Thursday, April 24, 2014

தலித், முஸ்லீம் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தும் இந்திய ஆசிரியர்கள் - HRW அறிக்கை.தலித்துகள், முஸ்லீம்கள், ஆதிவாசிக் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர் இந்தியாவிலுள்ள பாடசாலை  நிர்வாகிகள் என்கிறது மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் Human Rights Watch.

இந்திய வலைப்பதிவாளர்கள் பலர் 1830 இல், யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிக் கொடுமைகளைப் பற்றி பலத்த விவாதங்களையும், ஆராய்வுகளையும் நடத்திக் கொண்டிருக்கும் போது 21ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தலித்துகள் செருப்பணிந்தால், அவர்களுக்கு மலம் தீற்றுகிறார்கள் ஆதிக்க சாதியினர். கண்டதேவியில் கோயிலுக்கு வெளியில் கேட்பாரற்று நிற்கும் தேர் கூட அசைய முடியவில்லை, ஏனென்றால் ஆடு, மாடு, நாய், நரி எல்லாம் கூட நக்கும் தேர் வடத்தை ஒடுக்கப்பட்ட ஒரு தமிழன் தொடக் கூடாதாம். அவை ஒரு புறமிருக்க, இந்திய 'வல்லரசின்' உத்தரப் பிரதேசத்தில் என்ன நடைபெறுகிறதென்று பார்ப்போம். 

"They Say We’re Dirty"

இலங்கையில் பாலர் வகுப்பிலிருந்து பல்கலக்கழகம் வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்கி  அறுபதாண்டுகளுக்கு மேலாகி விட்டது ஆனால் இந்தியாவில் 6 தொடக்கம்  14 வயது வரையிலான குழந்தைகளைக்குக் கூட  கட்டாய ஆரம்பக் கல்வி கொடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு வெறும் நான்கு வருடங்கள் தான் ஆகின்றன. பாடசாலைகளில் சேரும்  6 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அரைவாசிப்பேர் அனேகமாக தமது ஆரம்பக் கல்வியைக் கூட முடிக்காமல், பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்கின்றனர். என்கிறது மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள 77 பக்கங்களைக் கொண்ட  "They Say We’re Dirty" Denying an Education to India’s Marginalized என்ற அறிக்கை தலித், முஸ்லீம், ஆதிவாசி மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்தினரால், சாதியடிப்படையிலும், சமுதாயத்தில் ஓடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும்  பாரபட்சமாக நடத்துவதாகத் தெரிவிக்கிறது. அத்தகைய வேறுபாடுகளுடன், அவர்களை நடத்துவதால் மனமுடைந்து போகும் அந்த இளம் சிறுவர், சிறுமிகள், அவர்களுக்கு அந்தப் பள்ளிக்கூடங்களில் வரவேற்பு இல்லை அல்லது அவர்கள் வேண்டாதவர்கள் என்பதாக உணர்வதால், பள்ளிக்கு போவதையே அவர்கள் தவிர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.    

தலித், முஸ்லீம், ஆதிவாசி மாணவர்களை மட்டும் பாடசாலையின் கழிப்பறைகளை சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தும் ஆசிரியர்கள் உயர்ந்த சாதி மாணவர்கள் அப்படி எதுவும் செய்யுமாறு கேட்பதில்லையாம். எல்லா மாணவர்களும் வேறுபாடு எதுவுமின்றி சமத்துவமாக நடத்தப்பட வேண்டுமென்பது  கல்வியுரிமைச் சட்டத்தின் அடிப்படையாக இருந்தும் கூட, அந்தச் சட்டத்தை மீறுகிறவர்களுக்கு தண்டனை எதையும் அந்தச் சட்டம் வழங்கவில்லை.

இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் மிகவும் மோசமான சாதிப்பாகுபாடுகள் இருந்தன, இன்றும் சாதி வெறியின் தடங்கள் ஈழத்தமிழர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவற்றையும் அறவேயொழிக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் கடமை. புலம்பெயர்ந்த நாடுகளில், ஈழத்தமிழர்களில் இரணடாவது, மூன்றாவது தலைமுறையினரிடம் சாதிப்பாகுபாடுகள் முற்றாக ஒழிந்து வருகின்றன. அவர்களில் பெரும்பாலானோருக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது. அத்துடன் தமிழ்நாட்டில் இன்றும் காணப்படும் அகமண முறைகளை, ஈழத்தமிழர்கள் எப்பொழுதோ விட்டொழித்து விட்டனர். புலம் பெயர்ந்த நாடுகளில் சாதியடிப்படையிலான பொருளாதாரப் பாகுபாடுகள் காணப்படாததால், இலங்கையில் தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்பட்ட பலர், ஆதிக்க சாதியினரை விட, கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறுவதும் ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதிப்பாகுபாடு இல்லாமல் போவதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் எப்படியான சாதிப்பாகுபாடுகள் ஈழத் தமிழர் மத்தியில் இருந்தாலும், அவற்றில் எதையுமே தமிழ்நாட்டில் நடைபெறும் சாதிக் கொடுமைகளுடன் ஒப்பிட முடியாது.  தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது, இலங்கைத் தமிழர் மத்தியில் சாதி இல்லையென்றே கூறலாம்.

உதாரணமாக, ஒருவனைக் காதலித்து ஓடிப் போய்க் குடும்பம் நடத்திய பெண்ணைக்  கூட்டி வந்து, அவர்களைப் பிரித்து, அவர்களில் தாழ்த்தப்பட்டவனை கொலை செய்வதும் அல்லது தற்கொலை செய்யுமளவுக்குத் தூண்டுவதும், அதற்காக ஊரை எரிப்பதும், செருப்பணிந்து கொண்டார்கள் என்பதற்காக மலம் தீற்றுவதும், வெட்டுவதும், கொல்லுவதும், சாதிக்கொரு அரசியல் கட்சி அமைத்துக் கொள்வதும், ஆளுக்கொரு புராணக்கதையை இயற்றி வைத்துக் கொண்டு, நான் சருவச் சட்டியிலிருந்து வந்தேன், நீ சாணிச்சட்டியிலிருந்து வந்தாய், அதனால், சாணிச் சட்டியா, சருவச்சட்டியா பெரியது என்று விவாதிப்பதும், சாதிக்கொரு தலைவர்கள், தடுக்கி விழும் இடமெல்லாம் அவர்களுக்குச் சிலைகள்(சிலைகள் கட்டின சிமெண்டைப் பயன்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கோழிக்கூடு போன்ற குடிசைகளை திருத்திக் கட்டியிருக்கலாம்) எல்லாம்  இலங்கைத் தமிழர்களிடம் கிடையாது. அதனால், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் சாதி வெறி நாலு திசையிலும் நாற்றமடிக்கும் போது. அதைப் பற்றிப் பேசாமல்  1830 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைப் பார்க்க சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது. :-)


2 comments:

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

நம்பள்கி said...

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று புளுகும் சனாதனவாதி பொய்யர்கள்! அந்த குழந்தைகள் டீச்சர் எங்களுக்கு பாடம் எடுப்பதில்லை என்று சொல்லும் போது...கண்கள் கலங்கின---

கண்கள் கலங்கின---ஆம்! இந்தியா ஒளிருவதினாலும் இந்தியா வல்லரசு ஆனதாலும் வந்த ஆனந்த கண்ணீர்..!