Tuesday, February 18, 2014

தேவருக்குப் பார்ப்பனர்கள் பூசை செய்ய ஆகமவிதிகள் அனுமதிக்கிறதா??


Pic. courtesy: Vinavu
புரட்சித்தலைவி செல்வி.ஜெயலலிதா முத்துராமலிங்கத் தேவரின் குருபூசையில் கலந்து கொண்டு தங்கக்கவசம் சாத்தும் விழாவில், தேவர் சிலைக்குப் பக்கத்தில் ஒரு பூணூலும் நிற்கிறது.  சிலைக்கு முன்னால் உள்ள பூசைப் பாத்திரங்கள், பொருட்களைப் பார்க்கும் போது, பார்ப்பனர்கள் தேவரின் குருபூசையில் கலந்து கொண்டு அவரின் சிலைக்கு பூசை செய்கிறார்கள் என்பது தெரிகிறது.

முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் அவரது சாதி மக்களால் போற்றப்படும் ஒப்பற்ற தலைவராக இருக்கலாம், அவரை அவரது சாதிக்குழுவினர் தமது தலைவனாகக், குருவாக மட்டுமல்ல சிலை, பூசை எல்லாவற்றையும் பார்க்கும் போது கடவுளாகவும் கருதுகிறார் போல் தெரிகிறது. இந்து மதத்தில் அந்த சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. யாரை, யார் எப்படி வணங்க வேண்டும் என்பதை யாரும் கூறவோ அல்லது தடுக்கவோ முடியாது.

ஆனால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்த போது தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில்  பாரம்பரியமாக வழக்கத்திலிருந்து வரும், ஆகம விதிகளை ஆதாரம் காட்டி, அதனடிப்படையில் பார்ப்பனர்கள் மட்டும் தான் அர்ச்சகர் ஆகலாம் என்று வாதாடியது மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கும் சென்றனர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள். அதனால் பரம்பரை உரிமையில், முறையான பயிற்சியற்று அர்ச்சகர்களாகி, மந்திரங்களை பிழைபிழையாக முணுமுணுக்கும் பார்ப்பனர்களை விட  முறையாக வேதம், கிரியைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பார்ப்பனரல்லாத தமிழ் அர்ச்சகர்கள் இன்றும் வேலையின்றி இருக்கின்றனர்.  தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

என்னுடைய சந்தேகம்  என்னவென்றால் முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களின் குருபூசையில் பார்ப்பனர் அர்ச்சகர்கள் கலந்து கொண்டு, வேதவார்த்தைகளால் வாழ்த்துரைத்துப் பூசை செய்ய ஆகமங்கள் அனுமதிக்கிறதா என்பது தான்.  நாயன்மார்களின் குருபூசைகளே வெறும் தேவாரப் பாடல்களுடன் மட்டும் நடைபெறுவது தான் வழக்கம். ஆனானப்பட்ட ஆறுமுகநாவலரின் சிலைக்கே  அர்ச்சனை, பூசை எதுவும் செய்யப்படுவதில்லை

கண்ணகி, ஐயனார் போன்ற சிறு தெய்வங்களையும், கிராம தேவதைகளையும் வணங்குவதையே எதிர்த்தவர் யாழ்ப்பாணம்ஆறுமுகநாவலர்.  அந்த சிறு தெய்வங்களுக்கு பார்ப்பனர்கள் வேத வாக்கியங்களால்  பூசை செய்வதை, அவை ஆகம விதிகளுக்கு எதிரானவை என்று எதிர்த்த யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் இன்றிருந்தால் முத்துராமலிங்க  தேவரின் சிலைக்குப் பூசை செய்யும் பார்ப்பனர்களை பீஸ் பீசாக்கியிருப்பார். :-)  என்ன செய்வது "குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை குறும்பியளவாய்க் காதைக் குடைந்து எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை", என்பது போல் தமிழ்நாட்டில் சைவத்தின் இன்றைய நிலை அப்படி. அங்கு பார்ப்பனர்கள் வைத்தது தான் சட்டம்.

தேவரின் சிலைக்கு பார்ப்பனர்கள்  பூசை செய்வது ஆகமவிதிகளின் படி சரியானதென்றால், நாளைக்கு தேவரைப் போன்றே இன்னொரு சூத்திரராகிய அயோத்திதாசரின் குருபூசையின் போதும்  அவரின் சிலைக்கு வந்து பூசை செய்யுமாறு  பார்ப்பனர்களை அழைக்க வேண்டும். தேவரின் சிலைக்கு பூசை செய்வது ஆகமவிதிகளின் படி முறையானதென்றால் சைவத்தில் நம்பிக்கையுள்ள எல்லா தமிழ்ச் சூத்திரர்களின்  தலைவர்களின் குருபூசையில் கலந்து கொண்டு பார்ப்பனப் பூசாரிகள் அவர்களின் சிலைகளுக்குப் பூசை செய்ய ஆகமவிதிகள் தடையாக இருக்க முடியாது. அவ்வாறே சூத்திர தமிழ்ப் பூசாரிகள் ஆகம விதிகளின் படி இயங்கும் கோயில்களிலும் பூசை செய்ய ஆகமங்கள் தடையாக இருக்க முடியாதல்லவா? 

கண்ணகி, ஐயனார், கறுப்பண்ணசாமி, சுடலை முனி, மாடசாமி, போன்ற சிறு தெய்வ வழிபாடே ஆகம விதிகளுக்கு எதிரானவை என்று அதை எதிர்த்தார் ஆறுமுகநாவலர். அப்படியானால், தமக்கு தேவைப்படும் போதெல்லாம், ஆகமவிதிகளை ஆதாரம் காட்டும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தேவர் சிலைக்கு பூசை செய்வது எந்த ஆகமத்தின் அடிப்படையில் அல்லது அதை ஆகம விதிகள் அதை அனுமதிக்கிறதா என்பது தான் என்னுடைய சந்தேகம்அல்லது தமக்கு வருமானம் கிடைக்குமேயானால், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆகம விதிகளை மட்டுமல்ல,  இந்து மதத்தின் எந்த விதிகளையும் வளைப்பார்கள் என்பது தான் அதன் கருத்தா?



8 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

காசு கொடுத்தால் கழுதைக்கும் பூசை செய்வோம் எனும் கொள்கைப் பிடிப்புடையோர் அவர்கள்...
இது ஒரு சிலை, அதுவும் அம்மாவின் பிரசன்னம், விடுவார்களா? ஆகமப் புருடா?
இன்று ஆறுமுக நாவலர் இருந்தால் இவற்றுள் அவிந்து விடுவார். அவரும் காசுக்காக பைபிளை மொழி பெயர்த்தவர் என அறிந்தேன்.
ஆங்கிலம் படிக்க சென் பற்ரிக் கல்லூரிக்கு குருசு கட்டிக் கொண்டு சென்றவராம் எனவும் கேள்விப்பட்டேன்.

viyasan said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris)
//அவரும் காசுக்காக பைபிளை மொழி பெயர்த்தவர் என அறிந்தேன்.///

நாவலர் பைபிளை மொழிபெயர்க்கவேயில்லை. அவர் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் (Wesleyan Mission School) இல் அதிபராக இருந்த பீட்டர் பேர்சிவல் பாதிரியாருக்கு உதவியாளராகத் தான் இருந்தார், பைபிளை மொழி பெயர்த்தவர் பாதிரியார் பேர்சிவல் என்றும் நாவலரை எதிர்க்கும் கிறித்தவர்கள் இன்றும் வாதாடுகின்றனர்.

எதுவாக இருந்தாலும், இன்று யாழ்ப்பாணம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையினர் சைவசமயத்தவர்களாக இருப்பதற்கு நாவலர் தான் காரணம்.அன்று அவர் மிசனரிமார்களின் திட்டமிட்ட மதமாற்றத்துக்கெதிராக, பிரசங்கம் செய்து, தமிழர்களைத் தடுக்காதிருந்தால் இன்றைக்கு ஈழத்தமிழர்கள் அனைவரும் கிறித்தவர்களாக இருந்திருப்போம், எமது மொழியை, பாரம்பரியத்தை, வரலாற்றை இழந்திருப்போம், எப்படி கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த தமிழ்க் கிறித்தவர்கள், சிங்களக் கிறித்தவர்களுடன் கலந்து சிங்களவர்களாக மாறி, தமிழை மறந்து காணாமல்ல் போனார்களோ அப்படியான நிலை யாழ்ப்பாணத் தமிழருக்கும் ஏற்பட்டிருக்கும். இன்றைக்கு கிறித்தவர்களும், இந்துக்களும் ஈழத்தில் மத வேற்றுமை இல்லாமல் இருப்பதற்குக் காரணமே, நாவலர் கட்டிக்க காத்த எங்களின் மொழியும் பாரம்பரியமும், கலாச்சாரமும் எம்மை இணைப்பதால் தான்.


//ஆங்கிலம் படிக்க சென் பற்ரிக் கல்லூரிக்கு குருசு கட்டிக் கொண்டு சென்றவராம் எனவும் கேள்விப்பட்டேன்///

அந்தக் காலத்தில் திருநீறு அல்லது எந்த சைவ அடையாளமும், ஆடை ஆணிகள் அணிந்திருந்தாலும் கல்வி மறுக்கப்பட்டது மட்டுமன்றி, கிறித்தவக் கல்லூரிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்களாம். அதிலும் St. Patrics இல் அந்தக் காலத்தில் அதை விட மோசமாக ஏதாவது செய்திருப்பார்கள்.

அக்காலத்தில் கிறித்தவக் கல்லூரிகளில் சேர்வது தான் ஆங்கிலம் கற்க ஒரே வழி. அதனால் நாவலர் ஆங்கிலத்தைக் கற்பதற்காக குருசு (சிலுவை) கட்டிக் கொண்டு சென்றாலும் பரவாயில்லை. ஏனென்றால் அவர் ஆங்கிலம் கற்றதால் தான், கிறித்தவ மிசனரிமார்களின் சைவத்துக்கெதிரான பிரச்சாரத்தை, அவர்களின் மொழியிலேயே, அவர்களின் மதத்தைக் கற்று முறியடிக்கக் கூடியதாக இருந்தது.

Iqbal Selvan - இக்பால் செல்வன் said...

ஆறுமுக நாவலர் ஒரு முட்டாள் சாதி வெறி பிடித்த வறட்டுக் கோமாளி. இலங்கையை பொறுத்தவரை சுவாமி விபுலானந்தாவே மிகச் சிறந்த இந்து மத சீர்திருத்தவாதி. ஆகமம் ஆகமம் என்கின்றீர்களே, ஆகமங்களின் படி பார்த்தால் பிள்ளையாரைக் கூட தாங்கள் வணங்கவே முடியாது. அத்தோடு பிறப்பால் பிராமணரைத் தவிர வேறு எவரும் கருவறைக்குள்ளே நுழைய முடியாது. அத்தோடு ஆகம விதிகளின் படி பார்த்தால் இந்துக்கள் கடற்பிராயணும் கூட செய்யக்கூடாது, காலாபாணியைக் கடந்தால் பிராமணன், வைசியன்,உட்பட அனைவரும் புறச்சாதிகளாகி விடுவர்.. ஏன் ஆகம விதிப்படி கட்டப்படாத ஆயிரக் கணக்கான கோவில்கள் கூட இடிக்கப்பட வேண்டியவை. ஆறுமுக நாவலர் சூத்திரர்களான வெள்ளாளரை பார்ப்பானுக்கு இணையாக மாற்ற முயன்ற ஆசாமி. அம்பட்டருக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்டியவர். சமண சமயத்தின் தாக்கால் உருவான சிறுதெய்வ வழிபாடுகளை ஒழித்தவர். குறிப்பாக அண்ணன்மார் வழிபாட்டையும் கண்ணகி வழிபாட்டையும் அழித்தவர். இறுதியில் வள்ளலாரிடம் வாங்கிக் கட்டியவர். பார்ப்பான்களை பின்பற்றிக் கொண்டே தங்களைப் போன்றோரும் பாப்பாத்தியை பழிக்கின்றீர்கள். நல்ல ஆளு தான் நீங்க. பிரம்மனை தவிர வேறு கடவுளை வணங்க கூடாது என்ற வேதக்கால வழிமுறையை மாற்றி எவரையும் வணங்கலாம் பணம் பண்ணலாம் என்ற நிலைக்கு மாறி பரிணமித்தது தான் இந்து வைதிக மதம்.

viyasan said...

@Iqbal Selvan - இக்பால் செல்வன்

உங்களின் எழுத்தைப் பார்க்கும் போது யாரை ஈழத்தமிழர்கள் உயர்வாக நினைக்கிறார்களோ, அல்லது யார் பிரபலமான ஈழத்தமிழர்களோ அவர்களை வசைபாட என்றே பலர் கிழம்பியிருக்கிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன்னால் இரண்டு பேர் பிரபாகரனை வசை பாடினார்கள் . பின்னர் பாலு மகேந்திராவுக்கு எல்லோரும் தர்ம அடி கொடுத்தார்கள். இப்பொழுது ஆறுமுக நாவலரையும் விட்டு வைக்கவில்லை.

பாலுமகேந்திராவின் பாலியல் வக்கிரங்களை, அவற்றை அவர் நியாயப்படுத்த முனைந்ததை, வசைபாடுவதில் ஓரளவவாவது நியாயம் இருக்கிறது. ஆனால் நாவலர் இருந்த காலத்தை மறந்து, அவரது நோக்கம் என்னவாக இருந்தது என்பதை மறந்து இப்படி திட்டித் தீர்ப்பது, ஆறுமுகநாவலரை இழிவு படுத்துகிறது என்பதை விட அவரைப்பற்றி வாய்க்கு இப்படி வசைபாடுகிறவர்களைப் பற்றித் தான் மற்றவர்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்பது என்னுடைய கருத்தாகும். இப்படி இழிவுபடுத்த விரும்பினால் எல்லாம் மதத்தின் தலைவர்களையும் தான் இழிவு படுத்தலாம்.

நூற்றாண்டுக்கு (1879) முன்னர் நாவலர் வாழ்ந்தகாலத்து நிகழ்வை இக்காலத்துடன் ஒப்பிட்டு வசைபாடுவது முட்டாள் தனம். யார் என்ன தான் வசைபாடினாலும், இன்றைக்கு சைவமும் தமிழும் இலங்கையில் நிலைத்து நிற்பதற்கும், இலங்கையில் இன்று ஊருக்கு ஊர். இந்துக்கல்லூரிகள் தலை சிறந்த கல்விக்கூடங்களாக திகழ்வதற்கும் அத்திவாரமிட்டவர் நாவலர். அந்த உண்மையை யாரும் அசைத்து விட முடியாது.

இந்த பதிவின் கருப்பொருள் நாவலர் அல்ல, என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் ஈழத்தமிழர் என்பதற்காக கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், அவரை போட்டு வாங்குகிறீர்களோ என்னவோ யார் கண்டது. :-)

என்னுடைய கேள்வி என்னவென்றால், கோயிலில் தமிழில் வழிபாடு, அல்லது அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது போன்ற விடயங்களுக்கெல்லாம்., ஆகமவிதிகளை ஆதாரமாகக் காட்டும் பார்ப்பனர்கள், தேவருக்கு பூசை செய்ய, ஆகமங்கள் அனுமதிக்கிறதா என்பது தான்.



//இந்துக்கள் கடற்பிராயணும் கூட செய்யக்கூடாது, காலாபாணியைக் கடந்தால் பிராமணன், வைசியன்,உட்பட அனைவரும் புறச்சாதிகளாகி விடுவர்..///

சரியாகத் தெரியாது. பிராமணர்கள் மட்டும் தான் கடலைக் கடக்க அனுமதியில்லை என்று நினைக்கிறேன். கடலைக் கடக்காமல் வைசியர் எப்படி வணிகம் செய்ய முடியும்.


//பார்ப்பான்களை பின்பற்றிக் கொண்டே தங்களைப் போன்றோரும் பாப்பாத்தியை பழிக்கின்றீர்கள்///

பார்ப்பான்களை நான் பின்பற்றவுமில்லை, பார்ப்பாத்தியைப் பழிக்கவுமில்லை. அந்தப் பார்ப்பாத்தி மட்டும் பிரதமரானால் எனக்கும் மகிழ்ச்சி தான். :-)

இக்பால் செல்வன் said...

ஆகம விதிகளை வகுத்ததே பிராமணர்கள் தான். ஆகம விதிகள் யாரை பூஜிக்க வேண்டும் என்பதை விட எப்படி பூஜிக்க வேண்டும் என்பதிலே குறியாக உருவாக்கப்பட்டவை. ஜீவாத்மாக்களை பரமாத்மாவின் பேரங்கமாய் நினைத்துக் கொண்டால் தேவர்மகனார் என்ன நமிதாவுக்கு கூட பூஜை பண்ணலாம். வேதங்களை தாண்டி உருவாக்கப்பட்ட ஆகமங்கள், ஸ்மிரிதிகள், உபநிடதங்கள், புராணங்கள் இவை யாவுமே பிழைப்புவாதங்களுக்கும் பிழைப்பில் கொழுத்த லாப பங்குகளை பிராமணருக்கும் மிச்ச மீதியை செல்வாக்குள்ள பிற சாதிகளுக்கும் பகிர்ந்தளிக்க ஏற்படுத்தப் பட்ட மோசடி வழிமுறைகளே..! பாப்பாத்தியம்மாவும் கொழுத்த லாபங்களுக்காக தேவர்மகனார் என்ன எவருக்குமே பூஜிக்க தயாரே..!

இக்பால் செல்வன் said...

நாவலர் ஆறுமுகம் காலம் வேறு என்றாலும் யாழ் சமூகத்தில் வெள்ளாள சாதி ஆதிக்கத்துக்கும் சிறு தெய்வ வழிபாடுகளை ஒழித்தமைக்கு பெரும் பங்காற்றியவர் என்பதாலே இந்த குட்டு. மற்றபடி வட்டார தமிழை தமிழக வழக்குக்கு கொண்டு வந்தமையும், அச்சுத் துறையில் மற்றும் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கும் வித்திட்டமையும் போற்றத்தக்கவைகள். அவரின் சாதிய குறு மனப்பான்மையை மட்டுமே விமர்சிக்க விரும்பினேன், ஒட்டு மொத்தமாக அல்ல... அவரை விட சுவாமி விபுலானந்தாவின் சமய மற்றும் சமூக வளர்ச்சிப் பங்கு பன்மடங்கானவை. மொழி வளர்ச்சிப் பங்கில் ஆறுமுக நாவலரே முன்னுக்கு நிற்பவர். பாலுவை விமர்சித்தது அவரது ஈழப் பூர்விகத்துகாக அல்ல அவரின் பீடோபைல் வாழ்க்கை முறைக்கும் இளம் பெண்கள் மீது நடந்து கொண்ட முறைமைக்கும் தான். எல்லாவற்றையும் இனம் மொழி அடையாளம் சார்ந்து பார்க்க வேண்டியதில்லை..

Gujaal said...

//என்னுடைய சந்தேகம் என்னவென்றால் முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களின் குருபூசையில் பார்ப்பனர் அர்ச்சகர்கள் கலந்து கொண்டு, வேதவார்த்தைகளால் வாழ்த்துரைத்துப் பூசை செய்ய ஆகமங்கள் அனுமதிக்கிறதா என்பது தான். //

அந்த நபர் பார்ப்பனராக இருப்பதற்கு 99.99 சதம் வாய்ப்பு இல்லை.

thamilachchi said...

வெள்ளை நிற பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது****

விபுலானந்த அடிகளார் எழுதிய மேற்சொன்ன பாடல் ஒன்றே போதும் அவரை அறிந்து கொள்ள, எனக்கு சிறு வயதிலிருந்து மிகவும் பிடித்த பாடல்.

விபுலானந்த அடிகளார் ஆறுமுக நாவலரை விட சிறந்தவர் என்பதில் இக்பால் செல்வனுடன் நானும் உடன்படுகிறேன். நான் மிகவும் போற்றும் ஈழத்து அறிஞர். மிக சிறந்த கல்விமான். மதம் தவிர்த்து பல்துறை வித்தகர். யாழ்நூல் என்னும் பண்டைய இசை தொடர்பான நூலை இயற்றியவர்.

ஆறுமுக நாவலர் ஈழத்து கோயில்களில் நடந்த மிருக பழியையும் கடுமையாக எதிர்த்தார். அவர் செய்த நல்லவைகளில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்