்பம் வைக்கும் இடத்தை நீரால் சுத்திகரித்து அரிசியை வட்டாகப் பரவி அம்மன் மந்திரம் சொல்லி கும்பப் பாத்திரத்தை அதன்மேல் நிறுத்தி அதன்மீது தேங்காயை வைத்து மாவிலைக்குப் பதிலாக தென்னப்பாளை நெட்டுகளை வைத்து, அதன்மீது அம்மன் மகபடாம் வைக்கப்படும். கும்பத்திற்குப் பட்டுச்சாத்தி பூக்கள் இட்டு அம்மனைக் கும்பத்தில் ஆகாவனம் செய்வர். கடல்நீர் விளக்கு ஏற்றிவைக்கப்படும்.

கச்சுநேரல்

மடைக்குரிய பொருள்களைப் பரவும் வெள்ளைத்துணியை நேருதலையே கச்சுநேருதல் என்பர். வெள்ளைத் துணியைக் கொய்து இரு கைகளாலும் அடக்கிப் பிடித்து நான்கு திக்கும் பார்த்துக் காவல் தெய்வங்களை வேண்டி நேருவர். பூசாரியார் உருவேற்றிய நிலையில் தேறர்றமளிப்பார்.

மடை பரவுதல்

வெள்ளைத்துணிமீது வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை என்பவற்றில் தலா ஆயிரம் பரவப்படும். இளநீரும், இளந்தென்னம் பாளையின் மலர்களும் மடையில் பரவப்படும்.

நூல்
சுற்றுதல்

பொங்கலுக்குரிய அம்மன் வளந்திற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நூல் சுற்றப்படும். மற்ற இரண்டு வளந்திற்கும் நூல் சுற்றுவதில்லை. பின்னர் வளந்து நேரல் இடம்பெறும். கும்பம் வைத்தல், மடை பரவுதல், பொங்குதல், படைத்தல், கட்டாடுதல், வேளை விபூதி, மஞ்சட் காப்பு அடியார்க்கு அளித்தல் ஆதியாம் கருமங்களைப் பிராமணர் அல்லாத கட்டாடி உடையாரே செய்வர். கட்டு ஆடி சொல்கின்றதால் இவர் இப்பெயரைப் பெற்றார்.

வளந்து நேரல்

அம்மன் வளந்தினை பூசாரியார் எடுத்துச் சென்று அம்மன் முன்னிலையில் அம்மனை வணங்கி, அட்டதிக்குப் பாலகர்களையும், தேவாதி தேவர்களையும் வேண்டி நிற்பர். எட்டுத் திசைகளிலும் வளந்தினை எறிந்து ஏந்துவர். கட்டாடி உடையார் உருவேறி ஆடுவர். பொங்கல் இனிது நிறைவேற தேவாதி தேவர்களை வேண்டுவதையே வளந்து நேர்தல் என அழைக்கப்படும். மூன்று வளந்துகளை அடுப்பில் ஏற்றிப் பச்சை அரிசியும், பசுப்பாலும் சேர்த்துப் பொங்கில் நடைபெறும். சர்க்கரை சேர்ப்பதில்லை.

தூளி பிடித்தல்

சலவைத் தொழிலாளர் இருவர் வெள்ளைத் துணியைப் பிடிக்கப் பூசாரியார் அம்மன் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு அம்மனின் சின்னங்களான சிலம்பு, பிரம்பு, அம்மனைக்காய் என்பவற்றை வைப்பர். அத்துணியில் 11 பாக்கு, 11 வெற்றிலை ஆதியாம் பொருட்களை வைத்துப் பூசித்துச் சிலம்பினை எடுத்துக் குலுக்கி நான்கு திக்கும் பாக்குடன் கூடிய வெற்றிலைச் சுருளை தூளியின் மறுபுறத்தே வீசுவார். இதுபோலவே எரியும் திரியையும் தூளியின் மேலால் எறிவார்.


