Friday, April 18, 2014

ஈழத்தமிழர்கள் கொண்டாடும் பூப்புனித (Puberty Ceremonies) நீராட்டு விழாக்கள்!
பூப்புனித நீராட்டு விழாக்கள் அல்லது சாமத்தியச் சடங்கு என்றழைக்கப்படும், தமது பெண்குழந்தைகள் பருவமடைந்ததை மற்றவர்களுக்கு அறிவித்து அதைக் கொண்டாடும் வழக்கம் தமிழ்நாட்டிலும் உள்ளது என்பதை சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த வழக்கம் ஈழத்தமிழர்களின் வழக்கம் போன்று பெரிய கொண்டாட்டமா என்பது எனக்குத் தெரியாது. அந்த விழாவைப் பற்றி மற்றவர்கள் விமர்சிப்பதும் குறைவு, ஆனால் ஒரு ஈழத்தமிழ் இளம்பெண், பூப்புனித நீராட்டு விழா பற்றி  தனது கருத்தை ‘What is a Puberty Ceremony என்ற தலைப்பில் ஒரு காணொளியில் வெளியிட்டுள்ளார் (மேலேயுள்ள காணொளி).

பூப்புனித நீராட்டு விழாக்களைப் பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், அப்படியான ‘Coming of Age சடங்குகள் அநேகமான பூர்வீக குடிகளிடம் உண்டு, அதனால் தமிழர்களிடமும் அந்த வழக்கம் காணப்படுவது அது தமிழர்களின் தொன்மையின் அடையாளமாக் கூடக் கொள்ளலாம். இலங்கையை விட்டு, நாடு விட்டு, நாடு சென்றாலும், இப்படியான சடங்குகள் தான், நாம் தமிழர்கள் என்பதை, நாங்கள் எமது கலாச்சார அடையாளங்களை இன்னும் இழந்து விடவில்லை என்ற மனத்திருப்தியை, மகிழ்ச்சியை ஈழத்தமிழ்ப் பெற்றோர்களுக்குக் கொடுத்தாலும் கூட, சாமத்தியச் சடங்குகள் இன்று புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில், ஒவ்வொருவரின் அந்தஸ்தையும், அவர்களிடமுள்ள பணத்தையும், வசதிகளையும்  மற்றவர்களுக்குக் காட்டும் ஆடம்பர விழாக்களாக உருமாறியுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

வெறும் இயற்கையாக மனித உடலில் ஏற்படும் வளர்ச்சியை அல்லது  மாற்றத்தைக் கூடவா, விழாவாக்கி எல்லோருக்கும் தெரிவிப்பார்கள் என்று சிலர் முகத்தைச் சுழித்தாலும் கூட, பூப்புனித நீராட்டு விழாக்களில் பங்குபற்றுவோர்கள் அப்படி ஏதும் அருவருப்பை அல்லது வெறுப்பைக் காட்டுவதாகத் தெரியவில்லை. அந்த விழாக்கள்  எல்லாம், சொந்த பந்தங்களுடன் இணைந்து, மேல்நாட்டு ஆடையணிகளைக் களைந்தெறிந்து விட்டு, சேலை, வேட்டி போன்ற கீழைத்தேய ஆடைகளை அணிவதும், பெண்கள் தம்மிடமுள்ள நகைகளைக் காட்டிக் கொள்ளும், மகிழ்ச்சியான நிகழச்சியாக மட்டுமே காட்சியளிக்கின்றன.  சில சடங்குகளும் சம்பிரதாயங்களும், பலவித பொருட்களால், பலகாரங்கள், நெல், வேப்பமிலை போன்ற பொருட்களால் ஆரத்தி எடுப்பது போன்ற கிராமப்புற பழமையான  சடங்குகளை, அவற்றின் பொருளும், காரணமும்  தெரியாதவர்கள் கூட, எந்த வித மாற்றமுமில்லாமல், ஈழத்தில் எப்படிக் கடைப்பிடிக்கப்பட்டனவோ அது போன்றே ஐரோப்பிய, அமெரிக்கா, கனடா எங்கிருந்தாலும், இடம் மாறினாலும், சடங்குகள் மாறாமல் கடைப்பிடிக்கப்படுவதைக்  காணலாம். 

ஈழத்தில் பூப்புனித நீராட்டு விழா மதங்களுக்கு அப்பாற்பட்டது  இந்துக்கள் மட்டுமன்றி கிறித்தவ ஈழத்தமிழர்களும் தமது பெண்குழந்தைகளுக்கு சாமத்தியச் சடங்கை, இந்துக்கள் போலவே, ஆலாத்துதல் (ஆரத்தி)போன்ற சடங்குகளைச் செய்து ஆடம்பரமாகச் கொண்டாடுவார்கள். இது தமிழ்ப்பண்பாட்டின் அங்கமாகக் கருதப்படுகிறதே தவிர, இந்துமதத்தின் அங்கமாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் சில கிறித்தவர்களிடம் காணப்படும் மதவெறி, ஈழத்தமிழ்க்கிறித்தவர்களிடம் கிடையாது. பெண்கள் போட்டு வைப்பது, தாலி அணிவது, இப்படியான சடங்குகள் செய்வது எல்லாம் தமிழ்ப்பாரம்பரியமாக மட்டுமே கருதப்படுகின்றன. அந்த தமிழ்ப்பாரம்பரியத்தில் தமக்குள்ள உரிமையை ஈழத்தமிழ்க் கிறித்தவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. 

தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் தாய்மாமன் சீர் என்றெல்லாம் காட்டுவார்கள். அந்தச் சீரைச் செய்ய அனுமதிக்காது விட்டால், தாய்மாமன் அரிவாளுடன் வந்து நிற்பதையும் காட்டுவார்கள். தமிழ்நாட்டைப் போன்றே ஈழத்தமிழர்கள் மத்தியிலும் திருமணம், பூப்புனித நீராட்டு போன்ற சடங்குகளில் தாய் மாமனுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால் தமிழ்நாட்டுத் தாய்மாமனுக்கும், ஈழத்துத் தாய்மாமனுக்கும் பாரிய வேறுபாடுகளும் உண்டு. ஈழத்தமிழர்களின் பண்பாட்டில், தாய்மாமன் என்பவர் தந்தைக்குச் சமமானவர். சொந்த அக்காவின் பெண்ணை திருமணம் செய்து கொள்வதென்பது, ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் மிகவும் அருவருப்பான செயல். ஈழத்தமிழர்களின் பண்பாட்டில் ஒரு பெண் தனது தாய்மாமனின் மகனைத் தான் திருமணம் செய்யலாமே தவிர, தாய் மாமனை அல்ல. அது தான் ஈழத்தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமுள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்றாகும். ஈழத்தமிழர்களின்  பூப்புனித நீராட்டு விழாக்களில் தாய்மாமன் முதலில் தேங்காய் உடைத்து, விளக்கேற்றி, தனது மருமகளின் தலையில் முதலில் பாலறுகு வைப்பார். அவரது காலில் விழுந்து அந்தச் சிறுமி ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வார்.

கீழேயுள்ள காணொளி பாரிசில் நடந்த ஈழத்தமிழர்களின் பூப்புனித நீராட்டுச் சடங்கு, அது இணையத்தில் சுட்டது. இதை விட மிகவும் ஆடம்பரமாக இந்த விழாவைக் கொண்டாடுவது, ஒரு வியாதியாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் பரவி வருகிறது. இப்படியான கலாச்சார  சடங்குகளுக்காகத் தான் பாடு பட்டுழைத்த பணத்தைக் கொண்டு போய் சென்னை தியாகராயர் நகரிலுள்ள கடைகளில் லட்சம், லட்சமாகக் கொட்டுகிறார்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள். இதைப் போல் பல காணொளிகளை YOUTUBE இல் காணலாம்.

No comments: