Saturday, February 15, 2014

சிங்களவர் மீது குவேனி இட்ட சாபம் தொடர்கிறது?


இலங்கையில் இரண்டாயிரமாண்டுகளாக சிங்களவர்களின் மனதின் அடிமட்டத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் விடயம் எதுவென்றால் சிங்கள இனத்தின் மீது இலங்கையின் பூர்வீகக் குடிகளின் அரசியாகிய குவேனி இட்ட சாபம் அவர்களை பழிவாங்கும் என்ற எண்ணமாகும்

 இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே?

விஜயன் & குவேனி 
அந்தச் சாபத்துக்குப் பரிகாரமாக, குவேனிக்கும், அவளை இரண்டு குழந்தைகளுடன் கைவிட்ட சிங்கள இனத்தின் தந்தை எனக் கருதப்படும் விஜயனின் சிலையையும் மாத்தறை என்ற இடத்திலுள்ள முருகன் கோயிலில் நிறுவியுள்ளனர் சிங்களவர்கள்.  குவேனியின் சாபத்துக்குப் பரிகாரம் தேடுவதற்கு அவளது சிலையை சிங்கள புத்தர்களின் கோயில் எதிலும்  நிறுவாமல், தமிழர்களின் முருகனின் கோயிலில் நிறுவியதே, சிங்களவர்கள் குவேனி தமிழ்ப்பெண் தான், அதாவது தமிழர்கள் தான் இலங்கையின் பூர்வீக குடிகள்  என்று நம்புகிறார்கள் ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர் என்பதைக் காட்டுகிறது.

இலங்கையின் சிங்களவர் என்ற ஒரு இனம் உருவாக முன்பு, இயக்கர், நாகர், வேடர் போன்ற பூர்வீக குடிகள் இலங்கையில் வாழ்ந்தனர். அவர்கள் இலங்கையும், தமிழ்நாடும் கடல்கோளால் பிரிக்கப்படு முன்னர் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த இக்கால ஈழத்தமிழர்களின் முன்னோர்கள் என ஈழத்தமிழர்கள் நம்புகிறோம். தமிழ்நாட்டில், நாகப்பட்டணம், நாகர் கோவில் போன்ற இடங்கள் அங்கும் நாகர் குடியிருப்புகள் இருந்தன என்பதற்கு அடையாளமாகும்
http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_25.html


அது ஒருபுறமிருக்க. சிங்களவர்களின் மகாவம்சத்தின் படி, சிங்கள இனத்தின் தந்தையாகக் கருதப்படும் விஜயனும் அவனது எழுநூறு நண்பர்களும், வங்காளத்திலிருந்து  நாடுகடத்தப்பட்டு ஓட்டைக் கப்பலில் இலங்கைத் தீவை அடைந்தனர். அவர்கள் இலங்கையை அடைந்த போது அங்கு வாழ்ந்த பூர்வீக குடிகளின் அரசி தான் குவேனி. அவளை ஒருவாறு மயக்கி மணந்து கொண்ட விஜயன், அவளது உதவியுடன் அங்கு வாழ்ந்த பூர்வீக குடிகளை அடக்கி இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இலங்கையின் அரசனாக முடிசூடிக் கொண்டதும் தனது பட்டத்தரசியும் அரசகுலப் பெண்ணாக இருக்க வேண்டுமென விரும்பிய விஜயன், மதுரை (தமிழ்நாடு) பாண்டிய அரசனுக்கு  தூதனுப்பி அவனது மகளை தனது அரசியாக மணமுடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டதுக்கிணங்கிய பாண்டியன் தனது மகளை விஜயனுக்கு மனைவியாகவும், அவனது 700 நண்பர்களுக்கு மனைவியராக தமிழ்ப்பெண்களையும், அத்துடன் அவர்களுக்கு உதவியாக வேலையாட்கள், கட்டிடக்கலை வல்லுனர்கள், நாட்டியக்காரர்கள், பூசாரிகள் உட்பட பலரை அனுப்பியதாகவும், அவர்களின் வழி வந்தவர்கள் தான் சிங்கள இனம் என்கிறது மகாவம்சம்.

மூதூரிலிருந்து கதிர்காமத்துக்குப்  பாதயாத்திரை
 செல்லும் தமிழ் பேசும் வேடர்கள் 
பாண்டிய இளவரசியை பட்டத்தரசியாக்கிக் கொண்ட விஜயன், அவனது முதல் மனைவியும், பூர்வீக குடிகளின் தலைவியுமாகிய குவேனியையும் இரண்டு குழந்தைகளையும் காட்டுக்குள் துரத்தி விடுகிறான். விஜயனை நம்பி, தனது இனத்தைக் காட்டிக் கொடுத்த, குவேனியை அவரகளும் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், அவள் ஆதரவற்ற நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் அரண்மனையை விட்டுக் காட்டுக்குள் போகும் போது விம்மி விம்மி அழுது கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும் சென்ற குவேனி  விஜயனின் குலத்துக்கு அதாவது சிங்கள இனத்துக்கு ஏதோ ஒருவகையில் நாசம் உண்டாகும் என்று சாபமிட்டுச் சென்றதாகவும், அந்தச் சாபம் ஒருநாள் பலிக்கும் எனவும் சிங்களவர்கள் நம்புகின்றனர்.  குவேனியின் இரண்டு குழந்தைகளினதும் வழிவந்தவர்கள் தான் இலங்கையிலுள்ள வேடர்கள். 

அரண்மனையை விட்டுச் சென்ற குவேனி, குருநாகல் என்ற இடத்தில், ஏரிக்கு முன்னால் இருந்த பாறையிலிருந்து அழுது கொண்டே, விஜயனையும் அவன் பரம்பரையையும் சபித்துக் கொண்டே  குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சிங்களவர்கள் நம்புகின்றனர். அந்தச் சாபத்தினால் தான் விஜயனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பாண்டுவாசுதேவன் (King Panduwasdeva) தீராத தோல் வியாதியால் அவதிப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சிங்கள அரச குடும்பங்களில் நடந்த கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுவது, அன்னியர்களிடம் ஆட்சியை இழப்பது, அரசர்களிடையே நடந்த சகோதர யுத்தங்கள் போன்ற, இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு நடக்கும் அனைத்து விபரீதங்களுக்கும், இயற்கை அழிவுகளுக்கும்  குவேனியின் சாபம் தான் காரணம் என நம்புகின்றனர் சிங்களவர்கள்.

இலங்கையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த இயக்கர் குலத்தை சேர்ந்த வேடுவ பெண்ணான குவேனி சிங்கள மக்களுக்கு இட்ட சாபத்தில் இருந்து மீள அவருக்கு ஆலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுஇலங்கையின் வரலாற்று நூல்களில் ஒன்றான மகாவம்சத்தில் கூறப்படும் குவேனி என்ற இயக்கர் குல வேடுவ பெண் இறக்கும் போது, இளவரசர் விஜயனுக்கும் சிங்கள இனத்திற்கும் இட்ட சாபத்தினால், சிங்களவர்கள் மத்தியில் இதுவரை ஒற்றுமை ஏற்படவில்லை என சிங்கள மரபு வழிக்கதைகளில் கூறப்படுகிறது. 
இந்த சாபத்தை போக்க வேண்டுமாயின்  விஜயன் மற்றும் குவேனி ஆகியோரின் சிலைகள் அருகருகில் இருக்கும் வகையில் ஆலயம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட முயற்சி கடந்த 12 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவேறியது. 
 மாத்தறை புகையிரத நிலைய வீதியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்ட போது, அந்த ஆலயத்தில் விஜயன் மற்றும் குவேனியின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனஇலங்கையில் சிங்களவர்கள் உருவாக காரணமானவர் எனக் கூறப்படும் விஜயம் மற்றும் இயக்கர் குல வேடுவ பெண்ணான குவேனி ஆகியோருக்கான உலகின் முதல் கோயில் இதுவாகும்.

19 comments:

Anonymous said...

கடைசியில் விஜயனையும் சாமி ஆக்கிபுட்டீங்க. சூப்பர், அப்படியே மகிந்த ராஜபக்சேவையும் சாமியாக்கி காலில் விழுந்தீங்கன்னா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமே.

குவேனி - விஜயன் கதை வெறுங்கதை, அது வரலாறு கிடையாது. அது போல விஜயன் என ஒருத்தான் இருந்திருந்தா கூட இன்னைக்கு இலங்கையில் உள்ள மொத்த சிங்களவனும் அவன் புள்ளையும் கிடையாது.

குவேனி எல்லாம் இருந்துச்சா என தெரியவில்லை. அப்படி குவேனி என ஒருத்தி இருந்திருந்தா கூட அவ தமிழச்சியும் கிடையாது, இலங்கையில் உள்ள தமிழருக்கு சம்பந்தமும் கிடையாது.

அந்தந்த காலத்தில் எவனாவது வேலை வெட்டி இல்லாம சொல்லி வச்சிட்டு போறதை பின்பற்றி பின்னாடி வருதுங்க எல்லாம் அடிச்சிகிட்டும் கொன்னுக்கிட்டும் சாவுதுங்க. என்னத்த சொல்ல.

சீக்கிரம் பிரபாகரனுக்கும் ஒரு கோவிலை கட்டி பக்கத்திலே வச்சிடுங்க, ஒரு இடத்தை காலியாக்கி வச்சிடுங்க, ராஜபச்சாவுக்கு ஒரு கோவில் கட்டிபுட்டுறலாம். அவ்வ்வ்.

viyasan said...

@இக்பால் செல்வன்

இந்த சிலையோ வைத்ததே சிங்களவர்கள் தானாம். உங்களுக்கு தான் நிறைய சிங்கள நண்பர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் போய் இதையெல்லாம் சொல்ல வேண்டியது தானே. அதை விட மகாவம்சம் முழுவதுமே இப்படியான கதைகள் தான், அந்த மகாவம்சத்தை வைத்துக் கொண்டு தான் வரலாற்றை, சிங்களவர்கள் அளவிடும் போது, அதற்கேற்றவாறு, அமைந்து போவதை விட எங்களுக்கு வேறு வழி கிடையாது, சிங்களவர்கள் மகவம்சத்தைக் காட்டி, இலங்கை தங்களுடையதென்றால் அதே மகாவம்சத்தைக் காட்டியே, இலங்கையில் வரலாற்றின் தொடக்கத்திலேயே தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள், இலங்கை எங்களுடையதும் தான் என்பதை எம்மால் நிரூபிக்க முடியும், அந்த விடயத்தில், நாங்கள் சிங்களவர்களும் தமிழர்களும் ஒரு மரத்தின் இரு கிளைகள் போன்றவர்கள்.

“Thus the vast majority of the people who today speak Sinhalese or Tamil must ultimately be descended from those autochthonous people of whom we know next to nothing.’

Dr S. Paranavitana, the former Archaeological Commissioner

viyasan said...

"Neither the epigraphy nor the Pali chronicles mention the ethnic background of the Buddhist kings of Sri Lanka. Since we cannot identify the ethnicity of them from the names, if not for the Mahavamsa, we would have never come to know that these non-Buddhist kings (such as Sena, Guttika, Elara) were Tamils.

Similarly, some or most of the Theravada Buddhist kings of Sri Lanka (whose ethnicity is not known) also would have been Tamils but we will never know.

This only proves that the present day Sinhalese and Sri Lankan Tamils originate from both Prakrit speaking Nagas, Tamil speaking Damelas (Pandyans & Chola), and all the other tribes that lived in the island other than the Veddas.

According to historians, it was only during the 9th century AD, the term Nagas totally disappeared from the stone inscriptions and the two major ethnic groups Hela/Sihala and Demela clearly appeared. Historians believe that the Nagas were assimilated into the two major ethnic groups Hela/Sihala and Demela.

The Archeologist/Historian Dr. Parnawitharana says, "We know next to nothing about the pre-historic autochthonous people of Sri Lanka. They could have been the ancestors of the present day Sinhalese and Tamils."

As per Prof. K. Indrapala, 'The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the COMMON ANCESTORS who lived in the country in prehistoric and proto-historic times and have a shared history going back to over two thousand years'.

If we agree with these historians, the people who call them Sinhalese and Sri Lankan Tamils today originate from the SAME STOCK.

What is seen from the evidences is that the Tamil identity of Sri Lanka was not only parallel to the Sinhala identity but also parallel to that of the Tamils of Tamil Nadu. It is NOT merely an extension of the Tamil identity of Tamil Nadu."

Anonymous said...

S. Paranavitana, the former Archaeological Commissioner - “Thus the vast majority of the people who today speak Sinhalese or Tamil must ultimately be descended from those autochthonous people of whom we know next to nothing.’ D

The Archeologist/Historian Dr. Parnawitharana says, "We know next to nothing about the pre-historic autochthonous people of Sri Lanka. They could have been the ancestors of the present day Sinhalese and Tamils."

As per Prof. K. Indrapala, 'The Sinhalese and Tamils of Sri Lanka are descended from the COMMON ANCESTORS who lived in the country in prehistoric and proto-historic times and have a shared history going back to over two thousand years'.

இந்த மூன்றுக் கருத்தும் தான் உண்மை. இலங்கை ஆராய்ச்சியாளர்கள் ஏற்படுத்தி தந்துள்ள தெளிவை ஏன் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் வரவில்லை. இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் பூர்விகமும் ஒன்று தான். இன்று சிங்களவர் தமிழர் என பிரிந்து கிடக்கும் இருசாராருக்கும் இந்த இரண்டு மொழிகளுமே சொந்தமில்லை. இந்த இரு மொழியும், இரு மதமும், உடை, உணவு, கலாச்சாரம் அனைத்துமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகள். இதைத் தான் நான் எப்போதுமே சொல்லியும் எழுதியும் வருகின்றேன். ஆனால் கேட்பாரில்லை. அவ்வளவு தான்.

சொல்லப் போனால் இலங்கைத் தமிழரும் சிங்களவர்களும் சொந்தக்கார்கள், இரண்டு குழுவும் கடன் வாங்கிய மொழி அடையாளங்களோடு தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இலங்கைக்கே உரித்தான உண்மையான அடையாளங்கள் அழிது போய்விட்டன, அதன் எச்ச சொச்சங்கள் இரு இனத்திலும் சிற்சில காணப்படுகின்றன.

புரிஞ்சுக்கிட்டா சரி.

viyasan said...

@இக்பால் செல்வன்

///இந்த இரு மொழியும், இரு மதமும், உடை, உணவு, கலாச்சாரம் அனைத்துமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகள். இதைத் தான் நான் எப்போதுமே சொல்லியும் எழுதியும் வருகின்றேன். ஆனால் கேட்பாரில்லை. அவ்வளவு தான். ///
நீங்கள் கூறுகிறது போல அவ்வளவு ‘சிம்பிளான’ விடயமல்ல இது. பெரும்பான்மையான தமிழர்களும் (எல்லோருமல்ல), சிங்களவர்களும் ஒரே வேரிலிருந்து, அதாவது பூர்வீக குடிகளாகிய இயக்கர் நாகர்களிலிருந்து வந்திருக்கலாம என்பது தான் இலங்கை ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அதையும் மறுக்கும் சிங்கள இனவாதிகள் உண்டு. அதை விட இந்த இயக்கர்களும் நாகர்களும், குறிப்பாக நாகர்கள், இலங்கையில் மட்டும் வாழவில்லை, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்தவர்கள். தமிழ்நாட்டுக்கு மிகவும் நெருங்கிய தீவுகளிலும், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் வாழ்ந்த பூர்வீக குடியினர். அவர்கள் கூட இன்றைய தமிழ்நாட்டுத் தமிழர்களின் முன்னோர்களாக இருக்கலாம்.

இயக்கர்களும் நாகர்களும் தமிழ்(Proto Tamil) பேசிய திராவிடர்கள் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து, அதையே அம்பேத்காரும் கூறியிருக்கிறார். அதனால். தமிழ் மொழியை நாங்கள் எங்களின் முன்னோர்களாகிய நாகர்களிடமிருந்தும் பெற்றிருக்கலாம், அதை விட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே பாண்டிய அரசர்களின் தொடர்பு இலங்கைக்கு இருந்து வருவதால், நாங்கள் நாகர்களிடமிருந்து பெற்று பேசிய தமிழ், தமிழ்நாட்டுத் தமிழின் தாக்கத்தால் மாற்றமடைந்திருக்கலாம். அப்படியிருந்தும் இன்றும் சில வேறுபாடுகள் உண்டு

viyasan said...
This comment has been removed by the author.
Anonymous said...

நாகர்கள், யக்ஷ்ர்கள் என்பது இனமோ, மொழியோ அல்ல. ஆரியர்கள் காட்டுவாசிகள் அனைவரையும் நாகர், யக்ஷர், ராக்ஷதர் என்றே அழைத்தனர். இந்தியாவின் கஷ்மீரம் தொட்டு குமரி வரை பல ஊர்ப்பெயர்களில் நாக என்ற அடைமொழி உண்டு, அதனால் அங்கிருந்தோர் எல்லாம் தமிழர் எனக் கூற இயலாது.

இலங்கைக்கு வந்த இந்திய கடற்வியாபாரிகளும், அங்கிருந்த காட்டுவாசிகளை இந்தியாவில் அழைப்பது போலவே நாகா, யக்ஷர் என அழைத்திருக்கின்றார்கள். அதனால் இலங்கையில் இருந்த காட்டுவாசிகள் தமிழ் மொழி பேசினார்கள் என்றெல்லாம் கூறிவிட முடியாது. இலங்கையில் தமிழ் மொழி மக்களின் மொழியாக தொடக்கத்தில் இருந்திருக்கவில்லை, வியாபாரிகளின் மொழியாகவே, தென்னிந்திய வியாபாரிகளின் மொழியாகவே இருந்து வந்துள்ளது. அத்தோடு இலங்கைத்தீவை தமிழ்நாட்டவர் எவரும் தமிழகத்தின் அங்கமாய் கருதியதே இல்லை. மாமிசம் தின்னும் யக்ஷர் தீவாகவே கருதப்பட்டது. தொல்காப்பியம் கூட இரு பக்கமும் கடலும் வடக்கு வேங்கட மலை தெற்கு குமரி முனை அடங்கிய பகுதியே தமிழகம் என்று உரைத்துள்ளது. அத்தோடு இலங்கையில் தமிழ் அரச பரம்பரையோ தமிழ் நாடோ சங்ககாலம் முதல் பக்தி இலக்கிய காலம் வரை இருந்ததாக ஒரு புலவனும் பாடவில்லை. கிபி 2-யில் கண்ணகிக்கு கோயில் எடுத்தபோது கூட கஜபாகு என்ற சிங்கள மன்னன் தான் வந்தானே தவிர இலங்கையின் தமிழ் மன்னன் எவரும் வரவில்லை. ஆக இலங்கையில் உங்கள் மூதாதையர் உட்பட எவரும் தமிழை தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்த போன சோழர், பாண்டியரின் கீழ் எழுந்த யாழ்ப்பாண சிற்றரசின் பின்னரே அங்குள்ளவர்கள் தமிழ் பேசத் தொடங்கி உள்ளனர். அதன் முன் இலங்கையில் ஒரு தமிழ் இலக்கியம் கூட எழவில்லை. சங்கப்பாட்டில் வரும் ஈழத்து பூதத்தேவன் கூட இலங்கையைச் சேர்ந்தவரா என்பது ஐயமே. காரணம் இன்றைய கேரளத்தின் குட்டநாடு, ஓணாடு கூட ஈழம் என்றும் அங்குள்ள நாடார் மக்களை ஈழத்தவர் என்றும் அழைத்துள்ளனர். இலங்கையை ஈழம் என்று அழைக்கும் போக்கு எப்போது தொடங்கியது என்றும் புரியவில்லை. ஆய்வுக்கு உட்பட்டது. 12-ம் நூற்றாண்டின் பின்னரே இலங்கை மக்களில் ஒரு பகுதி தமிழை தாய்மொழியாக ஏற்றிருக்க வேண்டும்.

Anonymous said...

தமிழ் மொழியும், பிராகிருத மொழியும் இலங்கையின் இலங்கை மக்களின் சொந்த மொழி கிடையாது. மெக்சிக்கோ பழங்குடிகள் ஸ்பானிய மொழியை கடன்வாங்கி ஏற்றது போல, ஏற்கப்பட்ட மொழிகள் தான் இவை இரண்டும். அந்த வகையில் இலங்கைத் தமிழர் தமிழ் பேசினாலும் இனத்தால் தமிழர் கிடையாது. இலங்கை முஸ்லிம்கள் போல, இலங்கைத் தமிழரும் இனமொழிக் குழு வகைப்படுத்தலில் முறையே தமிழ் பேசும் தனித்தனிக் குழுக்கள் என்பதாகவேப் படுகின்றது.

Anonymous said...

அதனால் தான் ஐரோப்பியரும் இலங்கைத் தமிழரை மலபாரிகள் எனவும், இலங்கை முஸ்லிம்களையும் மூர்கள் எனவும் குறித்தனர்.

Anonymous said...

வியாசன் நான் இங்கு எழுதும் கருத்து எல்லாம் ஒருவகை அனுமானம் மற்றும் கேள்விப்போக்கே ஒழிய முடிவுகள் அல்ல.

viyasan said...

@இக்பால் செல்வன்

//அத்தோடு இலங்கைத்தீவை தமிழ்நாட்டவர் எவரும் தமிழகத்தின் அங்கமாய் கருதியதே இல்லை. மாமிசம் தின்னும் யக்ஷர் தீவாகவே கருதப்பட்டது. ///

இலங்கையில் தமிழர்களின் வரலாறு தமிழ்நாட்டுத் தமிழர்களின் வளர்ச்சியின் ஒரு அங்கமல்ல, அது தனித்துவமானது, சிங்கள என்ற யான அடையாளம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதோ தமிழர் என்ற இன அடையாளமும் இலங்கையில் தோன்றி விட்டது. என்பதைத் தான் நாங்கள், ஈழத்தமிழர்களும், இலங்கை ஆராய்ச்சியாளர்களும், இப்பொழுது நீங்களும் சொல்கிறீர்கள்.


//அத்தோடு இலங்கையில் தமிழ் அரச பரம்பரையோ தமிழ் நாடோ சங்ககாலம் முதல் பக்தி இலக்கிய காலம் வரை இருந்ததாக ஒரு புலவனும் பாடவில்லை. ///

ஈழத்துத் தமிழ்ப்புலவர்களின் பாடல்கள் சங்கப் பாடல்களிலும் உண்டு, ஐயம் தெரிவிப்பதாக இருந்தால், எல்லாவற்றுக்கும் தான் தெரிவிக்கலாம்.. தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் இரண்டு ஈழத்தில் உண்டு. அதை விட கதிர்காமம் போன்ற மிகவும் பழமையான, அதாவது தமிழ்நாட்டுக் கோயில்களை விட மிகப்பழமையான தலங்கள் ஈழத்தில் உண்டு, அவற்றைப் பற்றி தமிழ்நாட்டார் பாடியுள்ளனர். நாயன்மார்கள் பாடிய தலங்கள் தமிழர்களுடையவை. நாயன்மார் காலத்தில், அதாவது பக்திக்காலத்தில் பெருங்கோயில்களைக் கட்டிய குறுநில தமிழ் அரசர்கள் இலங்கையில் இருந்தனர். அது உங்களுக்குத் தெரியாது என்பதால் உண்மையல்ல என்றாகி விடாது. அதை விட, தமிழ் அரசபரம்பரையினர் அனுராதபுரத்தை மட்டுமல்ல, இலங்கை முழுவதையும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டதற்கு ஆதாரங்கள் இலங்கையில் உண்டு. தமிழ்நாட்டாருக்கு அவர்களின் வரலாறே தெரியாது. அவர்களே பல நூற்றாண்டுகள் அந்நியரால் ஆளப்பட்டது, கல்வியும் மறுக்கப்பட்டவர்கள் இந்த லட்சணத்தில் அவர்களுக்குத் தெரியாதென்பதால், எங்களுக்கு வரலாறு இல்லை என்பது அபத்தம். உங்களின் கருத்துக்களுக்குப் பதிலை (போத்துக்கேயர் ஏன் ஈழத்தமிழர்களை மலபாரிகள் என்றார்கள் உட்பட), அதற்கென ஒரு தனிப்பட்ட பதிவில் பின்பு பார்ப்போம்.

viyasan said...

@இக்பால் செல்வன்

//வியாசன் நான் இங்கு எழுதும் கருத்து எல்லாம் ஒருவகை அனுமானம் மற்றும் கேள்விப்போக்கே ஒழிய முடிவுகள் அல்ல///

உங்களின் கருத்துக்கள் எல்லா, வெறும் அனுமானம் என்று கூறியது நல்லதாகப் போய் விட்டது. அல்லது பழையபடி உங்களின் சிங்கள நண்பர்களின் கதையைக் கேட்டு விட்டு அல்லது சிங்கள இனவாதிகளின் கட்டுரைகளை இணையத்தளங்களில் படித்து விட்டு, அதனடிப்படையில் அவர்களைப் போலவே, தமிழர்களுக்கும் இலங்கைக்கும் தொடர்பேயில்லை, அவர்கள் அங்கு Homeland கேட்க முடியாது என்று தொடங்கி விட்டேர்களோ என்று நினைத்தேன். அதற்காகவே எங்களின் வரலாற்றைப் பற்றி, விவரமாக இங்கு எழுதல்லாம் என்றிருந்தேன்.

“நாகர்கள், யக்ஷ்ர்கள் என்பது இனமோ, மொழியோ அல்ல” எனபதை உங்களின் சிங்கள நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் உங்களுக்கு அடிக்க வந்து விடுவார்கள். ஆரியர்கள் காட்டுவாசிகள் அனைவரையும் நாகர், யக்ஷர், ராக்ஷதர் என்றழைதனர் மட்டுமல்ல, தமிழ் நாட்டுத் தமிழர்களையும் தான் ராட்சசர், வானரங்கள் என்றெல்லாம் கூட அழைத்தனர். அதனால் அவர்கள் கூறியதெல்லாம் உண்மை என்றாகி விடாது.

நாகத்தை வழிபடும், அதாவது தமது Totem ஆகக் கொண்ட பல இனக்குழுக்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழ்ந்தனர். ஆனால் தமிழ்நாட்டின் (தென்னிந்தியாவின்) பகுதிகளிலும், இலங்கையிலும் வாழ்ந்த்தவர்கள் திராவிடர்கள், அவர்களும் தமிழ் தான் பேசினார் என்பது தான் அம்பேத்கர் போன்ற அறிஞர்களின் மட்டுமல்ல இலங்கை ஆராய்ச்சியாளர்களினதும் கருத்து. இவற்றைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.

Anonymous said...

கதிர்காமம் குறித்து எந்த நாயன்மாரும் பாடவில்லை. தேவாரத்தில் இலங்கையின் இரு கோயில்கள் பாடப்பட்டுள்ளது ஒன்று கேதீஸ்வரம் மற்றது கோணேஸ்வரம். அதுவும் நாயன்மார் அங்கு போகாமல் ராமேஸ்வரக் கரையில் நின்று பாடினர். அக் காலத்தில் இலங்கையில் 5 ஈஸ்வரங்கள் இருந்திருந்தால் 5-யும் பாடி இருப்பாரே. ஆக 8-ம் நூற்றாண்டில் இரு சிவன் கோயிலே இருந்துள்ளது. அதுவும் வர்த்தக நகரங்களான மாதிட்ட, கோணமலை இரண்டு இடங்களிலும் தான். கடற்பிராயணம் செய்தால் சாதி இழக்க நேரிடும் என்பதால் அவர்கள் அங்கு போகாமல் இங்கிருந்தே பாடினார்கள். கதிர்காமம் , கீரிமலை, மாமங்கேஸ்வரம், முன்னேஸ்வரம் முதலியவை பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.

Anonymous said...

ஆரிய இலக்கியங்கள் எதுவும் தமிழ்நாட்டவரை வானரம், ராக்ஷ்தர் எனக் கூறியதாக இல்லை. மகாபாரதத்திலே பாண்டியர்கள் பற்றி குறிப்பு உள்ளதோடு மானிட அரச சத்திரியர்களில் ஒருவராகவே பாண்டியர்கள் வருணிக்கப்படுகின்றனர். அத்தோடு திரமிளர் எனத் தமிழர்களை மானிட சாதிகளில் ஒன்றாகவே கருடப்புராணம் உட்பட புராணங்கள் கூறுகின்றன. தண்டகாரணியத்தில் உள்ள பழங்குடிகளை அமானுஷ்யர்களாக புராணங்கள் சித்தரிக்கின்றன. ஆரியர்கள் தமிழர்களையும், ஆந்திரர்களையும் எந்த இடத்திலும் அமானுஷ்யர்களாக எடுத்துரைக்கவில்லை. மாறாக இலங்கைத்தீவில் உள்ளவர்களை யக்ஷர்களாக ராமாயணம் கூறுகின்றது. அதனால் தான் யக்ஷ் இளவரசியான குவேயினியை ஒதுக்கிவிட்டு க்ஷ்த்திரிய இளவரசியாக பாண்டியனின் மகளை விஜயன் மணந்ததாக மகாவம்சம் கூறுகின்றது. ஆரியர்கள் திராவிடர்களை அல்ல ஆஸ்திரோ-ஆசியாட்டிக் மொழி பேசும் பழங்குடிகளையே பெரும்பாலும் யக்ஷ்ர்கள், நாகர்கள் என்றழைத்திருக்க கூடும். திராவிடர்களை விட ஆஸ்திரோ-ஆசியாடிக் பழங்குடிகளே தெற்காசியாவின் தொல்குடிகள் என்பதும் மானிட ஆய்வாளர்கள் கூற்று. இலங்கை தொல் குடிகள் இந்த ஆஸ்திரோ-ஆசியாடிக் இனத்தோன்றலாக இருக்கக்கூடும். தென்னிந்தியாவின் இருளர், பணியர் மற்றும் அந்தமானின் ஜரவாக்கள் போன்றோர் தொல்குடிகளின் வழித்தோன்றலாகவும் கருதப்படுகின்றது. இவையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

viyasan said...

@இக்பால் செல்வன்

நாயன்மார்கள் எல்லாக் கோயில்களையும் பற்றி அறிந்திருக்கவில்லை. திருக்கோணேச்சரமும், திருக்கேதீச்சரமும் இரண்டு முக்கிய துறைமுகங்களாகிய மாதோட்டத்திலும், கொட்டியாரத்திலும் இருந்தமையால், அவர்கள் அந்த இரண்டு கோயில்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அவர்கள் தமது ஞானத்தினால் அறிந்து பாடினார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஏனைய சிவாலயங்களாகிய பழமை வாய்ந்த நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டேஸ்வரம், கதிர்காமம் என்பனவற்றைப் பற்றி நாயன்மார்கள் அறிந்திருக்கவில்லை. அதை விடப் பழமையான சிவாலயங்கள் பல, பதவியா போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றியும் நாயன்மார்கள் பாடவில்லை அதனால், அவை எல்லாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை என்று வாதாடுவது முட்டாள்தனம்.

அதை விட கதிர்காமத்தின் தொன்மையும் தமிழர்களின் தொடர்பும் அங்கு கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் இருந்த தமிழ்ப்பிராமி எழுத்துக்களாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் அகழ்வாராய்ச்சி உண்மையை அறிவதற்காக நடுநிலையான அகழ்வாராய்ச்சியாளர்களால் செய்யப்படுவதில்லை. மாறாக தமிழர்களின் தொடர்பை மறுப்பதற்குத் தான் செய்யப்படுகின்றன. இன்று அகழ்வாராய்ச்சி திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருப்பதே, தமிழர்களை வெறுக்கும் எல்லாவல மேதானந்த தேரோ எனப்படும் இனவாத புத்த பிக்கு தான் இன்றைய இனவாத சிங்கள அகழ்வாராய்ச்சியாள,ர்கள் எந்த ஒரு தமிழ், தமிழர் சம்பந்தமான அகழ்வாராய்ச்சி ஆதாரத்தையும், இந்திய வர்த்தகர்கள் கொண்டு வந்தவை என்று திரித்து விடுவார்கள். அவர்களின் நோக்கம் முழுவதும் இலங்கை தமிழர்களுடையதல்ல என்பதைக் காட்டுவது தான். அதனால், சிங்களவர்கள் சொல்வதை முழுவதும் நம்ப முடியாது. நம்பவும் கூடாது. முதலாம் நூற்றாண்டிலேயே நாக இளவரசன் துட்டகைமுனு (சிங்களவன் அல்ல) கூட கதிர்காம முருகனைக் கும்பிட்டு விட்டுத் தான், தமிழ் அரசன் எல்லாளனுடன் போருக்குப் போனதாகக் கூறுகிறது மகாவம்சம்.( கதிர்காமத்தை நாயன்மார்கள் பாடவில்லை ஆனால் பிற்காலத்தில் அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியிருக்கிறார்.)

viyasan said...

@இக்பால் செல்வன்

அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தான் தனது திருப்புகழில் பாடியிருப்பதால், கதிர்காமமும் 15ம் நூற்றாண்டில் உருவாகிய கோயில் தான் என்று வாதாடுமளவுக்கு இலங்கையின் வரலாறு தெரியாதவராக நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்பதை விட கடவுளைப் பிரார்த்திக்கிறேன் என்று தான் கூற வேண்டும். :-)

Anonymous said...

கருத்துக்களுக்கு நன்றிகள். கதிர்காமம் பற்றிய குறிப்பு மகாவம்சத்தில் உள்ளது, அது போல திசமரகாமவில் தமிழ் கல்வெட்டு கண்டறியப்பட்டதையும் அறிவேன். எனது பூதாகரமான எதிர்கேள்விகள் வாதாடுவோரை மடக்குவதற்காக அல்ல, மாறாக நான் கொள்ளும் நிலைப்பாடில் இருந்து எதிர் திசை போய் டெவில்ஸ் அட்வகேட் முறையிலேயே வாதாடுவேன். அந்த வகையில் எனது கேள்விகளுக்கு பதில் தருவோர் முறையாக ஒரு தேடலில் இறங்குவார்கள், அத்தோடு அத் தேடலின் மூலம் எனது நிலைப்பாட்டுக்கு அருகே வந்தும் விடுவார்கள். இது உங்களிடம் மட்டுமில்லை, எனது சிங்கள நண்பர்களிடம் கூட எடக்கு மடக்கான இடத்தில் இருந்தே உரையாடலை தொடங்குவேன். அதனால் தான் இத்தனை ஆண்டு பதிவுலக விவாதப் பெருவெளியில் என்னால் கரைந்துவிட முடியவில்லை.

இலங்கையில் தமிழர் இருந்தமைக்கான ஆதாரங்கள் அரசியலாக்கப்பட்டு விட்டதோடு இப்போது வரலாற்று ஆராய்ச்சி செய்வோர் அரசியல் கண்ணோட்டதுடன் ஒன்று ஆம் என்றோ இல்லை என்றோ நிறுவ முயல்வார்கள் நடுநிலமையான தேடல்களை தேடுவாரில்லை.

இலங்கைத் தமிழர் என்றழைக்கப்படும் இனமானது தமிழ்கத் தமிழரோடு மொழி மதத்தில் ஒன்றிக் காணப்பட்டாலும் மரபியல் கலாச்சாரம் என்பதில் விலகியே உள்ளது. அது சிங்களவருக்கும் தமிழகத்தவருக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் உள்ளது.

மொழி வகை இன அடிப்படையில் இலங்கைத் தமிழர் தமிழ் அல்லாது வேறு ஒரு தொடர்பு பட்ட மொழியை பேசி இருந்திருந்தால் இன்று இலங்கையின் வரலாறு அரசியல் மாறி இருக்கும்.

சிங்கள அரசியலை பொறுத்தவரை தமிழர் வந்தேறிகள் என்ற எண்ணத்திலே செயலாற்றுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளோ சிங்களவர்கள் வந்தேறிகள் என நிறுவ முயல்கின்றனர்.

உண்மையில் இரு இனமும் வந்தேறிகள் அல்ல, ஏற்கனவே அங்கு வாழ்ந்த பழங்குடி வகையில் தோன்றியவை.

வந்தேறிகள் இரு இனத்திலும் ஐக்கியமாகி உள்ளனர், வந்தேறிகள் கொண்டு வந்த மொழியும், மதமும் கலாச்சாரமும் இரு இனத்திலும் கரைக்கப்பட்டுள்ளது.

வந்தேறிகள் கொண்டு வந்த கூறுகளை உள்வாங்கி தனி அடையாளம் பெற்றுக் கொண்டதாலேயே தனித்துவப் பாங்கோடு இலங்கைத் தீவை சிங்கள இனம் உரிமைக் கோருகின்றது.

மாறாக வந்தேறிகளினால் முழுவதும் அடித்துச் செல்லப்பட்ட தமிழர்கள் தமிழகத்தவரோடு ஒன்றிக் காணப்படுவதால், இலங்கைத் தமிழர்களும் வந்தேறிகள் என்ற வாதத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.

நான் இலங்கைத் தமிழர்களை தமிழ் மொழி, மதத்தை கைவிட்டு தமது நாக பூர்விக மொழிக்கு மாறுங்கள் எனச் சொல்லவில்லை.

ஆனால் தமிழக வந்தேறிக் கூறுகளை பிடித்துக் கொள்ளாமல் தனித்துவமான இலங்கை பழங்குடி மூதாதையரின் உட்கூறுகளை ஆராய முற்படுங்கள் என்பதே எனது வாதமாகவே இருந்து வருகின்றது.

பழங்குடி உட்கூறுகளை வெறுத்த சிங்கள இனம் இப்போது உலக அரங்கியல் வரலாற்று போக்கின் வளர்ச்சியை கண்டு தமது பழங்குடி கூறுகளை மீட்டெடுக்க முயலத் தொடங்கி உள்ளன. அதே சமயம் அவர்களாலும் வந்தேறிகள் கொடுத்த அடையாளங்களை இயல்பாக விட்டுக் கொடுக்க முடியவில்லை. அதை விட்டுக்கொடுத்தால் மிச்சம் மீதி அடையாளங்கள் ஒன்றுமிராது என்பதை அவர்கள் அறிவார்கள்.

தமிழ் மொழி என்பது பலதரப்பட்ட திராவிட மொழிகளை உள்வாங்கி ஒருங்கே உண்டாக்கப்பட்ட ஒரு மொழியே ஆகும். அந்த மொழி உருவாக்கப்பட்ட போது வேங்கடத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட திராவிட மொழிகளை மட்டுமே எடுத்துக் கொண்டனர். அதனால் தான் தமிழகத்துக்கு வெளியே இருந்த கன்னடமும், தெலுங்கும், மத்திய இந்தியாவில் உள்ள கோண்டியும், பாகிஸ்தானில் உள்ள பிராகியும் தனித்தனியே வளர்ந்தன. ஆனால் இந்த எந்த மொழியும் திராவிட தனித்தன்மையை இழக்கவில்லை. இன்றளவும் கோண்டி திராவிட மொழியாக இருக்கின்றது.

அதே நேரம் இந்தியாவின் ஆரியருக்குமுந்தைய பழங்குடிகள் அனைவரும் திராவிடர்களாகவோ, தமிழர்களாவோ இல்லை.

திராவிட கலாச்சாரம் இங்கு வர முன்னரே ஆஸ்திரே ஆசியா வகை மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் இன்றளவும் ஜார்கண்ட் ஒரிசாவில் வாழ்வதோடு அவர்களின் மொழியும் மதமும் உயிர்ப்புடன் உள்ளது. ஆரிய மற்றும் திராவிட தாக்கத்தால் அவை நிலைமாறவே இல்லை.

சந்தாளி மொழி தேசிய மொழிகளில் ஒன்றாகவும் மாற்றம் கண்டதோடு அவர்களுக்கு ஜார்க்கண்ட் மாநிலமும் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பூர்விகத்தை தேடும் போது நான் ஆஸ்திரே ஆசியா வகை மக்களின் ஒரு கூறாகவே தேடத் தொடங்கினேன்.

அதனால் தான் இலங்கையில் தனித்துவமான திராவிய மொழி எதுவும் இல்லை. ஆஸ்திரோ ஆசியா மொழி மக்களின் மொழியாகவே ஈழு அல்லது எழு மொழி இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தவரின் அரசியல் தாக்கத்தால் தமிழும், பின்னர் பவுத்தத்தின் தாக்கத்தால் பிராகிருதமும் எழு மொழியை விழுங்கி இருக்கலாம்.

Anonymous said...

ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் காணப்படும் எழு மொழிச் சொற்களை மீள் கட்டி அமைத்து அவற்றை முறையே ஆஸ்திரோ ஆசிய மொழிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் சில சங்கதிகள் புலப்படலாம்.

ஆஸ்திரோ ஆசியா வகை மக்களை நக்கார் என சோழர்கள் அழைத்தார்கள். அதனால் தான் அந்தமான் தீவுகள் நக்காவரம் என்றழைக்கப்பட்டது.

நக்கார் என்றால் அரை நிர்வாணிகள் என்ற பொருளும் உண்டு. இலங்கையில் உள்ள பழங்குடிகள் நாகர் என்றா நக்கார் என்றோ அழைக்கப்பட்டு இருக்கலாம்.

தென்னிந்திய திராவிட மக்களில் கூட ஆஸ்திரோ ஆசியா பிரிவு மக்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெருத்த உருண்டையான மூக்கு குள்ளமான தடித்த உடல்வாகு கொண்டோரை இவ்வகை மக்களின் பரம்பரையாகவும் கருத வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஆஸ்திரோ ஆசியா திராவிட மற்றும் ஆரிய இனம் ஆகிய மூன்றின் கலவையாக மக்கள் விரவி வாழ்கின்றனர். இந்தியாவின் வடக்கு முதல் தெற்கு வரை இந்த மூன்று மக்களின் சாயல் அனைவரிடத்தும் வெவ்வேறு பரிமாணங்களில் காணப்படுகின்றன.

இன்று மொழி அடிப்படையில் மட்டுமே ஆராய்ச்சி மேற்கொள்ள முடிகின்றது.

இலங்கையரை தென்னிந்தியர்களிடம் இருந்து வேறுபடுத்துவது அவர்களின் ஆஸ்திரோ ஆசிய பழங்குடி கூறுகளாகத் தான் இருக்க வேண்டும் என்பது நான் வெகுகாலமாகவே கருதும் ஒரு எண்ணம்.

இந்த மக்கள் ஆஸ்திரேலியா பழங்குடி, மலேசியா பழங்குடி மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடிகள் மற்றும் தென்னிந்தியா இருளர்கள் ஆகியவர்களின் முன்னோர்களாகவே இருக்கலாம்.

சந்தாளி மொழியில் கங்கை என்றாலே ஆற்றைக் குறிக்கும் எனவும், அதனால் தான் கங்கை நதி என்ற பெயரை ஆரியர்கள் உள்வாங்கியதாகவும் ஜார்க்கண்ட் எழுத்தாளர் எழுதி இருந்தார்.

அதிசயமாக இலங்கையில் உள்ள அனைத்து ஆறுகளும் கங்கை என்றே முடிகின்றது. ஆனால் தென்னிந்தியாவில் இப் போக்கு இல்லை என்பது ஆச்சரியமூட்டுகின்றது.

இலங்கை மானிட ஆய்வில் பங்கேற்க எனக்கு விருப்பம் உண்டு, ஆனால் அங்கு நிலவும் அரசியலும் தமிழத்தில் அதனால் ஏற்படும் அதிர்வுகளும் என்னை கட்டிப் போட்டுள்ளது, காரணம் எனது தேடல் பலரின் வெறுப்பை சம்பாதிக்கலாம் என்பதாலேயே.

பார்ப்போம் நான் கூறுவது எல்லாம் உண்மை என வாதிடப் போவதில்லை, ஆனால் எனது தேடலில் உண்மைகள் அகப்படலாம் என்பதில் உறுதியாக உள்ளேன். நன்றிகள்.

viyasan said...

@இக்பால் செல்வன்

நீங்கள் இன்னும் நாகர்கள், யக்ஷ்ர்கள் என்பது இனமோ, மொழியோ அல்ல அல்லது அவர்கள் மனிதர்களேயில்லை என்று தான் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ தெரியாது. ஆனால் உண்மையில் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் முன்னோர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களின் முன்னோர்களும் கூட. அத்துடன் அவர்கள் பேசிய எலு மொழி, தமிழ் மொழியின் முன்னோடி. அத்துடன் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ்க் காப்பியங்கள், நாக நாட்டையும் (யாழ்ப்பாணக் குடாநாடு), மணிபல்லவம் )நயினா தீவையும்), அதன் மக்களையும் அதன் செல்வச் சிறப்பையும் பற்றி பேசுகின்றன, அத்துடன் நாகர்கள் தான் Indus Valley மக்கள் (திராவிடர்கள்) அங்கிருந்து, ஆரியப்படை எடுப்பால் தெற்கு நோக்கி நகர்ந்தவர்கள் என்று கூட சிலர் கூறுகின்றனர். அதனால், உங்களின் ஆஸ்திரோ ஆசியக் கருத்து நாகர்களுக்குப் பொருந்தும் என்று நான் நினைக்கவில்லை. எலு மொழிக்கும் தமிழுக்கும் தான் கூடிய தொடர்புண்டு என அறிஞர்கள் கூறுகின்றனர். உண்மையில் எலு, பழைய தமிழ் தான். இதைப் பற்றி விரிவாக, விரைவில் எனது கருத்தை எழுதுகிறேன், அங்கு பேசுவோம். நன்றி.