Friday, May 2, 2014

'யூதர்களிடமுள்ள ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை' - வடமாகாண முதலமைச்சர்
"எங்கிருந்தாலும் ஒரு யூதன் இன்னொரு யூதனுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டே இருப்பான்.  எமது தமிழர்கள் மட்டும் ஒற்றுமைக்கு விதிவிலக்காக வாழ்கின்றார்கள்.

வெள்ளையனே! வெளியேறுஎன்று உரக்கக் கூறிய எம் மக்கள் குரல் இனி இராணுவத்தினரும், அரசாங்கத்தினரும் கேட்கும் படியாக படையினரே வெளியேறுங்கள்என்று ஒலிக்கப் போகின்றது. அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தென்மராட்சி கலாமன்றத்தில் இன்றைய தினம் மாலை 4 மணிக்கு நடைபெற்ற மே தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவருடைய உரையின் முழுமையான வடிவம் பின்வருமாறு.

நான் பங்குபற்றும் முதல் மேதினக் கூட்டம் இது. என்.எம்.. பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா, பேர்னாட் சொய்சா முதலியோர் பங்கு பற்றிய மேதினக் கூட்டங்களுக்குப் போய் இருக்கின்றேன். பார்ப்பதற்கு! இன்றுதான் பங்குபற்றுகின்றேன்.
மே முதலாந் திகதி உலகெங்கணும் சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தொழிலாளரின் ஐக்கியத்தையும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும், வெற்றியையும் எடுத்துக் காட்டும் நாளிது.
1886ம் ஆண்டு மே மாதம் 1ந் திகதியன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பணிசெய்த தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்தார்கள். அதற்கு முன் அவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் இறங்கியதில்லை.
அவர்களின் முக்கிய கோரிக்கை எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட வேலை நாள் நாடெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதே. தொடர்ந்து வேலைப் பகிஷ்கரிப்பு நடந்து வந்ததால் பதவியில் உள்ளவர்கள், முதலாளிமார்கள் ஆகியோர் சிந்திக்கத் தொடங்கினார்கள். மனமாற்றம் ஏற்பட்டது.
அரசாங்கம் எட்டு மணித்தியால வேலை நாட்களைப் பிரகடனப்படுத்தியது. இதனை மற்ற நாடுகள் கூட ஏற்று நடக்கத் தலைப்பட்டன.அதுமட்டுமல்ல. அமெரிக்கா போன்று பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகள் கூட மேதினத்தை தேசிய ரீதியில் தொழிலாளர் விடுதலை தினம் ஆகப் பிரகடனப்படுத்தினர்.
வழக்கமாக தொழிலாளர் வர்க்கம் தமது குறைகளை நாடறிய ஊரறிய உரத்துக் கூறும் நாளாகவே மேதினங்களைப் பாவிக்கின்றனர். இன்று பல நாடுகள் மேதினத்தை விழாவாகக் கொண்டாடுகின்றன. அதை ஒரு முற்றிலுஞ் சமூக விழாவாகக் கொண்டாடும் நாடுகளும் உள.
தொழிலாளர் தினம் பிறந்த நாளானது அதாவது மே தினமானது எங்களுக்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் வெற்றி பெறச் சகலரின் ஒத்துழைப்புந் தேவை என்ற உண்மையை எடுத்தியம்புவதாகவும் அமைந்துள்ளது.
உங்களுக்கு இந்த மேதினக் கூட்டத்தில் நான் எடுத்தியம்ப விரும்பும் முதலாவது கருத்து மேதின வெற்றியை ஊர்ஜிதப்படுத்திய அந்த 1886ம் ஆண்டைய தொழிலாளப் பெருமக்களின் வாழ்கையில் இருந்து, அவர்களின் அன்றைய நடத்தையில் இருந்து, ஒற்றுமையையும், ஐக்கியத்தையும், ஒத்துழைப்பையும் இலங்கையின் வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களாகிய நாங்கள் இன்று மனதிற்கெடுத்துக் கொள்வோம் என்பதே.
தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டோமானால் எமக்குள் ஒற்றுமையின்மையே எமது தோல்விக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமை வேண்டும் என்று தான் கூறுகிறோம். ஆனால் எம்மால் ஒன்றுபட முடியாது இருக்கின்றது.


இது ஏன் என்று பார்த்தோமானால் ஒவ்வொருவரும் மற்றவர்கள் தன்னுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். அதாவது நான் கூறுவது தான் சரி, நான் எண்ணுவதுதான் சரி, நான் செய்வதுதான் சரி ஆகவே மற்றவர்கள் என்னுடன் இணைந்து நடக்க வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். மற்றவர்கள் என்னுடன் இணைவதே ஒற்றுமை என்று எண்ணி விடுகின்றார்கள்.
மற்றவர்கள் கூறுவதிலும் உண்மைகள் இருக்கலாம் என்று எண்ணுவதற்கு இடமளிக்காது அவர்களின் அகந்தை. இதனால் அன்று தொடக்கம் இன்று வரை நம் கட்சி மறு கட்சி என்றே சிந்தித்து வருகின்றோம். மேலும் நம் தலைவர் எதிர்த்தலைவர்கள் என்று தலைவர்களை அடையாளம் காட்டி நான் இன்னாரை ஆதரிக்கின்றேன் நீ மற்றவரை ஆதரிக்கின்றாய்.
ஆகவே நீ என் எதிரிஎன்ற போக்கில் தான் நாம் செல்கின்றோம். நாங்கள் உன்னித்துக் கவனித்தோமானால் ஒவ்வொரு தலைவர் கூறுவதிலும் ஏதோ ஒரு உண்மை பொதிந்து தான் கிடக்கின்றது. ஆனால் அவை எந்த அளவு சுயநல சிந்தையுடன் கூறப்படுகின்றது, எந்தளவு பொதுமக்கள் நலனை முன் வைத்துக் கூறப்படுகின்றது என்பதில்த்தான் உண்மையான வேற்றுமை இருக்கின்றது.
நான் கல்லூரியில் படிக்குங் காலத்தில் இரண்டு சகோதரர்களின் பிள்ளைகள் கல்லூரிக்கு வருவார்கள். அவர்களின் தந்தைமார்களில் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பார். மற்றவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பார். அரசியல் மேடைகளில் அவர்கள் எதிரும் புதிரும். ஆனால் வீட்டிலோ இரு குடும்பத்தாரும் மிகவும் அன்னியோன்னியம்.
ஒரு நாள் அந்த இரு சகோதரரின் மகன்மாரிடையேயும் வினவினேன் எவ்வாறு உங்களால் இவ்வளவு ஒற்றுமையாக இருக்க முடிகின்றதுஎன்று. எங்கள் தந்தைமார் எமக்குக் கூறியிருக்கின்றார்கள் தாங்கள் இருவரும் ஒரு தாய் மக்கள் என்றும் ஆகவே எந்தத் தருணத்திலும் எங்களுக்குள் பிரச்சினைகள், பிரிவினைகள் ஏற்படக்கூடாது என்று. நாங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
அரசியல் கட்சிகளில் இன்று ஒன்று பதவியில் இருக்கும். நாளை மற்றையது. எது வந்தாலும் எமது ஒரு சகோதரர் ஆளுங் கட்சியுடன் இணைந்திருப்பார். ஆட்சியுடன் இணங்கி இருப்பவர் மற்றைய சகோதரரின் வியாபாரப் பிரச்சினைகள், தொழிற் பிரச்சினைகள் சகலதைப் பற்றியும் ஆராய்ந்து அவருக்கு உதவுவார்என்று.
எப்படி இருக்கின்றது அவர்களின் உறவு என்று பாருங்கள். யூதர்களிடமும் இந்தக்குணம் இருந்து வருகின்றது. எங்கிருந்தாலும் ஒரு யூதன் இன்னொரு யூதனுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டே இருப்பான்.  எமது தமிழர்கள் மட்டும் ஒற்றுமைக்கு விதிவிலக்காக வாழ்கின்றார்கள்.
ஒரு கதையுண்டு. 2ம் யுத்த காலத்தில் கைதிகளைப் பாரிய கிடங்குகளைக் கிண்டி அதனுள் நிற்க வைத்துக் காவல் காத்து வந்தார்களாம். ஒரு கிடங்கைச் சுற்றி மட்டும் காவலர்கள் எவரையும் நிறுத்தவில்லை. மக்கள் கூட்டம் மட்டும் கிடங்கினுள் இருந்தது. இது ஏன் என்று கேட்ட போது அவர்கள் தமிழர்கள். அவர்களுக்குக் காவல் தேவையில்லை. ஒருவன் மேலே எழ எத்தனித்தால் அவனை மற்றவர்கள் தாங்களே கால்களைப் பிடித்துக் கீழே இழுத்து விடுவார்கள். ஆகவே காவல் தேவையில்லைஎன்றார்களாம்.
இன்றைய நிலையும் அதேவாறு தான். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பல வித நாடகங்கள் நடந்தேறுகின்றன. அவற்றின் பின்னணியில் சுயநலமே பொதிந்து இருப்பதை நாம் அவதானிக்கலாம். சுயநலத்திற்காக வெவ்வேறு கட்சிகள் கூட ஒன்றிணைந்து செயற்படவும் முன்வருகின்றன. அதாவது எமது கட்சியினர் எம்மவரை வெளியேற்றப் பிற கட்சியினரை நாடுகின்றனர்.
எமது வாழ்க்கை வளம் பெற வேண்டுமென்றால் வருங்காலம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்றால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நலன் கருதியே நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். எமது கடமைகள், கடப்பாடுகள், நடவடிக்கைகள் யாவும் அவர்களின் நலன் கருதியே ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்.
நாங்கள் பதவிக்கு வந்தால்த்தான் மக்களுக்கு நாங்கள் சேவை செய்யலாம் என்று எண்ணுவது மடமை. நீங்கள் எங்கே இருந்தாலும் கட்சிக்கும், மக்களுக்கும் நன்மைகள் செய்யலாம், சேவைகள் புரியலாம், பணிகளில் ஈடுபடலாம். எனவே ஐக்கியம், ஒற்றுமை ஆகியனவற்றை மே தினம் குறிக்கின்றது என்று கூறித் தமிழ் மக்கள் அந்த முக்கியமான ஒரு கருத்தை ஆழ் மனதுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.
அடுத்து ஒற்றுமை இருந்தால்க்கூட ஒருமித்துச் செயற்படுவதற்குப் போதிய திறன்கள், புரிந்துணர்வுகள் எமக்கிருக்க வேண்டும். முதன்முதலாகத் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றில் இறங்கிய போது அந்தத் தொழிலாளப் பெருமக்களின் மனதில் எத்துணை சந்தேகங்களும், பீதிகளும், பயமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் மனதிற்கெடுக்க வேண்டும்.
நாளை எம்மெல்லோரையும் வேலையில் இருந்து நீக்கி விட்டால் எமது குடும்பத்திற்கு என்னவாகும்? பொலிஸைக் கொண்டு எங்களைத் தாக்கினால் எமக்கு என்னவாகும்? தொடர்ந்து வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அன்றாடச் சோற்றுக்கு யார் பொறுப்பு? இப்படிப் பல எண்ணங்கள் அவர்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டே இருந்திருக்கும்.
அப்படியிருந்தும் அந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களை வழி நடத்தியவர்கள் திடமான நோக்கங்களையும், அவற்றின் பால் ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளையும் உள்வாங்கியிருந்தார்கள் என்று அர்த்தம்.
இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எம்மால் தமக்கு நட்டம் ஏற்படும் என்று முதலாளிமார்கள், பதவியில் உள்ளவர்கள் நினைத்தால் தான் எமது நடவடிக்கைகள் வெற்றி பெறுவன. உதாரணத்திற்கு எமது அரசியல் சார்பான சத்தியாக்கிரகங்களை எடுத்துப் பார்த்தீர்களானால் அவை பதவியில், அதிகாரத்தில் அன்று இருந்தவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அதனால் அவை தோல்வியுற்றன.
அதற்கு மாறாக சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கிய உடனேயே அரசாங்கம் திடுக்குற்றது. ஒரு நாளைக்குத் தமக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று கணக்கெடுக்கத் தொடங்கியது.
எனவே ஐக்கியமும், ஒத்துழைப்பும் எம்மிடையே மலர்ந்தால் கூட அவற்றை வைத்து வெற்றியை அடைய நாம் வேறு பல தகைமைகளையும் பெற்றிருக்க வேண்டும். எமது தொழிற்சங்க அல்லது அரசியல் நடவடிக்கைகள் எமது முதலாளிமார்களை அல்லது அரசாங்கத்தைத் தமது மூக்கின் மேல் கை வைப்பதாக அமைய வேண்டும்.
ஆகவே எந்தவொரு தொழிற்சங்க அல்லது அரசியல் நடவடிக்கையில் இறங்குவதென்றாலும் அதற்குரிய காலம் கனிந்து வரும் வரையில் காத்திருக்க வேண்டும். என் நண்பர் சௌம்மியமூர்த்தி தொண்டைமான் அவர்கள் தோசையைப் பிரட்டுவது பற்றி அடிக்கடி கூறுவார்.
எங்கள் அம்மாமார்களுக்குத் தெரியும் வெந்து கொண்டிருக்கும் தோசையை எப்போது மறுபக்கம் திருப்ப வேண்டும் என்று. அதே போல் நாங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை எப்போது எடுக்க வேண்டும் என்று கூறுவார். அது ஒரு கலை என்பார் சௌமியமூர்த்தி. 
இன்று எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கக் காலம் கனிந்து வந்து கொண்டிருக்கின்றது. ஜெனிவாத் தீர்மானமானது சகல உலகத்தையும் ஒரு சில காலத்திற்கு எம் மீது கரிசனை கொள்ள வைக்கும். அதற்கிடையில் இங்கு நடப்பவற்றை எல்லாம் நாங்கள் பட்டியலிட்டு வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டியிருக்கின்றது.
நேற்றுத்தான் இவை பற்றியெல்லாம் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க எமது கட்சியினால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எம்மிடையே நடந்துள்ளதையும், நடப்பவற்றையும் நான்கு தலையங்கங்களின் கீழ் நாங்கள் அடையாளம்  காணலாம்.(01)  2009ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற அனர்த்தங்கள். இவை பற்றி ஐக்கியநாடுகள் நிறுவனம் ஆராயவுள்ளது. ஆனால் அவர்கள் நடத்தும் விசாரணைகளுக்கு நாங்கள் எம்மாலான விபரங்களையும், தரவுகளையும், விளக்கங்களையும் கொடுக்க வேண்டும். அதைக் கொடுக்க அரசாங்கம் சகல விதங்களிலும் முட்டுக்கட்டையாக இருக்கும். அதையும் மீறி உரிய சத்தியப் பத்திரங்கள், ஆவணங்கள், சாட்சியம் ஆகியன அளிக்கப்பட வேண்டியது எமது முதலாவது கடப்பாடு. 
(02) தற்போது எம்மிடையே நிலைபெற்றிருக்கும் ஆயுதப்படையினர் எந்த அளவுக்கு எம் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றார்கள்; எவ்வாறு எமது வாழ்வாதாரங்களை முடக்கி வைத்துள்ளார்கள், காணி, கடல் போன்றவற்றில் எவ்வாறு அவர்களின் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது, அவர்கள் கையேற்றிருக்கும் ஏக்கர் காணி எவ்வளவு, அவற்றில் எத்தனை ஏக்கர் காணிகளை அவர்கள் தம் கைவசப்படுத்தி உரிமைப் பத்திரங்களைக் கோருகின்றார்கள், எதற்காக அவர்கள் தொடர்ந்து இங்கிருந்து வருகின்றார்கள் போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டு கணணியில் பதிவு செய்ய வேண்டும். 
(03) வடமாகாணசபையை அரசாங்கம் எவ்வாறு முடக்கி வருகின்றது என்பது. 
(04) அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த ஏன் அரசாங்கம் தயங்குகின்றது? அவர்களின் தூர நோக்கு என்ன, இது திடமானதாக இன அழிப்பை நோக்கியே செல்கின்றதா அப்படியானால் சர்வதேச உலகம் இதனைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றித் திடமான தரவுகளுடன் உறுதியான ஆவணங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.போதுமான விபரங்கள், தரவுகள் அடங்கியவாறான ஆவணங்கள் அடுத்த சில மாதங்களினுள் சர்வதேச உலகின் கவனத்திற்குக் கொண்டு வரப்;பட்டால், விசாரணைக்கான விபரங்கள் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களிடம் விரைவில் பாரப்படுத்தப்பட்டால் எமது உள்ளூர் நடவடிக்கைகளில் நாம் உடனே இறங்கலாம். 
இராணுவத்தை ஒரு போதும் வடமாகாணத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறுமாப்பாகக் கூறியதாகப் பத்திரிகை வாயிலாக அறிந்தேன். 
முதலாவது எமது ஜனாதிபதியின் இன்றையதான ஜனாதிபதி வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒரு கேள்விக்குறி. இரண்டாவது அவரின் எண்ணங்களைக் கொண்டவாறே இனி வரும் அரசாங்கத்தினர் தொடர்ந்தும் பதவியில் இருப்பர் என்பது என்ன நிச்சயம்? 

ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் இருந்தார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்பேர்ப்பட்ட சவாலான கருத்துக்களை ஏன் அவர் முன் மொழிகின்றார் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன். 
இந்திய அமைதிப்படை இங்கு வந்த போது ஒரு இந்தியப் படையதிகாரி என் நண்பரிடம் பின்வருமாறு கூறினாராம். நாங்கள் இன்னும் ஒரு நூறு வருடங்களுக்கேனும் இங்கிருந்து வெளியேறமாட்டோம்என்று சொன்னாராம்.ஆனால் அடுத்த வருடமே இங்கிருந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் முகங் கொடுக்க வேண்டி வந்தது. வி.பீ.சிங் அவர்கள் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றதும் 100 வருடம் இங்கு வாழவிருந்த இந்தியச் சிப்பாய்கள் கப்பல் ஏற வேண்டி வந்தது. 
ஆகவே எமது ஜனாதிபதியோ, இராணுவமோ தாம் நினைத்தவாறு எமது மண்ணில் நிரந்தரமாக அவர்கள் இருந்துவிட முடியாது. அதற்கு இயற்கை இடமளிக்காது. இறைத்தன்மை இடமளிக்காது. ஏன் இந்தியப் பாதுகாப்புக் கரிசனைகள் கூட இடமளிக்கா. எமக்கு வேண்டாத இராணுவம் விரைவில் எம் மண்ணை விட்டு வெளியேற வேண்டும். 
சர்வதேச விதிகளுக்கு அமைய ஆங்காங்கே மத்திய அரசாங்கம் சார்பான அமைதிப்படைகளை நிலை நிறுத்த நாங்கள் இடமளிக்கலாம். ஆனால் தம் எண்ணத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புப் படையாக எமது நாட்டுப் படையினர் இங்கு இருக்கப் போவதை நாம் இடமளிக்கப் போவதில்லை. 
அன்று வெள்ளையனே! வெளியேறுஎன்று உரக்கக் கூறிய எம் மக்கள் குரல் இனி இராணுவத்தினரும், அரசாங்கத்தினரும் கேட்கும் படியாக படையினரே வெளியேறுங்கள்என்று ஒலிக்கப் போகின்றது. 
எனவே இந்த மே தின விழாவானது எமது அடிப்படை உரிமைகளைத் தட்டிக் கேட்க வழி சமைப்பதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன். இராணுவத்தினர் எமது சகோதரர்கள். சிங்களச் சகோதரர்கள். ஆனால் அவர்களுக்கென்று வாழ இடமுண்டு. பயிர் செய்ய நிலமுண்டு. மீன் பிடிக்கக் கடல் உண்டு. காத்து நிற்கப் பெண்கள் உண்டு. 
இங்கிருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கும் இல்லை. அவர்களை எம் தோள் மேல் தூக்கிச் செல்ல எமக்குக் கடப்பாடு எதுவும் இல்லை. இதைப் புரிந்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்றார்.
www.tamilwin.com

No comments: