Thursday, January 9, 2014

தமிழீழத்தின் முதல்குரல் - சேர். அருணாசலம் நினைவு நாள் - January 9இலங்கையின் அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவராகிய சேர்.பொன்னம்பலம் அருணாசலத்தின் நினைவு நாள் இன்று (January 09, 1924)  தமிழீழம் என்றதும் பலருக்கு நினைவுக்கு வருவது விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் தான், ஆனால் உண்மையில் ஈழத்தமிழர்களை நோக்கி இனிமேலும் சிங்களவர்களை நம்பிப் பயனில்லை, தமிழர்கள் தமிழீழத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் 1923 ம் ஆண்டிலேயே குரல் கொடுத்தவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம்.
IT WAS SIR ARUNACHALAM PONNAMBALAM WHO FIRST (1923) EXHORTED THE TAMILS THAT -  
`They should work towards promoting the union and solidarity of what we have been proud to call TAMIL EELAM. We desire to preserve our individuality as a people, to make ourselves worthy of inheritance. We are not enamoured about the cosmopolitanism which would make us neither fish, fowl nor red-herring.`  
"நாங்கள் பெருமையாகப் பேசும் தமிழீழத்தின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வென்றெடுக்க அதன் கோட்பாடுகளை இலங்கை முழுதும் பரப்புரை செய்தல் வேண்டும். நாங்கள் தமிழர்கள் என்ற எமது தனித்தன்மையைப் பாதுகாக்க ஆசைப்படுகிறோம். நாங்கள் எங்களது பரம்பரைப் புகழுக்கு தகுதியுடையவர்களாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் எங்களை இரண்டும் கெட்டான் நிலைக்குத்  தள்ளும் வாழ்க்கை முறைக்கு வசியப்பட்டவர்கள் அல்லர். ஆனால் இதன் பொருள் நாங்கள் தமிழ் இனத்துக்கு மட்டும் உழைக்கும் தன்னலவாதிகள் என்பதல்ல. நாங்கள் தமிழர்களது முன்னேற்றத்தை விட முழு இலங்கையரது முன்னேற்றத்துக்குப் பாடுபட்டிருக்கிறோம்........ ஆனால் நாங்கள் மற்றவர்களது அடிமைகளாக இருப்பதை முற்றாக எதிர்க்கிறோம். நாங்கள் எங்களைப் பாதுகாக்கப் பலத்தோடு இருக்க விரும்புகிறோம். அதே நேரம் பொது நன்மைக்கும் பாடுபட அணியமாக இருக்கிறோம்." 
(The Break-Up Of Sri Lanka )

இலங்கையில் இன, மொழி, மதம் கடந்த முதலாவது தேசிய இயக்கத்தை உருவாக்கக் காரணமாக இருந்த பொன். அருணாசலம் அவர்களே பின்னர் இனம், மொழி, மதம் சார்ந்த அரசியல் காரணமாக அந்தத் தேசிய இயக்கத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது ஒரு சோக வரலாறு ஆகும். முதலில் கொழும்பில் தமிழர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்குவதெனவும் அந்த கொழும்புத் தொகுதியில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களை போட்டியிட வைப்பது என்ற வாக்குறுதி முதலில் வழங்கப்பட்டது. இந்த வாக்குறுதியை சிங்களத் தலைவர்களான சேர் ஜேம்ஸ் பீரிசும் நு. து. சமரவிக்கிரமாவும் எழுத்தில் வழங்கி இருந்தார்கள்.
Ardent Devotee of Lord Nataraja of Sithamparam  
"மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பதை நாம் முழு மூச்சாக ஆதரிப்போம் என வாக்குறுதி அளிக்கிறோம். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் தொகுதி ஆட்புலவாரியாக ஒதுக்கப்பட்ட தொகுதியாக இருக்க வேண்டும்."

