Thursday, April 24, 2014

தலித், முஸ்லீம் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தும் இந்திய ஆசிரியர்கள் - HRW அறிக்கை.தலித்துகள், முஸ்லீம்கள், ஆதிவாசிக் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர் இந்தியாவிலுள்ள பாடசாலை  நிர்வாகிகள் என்கிறது மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் Human Rights Watch.

இந்திய வலைப்பதிவாளர்கள் பலர் 1830 இல், யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிக் கொடுமைகளைப் பற்றி பலத்த விவாதங்களையும், ஆராய்வுகளையும் நடத்திக் கொண்டிருக்கும் போது 21ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தலித்துகள் செருப்பணிந்தால், அவர்களுக்கு மலம் தீற்றுகிறார்கள் ஆதிக்க சாதியினர். கண்டதேவியில் கோயிலுக்கு வெளியில் கேட்பாரற்று நிற்கும் தேர் கூட அசைய முடியவில்லை, ஏனென்றால் ஆடு, மாடு, நாய், நரி எல்லாம் கூட நக்கும் தேர் வடத்தை ஒடுக்கப்பட்ட ஒரு தமிழன் தொடக் கூடாதாம். அவை ஒரு புறமிருக்க, இந்திய 'வல்லரசின்' உத்தரப் பிரதேசத்தில் என்ன நடைபெறுகிறதென்று பார்ப்போம். 

"They Say We’re Dirty"

இலங்கையில் பாலர் வகுப்பிலிருந்து பல்கலக்கழகம் வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்கி  அறுபதாண்டுகளுக்கு மேலாகி விட்டது ஆனால் இந்தியாவில் 6 தொடக்கம்  14 வயது வரையிலான குழந்தைகளைக்குக் கூட  கட்டாய ஆரம்பக் கல்வி கொடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு வெறும் நான்கு வருடங்கள் தான் ஆகின்றன. பாடசாலைகளில் சேரும்  6 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அரைவாசிப்பேர் அனேகமாக தமது ஆரம்பக் கல்வியைக் கூட முடிக்காமல், பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்கின்றனர். என்கிறது மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள 77 பக்கங்களைக் கொண்ட  "They Say We’re Dirty" Denying an Education to India’s Marginalized என்ற அறிக்கை தலித், முஸ்லீம், ஆதிவாசி மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்தினரால், சாதியடிப்படையிலும், சமுதாயத்தில் ஓடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும்  பாரபட்சமாக நடத்துவதாகத் தெரிவிக்கிறது. அத்தகைய வேறுபாடுகளுடன், அவர்களை நடத்துவதால் மனமுடைந்து போகும் அந்த இளம் சிறுவர், சிறுமிகள், அவர்களுக்கு அந்தப் பள்ளிக்கூடங்களில் வரவேற்பு இல்லை அல்லது அவர்கள் வேண்டாதவர்கள் என்பதாக உணர்வதால், பள்ளிக்கு போவதையே அவர்கள் தவிர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.    

தலித், முஸ்லீம், ஆதிவாசி மாணவர்களை மட்டும் பாடசாலையின் கழிப்பறைகளை சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தும் ஆசிரியர்கள் உயர்ந்த சாதி மாணவர்கள் அப்படி எதுவும் செய்யுமாறு கேட்பதில்லையாம். எல்லா மாணவர்களும் வேறுபாடு எதுவுமின்றி சமத்துவமாக நடத்தப்பட வேண்டுமென்பது  கல்வியுரிமைச் சட்டத்தின் அடிப்படையாக இருந்தும் கூட, அந்தச் சட்டத்தை மீறுகிறவர்களுக்கு தண்டனை எதையும் அந்தச் சட்டம் வழங்கவில்லை.

இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் மிகவும் மோசமான சாதிப்பாகுபாடுகள் இருந்தன, இன்றும் சாதி வெறியின் தடங்கள் ஈழத்தமிழர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவற்றையும் அறவேயொழிக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் கடமை. புலம்பெயர்ந்த நாடுகளில், ஈழத்தமிழர்களில் இரணடாவது, மூன்றாவது தலைமுறையினரிடம் சாதிப்பாகுபாடுகள் முற்றாக ஒழிந்து வருகின்றன. அவர்களில் பெரும்பாலானோருக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது. அத்துடன் தமிழ்நாட்டில் இன்றும் காணப்படும் அகமண முறைகளை, ஈழத்தமிழர்கள் எப்பொழுதோ விட்டொழித்து விட்டனர். புலம் பெயர்ந்த நாடுகளில் சாதியடிப்படையிலான பொருளாதாரப் பாகுபாடுகள் காணப்படாததால், இலங்கையில் தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்பட்ட பலர், ஆதிக்க சாதியினரை விட, கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறுவதும் ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதிப்பாகுபாடு இல்லாமல் போவதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் எப்படியான சாதிப்பாகுபாடுகள் ஈழத் தமிழர் மத்தியில் இருந்தாலும், அவற்றில் எதையுமே தமிழ்நாட்டில் நடைபெறும் சாதிக் கொடுமைகளுடன் ஒப்பிட முடியாது.  தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது, இலங்கைத் தமிழர் மத்தியில் சாதி இல்லையென்றே கூறலாம்.

உதாரணமாக, ஒருவனைக் காதலித்து ஓடிப் போய்க் குடும்பம் நடத்திய பெண்ணைக்  கூட்டி வந்து, அவர்களைப் பிரித்து, அவர்களில் தாழ்த்தப்பட்டவனை கொலை செய்வதும் அல்லது தற்கொலை செய்யுமளவுக்குத் தூண்டுவதும், அதற்காக ஊரை எரிப்பதும், செருப்பணிந்து கொண்டார்கள் என்பதற்காக மலம் தீற்றுவதும், வெட்டுவதும், கொல்லுவதும், சாதிக்கொரு அரசியல் கட்சி அமைத்துக் கொள்வதும், ஆளுக்கொரு புராணக்கதையை இயற்றி வைத்துக் கொண்டு, நான் சருவச் சட்டியிலிருந்து வந்தேன், நீ சாணிச்சட்டியிலிருந்து வந்தாய், அதனால், சாணிச் சட்டியா, சருவச்சட்டியா பெரியது என்று விவாதிப்பதும், சாதிக்கொரு தலைவர்கள், தடுக்கி விழும் இடமெல்லாம் அவர்களுக்குச் சிலைகள்(சிலைகள் கட்டின சிமெண்டைப் பயன்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கோழிக்கூடு போன்ற குடிசைகளை திருத்திக் கட்டியிருக்கலாம்) எல்லாம்  இலங்கைத் தமிழர்களிடம் கிடையாது. அதனால், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் சாதி வெறி நாலு திசையிலும் நாற்றமடிக்கும் போது. அதைப் பற்றிப் பேசாமல்  1830 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைப் பார்க்க சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது. :-)


Wednesday, April 23, 2014

வள்ளலார் VS. யாழ்ப்பாணத் தமிழர்- அருட்பா-மருட்பா வழக்கு?தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத தமிழர்களின் கல்விக் கண்களைத் திறக்க தனது சொந்தக் காசுடன், யாழ்ப்பாணத்தமிழர்களின் நன்கொடைகளையும் திரட்டி சிதம்பரத்தில் இன்றும் இயங்கும் பாடசாலையை ஆரம்பித்த யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலரை இழிவு படுத்தும் நன்றி கெட்ட செயலை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பல தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்கின்றனர்.

"When it comes to religion – Hinduism – the religion of most Tamils, there has been a conscious effort ever since the time of Arumuga Navalar (1822 – 1879) to uphold Saivite traditions that highlight non-Brahminic Saiva Sitthanda approaches, in preference to the Brahminic Vedanta traditions. Even today, the Sri Lankan Tamil Hindus want to call their religion Saivism, and not Hinduism."   - Prof. Karthigesu Sivathamby-(The Making of a Sri Lankan Tamil)
வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பார்ப்பனர்களால் கொலை செய்யப்பட்டாரா அல்லது உண்மையிலேயே மாயமாக மறைந்தாரா என்றெல்லாம்  வேறு இணையத்தளங்களிலும் (வினவு) பலத்த விவாதங்கள்  நடைபெறுகின்றன ஆனால் அங்கு யாருமே யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலரை இழிவுபடுத்திப் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் ஈழத்தமிழர்களையும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும்  இழிவு படுத்துவதில் தமிழ்மணத்தில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பவர்கள் மட்டும் தேவையில்லாமல், ஆறுமுகநாவலரையும், வள்ளலாரையும் இழுத்து, “யாழ்ப்பாணத்தவருக்கும், தமிழ்நாட்டு ஆதிக்கச் சாதிக்கும் கள்ள தொடர்புகள் உண்டு...அதனால் அவருக்கு வள்ளலார் செம டோஸ் கொடுத்தனுப்பினார், ஆறுமுக நாவலர் வழக்கு எல்லாம் போட்டு பார்த்து ஓய்ந்தார்” என்றெல்லாம் பேசுகின்றனர்.

….what is obviously still visible is the traditional and conservative nature of the religion, Saivite Hinduism, practiced among Jaffna Tamils. They follow a conservative brand of Saiva Siddhanta which follows Agamic and Sanksritic features. In this they are similar to Saiva Vellalars of India who also consider themselves the custodians of Saiva Adheenams and Saivite culture. - (Bryan Pfaffenberger, American anthropologist)

ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையினர் சைவசமயத்தவர், அதனால்  எமது முன்னோர்களால் பேணிக் காக்கப்பட்ட சைவத்தை அதன் காவலர்களாக (Custodians of Saivaism) இருந்து அழியாமல் காக்க வேண்டிய கடமை எங்களுக்கிருப்பதாக நாங்கள்  கருதுகிறோம். அதனால் தான் இன்று மேலை நாடுகளில்  மூலை முடுக்குகளில் எல்லாம்  சைவ ஆலயங்கள் காணப்படுகின்றன.  ஆனால் தமிழ்நாட்டின் இந்துசமயத்துக்கும், ஈழத்துச் சைவத்துக்கும் ஒரு சில வேறுபாடுகளும் உண்டு. ஈழத்தமிழர்கள் தமிழ்த் தேவாரங்களுக்கும் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டில் காண்பது அரிது.  அதனால் தான் ஆறுமுக நாவலர் வள்ளலாரின் பாடல்களை எதிர்த்தார், அதற்கு "பார்ப்பன ஆதரவு, கள்ளத்தொடர்பு"  அல்லது வைதீக நம்பிக்கை எதுவுமே காரணமல்ல.

பெரியாரிஸ்டுக்களும், திராவிட வாலாயங்களும், ஆறுமுகநாவலர் வாழ்ந்த காலநிலை, அவரது நோக்கம் என்பவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் அவரைத் தூற்றுவதை நாமறிவோம்.  ஈழத்துச் சைவத்தின் அடிப்படையாகிய நாயன்மார்கள் பாடிய தேவாரங்கள் மட்டும் தான் சிவனருள் பெற்ற அருட்பாக்கள் என்பது ஈழத்தமிழ்ச் சைவர்களின் கருத்தாகும், அவற்றுக்கு இணையாக  வள்ளலாரின் பாடல்களை அருட்பாக்களாக ஏற்றுக் கொள்ள நாவலரால் முடியவில்லை. அதனால் தான் இராமலிங்க சுவாமிகளின் காலத்தில் வாழ்ந்த ஆறுமுகநாவலர் மட்டுமன்றி, அவருக்கும் பின்னர் யாழ்ப்பாணம் கதிரவேற்பிள்ளை அவர்களும் இந்த அருட்பா – மருட்பா வழக்குகளை தொடர்ந்து நடத்தினார். அதனால் தான் இந்த பதிவின் தலைப்பை வள்ளலார் Vs. யாழ்ப்பாணத் தமிழர் என்று குறிப்பிட்டுள்ளேன்.

அருட்பா –மருட்பா போரில் வென்றவர் வள்ளலார் தான் என்று தான் பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையல்ல, நாவலருக்குப் பின்னர் மருட்பா மறுப்பு என்ற புத்தகத்தை நீதிமன்றத்தில் காண்பித்து, வாதாடி  “இராமலிங்கர் பாடல் அருட்பா ஆகாது” என்று யாழ்பாணம் கதிரைவேற்பிள்ளை அவர்கள் வெற்றி பெற்றதற்கு அவருடைய மாணவர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களே சாட்சி என்கிறது திருநெல்வேலி சைவ சித்தாந்த செந்நெறிக்கழகம்.  

வள்ளலாரை அவமதிப்பதோ அல்லது அவரைக் குறைத்து மதிப்பிடுவதோ எனது நோக்கமல்ல, ஆனால் இந்த அருட்பா-மருட்பா வழக்கின் படி பார்த்தால் "வள்ளலார் ஆறுமுக நாவலருக்கு செம டோஸ் கொடுத்தார்" என்பதெல்லாம் வெறும் கற்பனை போலத் தான் தெரிகிறது. அது மட்டுமன்றி,  ஒரு நாணயத்துக்கு இரண்டுபக்கங்கள் இருப்பது போல், அருட்பா –மருட்பா வழக்கிலும் வென்றது யார் என்ற விடயத்தில், ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே கருத்து வேறுபாடு உண்டு என்பது தெளிவாகிறது.

 
குறிப்பு:- இப்புத்தகத்திலுள்ள விஷயங்கள் நீதிமன்றம் சென்று இராமலிங்கர் பாடல்கள் அருட்பா அல்ல என்று நிலைநாட்டி "இராமலிங்க பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு" என்னும் புத்தகத்திலிருந்தும் சங்கரன்கோவில் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்தி பிள்ளை அவர்கள் எழுதிய "நாடும் நவினரும்" புத்தகத்திலிருந்தும் தொகுக்கப்பட்டன.  

பொய்ச் சத்தியம் செய்தார், வேளாளர்களைத் தூஷித்தார் 
    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் கருங்குளியார்க்கும், அவரது பாடல்களுக்குத் திருவருட் பிரகாச வள்ளலார், திருவருட்பா வெனப் பெயர் வைத்தல் அனுவளவும் ஒவ்வாதெனப் பிரசங்கித்தகாலை அதற்குத்தக்கச் சமாதானஞ் சொல்லத் தெரியாது வயிறெரிந்து மனம் புகைந்து ஒரு பிராமணரையும் தம்முடன் சேர்த்துச் சிதம்பரத்தில் ஒரு பிரசங்கம் வைத்தார்.  
அதில் "நாவலர்" என்ற சொல்லை எடுத்துக் கொண்டு, நா-அல்லாதவர்; நாவினாலே துன்பப் படுபவர் எனப் பலவாறு தூஷித்தார்.  அது கேட்ட ஒருவர் சபையிலெழுந்து, குழியாரே! நுமக்கும் அப்பட்டத்திற்கும் வெகு தூரமே திருவாவடுதுறை யாதீன மகாசந்நிதானம் வேறு யாருக்காவது அந்தப் பட்டத்தைக் கொடுத்ததுண்டா? நீவிர் பொறாமைப்பட்டு அநர்த்தங் கொள்ளல் நன்றன்று.  உம்மைத்தானா சிவனார் வந்து மாலை யிட்டார்.  சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் நாவலர் என்னும் பெயரிருத்தலால் அதற்கும் இப்படித்தான் அர்த்தம் பண்ணுவீரா? கணக்கராய உமக்கு நல் வேளாள குலத்தார்க்குரிய பிள்ளைப் பட்டத்தை யாவர் கொடுத்தார்.  அதற்கு மேல், சுவாமிகள் என்ற பட்டத்தைப் பொள்ளற் குடக்கு வள்ளலார் பட்டங் கட்டினாற் போல வைத்துக் கொண்டீரே" எனப் பலவாறு கண்டிக்க இராமலிங்கம் பிள்ளை யெழுந்து போய் விட்டார்.  மற்றை நாள் இராமலிங்கம் பிள்ளை நாவலர் என்ற சொல்லை எடுத்து இன்ன இன்ன வாறு தூஷித்தார் என்று பத்திரிகை வெளிப்படுத்தப்பட்டது.  அப் பத்திரிகையைக் கொண்டு நீதித்தலத்தில் நாவலர் அவர்கள் இராமலிங்கம் பிள்ளை மீதும், பிராமணர் மீதும் வழக்குத் தொடுத்தனர்.
  மஞ்சக் குப்பம் கோட்டில் இராமலிங்க பிள்ளை வந்து "நான் நாவலரை நிந்திக்கவில்லை, நாவலர் என்ற சொல்லுக்கும் அப்படி யர்த்தம் விரித்தது கிடையாது" என்று பொய்ச் சத்தியஞ் செய்தனர்.  இவ்வளவு சொன்னதே போதும் என்று நாவலர் அவர்கள் பிள்ளையை நீக்கிவிட்டார்.  இராமலிங்க பிள்ளைக்குத் துணையாக நின்று தூஷித்த பிராமணர்க்கு 50 ரூ.  அபராதம் விதிக்கப்பட்டது யாவரே அறியாதார்.  அதனைச் சுக்கில வருஷம் அதாவது கி.பி.1871 வருஷத்துக் குறிப்பைப் பார்த்துணர்க.
    அப்போது பிள்ளை தம் வழக்குச் செலவிற்காகவும் பிராமணர்க்கு விதித்த அபராதத்திற்காகவும் பணம் வேண்டிச் சில சைவவேளாளர்களிடம் போய்க்கேட்டார்.  அதற்குமுன் இவரிடத்தில் அன்புடைய அவர்கள் இவர் கள்ளச்சத்தியம் நீதித்தலத்திற் செய்தாரென்று கண்டது தொடங்கி, ஐயா கணக்கரே உம்முடைய தயவு எங்கட்கு அவசியமில்லை என்று கூறவே பிள்ளை கோபித்து உங்கள் வேளாள குலமிப்படித்தான் அநியாயஞ் சொல்வோர் என்று, கையறம் பாடுகின்றேனென வேளாரைத் தூஷித்துப் பாட்டுப் பாடினார்.  அத்தூஷணைப் பாட்டுக்களையுந் திருவருட்பா என்று சேர்த்திருக்கின்றார்.  அவை வருமாறு:-     
                            "குண்டு நீர்க்கடல்சூ ழுலகத்துளோர்
        குற்றமாயிரங் கோடி செய்தாலு முன்
    கொண்டு பின் குலம் பேசுவரோ வெனைக்குறிக்
        கொள்வா யெண் குணந்திகழ் வள்ளலே"
                        [6-வது திருமுறை அபயங் கூறல்]
    "மழவுக்கு மொருபிடி சோறளிப்பதன்றி
        யிருபிடி யூண் வழங்கி லிங்கே
    யுழவுக்கு முதல் குறையுமென வளர்த்
        தங்கவற்றை யெலா மோகோ பேயின்
    விழவுக்கும் புலாலுண்ணும் விருந்துக்கு
        மருந்துக்கு மெலிந்து மாண்டா
    ரிழவுக்கு மிடர்க் கொடுங்கோ லிறைவருக்குங்
        கொடுத் திழப்ப ரென்னே யென்னே"
                       [6-ம் திருமுறை அபயங் கூறல்]
            
சிதம்பர தூஷணமுஞ் செய்தனர். 

 தில்லைத் தலத்தினும் பார்க்க உயர்ந்த தலங்கள் வேறின்மையால் கோயில் என்ப.  அங்கே பிள்ளை தரிசிக்கப் போயகாலை இரகசியலிங்கத்தைக் காட்டுமாறு தீக்ஷ¢தர்களைக் கேட்க, அவர் உட்பிரவேசித்தல் கூடாது, இங்கு நின்று தரிசிக்க என்றனர்.  பிள்ளை பெருஞ்சினங் கொண்டு இதற்கு எதிராக ஒரு சிதம்பர தலமுண்டாக்கி, நடராசரையும் அங்கே வரவழைத்து நடனஞ் செய்விக்கின்றோம்.  சிற்றம் பலமுஞ் செய்கின்றாமென்று வடலூரில் உத்தரஞான சிதம்பரமென்று ஒரு கட்டிடங்கட்டி, நடராசர் எல்லாருங்காண இங்கே வந்து நடம் புரிவார் என்று கதையும் கட்டி யிறந்தார்.  அந்தக் கட்டிடத்தில் இடிவிழுந்து தகர்ந்தது யாவருமறிவர்.  சிதம்பர வெளியைப் பார்க்கினும் வடலூர் வெளி பெரிதென்றும், சிதம்பர சபை இடுக்கென்றும், நடஞ் செய்தற்கு ஒடுக்க மானதென்றும், தில்லையிலொரு அம்பலம் இருக்கிறதென்றும், வடலூராகிய பார்வதிபுரத்திலே சிற்றம்பலம், பேரம்பலம், பொன்னம்பல முதலிய எட்டு அம்பலங்களிருக்கின்றன வென்றும் சொல்லியழைத்து வாடியென்று அடிதாளத்திற் பாடியுள்ளார். 
    வருவாரழைத்து வாடி-வடலூர் வடதிசைக்கே         வந்தாற் பெறலாம் நல்வரமே     இந்த வெளியில் நடமிடத்துணிந்தீரே- யங்கே         யிதைவிடப் பெருவெளி யிருக்கு தென்றாலிங்கே - வரு     இடுக்கிலாமலிருக்க விடமுண்டு நடஞ் செய்ய         விங்கம்பல மென்றங்கே யெட்டம் பல முண்டைய     ஒடுக்கிலிறுப்ப தென்னவள்வு கண்டு கொள்வீரென்னா         லுண்மையிது வஞ்சமல்ல வுன்மேலாணை யென்று சொன்னால் - வரு 
    (b) வடலூரே 'சிற்சபை' என்று பாடினார். 
    (c) அவ்வடலூர் அம்பலப்பாட்டே அருட்பாட்டு         அல்லாத பாட்டெல்லாம் மருட் பாட்டென்றார்                   
    (d) வடலூர் உத்தரஞான சிதம்பரம் எனவே, தில்லைத்தலமாய் விளங்கும் சிதம்பரம் விசேட மில்லாத பூர்வசிதம்பரம் என்றும் அதனாற் பயனில்லை யென்றும் நிந்தித்தார்.                

 

 இராமலிங்கர் பாடல் அருட்பா அல்ல - கோர்ட்டு தீர்ப்பு 

இராமலிங்கர் பாடல்கள் திருவருட்பா ஆகாது என்று  அப்பாடல்களிலிருந்தே தக்க சான்றுகள் எடுத்துக்காட்டி "மருட்பா மறுப்பு" என்ற பெயரால் பூ.பாலசுந்தர நாயக்கர் எழுதிய புத்தகத்தின் பேரில் இராமலிங்கம் பிள்ளையின் தமையன் மகனாகிய வடிலேலுப் பிள்ளை என்பவர் 1904-ம் வருஷத்திய 24533 வது காலண்டர் நம்பரில் சென்னை பிரசிடென்சி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நா. கதிரைவேற் பிள்ளை சு.பாலசுந்தர நாயக்கர் இருவர் பேரில் வழக்குத் தொடுத்தார்.  மாஜிஸ்ட்ரேட் இராமலிங்கம் பிள்ளை பாடல்களை அருட்பா என்று ஒப்புக் கொள்ள முடியாது என்று கூறி கதிரைவேற் பிள்ளை, பாலசுந்தர நாயக்கர் இருவரையும் விடுதலை செய்தார்.   இதன் பேரில் ஹைகோர்ட்டுக்கு அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.அதாவது - 
    High Court Calender 1905  வருஷத்திய No.143. 
   சென்னை பிளாக்டவுண் பிரசிடென்ஸி மாஜிஸ்ட்ரேட்டாருடைய 1904-ம் வருஷம் நவம்பர் மாதம் 21உ உத்தரவை கனம் பொருந்திய கோட்டாரவர்கள், அடியிற் கண்ட காரணங்களால் மேல் விசாரணை செய்து ரத்துச் செய்யும்படி மனுதார் கேட்டுக்கொள்கின்றனர். 
    பிரதிவாதிகள் தாக்கல் செய்த ரிக்கார்டுகளை மாஜிஸ்ட்ரேட்டார் சாக்ஷ¢யத்துக்கு ஆதரவாகக் கொண்டது பிசகு: 
    இராமலிங்க சுவாமிகள் பாடல்களுக்கு முழுவதும் தவறான பொருள் கொண்டது பிசகு: 
    1905 நவம்பர் 21 உ ஹைகோர்ட்டு ஜஸ்டிஸ் மூர்துரை, ஜஸ்டிஸ் பென்ஷன்துரை அவர்களின் தீர்ப்பு: 
    இந்தக் கேசை விசாரிக்கும்படி உத்தரவு செய்வதனால் யேதேனும் பொது நன்மையுண்டாமென நாங்கள் நினைக்க வில்லை - அதனால் நாங்கள் இதில் பிரவேசிக்க மாட்டோம். 
    குறிப்பு:- இந்த வழக்கு விபரங்கள் இராமலிங்கம் பிள்ளையின் பக்தர் டாக்டர் தஞ்சை சண்முகம் பிள்ளை அவர்கள் மாணவகர் தங்கவேலுப் பிள்ளை 20-9-1906ல் வெளியிட்ட "ஈழநாட்டு கதிரைவேற் பிள்ளையைப் பற்றி நடந்த விவகாரம்" என்ற புத்தகத்தின் சாரம். 
(a) அருட்பா ஆகாது என்பதற்கு வழக்கில் தாக்கல் செய்த ரிக்கார்டுகள்.
    1.  "இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாசதர்ப்பணம்" அல்லது "மருட்பா மறுப்பு" பாலசுந்தர நாயக்கர் எழுதி வெளியிட்டது. 
    2. 1872 பிரசோற்பத்தி வருஷம் தை மாதத்தில் வேதாரண்யம் உதய மூர்த்தி தேசிக சுவாமிகளால் வெளியிடப்பட்ட "முக்குணவயத்தின் முறை மறைந்தறைதல்" என்னும் பத்திரிகை. 
    3. இராமலிங்கம் பிள்ளை தமையன் சபாபதிப் பிள்ளையவர்களால் எழுதி வெளியிடப்பட்ட "இராமலிங்கம்பிள்ளை படிற்றொழுக்கம்"- "இராமலிங்கம் பிள்ளை அங்கதப்பாட்டு" என்ற நூல்கள். 
    4. தேவாரம் முத்துசாமி முதலியார் வெளியிட்ட "சாதிப் புரட்டர் யாவர்" என்ற பத்திரிகை - 
    5. தத்துவபோதினி - தினவர்த்தமானி - முதலிய பத்திரிகைகள் - பேரம்பலப் பிரசங்கப் பத்திரிகை - அற்புதப்பத்திரிகை முதலாயின.    
(b)  "மருட்பா மறுப்பு" என்ற புத்தகத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து "இராமலிங்கர் பாடல் அருட்பா ஆகாது" என்று தீர்ப்புப் பெற்று நா.கதிரைவேற் பிள்ளை வெற்றி பெற்றதற்கு அவர் மாணாக்கர் திரு வி. கலியாண சுந்தர முதலியார் அவர்களே சாட்சி. 
    'அருட்பா வென்பது ஆறிரு முறையே என்று     அரச மன்ற மேறிப் பசுமரத்தாணிபோல நாட்டி'
    'மன்னவர் நீதி மன்றினி லேறிப்     பன்னிரு முறையே உன்னருட் பாவென்     றாணி பசுமரத் தரைந்தா லென்னக்     காட்டிச் சாத்திரம் நாட்டினனெவனோ
'
 

    [பெரிய புராணம் - குறிப்புரை. by திரு.வி.க.1910-வது வருடப் பதிப்பு-உரிமையுரை] 

இராமலிங்கம்பிள்ளை ஜோதியில் கலக்கவில்லை. 

  இராமலிங்க வள்ளலார், மிக அண்மையில் மறைந்தவர்.  அவர் உடலைப் பஞ்சீகரணம் செய்து விட்டு ஜோதியில் கலந்து விட்டார் என்னும் கொள்கை அவருடைய அடியார்களுள் ஒரு சிலர்க்கிடையில் இருக்கிறது.  மற்றொரு சிலர் அவர் பூதவுடலை ஜோதியில் கரைத்து விடவில்லை; மற்றவர்கள் போன்று உடலை உகுத்து விட்டுப் பரஞ்சோதியில் கலந்தார் என்று பகர்கின்றனர்.  இப்பொழுது வடலூரில் கட்டு விக்கப்பட்டிருக்கும் ஞான சபைக்கு அருகிலுள்ள மேடையினுள் அவர் உகுத்த பூதவுடலை இரகசியமாக அடக்கம் செய்து விட்டனர் என்று பலர் பகர்ந்து வருகின்றனர்.  இதன் மர்மம் எதுவாயினும் நமக்குக் கவலையில்லை.  இராமலிங்க வள்ளலார் உலகு அறிய வெளிப்படையாக ஜோதியில் கலக்க வில்லை என்பது உண்மை. 
    (சுவாமி சித்பவானந்தா அவர்கள், தர்மசக்கரம், மாதசஞ்சிகை, சக்கரம் 8, ஆரம் 12 பக்கம் 465)
 


https://groups.yahoo.com/neo/groups/devaram/conversations/topics/4529?var=1
 

http://newpointpedro.blogspot.ca/2011/06/x-2.html?utm_source=BP_recent  

Tuesday, April 22, 2014

மலபாரும் (Malabar) - ஈழத்தமிழர் வரலாற்றைத் திரிக்கும் சிங்களச் சொம்புதூக்கிகளும்!


"எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு"


இலங்கையில் அகழ்வாராய்ச்சிகள் உண்மையை, பழமையை, வரலாற்றில் நடந்தவற்றை  நடுநிலையுடன் ஆராய்வதற்காக நடத்தப்படுவதில்லை. அகழ்வாராய்ச்சிகளும், வரலாற்றுக் கட்டுரைகளும், அதைத் தொடர்ந்து வரலாற்றுத் திரிப்புகளும், அரசியல் நோக்கத்துடன், தமிழர்களுக்கெதிராக நடத்தப்படுபவை.  அதாவது தமிழர்கள் இலங்கையில் தாயகம் கேட்கும் கோரிக்கையை வரலாற்று அடிப்படையில் மறுப்பதும், இலங்கைத் தமிழர்கள் அண்மையில் இலங்கைக்கு வந்த வந்தேறிகள் அவர்கள் இலங்கையில் 'Homeland Claim' பண்ண முடியாது என்பதை “நிரூபிப்பதும்” தான் அவர்களின் நோக்கம்.

Ancient Tamil Buddhist Stupas, Jaffna, 
இலங்கையில் அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் வடக்கிலும் , கிழக்கிலும் மட்டும் தான் அடிக்கடி நடைபெறும், அங்கு ஒரு புத்தர் சிலையைக் கண்டெடுத்தால், அல்லது ஒரு புத்தர் சிலையை அவர்களே புதைத்து விட்டு, அடுத்த நாள் தோண்டி எடுப்பதுமுண்டு. பின்னர் அந்த இடத்தில் புத்தர் சிலை கிடைத்தது, அதனால் அது ஒரு பழைய சிங்கள பெளத்த விகாரை இருந்த, இடம், அங்கு முற்காலத்தில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள். அந்த அடிப்படையில் அங்கு மீண்டும் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். இப்படித் தான் இலங்கையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதே காலகட்டத்தில், தமிழர்களின்  முன்னோர்களும் பெளத்தர்களாக இருந்தார்கள், அதனால். அந்தப் புத்தர் சிலை தமிழ்ப் பெளத்தர்களுடையதாக இருக்கலாம் அல்லவா, எனக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் வடக்கு, கிழக்கில் அந்த 'அகழ்வாராய்ச்சிகளின்'  நோக்கமே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது தான். இலங்கையில் இன்று அகழ்வாராய்ச்சி திணைக்களத்துக்கு(வாரியம்) பொறுப்பாக இருப்பதே, தமிழர்களை வெறுக்கும், தமிழர்களின் வரலாற்றைத் திரிக்கும், வடக்கில் சிங்களவர்களை பெருமளவில் குடியேற்ற வேண்டுமென வற்புறுத்தும் பெளத்த பிக்கு ஒருவர் தான்.

இலங்கையில் தமிழர்களின் சனத்தொகை எண்ணிக்கையில், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் குறைந்து விட்டார்கள் என்று மகிழ்ச்சிப்படுகிறவர் தனது பதிவில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தான் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள், சனத்தொகை வீதாசாரம் குறைந்து தமிழர்கள்  மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் நிலையில் உள்ளார்கள் என்பதை மட்டும் தனது பதிவில் குறிப்பிடாமல் தவிர்த்துக் கொண்டார். ஏனென்றால் அதுவல்ல சொம்புதூக்கிகளின் வேலைத்திட்டம்.

அகழ்வாராய்ச்சியில் இனவெறி பிடித்த பெளத்த பிக்குகளின் வரலாற்றுத் திரிப்புகளும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் போதாதென்று, சிங்களவர்களினதும் அவர்களின் சொம்பு தூக்கிகளினதும் பிரச்சாரப் போர் இன்னும் ஓயவில்லை.  சிங்கள இனவாதிகளும்  தமது வலைப்பதிவுகளில் தமிழர்களுக்கெதிரான வரலாற்றுத் திரிப்புக் கட்டுரைகளை எழுதுவதுண்டு. அந்தக் கட்டுரைகளை, அதன் கருத்துக்களை தமிழில் பரப்புவது தான் சிங்களச் சொம்புதூக்கிகளின் வேலை. அவர்களின் வேலைத் திட்டமே ஈழத்தமிழர்களுக்கெதிரான பொய்ப்பிரச்சாரம் தான்.

மலபார், போத்துக்கேயர், ஈழத்தமிழர்கள்


இலங்கைக்கு முதலில் வருகை தந்த ஐரோப்பியர்களாகிய , போத்துக்கேயர்கள் ஈழத்தமிழர்களை மலபாரிகள்(Malabar) என்றழைத்தார்கள், அதை ஆதாரம் காட்டி ஈழத்தமிழர்கள் அனைவரும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் குடியேறிய மலையாளிகள், அதனால் அவர்கள் இலங்கையில் தாயகம் கோர முடியாது என்ற பிரச்சாரத்தை, உண்மையான வரலாறு தெரியாத, சரித்திர அறிவு கொஞ்சமும் அற்றவர்களுக்கு இணையத்தளங்களில் தீவிரமாகப் பரப்புகிறார்கள் சிங்கள இனவாதிகள். 

சிங்களவர்களின் இணையத்தளங்களிலுள்ள அந்த பதிவுகளையும், கட்டுரைகளையும்  வாசித்து விட்டு வந்து, அல்லது அவர்களின் சிங்கள நண்பர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அப்படியான பிரச்சாரத்தை தமிழில், தமிழ் வலைப்பதிவுகளில் முன்னெடுக்கிறார்கள் சில தமிழ்நாட்டுத் “தமிழர்கள்”. இது முதல்முறையல்ல, இதற்கு முன்பும், இந்த "மலபார்" விடயம் இங்கு குறிப்பிடப்பட்டதுண்டு.

அவர்கள் முதலில், வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவது போல, அதாவது ஒன்றுமறியாதவர்கள் போல, “ஆரம்ப காலத்தில் இலங்கைத் தமிழர்கள் மலபார்கள், மழவர்கள் என்றே அழைக்கப்பட்டனர். பின்னர் சிலோன் தமிழர்கள் என அழைக்கப்படலாயினர். என்று தான் தொடங்குவதுண்டு.
ஆனால் இலங்கையின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் ‘மலபார்’ என்ற சொல் இலங்கையில் தமிழர்கள் என்ற கருத்தில் பாவிக்கப்பட்ட சொல்லேயல்லாமல் ஒருபோதுமே மலையாளிகளைக் குறித்த சொல் அல்ல என்பது தெளிவாகும்.

1498 ம் ஆண்டில் போத்துக்கேய மாலுமி வாஸ்கொடகாமா மலபார்க் கரையில் வந்திறங்கியதன் பின்னர்,  இலங்கை, இந்தியாவில்  ஐரோப்பியர்களின் செல்வாக்கு நிலைபெறத் தொடங்கியது. மலபார்க் கரையிலிருந்து போத்துக்கேயர் இலங்கை வந்தடைந்த போது, இலங்கையில்  இரண்டு வேறுபட்ட இன மக்கள் வாழ்வதையும், அந்த இரண்டு இனமும் ஒருவரோடொருவர் கலக்காமல், தமக்கென தனியான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும் அவதானித்தனர். ஒரு இனக்குழு இந்தியாவின் மலபார்க் கரைக்கு அண்மையில் வாழ்ந்ததுடன் ஒரேவிதமான மொழி, கலாச்சாரம், ஒரே உணவுப் பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தனர். அதைக் கண்ட போத்துக்கேயர் அவர்களை "மலபார்" என அழைத்தனர்.  தமிழ்நாட்டில் தமிழரல்லாத திராவிடத் தலைவர்களின் சோம்பேறித்தனத்தால், அல்லது அவர்களின் திட்டமிட்ட சதியால் தமிழர்களின்  திருவாங்கூர் சமஸ்தானமும், தமிழர்களின்  ஊர்களும் மலையாளிகளுக்குத் தாரை வார்க்கப்படும் வரை மலபார்க் கரையிலும் தமிழ் தான் பெரும்பான்மை மக்களால் பேசப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

போத்துக்கேயரைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த ஒல்லாந்தர்களும் ஈழத் தமிழர்களை மலபாரிகள் என்றே அழைத்து வந்தனர். ஆனால் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியில்  மலையாளிகளே மலபாரிகள் என்றழைக்கப்பட்டதால், இலங்கையிலுள்ளவர்கள் தமிழர்கள், மலபாரிகள் அல்ல, அவர்களை மலபாரிகள் என்றழைப்பது தவறு என்றுணர்ந்து கொண்ட ஆங்கிலேயர்கள் ஈழத்தமிழர்களை மலபாரிகள் என்று குறிப்பிடுவதை நிறுத்தி, போத்துக்கேயரும், டச்சுக்காரரும் விட்ட தவறைத் திருத்திக் கொண்டனர்.  

உண்மையில் மலபார் என்ற சொல்,  தமிழ் அல்லது தமிழர் என்ற அடிப்படையில் தான் ஈழத்தமிழர்களைக் குறிக்க ஐரோப்பியர்களால் பாவிக்கப்பட்டது   என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.


1. ஜேர்மனியைச் சேர்ந்த கிறித்தவ பாதிரியார் German missionary Rev. E. R. Baierlein, 1875 இல், 'THE LAND OF THE TAMULIANS' என்ற நூலில் “I have not been able to omit the primitive Church of Southern India, although its present place of residence is beyond the present boundaries of the land of the Tamulians. For the separation of Malabar from the Tamil country, is of recent date; EVEN OUR FIRST MISSIONARIES CALL TAMIL LAND MALABAR and the language - even not very much different – Malabarish"


2. A SKETCH OF THE MODERN LANGUAGE OF EAST INDIES என்ற நூல் தமிழுக்கும்  மலபார் என்ற பெயர் வழங்கப்பட்டது என்கிறது. அதனால் தான் போத்துக்கேயர் தமிழ் பேசிய ஈழத்தமிழர்களை மலபாரிகள் என்றழைத்தனர்.


3. ஈழத்தமிழர்கள் தமது வரலாற்றில், ஒருபோதுமே தம்மை மலபாரிகள் என்றழைத்துக் கொண்டதோ அல்லது அடையாளப்படுத்தியதோ இல்லை. அறியாமையால், போத்துக்கேயர் மலபார் என்றழைத்த காரணத்தால், ஈழத்தமிழர்கள் மலபாரிகள் என்றால், கனடாவின் பூர்வீக குடிகளை, அறியாமையால் இந்தியர்கள் என்றழைத்தது மட்டுமல்ல, இன்றைக்கும் இந்தியர்கள் என்கிறார்கள் வெள்ளையர்கள், அதனால் அவர்கள் எல்லாம் இந்தியர்கள் என யாராவது வாதாடினால், அது எவ்வளவு முட்டாள் தனமோ அது போன்றது தான், ஈழத்தமிழர்களை மலபாரிகள் என்று வரலாற்றைத் திரித்து, ஈழத்தில் அவர்களின் தாயகக் கோரிக்கையை மறுப்பதும்.


4. போத்துக்கேயரும், ஐரோப்பிய மிசனரிகளும் ஈழத்தமிழர்களை அறியாமையால் மலபாரிகள் என்றார்கள், அதே ஈழத்தமிழர்களை ஆங்கிலேயர்கள் “The Scotchmen of the East”  என்றும் அழைத்தார்கள். அதனால் ஈழத்தமிழர்கள் ஸ்கொட்லாந்திலிருந்து வந்தார்கள் என்பதா? 


Sunday, April 20, 2014

Star Vijay Night in London - ஈழத்தமிழர்கள் இவர்களை ஆதரிக்க வேண்டுமா?

தமிழ்நாட்டு நடிகர் நடிகைகளையும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத தமிங்கிலிஸ் பேசும் நடிகர்களையும், பாடகர்களையும் அழைத்து அவர்களின் கூத்துக்களை அரங்கேற்றி, அவர்களிடம் ஈழத்தமிழர்கள் பாடுபட்டுழைத்த பணத்தைக் கொண்டு போய்க் கொட்டுவதால் ஈழத்தமிழர்களுக்கு என்ன பயன்? ஏற்கனவே தமிழைப் பேச மறந்து அல்லது தமிழைப் படிக்க நேரமில்லாமல், தமிழ்க் கலாச்சாரத்தையும் நாளடைவில் இழந்து கொண்டிருக்கும்  இருக்கும், ஈழத் தமிழர்களின் இளஞ்சமுதாயத்துக்கு, ஆங்கில மோகம் கொண்ட, தமிங்கிலிஸ் பேசும் தமிழ்நாட்டு இளம் பாடகர்கள், நடிகர்களினால் என்ன லாபம்?  உண்மையிலேயே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைச் சுரண்டும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு ஈழத்தமிழர்களுக்குத் தேவையா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.


பார்ப்பனர்கள் ஈழத் தமிழர்களை ஆதரிப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம், ஆனால் பல தமிழ்நாட்டுத் தமிழர்களும், தமிழர் என்ற போர்வையில் உலவும் வந்தேறி வடுகர்களும் உண்மையிலேயே ஈழத்தமிழர்களை வெறுப்பவர்கள் என்பதை, நாங்கள் வலைப்பதிவுகளிலேயே காணலாம். நேற்றுக் கூட தமிழ்நாட்டுச் சிங்களச் சொம்புதூக்கி ஒன்று எனது வலைப்பதிவில்,

சிங்களவனிடம் வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு கக்கியதால் தான், ஒருவர் முள்ளிவாக்காலில் மல்லாங்கப்படுத்துக் கொண்டு காட்சியளித்தார். அல்லவா... அய்யோ அய்யோ.. உடுக்க கோவணமே இல்லையாம், உடுத்தவன் வேட்டியில் பத்து ஓட்டை என ஓங்கிச் சிரித்தானாம்.. ஹிஹி”   என்று பின்னூட்டமிட்டிருந்தது,

சுப்பர் சிங்கரில் பங்கு பற்றுகிறவர்களில் பாதிப்பேருக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியும் தெரியாது, அவர்களுக்கு அதில் எந்தவித அக்கறையுமில்லை. அவர்களில் அநேகமானோர் தமிழர்களும் அல்ல. அவர்களில் பலருக்கு தமிழ் பேசக் கூடத் தெரியாது, அப்படித் தெரிந்தாலும், வளர்ந்தவர்கள் கூட, வேண்டுமென்றே ஆங்கிலச் சொற்களைக் கலந்து தமிங்கிலிஸ் தான் பேசுவார்கள் என்பதை நாங்கள் பார்க்கலாம். 


ஐரோப்பாவுக்கும், கனடா போன்ற நாடுகளுக்கும் பல தமிழ்நாட்டு நடிக, நடிகைகளும், பாடகர்களும் அடிக்கடி ஈழத்தமிழர்களைச் சுரண்ட வருகிறார்கள். அதில் எத்தனைபேர் உண்மையான தமிழர்கள்?  ஆனால் அப்படி வந்த  எவராவது தமிழ்நாட்டில் நடைபெற்ற   ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் இதுவரை பங்குபற்றியதுண்டா? ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் குரல் கொடுப்பவர்கள், போராட்டம் நடத்துகிறவர்கள் தமிழ்நாட்டு மேட்டுக் குடியினரோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகிறவர்களோ தமிழரல்லாத திராவிடர்களோ  அல்ல. தமிழ்த் தலித்துகளும், கிராமப்புறங்களிலிருந்து சென்னைக்கு வந்து, தமிழ்நாட்டிலுள்ள சாதியடிப்படையிலான தலித் ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் ஏழை மாணவர்களும், பெரியளவில் ஆதரவற்ற, தனித்து நின்றால் கட்டுப்பணத்தைக் கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒரு சில அரசியல் கட்சியிலுள்ள வசதியற்ற தமிழ் இளைஞர்களும் தான். ஆனால் அவர்கள் எப்படி, என்ன தான் போராட்டங்கள் நடத்தினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களால் ஈழத்தமிழர்களுக்கு உதவ முடியாதென்பது தான் உண்மை.


தமிழ்நாட்டுத் தமிழர்களால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற முடியாது, இந்திய அரசு தமிழ்நாட்டின் உணர்வுகளை, விருப்பு வெறுப்புகளை கணக்கிலெடுப்பதுமில்லை. பாஜக ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமாகப் போகலாம். உதாரணமாக, கனடாவில் வாழும் 200,000 ஈழத்தமிழர்களால் கனடாவை இலங்கைக்கு எதிராகப் பேச வைக்க முடிந்தது ஆனால் இந்தியாவின் ஏழு கோடித்தமிழர்களால், இந்தியாவை இலங்கைக்கெதிராக கையொப்பமிட வைக்க முடியவில்லை, அதனால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பரிதாப நிலையை ஈழத்தமிழர்கள்  புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் கூறியது போல் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது." தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார பலம் தமிழர்களின் கைகளில் இல்லை. தமிழ்நாட்டுப் பாடகர்களையும், நடிகர்களையும் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரவழைத்து பார்ட்டி வைத்தால், எங்களின் காசைச் செலவழித்து அவர்களுக்கு ஊரைச்சுற்றிக்  சுற்றிக் காட்டினால், அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்குத் திரும்பிப் போய், எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று கூட சில ஈழத்தமிழர்கள் நினைப்பதுண்டு. அப்படி எதுவுமே நடப்பதில்லை என்பது தான் உண்மை.இப்படியான கலைநிகழ்ச்ச்சிகளைப் பற்றி ஈழத்தமிழர்களின் தினக்கதிர் எனும் இணையத்தளமும் கூட தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. அதைக் கீழே காணலாம்.

லண்டனில் ஸ்டார் விஜய் நைட் -தேச விரோதிகளின் பண்பாட்டு அழிப்பு –  சுதர்சன்Published on April 18, 2014-9:19 am   ·  சில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். தமிழ்த் தேசியவியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்வின் லங்காசிறீ இணையங்களும் இதற்காகக் குமுறி வெடித்துக் கண்ணீர்வடித்தன. தென் இந்தியாவில் திரைப்படம் பிடித்து தோற்றுப்போன சில இயக்குனர்களின் அறிக்கைகள் நேர்காணல்களோடு இந்த நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தினால் ஈழப் போராட்டம் கறைபடிந்து கந்தலாகிவிடும் எனக் கண்ணீர் வடித்தார்கள். 
இன்று புலம் பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுகொண்டவர்களை இலங்கை அரசும் இன்டர்போல் நிறுவனமும் இணைந்து தேடிக்கொண்டிருக்க, இதே சுப்பர் சிங்கர் லண்டனில் பிரமாண்ட மேடையில் பணச் சுரண்டலுக்காக நடத்தப்படுகிறது.எதிர்வரும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் O2 Arena மாபெரும் பிரமாண்டமான மேடையில் லங்காசிறீ தமிழ்வின் ஆதரவோடு சினிமா நட்சத்திரங்களோடு சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களும் கலந்துகொள்ளும் களியாட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவில் அதிகம் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் (2013) நடத்தப்பட்ட மாநிலம் தமிழ் நாடு என்று புள்ளிவிபரம் கூறுகிறது. அங்கு போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று உணரத் தலைப்பட்டுள்ள மக்கள் கூட்டம் சினிமா மாயையை உடைக்கத் தயாராகி வருவதையே இது சுட்டி நிற்கின்றது. சனத்தொகையின் அரைவாசி வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் ஒரு தேசத்தை சினிமா மாயைக்குள் புதைத்து வைத்திருக்கும் கலாச்சாரம் மக்களின் அறிவு சார்ந்த அத்தனையையும் தின்று தொலைக்கிறது. அங்கெல்லாம் மக்களும் சமூகத்தின் முன்னேறிய பிரிவினரும் அதனை உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். 
இதே கலாச்சாரச் சீர்குலைவு லண்டனில் புலம்பெயர் தமிழர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கை அரச படைகளும், இந்திய உளவுத்துறையும் இணைந்து ஏற்படுத்த முடியாத அப்பட்டமான அழிவுகளை இக்கலாச்சார சீர்குலைப்பு ஏற்படுத்தும் வலிமை கொண்டது. அரைத் தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தன்னைத் தமிழ்க் கலாச்சாரம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு புலம்பெயர் குடும்பத்தினதும் வரவேற்பறையில் வந்து நிற்கிறது. 
அரைகுறை ஆங்கிலத்தின் இடையே தமிழ் வார்த்தைகளை இணைத்துக்கொள்வதைத் தமிழ் என்று தமது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பெற்றோர் இதன் பின்னணியிலுள்ள கலாச்சாரச் சிதைப்பைப்பற்றி துயர்கொள்வதில்லை. 
அண்மையில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் சிறுவர்களுக்கான சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 12வயது குழந்தையிடம் நீ யாரை லவ் பண்ணுகிறாய் என்று நடுவர் கேட்கிறார். பின்னர் தன்னை லவ் பண்ண மாட்டாயா என்கிறார். இன்னுமொரு நிகழ்சியில் சிறுமி பாடிய பாலியல் வக்கிரம் கலந்த பாடலைக் கேட்ட நடுவர் உணர்ச்சி போதவில்லை எனக் குறைப்பட்டுக்கொள்கிறார். இவ்வாறான ரியாலிட்டி ஷோ போன்றவற்றின் ஊடாக பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டி அதனைக் கற்பனை கலந்த உலகத்திற்கு அழைத்துச் சென்று காசாக்கிக்கொள்வது தான் தொலைக்காட்சிகளின் வியாபாரத் தந்திரம். 
ஐரோப்பியத் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் வெற்றிபெறுகின்ற ஆண் ஒருவர் அதே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அறிமுகமில்லாத பெண்ணுடன் விடுமுறைக்குச் செல்லும் பரிசு வழங்கப்படுகின்றது. இவ்வாறான கலாச்சாரத்தை நோக்கி தமிழ் நாட்டின் கனவுலகை அழைத்துச் செல்லும் மற்றொரு நிகழ்ச்சியே சுப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் திவாகர் என்பவர் தான் கலந்துகொள்ளும் ரோட் ஷோவில் நிறைய பிகர்ஸ் இருப்பார்கள் என்பதால் மகிழ்ச்சியடைவதாகச் சொல்கிறார். வன்னிப் படுகொலைகள் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைவியல்லை. நாளந்தம் கொலை, கொள்ளை, கைது, நிலப்பறிப்பு என்று இனச்சுத்திகரிப்பு அதன் உச்சத்தை அடைந்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குப் போட்டுக்கொடுத்து ராஜபக்சவைத் தூக்கில் போடப்போகிறோம் என்று மக்களை ஏமாற்றிய அதே கும்பல், இப்போது தென்னிந்திய பண்பாட்டுச் சீரழிவை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறது. 
உலகின் பிரபலமான காப்ரட் கூத்தாடிகள் பாட்டுப்பாடியும், நடனமாடியும் மக்களிடமிருந்து மில்லியன்களை அபகரித்துக்கொள்ளும் O2 Arena மேடையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. லைக்கா நிறுவனத்தின் நன்கொடையில் இயங்கும் பிரித்தானியப் பல்கலைக்கழக்த் தமிழ் மாணவர்களின் ஒன்றியம் நடத்தும் தென்னிந்தியச் சினிமாப் பாட்டிற்கு நடனமாடும் நிகழ்ச்சிகள் இந்த வருடம் இதே மேடையில் தான் நடைபெற்றது.
தென்னிந்திய சினிமாக் குப்பைகளை கொட்டுமிடமாக தமிழ்த் தேசிய வியாபாரிகளால் மாற்றப்பட்டுள்ள புலம்பெயர் கலாச்சார நிகழ்வுகள் சீரழிவின் எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கின்றது. ராஜபக்சவின் குடும்பத்தோடு வியாபாரம் நடத்தும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஐங்கரன், 2500 தமிழ்த் திரைப்படங்களை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்துச்சென்று கலாசார சேவை செய்ததாகக் கூறுகிறார். 
பிகர்களைப் பார்ப்பதற்காக லண்டன் வரும் கூத்தாடி திவாகர் போன்றோர், அதே பிகர்களின் முன்னைய சந்ததி அழிக்கப்பட்டு இரதம் ஆறாக ஓடியது என்பதைத் தெரிந்திருக்க நியாயமில்லை. இதே லங்காசிறீயின் இணையங்களில் தேடிப்பார்த்தால் போர்க்காலக் காணொளிகளையும் அவர்கள் கண்டுகொள்ளலாம்.
புலம் பெயர் நாடுகளில் குழந்தை கருவிலிருக்கும் போதே என்ன தொழில் செய்யவேண்டும், யாரிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அப்பாவிப் பெற்றோர்கள் தீர்மானித்துவிடுகிறார்கள். குழந்தை பிறந்ததுமே அறுக்கப்படுவதற்கான ஆட்டை வளர்ப்பது போன்றே வளர்க்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை விஜய் தொலைக்காட்சியில் பாட்டுப் பாடி வெற்றிபெற்று மில்லியனேராகும் பாடகன் தமது குழந்தைகளுக்கான ரோல் மொடல்! விஜய் தொலைக்காட்சி சொல்லித்தரும் சீர்குலைவு தமிழ்க் கலாச்சாரம்!! 
ஈழத் தமிழர்கள் யுத்தத்தோடு அடித்துச் செல்லப்பட்ட கலைகளையும், கலாசார விழுமியங்களையும் மீட்பதற்காகப் போராடுகிறார்கள். அங்கிருந்து தரம் மிக்க இசையும், கலையும் மண்ணின் வாசனையோடு ஆங்காங்கே நெருடிச் செல்வதைக் காணலாம். இக் கலைகளை வளர்ப்பதற்கும், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் போர்க்குரலாக அவற்றை மாற்றுவதற்குமான அத்தனை வலுவும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஜனநாயக முற்போக்குக் கூறுகளுக்கு உண்டு. அவர்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத தமிழ்த் தேசிய வியாபாரிகள்இன்று தென்னிந்தியாவிலிருந்து அந்த நாட்டையே சீரழிக்கும் அவமானத்தை புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறார்கள். 
ராஜபக்ச நடத்தும் கலாச்சார ஒடுக்குமுறைக்கும், தமிழ்த் தேசியத்தின் பேரால் இப் பிழைப்புவாதிகள் நடத்தும் கலாச்சார சிதைப்பிற்கும் எந்த வேறுபாடுகளும் கிடையாது. அயோக்கியர்கள் நடத்தும் தமிழ்த் தேசிய வியாபாரத்தைக் கண்டிப்பதற்கும், இந்த நிகழ்ச்சிகளிலிருந்து மக்களை விலகியிருக்கக் கோருவதற்கும் ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் தேசியக் கலைகளை வளர்ப்பதற்கும் புலம்பெயர் நாடுகளில் அரசியல் இயக்கங்க்கள் இல்லை. தேசியத்தை மூலதனமாக்கும் பிழைப்புவாதிகளின் கூடாரமே புலம் பெயர் அரசியல் என்பதற்கு வார இறுதியில் இல் நடைபெறும் விஜய் ஸ்டார் நைட் சாட்சி.