திருக்குளிர்த்தி பாடுதல்

ஏட்டிலுள்ள அம்மன் திருக்குளிர்த்தி தன்னைப் பூசாரியாரும் அதற்குரியோரும் பாடுவர். அம்மனின் உள்ளத்தைக் குளிர்விப்பதால் அவளின் அருளைப் பெற்றுக் கொள்ளலாம் என எண்ணியே திருக்குளிர்த்தி பாடப்படுகின்றது. குளிர்த்தி பாடி முடிந்ததும் அம்மானைப் பாட்டுப் பாடப்படும். அங்ஙனம் பாடும்போது பூசாரியார் வெள்ளி புனைந்த மூன்று சித்தரக்காய்களை மேலே எறிந்து ஏந்துவர்.
கதிர்காம யாத்திரை ஆரம்பம்

கதிர்காம யாத்திரிகர்கள் அம்மனிடம் யாத்திரைக்கு விடைகிடைக்கப் பெற்றவர்கள். அம்மனை வழிபட்டுப் பிரசாதங்களைப் பெற்றதும் தமது யாத்திரையை ஆலயத்தின் உள்வீதியிலேயே தொடங்குவர். வேல் தாங்கிய தலைமை அடியார் கந்தப்பெருமானின் நாம வழிபாடல்களை இசையொழுகப் பாடி முன்செல்ல ஏனைய அடியார்கள் பாடிக்கொண்டு பின் செல்வார்கள்.

பக்தஞானி பொங்கல்

தஞ்சாவூரிலிருந்து பக்தஞானியும் அவரின் சிஷ்யர்களும் இங்குவந்து பொங்கல் கிரியைகளில் பல ஒழுங்கு முறைகளையும் மரபுகளையும் ஏற்படுத்தினர். அம்மன் சின்னங்களான முகவடாம், உடுக்கு, சிலம்பு, பிரம்பு, ஏட்டுப் பிரதிகள் ஆகியவற்றையும் அவரே வழங்கினார். இவரை நினைவு கூர்தற் பொருட்டு அவர் நற்கதியடைந்த இடத்தில் வற்றாப்பளைப் பொங்கலை அடுத்த வெள்ளிக்கிழமை பொங்கல் iபெறும். இப்பொங்கல் முள்ளியவளையிலுள்ள நாவற்காட்டில் இடம் பெறும்.  இத்துடன் பொங்கல் கிரியைகள் யாவும் நிறைவுறும்.நன்றி: www.jaffna.com & various

3 comments:

Anonymous said...

மிகவும் நல்ல பதிவு தான். ஆனால் நிறைய ஓட்டைகள், முதலில் கண்ணகி அம்மன் இலங்கைக்குப் போனாரா? இதென்ன இலங்கைக்கு புத்தர் போனார் என சிங்களவர்கள் மகாவம்சம், மணிமேகலையை எடுத்துக் காட்டி சாதிப்பது போன்ற அபத்தமான ஒன்றே. கண்ணகி இலங்கைக்குப் போனார் என சிலப்பதிகாரத்தில் ஒரு தகவலும் இல்லையே. ஒருவேளை இளங்கோவோக்கு அம்னீசியாவோ, அல்லது அது வேறு கண்ணகியோ. யாருக்குத் தெரியும்.

அடுத்து,

கண்ணகி அம்மன், பகவதி அம்மன், பத்தின் தெய்வம் என்ற பல பேர்களில் அழைக்கப்படும் இந்த வழிப்பாட்டை தமிழகத்தில் இருந்து இலங்கைக்குள் இறக்குமதி செய்தது கிபி 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈழத்து மன்னன் கஜபாகு என்பவனே என்பதாக வரலாறு கூறுகின்றது.

அடுத்து,

எப்போதிருந்த சைவத்தில் கண்ணகி சேர்க்கப்பட்டாள். நானறிந்து இது வைதிகம் சாராத நாட்டார் வழிபாட்டில் இருந்து தெய்வமாகும். ஆரம்ப காலங்களில் பவுத்தரும், சமணருமே கண்ணகியை தமது சிறு தெய்வங்களில் ஒன்றாக்கி வழிபட்டனர்.

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் கூட கண்ணகி, அண்ணன்மார் வழிபாடு போன்றவை எல்லாம் சமண சார்புடையதாக எண்ணி சைவம் வளர்க்க இந்த தெய்வங்களை எல்லாம் விலக்கிவிட பிரச்சாரம் செய்தார்.

என்னவோ போங்க, கோவிலுக்கு போனோமா பொங்கல் தின்னோமா என இருந்தால் நமக்கு இப்படி எல்லாம் யோசிக்கத் தோனாதில்லே.

viyasan said...

//மிகவும் நல்ல பதிவு தான். ஆனால் நிறைய ஓட்டைகள், ///

நன்றி. ஆனால் இது ‘காப்பி பேஸ்ட்” பதிவு தான். எல்லா நம்பிக்கைகளையும், செவிவழிக் கதைகளையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாது, இப்படியான நம்பிக்கைகளும், கதைகளும் எல்லா நாட்டு மக்களிடமும் உண்டு. ஆனால் ஈழத்தமிழர்களின் நம்பிக்கைகளை அலசி ஆராய்ந்து கேள்வி கேட்காது விட்டால் உங்களைப் போன்றவர்களுக்குத் தூக்கம் வராது, அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. :-)


//முதலில் கண்ணகி அம்மன் இலங்கைக்குப் போனாரா? இதென்ன இலங்கைக்கு புத்தர் போனார் என சிங்களவர்கள் மகாவம்சம், மணிமேகலையை எடுத்துக் காட்டி சாதிப்பது போன்ற அபத்தமான ஒன்றே.///

பெளத்தர்களின் பாளி மூல நூல்கள் எதுவும் புத்தர் இலங்கைக்குச் சென்றார் எனக் கூறவில்லை, ஆனால் மகாவம்சமும், அதற்குப் பிந்திய மணிமேகலையும் புத்தர் இலங்கைக்குச் சென்றதாக கூறுகிறது. அதைச் சிங்களவர்கள் நம்புகிறார்கள். அதனடிப்படையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களைக் கூட சிங்களவர்களுடையதென்கிறார்கள். அதை நீங்களும் ஆதரிக்கிறீர்கள் ஆனால் ஈழத்தமிழர்களின் நம்பிக்கைகளை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள். அது ஏனென்று உங்களுக்கே தெரியும்.

கண்ணகி இலங்கைக்குச் சென்றதாக சிலப்பதிகாரம் கூறவில்லை, ஆனால் இலங்கையில் தமிழ்-சிங்கள செவிவழிக் கதைகளும், சிற்றிலக்கியங்களும், நாட்டார் பாடல்களும், கண்ணகி இலங்கைக்கு வந்து அங்கே தங்கியதாகக் கூறுகின்றன. கண்ணகி விடயத்தில் சிங்களவரும் தமிழர்களும் ஒரே கதைகளைக் கொண்டுள்ளனர்.


//கண்ணகி இலங்கைக்குப் போனார் என சிலப்பதிகாரத்தில் ஒரு தகவலும் இல்லையே. ஒருவேளை இளங்கோவோக்கு அம்னீசியாவோ, அல்லது அது வேறு கண்ணகியோ. யாருக்குத் தெரியும். ///

இளங்கோவடிகள் அதைப்பற்றி எழுதாமல் விட்டிருக்கலாம். யாருக்குத் தெரியும். வேறொரு கண்ணகியும் மதுரையை எரித்திருந்தால், அப்படியும் இருக்கலாம்.

viyasan said...

//கண்ணகி அம்மன், பகவதி அம்மன், பத்தின் தெய்வம் என்ற பல பேர்களில் அழைக்கப்படும் இந்த வழிப்பாட்டை தமிழகத்தில் இருந்து இலங்கைக்குள் இறக்குமதி செய்தது கிபி 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈழத்து மன்னன் கஜபாகு என்பவனே என்பதாக வரலாறு கூறுகின்றது. ///

சிலப்பதிகார அரங்கேற்றத்தில் கலந்து கொண்ட ஈழத்தரசன் கஜபாகு கண்ணகி வழிபாட்டின் அடையாளங்களாகிய சிலை, பிரம்பு, கங்கணம் என்பவற்றைக் கொண்டு வந்து, கண்ணகி வழிபாட்டை இலங்கையில், குறிப்பாக சிங்களவர் மத்தியில் பரப்பினான் என்று தான் வரலாறு கூறுகிறது, ஆனால் அதற்கு முன்னால் இலங்கையில் கண்ணகி வழிபாடு நடைபெறவில்லை என்று கூறவில்லை. அதாவது சிலப்பதிகார அரங்கேற்ற காலத்திலேயே, தமிழ்நாட்டில் கண்ணகி வழிபாடு நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அதனால், கண்ணகி வழிபாடு, தமிழ்நாட்டிலிருந்து, ஆழமற்ற பாக்கு நீரிணையினூடாக வட இலங்கையை அடைந்திருக்கலாம். ஆனால் கஜபாகுவால் அதற்கு அரச அங்கீகாரம் கிடைத்து இலங்கை முழுவதும் பரவியது என்றும் கொள்ளலாம்.//எப்போதிருந்த சைவத்தில் கண்ணகி சேர்க்கப்பட்டாள். நானறிந்து இது வைதிகம் சாராத நாட்டார் வழிபாட்டில் இருந்து தெய்வமாகும்.///

இன்றும் ஈழத்தமிழர்களின் சைவம் முற்றாக வைதீக சைவமல்ல, அது தேவாரங்களையும், சைவசித்தாந்தங்களையும், வேதங்களுக்கு இணையாக அல்லது மேலாக நினைக்கும் ஈழத்துச் சைவம் தான்.(அது போன்ற பல முரண்பாடுகளால் தான் இந்திய இந்துத்துவாவும், ஈழத்தமிழர்களின் இந்து ஈடுபாடும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என நான் நம்புகிறேன்.). ஈழத்து ‘வஹாபிஸ்டு’ ஆறுமுகநாவலருக்கு முன்னால், மட்டுமல்ல இன்றும் கண்ணகி வழிபாடு ஈழத்துச் சைவத்தின் முக்கியமான அங்கமாகும். தமிழ்நாட்டில்(சேரநாடு உட்பட) தான் கண்ணகி பகவதியாகவும், மாரியம்மனாகவும் உருமாறினாள், ஆனால் இலங்கையில் இன்றும் அதே கண்ணகி தான்.


//ஆரம்ப காலங்களில் பவுத்தரும், சமணருமே கண்ணகியை தமது சிறு தெய்வங்களில் ஒன்றாக்கி வழிபட்டனர். ///

ஆரம்ப காலத்தில் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் பெளத்தர்கள், அதனால் அவர்கள் கண்ணகியை வழிபட்டிருக்கலாம்.


//19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் கூட கண்ணகி, அண்ணன்மார் வழிபாடு போன்றவை எல்லாம் சமண சார்புடையதாக எண்ணி சைவம் வளர்க்க இந்த தெய்வங்களை எல்லாம் விலக்கிவிட பிரச்சாரம் செய்தார்.//

ஆறுமுகநாவலர் ஞானசம்பந்தர் காலத்தவரல்ல. ஆறுமுகநாவலர் காலத்தில் சமணம் சைவத்துடன் போட்டியுடவில்லை. ஆறுமுகநாவலர் ஒரு ஆகமவாதி. அவர் யாழ்ப்பாணச் சைவத்தை ஆகம விதிகளுக்குட்படுத்தினார். சிறுதெய்வ வழிபாடு ஆகமங்களுக்கெதிரானவை என அவர் நம்பினார். எல்லாவற்றையும் விட, "எல்லாம் வல்ல சர்வ லோக நாயகனாகிய" சிவபெருமானையும், அவரது “குடும்பத்தையும்” தவிர, வேறு எவரையும் வணங்குவது சிவநிந்தனை எனவும் அவர் நம்பினார்.


//என்னவோ போங்க, கோவிலுக்கு போனோமா பொங்கல் தின்னோமா என இருந்தால் நமக்கு இப்படி எல்லாம் யோசிக்கத் தோனாதில்லே///

ஒவ்வொரு கோவிலுக்கும் பின்னால் தமிழர்களின் வரலாறு இருக்கிறது. நான் கோவில்களில் அக்கறைப் படுவதே அதற்காகத் தான். உதாரணமாக திருப்பதிக்குப் போனால், அங்குள்ள தமிழ்க்கல்வெட்டுகளை தடவிப் பார்க்கும் போது, இவையெல்லாம் தமிழர்களின் கைகளை விட்டுப் போய்விட்டனவே என்பதை நினைக்க எவ்வளவு வருத்தமாக இருக்கிறதென்பதை, அப்படி நினைத்துப் பார்த்தவர்களுக்குப் புரியும். :(