Friday, March 14, 2014

எங்கட அண்ணாவைத் தாங்கோ!


இலங்கையில் காணமல் போகச் செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களில் ஒருவராகிய தனது அண்ணனை தருமாறு கேட்ட ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்ட தமிழ்ச் சிறுமியும், தாயும் கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள அவர்களின் வீட்டில் இலங்கைப் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயையும் மகளையும் சிறிலங்கா இராணுவத்தினர் கடத்திச் சென்றுள்ளனர். 
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருகை தந்திருந்த போதும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மகாநாடு நடந்த போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா வயது 13 என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது.  இச்சிறுமியும் தாயுமே சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.



அந்தப் பெண்களை தாம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை அறிய முற்பட்டபோது, அவர்களுடன் அங்கிருந்த யாரோ, தன்னை அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை என்றும், அவர்கள் தம்மை பொலிஸார் என்று கூறியதாகவும், அங்கு ஒரு விசாரணை நடப்பதாக அவர்கள் கூறியதாகவும், சட்டத்தரணி கஜேந்திர குமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.
 தருமபுரத்தில் ஒரு வீட்டை இராணுவத்தினர் சுற்றி வளைத்து, அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை அங்கு தடுத்து வைத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்திருந்தனர். தன் பெண்பிள்ளையுடன் கணவனையும் ஆண் பிள்ளைகளையும் இழந்த நிலையில் வசித்துவரும் ஜெயக்குமாரியின் வீட்டில் புகுந்த பொலிசார் வீட்டை சுற்றிவளைத்துள்ள நிலையில், ஜெயக்குமாரிக்கும் கடந்த பதினைந்து நாளுக்கு முன்னதாக பருவமடைந்த அவரது பெண் பிள்ளைக்கும் என்ன நேர்கிறது என்று தெரியாத நிலையில் அந்த கிராமத்து மக்கள் இந்தகணம் வரை அவலப்படுகின்றனர்.

குறித்த பெண் பிள்ளை பருவடைந்து ஆசார சடங்குகள் நடைபெறாத நிலையில் பொலிசார் அந்த வீட்டுக்குள் புகுந்து இருப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது உள்ளுர் சர்வேச அமைப்புக்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெயக்குமாரியின் ஒரு ஆண் பிள்ளை போராட்டத்தில் வீரச்சாவடைந்ததுடன், இரண்டு ஆண் பிள்ளைகளை இதுவரையும் காணாமல் கண்ணீர் சுமந்தவராக இதுவரையும் தேடிவருகின்றார். தன் பிள்ளைகளை தேடித் தருமாறு எல்லா போராட்டங்களிலும் ஜெயக்குமாரி கலந்துகொண்டு வருவதுடன், தன் பிள்ளைகள் தொடர்பாக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டு வருகின்றார்.

Ref: Tamilwin & BBC

1 comment:

Paramasivam said...

நியாயம் கிடைக்கட்டும்.