(We are prepared to pledge ourselves to actively support a provision for the reservation of a seat to the Tamils in the Western province so long as the electorate remains territorial.. (The Life of Sir Ponnampalam Ramanathan by M.Vythilingam Vol (II - page 524 ))

ஆனால் இருபெரும் சிங்களத் தலைவர்கள் எழுத்தில் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. டி.எஸ். சேனநாயக்காவும் அவரது மூத்த உடன்பிறப்பான எவ்.ஆர். சேனநாயக்காவும் சேர் ஜேம்ஸ் பீரிசை போட்டியிட வைத்தார்கள். அதாவது தமிழர்க்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்த இருக்கைக்கு ஒரு சிங்களவரைப் போட்டியிடக் களம் இறக்கினார்கள்.

மேலும் சிங்களப் பகுதியில் அனைத்திலும் சிங்கள வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். அதனை நியாயப்படுத்த ஒரு முக்கியமான காரணத்தையும் சொன்னார்கள். தமிழர்களுக்குக் கொழும்பில் இருக்கை எதுவும் கொடுக்கத் தேவையில்லை. இலங்கைத் தமிழர்கள் மற்றவர்கள் போல் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல. அவர்களும் அவர்கள் வாழும் இடங்களில் காலம் காலமாகப் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த இனத்தவரே. ஆகவே அவர்களுக்கென்று கொழும்பில் தனியிடம் ஏதேனும் கொடுக்கத் தேவையில்லை என்றார்கள்.

அதாவது, காலங்காலமாக வடக்கும் கிழக்கும் தமிழ் அரசர்கள் ஆண்டு வந்த ஆட்புலமாகும். எனவே வட கிழக்கு நீங்கலான பகுதிகளில் அவர்களுக்கு தனிச் சலுகைகள் எதுவும் தேவையில்லை என்று அன்றைய சிங்களத் தலைவர்கள் கூறினார்கள்.

பொன். அருணாசலம் சரி, பொன். இராமநாதன் சரி அல்லது ஏனைய தமிழ்த் தலைவர்கள் சரி எல்லோருமே இலங்கைத் தமிழர்கள் சிறுபான்மையர் அல்ல அவர்கள் பெரும்பான்மை சிங்களவர்கள் போல் நாட்டின் பூர்வீக மக்கள் (founding fathers) என எண்ணினார்கள். நாட்டின் சிறுபான்மை இனத்தவர் என்று முஸ்லிம்கள், இந்திய வம்சாவழித் தமிழர்கள், பரங்கியர் ஆகியோரே கணிக்கப்பட்டார்கள். எப்.ஆர். சேனநாயக்கா பொன். அருணாசலம் அவர்களை "செருக்குப் பிடித்தவர். தனது முக்கியத்துவம் பற்றி மிகைப்பட நினைப்பவர். அரசியலில் தீவிரவாதப் போக்குடையவர்" எனக் காட்டமாகச் சொன்னர். பொன். அருணாசலம் அவர்களுக்குப் பதிலாக இலங்கை தேசிய காங்கிரஸ் கொழும்புத் தொகுதிக்கு சேர். ஜேம்ஸ் பீரிஸ் அவர்களை வேட்பாளாராக நிறுத்தியது.

எவ். ஆர். சேனநாயக்கா (Francis Richard Senanayake – 1884 – 1925) இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்காவின் (Don Stephen Senanayake) மூத்த உடன்பிறப்பு ஆவார். இலங்கைத் தேசிய காங்கிரஸ் காலத்திலேயே இவர்கள் சேர். பறன் ஜெயதிலக்கா ((Sir Baron Jayatilaka) அவர்களோடு சேர்ந்து சிங்கள மகாஜன சபா ((The Great Sinhalese People’s Association) என்ற அமைப்பை 1918 இல் நிறுவி இருந்தார்கள். இலங்கைத் தேசிய காங்கிரஸ் தனது நடவடிக்கைகளை சிங்கள மொழியில் நடத்த வேண்டும் என இவர்கள் வற்புறுத்தினார்கள். சட்டவாக்க அவைக்கு (Legislative Council) கிறித்தவ சிங்களவர்கள் தெரிவு செய்யப்படுவதை எதிர்த்தார்கள். பௌத்த சிங்களவர்களுக்குத் தங்கள் ஆதரவை நல்கினார்கள்.

சேனநாயக்க உடன்பிறப்புக்களும் ஜெயதிலக்காவும் சேர்ந்து இளைஞர் பௌத்த சங்கம் என்ற அமைப்பையும் தோற்றுவித்தார்கள். இதுவே பிற்காலத்தில் அகில இலங்கை பௌத்த சங்கங்களின் பேரவை (All Ceylon Congress of Buddhist Associations) என உருவெடுத்தது. பின்னர் 1940 இல் அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (All Ceylon Buddhist Congress) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எனவே சேனநாயக்க உடன்பிறப்புக்கள் எஸ். டபுள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்காவை
 முந்திக் கொண்டு இன, மத அடிப்படையில் அமைப்புக்களைத் தோற்றுவித்துவிட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பண்டாரநாயக்கா சிங்கள மகா சபையை 1937 இல் தொடக்கினார்.

சிங்களவர்களின் திரை மறைவுச் சூழ்ச்சிகளை எல்லாம் அறிந்திராத பொன். அருணாசலம் கொழும்புத் தொகுதியில் போட்டியிடத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முற்பட்டார். ஆனால் தனக்குப் பதில் இலங்கை தேசிய காங்கிரஸ் ஜேம்ஸ் பீரிஸ் நிறுத்தியதை அறிந்ததும் கண்ணியமாக விலகிக் கொண்டார்.  இலங்கை தேசிய காங்கிரசில் இருந்தும் தலைவர் பதவியில் இருந்தும் விலகிக் கொண்டார். "சிங்களவர்களில் ஒரு சாராரின் முடிவு எல்லா இனமக்களிடத்திலும் நிலவிய ஆளாளுக்கான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அழித்துவிட்டது" என பொன். அருணாசலம் சொன்னார். அப்போது பொன். அருணாசலம் தனது 69 ஆவது அகவையை எட்டிக் கொண்டிருந்தார். அரசியலை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார்.
இலங்கைத் தேசிய காங்கிரசை தோற்றுவித்து இனம், மொழி, மத வேறுபாடுகள் அற்ற ஒரு சுதந்திரப் பாதையில் இலங்கையை இட்டுச்செல்ல பொன் அருணாச்சலம் கண்ட கனவு சில ஆண்டுகளிலேயே தவிடு பொடியானது.

இந்தக் கசப்பான அனுபவங்கள் பொன். அருணாசலத்துக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது. தமிழர்கள் இலங்கையில் தன்மானத்தோடும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி வட கிழக்கை உள்ளடக்கிய ஆட்புலத்தில் தமிழ் ஈழ அரசை நிறுவ வேண்டும். 1923 இல் இலங்கைத் தமிழர் சபை (Ceylon Tamil League) என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் தொடக்கக் கூட்டத்தில் பொன். அருணாசலம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது.

"நாங்கள் பெருமையாகப் பேசும் தமிழீழத்தின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வென்றெடுக்க அதன் கோட்பாடுகளை இலங்கை முழுதும் பரப்புரை செய்தல் வேண்டும். நாங்கள் தமிழர்கள் என்ற எமது தனித்தன்மையைப் பாதுகாக்க ஆசைப்படுகிறோம். நாங்கள் எங்களது பரம்பரைப் புகழுக்கு தகுதியுடையவர்களாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் எங்களை இரண்டும் கெட்டான் நிலைக்குத்
 தள்ளும் வாழ்க்கை முறைக்கு வசியப்பட்டவர்கள் அல்லர். ஆனால் இதன் பொருள் நாங்கள் தமிழ் இனத்துக்கு மட்டும் உழைக்கும் தன்னலவாதிகள் என்பதல்ல. நாங்கள் தமிழர்களது முன்னேற்றத்தை விட முழு இலங்கையரது முன்னேற்றத்துக்குப் பாடுபட்டிருக்கிறோம்........ ஆனால் நாங்கள் மற்றவர்களது அடிமைகளாக இருப்பதை முற்றாக எதிர்க்கிறோம். நாங்கள் எங்களைப் பாதுகாக்கப் பலத்தோடு இருக்க விரும்புகிறோம். அதே நேரம் பொது நன்மைக்கும் பாடுபட அணியமாக இருக்கிறோம்." (The Break-Up Of Sri Lanka – page )

பொன். அருணாசலம் சிங்கள அரசியல்வாதிகள் இன அடிப்படையிலும் மத அடிப்படையிலும் அமைப்புகளை தோற்றுவித்ததை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அரச சேவையில் செலவிட்ட பொன். அருணாசலம் அரசியல்வாதிகளுக்குரிய நெழிவு சுளிவுகளையும் தந்திரங்களையும் படித்துக் கொள்ள வாய்ப்பில்லாது போய்விட்டது. சிங்களத் தலைவர்கள் தன்னைப் போல் இன,மத, மொழி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் எண்ணி எமாந்து போனர்.   கொழும்புத் தொகுதியில் போட்டியிட முடியாமல் போனது பொன். அருணாசலத்துக்குப் பாரிய பின்னடைவாகப் போய்விட்டது. தென்னிலங்கையில் அவர் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டதால் யாழ்ப்பாணத்தில் அவருக்கென்று ஒரு அரசியல் ஆதரவுத் தளம் இருக்கவில்லை. இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகிய பின்னர் பொன். அருணாசம் 1923 ஆண் ஆண்டில் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு அவரை வரவேற்க யாரும் இருக்கவில்லை. யாழ்ப்பாண வீதிகளில் அவரைக் கண்ட மக்கள் இகழ்ந்து கூச்சல் இட்டார்கள்.

பொன். அருணாசலம் போன்ற தமிழ்த் தலைவர்கள் இனம், மொழி, மதம் கடந்த இலங்கையை உருவாக்க நினைத்தபோது "நாம் பெரும்பான்மையினர், அரசியல் அதிகாரம் எங்களது கைகளில் இருக்க வேண்டும் எங்கள் தயவிலேயே மற்றைய இனத்தவர்கள் வாழவேண்டும்" என்ற ஒரு மேலாண்மைப் போக்கு சிங்களத் தலைவர்கள் மனங்களில் வேரிடத் தொடங்கி விட்டது. இதுவே பிற்காலத்தில் பெரிய மரமாக வளர்ந்தது.  மக்களாட்சி முறைமையில் ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது பெரும்பான்மை சிங்களவர்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைக்கப் போகின்றது எனக் கண்ட சிங்கள 
அரசியல்வாதிகள் அதைத் தம்வசம் வைத்திருக்க அன்றே திட்டம் போட்டார்கள். 

இதன் பிரதிபலிப்பே "சிங்களவர் மட்டும்" அமைச்சரவை,  மலையகத் தமிழர்களின் குடியுரிமை வாக்குரிமை பறிப்பு, "சிங்களம் மட்டும்" அரச மொழி என்ற சட்டங்கள் ஆகும்.

1924 ஆம் ஆண்டு சனவரி மாதம் பொன். அருணாசலம் தமிழ்நாட்டுக்கு யாத்திரை போனார். அங்கு நோய்வாய்ப்பட்டு சனவரி 09 ஆம் நாள் மதுரையில் காலமானார். அவரது பூதவுடல் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பு பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன.  1930 ஆம் ஆண்டு ஏப்ரில் 3 ஆம் நாள் பொன்.அருணாசலம் அவர்களது வெண்கலச்சிலை அன்றைய அரச அவை முன்றலில் திறந்து வைக்கப்பட்டது.

பொன். அருணாசலம் அவர்களது தமிழீழக் கனவு அவரது சாவோடு கலைந்துவிட்டது. அவர் சிங்களவரிடம் இருந்து படித்த பாடத்தை அவருக்குப் பின் வந்த தமிழ் அரசியல் தலைவர்கள் படிக்க மறந்தார்கள்.
 1944 இல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் 50 : 50 சம பிரதிநித்துவம் கேட்டாரேயொழிய தமிழீழம் கேட்கவில்லை. மலையகத் தமிழர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்க் காங்கிரசில் இருந்து வெளியேறிய தந்தை செல்வநாயகம் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களின் தாயக பூமியான வட-கிழக்குக்கு இணைப்பாட்சி கேட்டுப் போராடினார். தமிழீழம் கேட்கவில்லை.

No comments: