Tuesday, March 11, 2014

தமிழ்நாடு மாணவர்களின் F**k Off USA ஆர்ப்பாட்டம் தேவையற்ற முட்டாள்தனம்!


"நாங்களும் தீர்மானத்தை எதிர்த்தால் சர்வதேச சமூகம் தமிழர் பிரச்சனையை கைகழுவி விட்டுவிடும்" (சம்பந்தன்- தமிழ் தேசிய முன்னணி, இலங்கை) 

நேற்று ஞாயிற்றுக் கிழமை ( March 09, 2014) சென்னை மரீனா கடற்கரையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் தமிழ்நாடு மாணவர்கள் சிலரால் நடத்தப்பட்ட அமெரிக்க எதிர்ப்புப் போராட்டத்தில்  அங்கு அவர்கள் தாங்கிய பதாகைகளில் காணப்பட்ட  "F**k Off USA " போன்ற வார்த்தைகள் ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையுள்ள அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.எந்த நாடுமே தனது நலன்களுக்கெதிராக இயங்குவதில்லை. என்ன சுயநலக் காரணங்கள் இருந்தாலும், ஈழத்தமிழர்களின் இன அழிப்பிலும், கடைசிப் போர் நடைபெற்ற காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொலைகளுக்கும், கொடுமைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும் எதிராக, அமெரிக்க, கனடா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகள் குரலெழுப்பாமல் இருந்தால், அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு சுதந்திரமாகச் செயல்பட, தமது நாட்டின் விடுதலைக்காக, குரலெழுப்புவதற்கான ஜனநாயக உரிமைகளையும் சுதந்திரத்தையும் மேற்குலக நாடுகள் அளிக்காமலிருந்தால் இன்று, போர்க்குற்றங்கள் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது. ஈழத்தமிழர்களுக்காக எந்த நாடும் குரலெழுப்பியிருக்காது. 
  
தமிழர்களுக்கென உலகில் ஒரு நாடோ, அரசாங்கமோ கிடையாது. இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு நடந்த  கொடுமைகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து இலங்கையில் தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தொடர்ந்து நடத்தி  மகிந்த ராஜபக்சவுக்கு நோபல் பரிசுக்கும் விண்ணப்பித்திருக்கும். ஆனால்
அமெரிக்கா போன்ற மேலைநாடுகளால் தான், போர் முடிந்து ஐந்தாண்டுகளின் பின்பும்  ஈழத்தமிழர்களின் பிரச்சனை இன்றும் உலக மட்டத்தில் பேசப்படுகிறது அல்லது ஈழத்தமிழர்களை யாரும் தீண்டக் கூட  மாட்டார்கள்.


உண்மையில்பார்க்கப் போனால்அமெரிக்கா முதலில் கொண்டு வந்த இரண்டு 
தீர்மானங்களையும் நீர்த்துப் போகச் செய்தது இந்தியா தான் என்பது இந்த தமிழ் நாட்டு  மாணவர்களுக்குத் தெரியாதா?  அமெரிக்கா இந்த தீர்மானத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்காததன் காரணம் கூடஇந்தியா போன்ற நாடுகள் எப்படி வாக்களிக்கும் என்று தெரியாததால் தான்.  ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வருவது இலகுவானது. ஆனால் அதற்கு ஏனைய நாடுகளின் ஆதரவைப் பெற்று வெற்றியடையச் செய்வதென்பது அமெரிக்காவுக்குக் கூட கடினமான செயல்.  வெற்றியடைய முடியாத கடுமையான தீர்மானத்தைக் கொண்டு வருவதால் யாருக்கு என்ன பயன்? 

உண்மையில் தமிழ்நாட்டு மக்கள், ஈழத்தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டிருந்தால், தமது நாட்டையும் (இந்தியாவையும்) அமெரிக்காவுடன் சேர்ந்து ஒரு கடுமையான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால் அது அவர்களால் முடியாது. முதலிரண்டு தீர்மானங்களையும் நீர்த்துப் போகச் செய்தது இந்தியா என்று தெரிந்த பின்பும், F**K OFF USA என்பது வெறும் முட்டாள் தனமாகும்.   

உண்மையான நிலை தெரியாததால், இந்த தமிழ்மாணவர்கள் அமெரிக்க எதிர்ப்பாளர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகி, அவர்களின் அமெரிக்க எதிர்ப்பை ஈழத்தமிழர்களின் செலவில் சொறிந்து கொள்ளும் செயலுக்கு துணை போகிறார்களோ, எனக் கவலையாக இருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு இழைத்த கொடுமைகளுக்கும், மனிதவுரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற  நாடுகளின் எதிர்ப்பும், அந்த விடயத்தில் அவர்களின் உறுதியான நிலைப்பாடும் தான் இலங்கை அரசுக்கு இன்றுள்ள தலையிடியாகும். அதைப் போக்க விரும்பும் சிலர், இப்படியான அமெரிக்க எதிர்ப்பு பின்னணியில் இருக்கிறார்களா என சந்தேகம் வருவது தவிர்க்க முடியாதது.

சில தமிழ் நாட்டவர்களின் அமெரிக்க பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கான எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, ஈழத்தமிழர்களின் பெயரில், அவர்களுக்கு இழைக்கப்பட்ட மனிதவுரிமை மீறல்களுக்கு நீதி கேட்கும் போராட்டங்களில் காட்ட வேண்டுமா.? அதற்காக தனிப்பட்ட போராட்டத்தை நடத்துவது தானே நியாயமானது. இந்தியாவில் அமெரிக்காவின் KFC போன்ற வர்த்தக நிறுவனங்கள் வேரூன்றுவதற்கும்,  ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்கும் ஐ. நா தீர்மானத்துக்கும் என்ன தொடர்பு?  தேவையற்ற  அமெரிக்க எதிர்ப்பால், உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. 
"We are Ready for Economic War"   

அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு அதனால், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் 
எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு. அவர்களால் அதைச் சகித்துக் கொள்ள முடியும்
ஆனால், ஈழத்தமிழர்களின் பெயரில் இப்படி F**k Off USAபோன்ற கண்ணியமற்ற சுலோகங்கள் பேசப்படுவது   ஈழத்தமிழர்களால்  மட்டுமன்றி, உலகத் தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதொன்று, அத்துடன் இந்த மாணவர் போராட்டத்தை இயக்கியவர்களின் பின்னணியையும் தமிழர்கள் அறிய வேண்டும். அமெரிக்காவும், மேலைநாடுகளும் ஈழத்தமிழர் பிரச்சனையைக் கைவிட்டால், உங்களின் நாடு ஈழத்தமிழர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றும், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும், போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், என்பதை தமிழ்நாட்டு மாணவர்கள் உறுதி செய்யும் வரை, "F**k Off USA" போன்ற உளறல்களை நிறுத்த வேண்டும். 

இன்று கூட ஜெனீவாவில் ஈழத்தமிழர்கள் பாரிய போராட்டங்களை நடத்தினர். அங்கு இப்படி ஏதாவது அமெரிக்கா அல்லது மேலைநாடுகளை எதிர்த்துக், கண்ணியமற்ற, அவமதிக்கும் வார்த்தைகள் கொண்ட பதாகைகளை ஏன் அவர்கள் தாங்கவில்லை என்பதை தமிழ்நாட்டு மாணவர்கள் சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்ய ஈழத் தமிழர்களுக்குத் தெரியாதா? உதவி செய்யாது விட்டாலும் உபத்திரம் செய்யாதிருக்க வேண்டும் என்பார்கள். அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகள் எங்களுக்காகக் குரலெழுப்பாது விட்டால், ஈழத் தமிழர்களுக்கு நாதியில்லை, இந்தியா எங்களுக்காக உலக அரங்கில் குரல் கொடுக்கப் போவதில்லை,  அதை விட  தமிழ்நாட்டின் விருப்பு வெறுப்புகளை  இந்தியா எப்பொழுதுமே கணக்கில் எடுத்துக் கொண்டதுமில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும். 

தமிழ்நாட்டு மாணவர்களின் F**k OFF USA படங்களை சிங்களப் பத்திரிகைகள் பெரிது  படுத்தி மேலும் விளம்பரம் செய்கிறார்கள்.  அதாவது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவுக்கே அவர்கள் எதிர்ப்பு  தெரிவிக்கிறார்கள்.  எதிர்ப்புப் போராட்டங்களிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பது ஈழத்தமிழர்களின் பண்பாகும்.  அதனால் தமிழ்நாட்டு மாணவர்கள்,  உண்மையில் ஈழத்தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டிருந்தால், எங்களுக்கு உதவ விரும்பினால் எதிர்ப்பைத் தெரிவிக்கும் போதும், எல்லை தாண்டாமல் கண்ணியத்துடன் செயல் பட வேண்டுமே தவிர, உதவி செய்யப் போய் உள்ள ஒரு சில நாடுகளின்   ஆதரவையும் கெடுத்து விடக் கூடாது. 

. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணையைக் கோருவதையே நோக்காகக் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார்.
சர்வதேச விசாரணை என்கின்ற சொற்பதம் அந்தப் பிரேரணையின் முன்வரைவில் இல்லை என்பதற்காக, அதனை பொறுப்பற்ற முறையில் எதிர்க்க முடியாது என்றும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார். 
அமெரிக்காவின் பிரேரணை முன்வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, தலைவர் இரா. சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் கூட்டாக அறிக்கை ஒன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர். ஜெனீவா பிரேரணையின் முன்வரைவில் அடங்கியுள்ள விசாரணை கோரிக்கைகள் தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதை நோக்காகக் கொண்டது என்றும் அந்த நோக்கத்தை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது என்றும் சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார். அதேநேரம், தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல் தீர்வு, வடக்கு கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்டல் போன்ற விடயங்களை எட்டக்கூடிய விதத்தில் இந்தத் தீர்மானத்தில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்


Pics : Colombo Telegraph
. 


2 comments:

mani said...

இதற்கு மூலக்காரணம் மே-17 இயக்கம் தான். அவர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். அமெரிக்கா எந்த ஓரு தீர்மானத்தை கொண்டு வந்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம் என இவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஏகாத்திப்பத்தியத்தை எதிர்கிறோம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் கெடுதல் செய்கின்றனர்.

mani said...

இதற்கு மூலக்காரணம் மே-17 இயக்கம் தான். அவர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். அமெரிக்கா எந்த ஓரு தீர்மானத்தை கொண்டு வந்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம் என இவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஏகாத்திப்பத்தியத்தை எதிர்கிறோம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் கெடுதல் செய்கின்றனர்.