Sunday, April 20, 2014

Star Vijay Night in London - ஈழத்தமிழர்கள் இவர்களை ஆதரிக்க வேண்டுமா?

தமிழ்நாட்டு நடிகர் நடிகைகளையும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத தமிங்கிலிஸ் பேசும் நடிகர்களையும், பாடகர்களையும் அழைத்து அவர்களின் கூத்துக்களை அரங்கேற்றி, அவர்களிடம் ஈழத்தமிழர்கள் பாடுபட்டுழைத்த பணத்தைக் கொண்டு போய்க் கொட்டுவதால் ஈழத்தமிழர்களுக்கு என்ன பயன்? ஏற்கனவே தமிழைப் பேச மறந்து அல்லது தமிழைப் படிக்க நேரமில்லாமல், தமிழ்க் கலாச்சாரத்தையும் நாளடைவில் இழந்து கொண்டிருக்கும்  இருக்கும், ஈழத் தமிழர்களின் இளஞ்சமுதாயத்துக்கு, ஆங்கில மோகம் கொண்ட, தமிங்கிலிஸ் பேசும் தமிழ்நாட்டு இளம் பாடகர்கள், நடிகர்களினால் என்ன லாபம்?  உண்மையிலேயே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைச் சுரண்டும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு ஈழத்தமிழர்களுக்குத் தேவையா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.


பார்ப்பனர்கள் ஈழத் தமிழர்களை ஆதரிப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம், ஆனால் பல தமிழ்நாட்டுத் தமிழர்களும், தமிழர் என்ற போர்வையில் உலவும் வந்தேறி வடுகர்களும் உண்மையிலேயே ஈழத்தமிழர்களை வெறுப்பவர்கள் என்பதை, நாங்கள் வலைப்பதிவுகளிலேயே காணலாம். நேற்றுக் கூட தமிழ்நாட்டுச் சிங்களச் சொம்புதூக்கி ஒன்று எனது வலைப்பதிவில்,

சிங்களவனிடம் வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு கக்கியதால் தான், ஒருவர் முள்ளிவாக்காலில் மல்லாங்கப்படுத்துக் கொண்டு காட்சியளித்தார். அல்லவா... அய்யோ அய்யோ.. உடுக்க கோவணமே இல்லையாம், உடுத்தவன் வேட்டியில் பத்து ஓட்டை என ஓங்கிச் சிரித்தானாம்.. ஹிஹி”   என்று பின்னூட்டமிட்டிருந்தது,

சுப்பர் சிங்கரில் பங்கு பற்றுகிறவர்களில் பாதிப்பேருக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியும் தெரியாது, அவர்களுக்கு அதில் எந்தவித அக்கறையுமில்லை. அவர்களில் அநேகமானோர் தமிழர்களும் அல்ல. அவர்களில் பலருக்கு தமிழ் பேசக் கூடத் தெரியாது, அப்படித் தெரிந்தாலும், வளர்ந்தவர்கள் கூட, வேண்டுமென்றே ஆங்கிலச் சொற்களைக் கலந்து தமிங்கிலிஸ் தான் பேசுவார்கள் என்பதை நாங்கள் பார்க்கலாம். 


ஐரோப்பாவுக்கும், கனடா போன்ற நாடுகளுக்கும் பல தமிழ்நாட்டு நடிக, நடிகைகளும், பாடகர்களும் அடிக்கடி ஈழத்தமிழர்களைச் சுரண்ட வருகிறார்கள். அதில் எத்தனைபேர் உண்மையான தமிழர்கள்?  ஆனால் அப்படி வந்த  எவராவது தமிழ்நாட்டில் நடைபெற்ற   ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் இதுவரை பங்குபற்றியதுண்டா? ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் குரல் கொடுப்பவர்கள், போராட்டம் நடத்துகிறவர்கள் தமிழ்நாட்டு மேட்டுக் குடியினரோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகிறவர்களோ தமிழரல்லாத திராவிடர்களோ  அல்ல. தமிழ்த் தலித்துகளும், கிராமப்புறங்களிலிருந்து சென்னைக்கு வந்து, தமிழ்நாட்டிலுள்ள சாதியடிப்படையிலான தலித் ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் ஏழை மாணவர்களும், பெரியளவில் ஆதரவற்ற, தனித்து நின்றால் கட்டுப்பணத்தைக் கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒரு சில அரசியல் கட்சியிலுள்ள வசதியற்ற தமிழ் இளைஞர்களும் தான். ஆனால் அவர்கள் எப்படி, என்ன தான் போராட்டங்கள் நடத்தினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களால் ஈழத்தமிழர்களுக்கு உதவ முடியாதென்பது தான் உண்மை.


தமிழ்நாட்டுத் தமிழர்களால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற முடியாது, இந்திய அரசு தமிழ்நாட்டின் உணர்வுகளை, விருப்பு வெறுப்புகளை கணக்கிலெடுப்பதுமில்லை. பாஜக ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமாகப் போகலாம். உதாரணமாக, கனடாவில் வாழும் 200,000 ஈழத்தமிழர்களால் கனடாவை இலங்கைக்கு எதிராகப் பேச வைக்க முடிந்தது ஆனால் இந்தியாவின் ஏழு கோடித்தமிழர்களால், இந்தியாவை இலங்கைக்கெதிராக கையொப்பமிட வைக்க முடியவில்லை, அதனால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பரிதாப நிலையை ஈழத்தமிழர்கள்  புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் கூறியது போல் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது." தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார பலம் தமிழர்களின் கைகளில் இல்லை. தமிழ்நாட்டுப் பாடகர்களையும், நடிகர்களையும் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரவழைத்து பார்ட்டி வைத்தால், எங்களின் காசைச் செலவழித்து அவர்களுக்கு ஊரைச்சுற்றிக்  சுற்றிக் காட்டினால், அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்குத் திரும்பிப் போய், எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கூட சில ஈழத்தமிழர்கள் நினைப்பதுண்டு. அப்படி எதுவுமே நடப்பதில்லை என்பது தான் உண்மை.இப்படியான கலைநிகழ்ச்ச்சிகளைப் பற்றி ஈழத்தமிழர்களின் தினக்கதிர் எனும் இணையத்தளமும் கூட தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. அதைக் கீழே காணலாம்.

லண்டனில் ஸ்டார் விஜய் நைட் -தேச விரோதிகளின் பண்பாட்டு அழிப்பு –  சுதர்சன்Published on April 18, 2014-9:19 am   ·  சில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். தமிழ்த் தேசியவியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்வின் லங்காசிறீ இணையங்களும் இதற்காகக் குமுறி வெடித்துக் கண்ணீர்வடித்தன. தென் இந்தியாவில் திரைப்படம் பிடித்து தோற்றுப்போன சில இயக்குனர்களின் அறிக்கைகள் நேர்காணல்களோடு இந்த நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தினால் ஈழப் போராட்டம் கறைபடிந்து கந்தலாகிவிடும் எனக் கண்ணீர் வடித்தார்கள். 
இன்று புலம் பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுகொண்டவர்களை இலங்கை அரசும் இன்டர்போல் நிறுவனமும் இணைந்து தேடிக்கொண்டிருக்க, இதே சுப்பர் சிங்கர் லண்டனில் பிரமாண்ட மேடையில் பணச் சுரண்டலுக்காக நடத்தப்படுகிறது.எதிர்வரும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் O2 Arena மாபெரும் பிரமாண்டமான மேடையில் லங்காசிறீ தமிழ்வின் ஆதரவோடு சினிமா நட்சத்திரங்களோடு சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களும் கலந்துகொள்ளும் களியாட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவில் அதிகம் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் (2013) நடத்தப்பட்ட மாநிலம் தமிழ் நாடு என்று புள்ளிவிபரம் கூறுகிறது. அங்கு போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று உணரத் தலைப்பட்டுள்ள மக்கள் கூட்டம் சினிமா மாயையை உடைக்கத் தயாராகி வருவதையே இது சுட்டி நிற்கின்றது. சனத்தொகையின் அரைவாசி வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் ஒரு தேசத்தை சினிமா மாயைக்குள் புதைத்து வைத்திருக்கும் கலாச்சாரம் மக்களின் அறிவு சார்ந்த அத்தனையையும் தின்று தொலைக்கிறது. அங்கெல்லாம் மக்களும் சமூகத்தின் முன்னேறிய பிரிவினரும் அதனை உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். 
இதே கலாச்சாரச் சீர்குலைவு லண்டனில் புலம்பெயர் தமிழர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கை அரச படைகளும், இந்திய உளவுத்துறையும் இணைந்து ஏற்படுத்த முடியாத அப்பட்டமான அழிவுகளை இக்கலாச்சார சீர்குலைப்பு ஏற்படுத்தும் வலிமை கொண்டது. அரைத் தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தன்னைத் தமிழ்க் கலாச்சாரம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு புலம்பெயர் குடும்பத்தினதும் வரவேற்பறையில் வந்து நிற்கிறது. 
அரைகுறை ஆங்கிலத்தின் இடையே தமிழ் வார்த்தைகளை இணைத்துக்கொள்வதைத் தமிழ் என்று தமது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பெற்றோர் இதன் பின்னணியிலுள்ள கலாச்சாரச் சிதைப்பைப்பற்றி துயர்கொள்வதில்லை. 
அண்மையில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் சிறுவர்களுக்கான சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 12வயது குழந்தையிடம் நீ யாரை லவ் பண்ணுகிறாய் என்று நடுவர் கேட்கிறார். பின்னர் தன்னை லவ் பண்ண மாட்டாயா என்கிறார். இன்னுமொரு நிகழ்சியில் சிறுமி பாடிய பாலியல் வக்கிரம் கலந்த பாடலைக் கேட்ட நடுவர் உணர்ச்சி போதவில்லை எனக் குறைப்பட்டுக்கொள்கிறார். இவ்வாறான ரியாலிட்டி ஷோ போன்றவற்றின் ஊடாக பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி அதனைக் கற்பனை கலந்த உலகத்திற்கு அழைத்துச் சென்று காசாக்கிக்கொள்வது தான் தொலைக்காட்சிகளின் வியாபாரத் தந்திரம். 
ஐரோப்பியத் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் வெற்றிபெறுகின்ற ஆண் ஒருவர் அதே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அறிமுகமில்லாத பெண்ணுடன் விடுமுறைக்குச் செல்லும் பரிசு வழங்கப்படுகின்றது. இவ்வாறான கலாச்சாரத்தை நோக்கி தமிழ் நாட்டின் கனவுலகை அழைத்துச் செல்லும் மற்றொரு நிகழ்ச்சியே சுப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் திவாகர் என்பவர் தான் கலந்துகொள்ளும் ரோட் ஷோவில் நிறைய பிகர்ஸ் இருப்பார்கள் என்பதால் மகிழ்ச்சியடைவதாகச் சொல்கிறார். வன்னிப் படுகொலைகள் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைவியல்லை. நாளந்தம் கொலை, கொள்ளை, கைது, நிலப்பறிப்பு என்று இனச்சுத்திகரிப்பு அதன் உச்சத்தை அடைந்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குப் போட்டுக்கொடுத்து ராஜபக்சவைத் தூக்கில் போடப்போகிறோம் என்று மக்களை ஏமாற்றிய அதே கும்பல், இப்போது தென்னிந்திய பண்பாட்டுச் சீரழிவை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறது. 
உலகின் பிரபலமான காப்ரட் கூத்தாடிகள் பாட்டுப்பாடியும், நடனமாடியும் மக்களிடமிருந்து மில்லியன்களை அபகரித்துக்கொள்ளும் O2 Arena மேடையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. லைக்கா நிறுவனத்தின் நன்கொடையில் இயங்கும் பிரித்தானியப் பல்கலைக்கழக்த் தமிழ் மாணவர்களின் ஒன்றியம் நடத்தும் தென்னிந்தியச் சினிமாப் பாட்டிற்கு நடனமாடும் நிகழ்ச்சிகள் இந்த வருடம் இதே மேடையில் தான் நடைபெற்றது.
தென்னிந்திய சினிமாக் குப்பைகளை கொட்டுமிடமாக தமிழ்த் தேசிய வியாபாரிகளால் மாற்றப்பட்டுள்ள புலம்பெயர் கலாச்சார நிகழ்வுகள் சீரழிவின் எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கின்றது. ராஜபக்சவின் குடும்பத்தோடு வியாபாரம் நடத்தும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஐங்கரன், 2500 தமிழ்த் திரைப்படங்களை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்துச்சென்று கலாசார சேவை செய்ததாகக் கூறுகிறார். 
பிகர்களைப் பார்ப்பதற்காக லண்டன் வரும் கூத்தாடி திவாகர் போன்றோர், அதே பிகர்களின் முன்னைய சந்ததி அழிக்கப்பட்டு இரதம் ஆறாக ஓடியது என்பதைத் தெரிந்திருக்க நியாயமில்லை. இதே லங்காசிறீயின் இணையங்களில் தேடிப்பார்த்தால் போர்க்காலக் காணொளிகளையும் அவர்கள் கண்டுகொள்ளலாம்.
புலம் பெயர் நாடுகளில் குழந்தை கருவிலிருக்கும் போதே என்ன தொழில் செய்யவேண்டும், யாரிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அப்பாவிப் பெற்றோர்கள் தீர்மானித்துவிடுகிறார்கள். குழந்தை பிறந்ததுமே அறுக்கப்படுவதற்கான ஆட்டை வளர்ப்பது போன்றே வளர்க்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை விஜய் தொலைக்காட்சியில் பாட்டுப் பாடி வெற்றிபெற்று மில்லியனேராகும் பாடகன் தமது குழந்தைகளுக்கான ரோல் மொடல்! விஜய் தொலைக்காட்சி சொல்லித்தரும் சீர்குலைவு தமிழ்க் கலாச்சாரம்!! 
ஈழத் தமிழர்கள் யுத்தத்தோடு அடித்துச் செல்லப்பட்ட கலைகளையும், கலாசார விழுமியங்களையும் மீட்பதற்காகப் போராடுகிறார்கள். அங்கிருந்து தரம் மிக்க இசையும், கலையும் மண்ணின் வாசனையோடு ஆங்காங்கே நெருடிச் செல்வதைக் காணலாம். இக் கலைகளை வளர்ப்பதற்கும், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் போர்க்குரலாக அவற்றை மாற்றுவதற்குமான அத்தனை வலுவும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஜனநாயக முற்போக்குக் கூறுகளுக்கு உண்டு. அவர்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத தமிழ்த் தேசிய வியாபாரிகள்இன்று தென்னிந்தியாவிலிருந்து அந்த நாட்டையே சீரழிக்கும் அவமானத்தை புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறார்கள். 
ராஜபக்ச நடத்தும் கலாச்சார ஒடுக்குமுறைக்கும், தமிழ்த் தேசியத்தின் பேரால் இப் பிழைப்புவாதிகள் நடத்தும் கலாச்சார சிதைப்பிற்கும் எந்த வேறுபாடுகளும் கிடையாது. அயோக்கியர்கள் நடத்தும் தமிழ்த் தேசிய வியாபாரத்தைக் கண்டிப்பதற்கும், இந்த நிகழ்ச்சிகளிலிருந்து மக்களை விலகியிருக்கக் கோருவதற்கும் ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் தேசியக் கலைகளை வளர்ப்பதற்கும் புலம்பெயர் நாடுகளில் அரசியல் இயக்கங்க்கள் இல்லை. தேசியத்தை மூலதனமாக்கும் பிழைப்புவாதிகளின் கூடாரமே புலம் பெயர் அரசியல் என்பதற்கு வார இறுதியில் இல் நடைபெறும் விஜய் ஸ்டார் நைட் சாட்சி.


No comments: