Thursday, January 23, 2014

தமிழ்நாட்டுச் சினிமா மோகத்தால் சீரழியும் ஈழத்தமிழ் இளைஞர்கள்??

நடிகர்களின், கட்டவுட்டுகளுக்குப் பாலாபிசேகம் பண்ணுவதும், அவர்களின் பெயர்களைப் பச்சை குத்திக்  கொள்வதும், அவர்களுக்காக தனக்குத் தானே தீமூட்டிக் கொள்வதும், அவர்களின் பெயர்களை தமக்கு வைத்துக் கொள்வதும், அவர்களின் பெயரால் ஆளுக்காள் அடிபட்டுக் கொள்வது போன்ற செயல்கள் எல்லாம்  தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது, இதுநாள் வரை ஈழத்தமிழ் இளையோர்களிடம் இருந்ததில்லை என்றே கூறலாம்
முன்னைய காலத்தில் பெரிய நடிகர்களுக்கு பெயரளவில் சில ரசிகர் மன்றங்கள் இருந்திருந்தாலும் கூட, அவர்கள் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லையாம். . ஆனால் இப்பொழுது அது மோசமான நிலைக்கு மாறி விட்டது. தமிழ்நாட்டிலுள்ளது போன்ற சினிமாப் பைத்தியங்கள் ஈழத்திலும் உள்ளனர் என்பதை  அண்மைச் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.  இதற்கு இன்றைய இணையத்தளங்கள், காணொளிகள் போன்ற நேரடி தகவல் தொழினுட்பம் மட்டுமன்றி, தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்குமிடையேயான தொடர்புகள் முன்னைய காலங்களை  விட நெருக்கமாகியிருப்பதும் காரணமாகும்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எமது ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான கேவலம் கெட்ட செயல்களைச் செய்யாதீர்கள் என கோபத்துடன் ஏசியதாகத் தெரியவருகின்றது.இந்தியாவில் இவ்வாறான சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் மன்றங்கள் தற்போது இலங்கையிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. 
சினிமாவை ஒரு பொழுது போக்காகவே கருதியிருந்தனர்.ஆனால் தற்போது வடக்கிலுள்ள சிங்கள இராணுவம் இவ்வாறான செயல்களைத் தூண்டி இளைஞர்களைத் தவறான பாதையில் செல்ல முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyBRWMdmp3.html


 
வடமாகாண அமைச்சர் திரு. ஐங்கரநேசன் ஆர்ப்பாட்டம் செய்யும் ஈழத்தமிழ் இளைஞர்களைப் பார்த்து "ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான செயல்களைச் செய்யாதீர்கள்" என்று கண்டிப்பதைக் கண்ட அந்த வழியால போன  ஒருவர் ,  விஜய் "போராட்டத்துக்கு 'ஐந்து லட்சம்' (ரூபாய்)காசனுப்பினார்"  என்கிறார.  :-)

 YouTube comment: 

"போய் உதையுங்கடா இவங்களுக்கு. உனக்காக உயிரக்குடுத்தவனுக்கு ஒரு மெழுகுதிரி வைக்க உரிமையில்லாம கேக்க வழியில்லாமக்கிடக்கு... வாற கோவத்துக்கு அந்த மோட்டபைக்கில இருந்து கதைக்கிறவரிருக்கிறாரே அவற்றை அந்த சின்னனும் நாளைக்கு இப்படி தறுதலையா றோட்டுலை வந்து நிண்டா இப்படித்தான் கருத்துச்சுதந்திரம் கதைப்பார் போல.  நானும் அஞ்சுலெச்சம் தாரன் எனக்கு பாலூத்திறீங்களாடா... மானங்கெட்டவங்களே!"


 

உதயன் பத்திரிகை

Damaged Printing Press after Attack
முப்பது வருடத்துக்கு மேற்பட்ட தமிழீழப் போராட்ட காலத்தில் தனது கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காதுதமது பத்திரிகையையும் மூடாமல், தொடர்ந்து நடத்தப்பட்ட, வடக்கிலிருந்து வெளிவந்த ஒரேயொரு தமிழ்ப் பத்திரிகை உதயன் மட்டும் தான். இலங்கை இராணுவத்தினதும், அதன் உதவிக்குழுக்களினதும் கெடுபிடிகளை எதிர்த்து தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியுலகிற்கு எடுத்துக் கூறியதால், உதயன் பத்திரிகை பல முறை தாக்கப்பட்டது. அதன் அச்சு இயந்திரங்கள்  சிங்கள இராணுவத்தாலும், வெள்ளை வானில் வந்தவர்களாலும் எரிக்கப்பட்டன  உதயன் பத்திரிகை நிர்வாகமும், அதன் ஊழியர்களும் பல தாக்குதல்களுக்கு உட்பட்டனர்.

1987 இல் இலங்கை ராணுவம் உதயன் பத்திரிகை அலுவலகமிருந்த நாவலர் வீதியில் நடைபெற்ற தாக்குதலில் உதயன் பத்திரிக்கை ஊழியர்களும், 40 பொதுமக்களும் இறந்தனர். 1990 இல் இலங்கை வான்படை நடத்திய தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் இறந்ததுடன் ஐந்து பேர் காயமடைந்தனர். அடுத்த வருடம் இரண்டு கிரனேட்கள் உதயன் பத்திரிக்கை அலுவலகத்துக்குள் எறியப்பட்டு அச்சியந்திரங்கள் சேதமடைந்ததுடன் இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்டு 2005 இல் உதயன் பத்திரிக்கை விளம்பர அலுவலகத்துக்குள் கிரனேட் வீசப்பட்டது.  மே 2006 இல் ஆயுதம் தாங்கியவர்களால் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் நடத்திய தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்ஆகஸ்டு 2006 இல் மீண்டும் ஆயுததாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் கோப்பாய் என்ற இடத்திலிருந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. இவ்வாறு எண்ணற்ற தாக்குதல்களின் பின்னர் ஏப்ரல் 2013 இல் மீண்டும் உதயன் அலுவலகமும் ஊழியர்களும் தாக்கப்பட்டனர்.
The awarding ceremony of the Reporters Without Borders
-Fondation de France Prize, in Strasbourg, 
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரூன் மட்டுமன்றி, அமெரிக்க அதிகாரிகளும், வடக்குக்கு வருகை தரும் ஏனைய மேலை நாட்டு அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும்உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கும் செல்வது வழக்கம். மனித உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் மதிப்பவர்கள் மத்தியில் உதயன் பத்திரிகைக்கு தனி மரியாதை உண்டு. பல உலகளாவிய மனிதவுரிமை, பத்திரிகைச் சுதந்திரம் சம்பந்தமான  விருதுகளையும் உதயன் பத்திரிக்கை பெற்றுள்ளது. அத்தகைய. ஈழத்தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த உதயன் பத்திரிகையில் நடிகர் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக ஈழத்திலுள்ள  விஜய் ரசிகர்கள் சிலர் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது


Ref : www.tamilwin.com
http://en.wikipedia.org/wiki/Uthayan

1 comment:

நந்தவனத்தான் said...

//ஆனால் தற்போது வடக்கிலுள்ள சிங்கள இராணுவம் இவ்வாறான செயல்களைத் தூண்டி இளைஞர்களைத் தவறான பாதையில் செல்ல முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.//''

இரசிகர் மன்றம் வைக்க கட்டவுட்டுகளுக்குப் பாலாபிசேகம் பண்ண தமிழ் இளைஞருக்கு ஸ்பெஷல் டிரெனிங் குடுக்குதாக்கும் இலங்கை ராணுவம்? என்ன ஒரு ராசதந்திரம்!

//விஜய் ரசிகர்கள் சிலர் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.//

இங்குதான் தப்பு பண்ணுறீங்கள். உண்மையிலே இந்த இளைஞர்களுக்கு வெளியுறவுத்துறையிலே ஏதாவது பொறுப்பைத்தான் ஈழமக்கள் தரவேண்டும். உதயன் பத்திரிக்கை எழுதி எழுதி அடிவாங்குனதுதான் மிச்சம். டேவிட் கமரூன் அடிப்பதை பார்த்து ஆரஞ்சுபழம் வேண்டுமானால் வாங்கி கொடுத்திருப்பாரே ஒழிய உருப்படியாக ஏதாவது செய்திருப்பாரா என்றால் இல்லை.

அதனால்தான் இந்த இளைஞர்கள் ராசதந்திரமாக செயல்பட விரும்பி டாகுடர் விஜய்க்கு எதிராக எழுத வேண்டாம் என போராடியிருக்கிறார்கள். ஏனெனில் விஜய் ஒரு சாதாரண ஆளா என்றால் இல்லை. இன்று வேண்டுமால் அவர் நடிகராக இருக்கலாம்.ஆனால் நாளை அவர் மாண்புமிகு தமிழக முதல்வராவது உறுதி. அப்போது ஈழ தமிழக உறவு உறுதிபட இருக்க விரும்பி இப்போதிருந்தே களம் கண்ட செயல்வீரர் தமை பாரட்ட மனமில்லை என்றாலும் இகழாதிருப்பது நல்லது.